December 14, 2010

கருத்தரங்கக்குறிப்பு -கவிதையும் கணினியும்-2

முதல் பகுதி யின் காணொளியிலேயே இங்குள்ளவற்றின் காட்சி உள்ளது.

அடுத்த அமர்வாகிய கவிதை இலக்கியத்தினை நெறியாளுகை செய்யவேண்டிய தில்லியைச் சேர்ந்த சிந்துகவி . மா.சேது ராமலிங்கம் அவர்கள் வர இயலாததால் அந்நிகழ்வுக்கு ரவி சுப்ரமணியன் அவர்கள் ஏற்று நடத்தினார். ஒரு கவிதையை அழகிய பாடலாகவே பாடிக்காண்பித்தார்.

1.பிறகு கவிஞர் கலாப்ரியா கட்டுரை வழங்கினார்.
எதிலும் நமக்கு தேவையான ஒரு பகுதியை நமக்குத் தேவையானபடியாக புரிந்துகொள்வது என்பது தவிர்க்கமுடிவதில்லை. மற்றபகுதிகள் மறந்தும் போகும்படி அந்த வரிகள் உள்ளுக்குள் நின்று விடுகின்றன.
அவர் , 70களில் ஆங்கில வார்த்தைகள் சில கவிஞர்களால் சரளமாக உபயோகிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து. பின்னாளில் அவர்களே தமிழின் மிக முக்கியகவிகளாக பரிணமித்ததாகக் கூறினார்.

ஆக இன்றைய நிலையில் இவர்களெல்லாம் கவிதை எழுதாவிட்டால் என்ன கேடு என்று தலையில் அடித்துக்கொண்டு புதிய முயற்சிகளை தரையோடு நசுக்கப்பார்ப்பவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.

( நான் கூட என் கவிதையை அனுப்பிவைப்பதாகச் சொன்னேன் :) )

முன்காலத்தில் எழுதியவர்கள் அனுபவங்களின் கொந்தளிப்பாகவும் தற்போது மொழியின் பெருங்குகையினுள் நுழைந்தவர்களாக புதிர்மொழியில் கவிதை படைப்பதைக்குறிப்பிட்டார்.


2. மரபுக்கவிதை மறக்கப்படவேண்டியதா ? என்று தலைப்பு வைத்தாலும் வைத்தார்கள். நிகழ்வை ஒரு பட்டிமன்றம் என்று நினைக்கவைக்கும்படியாக சுவையாக ( சிலருக்கு கட்டுரை வாசிப்பு சுவராசியக்குறைவாகத்தோன்றி இருக்கும்பட்சத்தில் இது அவர்களை இலகுவாக்கி இருக்கும்) இருந்தது கவிஞர் முத்துலிங்கத்தின் பேச்சு. நடுநடுவே அவர் குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கேட்டு அவையோருடன் மேடையில் இருந்தவர்களும் சிரித்து ரசித்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு கருத்தையும் முன் வைத்துவிட்டு மரபுக்கவிதை மறக்கப்படக்கூடியதா என்று கேட்டீர்களே அது எப்படி மறக்கமுடியும் ’அதற்குத்தான் சொன்னேன்’
என்று முடித்தார். தெரியாமல் வைத்துவிட்டார்களைய்யா என்று சிலரும் அப்படி வைத்ததால் தானே அருமையான வாதங்களை அவர் வைத்தார் எனச் சிலரும் சொல்லிக்கொண்டார்கள்.
முதல் நாள் ப்ரேம் அவர்கள் எல்லாவற்றையும் நாம் பின் சென்று தொன்மத்திலிருந்தே உதாரணம் காட்ட முனைகிறோம் என்று சொன்னதைப்போல இவரும் பல அறிவியல் உண்மைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் அறிந்திருந்ததை எடுத்து வைத்தார். ஆச்சரியம் தான். ’ஓரறிவதுவே உற்றறிவதுவே’ மற்றும் ’புல்லும் பூண்டும் ஓரறிவினவே’ என்று தொல்காப்பிய சூத்திரங்களை முன்வைத்தார்.

தாலாட்டுப்பாடல்கள் கலிப்பா வகையைச்சார்ந்தது. எந்த பள்ளியில் கற்றுக்கொண்டு தாய்மார்கள் இப்படி பாடுகிறார்கள்? என்று அப்பாடல்களை எடுத்து வைத்து கேட்க எல்லாருக்கும் சிலிர்ப்புத்தான். பல நல்ல மரபுகவிதைகளைக்கூறி அவை மறக்கப்படக்கூடியதுமல்ல என்று விளக்கமளித்தார்.
புதுக்கவிதை மலரென்றால் மரபுக்கவிதை வேர் என்றார்.

3 அடுத்து கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை என்பது வாழ்க்கையை கட்டமைக்கும் சக்தியிலிருந்தும், மனித அனுபவங்களிலிருந்தும், சமூகட்தின் சூழலிருந்தும் உருவாகுவதால் உள்ள உண்மைத்தன்மையைப் பற்றிக்கூறினார். இந்திய அளவில் நல்ல கவிதைகளை கவிஞர்களைப் பற்றிய குறிப்புக்களை வழங்கி இன்றைய நிலையில் பெண்கவிஞர்களே தமிழ் புதுக்கவிதையின் தலைஎழுத்தாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்..

( நமக்கு வேண்டியது தான் மனதில் நிற்குமென்றேனே:) )

கணினித்தமிழ் நிகழ்வினை திரு ஜான்சுந்தர் அவர்கள் முன்னெடுத்து வைக்க எழுத்துரு தரப்படுத்தல் தலைப்பில் பத்ரி சேஷாத்திரி எல்லாருடனும் சாதரணமாக மேடையின் கீழ் நின்று பேசுவது போலவே ..எழுத்துரு படைப்பில் ஏற்படும்  ப்ரச்சனை இது .. என்ன செய்யலாம்? என சிறு சிறு குறிப்புகளாக எல்லாருக்கும் புரியும்வண்ணம் எடுத்துக்கூறினார். என்னை மட்டும் அதற்கான பதவியில் அமர்த்தினால் இரண்டு நாளில் நடத்திக்கொடுக்கிறேன் என்றார். ஒரு ப்ரஸ் மீட் ஏற்பாடு செய்வதாக்கூட யாரோ வாக்களித்தார்கள்.. ”:)

அடுத்ததாகப் பேசிய பேராசிரியர் பெ. சந்திரபோஸ் அவர்கள் கணினித்தமிழ் மொழியாக்கச்சிக்கல்களை சுவைபட பகிர்ந்துகொண்டார்.

பத்ரியும் சரி பேராசிரியரும் சரி இருவருமே முன்வைத்தது ஜப்பான் சீனா போல எங்கள் மொழியில் மென்பொருளையும் எங்கள் மொழியை எளிதாகப்பயன்படுத்தக்கூடிய ஒரு கைபேசி , கணினி என நாம் அதிரடியாக கட்டாயப்படுத்தினால் வியாபாரம் முக்கியமானதாக நினைப்பவர்கள் முயன்று அதனைத்தருவார்கள் . நாம் கேட்காமல் இருப்பதே நமது தவறு என்று தான் சொன்னார்கள். யார் காதிலாவது விழுமோ?நிகழ்வின் இறுதியில் தில்லி சௌம்யாவின் பாரதியார் பாடல்கள் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.’ செய்யும் தொழிலே உன் தொழில் காண்’ பாடலை நான் முதல் முறையாக கேட்டேன்.

சுசீலா அம்மாவின் கருத்தரங்கக்குறிப்பு
ச.வீரமணி அவர்களின்
நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம்-தில்லித் தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் அப்துல் கலாம் அறைகூவல்

December 13, 2010

தமிழ் 2010 கருத்தரங்க குறிப்புகள் -1

ஒரு காலத்தில் கதைகள் வாசிக்கிற சிறுமியாக இருக்கும்போது தில்லி , கொல்கத்தா ,மும்பையின் சில பகுதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கதாப்பாத்திரங்கள் வரும். அக்கதாபாத்திரங்கள் கச்சேரிகளுக்கும் , நாடகங்களுக்கும் செல்வார்கள். சிற்றூரில் இருந்த எனக்கு அதெல்லாம் எதோ வேறு உலகத்தில் நிகழ்வதைப்போலத் தோன்றும் காட்சிகள். நானும் திருமணமாகி இப்படி ஒருநாள் தில்லியில் வசிப்பேன் என்றோ அப்படியே கச்சேரிகளையும் நாடகங்களையும் நேரடியாக எளிதாகச் சென்று பார்க்கக்கூடும் என்றோ நான் நினைத்திருக்கவில்லை. நடந்தது.


என் தந்தை கட்டுரை வாசிக்கப்போகும் போது ஒரு முறை கல்லூரி கருத்தரங்கத்திற்கு சென்று இருக்கிறேன். அதன் அனுபவத்தை எழுதிவைக்கும் டைரிப்பழக்கம் எனக்கு அப்பொழுது இல்லை. இப்போது அது நினைவிலும் இல்லை. கல்லூரி தவிர எங்கோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றன என்பதையெல்லாம் படித்திருக்கிறேனே தவிர அவை எப்படிப்பட்டதாய் இருக்கும். படைப்பாளிகள் என்று அறியப்பட்டவர்கள் பலர் கூடி இருக்கும் ஒரு அவையும் அதனை வாசிப்பவர்களாகிய பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு எப்படி இருக்குமென்று நேரில் கண்டதில்லை.

முதல் முறையாக தில்லியில் அப்படி ஒரு நிகழ்ச்சி தமிழ் 2010 நடைந்தேறியுள்ளது. ஆரம்பவிழாவைத் தவிர மீதி இரண்டு நாட்களும் நான் முழுமையாக கலந்துகொண்டேன். நிகழ்ச்சியை நடத்திய தமிழ்சங்க குழுவினர் ஒவ்வொருவரையும் மிகப்பாராட்டி நன்றி கூறவேண்டியது அவசியம். அவர்களிடம் நிகழ்வு ஒரு பண்டிகை நாளின் இலை நிறைந்த இனிப்பு வகைகள் போன்றது ஆனால் திகட்டாத ஒன்று என்று நன்றி கூறினேன். இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அளிப்பார்கள் என்று இவ்விழாவின் வெற்றி நம்பிக்கை அளிக்கிறது. இது ஒரு குழுவின் வெற்றி ஆனாலும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி மற்று ஷாஜஹான் அவர்களுக்கு தனிப்பட்ட நன்றி.இரண்டாம் நாள் பாரதியின் பிறந்தநாளை ஒட்டி தில்லி தமிழ் கல்விக் கழகப் பள்ளிக்குழந்தைகளின் பாரதி பாடலுடன் தொடங்கியது ..அவர்களின் ஆசிரியர் திருமதி ராஜிரமணி அவர்கள் .
பிறகு தமிழ்சங்கத்தில் திருமதி லலிதா ஆனந்திடம் இசை பயிலும் குழந்தைகளும் பாரதியார் பாடல்களைப் பாடினார்கள்..திரு மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்கள் நிகழ்வின் காணொளியை வலையேற்றி இருக்கிறார். நிகழ்விற்கு வர இயலாத பலரும் பயன்பெறும் வகையில் அவற்றை வலையேற்றியதோடு அதனைப்பற்றி உலகமயமாகும் தமிழ் என்கிற தலைப்பின் போது திரையில் காண்பித்தார். நம் வலைத்தளங்களை திரட்டுகின்ற தமிழ்மணம் அன்று ப்ரஜக்டர் மூலம் பெரிய திரையில் தமிழ்ச்சங்கத்தில் ஒளிர்ந்தது மிக மகிழ்ச்சியான தருணம். . நம் தமிழின் குறிஞ்சி முல்லை நிலப்பரப்பைப்போன்று பனிப்ரதேசங்களிலிருந்தும் தமிழ் இன்று எழுதப்படுகிறது என்று அவர் சொல்லும்போது சுவிஸ் ஹேமாவின் கவிதைப்பக்கம் வெளிவந்த காற்றுவெளி இதழ் பற்றிய காட்சிக் காட்டப்பட்டது.
கட்டுரைவாசிப்பாளர்களாகிய படைப்பாளிகள் பழக எளியவர்களாக .. பார்வையாளர்களாகிய எங்களிடம் பழகியது மற்றொரு மகிழ்ச்சி.. செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்து நண்பர்கள் குருமூர்த்தியும் , சத்யா அசோகனும் என்னையும் சிலரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். குளிர் காரணமாக என் தொண்டை அடைத்துக்கொண்டு குரல் ஒருவழியாக மிகச்சிரமமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அந்த கோரத்தை பொருட்படுத்தாமல் அவர்கள் என் பேச்சையும் கேட்டார்கள்.( கொஞ்சம் அவர்கள் பேசுவதையும் நான் கேட்டேன்)
கட்டுரை வாசித்தவர்களில் சந்தித்து பேசமுடிந்த அவர்கள்
‘வெளி’ ரங்கராஜன் , அமரந்த்தா, ரவிசுப்ரமணியன், அம்பை , லிவிங் ஸ்மைல்நெறியாளுகை செய்யதவர்களில் இருவர் எங்கள் பகுதியிலிருந்து வந்திருந்தார்கள் முதன் முறையாக அவர்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது.
திரு டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் திரு நாக. வேணுகோபால்.


அனைத்து எழுத்தாளர்களையும் குழுவாக மேடையில் படமெடுக்கும் போது என்னையும் அழைத்து ஒரு இடமளித்தார்கள். ஒரு கணம் தயங்கி பின் ஓடிப்போய் ஓரத்தில் நின்று கொண்டேன்.புகைப்படம் பின்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.

கலாம் அவர்கள் வெளியிட்டு வைக்க கருத்தரங்க மலர் ‘ இதுவரை , இன்று , இனி...’ கைகளில் கிடைத்துவிட்டது.
சலுகை விலையில் அன்று 100 ரூபாய்க்கு கிடைத்தது. புத்தகத்தில் 150 ரூ எனப்போட்டிருக்கிறது. விநியோடம் கிழக்கு பதிப்பகம் என இருக்கிறது. வெளியூரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாங்க விரும்புவோருக்கு சென்று சேரும் வகையை அவர்கள் தெரியப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.


நிகழ்வின் பேச்சுக்கள் குறித்து என் சிறு குறிப்புகள்.

தமிழில் கோட்பாட்டு எழுத்துக்கள் பற்றிய திரு ப்ரேம் அவர்களின் விரிவான கட்டுரைப்பற்றிய பேச்சு சுவாரசியமானதாக சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஒரு கோட்பாடு தன்னை காலத்திற்கும் நிகழும் சூழலுக்கும் ஏற்ப புதுப்பித்துக் கொள்ளாதபோது அது நம்பிக்கை என்ற நிலைய அடைந்து பின் தொன்ம வடிவம் பெற்று இறுகி அடிமைகொள்ளும் கட்டளையில் ஒன்றாக மாறிவிடும். என்று கூறி கோட்பாடுகளை தொடர்ந்து புதுப்பித்தல் அவசியம் என வலியுறுத்திப் பேசினார்.


நாஞ்சில் நாடன் அவர்களின் நாவல்கள் குறித்த கட்டுரை வாசிப்பிலிருந்து புதிய வாசகர்களுக்கு நல்லதொரு தொகுப்பு. பேச்சின் (கட்டுரையின்) நடுநடுவே நகைச்சுவை தூவி வைத்திருந்தார்.
“ஒருமலரை அனுபவிக்க வடிவம் வண்ணம் அழகு வாசனை போதாதா..? தாவர பேரினப்பெயர் ,தாவர இயல்பு வளரியல்பு இலை மஞ்சரி புல்லிவட்டம் அல்லிவட்டம் சூலகம் கனி விதை இத்தனை தகவல்களும் தேவைதானா என்று அடுக்கினார்”

(அப்படியே தான் நான் குழம்புவேன். படித்தால் அன்று ரசித்து அன்றே மறந்தும் போகும் எனக்கு எழுதிய எழுத்தாளர்களைப்பற்றிய் விரல் நுனியில் வைத்துக்கொண்டு இருப்பவர்களும் அதனை அக்குவேறு ஆணிவேறாக அலசுபவர்கள் ஆச்சரியமும் கலவரமும் ஒரு சேரத்தருகிறார்கள்.)

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வர இயலாத நிலையில் அவருடைய கட்டுரை திரு ஷாஜகான் அவர்களின் தெளிவான உச்சரிப்பில் வாசிக்கப்பட்டது. சிறுகதைகள் இன்று இணையத்தில் தான் அதிகம் பரிட்சிக்கப்படுகிறது என்றும் கவிதை போல கட்டுரை போல இளைஞர்கள் சிறுகதையை முயற்சிக்கவில்லை என்றும் தற்போதைய சிறுகதைகள் ஆய்வு செய்யப்படாமல் விமர்சிக்கப்படாமல் மற்ற மொழியிலிருந்து அதிகம் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றது என்று இன்றைய தேவைகள் முன் வைத்திருக்கிற கட்டுரையாக இருந்தது.

இந்த முதல் அமர்வின் நெறியாளுகை செய்த முனைவர் சுசீலா அம்மா சிறப்பாக அவர்களையும் அவர்கள் தலைப்புகளை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்கள்.


- மற்றவர்கள் அமர்வுகள் பற்றிய என் நினைவுகளை அடுத்த பதிவில் பதிகிறேன்.


முதல் நாள் நிகழ்வு பற்றி திரு வீரமணி அவர்களின் பதிவு1. இலக்கியா  ச.வீரமணி அவர்களின் பதிவு

2.கருத்தரங்க மலர் வெளியீட்டு நிகழ்வில் கலாம் அவர்களின் உரைப்பற்றி பென்னேஸ்வரன் அவர்களின் கட்டுரை

December 4, 2010

வானவில் இற்றைகள்

க்ரீஈஈன் - gr... ee n
சபரியின் வகுப்பில் டிக்சனரி செய்யராங்க.. தினமும் 5 புது வார்ட் எழுதவேண்டும். இன்று ஜி யில் தொடங்குவது. நான் அவனுக்கு ஒலியின் நீளம் புரியட்டும் என்று ஈ ஈ என்று சொன்னதும்..
டபுள் ஈ யா
ஆமாம்
அப்ப டபுள் ஈ ந்னு சொல்றதுக்கென்ன ?
:(
-----------------------------------------------------------
’பேபி என்று என்னைச் சொல்லாதே’ என்று அக்கா சொன்னாலும், தம்பி அக்காவை நோ பேபி , கம் பேபி என்று போனமாதங்களில் அழைத்துக்கொண்டிருந்தார்.
ஏண்டா இனி அவ தான் பேபியா நீ இல்லையா.. நீ அப்ப அண்ணா
இனி அவளைத்தான் கொஞ்சனும் வீட்டில் எல்லாரும்..ஒகேயா?
ஓகே
ஒரு ஆறுவருசம் அவளை தனியாக ராணி மாதிரி பார்த்தாச்சு .. இப்ப ஆறுவருசம் ஒன்னைப்பாத்தாச்சு திரும்ப அவ டேர்ன் போலயே..?
எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மகளின் முகம் பளிச் பளிச்
ஏக்கம்?
------------------------
மகள் சிறுவயதில் 11 மணி வரைகூட புத்தகமும் ரைம்ஸும் படிப்பாள் என்று சொல்லி இருக்கிறேனில்லயா . நம்மையும் படித்துக்காட்டச்சொல்லி நச்சரிப்பாள். மகனை உக்காரவைக்கப் பாடு படவேண்டும். அதற்காகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
‘இவன் அப்படியே உல்டா உன்னை மாதிரி இல்லை ‘
மகள்: ’ அம்மா அப்ப இவன் பெரிசானதும் நல்லாப் படிப்பானோ’
அப்பா: அப்ப நீ ஒத்துக்கிறியா இப்ப சரியாப் படிக்கிறதில்லன்னு :)
மகள் :அவ்
-----------------------------------------
வாரம் ஒரு விசயம் பற்றி எடுத்துகொண்டு வகுப்பின் நடுவில் நின்று பேசவேண்டும் என்பது சபரிக்கு வகுப்பில் ஒரு பயிற்சி முறை.
போனவாரத்தில் மைசெல்ஃப் பற்றிப் பேசவேண்டும். தயார் செய்த நான்கு வரிகளை பயிற்சி எடுக்க விருப்பமே இல்லை. அவ்வப்போது விளையாட்டின் நடுவே பயிற்சி எடுத்தாலும் அவை அத்தனை போதாது என்று தெரிந்தே இருந்தது. ஆனால் அவனைப் போட்டு பயமுறுத்தும் எண்ணமும் இல்லை. புதன் அன்று சரியாகச் சொல்ல இயலவில்லை. டீச்சர் ‘நோ வெரிகுட்’ என்று சொல்லிவிட்டார்கள் என்று வருத்தப்பட்டான். மீண்டும் நாளை சொல்லலாம் என்றார்கள் இன்று பயிற்சி கொடு என்று அவனேக் கேட்டுக்கொண்டான். :)
இரண்டாவது வரியில் இருந்த ஒரு புது வார்த்தை சொல்ல வராமல் போகவே மற்ற வரிகளைச் சொல்ல தயக்கம் இருந்திருக்கிறது. பிறகு தயார் செய்த எந்த வரியும் அடுத்த வரிக்கு முன்போ பின்போ அல்லது சொல்லாமல் விட்டாலோ பொருள் குற்றம் வரப்போறதே இல்லை. அவ்ளோ சிம்பிள் என்று அவனுக்கு தைரியம் குடுத்தபின் ..வெரிகுட் வியாழன் கிடைத்துவிட்டது.
இந்த வாரம் ’மை மதர் ‘ இதற்கும் பயிற்சியின் போது சுணக்கம் இல்லாமல் பயிற்சி எடுத்துக்கொண்டதோடு இரண்டு முறை சொல்லிப்பார் என்றால் 3 மூன்று முறை என்று உற்சாகமாகவும் இருந்தான்.
மற்ற பையன்கள் பேசியது புரிந்ததா என்ன பேசினார்கள் என்ற கேள்விக்கு பதில்
அவங்க எல்லாம் முஷ்கில் முஷ்கிலா ப் பேசினாங்க.. :)
முஷ்கில் - கஷ்டமான
அடுத்தவாரம் தலைப்பு . என் பள்ளிக்கூடம்
--------------------------------------------
மகளுக்காக ஃபார்ம்வில் விளையாட ஆரம்பித்தேன். இன்னுமா உனக்கு அதுல ஆர்வம் வரலை என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். சின்னதாக எனக்கு ஆர்வம் வந்ததை கண்டுகொண்டாள் ஒரு நாள். குட் என்று பாராட்டினாள். எனக்கு அவளே கற்றுக்கொடுத்தாள். அடுத்த லெவலுக்கு நான் முன்னேறும்போதெல்லாம் ‘வாவ்’ குட் அம்மா என்று பாராட்டுகிறாள். அவளின் பாராட்டுதலுக்காகவாவது நான் அடுத்தடுத்த லெவலுக்குப் போகவேண்டும் எனத்தோன்றுகிறது.
----------------------------------
வீ கேம் அம்மா பரிசளித்திருந்தார்கள். அரைமணி நேரம் அதற்கு ஒதுக்கப்படும். டென்னிஸ் விளையாடுவதில் வீட்டில் எல்லாரும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம். தனக்காக உருவாக்கப்பட்ட கேரக்டரில் மட்டும் தான் விளையாடுவார் தம்பி. பௌலிங் மற்றும் டென்னிஸில் அவர் தான் வெற்றி பெறுகிறார்.
--------------------------
சபரி முடிந்தவரை எழுத்துக்கூட்டி கதை புத்தகங்களை வாசிக்கமுடிகிறது.
ஒரு பல் விழுந்துவிட்டது. தான் பெரியவனாகிவிட்டதாக பெருமிதம் கொண்டான்.தன் பிறந்தநாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்
-----------------------------------
மகளின் பள்ளியில் வால்ட்விட்மேனின் கவிதையை பாடலாக இசையமைத்துப் பாடச்சொல்லி இருந்தார்கள். அவளுடைய  தளத்தில்  அனுபவத்தை பதிவு செய்திருந்தாள்.


யூ ட்யூபில் அப்பாடலை  வரிகள் கீழே தெரியும்படி தமிழ்பிரியன் வடிவமைத்ததை இங்கே காணலாம் (கேட்கலாம்). க்ளாஸிக்ன்னு போட்டிருக்கீங்களேன்னு கேட்டா சினிமான்னாலும் எங்கூர் சினிமால்லா க்ளாசிக் லிஸ்ட்ன்னுட்டார் தமிழ்பிரியன்.
நன்றி  தமிழ்பிரியன்.