January 17, 2012

ஆல் இஸ் வெல்

ஈழநேசனுக்காக எழுதிய த்ரீ இடியட்ஸ் படம்பற்றிய பதிவு.

அனைவருமே வெற்றிக்கான பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள் என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல் ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுதலும் அதை சரியான வழியில் செயல்படுத்தலும் வெற்றியை தன் பின்னால் ஓடிவரச் செய்யக்கூடியதாக மாற்றுவதும் ஒரு புத்திசாலியின் வழியாகும்.

’உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ என்பது போல பல சொற்றொடர்களைக் கேள்விப்பட்டிருப்போம் நேர்மறை எண்ணங்களின் அலைவரிசை நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரவல்லது. அதையே ‘ஆல் இஸ் வெல்’ என்று சொல்லிக்கொண்டு முட்டாள் பட்டம் கட்டப்பட்ட மூவர் வெற்றிபெற்ற கதை 3 இடியட்ஸ்- ஹிந்தி திரைப்படம்.

சேத்தன் பகத்தின் ’5 பாயிண்ட் சம் ஒன்’ என்கிற நாவலைத் தழுவி அமைக்கப்பட்ட கதை. ’முன்னாபாய் ’எம் பிபி எஸ்’ மற்றும் ’லகே ரஹோ முன்னாபாய்’ போன்ற வெற்றிப்படங்களை அளித்த ராஜ்குமார் ஹிரானி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவின் கூட்டணியில் மூன்றாவது படம் 3 இடியட்ஸ். படம் வெளிவந்த வேகத்தில் வசூலை கொட்டிக்கொண்டிருக்கிறது.

 படத்தின் மையக்கருத்தைப் போலவே அமீர்கான் மற்றும் ராஹ்குமார் ஹிரானியின் வெற்றியைச் சென்றடையும் வழி சிறப்பானது. தேர்ந்தெடுக்கின்ற கதையை நேர்மறையாகவும் ( பாஸிட்டிவ்) திரைக்கதையை அமைக்கும் வகை சிறப்பானதாகவும் இருந்தால் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு நின்று விடுகிறது. வெற்றி அவர்கள் பக்கம் தானே இருந்தாக வேண்டும். அமீர்கான் தன்னை ரசிகர்களின் அடிமை என்று உருவகப்படுத்திக்கொள்கிறாராம். அடிமை உங்களை மகிழ்ச்சியூட்ட வருகிறார். ஹிரானியால் எதிர்மறையான கதாபாத்திரங்களைக்கூட மிக கொடூரமாக சித்தரிக்கமுடியாது என்கிறார் அமீர். உண்மையில் வாழ்க்கையும் அது தானே. நியாயங்கள் வேறுபடலாம் ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே.


நம் நாடுகளின் கல்வி முறைகள் இன்னமும் ஒரு அலுவலக குமஸ்தாவை உருவாக்கும் வண்ணமே இருந்துகொண்டிருக்கிறது. மதிப்பெண்களுக்கான முக்கியத்துவத்தின் அழுத்தத்தால் தற்கொலைகள் அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் சரியான ஒரு கருத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த கல்லூரியில் இஞ்சினியர் படிப்புக்காக இணைந்திருக்கும் இளைஞர்கள் மூவரைப் பற்றிய கதை. அமீர்கான் ( ராஞ்சோ) மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக வருகிறார் . அவருக்கு கல்வி ஒரு பிடித்தமான விசயம். மாதவன் மற்றும் ஷர்மானுக்கு சராசரிக் குடும்பத்தின் உயர்வை அவர்களின் படிப்பு நிர்ணயிக்கப்போகும் அழுத்தம். எதையும் ஆல் இஸ் வெல் என்றபடி தன் என்ணத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் அமிர்கானின் வழிமுறையைப் பின்பற்றி நண்பர்கள் வாழ்வில் ஜெயிக்கிறார்கள்.

பொமன் இராணி (வீரு சகஸ்ரபூதே) மிகச்சிறந்த நடிகர் என்பதை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறார். தன் மகனை தன் இஞ்சினியர் வாரிசாக நினைத்து ஏற்படுத்திய அழுத்தத்தால் பறிகொடுத்துவிடும் பொமன் இரானி கல்லூரியின் டைரக்டர். முதல் நாள் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எத்தனை பேரின் கல்லூரிக் கனவினை பின் தள்ளி இங்கே இணைந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். அமீர்கானின் துடுக்கான புத்திசாலித்தனமான கேள்விகளால் கோபமுற்று அவரையும் அவர் நண்பர்களையும் முட்டாள்கள் என்றும் அவர்கள் வாழ்வில் செயிக்கப்போவதில்லை என்றும் சொல்லி வருகிறார். அவரை வைரஸ் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் நண்பர்கள். அமீர்கானுக்கும் அவருக்குமான காட்சிகளில் பொறி பறக்கிறது.


சதூர் ராமலிங்கமாக வருகின்ற ஓமி வைத்யா அமெரிக்காவில் வளர்ந்தவர் எனினும் ஒரு ஹிந்தி தெரியாத பாகத்து இந்தியனின் அனைத்து குணாதிசயங்களையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் முக்கியமானதும் கதையோட்டத்துக்கு தூண் போன்றதும் கூட . மனப்பாடம் செய்து வெற்றி பெறுபவர்களின் உதாரணமாக வருகிறார். படம் முடிந்த பின்னும் ‘சதூர்’ நினைவில் நிற்கிறார்.

ஷர்மானின் (ராஜூ) குடும்பம் ஒரு சினிமாத்தனமான குடும்பம் என்கிற அறிமுகம் அருமையானது. கருப்பு வெள்ளையில் இருமிக்கொண்டிருக்கும் அம்மா , கைகால் விளங்காத அப்பா, கல்யாணம் செய்யவேண்டிய தங்கை என அவருக்கு வாழ்க்கையில் பயத்தையும் அழுத்தத்தையும் உண்டு பண்ணக்கூடிய பிண்ணனி. ஷர்மான் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

கதாநாயகி கரீனாவுக்கான வேடம் மிகச்சிறியதே. ஆனால் அமீர்கானுக்கும் அவருக்குமான ஜோடிப்பொருத்தம் மனதை அள்ளுகிறது. அவருடைய கல்யாணத்தை உடைக்கும் விதமான அமீரின் அத்தனை காட்சிகளும் யதார்த்த நகைச்சுவைகள். சின்னத்திரை நடிகை மோனாசிங்கின் (கரீனாவின் அக்கா) முதல் திரைப்படம். ஒவ்வொரு சிறு பாத்திரமும் கண்களில் நிற்கிறார்கள். பள்ளிப்படிப்பை படிக்க ஏழைச்சிறுவனுக்கு அமீர் கூறும் வழிமுறை முதலிலேயே சிறுகுறிப்பாகச் சுட்டப்படுகிறது.


மாதவன் படத்தின் தொடக்கத்திலிருந்தே கலக்குகிறார். ஃபரான் (மாதவன்) க்கு அவருடைய படிப்பைக்காட்டிலும் வனவிலங்குகளின் புகைப்படக்காரராக வரவேண்டும் என்கிற ஆசை. அவரை தன் அப்பாவை சம்மதிக்க வைத்து வாழ்வில் சரியான பாதையைத் தேர்தெடுக்கவைப்பது ராஞ்சூ. ஷர்மான் பொமன் இராணியின் சதிக்கு உடன்படாமல் தற்கொலைக்கு முயன்று நண்பனைக் காப்பாற்றுகிறான். அதற்கு பின் வாழ்வில் ராஞ்சூவின் வழிமுறையான எதையும் நேர்மறையாக , தைரியமாக செய்கின்றவனாக மாறுகிறான். அவனுடைய தைரியமான , நேர்மையான வழிமுறை அவனுக்கு நேர்முகத்தேர்வில் வேலைப் பெற்றுத்தருகிறது.

சதுர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க மற்றவர்களைத் தோற்கடிக்கவேண்டும் என்கிற போக்கு கொண்டவராக வருகிறார். அமீரின் பதில் தாக்குதலால் அதுவும் ஹிந்தி பாஷையை புரியாமல் மனப்பாடம் செய்து மேடையில் பேசி அவமானம் அடைவதால் ஒரு சபதம் செய்கிறார். இன்ன தேதியில் நாம் நால்வரும் இதே இடத்திற்கு வருவோம் அப்போது உங்கள் எல்லாரைக்காட்டிலும் நானே சிறந்தவனாய் வளர்ந்திருப்பேன் என்கிறார். அன்றைய தேதியில் நல்ல வேலையும் காசுமாக அவர் வரவும் செய்கிறார். ஆனால் ராஞ்சோ அமீர் மட்டும் திரும்பவில்லை. நிஜமான அறிவாளி என்ன செய்கிறான் என்பதைக் காண நண்பர்கள் அவரைத்தேடிச் செல்கிறார்கள்.

ஜாவீத் ஜாஃப்ரியை சந்திக்கிறார்கள். அவரிடமிருந்து அமீர்கானின் இருப்பிடம் அறிந்து கொண்டு கரீனாவையும் அழைத்துக்கொண்டு பயணப்படுகிறார்கள். இக்காலகட்டத்தில் ராஞ்சோவின் வழிமுறையிலேயே அவர்கள் எல்லா விசயத்தையும் கையிலெடுத்து ஜெயிப்பது அவர்களுக்கு நண்பனின் தாக்கம் எந்த அளவுக்கு என்று துல்லியமாகக் காட்டுகிறது.


3 இடியட்ஸ் உடன் எதாவது ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை ஒப்பிட நினைத்தால் ‘பசங்க’ படத்தை ஒப்பிடலாம். இருந்தாலும் தமிழில் மறுஆக்கம் வர இருக்கிறது. இக்கூட்டணியின் முதல் இரு படங்களைப்போலவே இதிலும் மிக அதிக உருக்கமான காட்சிகள் வருகிறது. மழை நாளில் மோனாவுக்கு அமீரே குழந்தை பிரசவிக்கச் செய்வது போன்ற காட்சிகள். மற்ற கமர்சியல் படங்களில் வரும் பத்து பேரை அடித்து ஒடுக்கும் ஒரு ஹீரோவின் இன்னோரு அற்புதமே. சினிமாத்தனங்கள் இணையாத கமர்சியல் படமாக இருப்பது இயலாத காரணமாக இருக்கலாம். சொல்ல வந்த விசயம் காரணமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வசூலில் குவிப்பதில் சாதனைப் படைத்திருக்கிறது 3 இடியட்ஸ்.

 இன்று ஆல் இஸ் வெல் என்பது அனைவரின் வாயிலிருந்து அன்றாடம் வெளிப்படுவது படத்தை சரியாக விளம்பரம் செய்கிறது.
அபீஜீத் மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் வசனங்களின் கச்சிதம் வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது. லடாக் வரை கண்களை கொள்ளை கொள்ளச்செய்யும் காட்சிகளை விரித்திருக்கிறார் . c.k.முரளீதரன் இசை துள்ளல். ஷூபி தூபி ரபப்பா..

ரசியுங்கள் , சிரியுங்கள் , உருகுங்கள். ஆல் இஸ் வெல். எல்லாம் நன்மை பயக்கட்டும். -கயல் லக்ஷ்மி