April 27, 2010

வானவில் இற்றைகள்

சந்தனமுல்லையின் குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் அறிவிப்பின் மூலம் சபரிக்கு ஹரீஸ் என்கிற நண்பன் கிடைத்திருக்கிறார். அவருக்காக எதாவது படம் அனுப்பும்படி கேட்டிருந்தேன். எப்போதெல்லாம் சபரியின் கணினி நேரம் வருமோ அப்போதெல்லாம்

“இரு இந்த விளையாட்டுக்கு அப்பறம்” என்று என்னை திசை திருப்பிவிடுவான்.
பின் எப்போதெல்லாம் அவன் அக்காவுக்கோ எனக்கோ கணினி நேரம் வருமோ அப்போதெல்லாம்
“அம்மா , ஹரீஸ் ஃப்ரண்டுக்கு படம் வரையனும்ன்னு சொன்னியே எப்ப வரைய? “ என்று சாமர்த்தியமாகக் கேட்டுக் கொண்டிருப்பான். இருந்தும் எப்படியோ கொளுத்தும் வெயிலால் இந்த கோடை விடுமுறையானது வழக்கம்போல மே 15 தேதிக்கும் மேல் தொடங்கவேண்டியது இந்தமாதமே தொடங்கிவிட்டது. இதனால் ஹரீஷுக்கு படம் வரைந்து விட்டான்.

நிஜத்தில் தான் வெயில் கொளுத்துகிறது.இங்கே படத்தில் மழையும் வெயிலும் அடித்து வானவில்லும் வந்து விட்டது.


--------------------------------------------
விடுமுறை தொடங்கியது. வெயிலில் சிவந்து வந்து இறங்கும் குழந்தைகளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனால் உண்மையில் நீதான்மா பாவம் என்று மகள் முதல் நாளே சொல்லிவிட்டாள். போர் போர் போர் என்று போர் தொடுப்பான் சபரி. அவனுக்கு காலையில் எழுந்ததுமே போர் அடிக்கத்தொடங்கிவிடும். கணினி விளையாட்டு, கார்டூன் இவற்றுக்கு நடுவில் இவனுடைய தோழர்கள் யாருக்கும் விடுமுறை இன்னும் கிடைக்காததால் அடைபட்டு கிடக்கிறான்.
மாலையில் பூங்காவில் சிறிது விளையாட்டு. வீட்டில் நடக்கும் பெயிண்ட்டிங் வேலைகளை மேற்பார்வையும் நடக்கிறது.

--------------------------------------------
டைக்வாண்டோ சேர்ந்து மூன்று மாதமாகிறது.
மஞ்சள் பட்டைக்காக (yellow belt) நடந்த தேர்வில் தனக்கு பாராட்டு கிடைக்கவில்லை என்று வந்து சொல்லிக்கொண்டிருந்தான். அன்றே கையில் பட்டை கிடைக்காததால் எனக்கு கிடைக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான். மாஸ்டரிடம் விசாரித்ததில் B+ கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த தேர்வுகளுக்கு முன்பே அக்காவின் வாயால் பாராட்டு கிடைத்துவிட்டது.

“அம்மா இவனை டைக்குவாண்டோ சேர்த்தே இல்லை. நல்ல வித்தியாசம் தெரியுதும்மா”
“அப்படியா ?”
”ஆம அடி நல்லா அழுத்தமா விழுதுல்ல”
---------------------------------------------------
நடன வகுப்பு ஆசிரியைக்கு முதுகு வலி என்பதால் வகுப்பு நின்று இருக்கிறது.
மற்றபடி அங்கே இருந்த பையன்கள் சிலர் வேறு நேரத்துக்கு மாறிப்ப்போய்விடட்தால். கோபியருக்கு நடுவில் இவர் ஹீரோ. இப்போது பம்பம் போலே பம்சிக்போலே பாட்டுக்கு பயிற்சி எடுக்கிறார்கள். நடனம் பயிலத்தொடங்கி நாலைந்து மாதங்களாகிறது. முன்பை விட இப்போது கலை கை வந்திருக்கிறது. (காலும் தான்) இருந்தாலும் டைக்குவாண்டோவுக்கு கிளம்புகிற வேகம் இங்கே இருப்பதில்லை.
-----------------------------
விடுமுறையில் தற்போது மூன்றெழுத்து ஆங்கில வார்த்தைகளை படிக்கிறான்.
MAN MAT இப்படி எதுவானாலும் முதல் இரண்டு எழுத்துக்களிலேயே முன் முடிவாக எதையாவது ஒன்றை சொல்லிவிடுவான். கடைசி எழுத்தைப் பார்க்காமலே அது மேனாகவோ மேட்டாகவொ இருக்குமென்று சொல்லிவிடுவார்.
-----------------------------------
யானை வரைய முயற்சி செய்து பின் அது கொஞ்சம் ரைனோசரஸ் போல இருக்கிறது என்று..
வேண்டாம் வேண்டாம் அழிக்காதே ஒரு கொம்பு மட்டும் வரைந்து ரைனொவாக்கிவிடறேன் என்று மாற்றிவிட்டான்.
அக்காவுக்கு தப்பாத தம்பி.
--------------------------------------------
மூன்று நாட்கள் ஆனதுமே 3 டேஸ் சொன்னே லீவு முடிந்துவிட்டதா? என்று கேட்கிறான். பாவம்
‘3 டேஸ் இல்லைம்மா 3 மந்த்ஸ் ந்னு இல்லை நான் சொன்னேன்’.. என்றால் வா ரயிலைப் பிடி தாத்தா வீட்டுக்குப் போலாம் இல்லையா ப்ளைனை பிடி மாமா ஊருக்குப் போகலாம். என்கிறான். ஆனா அக்காவுக்கு விடுமுறை ஆரம்பிக்காததால் நாங்கள் இன்னும் ஒரு மாதம் போர் கூட போர் தொடுக்கிறதுக்கான ஆயத்தங்களை செய்துவருகிறோம். இதற்கு நடுவில் அடிக்கடி குல்ஃபி , பெப்சி(திருமணவிழாக்களில் குடுக்கிறாங்களே) குடித்து நேற்று ஜுரம் வேறு வந்திருக்கிறது.
ஆனால் இப்போதும் குல்ஃபி கேட்கிறான்.
“நேற்று கூட தான் லேசா சளி இருந்தது அப்ப மட்டும் ஏன் வாங்கித்தந்தே?”
”அன்றைக்கு அழுதியே என்று பாவம் பார்த்ததுக்கு இன்றைக்கு நல்ல கேள்விடா மகனே!”