January 25, 2013

சிஷுக்கா யாரோட அக்கா?

பள்ளி வீட்டுப்பாடத்தில் எழுதிவைக்க
எதிர்பாராத திருப்பம் கொண்ட 
கதை வேண்டுமாம்

இடம்: மிருகக்காட்சி சாலை
பாத்திரங்கள் : அம்மா யானை
அப்பா யானை
குழந்தை யானை 
மற்றும் இவன்

யானை களித்து குளிக்கும் கதையில்
அக்காவும் வருகிறாள்
இவன் மேல் 
பாட்டில் தண்ணீரைத்தெளித்து
அக்கா 
திருப்பம் சேர்க்கிறாள்

-----------------------------------------------------

அப்பா -
”டேய் தினம் இந்த கார்டூன்ல பார்த்ததையே பாக்கறயே.... இந்த சிஷுக்கா சிஷூக்கா ந்னு சொல்றாங்களே சிஷுக்கா யாரோட
அக்காடா ? ’“

(அதிர்ந்து போய் ...மகன்)
அப்பா கார்டூன் பாக்க விடுங்கப்பா.. 

( மேலே டத்துல இருக்க பொண்ணு பேரு தான் சிஷூக்கா.. கார்டூன் ஹீரோ நோபித்தாவோட கேர்ள்ப்ரண்ட்...மகள் சொல்றா கேர்ள்ப்ரண்ட்னு சொல்லமுடியாது அவ அவனோட க்ரஷ் அவ்ளோதான் ..
அவ்வ்)
----------------------------
மகிழ்ச்சியாய் 
20 க்கு 17 மார்க் .. ம்மா -

ஓ எப்படி மார்க் கம்மியாப் போச்சுடா.. 

ஓ ..ஓஹொ... இது உங்களுக்கு கம்மியா.. 17 கம்மியா.. 
நோ நான் உங்க கிட்ட பேசமாட்டேன்.. நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன்.. 

பவ்யமாய் அம்மா -
இல்லடா எப்படி கம்மியாச்சு ..அதை திரும்ப பேப்பர்குடுக்கும்போது செக் செய்திருப்பாங்களே ..அதை கவனிச்சியா.. என்னன்னு தான் கேக்கவந்தேன்
--------------------------------------
கொஞ்சமா ஜுரம் அடிச்சது ஒரு  நாள் லீவ் போட்டாச்சு
அடுத்த நாள் சரி தூங்கட்டுமேன்னு விட்டுட்டேன். காலையில் அக்கா ஸ்கூல் போனதுக்கப்பறம் லேசா முழிச்சு 5 தும்மல் தும்மிட்டு
 ’அம்மா நான் பஹொத் புகார் ஹூ “ அந்த தெர்மாமீட்டரை மாத்து அது சத்தம் போடரதில்ல அதனால் அது சரியா காண்பிக்கலன்னு நினைக்கிறேன்’னு தெளிவா டயலாக்.

ஸ்கூல் போகாம இருக்க என்ன ஒரு டெக்னிக். அல்ரெடி எல்லாரும் கிளம்பிப்போயாச்சு நல்லாத்தூங்குன்னதும் நிம்மதியா போர்வைய இழுத்து தூங்கியாச்சு.

இன்றைக்கு ஸ்கூல் போகும் முன்ன சோகமா உக்காந்திருக்கான். என்னடா விசயம்ன்னா
எனக்கு தூக்கம் தூக்கமா வருது .. போர் அடிக்குது டீவி பார்க்கனும்போல இருக்கு..

இருக்கிறது 5 நிமிசம் அதுக்கு எதுக்கு டீவியப்பாக்கனும்..
பஸ் ல வைக்க சொல்லலாம் டீவி..

ஏற்கனவே 3 சீட்ல நாலு பேரு உக்காந்திருக்கோம் அதுல எப்படி வைப்பாங்க ?

ஓ உனக்கு ப்ளைட் மாதிரி ஒவ்வொரு சீட்டுக்கும் டீவி வேணுமோ நான் சொன்னது ஒரே ஒரு டீவி முழு பஸ் க்கு

அது சரியா வராதே கஷ்டமே யாரு கையில் இருக்கும் ரிமோட் ..:)

January 22, 2013

நூற்றி நாற்பதாவது வழி

நூற்றி நாற்பதாவது வழி

சொல்லப்பட சொல்லப்பட
வலுவிழந்து கொண்டிருக்கும்
வார்த்தைகள்
எதிர்தரப்பில் 
புரியக்கூடிய மொழியாகிலும்
வாசித்தறியப்படாமல்
நிரம்பிக்கொண்டிருக்குமானால் 
பக்கங்களை கிழித்து
கத்திக்கப்பல் செய்

-------------------------------------------
வழியெங்கும்
அழகான 
நான் வேண்டாத பொருட்களின் 
கடைகள்
முன் தள்ளிக்கொண்டிருக்கும்
கூட்டம்
எதிர்படும் முகங்களில்
ஒன்றும் 
அறிந்ததில்லை
தொலைந்து கொண்டிருப்பதாகவோ
இலக்கென்று ஒன்று 
இல்லையெனவோச் சொல்ல
திரும்பும் வழி ஒன்றும் 
மறக்கவில்லை