Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

February 2, 2010

தில்லியில் பதிவர் சந்திப்பு

தி்ல்லியில் இதற்கு முன்பு தேசிய சந்திப்பு என்று மூன்று பேர் கொண்ட மாநாடு நடத்தி இருக்கிறோம். சந்தித்த மற்ற இருவரும் (மங்கை மற்றும் சென்ஷி) தில்லியை விட்டு சென்றுவிட்டார்கள்(நான் காரணமில்லப்பா). அயன் கார்த்தி மீண்டும் வருவதாக தைரியமாக சொல்லி இருக்கிறார். பிப்ரவரிக்கு மேல் மீண்டும் தில்லி பதிவராவார் என்று நினைக்கிறேன் . புதிதாக சிலர் எழுதுகிறார்கள். விக்னேஷ்வரி, லாவண்யா போன்றவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தாலும் மற்றவர்களையும் இணைத்து ஒரு சந்திப்பு நடத்த எல்லாருக்குமே ஆசை என்று தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே சந்திப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போது பதிவரும் வடக்குவாசல் பத்திரிக்கையாசிரியருமான திரு. பென்னேஸ்வரன் தன்னுடைய அலுவலகத்திலேயே நடத்தலாமே என்று கூறினார். குளிர் வாட்டிக்கொண்டிருந்தபடியால் ஒரு பாதுகாப்பான இடம் என்று உடனேயே ஒத்துக்கொண்டோம். அனைவருமே ஆர்வமாக கலந்து கொண்ட ஒரு அறிமுகக்கூட்டம் இது.

சரியான நேரத்திற்கு முன்பே வந்து விட்டார் வெங்கட் நாகராஜ் . நான் எப்போதோ கூகிள் செய்து எதையோ தேடியபோது இவருடைய பதிவு கிடைத்தது. தமிழீஸ்ல் மட்டுமே இணைந்திருக்கிறார் என்பதால் தவற விட்டிருக்கிறேன். எளிமையான அவர் வலைப்பூ தொடர்ந்து படிக்கத்தூண்டியது.

எம். ஏ.சுசீலா அவர்கள் பழக எளிமையானவர்கள் கூட இளமையானவருமாக இருக்கிறார். ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர். தொலைவிலிருந்து கூட்டத்திற்காக வந்து கலந்துகொண்டு இனிமையாக எங்களுடன் கலந்து பேசினார்.

உயிரோடை லாவண்யா தன்னைப்பற்றிய அறிமுகத்தை அழகாக முன்வைத்தார். கூடவே அகநாழிகை மற்றும் அவருடைய கவிதை புத்தகத்தின் கடையும் வைத்தார். நல்லவேளையாக புத்தகக்கண்காட்சி போலவே தள்ளுபடியும் வழங்கினார்.

விக்னேஷ்வரியின் கணவர் யோகி மொழி புரியாவிட்டாலும் ஒரு யோகியைப்போல அந்நேரம் அமைதியாக அமர்ந்து ரசித்தார். விக்னேஷ்வரி புதியதாக ஆரம்பித்திருக்கும் துறை சார்ந்த தொடரில் மேலும் பல விசயங்களைப் பகிர்வார் என்று நினைக்கிறேன்.

மோகன்குமார் போட்டோகிராபி இன் தமிழ் பதிவு நடத்தும் போட்டியின் மூலம் தெரியவந்தார். அவர் மனைவி விஜயலக்‌ஷ்மியும் கலந்து கொண்டார்கள்.

மற்றும் ச.வீரமணி என்னும் பதிவரையும் தொடர்பு கொண்டிருந்தோம். அவர் தாம் தமிழ்நாட்டிற்கு சென்று இருப்பதால் வர இயலாதென்று தெரிவித்திருந்தார்.

வடக்குவாசல் பென்னேஸ்வரன் அவர்களின் விருந்தோம்பல் சொல்லி முடியாது. இருக்க இடமும் தந்து செவிக்குணவு நேரத்தில் வயிற்றுக்கு தேநீரும் மற்றும் பலவகையான பிஸ்கட்டுகளும் தரும்படி தம் அலுவலகத்து பணியாளர்களிடம் பணித்திருந்தார்.

தன் அனுபவங்களையும் அவர் எங்களோடு பகிர்ந்து கொண்டார். எழுத்துலகும் இன்றைய இலக்கியமும் கொண்டிருக்கும் அபாயங்களைப் பற்றி உரையாடினார்.

ப்ளாக் எழுதுவதும் பின்னூட்டம் பெறுவதிலும் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிய ஒருவருக்கொருவருடய கருத்துக்களைப் பரிமாறி ஐயம் தீர்த்துக்கொண்டோம் என்று நினைக்கிறேன்.

இன்னும் சில பதிவர்கள் எங்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களையும் அடுத்த முறை ஒன்றிணைக்க உதவுவதாக பென்னேஸ்வரன் கூறினார். எல்லாருக்கும் ஜுகல்பந்தி என்கிற இசையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் வடக்குவாசலின் இலக்கியமலரைப் பரிசளித்திருந்தார்.அவருக்கு நன்றி.

August 24, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

ஞாயிறு காலையில் கானா ப்ரபாவின் ஸ்டேட்டஸில் நேரலை பதிவர் சந்திப்பின் தொடுப்பினைக் கண்டதும் லைவ் ஸ்ட்ரீமில் நுழைந்தேன். வெகுநேரமாக நடந்து கொண்டிருந்த சந்திப்பின் முடிவில் ஒன்றரை மணி நேரம் நானும் கலந்துகொண்டேன். அறுபது எழுபது பேருக்கு மேற்பட்ட கூட்டத்தில் ஒன்பது பெண்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. யாரும் நடுத்தர வயதுப் பெண்களாகத் தெரியவில்லை. இளையவர்களே ... அதிலென்னவா .. நடுத்தர வயதுப்பெண்கள் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

காணொளியில் கூட்டத்தினரின் உரைகளை கேட்டுக்கொண்டிருக்கையிலே அருகிலிருந்த அரட்டைப் பெட்டியில் இணைய விருந்தினர்கள் வேகமான தட்டச்சிக்கொண்டிருந்தார்கள் . கானாவிடம் நாங்களும் அங்கே தட்டச்சலாமா என்று கேட்டுவிட்டு பின் புனைப்பெயராக முத்துலெட்சுமியையே தேர்ந்தெடுத்து நேரலை பதிவர் சந்திப்புக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பெண்களை பேசவிடுங்கப்பா.. அவரைப் பேசியது போதுமென்று உக்கார சொல்லுங்கப்பா, முதுகு காட்டறவர் யாரப்பா? என்று அங்கே அவ்வப்போது நடந்த தட்டச்சு உரையாடல் களேபரங்கள் கல்லூரியை நினைவு படுத்தியது. குட்டிப்பதிவர் ஒருவர் வந்திருந்தார் .. 6 ம் வகுப்பு படிக்கிறாராம். நான் நுழைந்தபோது யாழ் தேவி யாழ் தேவி என்று எதோ பேச்சு நடந்து கொண்டிருந்தது. பின் வந்தவர்கள் எல்லாருடைய பேச்சிலும் அது அடிபட்டது.

ஒருபோது தான் தன் எழுத்தினால் விசாரிக்கப்பட நேர்ந்தது என்றும் ஆனால் அதுவே எல்லாருக்கும் ஏற்படாது என்று சொல்லிவிட்டு உண்மைபெயரைக் கொண்டே எல்லாரும் எழுதவேண்டும் அப்போது தான் பொறுப்புணர்வோடு எழுதத்தலைப்படுவோம் என்று ஒரு பதிவர் சொல்லிக்கொண்டிருந்தார். ஆங்கிலம் கற்றால் தான் வாழ்க்கை என்று சொல்லப்படும் காலத்தில் இருப்பதால் தங்களுக்கு தமிழின் கடினமான சொற்கள் புரிவதில்லை என்றார் ஒரு பெண்பதிவர். அவர் ஒருவர்தான் எழுந்து பேசிய பெண் என்று கேள்விபட்டேன்.

சிங்கை நாதனைப்பற்றிய குறிப்பு மற்றும் உதவி செய்ய விரும்புவர்கள் கோவிகண்ணன் பதிவைப் பார்க்குமாறு அறிவுறுத்தபட்டார்கள்.

முடிவில் “இருக்கிறம்” என்கிற ஒரு இதழ் எல்லாருக்கும் வழங்கப்பட்டது. இணையத்திலிருந்து நிகழ்வில் பங்கு கொண்டிருந்தவர்கள் ( 40) ”நாங்களும் இருக்கிறம்” என்று சொன்னப்போதிலும் எங்களுக்கு கிட்டவில்லை. ஊரோடி தன் மடிகணினி மூலமாக நிகழ்வை இணையத்தில் காட்டிக்கொண்டிருந்தார். முடிவில் அனைவரும் முகம் காட்டிவிட்டு செல்லும்படி சொல்ல அதற்கு பதில் ஒரு நல்ல யுக்தி செய்தார் . வாயில்படியருகே நின்று கொண்டு எல்லாரையும் காட்டிக்கொண்டிருந்தார்.

இலங்கையில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்தேறியது மட்டுமல்லாமல் தமிழ் இணைய வரலாற்றில் முதல் முறையாக நேரலையாக காணொளி பரிமாறப்பட்டது என்கிற பெருமையும் சேர்ந்து கொண்டது . அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும்பலரின் பதிவர் சந்திப்பினைப்பற்றிய பதிவுகளுக்கும் தொடுப்புகளுக்கும்.
.

January 16, 2009

மூன்று பதிவர் சந்திப்புக்கள்

தில்லியிலிருந்து 8 ம் தேதி காலை சென்னைக்கு ரயிலேறினேன்.. நானும் சபரியும் தான். வெளியில் 20 டிகிரி என்றால் தானாகவே அந்த ஏசி ஹீட்டராகி விடுமாம். ஹீட்டர் சூடும் எக்கச்சக்கமாக , அட்டெண்டரை கூப்பிட்டு எல்லாரும் குறைஞ்சபட்சம் ப்ளோயராவது இருக்கட்டும் ஹீட்டர் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.. சென்னையில் எக்மோர் ஸ்டேஷ்ஸனில் இறங்கியது சூடோ சூடு.. அதும் உயர்வகுப்பு பயணியர் காத்திருக்கும் அறை அடுப்பு சூடு.. இறங்கியதுமே கவிதாவுக்கும் முல்லைக்கும் ஒரு போன் போட்டு எங்க இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டேன். கவிதா வந்துகிட்டே இருக்கேன் என்றார்கள். முல்லை யாரு நீங்க என்று கேட்டுவிட்டு ..ஓ உங்களைத்தானே பாக்கவரேன் .. வழியில் தான் இருக்கோம் என்றார்கள். :)


முல்லை வந்து சேர்ந்ததும் போலீஸ் அக்கா என்னை அவங்களுக்கு அடையாளம் காட்ட ...முல்லை பேரைச்சொல்லி, வாங்கிய டோக்கனை போலிஸ் அக்காக்கிட்ட குடுத்துட்டு வெளியேவே போயிக்கிறேங்க என்று அந்த அறை சூட்டிலிருந்து தப்பித்து , ஹாட் சிப்ஸ் ரெஸ்ட்ரண்டுக்கு சென்றோம்.ஒருத்தங்க கூட ஃபேன் போடசொல்லலைங்க.. நாங்க கூட சாப்பிட்டு முடித்து அரட்டையை தொடர்ந்த போது தான் சபரி ஃபேனைப் போடச்சொல்லி பேரரை அழைத்தான். குட்டிப்பொண்ணு பப்புவுக்கு கீரிடமும் பொட்டுக்களும் குடுத்தான் சபரி. அவள் கிரீடத்தையே தொட்டு தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தாள் அதை அணிந்து ஒரு படம் எடுத்துக்கொண்டோம். மதிய தூக்கமில்லாததால் அவள் கொஞ்சம் மூடியாக இருந்தாள்.

என் குரல் அப்போதே குளிர், சூடு என்ற மாற்றங்களினால் த்ன் வேலையை காட்டத்தொடங்கியது . தொண்டைக்கட்டு வரப்போகிறது என்று உணர்ந்தேன். அளவாக பேசியதற்கே அணில்க்குட்டி கவிதா காதில் ரத்தம் வருவதாக போஸ்ட் போட்டிருக்கிறார்கள். இருந்தாலும் கவிதாவுக்கும் நல்ல திறமை . நான் கேப் விட்டபோதெல்லாம் பிடிச்சு அவங்களைப்பத்தி புலம்பி தள்ளிவிட்டார்கள். முல்லை தான் பாவம் .

பரோட்டா, சாம்பார் இட்லி ,தோசை பதிவர் சந்திப்பில் உணவருந்தினால் பதிவில் லிஸ்ட் தருவது சம்பிரதாய வழக்கமாம்.. :)

நண்பர்கள் மனமின்றி இரவினைக்காரணம் காட்டி விடைபெற்று சென்றனர். நான் கோவைக்கு அடுத்த ரயிலை பிடித்தேன். அடுத்த நாள் என் தாத்தாவின் நூற்றாண்டு விழா . நண்பர்களை அழைக்காலாமா என்று தெரியாததால் முன்பே அழைக்கவில்லை. பிறகு எத்தனை பேருக்கு ஏற்பாடுகள் என்று கேட்டு தெரிந்து கொண்டபின் நண்பர்களை அழைக்க நினைத்து , மெயிலில் பரிசல், வடகரைவேலன், சஞ்சய் ,வெயிலான், வின்செண்ட்,மங்களூர் சிவா ஆகியோரையும் , கவிதாயினி காயத்ரியை தொலைபேசியிலும் அழைத்தேன். வடகரை வேலனும் சஞ்சயும் சேர்ந்து வந்திருந்தார்கள். சரியாக கவனிக்க இயலவில்லையோ என்று நினைத்திருந்தேன்.சஞ்சயின் பதிவு படித்து மனம் நிம்மதி அடைந்தது. மரவளம் வின்சென்ட் விழா முடிவில் கலந்து கொண்டு ஆசி பெற்றுச்சென்றார். எனக்கும் சில பரிசுகள் கொண்டு வந்திருந்தார். சில செடிகள். அது பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.


மீண்டும் கோவையிலிருந்து வரும் வழியில் சென்னையில் இம்முறை செண்ட்ரலில் சந்திப்பு.
இரண்டாம் தளத்தில் இருக்கும் பயணியர் தங்கும் இடத்தில் இருந்தேன். ஆடுமாடு அவர்கள் வந்து சந்தித்தார்கள். பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டேன் இருந்தும் போன் ஒலிக்க காத்திருந்தேன் . ஒலித்ததும் உறுதிப்படுத்திக்கொண்டு வணக்கம் சொல்லி பேசினேன். அவர் சின்னமகனின் குறும்புகளை சொல்லிக்கொண்டிருந்துவிட்டு அருகில் நடக்கும் புத்தககண்காட்சிக்கு செல்லவேண்டுமென்று வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டுச் சென்றார். அவருடைய நண்பர் தேநீர் வாங்கிவர சென்றார். நல்லவேளையாக தேநீர் இல்லையென பால் கிடைத்தது என்று வாங்கிவந்தார் சரியாக அந்நேரம் கண்விழித்த சபரி அருந்த வசதியாக அமைந்தது.

சற்றே பொறுத்து குசும்பன், ஜி3, சிபி மூவர் குழு வந்தது. அவர்கள் அனைவரையும் நான் புகைப்படத்தில் பார்த்திருப்பதால் நானாகவே அடையாளம் கண்டு ஹாய் சொல்லிக்கொண்டேன். அவர்கள் சபரிக்கு ஒரு பெரிய டெடிபேர் வாங்கிவந்தார்கள் அவனும் அதை உடனே பிரித்துப்பார்த்து மகிழ்ந்தான். குசும்பனின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் அவர் உணவு வாங்கிச்செல்ல வேண்டிய கடமை அழைத்தது .. ஜி3 க்கு ஊரின் மறுகோடிக்கு செல்லவேண்டுமாம்.. சிபிக்கு எங்கே காதில் ரத்தம் வந்துவிடுமோ என்ற பயம் காரணம் போலும் சற்று நேரத்திலேயே கிளம்பி ஓடிவிட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் செய்த புண்ணியம் போலும் என் தொண்டை அதுவரையில் சரியாகாமல் இன்னும் கிணற்றுக்குள்ளிருந்தே ஒலித்தது..

இத்தனைக்கும் அவர்கள் மூவர் குழு என்னை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்கு கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்..நல்லவேளை என்னைவிட்டார்களே என்று நான் நிம்மதியாக இருந்தேன். இன்னும் பலரை சென்னையில் சந்திக்க ஆவலிருந்தாலும் எல்லாரையும் நான் செண்ட்ரலுக்கும் எக்மோருக்கும் அழைத்து சிரமப்படுத்துவது சரியாக இருக்காது என்பதாலே அழைக்கவில்லை . யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.

தில்லி வந்து சேர்ந்துவிட்டேன். இருந்தும் உடல்நிலை காரணமாக அதிகம் இணையப்பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்