பொள்ளாச்சியில் எதிர் வீட்டில் இருந்த ஊஞ்சலைப் போலவே வேண்டுமென்று அவர்கள் வாங்கிய அதே பாலக்காடு க்ளோபல் பர்னீச்சரைத் தேடிப்போயிருந்தோம். நாங்கள் சொன்னது போலவே செய்து தந்தார்கள் . கேரளா ரோட் வேஸில் அழகாக பேக் செய்து வீடு வந்து சேர்ந்தது. அதற்கான சங்கிலிகள் கூட அங்கிருந்தே வாங்கி வந்திருந்தோம். நட்டுக்கள் வெளியே தெரியும் படியான எதிர் வீட்டு ஊஞ்சலிலிருந்து புது முறையாக ஊஞ்சல் காலுக்குள் நட்டுகள் மறைவாக இருக்கும்படி செய்திருந்தார்கள்.
என்னவோ உள்ளூர இந்த தளம் கொக்கிகள் எல்லாம் இத்தனை கனமான ஊஞ்சலைத்தாங்குமோ என்கிற பயம் உள்ளூர இருந்தது. நமக்கு மட்டும் தான் பயமோ என்று பார்த்தால் பாருங்க துளசி கூட பயந்திருக்காங்க அவங்க வீடு கட்டும் போது ..
செயின் மட்டும் 9 கிலோ வருகிறது. ஊஞ்சல் 40 கிலோ வருமா இருக்கலாம்.. நான் எத்தனை கிலோ என்று கணக்கு போட்டபடி மேலே பார்ப்பேன். கணவரும் உக்கார வந்தால் மரியாதையா எழுந்துகொள்கிறேன் :P பயம் போக நாளாகலாம். ( ஊஞ்சலைச் சொன்னேன்)

இது தான் எங்க வீட்டு ஊஞ்சல். படிப்போ , அரட்டையோ மகளுக்கு எல்லா நேரமும் இப்போது ஊஞ்சலில் தான். இரண்டு கம்பிகளுக்கு இடையில் ஏறி நின்றோ கம்பிகளைப் பிடித்தபடி தலைகீழாய் தொங்குவதோ என சாகசம் காட்டுவான் மகன். சில சமயம் குட்டித்தூக்கம் கூட போடலாம் .
வடநாட்டில் இதுபோன்ற பலகை ஊஞ்சல் பெரிதாக பழக்கமில்லாததால் பார்க்கும் குழந்தைகள் எல்லாம் இத்தனை பெரிய ஊஞ்சலா என்று ஆச்சரியம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தப் பாடலைக் கேளுங்களேன் கவிஞர் துரைசிங்கம் எழுதி பைரவி என்கிற சிறுமி பாடிய’ ஊஞ்சல் ஏறி ஆடம்மா’..அருமையாக இருக்கிறது.
ஊஞ்சல் ஏறி ஆடம்மா..
........................
................
ஊக்கம் கொண்ட மனிதரே
உயர்வு காண்பர் வாழ்வினில்
என்ற உண்மை தன்னை
நமக்கு ஊஞ்சல் சொல்லுதே
ஊஞ்சல் ஏறி ஆடம்மா
உயர பறக்குது பாரம்மா
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளவே
நீயும் நானும் ஆடுவோம்