May 12, 2008

இசை கொண்டு வாழியவே!

தியாகராஜர் உத்சவம் போல பாபநாசம் சிவன் பாடல்கள் பாடும் விழாவிற்கு எங்கள் பகுதியில் ஏற்பாடு ஆகி இருந்தது.. என் மகளுக்கு எப்பவும் எடுக்கும் போது சுதியில் படுத்தும். சின்ன வயதாக இருந்தபோது , டென்சன் என்பதற்கு அர்த்தம் தெரியாத வரை சரிதான். இப்போது எப்போதும் டென்சன் தான் .. எடுத்த சுதியில் கூடி இருந்த மாமிகள் முகம் கவலை ஆகிப்போனது.

உனக்காக பாடுகிறாய்.. உன் ஆசைக்காக பாடுகிறாய் .. அதற்கு தினம் சாதகம் செய்ய சொன்னால் என்னை எதிரியாகப் பார்க்கிறாய் என்று, கொஞ்சம் முன்னால் தான் அறிவுரை(அதிகம்) செய்திருந்தேன்.. கொஞ்சம் தாமதமாகவே இவளுக்கு பாட நேரம் கிடைத்தது என்பதால் அன்று தில்லித் தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் ஹைதரபாத் சிவாவின் தமிழிசை கேட்க செல்ல முடியாதே என்று கவலையாக இருந்தது.

எதற்கும் முயற்சிக்கலாமே.. என்று 6.30 கச்சேரிக்கு 7.15 க்கு சென்றால்.. அதற்கு முன் நடக்கவேண்டிய பத்ம விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாவே முடியவில்லை.. எனக்கு கொஞ்சம் சுசீலாவை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. ஆனால் 5 மணிக்கு மகளின் நிகழ்ச்சியை மாற்ற முடியாததால் அந்த ஆசையை சும்மா விட்டிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி முடிவடையாததால் மேடையில் சுசீலா அம்மாவைப் பார்க்க முடிந்தது. ஒரு தேவதையைப்போல் இருந்தார்கள்.. உள்ளே நுழைந்தபோது எல்லார் ராவ் பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவர் பாராட்டும் போதும் சுசீலா அவர்கள் அதை பணிவோடு ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக கைகுவித்தபடியே இருந்தார்கள்..

கடைசியாக திருச்சி சிவா பேசினார். அவர் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் சுசீலாவைப் பாராட்டிப் பேசியது என் மகளுக்கு அறிவுரை சொல்ல வசதியாக இருந்தது.."எங்களால் உங்களைப்போல பாட முடியாது .. எங்களுக்காகப் பாடியவர்கள் நீங்கள்.. உங்களைப்பாராட்டவேண்டியது எங்கள் கடமை . பெருமை ..உரிமை. அணுகுண்டு அழிக்க முடியாத இடம் ஒன்று, ரஷ்யாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் ..அதில் திருக்குறளும் உண்டு ..உலகம் அழிந்தபின் ஒரு மனிதன் தோன்றினாலும் அவனுக்கு சென்று சேரவேண்டிய பொருட்களில் இசையும் ஒன்று அதில் உங்கள் குரல் இருக்கவேண்டும் என்பது என்ன பேராசையா.. ? என்றார்"

பார் பாடுவது எல்லாருக்கும் வராது .. வருபவர்களை பாராட்டுவதற்குத்தான் நிறைய பேர் இருப்பார்கள். உனக்கு வருகிறது . ஆனால் முயற்சி எடுத்து அதனை சரியாகப் பழகிக்கொள்ள வேண்டும். நாளை என்னை சரியாக வழிகாட்டவில்லை என்று சொல்லக்கூடாது என்றுதான் ... ( தொடர்ந்து அறிவுரை தான் வேறென்ன) சீர்காழி சிவசிதம்பரத்துடன் மகள் ஆட்டோகிராப் வாங்குவது போன்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்..

இரவு ரயிலுக்கு போகவேண்டிய ஹைதரபாத் சிவா அவர்கள் .. தாமதமான கச்சேரி என்று நினைக்காமல் கச்சேரி களை கட்ட பாடினார். அவரும் சரி அவருடைய குழுவினரும் சரி தில்லித்தமிழ்சங்கத்தைச் சேர்ந்த வயலின் சக்கரபாணி அவர்களும் சரி
ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஈடுகொடுத்தனர்..

சிரித்த முகத்துடன் துள்ளலான பாவத்துடன்.. தாளமிட்டு ரசிக்கும் படி முக்கியமாக தமிழிசை என்பதால் புரிந்து ரசிக்க முடியும்படி இருந்தது அவர் கச்சேரி..இதற்கு முன்பு பன்னிசை தமிழ்மன்ற மேடையில் அவரின் பாடல்கள் கேட்டதிலிருந்து எங்கள் குடும்பமே அவர் ரசிகர்களாகிவிட்டோம்.

மகனோ தாளத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது ஆடி பக்கத்தில் இருந்தோரை தன் கவனத்துக்கு கொண்டுவந்து கொண்டிருந்தான்.

முடிக்கும் போது
"எல்லாரும் இன்புற்றிருப்பதின்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
எல்லாரும் வாழ்க..எல்லாரும் வாழ்க" என்று பாடினார்.. அவர் மகிழ்வுடன் பாடி அந்த மகிழ்வினை மற்றவருக்கும் தன் இசையினிமையால் பரப்புகிறார்.உண்மைதானே..


தமிழ்மொழி வாழ்த்துப்பாடினார்.
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
இனிதே பாடி முடித்தார்.

May 9, 2008

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்

பழைய தமிழ்மண வடிவம் தான் எனக்கு பிடித்தது.. ஒரு மாற்றம் வந்தா ஏத்துக்க மாட்டேங்கறீங்களேன்னு நினைக்காதீங்க..ஒருவேளைபார்க்கப் பார்க்க பழகுமோ என்னவோ..

எதுவும் எளிமையா இருப்பது வசதியும் கூட .. முன்பிருந்த பக்கம் ரொம்ப எளிமையா இருந்தது.. இப்ப எதை க்ளிக் செய்தாலும் நேரமெடுக்குது.. அதுவும் இன்றைய இடுகைகள் பக்கம் மற்றும் பின்னூட்டம் வந்த பதிவுகள் பக்கம் இவை தான் நான் அடிக்கடி பார்ப்பது வழக்கம்.. அந்த பக்கம் இப்போ ரொம்ப ஸ்க்ரோல் செய்யவேண்டியதாகிவிட்டது... புதிதாக இணைந்த பதிவர்கள் என்ற பகுதி நான் எப்போதும் பார்ப்பது வழக்கம் அதுவும் இந்த புதுவடிவத்தில் இல்லையே...

சரி பதிவு போட்டது எதற்காகவோ அதை சொல்லவே இல்லையே.. இன்றைய பதிவர் என்ற பகுதியில் போய் என் பெயரை க்ளிக் செய்தால்.. நான் கூட்டாக இயங்கும் கும்மி பதிவுகள் தான் திரட்டப்படுகிறது... என் சிறுமுயற்சி தளம் திரட்டப்படவில்லை.. :( இன்னும் மாற்றங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதால் இதையும் வேண்டுகோளாக வைக்கிறேன்.. தமிழ்மணம் பதிவிலும் இதனை பின்னூட்டமாக இடுகிறேன்..

ப்ளஸ் டூ ரிசல்ட்

இந்த லின்கில் ரிசல்ட் வந்தாச்சு


http://dge3.tn.nic.in/

நானெல்லாம் தினமலர் பேப்பரில் ரிசல்ட் நம்பர் சரி பார்த்து .. பள்ளிக்கூடத்துல போய் தா ன் மார்க் பார்த்தேன்.. இப்ப என்ன எளிதா இருக்கு ? ஆகா.. சென்ஷிக்காக( அவர் அக்கா பையனுக்காகங்க) பார்க்க சொன்னப்ப தா ன் முதல் முதலா ஆன்லைனில் மார் க் பாத்திருக்கேன்..
LANGUAGE: 165
ENGLISH: 154
PHYSICS: 130
CHEMISTRY: 135
COMPUTER SCIENCE: 163
MATHEMATICS: 150
Total: 0897
Result: PASS
வாழ்த்துக்கள் .. :)

பதிவு போட ஐடியாதந்த தீபாவுக்கு நன்றி :) இப்பல்லாம் உள்ளேன் ஐயா பதிவு போடறது தான் ஃபேஷனாம்..

May 1, 2008

கேவிக்கேவி அழுகுது பாப்பா!

உங்களை பத்து வருசம் முன்னாடி கண்ணாடி போடாம பாத்தா எப்படி இருக்கும் .. அப்படி இருந்தா அந்த பொண்ணுன்னு துளசி சொன்னாங்க.. எந்த பொண்ணுங்கன்னா "கண்ணும் கண்ணும்" ல ஒரு பொண்ணு தோழியா வரா அந்த பொண்ணு ன்னு சொன்னாங்க. ஆனாபத்து வருசம் முன்னயும் நான் கண்ணாடி தான் போட்டிருந்தேன்ன்னு சொல்லி சிரிச்சேன். சரி எப்படின்னாலும் அந்த படம் பாக்கத்தான் போறோம் (ப்ரசன்னாவுக்காக) அது யாரு அப்படி நம்மள மாதிரி பாத்துடுவோம்ன்னு பாத்தாச்சு.. அட இந்த பொண்ணா கொஞ்சம் நம்மள மாதிரி தான்னு தோன்றியது.

ரொம்ப அழகான பிண்ணனியில் அந்த வீடு ரொம்ப அழகுங்க. பாசமான குடும்பமும் ரொம்ப ஓவராக இல்லாம அளவோடு செண்டிமெண்ட் தந்தாங்க. அண்ணனா வந்தவர் ரொம்ப யதார்த்தமா இருந்தாப்பல இருந்தது. விஜயக்குமார் கூட ஓவரா நடிக்காம அளவா நடிச்சிட்டார் . நீபா ரொம்ப அழகு . ரொம்ப அழகு குரலும் கூட.. கதையோட அடிப்படையான அந்த கவிதை மட்டும் தான் கொஞ்சம் லாஜிக்கில்லாம இருந்தது.. ஒரேமாதிரி யோசிக்கலாம் ஒரே மாதிரி வரிகள் கூடவா இருக்கும்.. அதை மட்டும் விட்டுட்டா எனக்கு பிடிச்சிருந்தது படம்.

காதல்ன்னு இல்ல கோபம், வெறுப்புன்னு எல்லா மன உணர்ச்சிகளும் கொஞ்சம் ஆறப்போட்டாலோ , இல்லாவிட்டால் வேறு ஒரு உணர்ச்சியின் ஆதிக்கம் அதிகமாகும்போதோ மாறிவிடும் என்பது உண்மைதானே. முடிவு எதிர்பார்த்தது போலதான். ஆனால் அழகாக யதார்த்தமா சொல்றாங்க.

எனக்கு வெறுப்பா இருந்த ஒரு காட்சி தான் இந்த படத்துக்கு விமர்சனம் எழுத வச்சதே.. எத்தனையோ படத்தில் இறந்தவர்களை எல்லாவகையிலும் குளிப்பாட்டி எரியூட்டும் வரை காட்டுவது உண்டு. அப்போதே எரிச்சலாக வரும்.. அதும் ரகுவரனை 'யாரடி நீ மோகினி'யில் காட்டியபோது என்னவோ போல இருந்தது. அது வாவது பெரியவங்க.. .. இந்த படத்தில் ஒரு குட்டி பாப்பாவுக்கு முதல் மொட்டை அடிக்கிற காட்சி .. ஏன் இதெல்லாம் இத்தனை விவரமா காட்டனுமா.. குழந்தை அழ அழ மொட்டை அடிச்சாங்க.. நிஜம்மாவே நடக்கிறது போலவே அத்தனையும் காட்டினாங்க.. அது பூமாலையை பிடிக்காம கழட்ட, இவங்க திரும்பி மாட்ட.... மொட்டை அடிச்சதும் மடியில் காது குத்த முயற்சி செய்யும் போது , எந்திரிக்க முயற்சி செய்யும் குழந்தையை அப்படியே அமுக்கி உட்கார வைப்பது வரை..

அந்த குழந்தை சந்தனம் தடவி விட்ட பின் கேவி கேவி அழுதபடியே இருந்தது.. இது குழந்தை தொழிலாளர் மாதிரி இல்லையா.. இதை யாரும் கேட்க மாட்டாங்களா..? எனக்கு பார்க்க பார்க்க வயிறு கலங்கிப்போனது.. என் பையனை கூப்பிட்டு பக்கத்தில் வச்சிக்கிட்டேன்..

அந்த காட்சியை வேற மாதிரி எடுத்திருந்தால் அந்த முக்கியமான காட்சிக்கு அழுத்தம் வராமல் போயிருக்கலாம்..ஆனாலும்.....என்னமோ எனக்குத்தான் மனசே ஆறலை..பாருங்க பதிவு பக்கமே எட்டிப்பாக்கத நானே இதை எழுதியே ஆகனும்ன்னு எழுதி இருக்கேன்.