February 25, 2009

கண்ணீர் தேவதைகள்

"என்ன அவசரமோ?இப்படி பறக்கிற... "
"அவசரம் தான் ..வா..பறந்துகொண்டே பேசலாம்"
நான் இப்போது நியமிக்கப்பட்டிருப்பது ஒரு குழந்தையின் கண்ணீர் தேவதையாக...எட்டு மாதம் நிறைந்த நாளிலிருந்து அவள் அழத்தொடங்கிவிட்டாள. அவள் பெயர் நிலா..
நிலா அழும்போதெல்லாம் ..அவள் அன்னையோ தந்தையோ அணைத்து ஆற்றுவார்கள். அக்கம்பக்கமிருபோரொல்லாம் கூட வந்து கொஞ்சுவார்கள் விளையாடுவார்கள். அந்த இடமே ஆனந்தமயமாய் இருக்கும்.. நிலா சிணுங்கியேனும் ரெண்டு சொட்டு கண்ணீர் வடிப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறாள்..

தலைவியின் அழைப்பிற்க்காக இந்த இரவில் வந்தேன்..ஆதவன் கதிரை விரிக்க ஆரம்பிக்கவும் நிலா அழத்தொடங்கிவிடுவாள்..அதனால் தான் அவசரம்"

நிலா சரியாக இவர்கள் நுழையும்பொழுதில் உடலை வலப்புறமும் இடப்புறமும் நெரித்தாள்.கைகளை தலைக்கு மேல் உயர்த்திக்கொண்டு கண்ணை சுருக்கிக்கொண்டு கால் களை உதைத்தாள்.. சிணுங்கத்தொடங்கினாள்..தேவதை அவள் தலையை தடவிக்கொடுத்தாள்.. கண்களிலிருந்து சிறிதே கண்ணீர் துளிகள் விழுந்தன.

"தலைவியின் அழைப்பு எதற்கோ? என்னைப்போன்றவர்களை எங்கும் நியமிக்காமல் இருப்பதற்கு எதுவும் காரணம் உண்டா? நீ அறிந்த செய்திகள் என்ன?"தலைவி மிகக்கவலையாக இருந்தாள்.உலகமெங்கும் யுத்தங்களும் கொடிய நிகழ்வுகளுமாய் கண்ணீருக்கான காரணிகள் நிரம்பி இருந்தாலும் உங்களுக்கெல்லாம் வேலையளிக்க இயலாதவளாக அவள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றனவாம்.

யுத்தக்களங்களில் கண்ணீருக்கு வேலையில்லை.
அழுதழுது ஓய்ந்துவிட்ட கண்களில் கண்ணீருக்கு சக்தி இல்லை.
விட்ட கண்ணீருக்கு விலை இல்லை.
ஆற்றுவிக்க ஒரு ஆளில்லை
விரக்தியின் எல்லையில் அவர்கள் கண்ணீர் தேவதைகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கி வருகிறார்கள். ஒரு சொட்டு கண்ணீர் விடவும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. கருணையில்லாத மனங்களுக்கு முன் மதிப்பிழந்து நிற்கிறது கண்ணீர்.
குருதியே சில நேரம் கண்ணீர் வடிவத்தில் விழச்செய்து கொள்வோம் .. நீங்கள் எதற்கு என்று விரட்டப்பட்ட தேவதைகள் மனம் வெதும்பி இறைவனிடம் முறையிடபோயிருக்கிறார்களாம்.

எங்கே தன் கண்ணீரும் வற்றிவிடுமோ என்ற பயத்தில் தான் தலைவி என்னைப்போன்ற கண்ணீர் தேவதைகளை அழைத்து குழந்தைகளின் சின்ன அழுகைக்கதைகளையும் அதை ஆற்ற வரும் அன்பின் நெகிழ்ச்சியான இன்பக்கதைகளையும் கேட்டும் கண்களில் சில சொட்டு கண்ணீர் விட முயல்கிறாள் .

ஒருக்களித்த கதவிற்கு வெளியே .. "அடி என் தங்கமே! அழாதே ! இந்தா அம்மா வரேண்டி கண்ணு! உன்னை தூக்கிக்குவேனாம்.... " - நிலாவின் அம்மா வருகிறாள் பார்.

என் செல்லப்பொண்ணுக்கு என்னவேணும் .. அம்மா இருக்கேன் .. இந்தா பாரு அப்பா அப்பா.. இருக்காங்க.. எதுக்கு அழணும் நீ ... ஹ்ம்..

உலகின் ஒரு மூலையில் கண்ணீரின்றி அரற்றும் மற்றொரு குழந்தையை நினைத்தபடி மேலெழும்பி பறந்தது மற்றொரு தேவதை..

February 19, 2009

அந்த மஞ்சப்பைய எடு....

நாங்க பெரிய ஐட்டங்களா சைக்கிள், டீவி இப்படி எதாச்சும் கேட்டாக்கூட அப்பா சீரியசா முகத்தை வச்சிட்டு " அந்த மஞ்சப்பைய எடு' ன்னு வாங்க.. மஞ்சப்பையில் அதெல்லாம் வாங்கமுடியாதுல்ல.. உடனே சிரிச்சிடுவோம். அப்ப எல்லாம் கடைக்குப் போனும்ன்னா ஒரு மஞ்சப்பை தான்.. அது விதவிதமா ஒரு பெரிய கூடையில் கிடக்கும்.. பெரிசு சின்னது, சாமிபடம் போட்டது, சீமாட்டிபை, சங்கம் பை ன்னு... ஹபீப் கடை பை மட்டும் ஒரு மாதிரி டார்க் ஆலிவ் க்ரீன் ல இருக்கும்.. சிலசமயம் ப்ரவுனாவும் வரும்.


மஞ்சள் பை புகைப்படம் பதிவுக்கு வேண்டுமென தேடினேன். அட ஏற்றி விட்ட ஏணிய மறந்துட்டாங்களே.. :( எனக்கும் மேற்கொண்டு தேட பொறுமை இல்லை. வீட்டில் வெண்டைக்காய் போட்டு வச்சிருந்த மஞ்சைப்பையை ப்ரிட்ஜிலிருந்து எடுத்து சுடச்சுட( ஆனா அது ஜில்ன்னு இருந்தது ) எடுத்த போட்டோ..


சீமாட்டியில் துணி எடுத்தா 4 துணி எடுத்தோ நாலு பை தாங்கன்னு கேட்டு வாங்குவது அப்போது. கடைக்குப்போனா பேப்பரில் மளிகை சாமான் கட்டித்தருவாங்க நாம நம்ம பையில் வாங்கிக் கொண்டுவருவோம்..இப்ப நாம கைவீசிப்போகிறோம் .. பெரிய பெரிய பாலிதீன் தராங்க.. ரொம்ப கொடுமை. பெரிய பெரிய கடைகளில் கையில் கொண்டுபோகிற பையை வெளியே வச்சிடனும்.

தில்லியில் எல்லா பழக்கடை காய்கறி கடையில் .. எடையில் நிறுத்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு கை தன்னிச்சையாக பாலிதீன் பைகளை பிரித்து வைத்திருக்கும் உடனே பொருள் உள்ளே கொட்டி ஒரு முடிச்சிட்டு கொடுத்துவிடுவார்கள். இது மின்னல் வேகத்தில் நடக்கும். நான் பத்துவருடத்துக்கு முன் இங்கே வரும் போது அது எனக்கு புதிய விசயம் தான். அப்பொழுது வரைக்கும் கூட எங்க ஊரில் இந்த அளவு புழக்கத்தில் வரவில்லை.ஆனால் இப்பொழுது ஊரிலும் இதே கதை தான்.

நான் சிறிது காலமாகவே காய்கறி சந்தைக்குப் போனால் (கட்டைபை எனும் ஆர் எம் கேவி பையோடு).. எடைபோடும்போதே பையா (அண்ணா) அந்த பை வேணாம் வேணாம்ன்னு கத்துவேன். சரியாக காதில் வாங்காத அவர்கள் என்ன எடை சரியாத்தானே இருக்கு.. என்ன வேண்டாமா என்றெல்லாம் அதிர்ந்து விட்டு பின் புரிந்து கொள்வார்கள். ஒரே கடையில் வெண்டைக்காயும் பீன்சும் வாங்கினால் இரண்டையும் ஒன்றாகவே வா என்று ஒரு கேள்வி கேட்பார்கள். ஆமாய்யா ஆமாம் என்று வாங்கிவருவேன். இதில் பல நன்மை இருக்கிறது.

மகனுக்கு இந்த வயசில் காய்கறி பெயர் சொல்லித்தரனும்.. ஒரே மாதிரியான பொருட்களை தேடி பிரிக்கக் கத்துக்குடுக்கனும் இதெல்லாம் கூடப் பாடத்திட்டத்தில் வருவது தான். அவன் எனக்கு உதவியும் செய்யனும்.அழகா உட்கார்ந்து ஒவ்வொன்னா பிரிச்சு தனி தனி காய்கறிப்பைகளில் போடுவான். பெயர் சொல்லிக்கொண்டே.. அம்மா உனக்கு ஹெல்ப் செய்தேனேனு அவனுக்கும் குஷி.. இத்தனைக்கும் மேலே சுற்றுப்புற சூழலுக்கு கேடு குறைவு .

ஆனால் மஞ்சப்பை கூட இப்பொழுது முன்பு போல் வருவதில்லை. எங்க தாத்தா எப்பவும் ஒரு மஞ்சள் பை வைத்திருப்பாங்க.. அது இல்லாம நீங்க அவங்களைப்பார்ப்பது அபூர்வம்.. அதுல பர்ஸ் அப்பறம் ஒரு விபூதிப்பை இருக்கும். அது அழகா மடிச்சு மடிச்சு இருக்கும். தன்னோட தலைகாணி பக்கத்துலயே தூங்கும் போதும் வைத்திருப்பாங்க. இப்ப பழைய பை வேணாம் புதுசா ஒரு மஞ்சப்பை கொடுன்னு கேட்டா ஒரு துணிக்கடை பை கூட முழு காட்டனில் வருவது இல்லை. எதோ கலந்து செய்யறாங்க அது அப்படியே மொடமொடன்னு நிக்குதே தவிர மடங்குவது இல்லை..:( தாத்தா கேட்ட மஞ்சப்பைய குடுக்கமுடியலயேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்.

தில்லியில் இப்போது சட்டம்( அட அடிக்கடி போடுவாங்க எடுப்பாங்க) வந்திருக்கு பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என்று ,.. ஆனாலும் இன்னமும் நடக்கிறது . உங்கள் உங்கள் பிள்ளை பேரன் பேத்திக்கு சொத்து சேர்த்து வைக்கும் நேரத்தில் கொஞ்சம் நல்ல சுற்று சூழலையும் தந்துவிட்டு போவோம் என்று நினையுங்கள்.

February 15, 2009

நேற்று இன்று நாளை

ரொம்ப வருசங்களுக்கு முன்பு சோல்ட்ஜர்ன்னு ஒரு டப்பா ஹிந்திப்படம் பார்த்திருக்கேன். அப்ப ஹிந்தி அவ்வளவா தெரியாது. (இப்பமட்டும்??) அதனால் அந்த படத்துல நடக்கரதெல்லாம் புரியாம முழிச்சிட்டிருந்தேன். ப்ரீத்தி ஜிந்தா வும் தர்மேந்த்ரா வோட சின்னப்பையனும் நடிச்ச அந்த படத்தை அப்படியே தமிழில் எடுத்திருக்காங்க விஜய்க்காக வில்லு.. விமர்சனம் படிக்கவே இல்லை. ( படிச்சு மட்டும் என்ன பாக்காம தப்பிக்கவா போகறோம்..) வேற ஊருக்கு கொண்டுபோய் அப்பாவை நயனதாரா காமிக்கும் போது தான் இது அந்த படம் மாதிரியே இருக்கேன்னு நினைச்சேன். அன்னைக்கு புரியாத காரணமெல்லாம் நேத்தைக்கு புரிஞ்சுடுச்சு.. தியேட்டர்லயே எடுத்த சிடிங்கறதால லைவ்வா தியேட்டர்ல மக்கள் அடிச்ச கமெண்டோட வே படம் பாத்தோம்.. டேய் அதேகோயிலுடா .. அங்க அந்த அம்மா உக்காந்திருக்கும் பாரேன்னு யாரோ சொல்றான்.. ஆகா என்ன ஒரு கணிப்பு...

படத்துல பெரிய பிள்ளையார் சிலைய வச்சிட்டு கடலில் போடற சீனெல்லாம் வருது.. ஆனா வில்லு ராமன்னு பாடறார்.. பிள்ளையார் கோச்சிக்கமாட்டாரா? அப்பறம் அந்த பிள்ளையார் பொம்மை மூலமா கடலுக்குள்ள போறாராம்.. ஏன்ப்பா கடல்ல இருந்து தீவிரவாதி உள்ள வந்தாலே யாரும் கண்டுக்கறதில்ல இவரு போறதயா கண்டுக்கப்போறாங்க சும்மா நல்ல பகல் பன்னிரண்டு மணிக்கு எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டே போகலாமில்ல.. உஸ் அப்பாடா ஒரு கொடுமை முடிஞ்சது..

இதுக்கெல்லாம் அசராம...

அடுத்து படிக்காதவன் . வில்லே தேவலாம்ன்னு ஆக்கிட்டாங்கப்பா.. படமா அது .. அய்யோ ஒரு காட்சி கூட நம்பறமாதிரியே இல்லை.. ரொம்ப நம்ப முடியாத ஒரு காட்சி ஒன்று வந்தது .. அதை மட்டும் அவங்களே கிண்டல் செய்துகிட்டு கனவுன்னு சொல்லிட்டாங்க.. படத்துல ஒரு சீன்ல படிச்ச முட்டாளு ன்னு ஒன்னு சொல்றாங்க அது ஹீரோயினைப்பார்த்து இல்லை.. படம் பார்த்தவங்களைப் பார்த்து தான்.

நான் கடவுள் பாட்டு தரவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்.சில பாட்டெல்லாம் ஏற்கனவே கேட்டமாதிரியே இருந்தது.. ஒரு வேளை படத்தில் பழயபாடலிருந்து லிங்க் எதுவும் வச்சி எடுத்திருப்பாங்கங்களா இருக்கும்.படம் பார்க்கலை.. இன்னும் இங்க ரிலீசும் ஆகலை..சிடியும் வரலை..இன்று ஒரு பேட்டி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது .பூஜாவுடன் அந்த பிச்சைக்காரப்பாத்திரத்தில் நடித்த அனைவரும் இருந்தனர். சிலர் பேசமுடியாமல் இருந்தனர். அப்படிப்பட்டவர்களை வைத்து எடுக்கவேண்டி இருந்ததால் தான் படம் 3 வருடமாகிவிட்டது . சிலர் அத்தனை கஷ்டபட்டது வேஸ்ட் என்று சொன்னதாக பதிவர் கோபிநாத் மூலம் அறிந்தேன். அப்ப எனக்குத் தோன்றிய தத்துவம் ....

ஒருத்தருக்கு பிடிக்காத உணவை 10 மணி நேரம் உக்காந்து சமைத்துத்தந்தாலும் அவங்களுக்கு சாப்பிடப்பிடிக்குமா..
அதுக்கு அவங்க பேசாம குருவி, படிக்காதவன், வில்லு மாதிரி ஃபாஸ்ட்புட் படம் பாத்துட்டு போயிட்டே இருப்பாங்கள்ள..

உஃப் இதான் நேற்று இன்று நாளை பார்த்த பார்க்கப்போகும் படங்களைப்பற்றிய பதிவு... தலைப்பு ஒத்துபோகுதா..?

February 13, 2009

நாளெல்லாம் காதலர் தினமே...


நிச்சயமாகத் தெரியாத அன்பின் வடிவத்தை
கற்பனைக்கு கொண்டுவந்து
வளைத்து நெளித்து
உருவம் வரைந்து வைத்து..

உயிர் நிறமென்று மனதால் உருகி
ரத்த சிவப்பால் வண்ணம் தீட்டி

நீயேன்றும் நானென்றும்
வார்த்தைகளை வடித்து
முதல் சில வருடங்களைப்போல
அட்டையளிக்கவில்லை தான்.

புன்முறுவலும் புருவ நெறிப்பும்
விருப்பு வெறுப்பை
அளவிட்டு சொல்லிவிட
ஏதுவாகிவிட்ட நாட்களில்...
காதலின் பக்குவத்தை
கைப்பக்குவமாக்கி ,
சொற்கள் வடிவம்பெறுமுன்னே
செயல் வடிவமாக்கி
வானவில் வண்ணங்களை நாட்களுக்குத் தீட்டி
நானென்றும் நீயென்றும்
இல்லாமல்
நாமென்று வாழ்க்கை வடித்து

நாளெல்லாம் காதலர்தினமே! ....

(எல்லாருக்கும் வேலண்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்)

February 4, 2009

நகர்படத்தில்( அனிமேசன்) சிறுமுயற்சி

முதன் முதலில் ஒரு அனிமேசன் செய்திருக்கிறேன். சிறுபிள்ளை வரைபடம் போல...

நான் ஆதவன். செய்திருந்த அனிமேசன் தான் இந்த ஆர்வத்தை உண்டாக்கியது.200 posts

February 3, 2009

200 பதிவுகள் கடந்த சிறுமுயற்சி - திகில்காட்சிகள் நிறைந்தது

வழக்கம் போல என் டேஷ்போர்டில் கடைசியாக போட்ட போஸ்ட் 198 என்று காட்டிக்கொண்டிருக்க .. பதிவின் பக்கங்களில் 201 கூட்டுத்தொகை காட்டிக்கொண்டிருக்க எடிட் போஸ்ட் பக்கத்தில் சென்று ஷோ 300 போஸ்ட் என்றுப் போட்டுப்பார்த்தேன்.... 1-201 ஆஃப் 201 என்று காட்டியதால் குழம்பித் தெளிந்து நான் 200 பதிவுகள் கடந்துவிட்டதை தாமதமாகத் தெரிந்துகொண்டேன்.

இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் சிபியின் ஆவி நண்பர்களோ என்னவோ? முன்பு எப்போதோ டேஷ்போர்டிலிருந்த பின்னூட்டங்களை தின்ற ஆவிகள் இப்போது பதிவின் கணக்கையும் தின்றுருச்சு போல.. :) அவை இங்கேயே குடியிருக்கிறதோ..? ப்ளாக்கரின் கோஸ்டு வேலையும் இதில் இருக்கிறது.
இன்னமும் எனக்கு டேஷ்போர்டில் மாடரேட் செய்யவேண்டிய பின்னூட்டங்கள் காட்டப்படுவதில்ல்லையே...

பதிவர் மரவளம் வின்சென்ட் உடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்வைச் சொன்னார் அது எனக்குப் பெரிய திகிலாக இருந்தது. முன்பெல்லாம் பிக்னிக் அல்லது சுற்றுலா குடும்பங்களாக செல்வது குறைவு தான். இப்போது பல இடங்களுக்கு மக்கள் சென்று வர பிரியமாக இருக்கிறார்கள். அவர்கள் அந்த இடங்களை சுற்றிப்பார்ப்பதை விட ... அதிகமாக குப்பைப் போட்டுவருவது தான் நடக்கிறது. அதிலும் பெரும் கொடுமை இந்த ஆண்கள் கும்பலாக செல்வது. இளைஞர்களுக்குள் பாட்டில் எடுத்து செல்லும் பழக்கம் இருக்கிறது. அதனை அந்த அழகான இயற்கை பகுதிகளில் குடித்துவிட்டு போடுவது மட்டுமில்லாமல் அவர்கள் செய்யும் ஒரு காரியம் உடைத்து எறிவது.

வெறும் புல்வெளியில் போடுவதை விட திகிலான காரியம் அதனை ஆற்றுக்குள் போடுவது. இவ்வாறான ஒரு கண்ணாடிச்சில் ஆற்றில் கால் வைத்து ஆனந்தித்து இருந்த ஒரு நபரைப்பற்றிக் கூறினார் வின்சென்ட். பொதுவாக தண்ணீருக்குள் இருக்கும் போது இரத்தம் கசிவதோ அல்லது வலியோ நமக்குத் தெரிவது குறைவு. அந்த நபருக்கு கண்ணாடி கீறி ரத்தம் வெளியேறியபடி இருந்திருக்கிறது. மணல் நெருடிய உணர்வில் காலை வெளியே எடுத்தவர்க்கு பகீரென்றிருக்கிறது.
எக்கசக்கமாக இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது.

கொடுமையில் கொடுமை அவர் தன் மோட்டர்பைக்கில் வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் எவ்வாறு செல்வார். முதலுதவிகள் செய்து எப்படியோ பாதுகாப்பாக மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி இருக்கிறார்கள்.. ஒரு வேளை அவர் தன்னையறியால் இன்னும் கொஞ்சம் நேரம் அந்த நீரில் இரத்தம் கசிய நின்றிருந்தால் அவர் நிலை நினைத்துப்பார்க்கவே திகிலாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நம் பதிவர் குழுவினர்கள் மலைப்பகுதிகள் சென்று வந்ததை பரிசல் வடகரை வேலன் போன்றோர் எழுதி இருந்தார்கள்.. அப்போது வேலன் அவர்களும் செல்வேந்திரன் அவர்களும் கொண்டு சென்ற பொருள்களை மலையில் சேர்க்காமல் கீழே கொண்டுவர கோணி கொண்டு செல்ல இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். அது மிக நல்ல விசயம்.

நாங்கள் மணாலி சென்றிருந்த போது இப்படி மலையடிவாரத்திலேயே ஒரு பெரிய குப்பை போடும் பையைக் கொடுத்து குப்பைகளை கீழேயே கொண்டுவருமாறு சொன்னார்கள்.. அதனை திரும்ப கொண்டுவந்து அவர்களிடமே கொடுக்கும் படியும் கேட்டுக்கொள்கிறார்கள்.. முதலில் அந்த பைக்கு பணம் வாங்கிக்கொண்டு பின்னர் திரும்பிக்கொடுக்கும்போது அந்த பணத்தை திரும்ப தந்துவிடுவார்கள். பணம் என்றால் தானே மக்கள் எதையும் கவனமாகச் செய்வார்கள். :( ( இதை முன்பே எழுதி இருப்பதாக ஞாபக்ம் ஆனால் நல்ல விசயத்தை திரும்ப சொல்வதில் தவறில்லையே)

சுற்றுலா செல்வதில் இருக்கும் விருப்பம் அந்த பகுதியை அதே அழகோடும் பாதுகாப்பானதாவும் வைத்துக்கொள்வதிலும் இருக்கவேண்டும்.

February 2, 2009

ஒன்றிப்படிங்க விளங்கும்....

முல்லை என்னை வழக்கொழிந்த தமிழ் சொல் சிலவற்றை எழுதுமாறு தொடருக்கு அழைத்திருக்கிறார்கள்.. உண்மையில் நம்மையும் அறியாமல் பல வார்த்தைகளை மறந்துவிட்டிருக்கிறோம்.. மகனிடம் தமிழில் பேசு என்று வலியுறுத்தும் என்னிடம் அவன் திரும்பி கேட்கும் போது தான் நான் ஆங்கிலமே கலந்து எத்தனை பொருட்களைக் குறிப்பிடுகிறேன் என்று உணர்ந்தேன்..நிறங்களை தமிழில் குறிப்பிடுவது குறைந்துவிட்டது. சின்னப்பிள்ளையா இருந்தப்பல்லாம் பச்ச வாளியில் தண்ணி பிடிச்சு வைச்சிருக்கேன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவள் தான் எப்ப மாறிவிட்டேன்னு தெரியவே இல்லாமல்..க்ரீன் பக்கெட் நிறைய தண்ணீர் பிடிச்சுவைன்னு சொல்றேன். இப்ப ஆங்கில வார்த்தைகலப்பும் இந்தி வார்த்தைக்கலப்பும் எக்கசக்கமாகிவிட்டது.

எங்க ஆச்சி நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது குளிப்பாட்டி விடுவாங்க.. அப்போதெல்லாம் முதுகுப்பக்கம் சோப்பு போட்டுவிடனும்ன்னு " பொறத்தக்காட்டுன்னு" சொல்வாங்க.. புறம் என்றால் பின்புறம்ன்னு அர்த்தம்பட சொல்வாங்கன்னு நினைக்கிறேன். அதை அவங்க சொல்லும்போது அழகா இருக்கும்..

என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்..இப்ப கொஞ்சம் புரிகிறது. அம்மா உழக்கால்( ஆழாக்கு) அளப்பதால் அரை உழக்கு கால் உழக்கு என்றும் சொல்வாங்க.. இப்ப பலரும் டம்ளர் கணக்கு ஒரு டம்ளர் இரண்டு டம்ளர்ன்னு சொல்வதைக் கேட்டிருக்கேன்.

மேற்கொண்டு என்ன வார்த்தை என்று யோசிச்சிட்டே இருந்தேன் அப்பத்தான் முல்லையே ஒரு யோசனை சொன்னாங்க.. உடனே நான் .." நல்ல ஐடியான்னு " சொன்னேன்.. பாருங்க நான் நல்ல யோசனைன்னு சொல்லவே இல்லையே.. :)கிழமைகளை நாம தமிழில் சொல்வதும் குறைந்தே வருகிறது என்று தோன்றுகிறது. இவையெல்லாமும் ஒரு நாள் வழக்கொழிந்த வரிசையில் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.

படிக்கும் போது சரியாப் படிக்கலைன்னா.. நல்லா ஒன்றிப் படிச்சால்ல நீ எங்க பாட்டுக்கேட்டுக்கிட்டு ... வாய்பாத்துக்கிட்டு படிச்சான்னு திட்டுவாங்க.. அந்த ஒன்றி படிக்கிறது இப்பல்லாம் நாம் பயன்படுத்துவது இல்லைன்னு நினைக்கிறேன்..

என்ன முழிக்கிற... சொன்னது விளங்குச்சா இல்லையான்னு கணவர் கேப்பாங்க.. விளங்கிக்கொள்ளுகிற என்ற வகையில் விளங்கிச்சா என்பது நல்ல சொல் தானே... நான் யாரையும் கேட்பது புரிஞ்சுதான்னு தான்.. இப்படியாக என் ஞாபகத்துக்கு வந்த சில வார்த்தைகளை இங்கே தந்திருக்கேன்.. இங்கே யாரோ பதிவர் எல்லோரையும் ஞாபகத்தை நியாபகம்ன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க அது யாருன்னு இப்ப ஞாபகம் இல்லைங்க.. :)

பி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.

நான் அழைக்க விரும்புவது....

ரொம்ப நாளா பதிவு போடாத கோபிநாத்,
அப்பரம் அயன்கார்த்தி
துளசி]
ஊடால பின்னூட்டப்பதிவு போட்ட அபி அப்பாவையும் பதிவிட அழைக்கிறேன்..
அவர் வித்தியாசமா ஒரு பதிவு போடுவதாக சொல்லி இருக்கிறார்.