Showing posts with label பஸ்பயணம். Show all posts
Showing posts with label பஸ்பயணம். Show all posts

August 11, 2007

எப்போதும் கோபமாவே இருப்பாங்க போல

தில்லியில் அதிகம் பஸ் மற்றும் பொது வண்டிகளில் பயணம் போவதில்லை எனவேதான் இங்கே நடக்கும் சண்டை பற்றி எழுத வில்லை..(இந்த டிஸ்கி முதல்லயே போட்டுவிட்டேன்.)விடுமுறைக்கு வரும் போது ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மூலையில் என்பதால் பஸ்களில் இரயில்களில் பயணிக்கவேண்டிய கட்டாயம்.

மதுரைபஸ் ஸ்டாண்டில் புளியங்குடி பஸ்ஸில் ஏறுவதற்கு பெட்டியெல்லாம் கொண்டு வைத்ததும் கண்டக்டர் இத்தனை லக்கேஜெல்லாம் ஏத்தாதீங்கய்யா நிக்க இடம் இருக்காது என்று வள்ளென்று விழுந்தார்..அய்யா நாங்க யார் காலையும் இடறாமல் எங்க காலுக்கடியில் வைத்துக்கொள்கிறோம் என்றபடி டிரைவருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அத்தனையையும் போட்டுவிட்டு காலைத்தூக்கி அதன் மேல் வைத்து உட்கார்ந்து கொண்டோம்.


கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் ஏறிக்கொண்டே போனது...டிரைவர் ஏத்தாததைய்யா ஏத்தாதையா என்று பாடிக்கொண்டே வந்தார்..சிலர் இன்ஜின் மேல் கூட உட்கார்ந்து வந்தார்கள். அய்யா வண்டி பழசு கூட்டம் ஏறி அது நின்று போனா எனக்கு தெரியாது என்றார் டிரைவர். பஸ்ஸுக்குள்ள ரெண்டு அக்காங்க பேசிக்கிட்டாங்க..
''ஆமாக்கா அன்னிக்கு மாதிரி நின்னா எங்க போக டெப்போ என்ன இங்கன கிட்டத்துலயா இருக்கு.."
ஆமாக்கா அவர் சொல்றாரு ஆனா நம்ம ஆளுக கேக்கவா செய்யும்"


ஒரு நிறுத்தத்தில் இன் ஜின் சீட் காலியாக அடுத்து ஏறிய அம்மா பக்கத்துல உட்கார்ந்து இருந்த அத்தையை பாத்து அம்மா அப்படி தள்ளி உக்காருங்க என்றதும் அத்தை அம்மா நாங்களே நாலு பேர் மூணு பேர் சீட்டுல அந்தா அங்க போய் உக்காருங்களேன் என்று கண்ணாடிக்கு பக்கத்தில் இருந்த டப்பாவை க்காட்ட அந்த அம்மாவுக்கு கோபம் பொசுக்கென்று ஏறியதில்.
"எங்க இன் ஜின் ல யா உக்கார சொல்லுதிய ___ பழுக்கவா ? ஏன் நீங்க உக்காருறது தானே?"

எனக்கு கோபம் " அம்மா உங்கள யாரும் அதில உக்கார சொல்லல..டப்பா இருக்கே முன்னால் அதுல தான் உக்கார சொன்னாங்க...இத்தனை நேரம் எத்தனையோ பேர் இன் ஜின் மேல கூட உக்காரத்தான் செஞ்சாங்க.."

கொஞ்ச நேரத்தில் அடுத்த ஸ்டாப்பில் இன்னும் ஆள் ... கோபப்பட்டு பேசின அம்மாவை யாரோ தள்ளி விட...
" அக்கா தள்ளாதீங்க இங்கன ஏக்கனவே திட்டராக நீங்க வேற தள்ளாதீக சாஞ்சாலும் திட்டுவாகலோ என்னமோ.."
எங்களத்தான் நக்கலடிக்கிராங்க..
பஸ் ஹாரன் எங்க காதுவலிக்க அடிச்சும் வழி விடாமல் போன பையனை பஸ்ஸை நிறுத்தி "ஏலே என்ன " திட்ட ஆரம்பிக்க அவனும் விடல .....இறங்கி வாய்யா பேசிக்கலாம்"

"டிரைவர்..அண்ணே கோச்சுக்காதீங்க நேரமாச்சு வீட்டுல போய் கஞ்சி குடிக்கணும்" என்று விரட்டும் அக்காவுக்காக டிரைவர் சமாதானாமாகி "இவனையெல்லாம் விடக்கூடாது இறங்கி நாலு சாத்தனும்" என்று கோபமாகவே பஸ்ஸை உறும விட்டார் .....


இன்னொரு நாள் கோவையில் உக்கடத்தில் இறங்கறோம் ...பின்னாடி இறங்கும் ஒரு அம்மா இன்னொருத்தரை "வெரசா இறங்கினா என்ன மத்தவங்க இறங்க வேணாமா " அவ்வளவுதான் " அம்மனீ உனக்கு மேனர்ஸ் இருக்கா ஆ ...இங்க முன்னாடி இறங்கினாத்தான ...அவுங்களை தள்ளிவிட்டுட்டா இறங்க சொல்லுற்ற நீயு"

"'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு" என்று அந்த ஒரு பிடி பிடிக்க சண்டை ஆரம்பித்தது..அவங்க
சண்டை ஆரம்பித்ததும் என் மகள் " அம்மா அதான பார்த்தேன் என்னடா பஸ்ஸுல வந்தோமே ஒன்னும் சண்டையே காணுமேன்னு ..எப்போதும் எல்லாரும் கோபமாவே இருப்பாங்க போல...."