Showing posts with label என்னைப் பற்றி. Show all posts
Showing posts with label என்னைப் பற்றி. Show all posts

February 21, 2007

தையலில் இருந்து தமிழ்மணம் வரை

பள்ளியில் படிக்கும் போது அம்மா சொன்னாங்களே என்று
தையல் வகுப்பில் சேர்ந்தேன். கர்ச்சீப் தைக்கறதுக்குள்ள மேடத்தை ஒருவழியாக்கினேன். அம்மாவுக்கு சட்டை தைத்து தந்தேன். மேடத்துக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும் அது என்னா என் கிட்ட ஒக்காந்து வெட்டும் போது மட்டும் சரியாதானே வருது நீயா வெட்டினா ஏன் தப்பு செய்யறன்னு.. நீங்க இருக்கற தைரியம் தான் அப்படின்னு சொல்லி எப்படியோ நாலஞ்சு டிசைன் தச்சாச்சு. தையல்ன்னா என்ன தெரிஞ்சுகிட்டாச்சு. போதும்ன்னு விட்டாச்சு.


அப்புறம் கல்லூரி படிக்கும் போது ஹிந்தி. அப்ப தெரியாதுங்க இப்படி டில்லியில் வந்து மாட்டுவேன்னு ,
ஏதோ அப்படி ஒரு ஆசை. அங்க போய் படிக்கறத விட அரட்டை தான் நிறைய..இருந்தும் மூணு தேர்வு முடிச்சாச்சு. அவ்வளவு தான் இதுக்குமேல தேர்வெழுத நமக்காகாது .ஹிந்தி புரிஞ்சுடுச்சு .ஹிந்தி வகுப்ப விட்டாச்சு.



பாட்டு கத்துக்கணும்ன்னு ஆசை ..என் குரலுக்கு அவ்வளவு ஆசை கூடாது தான். ஆனா அப்போ யாரும் பக்கத்துல சொல்லித் தரவங்க இல்லாததால வயலின் கத்துக்கிட்டேன். இரண்டு வருசம் பாட்டெல்லாம் வாசிக்க தொடங்கினதும் வீடு மாறிட்டோம் . தப்பிச்சார் வாத்தியார்.


போன வீட்டு பக்கத்துல ஒரு பாட்டு டீச்சர் இருந்தாங்க . சரிதான் ஆசைப்பட்டது நிறைவேத்திக்க வேண்டியது தான்னு பாட்டு கத்துக்க போய் அடிப்படை அறிவு வளர்த்துக்கிட்டு இருக்கும் போதே , கல்யாணம் ,அப்புறம் டில்லி பயணம்.


கணவரோட லேப்டாப் மகிமையால வீட்டுலயே அடுத்த பொழுதுபோக்கு ,எக்சல், வேர்டு, பவர் பாயிண்ட் எல்லாம் புத்தகமும் லேப்டாப்புமா நானே .


கொஞ்சம் வருஷம் குடும்பம் குழந்தை .அப்புறம் குழந்தை தூங்கினதும் க்ளாஸ் போக கிடைத்த சனி ஞாயிறு மதியத்து பொழுதுகள் மல்டிமீடியா போட்டோ ஷாப்புமா
கழிச்சாச்சு. கம்ப்யூட்டர் வந்தது. நெட் வந்தது. சொந்தங்கள் நட்புகள் என்று மெயில் களும் சாட்டுகளும் பின்னர் வலை போட்டு , பிடித்த தளங்களை மேய்வதுமாய் பொழுதுகள் ஓடியது.

குழந்தை வளர்ப்பும் , குழந்தைகளுக்கான தளங்களும் என்று பொழுதுகள் ஓடியது. அடுத்த கட்டம் நம்ம பொழுதுபோக்கு பென்சில் டிராயிங் மற்றும் பெயிண்டிங் சொல்லித்தரும் தளங்கள் பார்த்து  வரைந்து பார்த்தாச்சு.


இப்போ அடுத்த படி தமிழ்மணம் தேன்கூடு வலைப்பதிவு . எப்ப இது போரடிக்கப் போகுது தெரியலை. ஆங்காங்கே இருப்பது என்
பென்சில் டிராயிங்ஸ் . ஒன்று என் பெண்ணை மாடலாக வைத்து நான் வரைந்தது . அப்புறம் செடி போல் இருப்பது நெகடிவ் டிராயிங்க் வகையை சார்ந்தது.

February 1, 2007

உங்களுக்கு எந்த ஊரு?

"உங்களுக்கு எந்த ஊரு?" இது எங்க மாமா பார்க்கிறவங்க கிட்ட கேட்கற முதல் கேள்வி.பேசியே வேலை வாங்குகிற
அரசாங்க வேலையில இருந்ததால பேச்சுதிறமை அதிகம்.
அத்தை சொல்வாங்க, அவங்க ஊரையே விலை பேசிட்டு வந்துடுவாங்கன்னு.

அந்த கேள்விக்கு துத்துக்குடின்னு சொன்னா அதான் எங்க ஊரும் நான் அங்க தான் பிறந்ததுன்னு சேந்துக்குவாங்க.
இல்லயா அவங்க திருநெல்வேலின்னு சொல்லிட்டா அப்படியா நம்ம பக்கமா நான் வளர்ந்த இடம் ன்னு சொல்லி பேச்ச வளர்த்துவாங்க.

கோவை, உடுமலை இல்லை பொள்ளாச்சி அப்படின்னாலும் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை ...ஐயா அப்படி இப்படின்னு ஓரோர் ஊரிலும் ஒன்பது இல்லன்னா பத்து வருஷம் வேலை பார்த்திருக்கிறேன் . எல்லாம் நம்ம ஊரு தான்னு , இப்படி சளைக்காம யாதும் ஊரே யாவரும் கேளீர் ன்னு நட்பாக்கிக்குவாங்க.

இங்க டெல்லி வந்து போனா ஹிந்தி தெரியாதுன்னாலும்
அங்க இங்க சுத்தி, "தமிழா நானும் தமிழ் தான்". அப்ப தமிழ்நாடுன்னு சொல்லிக்கிட்டு ஊர்ப்பாசம் வந்திடும்.

சிங்கப்பூரையும் விடல;மக வீட்டுக்கு போய் இரண்டே வாரத்தில் ஹிந்தி , தெலுங்கு எல்லாரும் நண்பர்களாகி "அவங்க மகளா நீங்க" ன்னு கேட்டு அவளுக்கு வீட்டுக்கு வந்து ஹாய் சொல்லிட்டு போவாங்க.ஆமா இப்ப இந்தியாவில் இருந்து வந்தவங்க என்பதே போதுமே.

இந்த ஊர்ப்பாசம் எங்க வீட்டுல சிலசமயம் சின்ன செல்லச்சண்டைகள் வரக் காரணமா இருக்கும். யாராச்சும் பெரிய பாடகரோ இசை அமைப்பாளரோ அவங்க பேட்டி இல்லாட்டி இசை நிகழ்ச்சி பாக்கும்போது "பார்த்தியா எங்காள" என்று ஒருத்தர் ஆரம்பிச்சா அடுத்த ஆள் "அது என்ன அவர் உங்க சொந்தமா , எனக்கும் தான் அவங்க படைப்புகள் பிடிக்கும் , உங்க கட்சிக்கு எப்படி சேர்க்கலாம்" என்று கொஞ்சம் வாதம் பண்ணிக்குவோம்.

கல்யாணம் ஆன பெண்களுக்கு சொல்லவே வேணாம் வளர்ந்த ஊர் வாழ்கிற ஊருன்னு ரெண்டு. எங்க ஊருன்னு அம்மா வீட்டுல இருக்கும் போது பேசினா வாழ்கிற ஊரையும், வாழ்கிற ஊரில் சொன்னால் அம்மா ஊரையும் சொல்றதா அர்த்தம் ஆகிடும்.

எப்படியும் நமக்கு இந்த ஊர்ப்பாசம் வாழ்ந்த ஓரோரிடத்தில் இருந்தும் கொஞ்சம் ஒட்டிக் கொள்கிறது.
அந்த ஊரைப் பற்றி நல்லதா யாராவது சொன்னால் ஆகா ஏதோ நம்மளயே ஒருத்தர் சொன்னது போல பூரிச்சு போறோமே.

ஆமா, எழுதற எனக்கு எதெல்லாம் சொந்த ஊரு, மாமா மெச்சும் மருமகள் .பாருங்க நம்ம லிஸ்ட் இதுதான்,
மதுரை ,திருநெல்வேலி, கோவை, பொள்ளாச்சி,நாகை மாவட்டம், தஞ்சை மாவட்டம் இப்போது தில்லி.

வரைபடத்தில் இந்த இடங்களின் சில பல கி.மீ தொலைவில் இருக்கும் மற்ற இடங்களையும் , அதெல்லாம் கொஞ்சம் தூரம் தானே ஏன் அதை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லி அதெல்லாம் கூட சேர்த்துக்குவேன் அப்பப்போ.