September 20, 2012

கைநிறைய அள்ளிய நீர்


அள்ளாமல் விட்ட நதிக்காய்
குறைபட்டுக்கொண்டே
பெருநதியிலிருந்து
கைநிறைய அள்ளிய நீரும்
நொடிக்கொரு துளியாய்
குறைகின்ற சலிப்பின்றி
நதியோரமாய் நடப்பதெப்படி?
----------------------------
நம்பிக்கைகளுக்கு வலிக்காமல்
சொல்லிக்கொண்டேன்
கடினமற்ற பாதையில்
கூழாங்கல் தெரிய
நதியாக ஓடி
இசையாக இசைந்திருக்கவும்
ஆரவாரித்து வீழ்வதென்றாலும்
அருவியாக இசைத்திருக்கவுமாய்

September 16, 2012

குறையொன்றுமில்லை


குறையொன்றுமில்லை

செய்யாமல் போன நேர்த்திகளுக்காய்
குறிப்புகள் காட்டினால்
என்னை
குறை சொன்னதாகுமென்று
கையோடு கொணர்ந்த
வேறொன்றில்
கணக்கை நேர் செய்துகொள்கிறாய்

---------------------------------


சுவர்க்கண்ணாடி

எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்
பேசாது கேட்டுக்கொண்டிருந்தது
உயிர்ப்பொன்றை அறிந்து
மறைக்கத்தொடங்கிய நாளில்
நினைப்பதெல்லாம் கூட
கண்டுபிடித்துக்கொண்டிருந்துSeptember 14, 2012

கண்ணேறு

அவர்கள் ரயில் தண்டவாளங்களைத் தாண்டி ப்ளாட்பாரத்தில் ஏறினார்கள். வயதான ஒரு ஆண் ஒரு பெண். இளமையாக ஒரு பெண் இடுப்பில் ஒரு பெண்குழந்தை. நடுவயதில் ஒரு ஆண் ஒரு பெண். அவர்கள் எத்தனை நாளாக வீட்டிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார்களோ மூட்டை முடிச்சுக்களோடு அவர்கள் நெருங்கியபோது முன்னால் ஓடிவந்தான் கால்சட்டை அணியாத அழுக்குச்சிறுவன். 

உலகத்திலேயே மிக மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் ராஜநடை போட்டு , நிழலாக குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்த தாத்தாப் பாட்டியின் அருகில் சென்று நின்று கொண்டு ,பின்னால் வந்துகொண்டிருந்த தாயை வேகமாக வரச்சொல்லி அழைத்தான். 

அரசமரத்தின் இலைகள் ,சரசரக்க பேசாமல் அமைதிக்காத்த அந்த வெயில் மதியத்தில் குடிநீர்க் குழாயை அருகில் கண்டதும் அந்த இளம் தாய்க்கு ஒரு வேகம். கைக்குழந்தையின் உடைகளைக் களைந்து நேராக குழாயில் அதனை முழுக்காட்டினாள். தான் குளித்து குளிர்ந்தது போல அந்தத்தாயின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி .

குழந்தையும் பொக்கைவாய் காட்டி சிரித்து மலர்ந்தாள். அதுவரை சுற்றியிருப்பவர்களை கவனிக்காத அக்குடும்பத்து பெரியமனுஷி பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். குழந்தையின் சிரிப்பை விட்டு முகமற்றாவும் முடியாமல் அதேகணத்தில் எவரேனும் கண்ணேறு போடுவார்களோ என்று கலக்கமுமாக எங்களையும் நோக்கினாள். நாங்கள் கவனிக்காதவர்கள் போல் பார்வையை தூரமாய் நகர்த்தி வைத்தாலும் அவள் மனம் ஆறவில்லை.

தாத்தாவிற்கு ஒரு பீடி கொடுங்களேன் என்று அருகிலிருந்த மனிதர்களிடம் ஒரு பீடியை வாங்கித்தாத்தாவிடம் தந்துவிட்டு அவர் கால் செருப்பை எடுத்தாள் .குழந்தையை சுற்றி இப்படியும் அப்படிமாக கண்ணேறு கழித்தாள் .பிறகு அந்த செருப்பாலேயே அதன் தோளில் இரண்டு தட்டு தட்டினாள். கால்சட்டையில்லாத சிறுவன் வேகமாக வந்து பாட்டியை நாலு அடி அடித்தான். புதிய ஆடை அணிவித்து பேத்தியுடன் பாட்டி சிரித்து விளையாடுவதை அவர்கள் அறியாமல் ஒரு புகைப்படம் எடுத்தேன். எங்கே அந்தப்பாட்டி திட்டுவார்களோ என்று தொலைவிலிருந்து  தான் எடுத்தேன்.


September 13, 2012

தனியே தன்னந்தனியே..


ரயிலுக்கு நேரமாகி இருந்தது..  திரும்பி வரும்போது கொண்டுவரவேண்டிய பொருட்களுக்காக இடம் விட்டு பாதி காலியாக ஒரு பெட்டியும் ,ஏறக்குறைய காலியாக சீரியல் நடிகையின் கைப்பையைப் போல ஒரு தோள்ப்பை  தயாராக இருந்தது.. முதன்முறை தனியாக பயணிக்கிறேன் என்பது மட்டும் கலவரமாக இருந்தது.திருக்குறள் எக்ஸ்ப்ரஸ்.. தில்லியிலிருந்து நெல்லை (திருச்செந்தூர்) வரை என்றால் ஏறக்குறைய இந்தியாவின் இந்தக்கோடியிலிருந்து அந்தக்கோடி தானே.

வீட்டில் எது எது எங்கிருக்கிறது? சில செய்முறைகள் என எல்லாருக்கும் குறிப்புகளைக் கொடுப்பதில் கவனமாக இருந்தேன். எல்லாம் எங்களுக்குத்தெரியும் என்கிற குரல்கள் எனக்கு தெம்பளிப்பதற்காகவே வந்தது. ஆனால் அது என்னைக் கேலிசெய்வதாகப் பட்டது.

 மகள் கைப்பிடித்து நடந்து வளர்ந்தபின்  (இப்பவும் கூட நடந்தால் கைக்குள் கை கோர்த்துக்கொள்வாள்) . பிறகு மகன் . கைப்பையில் இருந்து எதையாவது எடுக்கவேண்டும் என்று அவன் கைப்பிடியை விட்டால் போதும் உடையின் நுனியைப் பிடித்துக்கொள்வான்.  இது என்னவோ போல் எதையோ விட்டுவிட்டுப் போகும் உணர்வு. ரயிலேறிய பிறகு மகனும் வந்திருந்தால் கைப்பையில் ஏறியிருக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், சாக்லேட்கள் ,பிஸ்கட்களில்  இன்மை உணர்தல்.  வண்டியில் கொறிக்க எதுவுமே வரவில்லை. அழுவதற்கு அவனுமில்லை. ஆனால் எப்பயும் இல்லாமல் எனக்கு கொறிக்க ஆசையாக வருகிறது. பசிக்காத வயிறும் பசிக்கிறது.

எதிரில் விஜயவாடா வரை செல்லும் கணவன் மனைவி. மருந்து அட்டைகளை (இரும்புசத்து மாத்திரையும் கால்சியமும்) நான் வைத்திருந்த புத்தகத்தின்மேல் அந்தப்பெண் வைத்தப்போது  சந்தேகமே இல்லாமல் முதல் ப்ரசவத்துக்கு ஊருக்குப் போகும் பெண் என்று தெரிந்தது. அவள் கணவன் வாசனைப்பாக்கை அதக்கிக்கொள்ளும் போது அந்தப் பெண் ஓயாமல் பேசுவாள் அவர் ம் ம் என்று பதில் சொல்லுவார். அவர் அவள் ஓய்வாக சாய்ந்து இருக்கும் போது ஓயாமல் பேசுவார் . அவள் ம் கொட்டுவாள். ஆகா என்ன ஒரு புரிதல் :)) அவள் சாப்பிடத்தொடங்குவது வரை நானும் காத்திருப்பேன். வயிற்றுப்பிள்ளைக்காரியைப் பார்க்க வைத்து சாப்பிடுவாங்களா என்ன? அதிகம் வெளியாருடன் பேசவிருப்பமில்லாதது போல அமைதியாக இருந்தார்கள்.


 ஒரே ஒருமுறை பாக்கில் கொஞ்சம் வாங்கி அவளும் வாயில் போடும்போது நீங்கள் இப்போது இதெல்லாம் சாப்பிடக்கூடாதே என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன்.

பக்கத்து இருக்கைக்காரர். ஐம்பது வயது .பெயர் தியாகி..தொலைபேசித்துறையில் வேலை .. மீரட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்பவர் .திருச்சியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு மேனேஜராக அவருடைய பயணம்.  ஆனால் கன்னியாகுமரி வரை செல்ல இன்னோரு பயணச்சீட்டும் வைத்திருந்தார். முதல் நாள் காலை முழுதும் கன்னியாகுமரி செல்லும் ஆர்வத்தில் இருந்தார். நடுநடுவில் அவருடைய நண்பர் இன்னோரு பெட்டியிலிருந்து வந்து எங்களோடு அமர்ந்து பேசுவார்.

முதலில் ரயில் உணவை ஏன் வாங்கவில்லை என்பதில் பேச்சு ஆரம்பித்தது .வட இந்தியா ரொட்டிக்கும் நம்ம ஊரு சப்பாத்திக்கும் என்ன பெரிய வித்தியாசம். அவருக்கு ஒரே குழப்பம். தென்னிந்தியாவில் போய் என்னமாதிரி சாப்பாடு கிடைக்கும் என்றும்... தமிழ்க்காரங்க இந்தி பேசமாட்டாங்க அதனால் நிச்சயம் ப்ரச்சனை வரும் என்றும் சொல்ல ஆரம்பித்தார். குழுவில் யாரும் கன்னியாகுமரி வரவில்லை. தனியாகச்செல்ல பயம் . கொஞ்சம் கொஞ்சமாக கவலையாக ஆரம்பித்தார். நாங்கள் எவ்வளவோ சொன்னபோதும்,வீட்டைவிட்டு வெகுதொலைவு சென்று ப்ரச்சனைன்னு வந்தா என்ன செய்வேன் என்று தனியாகப் போகப்போவதில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

எங்கள் பெட்டியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி இருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு தாங்காது என்பதால் அணைத்து வைத்திருந்தேன்.தியாகி நண்பரோட பெட்டியில் போய் சார்ஜ் செய்யும் போது எனக்கும் செய்து தாங்களேன் ..அலாரம் வைக்க வேண்டும் என்றேன். அதெற்கென்ன என் போனில்  வைக்கலாமே என்றார். அப்ப நீங்க திருச்சியில் இறங்கலையா என்றதும்..?

ஓ அதுசரிதான்.. இல்லை.. இல்லை.. நான் கன்னியாகுமரி போகவில்லை நான் இரவு ஒருமணிக்கே திருச்சியில் இறங்கிவிடுவேன் என்று குழம்பிய குழந்தை போல இருந்தார். எப்போது நான் கன்னியாகுமரி தனியாக சுற்றிப்பார்க்கப்போவதில்லை என்று முடிவு செய்தேனோ அப்போதிலிருந்து இலகுவாக உணர்கிறேன் என்று வேறு சொல்லிக்கொண்டார்.
(என்ன இருந்தாலும் குடும்பத்தை விட்டுட்டு ஊர் சுற்றுவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும் . இப்ப ரொம்ப நல்லது அடுத்த முறை குடும்பத்தோடு வந்தால் சரியாக இருக்குமே என்றும் சொன்னேன்)

மதிய உணவின் போது கைகளைக் கொண்டு ஏன் தென்னிந்தியாவில் சாப்பிடுகிறீர்கள் என்று ஆரம்பித்தார். அப்பத்தான் இவ்வளவு நேரம் இவருக்கு பரிதாபப்பட்டதே தப்பு என்று தோன்றியது.

எதிர் சீட்டுக்கு விஜயவாடாவில் ஏறியவர்களுக்கு ஒரு சின்னப்பெண் . ஐஸ்க்ரீம் வேண்டுமென்று அழுது என் மகனில்லாத குறையைத் தீர்த்தாள். ஒருவேளை கவிதை எதும் தோன்றி (தோணவே இல்லைங்க)அப்போது பார்த்து எழுதிவைக்க எதுவும் இல்லாமல் போய்விடக்கூடாதே என்று ரயில்நிலையத்தில் வாங்கிய நோட் பேடில் முகங்களை வரைந்தாள். அவளோடு சேர்ந்து நானும் பூனை வரைந்தேன்.. பில்லி என்றாள்.. எலி வரைந்தேன் எலி மாதிரி இல்லையோ என்னவோ .. யோசித்தாள். டாம் இது ஜெர்ரி என்றேன்.. பாய்ந்து அப்பாவின் கைபேசியில் இருந்த டாம் அண்ட் ஜெர்ரியைக் கொண்டு வந்து ஓடவிட்டாள். பின் இன்னோரு பக்கம் இன்னோரு பக்கம் என்று முகங்களாய் வரைந்து தள்ளினாள்.. தியாகிக்கு பொறுக்கவில்லை.. வாங்கி வையுங்களேன் என்றார். வரையட்டுமே என்று நான் இருந்தேன் .அவருக்கென்ன தெரியும்...? ஒரு அம்மாவின் கஷ்டம்.

ஒரு ஆச்சரியமான விசயம் . நான் நெல்லையில் இறங்கினேன். தியாகி அண்ட் கோ திருச்சியில் இறங்கினார்கள். டாம் ஜெர்ரிப்பாப்பா கன்யாகுமரியில் இறங்க இருந்தாங்க.. ஆனால் நாங்க எல்லாருமே திரும்ப மதுரையில் இருந்து ஒரே நாள் சம்பக்ராந்தி வண்டியில் ஒரே பெட்டியில் மீண்டும் திரும்பி வந்தோம். 

திருச்செந்தூரில் கோயில் கடைகளைத் தாண்டுகையில், ஒரு நினைவு, கோயில்கடையைத் தாண்டாமல் அழுகிற பையனுக்கு தொலைபேசி
’அம்மா கோயிலில் இருக்கேன் இங்க நிறைய கடை இருக்கு .. உனக்கு எதாச்சும் வாங்கிட்டு வரேண்டா’
’சரி சரி அக்காக்கிட்ட போனைக் கொடுக்கிறேன்..’
’எல்லாரும் எப்படி இருக்கீங்க..’
‘எங்களுக்கு என்ன நல்லா சந்தோசமா இருக்கோம்.. ’