Showing posts with label ஆன்மீகப்பயணம். Show all posts
Showing posts with label ஆன்மீகப்பயணம். Show all posts

March 20, 2009

அல்மோரா -4 சூரியக்கோயில்

மதிய உணவுக்கு பின் கட்டார்மல் செல்ல அடிவாரத்தில் விட்டு விட்டு ... இந்த காட்டில் தனியாக அமர்ந்திருக்க கஷ்டம் . நீங்கள் இறங்கும் போது தொலைபேசுங்கள் என்று தன் நம்பரை எங்களுக்கு கொடுத்தார். என் மொபைலில் அதனை குறித்துக்கொண்டு ஏறத்தொடங்கினோம். அது கடல் மணலைப் போன்ற மணலும்.. சில பாறைகளுமான பாதை. மேலே செல்ல இருப்பது கோனார்க்கைப்போல சூரியனுக்கென்ற சிறப்புக்கோயில்.ஆங்காங்கே ஓய்வெடுத்தபடி நாங்கள் ஏறினோம் ஏறினோம் ஏறிக்கொண்டே இருந்தோம். சிலர் ஆடு மேய்த்துக்கொண்டும் சுள்ளி பொறுக்கியபடியும் ஏறிக்கொண்டிருந்தார்கள். சரியான பாதை தானா என்று கேட்டுக்கொண்டே ஏறினோம். அவர்களோ குறுக்கு வழிகளில் வேகமாக கண்மறைந்தார்கள்.

எங்கள் பொறுமையின் எல்லையை எட்டியபோது அங்கே ஒரு பள்ளியும் சில வீடுகளும் தென்பட்டன. வீட்டின் பால்கனியில் படுத்தபடி வெயில் காய்ந்துகொண்டிருந்த பெரியவர் அதோ தெரிகிறதே அது தான் கோயில் என்றதும் என் கண்களுக்கு .. குழப்பத்தில்.. உச்சியைக் காட்டுகிறாரோ என்று திகிலாகிவிட்டது. பெரியவரின் குடும்பத்தில் இருந்த ஒரு பெண்மணி .. அங்கே போய் என்ன இருக்கு பார்க்க ...பரவாயில்ல முடியலன்னா இறங்குங்களேன் என்று சொல்ல .. சரி குழந்தைகளுக்கும் போகலாம் என்றே தோன்றிவிட்டது.

அப்போது பள்ளிவிடவும் குழந்தைகள் கேமிராவுக்கு தாங்களாகவே போஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் டீச்சர் வெளியே வந்து .. "என்ன கேமிரா? கம்ப்யூட்டரில் போடற கேமிராவா?.. ஏன் திரும்ப போகிறீர்கள்?.. இத்தனை தூரம் வந்துட்டீங்க இன்னும் 20 நிமிசம் தான் ...போகஸ் செய்து பாருங்கள் .. தூரமில்லை. பின்னால் நினைத்துப்பார்த்து மகிழத்தான் செய்வீர்கள். நான் கூட ஒரு முறை புகைப்படமெடுத்து மற்றவர்களுக்கு காட்டினேன். இத்தனை தூரம் வந்த பாதையைக் காட்டிலும் இந்த சிமெண்ட் பாதை ஒன்றும் பெரியதில்லை" என்று ஊக்கமளித்தார்.
ஞாபகத்துக்கு அவருடன் நான் புகைப்படமெடுத்துக்கொண்டேன்.

பள்ளிக்குழந்தைகள் வழிகாட்ட மேலேறினோம். சின்னக்குழந்தைகள்.. இரண்டாவதும் மூன்றாவதும் படிப்பவர்கள் கால்களில் செருப்புமில்லாமல் சர சரவென்று ஏறினார்கள்.. மூக்கு ஒழிகிக்கொண்டு... பேரைக்கேட்டால் வெட்கப்பட்டுக்கொண்டு.. அந்த ஊர்க்காரர்களுக்கு அது ஒரு கோயிலாகப்படுவதே இல்லை போல. பூட்டியகதவுகளுக்கு வெளியே தொல்பொருள் ஆராய்ச்சிக்காரர்களின் ஆள் காவலிருக்கிறார். 45 சிறு கோயில்களுடன் நடுவில் உடைந்த கோபுரத்துடன் சூரியன் கோயில். டோராவின் பாடலான .. வீ டிட் இட் வீ டிட் இட்.. பாடலைப்பாடி ஆடிக்கொண்டோம்.

பாதுகாவலர் அழைத்ததின் பேரில் சாவியுடன் வந்த இன்னொருவர் திறந்து காட்டினார். உள்ளே அழகான சூரிய தேவன் ஏழுகுதிரைகளுடன்.. மற்ற சுற்று வெளி கோயில்களின் தெய்வங்கள் கால் உடைந்து கை உடைந்த நிலையில் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தனர்.
அதை முற்றுப்பெறாத கோயில் என்றும் இரவில் கட்டப்பட்ட கோயில் என்று நம்பிக்கை நிலவுகிறது.

இறங்குகையில் வேகம் தான். அறைக்கு திரும்பினோம். வண்டிக்கு பணம் கொடுக்க சென்ற கணவர் அடுத்த நாள் செல்ல இருந்த நந்தா தேவி கோயிலைப் பார்த்து வைத்துக்கொண்டு வந்தார்கள். அது ஊருக்குள் கடைத்தெருவுக்குள் இருக்கிறது.காலையில் முதலில் மாலைப்பேருந்துக்கு டிக்கெட் புக் செய்து விட்டு கடைத்தெரு சென்று நந்தா தேவியை வணங்கிவிட்டு .. நான்கு மணி பேருந்தில் கீழே இறங்கினோம். வரும் வழியெல்லாம் அழகுக் காட்சிகள். நடுவில் நின்ற ஒரு ஊரின் பெயர் ... சுடுதண்ணி..(கரம்பானி) மலை ஏறும் போது முழு நிலா வெளிச்சத்தில் இரவுக்காட்சி , இறங்குகையில் இளவெயில் மாலைக்காட்சி..

இன்னும் அந்த ஊரிலிருந்தபடி பார்க்க பல இடங்கள் இருந்தாலும் எங்கள் திட்டம் மூன்று நாள் என்பதால் அவற்றை பார்க்க இயலவில்லை. பாதாள் புவனேஷ்வர் என்கிற இடம் நல்லதொரு குகைக்கோயிலாம்.. அதனைப்பற்றி கைலாஷி அவர்கள் எழுதிய பதிவைப்படித்துப்பாருங்கள்..


http://www.kmvn.org/ இந்த தளத்தில் நீங்கள் மேல் விவரங்கள் பெறலாம்.

March 19, 2009

அல்மோரா -3 கசார் தேவி

போன பதிவில் தவறுதலாக சூரியக்கோயில் தான் அடுத்த திட்டமென்று எழுதிவிட்டேன். கொஞ்சம் மறதி அதிகம். கோலு தேவியை அடுத்து நாங்கள் காளிமத் என்கிற இடம் சென்றோம். அங்கே கசார் குன்றின் மேல் தேவியின் கோயில் இருக்கிறது.
நுழைவு வாயிலின் அருகில் இருந்த பெரிய பாறையில் ஒரு நாக வடிவம் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. அந்த உருவம் சற்றே பாறையிலிருந்து செதுக்கப்பட்ட வடிவம் போல எம்போஸ் ஆகி இருந்தது. ஆனால் தானாக உருவானதாம். இது போன்றே வேறொரு சாலைப்பணியின் போது ஒரு இடத்தில் அனுமனின் கதை கிடைத்ததாம். அதனை முதலில் கவனிக்கவில்லையாம் . ஒருவருக்கு காயமேற்பட்டு பாதியில் வேலை நின்றபோது தான் அதனை கவனித்தார்களாம். காரோட்டி தெரிவித்த விசயம் இது.

ஏற்றமான பாதையில் சென்று கசார் குன்றின் மேல் அடைந்த போது அங்கே எங்களைத்தவிர யாருமில்லை. அமைதியான அந்த இடமும் பள்ளத்தாக்கின் விரிந்த காட்சியும்... ( வேறு பருவநிலையில் என்றால் தூரத்தில் பனிமலைகளும் தெரியும்) 1750 அடி கடல்மட்டத்திலிருந்து உயர்ந்த அந்த கோயில் 2 வது நூற்றாண்டின் கோயிலாம். விவேகானந்தர் மற்றும் பல ஆன்மீகப் பெரும்புள்ளிகள் அங்கே அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். குகை போன்ற இடத்தில் தேவி . சுற்றிலும் சிறு அறையாக சன்னிதி.
அந்த இடத்தில் வைத்து மகளிடம் சொன்னது...
" இது போன்ற அமைதியான இடத்தில் தியானம் செய்து கடவுள் தன்மைய உணர்ந்த பெரியவங்க அதை கோயிலாக்கி மத்தவங்களும் உணர செய்திருக்காங்கன்னு '" ( இது தெகாவின் பின்னூட்டத்துக்கு பிறகு நினைவுக்கு வந்தது)

அங்கிருந்து சற்றே மேடான ஓரிடத்தில் சிவன் கோயில். அங்கிருந்து பனிமலைகளை காண அமர்விடமும் உண்டு.

திரும்பி வருகையில் ஒரு குடும்பம் ஏறிக்கொண்டிருந்தார்கள்.. உஃப் அம்மா அப்பா.. ஒரு கார் வரும்படி செய்திருக்கமாட்டார்களா என்றபடி.. குரங்குகள் சிலவும் அங்கே இங்கே அலைந்த படி இருந்தன.. ஆனால் எங்களை தொந்திரவு செய்யவில்லை. நாங்களும் அவர்களை தொந்திரவு செய்யவில்லை.

போன பதிவில் அந்த பைரவரை போட்டோ எடுக்கலை என்று சொன்னதும் ஆயில் ஆதவன் இருவரும் கேட்டதுக்கப்பறம் மீள்பார்வை பார்த்ததில் அந்த ரிஸ்க் எடுத்திருக்கேன் என்றே தெரிகிறது படம் தான் சரியாக வரவில்லை.. இதோ அவர்...

March 17, 2009

அல்மோரா சுற்றுலா -1

எவரெஸ்டில் கால் பதித்த டென்சிங்கின் வரலாறு , புது இடங்களை தேடி அலைந்து சுற்றுபவர்களைப்பற்றிய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்று படித்து பார்த்து ஆச்சரியமாய் இவங்களை எது இழுத்திருக்கும் .. என்ன உணர்ந்திருப்பார்கள் .. என்று நினைத்துக்கொள்வேன்.ஆனால் உண்மையில் ரசனையான விசயம் தான்.

தோழி கேட்டாங்க .. என்னங்க விடுமுறைக்கு அல்மோரா போனீங்களாமே.. அது ஒரு கிராமமாமில்ல..
ஆமாங்க மலையில் அது நகரம் தான்..ஆனா நமக்கு கிராமம் .
அங்க போய் என்ன பாத்தீங்க?
2வது நூற்றாண்டுல கட்டின கோயில்கள். மலைஏற்றம். யாருமற்ற பாதைகளில் நடைபயணம்.

அய்யோ அது ரிஸ்க் இல்லையா?

ஹ்ம் இருக்கலாம் ரிஸ்க் இல்லாத எது இருக்கு ? வாழ்க்கையில்..

யாருகூட போனீங்க வேறெ நண்பர்கள் யாரும் வந்தாங்களா?
இல்லை நாங்க நால்வரும் தான்.
என்னப்பா போரடிக்காதா?
இல்லை அங்க தான் நாங்க நால்வரும் ஜாலியா அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் மாதிரி ஜாலியா குடும்பமா இருப்போம்..

சரி பஸ்ஸா ட்ரையினா ... எப்ப புக் செய்தீங்க சொல்லவே இல்லையே?

புக் எல்லாம் செய்யலைங்க... பேருந்து நிலையம் போனோம் பஸ் பிடிச்சு போயிட்டோம்.

அல்மோரா போகனும்ன்னு எப்படி தேர்ந்தெடுத்தீங்க? நெட்லயா பிடிச்சீங்க..
ஹ்ம் முன்னாடி நானித்தால் போனோமில்ல அப்ப அங்கருந்து ராணிகேத் அல்மோரா போகலாம்ன்னு சொல்வாங்க.. தொடர்ச்சியா போக அப்ப விடுமுறை இருக்காததால் இப்ப அல்மோரா இன்னொரு முறை ராணிகேத் போவோம்.
-----------------------
அல்மோரா போவதற்கு டில்லி ஆனந்த்விகார் இண்டர்ஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இரவில் 8 மணிக்கு ஒன்றும் 9 மணிக்கு ஒன்றும் பேருந்துகிளம்புகிறது. நாங்கள் எட்டு மணிபேருந்திற்கு சென்றோம். வெகுசீக்கிரமே கிளம்பிவிட்டோம் என்றாலும் எக்கச்சக்க ட்ராபிக் ஜாம். மூன்று பேர் சீட்களை எல்லாம் ஒத்தையாட்கள் ஜன்னலைப்பிடித்து உட்கார்ந்து கொண்டார்கள்.எதுக்கா? ராத்திரி நீட்டிப்படுக்கத்தான்.

இரவு 2 மணிக்கு மேல் தான் மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. ஐந்து மணிக்கெல்லாம் அல்மோரா வந்து சேர்ந்துவிட்டோம். தில்லியில் வெயில் அடித்துக் கொளுத்தியது. மலை நெருங்க நெருங்க குளிராடைகள் ஒன்று ஒன்றாய் அணிந்தோம். தொப்பி , மப்ளர் , க்ளவுஸ்.
நடுக்கும் குளிர் இல்லைதான். அல்மோராவில் பேருந்து நிலையம் என்பது ஒரு பேருந்து நிறுத்தம் தான். அங்கிருந்து அந்த காலை நேரத்தில் குமாவுன் ஹாலிடே ஹோமுக்கு நடந்தோம.

முன்பே பேசி வைத்திருந்தபடி அறைஎடுத்தோம்.ஹாலிடே ஹோமிலேயே சமையற்காரர் செய்து தந்த ஆலுபராத்தா சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடை.மால் ரோட்டில் ( கடைத்தெருங்க)பேருந்து நிலைய எதிரில் இருக்கும் கோவிந்த் வல்லப் பந்த் ம்யூசியம் சென்றோம். அங்கே அல்மோராவின் மிகப்பழமையான கோயில்களின் புகைப்படங்களும் செய்திகளும் சிற்பங்களும், ஓவியங்களும் என இரண்டு சிறிய அறைகளும் .. ஒரு சிறிய அறையில் கோவிந்த் வல்லப் பந்த் ன் வரலாறும் இருந்தன.

அல்மோரா பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ் ஒன்றில் ஜாகேஸ்வர் கோயிலிற்கு செல்வதற்காக ஏறிக்கொண்டோம். இந்த மலைக்காரர்களுக்கு இசைமேல் எக்கச்சக்க பிரியம் .அவர்கள் மொழியாகட்டும் ஹிந்தியாகட்டும் பாட்டு கேட்காமல் இருக்கவே மாட்டார்கள்.குமாவுன் மொழிப்பாடல்களோட இசை ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் அன்றைக்கு போட்ட எல்லா ஹிந்திப் பாட்டும் செம டப்பா பாடல்கள். நீ என் முதல் மழை.. நீ என் முதல் வாய்ப்புன்னோ இல்லாட்டி நீ யாருன்னா என் இதயம் யாருக்காக இறக்கின்றதோ அவள் /அவன் . என்று போய்க்கொண்டிருந்தது.


ஜாகேஸ்வர் கோயிலை ஜோதிர்லிங்கக்கோயில் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அங்கே சிறுதும் பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. முக்கியமான சன்னிதியில் ம்ருத்யுஞ்சர் , கேதாரேஸ்வர் ,ஜாகேஸ்வர் என்று லிங்கங்கள் உள்ளன.
வழக்கம்போல காசைக்குடுத்தால் நீயே அபிஷேகம் பூஜை செய்யலாம் , அணையா விளக்குக்கு நெய் கொடு என்று பலதும் சொன்னார்கள்.. எங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் அவர்களே ஆரத்தி காட்டிக்கொண்டிருந்தார்கள்.
மதிய உணவாக ரொட்டி சாப்பிட்டுவிட்டு அல்மோரா செல்ல என்ன வழி என்று விசாரித்த போது .. தற்போது வண்டி எதுவும் கிடைக்காது வேண்டுமென்றால் 3 மைல் நடந்தால் கூட்டு ரோட்டில் ஜீப் கிடைக்கும் என்றார்கள்..

அழகான மலைப்பாதையில் , சரிவில் ஓடிய ஆற்றின் சலசலப்பின் ஓசையை ரசித்தபடி நடையைப் போட்டோம்.