November 26, 2008

அலகாபாத் திரிவேணி-காசித்தொடர்(6)

அலகாபாத்துக்கு காசியிலிருந்து ஏறிய ரயில் வழக்கமான ரயில்களைப்போலவே தாமதமாக எங்களைக்கொண்டு சேர்த்தது. ஒரு ஆட்டோ (100ரூ) பிடித்து நாட்டுக்கோட்டை சத்திரம் என்று சொன்னொம். நல்லத்தெரியும்ன்னு சொல்லறார் ஆனா நாகர்சத்திரம்ன்னு சொல்றார். சரி காசியில் நாட் கோட் இங்க நாகரோ என்று தப்பா நினைத்துவிட்டோம். அவர் தெலுகு சத்திரத்தில் கொண்டுவிட்டுவிட்டார். பிறகு அந்த தெலுங்கரே ஒரு ஆட்டோ வைத்து மீண்டும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் கொண்டு விட்டார்.

காசி அளவு இல்லை என்றாலும் பெரிய ஹால் இருக்கிறது. அறைகள் மிக சிறியது தான்.அதிக கூட்டமில்லாததால் எங்கள் உடமைகளை அங்கே வைத்துவிட்டு , அங்கிருந்த மேனேஜர் ஏற்பாடு செய்தபடி எல்லாம் சுத்திப்பார்க்க ஆரம்பித்தோம். மேனேஜர் அங்கே வந்து 3 வருடம் ஆகிறதாம்.. ஹிந்தி புரியுமாம் ஆனா பேசவராது. அந்த ஊர் ஆளுங்களுமே இவர்களுடன் பல வருட பிசினஸ் என்பதால் தமிழ் புரிந்து கொண்டார்களாம். இவர் பாட்டுக்கு போனில் எங்கடா இருக்கே? போட் வேணும்ங்கறார். அங்கே இருந்து சரியான் பதில் ஹிந்தியில் வருகிறது. சரிதான் நானும் என் பையனும் பேசுவது போலயே இருக்கே என்று நினைத்துக்கொண்டேன். என்னதான் நான் தமிழில் கேட்டாலும் அவன் போனமாதம் வரை ஹிந்தியிலேயே தான் பதில் சொல்வான்.மாற்றி மாற்றி தமிழும் ஹிந்தியும் சளைக்காமல் பேசிக்கொள்வோம்.

ஆட்டோக்காரர் வந்தவுடன் நேராக திரிவேணி சங்கமத்தில் இறக்கிவிட்டார். அங்கே கார்த்திகேய் என்னும் படகுப்பையன் (சின்னப்பையன் தானே அப்பறம் என்ன படகுக்காரர்) பொறுப்பேற்றுக்கொண்டார்.
"யஹாங் கங்கா யமுனா சரஸ்வதி நதி தீன் நதி ஹை. யமுனா நதி .. பச்சே கலர் (அட பச்சை கூட தெரிஞ்சு வச்சிருக்கார்ப்பா..) கங்கா நதி வெள்ளே கலர். "
அட ஆமாம் ரெண்டும் சேரும் இடத்தில் அழகா நிறத்தின் பிரிவு தெரியுதே.சரஸ்வதி கண்ணுக்குத்தெரியாதது. புழுபூச்சி வராத தண்ணி திரிவேணியிலும் இருக்காம் கங்கை வருதே..

சின்னச் சின்ன மேடை போட்டு ஆற்றின் நடுவில் மரமேடைகள். அங்கே இறங்கி முங்கிக்குளிக்கலாம். வழக்கம்போல பெரியவர்கள் இறங்கிக்குளித்தார்கள். ஸீகல் பறவைகள் எக்கச்சக்கமா இருந்தன. அதற்கு உணவு தருவதற்கு ஆசைப்பட்டால் அதற்கும் ஒரு படகுப்பையன் உணவு விற்கிறான் .

டிப்ஸ் ஆக கொஞ்சம் பணம் கொடுத்த பின்னும் இவங்க யாரு உங்க மாமனார் மாமியாரா இவங்க தலைய சுத்தி ஆசிர்வாதம் செய்து உங்க இஷ்டம் தேதோன்னு கொஞ்சம் வாங்கிக்கிட்டான்.

திரிவேணிக்கு அருகிலேயே ஹனுமான் கோயில் .. நாங்கள் சென்ற நேரம் ஆரத்தி நடந்துகொண்டிருந்தது. ஹனுமான் ஓவியம் தரையில் வரைவது போல தரையில் ஹனுமான் சிலை இருந்தது.சுற்றிலும் கம்பியிட்ட இடத்திலிருந்து குனிந்து வணங்கி வழிபட்டோம்.

அதற்குள் இருட்டி விட்டது. ஹனுமான் கோயிலுக்கு பின்புறம் சிறிது தூரத்தில் காஞ்சி மடத்தின் அடுக்குமாடி கோயில் .ஒவ்வொரு மாடியிலும் வேவ்வேறு ஓவியக்கதைகள. ஒவ்வொரு மாடியிலும் ஒரு சன்னிதி ,சிவன், திருமால் இன்னும் என்ன என்ன சாமி் என்று மறந்து விட்டேன்..:(

நாக வாசுகி கோயில் இரவில் அந்த கோயில் மிக அழகாக இருந்தது. புராணங்களில் கூட இந்த கோயில் வருகிறதாமே.. கஜகரணம் அடித்தாயே என்ன ஆயிற்று என்று சொல்வோமே அந்த கோயில் இங்கே இருக்கிறது.கஜகர்ணன் ஒரு முறை இந்தமூன்று நதிகளையும் குடித்துவிட்டானாம். அவன் பாடு பொறுக்காமல் அவனை வேணி மாதவ் அழித்த இடம் என்று எழுதி இருந்தது. வேணிமாதவ் கோயில்.

சித்தபீட் கோயில் ஆலுப்பி தேவி..கோயிலுக்குள்ள போனோமா .. ஒன்னுமே புரியலை. சாமியே இல்லை.. மூணு பக்கம் கதவு இருக்கு அந்த பக்கமா நுழைஞ்சா இருக்குமோ என்று நுழைஞ்சுநுழைஞ்சு வரோம் .. அட ஒன்னுமே இல்லைங்க .. ஒரு சதுரமேடை நடுவில் சின்ன பள்ளம் அதில் கொஞ்சம் தண்ணீர். அதற்குமேலே ஒரு மரத்தொட்டில் .எப்படிகும்பிடுவதுன்னு தெரியாமல் முழிச்சிட்டிருந்தோம். வேறு சிலர் தொட்டிலை இழுத்து அதில் தலை யை வைத்துக்கும்பிடவும் அது தான் முறை என்று தெரிந்து கொண்டோம். விக்கிபீடியா சொல்லும் கதை என்னவென்றால்...

ஒரு காட்டு வழியில் கல்யாண ஊர்வலம் போய்க்கொண்டு இருந்ததாம் திருடர்கள் வந்து கொள்ளையடித்து ஆட்களை கொன்று போட்டுவிட்டு மணமகளை வைத்திருந்த பல்லாக்கு (டோலி)திரையை நீக்கிப் பார்த்தால் அவள் மறைந்துவிட்டாளாம். அந்த கன்னிதேவி தான் .அதனால் தான் இந்த ஜூலா வழிபாடாம.

ஜவஹர்லால் நேரு பிறந்த வீடு ஆனந்தபவன் 5 மணியோடு மூடிவிடுவதால் எங்களால் பார்க்கமுடியவில்லை. இன்னும் எவ்வளவோ இடங்கள் இருந்தாலும் தில்லி ரயிலுக்கு நேரமாகியதால் மீண்டும் சத்திரத்துக்கு சென்று இட்லியை உள்ளே தள்ளிவிட்டு ரயிலேறினோம். காசி தொடர் முடிவுற்றது.

பரிசாக முட்டையும் ரசகுல்லாவும்- ஈன்ற பொழுதினும்...

சின்ன வயசில் பிறந்தநாள்ன்னா புது ட்ரஸ் , கோயில்ல ஒரு அர்ச்சனை, கொஞ்சம் சாக்லேட்...அதையும் சின்ன சின்ன கிண்ணத்துல போட்டு பக்கத்துல ப்ரண்ட்ஸுக்குன்னு பகிர்ந்துக்கிறதும்,அப்பா இண்டோ சிலோன் பேக்கரி இல்லன்னா ஜாய் பேக்கரில இருந்து சின்னச்சின்ன செவ்வக கேக்களும்.அந்த கேக்கை அப்பா வும் அம்மாவும் சர்ப்ரைஸாத்தான் கிச்சன்ல பாட்டில்களுக்கு மேல மறைவா வச்சிருப்பாங்க..

இந்த வருசம் என் பிறந்த நாளையும் அவங்கப்பா பிறந்தநாளையும் என் மகள் கொண்டாடினாள். அப்பா பிறந்தநாளுக்கு என்ன வாங்கலாம்ன்னு ஒரு வாரமா தொளைச்சு எடுத்துட்டா.. எல்லாருமா சேர்ந்து மார்க்கெட் போனாலும் யாருக்கும் தெரியாம அவ சேமிப்பில் இருந்து கொண்டுவந்த பணத்துல ஒரு டீசர்ட் வாங்கிக்குடுத்தேன். சாயாங்காலம் பாட்டுகிளாஸ் முடிஞ்சு வரும்போது இந்த கடையில் கேக் வாங்கித்தா..இந்த கடையில் கேண்டில் வாங்கனும் எத்தனை வயசுன்னு எல்லாம் கேட்டு அவளே பணமும் குடுத்தாள்.

சர்ப்பரைஸ் பார்ட்டி கொண்டாடியாச்சு. எல்லாரிடமும் மகள் டீசர்ட் வாங்கினான்னு சொன்னப்ப நானும் நானும்ன்னு குதிச்சான் மகன்.. அடே குட்டிப்பையா நீயும் தானே கடைக்கு வந்தே வாங்கும் போதுன்னு அவனையும் சேத்து சொல்ல ஆரம்பிச்சேன்.

அடுத்து என் பிறந்தநாள் போது பாட்டு க்ளாஸ் கிளம்பரோம் நானும் மகளும்.. வந்தவுடன் அதே மாதிரி செட்டப் நடக்கிறது , கிச்சனுக்கு ஒரு ஆள் ...மோடாவை இழுத்து நடுவில் ஒரு ஆள்.. ஆகா சர்ப்ப்ரைஸ் பார்ட்டி :)அப்பாகிட்ட சொல்லி இந்தமுறை ஏற்பாடுகள் நடந்திருக்கு..

கேக் வெட்டும்போது ஸ்பெஷல் அம்மா ன்னு குட்டிப்பையன் ஒரு குரல் விடறான்.அப்பா வருத்தப்படக்கூடாதேன்னு ஸ்பெஷல் அப்பான்னு ஒரு குரல்..

கேக் வெட்டியபின்னர் இன்னும் இருக்கு அம்மான்னு சொல்லிக்கிட்டே மகள் ஒரு சின்ன பாலிதீன் கவரில் இருந்த பெரிய பெரிய ரஸகுல்லா இரண்டு ..அம்மா உனக்குப் பிடிக்குமே..
இரு இரு இன்னும் ஒன்னு இருக்கு.. நட்ஸ் போட்ட கேட்பரிஸ் ட்ரை செய்தேன் ..ஆனா கிடைக்கல ஸாரி.. ன்னு சொல்லிக்கிட்டே ஒரு கேட்பரீஸ்.. நான் எப்பவோ இதெல்லாம் பிடிக்கும்ன்னு சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சு.. ஹ்ம்..


இத்தனைக்கு நடுவில் குட்டிப்பையன் ப்ரிட்ஜ்க்குள் தலைவிட்டுட்டு இருக்கான். டேய் என்னடா அங்க செய்யற சேட்டை பையா.. வெளியே வாடா! ..

"அம்மா வெயிட் ஆப்கோ ப்ரைஸ் தேனாஹேன்னா"..( அம்மா உனக்கு பரிசு தரனும்ல)
அப்பன்னு பார்த்து ஃப்ரிட்ஜ் காலியா இருக்கு மேலே ஒரே ஒரு முட்டை.
"அம்மா இந்தா இந்த egg தா ன் உன் ப்ரைஸ் ஒக்கே"..
அக்கா குடுத்த கிப்டெல்லாம் ரொம்ப ஃபீலா பாத்துட்டு இருந்திருப்பான் போல..

ஓ ஒ தேங்க்காட் கண்ணுல தண்ணி வருதே..

"அட 'லூசு அம்மா' அழறா பாரு"
இந்த கதையை போஸ்டா போடலையான்னு ராப் பின்னூட்டமே போட்டுக் கேட்டப்புறம் போடாம இருக்கலாமா போட்டாச்சு..

November 24, 2008

பிடிச்சிருக்கு.. வாரணம் ஆயிரம்

படம் பார்க்கும் முன் விமர்சனம் படிக்கவேண்டாம் என்று நானே தடை விதித்துக்கொண்டேன் நல்லதாகப்போயிற்று. ஆனால் உள்ளே போய் உட்கார்ந்ததும் முதல் காட்சியில் சூர்யா வயசான கேரக்டரில் மூச்சை சிரமப்பட்டு விட்டுக்கொண்டு நடந்த காட்சி கமலை நினைவுப்படுத்தியது போலிருந்ததால் கொஞ்சம் கடுப்பாகிவிட்டது.ஆனால் பிற காட்சிகளில் சூர்யா தனித்து தெரிய ஆரம்பித்ததும் நல்லாவே இருந்தது. சிம்ரன் வயதாகிவிட்டது என்று நம்ப முடியவில்லை. சூர்யாவுக்கு போலவே போட்ட வயசான மேக்கப் தானா இருக்கனும்..

பழய காலத்துல போகும் போது மேக்கப் ட்ரஸ் எல்லாம் ஹிந்தி படம் மாதிரி இருந்தது ஏன்னு தெரியல. அப்பாவை ஹீரோவா எடுத்துகிற பையன் தீம் நல்லாவே இருந்தது.. இதுமாதிரி அம்மாவை மாடலா எடுத்துக்கிற படம் எதும் வந்திருக்கா? படம் பார்க்க வந்திருந்த சின்ன பசங்க எல்லாம் சீரியஸாவே இல்லாம கமெண்ட் அடிச்சிட்டிருந்தாங்க. ஆனா வீட்டில் போய் தான் யோசிப்பாங்க அங்கேயே சீரியஸானா.. கூட வந்த பசங்க கமெண்ட் பண்ணுவாங்கன்னு இருக்கலாமோன்னு நண்பர் சொல்றாங்க .

ஆனா படத்துல கூட சூர்யா மிடில் ஏஜ்ல தான் பழசெல்லாம் நினைச்சுப்பார்க்கிறார். பாட்டெல்லாம் தாமரை அருமையா எழுதி இருக்காங்க.எல்லா பாட்டையும் தாமரைக்கு கொடுத்ததுக்கு கவுதமுக்கு நன்றி சொல்லனும். நெஞ்சுக்குள் மாமழை, அனல் மேலே ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஒரு காட்சியில் காதலுக்கு சம்மதம் கிடைத்ததும் .. அந்த கணம் ஒரு இளையராஜா பாட்டு மாதிரி இருந்ததுன்னு சொல்லிட்டு ...கிடார் சவுண்ட் அதிரடியா வந்ததும் கோபமாகிடுச்சு.பாட்டு நல்ல பாட்டு தான்... இளையராஜா பேரை சொல்லிட்டு அடுத்த நிமிசம் அந்த இசை என்னவோ போல இருந்தது.அவுர் ஆகிஸ்தா கீஜியே பாத்தேங் " பாட்டு பாத்திருக்கீங்களா..? சமீரா என்ன அழகு? இந்தபாட்டு வந்த புதிதில் மந்திரம் மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும் வீட்டில்.. ஆனா அதுக்கப்பறம் சமீரா நடிச்ச படமெல்லாம் ..எப்படி இருந்த சமீரா இப்படி ஆகிட்டான்னு தோணும்.. ஏன் தமிழில் ஒரு அழகான பாத்திரம் தரலைன்னு வருத்தமா இருக்கும்.. இப்பத்தான் அந்த அழகான வாய்ப்பு வந்திருக்கு.. கவுதம்க்கு நன்றி.

கொஞ்சம் நீளம் அதை விட்டுருக்கலாம் இதைவிட்டுருக்கலாம்ன்னா.. ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். படத்துல தமிழ் கொஞ்சமே கொஞ்சம் தான் பேசறாங்க.. பேசாம தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாம். விசா குடுக்கும் போது மட்டும் கீழ சப் டைட்டில் போட்டங்களே அது மாதிரி.. :)

பள்ளிக்கூடப்பையனா நீலக்கலர் யூனிபார்ம் போட்ட சூர்யா நம்பவே முடியலை.. ஆச்சரியம்..ரயில் காட்சிகள் அசத்தல். அப்பா உங்களை மறக்கமாட்டேன்னு அடிக்கடி சொல்றதை வேணா விட்டுருக்கலாம்.. யாரு தான் அப்பாவை மறப்பாங்க.. இன்னும் எவ்வளவோ எழுதலாம் படத்தைப்பற்றி..

ரோல் மாடல் பற்றி ராப் கேட்ட பின்னூட்டத்திற்கு பிறகு சேர்த்தவை: சூர்யாவோட சின்ன வயசில் தான் சிகரெட் பிடித்தாலும் காதலிச்சிருந்தாலும் தன்மகன் சிகரெட் பிடிக்கக்கூடாது மற்றும் பெண்களுடன் சாலையில் நின்று பேசக்கூடாது என்று சொல்லும் அப்பா.வளர்ந்ததும் தன் நிழல் வேண்டாம் இனி சுயமாய் முடிவெடுக்கலாம் நீயும் நானும் வளர்ந்த ஆளுன்னு சொல்லிவிட்டு போவதும், அதற்குபிறகு எல்லாவிசயத்தையும் பகிர்ந்துக்கற ஒரு நண்பனா இருப்பதும் தான் அப்பாவின் மேல் சூர்யாவுக்கு மதிப்பு ஏற்படக்காரணம்.

குர்காவுன் வரை போய் இந்த படத்தைப் பார்த்ததுக்கு நிச்சயம் மதிப்பிருக்கு..

November 22, 2008

சாரநாத் புத்தர் , பாரத்மாதா கோயில் - காசிதொடர்-5


காசியில் உள்ளூர் கோயில்களுக்கு பின்னர் சற்றே தூரமாக பிரயாணித்து சாரநாத். கபகப பசிக்கு "ஹாலிடே இன் இருக்கு சாப்பிடுங்க" என்றார் ஆட்டோக்காரர்..அதிகமா இருக்குமே என்று எட்டிப்பார்த்தால் , டூப்ளிகேட் தான். ரொட்டி சப்ஜி சாப்பிட்டுவிட்டு மூல்காந்த் குடிர் விஹார் புத்தர் கோயில். அழகான தங்க நிற புத்தர்.சிறிதே தியானத்தில் அமர்ந்தோம்.

இந்த கோயிலில் ஒரு வித்தியாசமான அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் . ஆனால் அதற்கான பணம் 20 ரூபாயை உண்டியலில் நன்கொடையாக நீங்களே சேர்ப்பியுங்கள் என்பது தான் அந்த அறிவுப்பு. கேட்கவே நல்லா இருக்கு இல்லையா.நான் போட்டுட்டேன்ப்பா 20 ரூபாய்.

வெளியே வந்தால் கோயிலுக்கு இடதுபுறத்தில்
புத்தர் தன் சீடர்களுக்கு அறிவுரை செய்கிறார்போன்ற மிகப்பெரிய சிலைகள்...சிங்கள எழுத்துக்களால் ஆன பெரிய பெரிய கல்வெட்டுக்கள் இருந்தன. சிறு சிறு துணிகளில் வேண்டுதல்கள் போல எழுதி சிலைகளை சுற்றிய கம்பி வேலியில் கட்டி இருந்தார்கள்.

சாரநாத் ஸ்தூபி .மற்றும் அதனருகிலான புத்தர்கோயில் பழமையின் மிச்சங்கள். சென்னையில் இருக்கும் ஏதோ ஒரு சொசைட்டி என்று பெயரிட்ட அடையாள அட்டையுடன் சிங்கள மக்கள் கூட்டம் வரிசை வரிசையாக வந்து இறங்கினர். தலை மொட்டை அடித்த ஒரு பெண்மணி ஒலிபெருக்கி சகிதம் பாடல் பாட மக்கள் அனைவரும் சென்று சிதிலமான இடங்களில் முட்டியிட்டு வணங்கி பாடலை பின் தொடர்ந்தனர்.

செங்கல் பாவிய இடங்களிலேல்லாம் அமரக்கூடாது. அது தான் கோயிலின் மிச்சம். வந்து இறங்கியதும் சிலர் அதில் சாமான்களை வைப்பதும் அமர்வதும் என்று இருந்தனர். பிறகு ஒரு காவி அணிந்த சிங்களவர் வந்து அனைவரையும் புல்வெளியில் அமரச்செய்தார்.

ஜப்பானியர் புத்தர் கோயில்.

மீண்டும் காசிக்குள் நுழைந்ததும் மங்கி டெம்பிள் போவோமா என்று ஆரம்பித்த ஆட்டோக்காரருக்கு நோஓஓஓஓஓ என்ற ஒற்றுமையாக பதில் கொடுத்தோம். மீண்டும் குரங்குக் கூட்டத்தில் மாட்டிக்கொள்ள பயம் தான்.

துளசி மானஸ் கோயில் . ஏறக்குறைய பிர்லா மந்திரைப்போலவே தான்.

பாரத் மாதா கோயில் செல்லவேண்டும் என்ற போது ஆட்டோக்காரர் அங்கே ஒன்னுமில்லைங்க என்று மறுத்தார் . இல்லை எங்களுக்கு பார்க்கவேண்டும் என்று வற்புறுத்திய பின் ஒரு பனாரஸ் சேலை கடை இருக்கிறது . நெய்யும் இடமும் பார்த்துவிட்டு சேலை எடுங்கள். அருகில் தான் பாரத் மாதா கோயில் அழைத்துச் செல்கிறேன் என்றார். சேலை எல்லாம் 4000, 5000 .. வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.

பாரத் மாதாகோயிலில் மிக அற்புதமாக 3D இந்தியா மேப் தரையில் இருந்தது.

மலைகள் எல்லாம் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு பயணிகள் கூட்டத்திற்கு ஒருவர் அழகாக விளக்கமளித்துக்கொண்டிருந்தார். கையில் இருந்த சிவப்புநிற ஒளி உமிழும் உபகரணத்தால் எந்த எந்த இடம் என்று குறிப்பிட்டுக்கொண்டிருந்தார்.

ம்யூசியம் ஒன்றும் சாரநாத்தில் இருக்கிறது . ஆனால் அதற்கு மேல் பொறுமையில்லாத குழந்தைகளுக்காக அறைக்குத்திரும்பினோம்.

November 17, 2008

இரண்டு வருடம் ஓடிப்போச்சு....

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்து இத்தோடு 2 வருடங்கள் ஆகிறது. தமிழ்மணத்திற்கு நன்றி.

பதிவின் பிறந்தநாளை எப்படி கொண்டடலாம்ன்னு யோசிச்சேன். புதுகைத்தென்றல் தன்னுடைய பதிவில் பிடித்தது எது என்று எல்லாரிடமும் கேட்டார்கள். சென்ஷி தந்த ஐடியா ,ஸ்ரீதரன் என்பவர் தன்னுடைய பதிவில் சிலவற்றையே எடுத்து அலசி ஆராய்ந்த மாதிரி நீங்களு ம்... (ஏன் ஏன்.. எல்லாரும் ஓடிப்போகறதுக்கா..) சரி என்ன செய்யலாம் ... எப்போதும் போல ஒத்திப்போட்டாச்சு.
வழக்கமான பாணியில்.. காலையில் கை போன போக்கிலே தட்டியாச்சு. சரி பழய பதிவுகளை நாமே படிச்சுப்பார்ப்போம்ன்னு பின்னோக்கிப்போனால்...........

வர்சானா , கோவர்த்தன ஆன்மீகச்சுற்றுலா,மணாலிச்சுற்றுலா பதிவுகளுக்கு கூட்டமே இல்லை காத்துவாங்குது ... அப்ப நான் வேற புது பதிவரா, அதனால இருக்குமோ.. ஆரம்பத்துல எழுதின கவிதைகளுக்கும் வரவேற்பு கம்மி தான் இருந்தும் தொடர்ந்து எல்லாரையும் கவிதை எழுதி சோதனைக்குள்ளாக்கி இருக்கிறேன்.

சிறுகதைகள் வகை கொஞ்சமாத்தான் எழுதி இருக்கேன். கதையை ஆரம்பிக்க விவரிக்கத் தெரிந்த அளவுக்கு முடிக்கத்தெரியவில்லை. முதலில் கதையோட ஒன்லைன் சரியாகக்கிடைத்தால் தானே கதை எழுதலாம். சரி அடுத்து... பாருங்க சமையல் வகையில் ஒன்னுமே இல்லை.. ஏன்னா அது கைக்கு வந்ததைப்போட்டு சமைப்பது .. நோ ஸ்பெசிஃபிக் ரெசிபி..

செய்திவிமர்சனங்கற பேரில் 4 போஸ்ட் போட்டிருக்கேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. காரணம் ஒரு விசயத்தைப் பார்த்த உடனோ கேட்ட உடனேயோ எதாவது தோன்றுகிறது. கொஞ்சம் விட்டு அதன் பிண்ணனி வெளியே வந்ததும் பார்த்தால் அது வேற மாதிரி இருக்கிறது. இது ஒன்றும் புதிதில்லை. எப்போதும் பட்டிமன்றம் போலவே.. இந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது கேட்டால் அட இது சரியா இருக்கே.. அந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது இது கூட சரிதானேப்பா..

நேற்று டிடி பொதிகையில் "அந்த நாள்" திரைப்படத்தின் சில பகுதிகள். ( இது ரொம்ப வசதி கொஞ்சம் கொஞ்சமா பிரித்துப்போடுவதால் முழுபடம் பார்க்க போரடிக்காது) முதலில் சிவாஜி வந்து மாணவர்களுக்கு படிப்புத்தான் முக்கியம் என்று பேசியபோது ஆகா ன்னு எதிரில் இருந்தவர்களைப்போலவே கைதட்ட ஆசையா இருந்தது. பின்னாலே எழுந்த பண்டரிபாயின் வீரா வேசப் பேச்சைக்கேட்டதும் .. நமக்கும் போராட்ட உணர்ச்சி வந்துவிட்டதே.. பேசாம நடுநிலை யா இருக்கலாமே என்று எப்பவும் நடுநிலை .. அதாவது பேசாமல் பார்க்கிற கூட்டத்தில் சேர்ந்தே இருந்துகொண்டு.. (அடிவிழுந்தால் முதலில் நடுநிலைக்குத்தான் விழும் அது தெரியுமா?) அந்த வீடியோவைப்பாருங்களேன்..


நினைவலைகள் .. அதான் கொசுவத்திப்பா...அது கைகொடுக்கும் கை.. எழுத ஒன்றுமில்லையென்றால் இதை எழுதலாம். சரிக்கு சமமாக தொடர்விளையாட்டுக்களில் இதே அலை வேறுவிதமாக அடித்திருக்கிறது.

கவிதைக்கு??(22) அடுத்த அளவில் குழந்தைகள்(15) வகை தான் நிறைய எழுதி இருக்கிறேன்..அம்மா ஆச்சே.. இவை திருப்தி தந்த பதிவுகள் ..ஆனால் தொடர்ந்து குழந்தைகளைப்பற்றி எழுத தனித்தனியாக அவர்கள் பெயரில் பதிவு ஆரம்பித்துவிட்டதால் இங்கே குறைந்துவிட்டது.

200 பதிவு எழுதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
"அளவில் என்ன இருக்கிறது .. க்ளிக்க்ளிக்கில் 20 பதிவு இருக்கே அதை நாங்களே கூட்டிப்பார்த்துக்கறோம் கவலை வேண்டாமென்று துளசி ஆறுதல் சொன்னார்கள்.

வழக்கப்போல விழா மேடையில் எல்லாரையும் வாழ்த்துவது போல இதுவரை படித்து , படித்து பின்னூட்டி, பாராட்டி, அறிவுறுத்தி, உடன் வருகிற நட்புணர்வை பாராட்டி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

November 14, 2008

காசி தொடர்(4) - படித்துறைகள், உள்ளூர் கோயில்கள்

கங்கா மாதா (படகிலிருந்து காட்சி)

காசியில் இரண்டாவது நாள்.. காலை 6.30 மணிக்கு படகுக்காரர் சத்திரத்திற்கே வந்து அழைத்துச் சென்றார். முதலில் முக்கியமான படித்துறைகளை பார்க்க ஏற்பாடு. தலைக்கு 40 ரூ . தாஸ்வமேத காட் லிருந்து புறப்பட்டு மணிக்கரன் காட், ராணா காட், அரிச்சந்திரா காட்( படித்துறை) . கங்கையின் மறுகரையில் கொஞ்சம் அழுக்கு கம்மியாக இருக்குமென்று அங்கே ஒரு குளியல் திட்டம்.
போன ஒர் இடத்திலும் கங்கையில் நாங்கள் குளிக்கவில்லை. பெரியவர்கள் மட்டுமே முங்கி எழுந்தார்கள்.. நாங்கள் தலையில் தெளித்துக்கொண்டதோடு சரி. மறுகரையில் நன்றாகத்தான் இருந்தது. சிறுவர்களும் சிறுமிகளும் கூட குளிரில் முதலில் நடுங்கிவிட்டு பின்னர் குளிர்விட்டதும் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தார்கள்.எதிர்கரையில் ஆடைமாற்ற என்று சிறுதடுப்புகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எனவே ஒரு ஆளுக்கு குளிக்க 1 ரூ வாங்குகிறார்கள்.


அரிச்சந்திரா மற்றும் மணிகரணில் மட்டுமே இப்போதும் பிணங்களை எரிக்கும் வழக்கம் தொடர்கிறது. கேதார்காட் டில் இருந்த கேதார நாதர் கோயில் நம் ஊர் கோயில் என்று பார்த்த உடனே தெரிந்தது. நேபாள மன்னர் கட்டிய நேபாள கோயில் எல்லாம் படகிலிருந்தே பார்த்துவிட்டோம். படித்துறைகளை படகிலிருந்து பார்க்கும் போது தான் காசி என்றாலே நாம் பார்க்கின்ற படங்களின் தோற்றம் தெரிகிறது.
ராணாகாட்
மீண்டும் தாஸ்வமேத காட். ஆங்காங்கே குடைகளின் கீழே அமர்ந்த பண்டாக்கள் சிரார்த்தம் பூஜைகள் செய்விக்கிறார்கள். எங்களுக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் அய்யர் வந்தார். அங்கேயே பிறந்து வளர்ந்திருப்பார் போலும் தமிழைக் கடித்துத் துப்பினார். அம்மா இருக்கா? அண்ணா அக்கா இருக்கா? கங்கா யமுனா சொல்லு என்று மிரட்டி மிரட்டியே மாமனாரை மந்திரங்கள் சொல்லவைத்தார். பிண்டம் இங்கே கரையில் கரைக்காதீங்கோ மெம்பர்ஸ் குளிப்பாங்கோ.. பத்துரூபாய் தான் படகில் கொஞ்சமாய் போய் போட்டுட்டு குளிங்கோ என்று அதற்காகவே காத்திருந்த தாத்தா ஒருவரிடம் அனுப்பிவிட்டார்.

பின் நேராக சத்திரம் காலை உணவு . பிறகு பேசிவைத்திருந்த படி ஆட்டோக்காரர் வந்தார். ரயிலிலிருந்து இறங்கி சத்திரம் வரும்போதே அவரிடம் நாங்கள் பேசி வைத்திருந்தோம். 500 ரூ க்கு சில உள்ளூர் கோயில்கள் மற்றும் சாரநாத் .

நியூ காசி விஸ்வநாத் கோயில்( பிர்லா மந்திர்) நாங்கள் 11 மணிக்கு புறப்பட்டதால் கோயில் அடைக்கப்படும் நேரம் ஓடி ஓடி பார்த்தோம். வழக்கமான பிர்லா கோயிலைப்போலவே அழகான கட்டமைப்பு. இது பனாரஸ் ஹிந்து யுனிவர்ஸிட்டிக்குள் இருக்கிறது . காற்றோட்டமான அந்த கோயில் அமைப்பும் அமைதியும் படிக்க நல்ல இடம் தான். ஆங்காங்கே மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.

மங்கி டெம்பிள்( சங்கட் மோச்சன் அனுமான் கோயில்) இங்கே லாக்கர் ஒன்று தந்து கேமிரா மற்றும் போன் எல்லாவற்றையும் வைத்துப்போகும் படி சொல்லிவிட்டார்கள். தண்ணீர் பாட்டில் மட்டும் அத்தையின் கையில் இருந்தது. எங்கே பார்த்தாலும் குரங்குகளாக தெரிந்த சிறுபாதை. ஏற்கனவே குரங்கு கண்ணாடியை லவட்டிக்கொண்டு போய் கண் தெரியாம கோவர்த்தனம் பார்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் கண்ணாடியை கழட்டி வைத்துக்கொண்டு நடை போட்டேன்.

பம்மியபடி நடந்த எங்களைக்கண்டதும் அருகே வந்த குரங்கு ஒன்று முதலில் எதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்பது போல சுடிதார் நுனியைப்புடித்துக்கேட்டது. அடுத்து அத்தையின் சேலையை பிடித்துக்கேட்டது பயந்து பாட்டிலைக் கீழே போட்டதும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. பயந்தபடியே கோயிலுக்கு சென்று சேர்ந்தோம். அதற்குள் திரை மூடப்பட்டு விட்டது. சாலிஸா புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. யார் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். வெளியே ஆர்ப்பாட்டம் செய்யௌம் குரங்குகள் ஒன்றுமே கோயிலுக்குள் வரவில்லை.மீண்டும் கோயில் 3 மணிக்குத்தான் திறக்கும் சரி என்று கிளம்பிவிட்டோம்.

வழக்கமாக கோயில்கடையில் எதயாவது வாங்காவிட்டால் சாமிகோச்சுக்கும் என்பது குழந்தைகள் எண்ணம். அதேபோல் கேட்ட பையனுக்கு , வாங்கினாலும் வெளியே குரங்கு பிடிங்கிக்கும்டா என்று சமாதானம் செய்திருந்தேன். உண்மையும் அது தான். ஆனால் எங்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த குடும்பத்தில் ஒரு குழந்தை கையில் பேட் பால் பாக்கெட் ஒன்று இருந்தது. அம்மா பாரேன் அவங்க மட்டும் என்று சபரி ஆரம்பிக்கவும் பாக்கெட்டிலிருந்து பால் கீழே விழவும் சரியாக இருந்தது. பச்சைக்கலர் பால். கொய்யாவைப்போல இருந்தது. குரங்கு வந்து எடுத்துக்கொண்டு போய்விட்டது. அப்பாடா அம்மா கெட்டவ இல்லை..
photo-mang (thanks)
துர்கா கோயில்

பிறகு கால பைரவ் கோயில் , சனி பகவான் கோயில் . அப்போது தான் அங்கேயும் நடை சாத்தி இருக்கிறார்கள் போல ,,மீண்டும் 2 மணிக்குத்தான் . வெளியே இருந்த புகைப்பட சாமியை கும்பிட்டுவிட்டு வலம் வந்தோம். வாங்கோ மயில் பீலி அடிவாங்கிக்கோ என்று அழைத்த சாமியாரைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தோம்.முதுகைக்காட்டினால் பாவம் போக மயில்பீலி அடி விழும்.பின் தட்சனை தான் வேறென்ன...

அடுத்து சாரநாத்...............

November 12, 2008

காசி விஸ்வநாதர் ஆரத்தி - (இருகுரல் பதிவு)

இரவு எட்டரை மணிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலேயே இருக்கும் சிவன் கோயிலின் வாசலில் காத்திருந்தோம். சில காவி வேஷ்டி சாதுக்கள் அங்கே பெரிய பெரிய பாத்திரங்களும் ட்ரங்க் பெட்டிகளுடனும் அமர்ந்திருந்தனர். எல்லாரையும் ஓரமாக நிற்க சொல்லிவிட்டு ஒரு சாது மட்டும் ஒரு சாம்பிராணி தூபங்களுடன் சிவனை தொழுது சுற்றி கிளம்பினார். வேகமென்றால் வேகம் விடுவிடுவென்று அவர் முன்னே நடக்க.. பின்னே மற்ற சாதுக்கள் தலையில் பாத்திரங்களும் பெட்டியுமாக " சம்போ மகாதேவ சம்போ மகாதேவ சம்போ" என்ற கோஷத்துடன் சந்துக்களில் புகுந்து புறப்பட்டார்கள் . போகும் வழியெங்கும் கடைக்காரர்களும் மக்களும் பணிவாக வழிவிட்டு செல்வதும் சப்பரத்தில் வரும் கடவுளை வணங்குவது போல வணங்கிச் சென்றார்கள். செருப்பில்லா கால்களோடு நாங்களும் பின்னால் ஓட்டமான நடையிட்டோம்.

துண்டி விநாயகர் அருகில் வந்ததும் அவர்களைத்தவிர மற்றவர்களை சோதனையிட்டு அனுப்பினார்கள். பதறி பின்பற்றியபோது கோயிலில் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து பெட்டிகளைத் திறந்து அவற்றிலிருந்து நன்றாக பளபளப்பாக தேய்த்து வைக்கப்பட்ட விளக்குகளை எடுத்துத் திரியிட்டு எண்ணெயிட்டு தயார் படுத்திக்கொண்டிருந்தார்கள். பாத்திரங்களில் அபிஷேக சாமான்கள். இங்கே ஏன் அமர்கிறீர்கள் என்று விரட்டிய கோயில் பணியாளரின் வார்த்தைக்கு குழம்பிய எங்களை , ஒரு சாது , நீங்க பாஸ் வச்சிருக்கவங்க தானே சும்மா உக்காருங்க என்று அமரச்செய்தார்.

கூட வந்திருந்த ஒரு பெண்மணி சாமியைத் தொட்டுவணங்கனும்ன்னா இப்போது ஒருமுறை பார்த்துக்கோங்க என்று சொன்னபோது சரி என்று உள்ளே நுழைந்தோம். மதியம் இருந்த கம்பி தடுப்பு அப்போது இல்லை.. குழந்தைகளூம் தொட்டு வணங்க வகையாக இருந்தது. இன்னோர் தமிழ் குடும்பமும் எங்களுடன் இணைந்து கொண்டனர். அந்த குடும்பம் சத்திரத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் ஆரத்திக்கு காத்திருந்த எங்களுடன் சிநேக பாவம் காட்டாததில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. பின்னால் அது சரியாக இருந்தது.

உங்களுக்கு இங்கே அந்த கோயிலின் சன்னதி அமைப்பை சொல்லிவிடுகிறேன்.சதுரமான சிறு அறை தான். அதன் நான்கு புறமும் வாசல் . உள்ளே ஒரு ஓரமாக(சதுரத்தின் ஒரு கார்னரில்) சிவன் தரையில் சிறிது பள்ளத்தில் இருக்கிறார். நான்கு வாயிலில் ஒரு வாயிலின் அருகில் எங்களை கூட்டி சென்ற கோயில் பணியாளர் சிறிது காத்திருங்கள் என்றார். அங்கே இருந்த கூட்டத்தினர் நகர்ந்ததும் எங்களை ,வாயிலின் நிலைப்படி சற்றே அகலமானது அதில் அமரச்செய்தார். நேரெதிரே அந்த சிநேக பாவம் காட்டாத குடும்பத்தினர் மற்றொரு வாயிலில் . அங்கே நிலைப்படியில் ஒருவர் தான் அமரவைக்கப்பட்டிருந்தார் மற்றவர்கள் சிறிதே பின்பக்கமாக ஆனால் மேடை அமைத்து உட்காரவைக்கப்பட்டிருந்தனர். ஏனென்றால் சாமி பள்ளத்தில் இருக்கிறாரே.

சிவனுக்கு அபிஷேகம் செய்யவிருந்த அய்யர் எங்களுக்கு முதுகு காண்பித்து அமர்ந்தார் பாதி அவரே மறைத்துவிட்டார். எதிர்கோஷ்டிக்கு நல்ல தரிசனம் . எங்களூக்கு எட்டி எட்டாமல் தெரிந்தார். மனதுக்குள் கோபம் எழுந்தது. அவர்கள் சரியாக பணம் கொடுத்து பேசி வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது. "கோயிலுக்குள் அமர்ந்து ஒருவர் மேலே இத்தனை கோபம் வரலாமா மனதின் இன்னொரு குரல். அவர்கள் அதிக புண்ணியம் செய்திருப்பார்களோ. அட சே காசு கொடுத்து சாமர்த்தியமாய் நடந்து கொண்டார்கள் என்று சொல் இன்னொரு குரல்.
எனக்கு சரியாக பார்க்க முடியலையே.. ஹ்ம்.. இது என்ன கோயில் ஜோதிர் லிங்கத்தில் ஒன்று . அடிமுடி காணமுடியாத ஒளிகடவுள் அவரை முழுசா பார்க்க முடியலையேன்னு உனக்கு வருத்தமாக்கும் .
பால் தயிர் என அபிஷேகம் நடந்தது. என் மடியில் மகள் கனத்தாள். இடுக்கி அமர்ந்ததில் கால்களில் வலி. கோயிலின் உள் அமைப்பை நோட்டம் விட்டேன். மார்பிள் தளம் மார்பில் சுவர். மார்பிள் சிலைகள். ராம் லக்ஷ்மன் சீதா , பன்னிரண்டு கரங்களுடன் விநாயகர், லக்ஷ்மி நாராயன் என பல சிலைகள். வேதம்(?) ஓதி அவர்கள் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள். கால்களை அந்த சன்னதிக்குள் விடாமல் நிலைப்படி மேடையில் அமரச் சொல்லி இருந்தார்கள். சற்றே கால்களை தளர்த்தி மாற்றி அமர முற்படும் போதெல்லாம் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ( அப்பரண்டிஸ்?) பதறி திரும்பிப் பார்த்தான். அத்தனைக்கு ஆகாதா காலையில் இதே இடத்தில் எல்லாரும் முண்டி அடித்து கும்பிட்டோமே.

அபிஷேகம் முடிந்ததும் ஒரு வெள்ளி கட்டில் வந்தது. அதன் மேலே அழகாகவிரிப்பிட்டு , தலையணையிட்டு வைத்தனர்.ஒரு வெள்ளி சிவன் தோள்வரையிலான உருவம் அதனையும் ஒரு சின்ன வெள்ளி முக்காலியில் வைத்து மாலையிட்டு வைத்தனர். இவையெல்லாம் சத்திரக்கட்டளையோடவைகளாம். சிவனுக்கு அலங்காரம் ஆரம்ப்மானது. மந்திரங்களுக்கு நடுவே வந்திருந்த மலர் மாலைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி பூக்களை நெருக்கி அமைத்து, நறுக்கி கோர்த்து, ஒருவர் வழங்கியபடியே இருக்க , தலைமை பண்டா அதனை சிவனின் மேல் வரிசையாக வட்டமாக அடுக்கியபடியே வந்தார். பின்னர் வெள்ளி நாகம் குடை போன்றவற்றை அடுக்கி .. மேலே இருந்த கொக்கியில் இருந்து நாற்புரமும் தொங்கும்படி அலங்காரமாக பூக்களை வடிவமைத்தனர். மிக அழகான் வேலை . அந்த நேரம் அதை கவனிப்பது ஒரு வித தியானம் போல இருந்தது.

இந்த இணைப்பில் இருக்கும் இடத்துக்கு சென்று நீங்களும் சிவனை நேரிலேயே தரிசிக்கலாம். (வீடியோ)

அலங்காரமான சிவன்(வீடியோ)

ஆரத்தி(வீடியோ) (மூன்று பேரே மறைத்துக்கொண்டார்கள்
நல்ல வேளை நாங்கள் சென்ற அன்று இத்தனை பேர் பூஜை செய்யவில்லை )

ஜிகினா வேலைப்பாடான சிகப்பு திரையிட்டு சிறிது நேரம் பூஜையானது. திறந்த பொழுது பலமணிகளின் ஓசையோடு ஆரத்தி பூஜை நடந்தது. சம்போ மகாதேவா என்று கோஷமிட்டனர் அனைவரும். அந்த சில நொடிகள் பக்திபூர்வமாக தோன்றியது. அடுத்த நொடி அந்த பூஜைத்தட்டை நம்மிடம் கொண்டுவந்த நபர் தட்சனை தட்சனை என்று கையை தட்டை நோக்கி காட்டியபோது சட்டென்று இறங்கிய ஜுரவேகம்போல தணிந்தது பக்தி. என் மாமனாருக்கு விபூதி யை பூசிவிட்டு மாலை ஒன்றையும் இட்ட பண்டா(அய்யர்)... சிறப்பு பூஜைக்கு வந்திருக்கும் நீர் 200 ரூபாயாவது தட்சிணையாக தரவேண்டும் என்றார். கூட்டத்தில் பணத்தை எடுக்க முடியாமல் திணறியவரை ஒருவர் மறுத்து,முன்பே நீங்களிட்ட தட்சணை போதுமானது வாருங்கள் என்று பின்னால் இழுத்துக்கொண்டார். தொடர்ந்த அவர்களின் தட்சணை மந்திரம் காதுகளில் ஒலித்தபடி இருந்தது.


கடவுள் உண்மையா? இப்படி இவர்கள் மந்திரத்தை சொல்லிவிட்டு நம்மை ஏன் பணம் பணமென படுத்தவேண்டும்.நாம் காலையில் தொட்டுவணங்கிய கடவுளுக்கு நாம் திடீரென தீண்டாதவர்களாகிப்போன மர்மம் என்ன ? என நாத்திகமும் ஆத்திகமும் மனசுக்குள் விவாதமேடை நடத்திய அந்நேரத்தில் பின்வரிசையில் பெஞ்சில் அமர்ந்திருந்த கணவரின் மேல் என் மகன் இருமுறை வாந்தி எடுத்திருக்கிறான். வெளியே வந்ததும் ஒருவேளை நம் விவாதபுத்திக்கு கிடைத்த தண்டனையாக இருக்குமோ.. அடச்சே உடனே எதாகிலும் கடவுள் மேலே பழியைத்தூக்கிபோடாதே கங்கா ஆரத்தி சமயத்தில் தின்ற குர்குரியும் ஜூஸும் ஆட்டமும் பாட்டமும் பின் அணிந்த ஸ்வெட்டரின் சூடும் கூட்டமும் தூக்கமும் என பிள்ளைக்கு ஏற்கனவே இருக்கும் சளி படுத்தி இருக்கும். அட இந்த இன்னொரு குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறதே.ஒரு குரலுக்கே பதிவு நீளும் இருகுரல் பதிவாச்சே கொஞ்சம் நீளமோ நீளம்.. :)

November 7, 2008

காசி பயணத்தொடர்(2) - கங்கா ஆரத்தி


கங்கா ஆரத்தி சாயங்காலம் 6.45 மணிக்கு ஆரம்பிப்பார்கள் . ஆனால் நாங்கள் ஐந்து மணிக்கே கங்கைக்கரைக்கு சென்றுவிட்டோம். நல்லது தான். வெளிச்சத்தில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். வெளிநாட்டினர் அமர மேலே இடம் செய்திருந்தார்கள்.

ஏழு கட்டம் கட்டமான மேடை அமைக்கப்பட்டு அதில் பூஜைக்கானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. விளக்குக்களை பளபளப்பேற்றி துடைத்து திரியிட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்.

தாஸ்வமேத் கட் என்னும் படித்துறையில் தான் இந்த ஆரத்தி நடக்கிறது. போட்காரர்கள் பாய்ந்து வந்து அழைக்கிறார்கள். வாருங்கள் தலைக்கு அறுபது ரூபாய் தான். உங்களை எல்லா படித்துறையையும் காட்டிவிட்டு பின்னர் சரியாக ஆரத்தி சமயத்தில் ஆரத்தி நடக்கும் இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்துவோம். நீங்கள் படகிலிருந்து பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்றும் கழுத்தில் தொங்கிய கேமிராவைப் பார்த்ததும் காட்சியை சரியாக வீடியோ செய்ய அங்கே தான் வசதி என்றும் அழுத்தமாய் சொன்னார்கள்.

எங்களுக்கோ கங்கை படித்துறைகளைப் பார்க்கும் திட்டம் திரு.பனப்பன் சொன்னது போல காலை தான் . அதில் மாற்றம் செய்ய விருப்பமில்லை என்று சொன்னதும் அந்த படகுக்காரர் சரி நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த மேடைகளி ல் அமர்ந்து பாருங்கள் . இன்னும் சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் வந்துவிட்டால் அமர இடம் கிடைக்காது என்று அறிவுறுத்தினார்.
நன்றி சொல்லிவிட்டுப்பார்த்தால் மேடைகளில் விரிப்புகளும் திண்டுகளும் கிடக்கிறதே இது யாருக்காகவேனும் செய்திருக்கப்போய் நாம் அமர்ந்து எழுப்பப்பட்டு விடக்கூடாதே என்று ஒரு தயக்கம். பெங்காலி குடும்பம் அமர்ந்திருந்த இடத்தில் சென்று யார் வேண்டுமானாலும் அமரலாமா என்று கேட்டுக்கொண்டோம்.

செருப்புக்களை அருகிலேயே வைத்துக்கொள்ள வசதியாக ஒருவர் பின் ஒருவரகா சதுரமேடையின் ஓரங்களிலேயே அமர்ந்து கொண்டோம். எங்களுக்கு முன்னால் ஒரு ஜெர்மனி பெண்மணி அந்த குடும்பத்தினரை மிரட்டி இடம் வாங்கிக்கொண்டார். அப்போதிலிருந்தே அந்த குடும்பத்துக்கும் அந்த பெண்மணிக்கும் ஒரே சண்டை. அவர்கள் என்ன செய்தாலும் இந்த பெண்மணி செய்யக்கூடாது என்று தடுத்தார். குழந்தையை ஏன் நடுவில் படுக்கப்போட்டிருக்கிறீர்கள் . மணியை அடிக்க கயிறை எடுக்காதீர்கள் அவர்கள் தான் அடிக்கனும். நான் இங்கே மூன்று இரவாக வருகிறேன் எனக்குத்தெரியும் என்று மிரட்டத்தொடங்கினார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே ஒருவர் வந்து ஒவ்வொரு மேடையிலும் ஒரு ஆளுக்கு கயிற்றைக் கொடுத்து அடிக்க சொல்லும்போது மணிஅடிக்கலாம் என்றார். அந்த குடும்பம் மொத்தமும் அந்த பெண்மணியை முறைத்தார்கள். சிறு அகல் விளக்கில் மெழுகு இட்டது வரிசையாக அடுக்கி அதையும் ஒருஒரு மேடையில் இருந்தும் ஒரு ஆளைத்தேர்ந்தெடுத்து மெழுகுவத்திக் கொண்டு ஏற்றச்சொன்னார்கள்.

பிறகு ஒன்றே போல் ஆடையணிந்து ஏழு இளைஞர்கள் வந்தார்கள். முதலில் ஊதுபத்தி , பின் தீப தூப ,விசிறி , வெண்சாமரம் மற்றும் பூ கொண்டு ஆரத்தியை நடத்தினார்கள். பின்னால் லைவாக ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கரையிலும் கங்கையில் படகிலும் கூட்டமாக கூட இணைந்தே பாடவும் செய்தனர். ஒன்று போலவே அவர்கள் செய்யும்போது பார்க்க அழகாக இருந்தது.

கங்கையில் விட என்று காகித தொண்ணையில் பூ மெழுகு விளக்கு விற்கின்றனர் குழந்தைகள். ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை கவனித்ததும் பெருமையாக ஒரு பார்வை பார்த்தாள். அவளுக்கு இது வழக்கமாகிவிட்டிருக்க வேண்டும். வருகின்ற அனைத்து வெளிநாட்டினரும் கங்கைக்கரையில் சவரம் செய்பவனிலிருந்து பாசி விற்கிறவர் வரை ஒருவரை விடாமல் எடுத்துத்தள்ளுகிறார்களே...

ஏழரை மணிக்கு ஆரத்தி முடிந்தது.. சத்திரத்திற்கு சென்று இரவு உணவு சாப்பிடசெல்லவேண்டும் விடுவிடுவென்று நடைபோட்டோம். இரவு உணவு இட்லி , கோதுமை உப்புமா. காலையில் பெண்களும் இரவில் ஆண்களும் பரிமாறினார்கள். வடநாட்டினர் தான் இருந்தாலும் நம் பாணியில் அம்மா அய்யா சாம்பார் என்று அழைத்து நன்றாகப் பரிமாறினார்கள். நாட்டுக்கோட்டை சத்திரத்தின் முகவரி கேட்டிருந்தார் சின்ன அம்மிணி . இதோ நீங்கள் எல்லாருமே எடுத்துக்கொள்ளுங்கள்.
Varanasi
sri kasi nattukoottai nagara satram
Godowlia
Varanasi
221001
(UP) India
0542-2451804

Alahabhad
149, Mori-Daraganj
Allahabad
211 006
UP India
0532 2501275

இதுவும் தவிர பல மடங்கள் உண்டு. அங்கேயும் தங்கும் வசதி உண்டு. கேதார் கட் மற்றும் இந்த சத்திரங்கள் பகுதியில் ரோடுகளிலெல்லாம் இட்லி தோசை விற்கிறார்கள். தோசையை தொப்பியாக்கிவைத்திருக்கிறார்கள். நம்மவர்களுக்குத்தான் எங்கே போனாலும் தோசை இட்லி வேண்டுமே..

வாழை இலை போன்ற வடிவத்தில் கொஞ்சமே கனமான காகிதம் அதன் மேல் தான் சாப்பாடு.. அழைகாக மடித்துக் கொண்டு போட்டுவிடலாம்.

November 6, 2008

காசி பயணத்தொடர்

சுமார் ஐந்து வயதிருக்கும் போதே காசிக்கு சென்றிருக்கிறேன். இது மூன்றாவது முறை. தில்லியிலிருந்து சிவகங்கா எக்ஸ்ப்ரஸ். இரவு கிளம்பி காலை வாரனாசி. தீபாவளி சமயத்தில் விசேஷமாக இருக்குமே தீபாவளிக்கு பிறகு கிளம்புகிறீர்களே என்று தான் எல்லோருமே கேட்டுக்கொண்டிருந்தார்கள். கூட்டம் என்றால் எங்க குடும்பத்துக்கு கொஞ்சம் அலர்ஜி.

வாரனாசியில் இறங்கியதும் ப்ரீபெய்டு ஆட்டோ ஒன்றை பிடித்து நாட் கோட் சத்தர் போய் இறங்கினோம். என்ன பார்க்கிறீர்கள்? அதாங்க நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம். ஊரில் நல்ல ப்ரசித்தம். போனமுறைக்கு இந்த முறை சத்திரம் நல்ல மாற்றம். லிப்ட் வசதி வந்திருக்கிறது. அறைகளும் புது முறைப்படி டைல்ஸ் வைத்து பெரிய கட்டிலிட்டு இருந்தது. பாத்ரூம்களும் வசதியாக ஹோட்டல் அறைகளைப்போல நல்ல முறையில் டைல்ஸ் வசதிகளோடு செய்திருந்தார்கள். முக்கியமாக சத்திரத்தை நாடுவதன் காரணம் ( ராப் கவனிச்சுக்கோ) தென்னிந்திய உணவு தான்.


நேராக அலுவலக அறையில் திரு. பனப்பனை சந்தித்தோம்.
என்னவெல்லாம் வசதி வேண்டுமோ நான் செய்துதருவேன் உங்கள் தேவை என்ன சொல்லுங்கள் என்று அமைதியாக விசாரித்தார்.

" சும்மா சாமி கும்பிடவா வேறு எதுவும் வேலை இருக்கிறதா ? "என்றார்.
" சாமி கும்பிடத்தாங்க ஆனா ஒரு சிரார்த்தம் கூட கொடுக்கனும்" என்றதும்
"அதாங்க வேற வேலைன்னு கேட்டேன். சரி எத்தனை நாள் தங்குவீர்கள்?"
" அது இரண்டு நாளுங்க.. "
"அப்ப சொல்றதைக் கேளுங்க போய் குளிச்சி கிளிச்சி ரெடியாகி ரெஸ்டு எடுங்க.. மதியம் ப்ரீ சாப்பாடு தான் சாப்பிடுங்க.. 2 அரை மணிக்கா வாங்க ,ஒரு பையனை அனுப்பறேன் நடந்தே போகக்கூடிய நாலு கோயில் பார்த்துட்டு வாங்க. பின்ன சாயங்காலம் கங்கா ஆரத்திப்பார்த்துடுங்க."

"சரிங்க அப்படியே ராத்திரி கோயிலிருந்து புறப்படும் நகரத்தார் கட்டளைக்கு பாஸ் வேணுங்களே! .. "

அதுக்கென்னா ராத்திரி சாப்பாட்டுக்கு 20 ரூ டோக்கன் இப்பவே வாங்கிக்கோங்க சாப்பிடவரும் போது பாஸ் வாங்கிக்கோங்க நாளை காலையில் வாங்க போட்க்கும் அய்யருக்கும் ஏற்பாடு செய்துடலாம் பின்ன சாரநாத் மற்ற இடங்களுக்கும் வண்டி வேண்டுமென்றால் ஏற்பாடு செய்வேன்.."

கடகட என நமக்கான திட்டத்தை அவரே சொல்லிமுடித்துவிட்டார். குறுக்கே கேட்க அவசியமே இல்லை.

மதியம் சாப்பாடு சாம்பார் ரசம் காய் என்று வீட்டில் சாப்பிடுவது போல நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு ரெஸ்ட். இரண்டரை மணிக்கு கிளம்பினோம்.

கேமிரா , போன் ஏன் பேனாவுக்குக்கூட அனுமதி இல்லை. என்பதால் மனதே இல்லாமல் கேமிரா இல்லாமல் கிளம்பினேன்.
முதலில் துண்டி விநாயகர். பின்னர் அன்னபூரணி, பின்னர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி கோயில்.
photo by simona ( google தந்த படம் தான் அவருக்கு ஒரு நன்றி சொல்லிக்கலாம்)
தெருக்கள் மதுரை மீனாட்சி கோயில் மேல மாசி வீதி சந்துக்களையும் விட சிறியது. சாந்தினிசவுக் சந்துக்களையும் விட சிறியது.பெரிய டவுன் கடைத்தெருவில் கூட கார்கள் நிறுத்த அனுமதி இல்லை. இருசக்கரவாகனங்களை நிறுத்தி ரோட்டி ன் நடுவில் டிவைடராகவும் பார்க்கிங்க் ப்ளேசாகவும் இருமாதிரியும் பயன்படுத்துகிறார்கள். துண்டி விநாயகர் அருகிலுருந்தே போலீஸ் காவல் தான்.


நுழைவு வாயில்தங்க கோபுரம்


சுயம்பு லிங்கம் சுற்றிலும் வெள்ளியால் கட்டப்பட்ட தடுப்பு.

நம் தென்னிந்தியா போலல்லாமல் இங்கே சிவனை தொட்டு வணங்க அனுமதி உண்டு என்பது தான் வட இந்தியாவில் சிறப்பு. நாம் 5 ரூபாய்க்கு பால் ( பாதி தண்ணீர்) மண் குடுவையில் வாங்கிக்கொண்டு கூட்டத்தின் இடிகளுக்கிடையில் சிந்தாமல் அபிஷேகம் செய்வது என்பது திறமைதான். மதியத்தில் சாமியை சுற்றிலும் பெரிய கம்பி தடுப்பைப்போட்டு சுவாமி மேலேயே மக்கள் விழுந்துவிடாமல் தடுத்திருந்தார்கள்.கம்பித்தடுப்பை தாண்டி தொட்டு வணங்கலாம். மலர்களும் வில்வமும் பாலுமாக நிறைந்திருந்தது. அவ்வப்போது மேலே கொஞ்சமாக நீக்கி தரிசிக்க செய்கிறார்கள்.ஜரகண்டி போலவே வெளியே துரத்திவிடுவார்கள்.


காசி விஸ்வநாதர் கோயிலில் பின்னால் மசூதி டூம் இருப்பதாக அறிந்திருந்தேன் . அதைப்பார்க்க சென்றபோது அங்கே பெரிய நந்தி ஒன்று .. அது பழய சிவன் கோயிலின் நந்தியாம். நந்தியின் முன்னால் வேலியிட்டு பாழடைந்த ஒரு கோயிலின் பாகம்.. அதன் பின் ஒரு மசூதி. பாதுகாப்பு மிக பலம். துப்பாக்கி ஏந்திய போலீஸ்களின் நடமாட்டம்.

காசிவிசாலாட்சி கோயில் நம் ஊர் கோயில். அங்கே பெண்கள் குங்கும அர்ச்சனை செய்வது ஒரு பழக்கம் இருக்கிறதாம். சிகப்புவளையல்களோடு வந்த சில தெலுங்குபெண்கள் செய்துகொண்டிருந்தார்கள். சாமிக்கு சார்த்திய சேலைகளை வாங்கிக்கொள்ளச் சொல்லும்படி அழைத்து வந்தப்பையனிடம் ஹிந்தியில் அந்த அய்யர் சொல்லிக்கொண்டிருந்தார்.. காசிக்குப்போனால் என்ன என்ன செய்யவேண்டும் என்று பாபா கூட ஒரு பதிவு போட்டிருந்தார் தேடி இணைப்பு செய்து வைக்கவேண்டும். நெற்றியைக்காட்டினால் காசு. நின்று கும்பிட்டால் தட்சனை. முதுகில் அடித்தால் காசு. கவனம் தேவை.

ப்ரசாதம் எடுக்காமல் சாமியை கண்ணால் கண்டு வரும்போது அது ஆன்மிகச்சுற்றுலா போலவே இல்லை. ஏதோ ம்யூசியம் இன்பச் சுற்றுலா போலத்தோன்றுவதை தடுக்க இயலவில்லை. காரணம் காசு பிடுங்கும் பண்டாக்கள் தான்.
காசியில் எடுத்த சில படங்களை அவ்வப்போது க்ளிக் க்ளிக் கேமிராக் கவிதைகள் பதிவிலும் வலையேத்துக்கிறேன்.
கங்கா ஆரத்தி , காசி விஸ்வநாதர் ராக்கால பூஜை அடுத்த அடுத்த பதிவில்......