August 29, 2008

ஜென்மாஷ்டமி - குற்ற உணர்ச்சி!


சென்ற வருடத்தில் ஒரு முறை தில்லியில் நடைபெறும் ஜென்மாஷ்டமி விழாவினைப்பற்றி பதிவிட்டிருந்தேன். குழந்தைகள் செங்கல் மண் கொண்டு அமைக்கும் சிறு கோயிலுக்காக செங்கல் மற்றும் மணலை அருகில் எங்காவது கட்டிட வேலை நடக்கும் இடத்திலிருந்து எடுத்துவருவது வழக்கமாம்.

போனவருடம் தான் முதன் முதலில் எங்கள் குழந்தைகளும் செய்யத்தொடங்கினார்கள் என்பதால் செங்கல் மட்டுமே ஒருவீட்டிலிருந்து எடுத்து வந்து உபயோகித்தார்கள். செங்கல் சுற்றிவர கட்டம் கட்ட என்பதால் அதனை அப்படியே திரும்ப கொடுத்துவிடலாம். ஆனால் மணலை தரையோடு சமணப்படுத்தி வேலைகள் செய்துவிடுவதால் மீண்டும் அது கட்டிட வேலைக்கு உபயோகமற்றதாக ஆகிவிடும்.

இந்த முறை எங்கள் வீட்டுக்கு பின்புறம் அரசாங்க உதவியோடு கட்டப்படும் வாக்கிங்க் ஏரியாவுக்கான செங்கல்களை எடுத்துக்கொண்டார்கள் . ஜென்மாஷ்டமி முடிந்து நாட்கள் ஆகியும் இன்னமும் யாரும் அதை திரும்ப வைக்கவும் இல்லை. செங்கற்கள் இப்போது கார்களை நிறுத்துவதால் உடைந்து வருகிறது. எப்படியும் அந்த கற்கள் உடைத்துத்தான் பயன்படுத்தப்படும் என்பதால் இப்போது கிடைத்தாலும் அது லாபமே.

மணல் வேண்டாம் என்று அதற்கு பதில் மரத்தின் இலைகளைக் கொண்டு பார்க் மற்றும் ரங்கோலி நிறங்களால் பாதை மற்றும் நதி செய்து கொண்டாடினோம். மற்ற குழுவினர் எங்கெங்கோ கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சமல்ல 4 அல்லது 5 மூட்டைகளாக கட்டப்பட்ட மணல்களை ( சிலவற்றில் சிமெண்ட் கூட கலந்து வைக்கப்பட்டிருந்தது) அந்த வீட்டினரிடம் கேட்காமலே கொண்டு வந்து பரப்பி வந்தனர். நான் அவர்களிடம் கேட்கவும் செய்தேன். இல்லை ஆண்ட்டி கேட்கவில்லை என்றே பதிலுரைத்தார்கள். அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை.

எனக்கு இது மிக வருத்தத்தைத் தந்தது. கற்களை அந்த இடத்துக்கு மாற்ற தங்கள் சேமிப்பிலிருந்து ரிக்ஷா வை வரவழைத்துக் கொண்டு வந்து வைக்க முடிந்த அந்த சிறுவர்களால் அதை மீண்டும் கொண்டுவைக்கத்தோன்றவில்லை. மற்றும் மணலை கேட்காமல் எடுத்துவருவது தவறாகத்தோன்றவில்லை.

இந்த வருத்தத்தை என் தோழி ஒருவரிடம் பகிர்ந்து கொண்டபோது , அவர் சொன்னார்,"" இல்லை லெக்ஷ்மி அவர்கள் நிச்சயம் கேட்டாலும் மறுத்திருக்கப்போவதில்லை... "நீங்கள் யோசிப்பது எதற்காக? நாம் நம் வீட்டில் இந்த தினங்களுக்கு சமீபத்தில் கட்டிடவேலைகளை வைக்காமல் இருந்தால் போயிற்று""என்று.. :(

இருக்கலாம் இது வழக்கமானதாக மாறிவிட்டிருக்கலாம். ஆனால் இது குழந்தைகளுக்கு ஒரு கெட்ட எண்ணத்தை விதைக்காதா? நமக்கு தேவையானவற்றை சாமி காரியம் என்பதால் யாரும் மறுப்பதில்லை என்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு இல்லையா?

எல்லாரும் செய்வதால் , வழக்கமாகிவிட்டதால் ஒருவிசயம் தவறாக இருந்தாலும் சரியாக ஆகிவிடக்கூடுமா?ஒரு திருடனை ஒருவர் அடித்துக்கொன்றால் குற்றம். கிராமமே சேர்ந்து கொன்றால் குற்றமில்லை என்பது போல தேவையில்லாத எண்ணம் தோன்றுகிறது .

வெளிநாட்டினர்( ஒரு சில )நாட்டை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் முறையாக வெளியிடங்களில் நடந்து கொள்கிறார்கள் என்கிறோம். அதற்கு அடிப்படையில் சிறுகுழந்தையாக இருக்கிற போதிலிருந்தே அவர்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள்.(பெற்றவர்களின் பொருள் என்றாலே இதை பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கேட்கும் நிலை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ) இந்தகுழந்தைகளுக்கு தவறை சுட்டிக்காட்டாதது பெற்றோர்கள் குற்றம் இல்லையா?

August 28, 2008

கோல நினைவலைகள்

நேற்று ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன்.வேர்ட் பேட்டை save செய்திருக்கவில்லை.. ஆனால் ஒரு வேலையாக நகரும்பொழுது கணினியை மானிட்டரில் ஆஃப் செய்துவிட்டு சென்றேன். நடுவில் கரெண்ட் கட் ஆகிவிட்டது. இப்படியாக மானிட்டர் ஆஃப் ஆகி இருக்கும் போது மானிட்டரை ஆன் செய்தால் அது ஷட்டவுன் ஆகி மீண்டும் திரை உயிர் பெறுகிறது. அந்த டாக்குமெண்ட் அழிந்துவிட்டது. தானாக அது ஆஃப் ஆகாமல் இருக்க ஏதும் வழி இருக்கிறதா?

ஒரு தோழியின் அறிவுரையில் இப்போதெல்லாம் நான் ஹைபர்னேட் தான் செய்கிறேன்.. அதனால் வேர்ட் டாக்குமெண்டை சேவ் செய்வதே இல்லை.. அப்படியே பாதியில் ஹைபர்நேட் செய்துவிட்டுப் போய்விடுவேன். மறுநாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பேன்.
இன்று மீண்டும் டைப் செய்துப்போட்டிருக்கிறேன். ஆனால் முன்பு தோன்றிய விதமாய் வரவில்லை பதிவு. புதுகைத்தென்றலின் கோலம் பதிவில் எழுந்த நினைவலைகள்......

எங்கம்மா நான் அஞ்சாப்பு படிக்கும்போதே பொம்பிளைப்பிள்ளைன்னா கோலம் போடத்தெரிந்தே ஆகனுன்னு மூன்று புள்ளி மூன்று வரிசை ஐந்துப்புள்ளி ஐந்துவரிசை என்று சின்னதா கத்துக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சாயங்காலம் வாசல் தெளித்துக்கோலம் போடுவது உன்வேலை என்று பொறுப்பும் ஒப்படைத்துவிட்டார்கள்.

நாங்கள் இருந்தது காலனி வீடு. மூன்று வீடுகள் சின்ன சந்தில் இருக்கும்..அதில் நடுவீடு எங்கள் வீடு. பத்து அடி பாதை தான் . சிமெண்ட் தளம். என்பதால் பெரிய வேலை இல்லை. மார்கழி மாதக்கோலங்களுக்காக மட்டும் காலனி வாசலில் போடுவோம்.

கோலங்களை வகுப்பறையில் கூட நோட்டு புத்தகத்தில் போட்டு பயிற்சி எடுத்துக்கொள்வேன்.
மார்கழிமாதக்கோலத்திற்காக அம்மா புதுகைத்தென்றலின் அம்மாவைப்போலவே முதல் நாள் இரவில் பயிற்சி எடுத்துக்கொள்வதோடு அப்பாவோடு கலந்து என்ன என்ன நிறங்கள் கொடுக்கவேண்டும் என்றும் பேசிவைத்துக்கொள்வார்கள். சாணம் தெளித்து கோலமிட்ட பின் கலர் தூவ என்னை அழைப்பார்கள். அம்மாவைப்போல நேர்த்தியாக வராது .. நான் கலர் தூவிய இடங்களை அம்மாவின் அவுட்லைன் தான் சிறப்பாக்கும்..

காலையில் முதல் ஆளாக 4 மணிக்கே எழுந்து கோலமிடுவதே அம்மாவுக்கு வழக்கம் ஒரு நாள் சிறிது தாமதமாகிவிட்டாலும் வருந்துவார்கள்.33 மூன்று புள்ளியைக்கூட சின்னதாக அழகாக நேர்த்தியாகப்போடுவார்கள்.. நான் என் முறை வரும்போது ஏழு புள்ளிக்கோலத்தையே தள்ளித்தள்ளி வைத்து பெரியதாகக்காட்டிவிடுவேன்.

சின்னவயதில் நூல்கண்டில் சிக்கெடுப்பது மிக பிடித்த பொழுதுபோக்கு. புள்ளிக்கோலம் எனப்படும் சிக்குக்கோலம் எனக்கு அதிகம் வராது. இருந்தாலும் நூலில் சிக்கெடுப்பது போல இதிலும் ஆர்வம் உண்டு. அவ்வப்போது முயற்சிப்பேன். கிருஸ்துமஸ் தினங்களில் அம்மா போடும் கிருஸ்துமஸ் தாத்தா கோலம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அப்போதெல்லாம் கேமிரா இல்லாததால் படம் எடுத்துவைக்கவில்லை.

அம்மா வாழ்த்து அட்டைகளைக்கூட கோலமாக்கி போடுவார்கள்.சின்ன அளவில் ஒரு கார்ப்பெட் போல தோன்றும். இப்போது அவற்றை படமெடுத்து ஆல்பத்தில் வைப்பது பழக்கமாகி இருக்கிறது. உங்களுக்கு காண்பிப்பதற்கு டிஜிட்டலில் இனி தான் எடுக்கவேண்டும்.

தில்லியில் இருக்கும் 3 அடி வாசலில் 6 புள்ளி 5 புள்ளி கோலங்கள் மட்டும் தான் இடலாம். அதையும் குளிர் மற்றும் நேரமின்மை என்று காரணம் காட்டி கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டும் சோம்பேறியாகிவிட்டேன் நான்.மகளுக்காக விழாக்காலங்களில் வழக்கம்போல கோலமிட்டு கலர் தூவுவதை வழக்க்மாக வைத்திருக்கிறேன்.

அம்மா எப்போதும் டிகாஷன் இறக்கியபின் காப்பித்தூளை காயவைத்து அதனை ப்ரவுன் கலருக்கு உபயோகப்படுத்துவார்கள்.
இரும்புக்கடையில் இருந்து ஒரு விதமான கருப்பு கலர் வாங்கி யானைக்கு நிஜமான யானைக்கலர் போடுவார்கள். அந்த அந்த கோலத்திற்கு அப்படியே அதன் நிறம் வரவேண்டும் என்பதில் மிக குறிப்பாக இருப்பார்கள். மான் கோலத்தன்றும் மஞ்சள் காவி என்று இரும்புக்கடையில் அப்பாவை வாங்கிவரச்சொல்லி வாசலில் நிஜமானே துள்ளி ஓடும்.

இரண்டு மூன்று நிறப்பொடிகளை வேறு வேறு விகிதங்களில் கலந்து அவ்வப்போது தேவையான ஒரு நிறத்தினை கொண்டுவந்து விடுவார்கள். கலர்ப்பொடிகளை வெள்ளைக்கோலமாவுடன் கலக்கும்போதே நிறம் வெளிறாமல் கலப்பதே ஒரு கலை. இப்போதெல்லாம் ஆற்றுமணலில் கலர் ஏற்றிய கோலமாவுகளை மதுரையில் இருந்து வாங்கிவருகிறார்கள். அது இன்னமும் எளிதாக அழகாக பரவுகிறது. இருந்தாலும் நாமே கலந்து செய்த அந்தக்காலம் போல வருமா?

புதுகைத்தென்றல் பதிவில் நான் பின்னூட்டம் போட்டதும் அவங்க என்னை டேக் பண்ணிட்டாங்க.. அதே பாணியைப் பின்பற்றி இந்த பதிவில் பின்னூட்டமிட்ட முதல் பெண் என்பதால் ராமலக்ஷ்மிக்கு டேக் பண்ணிட்டேன் :) ராமலக்ஷ்மி கோலம் பற்றி எழுதி அசத்துங்க பார்க்கலாம்.

August 23, 2008

கண்ணன் பிறந்தான் ....கண்ணன் பிறந்தான்.hammaa வில் பிண்ணனியில் கண்ணன் பாட்டு இசை ஒலிக்கும் வேளையில் தவழ்ந்து வந்த கண்ணன் கீரிடம் , மாலை அணிந்து, திண்டு மெத்தையில் சாய்ந்தபடி நனைத்த அவல், சீடை உண்ணுகிறான்.

August 22, 2008

பே இட் ஃபார்வேர்ட்

இன்றைக்கு மகனின் பள்ளியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் . பதினொன்றரை மணிக்கே அழைத்து வந்தாயிற்று. இணையத்தில் உட்காரும் நேரம் குறையும் என்று தெரிந்ததும் முன்யோசனையாக HBO தளத்துக்கு போய் இன்று என்ன படங்கள்? என்று குறித்துக்கொண்டேன். ஒரு வரி கதை படித்ததில் , 2.30 மணிக்கு வரும் படம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. "pay it forward."


அவசரமாக அடுக்களை வேலையை முடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். புதிர் கோர்க்கும் ஆர்வம் வர வர மகனுக்கு அதிகரிக்கிறது. அவனுக்கு உதவிக்கொண்டே சேனல்களை ஓட்டியதில் சிக்கியது காமெடிப்படம் ட்யூப்லக்ஸ்.. ஹிந்தியில் மொழிமாற்றம்செய்யப்பட்டது. நடுநடுவில் பார்ப்பதையும் " அம்மா மேரே ஸாத் கேலோன்னா... " வுக்கு பயந்து படத்தை வெறுமனே காதில் கேட்டுக்கொண்டுதானிருந்தேன்.

2.30 மணிக்கு பே இட் ஃபார்வேர்ட் தொடங்கியது. .. சின்னப்பையன் அழகாக நடித்தான். மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்தார்கள்.ஏறக்குறைய நம்ம டேக் விளையாட்டு போலத்தான். தேர்ந்தெடுக்கும் ஆளை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என்றால் ஆட்டம் பாதியில் நின்று போய்விடாதா? அது போலத்தான் .


ஆசிரியர் வகுப்பில் உள்ளவருக்கு தரும் செயல் முறை பாடம் ... "உலகத்தை மாற்ற ஒரு வழி கண்டுபிடியுங்கள் அதை செயல்படுத்திக்காட்டுங்கள்". அந்த பாடத்துக்காக படத்தின் நாயகன் சிறுவன் கண்டுபிடிக்கும் முறை தான் "பே இட் பார்வேட்" ஒருவர் தான் பெற்ற நன்மைக்கு நன்றியாக , நன்மை செய்தவருக்கு நன்றியை செலுத்தும் விதமாக, உதவி தேவைப்படும், வேறு மூன்று பேருக்கு உதவி செய்யவேண்டும்.
சிறுவன் தான் தேர்ந்தெடுத்த ஆட்கள் தவறு என்று நினைத்து கவலையாகிறான் ஆனால் அவனின் வழிமுறை வெற்றி பெறுகிறது.
சிறுவனின் இந்த வழிமுறை அவன் ஆசிரியரையும் அவன் அம்மாவையும் சேர்த்துவைக்கிறது..
அவன் அம்மாவையும் பாட்டியையும் சேர்த்துவைக்கிறது.
பலருக்கு அது இயக்கமாக மாறி உதவிகள் பன்மடங்காக உயர்கிறது.
கதையின் முடிவு பார்த்து கண் நிஜமாகவே கலங்கிவிட்டது.துக்கம் தொண்டையடைத்தது.
அந்த பாடல் காட்சி இங்கே இருக்கிறது. படம் பார்க்கும் முன் முடிவு தெரியக்கூடாது என நினைப்பவர்கள் காட்சியைப்பார்க்கவேண்டாம்.


எதையோ ஆரம்பித்து எதையோ முடித்து என்று ஆயில்யன் ஒரு டேக் போட்டு பதிவிட சொல்லி இருந்தார். இந்த பதிவை அதற்காகவும் என்று எடுத்துக்கொள்ளலாம்.
வேறு மூன்று பேரை ஆயில்யனைப்போலவே ரகசியமாக அழைத்துவிடுகிறேன்..:)

August 12, 2008

புதுகைத்தென்றலின் கேள்விக்கு ஒரு கேள்வி!

நான் அஞ்சாப்பு படிக்கும்போது நடந்த கதை இது.
என் வகுப்பு தோழி ஒருத்திக்கு என் வகுப்பு தோழன் ஒருவன் காதல் கடிதம் குடுத்துவிட்டான். அந்த பொண்ணு ஒரே அழுகை. விசயம் ஆசிரியைக்கு தெரிஞ்சதும் அவனைக்கூப்பிட்டு ஏண்டான்னு கேட்டதுமில்லாம அவன் என் கூட தான் ரிக்ஷால வருவாங்கறதால் ..அவங்கப்பாக்கு ஒரு கடிதம் எழுதி இதை குடுத்துடுன்னு என் கிட்ட குடுத்துட்டாங்க.

சாயங்காலம் நானும் குடுத்துட்டேன் வேற வழி. அடுத்தநாள் அவன் பள்ளிக்கு வந்தான். ஆனா சட்டை போடல. அடிச்ச அடியில் சட்டை போடமுடியாம ஆகிடுச்சு. 12 வருடங்களுக்கு பிறகு அதே தோழி வேறு ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டாள். அந்த நண்பன் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான் ..

இப்ப புதுகைத்தென்றலோட கேள்விக்கென்ன பதில்? பதிவைப்படித்ததும் எனக்கு அந்த நிகழ்வுதான் மனசுக்குள் வந்தது.

இப்ப நண்பர்கள் தினம் வந்தபோது மகள் நிறைய ப்ரெண்ட்ஷிப் பேண்ட் வாங்கினா. எல்லாம் பெண்கள் அணிவது. ஆண்களுக்கான் ஒன்று கூட இல்லை. இப்போது 5 ம் வகுப்பு . இரண்டுவருடங்களுக்கு முன்புவரை ஆண்கள் பெண்கள் என்ற பிரிவு இல்லாமல் தான் பழகிவந்தார்கள். ஏன் பையன்கள் ஒருவர்கூட நண்பர்கள் இல்லையா என்றால்.. இல்லம்மா எல்லாம் சேட்டை பசங்கதான் . இரண்டு பசங்க நல்ல பசங்க ஆனால் கட்ட முடியாது. எங்கள் வகுப்பில் யாருமே ஆண்களுக்கு கட்டுவதாக இல்லை. நான் எப்படி ?

ஆனால் பிறகு இரண்டு பையன்களுக்கான் பேண்ட் களை வாங்கிக்கொண்டாள்..விசாரித்ததில் ஆண்கள் பெண்கள் என்று வகுப்பில் பிரிவாக இருக்கத்தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
எப்போது ஆரம்பித்தது ஏன் என்றால் தெரியவில்லையாம்.என்ன சொல்வது ? குழப்பமாக இருக்கிறது புதுகை எனி ஐடியா?

August 7, 2008

என்னவெல்லாமோ நடக்குது ... சோதனை..

இன்று காலை நேற்றுப்போட்ட பதிவுக்கு பின்னூட்டம் வந்திருந்தால் பிரசுரிக்கலாமே என்று பார்த்தபோது ... பதிவில் என் நேற்றையபதிவே இரண்டுமுறை காட்டிக்கொண்டிருந்தது. ஒன்றை டெலிட் செய்துவிட்டு பார்த்தால் வந்திருந்த 35 மறுமொழிகளையும் கூட்டிக்கொண்டு அது காணாமல் போயே போய்விட்டது. எடிட் போஸ்ட் பேஜுக்கு போனபோது அங்கே ஒன்று இருந்தது . அதை டெலிட் செய்ய வும் முடியாது சேவ் ட்ராப்டாக்கவும் முடியாது என்றது. சரி என்று மீண்டும் அதை பப்ளீஷ் செய்ததும் இரண்டு பதிவாகவே வந்து விழுந்தது. நல்லவேளை கூட்டிப்போன மறுமொழிகளோடே வந்து சேர்ந்தது.

சரி துணைக்கு இருக்கட்டும் என்று பார்த்தால் இந்த பதிவோடு 165 ஆகிறது ஆனால் டேஷ்போர்டில் 161 தான் காட்டுகிறது. இதற்கிடையில் அடுத்த பதிவுக்கும் இரண்டாக வந்து விழக்கூடாது என்றால் கெடா வெட்டுங்க என்று தமிழ்பிரியன் வேறு கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

அவர் போட்டிருந்த ப்ளாக்கர் முகப்பில் படம் வேறு முயற்சித்திருக்கிறேன்..
படமும் வருகிறதா என்று சோதனை..
இரண்டாய் விழாமல் ஒன்றாய் விழுகிறதா என்றும் சோதனை.

August 5, 2008

எதயாச்சும் எழுதணும்ல...எதாவது பெயரில் எழுதணும்ல :)

சுப்ரமணியபுரம் பார்த்தேன்... ம்.. நல்லா இருந்தது. நல்லபடம்ன்னா இப்ப கற்றது தமிழ், பருத்திவீரன் , சுப்ரமணியபுரம்ன்னு ஹிட் ஆகற எல்லாத்துலயும் ரத்தம் ரத்தம். மனசை தைரியமாக்கிட்டுத்தான் படம் பார்க்கனும்.

இந்த இயக்குனர்கள், திறமை இருக்கு நல்ல எடுக்கறாங்க, ஆனா கொஞ்சம் ரத்தம் குறைச்சு ஏ சர்டிபிகேட் வராம, குடும்பமா குழந்தைகளோடு பார்க்க அழகா நாலுபடம் செய்தா ... நல்லாருக்குமில்ல....இப்ப குழந்தைகள் இந்த படத்தைப் பார்க்கலயான்னா , பார்க்கிறாங்க ஆனா நல்லது இல்லை .

படத்தில் ஒவ்வொரு காட்சியும் கவனமா அந்த காலத்தை காட்ட முயற்சித்தது அழகு... லாட்டரி சீட்டு முன்பெல்லாம் ஆட்டோல மை க் செட் வைத்து அழகா கூப்பிட்டு வாங்க வைப்பாங்களே... அதுகூட இருந்ததே...
--------------------------------------------------------------------------
தமிழ்நதி வந்திருந்தாங்க... அவர்கள் வேலையாக வந்திருந்தாலும் எனக்காக நேரமொதுக்கி ஒரு கோடி தில்லியிலிருந்து மற்றொரு கோடிக்கு வந்து என்னை சந்தித்தார்கள்.. மங்கையும் அலுவலக வேலைப்பளுவை மறந்து வந்து சேர்ந்தார்கள். உள்ளே நுழைந்ததிலிருந்து அவங்க கேட்டது உங்களை எப்படி கூப்பிடுவது ... லெட்சுமின்னு கூப்பிட்டுக்கிட்டிருந்தோம்.. நீங்க முத்துலெட்சுமி ஆகிட்டீங்க.. சரி முத்துலெட்சுமின்னு கூப்பிட ப்ழகிக்கிட்டிருக்கறதுக்குள்ள கயல்விழிங்கறீங்க.. நான் எப்படி கூப்பிடுவது? நான் எப்படி கூப்பிடுவது ?

அப்பத்தான் அவங்க கஷ்டம் எனக்கு புரிந்தது. லெட்சுமி லக்ஷ்மியால் முத்துலெட்சுமி ஆனபோது பதிவு போட்டேன் . ஆனால் முத்துலெட்சுமி முழுப்பெயரானப்ப பதிவெல்லாம் போடவில்லை.. தானாக தெரியட்டும் என்று நினைத்துவிட்டேன். வழக்கம்போல என் பெயரின் அதிர்ஷ்டம் நானாக முழுப்பெயர் மாற்றிய நேரம் கயல்விழி வருண் வந்துட்டாங்க.. சிலர் குழம்புகிறதாக கேள்விபட்டேன் . ஆனால் அதற்காக பெயர் மாற்றுவதா என்று குழப்பம் தான். ஆனால் நதியைப்போல பலரும் கூப்பிடுவதில் முத்து முத்துக்கா என்றே பதிந்து கொண்டுவிட்டதாக சொல்லவும் தான்...
வழக்கம்போல மாற்றிவிட்டேன்..மாற்றுங்கள் என்று பதிவின் கேப்ஷன் குடுத்துவிட்டு நான் மாற்றுவது அடிக்கடி பெயரைத்தான் :)
---------------------------------------------------
தொடர்ந்து எதாவது டேக் போஸ்ட் போட்டு போட்டு வேறு எதுவும் எழுத தோணவில்லை. வேறு வேலையாக ஓடிக்கொண்டிருந்ததிலும் வேறு சில காரணத்தாலும் ஒரு டேக் போஸ்டுக்கு பழய பதிவைப்போட்டு ஓட்டிவிட்டேன். இப்போதெல்லாம் பதிவைப்படிக்க படிக்கவே சொல்லாமல் கொள்ளாமல் இணையம் வேலை யை நிறுத்திவிடுகிறது. சரி சிலநேரம் பதிவைபடிக்கவிட்டால் பின்னூட்டம் போட விடுவதில்லை. இதற்கு இடையில் பதிவைப்போட எங்கே தோன்றும்?

பாட்டுகேட்பதும், பாதியிலிருந்து படம் பார்ப்பதுமாக நேரம் போகின்றது.. எனக்கு மிகவும் பிடித்த தொலைகாட்சி பொதிகை . பலநாட்களாக எங்க கேபிள் காரங்க தராமல் இழுத்தடிச்சு இப்பொழுது தான் வருகிறது. 15 வருசம் முன்னால பார்த்தமாதிரியே இன்னும் தரம் கெடாமல் இருப்பதாக தெரிகிறது. வயலும் வாழ்வும் கூட இப்பவும் ஆர்வமா பார்க்கிறேன். ஆங்கிலம் கூட சொல்லித்தராங்க.

இன்னொரு தொலைகாட்சி நிகழ்ச்சி அமரிக்கன்'ஸ் ஃபன்னியஸ்ட் ஹோம் வீடியோஸ். நீங்க பார்த்திருக்கீங்களா ?

ஒரு முறை ஒரு காட்சி..
ஒரு குழந்தை ஹாலில் விழுந்து புரண்டு அழுதுச்சு ..அவங்கம்மா அப்படியே நடந்து கிச்சன்க்குள்ள போனாங்க..குழந்தை உடனே எழுந்து அழுகையை நிறுத்திட்டு ... நடந்து போய் கிச்சனுக்கு நேரா போய் விழுந்து மீண்டும் முன்போலவே அழுதுச்சு. அவங்கமா அப்படியே நடந்து அடுத்த அறைக்கு போனாங்க.. உடனே குழந்தை மறுபடி அழுகையை நிறுத்திட்டு எழுந்து நடந்து அம்மா கண்ணில் ப்டற இடமா போய் விழ்ந்து மீண்டும் அழுகை நாடகம். அவங்கம்மா மீண்டும் கிச்சனுக்கு இந்த குழந்தை மீண்டும் .. மீண்டும் மீண்டும்..
ஆகா அழகோ அழகு.
ஒரே ப்ரசவத்தில் பிறந்த இந்த நாலு பாப்பாக்களும் அம்மா மேல படுத்துக்கிட்டு சிரிசிரின்னு சிரிக்கறத பாருங்களேன்


குழந்தைகளும் நானும் அதை பார்க்க ஆரம்பித்துவிட்டோமானால் உலகமே மறந்துவிடுவோம்.