March 22, 2007

சே இதெல்லாம் நல்லவா இருக்கு -5

சுடர் விளையாடும் போது நப்பாசை இருந்தது நமக்கு கொடுக்கமாட்டாங்களான்னு ...ஆனா இந்த வயர்டு விளையாட்டு
வேணாமே நமக்குன்னு இருந்தது. நாகை சிவா மூலமா வந்துடுச்சே என்கிட்டயும் . சொல்லறேன் . என்னோட பதிவுல நானே என்னப்பத்தி போட்டுக்
கொடுக்கற மாதிரி எழுதறது இது தான் முதல்.
வீடு சுத்தம் பண்ணறது , அப்படின்னதும் சுத்தம் பண்ணிகிட்டே இருப்பனோன்னு நினைச்சீங்கன்னா தப்பு... எப்பவும் வீட்ட துடைச்சு சுத்தமா வச்சுக்கறவங்களப் பாத்து அவங்களுக்கு
சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்கற வியாதி இருக்கோன்னு கேக்கறவ நான். நானும் செய்வேன் ஆனா ஒரேடியா பிசாசு மாதிரி மேலே கீழே எல்லாத்தையும் எடுத்து துடைச்சு சேஞ்சுக்கு வேற இடம் மாத்தி வச்சுன்னு அல்லோல கல்லோலப் படுத்துவேன். அன்னைக்கெல்லாம் எல்லாரும் ஆகா இவளல்லவோ பெண் அப்படிங்கற மாதிரி நடப்பேன் . எப்படி என் திறமை அப்படின்னு கேட்டு பாராட்டு வாங்கிப்பேன். இல்லாட்டி
சாப்பிட்ட தட்டு ..பூஸ்ட் குடிச்ச டம்ளர் வரை பக்கத்துலயே வச்சுட்டு அப்படியே உட்கார்ந்தும் இருப்பேன். ஆனா தினமும் நீட்டா வைக்கறது , எடுத்த இடத்தில் திருப்ப வைக்கறது இதெல்லாம் பழக்கமே இல்லை...பழக சொல்லி சொல்லறவங்க
பேச்சை கேட்கற பழக்கமும் இல்லை. அதது எடத்துல துடைச்சு வைக்க வீடு என்ன ம்யுசியமான்னு திருப்ப கேட்பேன். கஷ்டம்.


பேசிக்கிட்டே இருக்கறது...ஒரு நாலு பேர் கூட்டமா என் கூட இருந்தா நான் தான் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பப்ப இடையில் யாராவது பேசிட்டாலும் திருப்பி வாங்கிடுவேன் மைக்கை. அப்புறம் தனியா இருக்கும் போது நினைச்சுப்பேன். சே இது எல்லாம் நல்லாவ இருக்கு . நாளைலேர்ந்து நாம கேக்கனும் மத்தவங்க பேசணும்..ஆனா முடியாது . கல்யாண வீடு நாலு மனுசங்க பேச கிடைச்சா [ உண்மையில் கேட்க கிடைச்சான்னு தான் இருக்கனும் ] குரல் பெரிதாகி கதைஅடிச்சு கதை அடிச்சு தொண்டை கட்டி
பேசமுடியா அடுத்த ரெண்டு நாள் சைகை பாஷயில் பேசுவேன். முன்னாடியே யாராவது நிறைய பேசுற போல நாளைக்கு என்ன மௌனவிரதமான்னு கேட்டு
கோடி காட்டினாலும் ...இப்படி சேருர சமயத்துல இதெல்லாம் பார்க்கக்கூடாதுன்னு பேசிடறது. அடுத்த நாள் எல்லாரும் அப்பாடா தொல்லை விட்டுதுன்னு இருப்பாங்க. ஆர்வக்கோளாறு இருக்கறவங்க , உப்பு போட்டு கொப்பளியேன் சரியாகிடும்ன்னு அட்வைச் பண்ணுவாங்க..எதுக்கு திருப்பி கதை கேட்கவா ...ஆனா நாம தான் வித்தியாசமான ஆள் ஆச்சே உப்பு தண்ணி கொப்பளிச்சேனோ ஒத்துக்கவே ஒத்துக்காது அப்பறம் ம்...ஆங் கூட சொல்லமுடியாத அளவு ஆகிடும். அப்படியே பேசாம சைகை காட்டிட்டு இருந்தா அடுத்த நாள் சரியாகிடும்.சாப்பாடு .. இது ஒரு கடமை மாதிரி சமைக்கறதோ சாப்பிடறதோ ரெண்டுமே தான்.
முதல்ல சாப்பிடறது சொல்லறேனே ...சின்ன வயசில எல்லாரும் என்ன சாப்பிட்டன்னு கேட்டா தண்ணிக் குடிச்சேன்னு சொல்லுவேனாம். நிஜத்தண்ணி தான். தண்ணிக் குடிச்சே பேசுவாப்பா இவன்னு சொல்லுவாங்க.நான் பால் குடிக்கறேன், இட்லி சாப்பிடறேன்னா ஊருக்கே தெரியும் . கத்தி அழுது அட்டகாசம் செய்து தான் எதுவுமே. காலேஜ் படிக்கும் போதும் அம்மா பால் டம்ளரைக் கொண்டுவந்து கொடுப்பாங்க அங்க வைங்கன்னு சொல்லிட்டு மறந்துடுவேன் ஆறி ஆவலாப்போனப்பறம் அம்மா இன்னும் குடிக்கலயான்னப்பறம் அப்படியே ஊத்திக்குவேன். சில சமயம் அவங்க பாக்கலன்னா குடிக்காம காலேஜுக்கும் போயிடுவேன்.சாயங்காலம் திட்டு விழும் . அப்படியே வயிறு சுருங்கிப்போச்சு. பசின்னா என்னன்னு தெரியாது.பையன் வயத்துல இருந்தப்ப தவிர அப்ப மட்டும் கடோத்கஜன் மாதிரி அடுத்து அடுத்து ன்னு உள்ள தள்ளினேன். எப்பவும் ஹோட்டல் ல காசுக்கொடுக்கறவங்க வருத்தப்படறமாதிரி மீதி வைக்காம எந்திரிக்க மாட்டேன். கல்யாண வீட்டுல வைக்கற முதல் கரண்டி சாதத்திலயே ரசம் சாம்பார் வத்தகுழம்பு மோர் எல்லாம் சாப்பிட்டுறுவேன். பரிமாறறவங்க பக்கத்துலயே நின்னு ஆச்சரியமா பாப்பாங்க.


சமைக்கிறதும் அப்படியே தான். அடுக்களையிலேயே இருக்கறது பிடிக்காது ...ஹாலிலேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்து டிவி அரட்டைன்னு இருக்க சொன்னா சந்தோஷமா இருப்பேன். கடமைக்காக சரியான நேரத்துக்கு அடுக்களையில் நுழைந்து கடகட ன்னு எல்லாத்தையும் செஞ்சுட்டு சட்டுபுட்டுன்னு வெளியில வந்துடனும் எனக்கு. அப்புறம் யாராவது நின்னு என்ன செய்யறான்னு பாக்கவும் கூடாது .கல்யாணம் ஆனதும் மாமியார் கிட்ட என் சமையல் தானே நீங்க ஆபிஸ் போங்க சமைச்சு வைக்கறேன் மதியானம் வந்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டேன். யாராவது பாத்தா படபடன்னு வந்து சரியா வராது. அடுக்களைக்குள்ள நுழையற வரை இன்னைக்கு என்ன மெனுன்னு யார் கேட்டாலும் தெரியாதுங்கறது தான் பதில். என்ன சமைக்கறதுன்னு யோசிக்கறமாதிரி கஷ்டம் உலகத்துல வேற கிடையவே கிடையாதுன்னு எனக்கு தோணும். யாரும் அதுக்கு ஹெல்ப் செய்ய மாட்டாங்க. பின்ன தோசை அப்படின்னா மாவு இல்ல வேற சொல்லுங்க... அடுத்து ...வேண்டாம் என்ன முடியுமோ அதச்செய் ன்னு பேசாம இருந்துடுவாங்க . எளிமையான விஷயம் அப்படிங்கறதுல எக்ஸ்பர்ட் ன்னு பேர் வாங்குவேன். கூட்டாஞ்சாதம் , சொதின்னா யாரு செய்யறதுன்னு கொஞ்சம் சோம்பேறித்தனம்.
மதுரா சொன்னா மாதிரி கடகடன்னு முடிக்கறதுல எதயாச்சும் கொட்டி கவுத்து தான் வேல செய்வேன். ஒரு தடவை பூரி செய்துட்டு அடுப்ப ஆப் பண்ணவே இல்லை. பெரிய வாணலியா , அடியில குறைச்சு வச்சு இருந்த தீ தெரியல. சூடாகி சூடாகி பத்திக்கிச்சு வாணலி திகு திகுன்னு எரியுது. கடவுள் தான் தினம் தினம் காப்பத்தறார்.


புத்தகம் படிக்கறது ... சின்ன வயசுலயே குண்டு குண்டு புத்தகம் அட பாட புத்தகம் இல்லங்க. நாவல் படிச்சு கண்ணாடி போடற நிலைமை . சாப்பாடு படிக்கும்போது புக் வேணும். சமைக்கும்போதும் கூடவே புக்கோ நியுஸ் பேப்பரோ எதாச்சும் இருக்கும் கையில. சின்னதுல அம்மா சொல்லுவாங்க காய் நறுக்கிட்டு இருக்கேன் போ போய் குக்கர கொறச்சி வச்சுட்டு வான்னு நான் புத்தக சுவாரசியத்துல போய் அணைச்சுட்டு வந்துருவேன். அப்பறம் அவங்க
என்ன ஒரு மாதிரி சத்தமே இல்லயேன்னு போனா தெரியும் ...அப்பா சொன்னத சரியா செஞ்சாளான்னு நீதான் பின்னாடி போய் பாக்கனும் அப்படிம்பாங்க. ஒதடு தேயறதுக்கு உள்ளங்கால் தேயலாம்பாங்க அம்மா. வீட்டுக்கு வந்து புக் போடுவாங்களே வாரப்பத்திரிக்கை அது எல்லாம் சீக்கரம் முடிச்சுட்டு அண்ணன் எப்ப வருவாங்க ன்னு ஒக்காந்து இருக்கற்து. பக்கத்து வீட்டுல வாங்கற வண்ணத்திரை கூட படிக்கறது..லீவுக்கு சித்தி ஊருக்கு போனா ரெண்டு ஸ்டூல் போட்டு பரண் மேல ஏறி பழைய பாக்கெட் நாவல் எல்லாம் எடுத்து படிக்கறது.
இப்பவும் தான் தில்லி தமிழ் சங்கத்துல இருந்து நாவல் கட்டுரைத் தொகுப்புன்னு பொழுது போகுது. சேர்ந்த புதிது ஒவ்வொரு முறையும் விகடன் கல்கி ஆண்டுவிழா மலர் இதெல்லாம் கூட எடுத்து வந்து படிச்சேன் .
பழய அமுதசுரபி , வாரப்பத்திரிக்கையில் கிழிச்சு பைண்ட் பண்ண நாவல் கள் , பழைய பூந்தளிர் , காமிக்ஸ் எதுவுமே இப்பவும் திகட்டாம திருப்ப படிப்பேன். இப்படி எல்லாம் விழுந்து விழுந்து பாடத்தை படிச்சு இருந்தா ...ஹ்ம் ...எதச்செய்யணுமோ அதத்தவிர மத்ததெல்லாம் செய்யறதே பழக்கமாகிப் போச்சு.

யார்கிட்ட குடுக்கறது தயவுசெய்து திட்டாதீங்கப்பா ...இந்த கடவுள் பத்தி எழுதிட்டு இத்தன கார்டு எழுதிப்போடுங்கன்னு சொல்லி மத்தவங்கள மாட்டி விடறமாதிரி தலைப்பா போச்சு.


பொன்ஸ்
வடுவூர் குமார்
ஒப்பாரி
சென்ஷி
அன்புத்தோழி

March 21, 2007

வித்தியாசமாய் செய்

வித்தியாசமா எதையாச்சும் செய்யணும் அப்படிங்கறது ஒரு
விதமான நோயா இருக்குமோ? தெரியல. ஆனா எப்போதும் அப்படித்தான் எனக்குத் தோணுது. டீச்சர் வேலைக்குப்
போனா நல்லதுன்னு பேசிட்டு இருந்த தோழிகளுக்கு நடுவில்
நான் மட்டும் ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டு வியாபாரத்துல பெரிசாகனும்ன்னு பேசிட்டு இருந்தேன். சில பல காரணத்தால
அது முடியாமப் போச்சு.


கரஸ்பாண்டஸ் கோர்ஸ் எடுத்துச் சும்மா எதையாச்சும் படிக்கலாம்ன்னா அங்கயும் நம்ம வித்தியாசமாய் நோய் வந்து
விளம்பரத்துறை பத்திப் படிக்கற அளவுக்கு முத்திப் போய் இருந்தது. ஆனா இது சில சமயம் உதவியா இருக்கு.

என் பொண்ணுக்கு ஓவியப்போட்டிகளில் எப்போதும் பரிசு கிடைத்து விடும். காரணம் நாங்க எடுத்துக்கிற வித்தியாசமான
தலைப்புகள் தான். சின்னப்பிள்ளைங்க தானே எதை வேணாலும்
வரைங்கன்னு சொன்னா கூட அதுக்குன்னு நாங்க சில தலைப்புகளை யோசித்து வச்சுருப்போம்.7 வயதுக்குள் தலைப்பு கொடுக்கப்படுவதில்லை குழந்தைகளுக்கு . மற்ற தோழிகளிடமும் சொல்லுவேன். போட்டி இருக்கும் இடத்தில் வித்தியாசமாக எதையாவது செய்யாவிட்டால் வெற்றிப் பெறுவது எப்படின்னு..ஆனாலும் கேட்கமாட்டாங்க. பிள்ளைங்கள அவங்க போக்குல விடனும் அப்படின்னு சொல்லுவாங்க .


நான் சொல்லுவேன் . குழந்தைங்க தன் போக்குல வீட்டில் இருக்கட்டும் வெளியே மற்றவர்களுக்கு வித்தியாசப்படுத்திக்
காட்டினால் தான் தனியாகத் தெரிய முடியும் என்று. அதுமட்டுமில்லாமல் வித்தியாசமாய் சிந்திப்பது அவர்களுக்கு மேலும் மேலும் விஷயங்களை விளையாட்டாய் புகுத்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும் .

உதாரணத்திற்கு இந்த ஓவியப்போட்டி பற்றி சொல்கிறேனே.
அவளுக்கு சுற்றுப்புறத் தூய்மைப் பற்றி உணர்த்த ஒரு தலைப்பு கொடுத்தேன். சேவ் எர்த் . சிறு கலந்துரையாடலில் கிடைத்தது இந்த ஓவியத்தின் வடிவம் . ஒரு பெண் வரைந்து அவள் கையில் ஒரு பை. இங்கே சஃபல் என்பது காய்கறிகளை விற்கும் அங்காடி . அந்த கடையில் காய்கறி வாங்க வருபவர்கள் அப்போதெல்லாம் பாலிதீன் பைகளில் வாங்கிச் செல்வார்கள். இப்போது பாலிதீன் அவர்களே வைத்துக் கொள்வதில்லை துணிப் பை தான் கண்டிப்பாக கொண்டு செல்லவேண்டும்.


எனவே , சஃபல் கடை வரைந்து பழங்கள் வரைந்து அப்பெண் கையில் இருக்கும் பையில் மை க்ளாத் பேக் என்று எழுதிவிட்டாள் . வீட்டிலிருந்து பை கொண்டு வாருங்கள் , பாலிதீன் உபயோக்கத்தைக் குறையுங்கள் என்பது கருத்து.


மற்றொரு முறை காந்தியின் கனவுகளும் நடைமுறை வாழ்க்கையும் என்பதை கருத்தாக்கி , நடுவில் காந்தியும் மேலே அவர் கண்ட கனவாக அமைதிப்புறாவும் , ராட்டையும் [சுதேசி]
கீழே துப்பாக்கியும் டெரரிஸ்டும் , கோலாவும் ப்ராண்டட் ஐட்டங்களும் வரைந்தோம். பரிசு அவளுக்குத்தான்
என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

இன்னொரு முறை நகரத்தின் பளபளப்பும் மறுபுறம் கிராமத்தின் அவலநிலையும் வரைந்து வறுமை என்பதே மிகப்பெரும் வன்முறை என்ற தலைப்பு. அவளுக்கும் இது போன்ற பெரியோர்களின் எழுத்துக்களை அறிமுக்கப்படுத்தியதாக
அமையும் .

மகளின் வகுப்பில் எல்லாரும் ஃப்ரெஞ்ச் எடுத்து படிக்கிறார்கள் இந்த வருடம் . நாங்கள் தான் வித்தியாசமாய் செய் என்னும் தாரக மந்திரம்
வைத்திருக்கிறோமே ஜெர்மன் எடுத்திருக்கிறோம். இந்த முடிவு சரியானதா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

March 20, 2007

மணாலி தொடர்ச்சி ஹாடிம்பா

மறு நாள் போனது ஹாடிம்பா தேவி கோயில் இது பார்க்கறதுக்கு ரோஜால வருமே மதுபாலா கூட கும்பிடப்போவாங்களே காஷ்மீர் கோவில் அதுபோலவே இருந்தது. எங்கபார்த்தாலும் வண்டிகளில் ஹாடிம்பா தேவி பேர் போட்டு இருந்தது. நம்ம ஊரில் மாசாணிஅம்மன் துணை என்று
போட்டிருப்பது போல.ஹாடிம்பா என்பது இடும்பன் தங்கை இடும்பி தான். பீமன் மனைவி. இந்தக்கோயில் 1553 ல் கட்டப்பட்டதாம். மகாபாரதத்தில்
மெழுகு அரண்மனையிலிருந்து தப்பி ஹாடிம்பர் ராக்ஷசர்களின் இடத்தில் பாண்டவர்கள் இருக்கும்போது பீமன் ஹாடிம்பாவை காதலித்து மணக்கிறார். . ஹாடிம்பா தன் மக்களிடன் அன்பும் கருணையும் மிக்கவளாம். கடோத்கஜன் அவர்கள் மகன் .மகனிடம் நாட்டை ஒப்படைத்து துங்ஹிரி வனத்தில் சென்று தவம் செய்ததால் துங்கிரிவனக் கோயில் என்றும் ஹாடிம்பா கோயில் என்றும் சொல்கிறார்கள். குலு நாட்டு அரச குடும்பத்தின் முக்கிய கடவுளாம். மே மாதம் நடுவில் மூன்று நாள் திருவிழா வருமாம்.கோயில் வாசலில் புசுபுசு வென்றிருந்த யாக் மேல் உட்கார்ந்து மகளை ஒரு புகைப்படம் எடுத்தோம். சிகப்பு கலரில் இருந்த சேலை போன்ற ஒன்றை சுற்றி சுற்றி ஒரு பின் போட்டு வெள்ளி கலரில் இருந்த நகைகளை போட்டு பின்னால் ஒரு கூடைய மாட்டிவிடறதுக்கு பத்து ரூபாய். மலையாளுங்க போல ஒரு புகைப்படம் நானும் எடுத்துக்கிட்டேன்.
-----
மனாலி யில் இருந்து 3 கிமீ நடைபயணமாக keylong கிராமத்தின் வழியில் ராமர் கோயில் ஒன்றும் வசிஷ்டர் கோயில் ஒன்றும் போனோம். hot sulper வெந்நீர் ஊற்று இருக்கும் இடம் மக்கள் எங்கெங்கு இருந்தோ துவைக்க துணி மூட்டைகளை எடுத்துக்கொண்டும் குளிப்பாட்ட சிறு குழந்தைகளை அழைத்துக் கொண்டும் வருகின்றனர். வெதுவெதுப்பாக வந்தது. கோயிலுக்குள் பெண்கள் , ஆண்கள் தனித்தனியாக குளிக்க தடுப்புகள் இருந்தது.இங்கு நிறைய துணிக்கடைகள் இருந்தன. அங்கே தாஸ்மினா சால்கள் என்று ஒன்று விற்கப்படுகிறது. இதயநோயுடையவர்கள்
அதை உபயோகித்தால் நல்லதாம் . வெளிநாட்டினர் மற்றும் பெரும்பணக்காரர்கள் வாங்குவார்களாம். ஒரு ஷாலின் விலை 2 அல்லது 3 ஆயிரம் ஆகுமாம். அது ஒரு வகை ஆட்டிடம் இருந்து செய்யப்படுமாம்.
This wool is taken from the under belly of the Pashmina goat existing in Tibet. The shawls woven from Pashmina range from a fine to super- fine quality. They are pure and light, yet tremendously warm. Owing to the high cost of labor involved in the sorting of fine Pashmina fiber they are pretty expensive but trendy.ஆட்டை துன்புறுத்தக்கூடாது என தடை செய்யப்பட்டதால் இறந்த ஆட்டிடம் இருந்தோ எப்படியோ எடுக்கப்பட்டு ஒரு ரஜாய் போன்ற போர்வையாக தாயாரித்து வைத்திருக்கும் அதனை 5 வருடம் போர்வையாக நாம் உபயோகித்தால் அது நம் சூட்டில் நல்ல படி ஆகுமாம் அப்புறம் அதை திருப்பி வாங்கிக்கொள்வானாம். அதற்கு வருடாவருடம் பல பரிசுகள் அனுப்பிவைப்பானாம். பலர் பணம் கட்டி இது ஒரு பிசினஸாக
வாங்கி சென்றதாக புகைப்படம் காட்டினான். என்ன கதையோ நம்பவே முடியவில்லை.திபெத்தியன் புத்தர் கோயில் ஒன்று சென்றோம். தங்க கலரில்
பெரிய புத்தர்...அமைதியான அந்த சூழ்நிலை அருமையாக
இருந்தது. அங்கிருந்த ஒரு இளம் துறவி பயிற்சிக்காக வந்திருந்தாராம் . பிரிந்து செல்லும் முன் அங்கிருக்கும் மற்றொரு துறவி நண்பனுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத
உதவி கேட்டார்.. எழுதிக் கொடுத்தோம். நான் உன்னை விட்டு
பிரிய மனமில்லாமல் செல்கிறேன் . என் மனதில் நீ எப்போதும்
நிறைந்திருப்பாய் என்று அவர் ஹிந்தியில் சொல்ல ஆங்கிலத்தில் எழுதித்தந்தோம்.அர்ஜுனன் குகை என்ற ஒரு இடம் . மனாலியில் இருந்து 5 கிமீ பிரினி கிராமத்திற்கருகில்{pirini village} இவ்விடம்
இருக்கிறது. இங்கு அர்ஜுனன் பாசுபதா அஸ்திரத்திற்காக இந்திரனை நோக்கி தவமிருந்ததாக சொல்லப்படுகிறது.


நாங்கள் சென்றபோது ரொதன்பாஸ் [51 கிமீ] மூடிவிட்டது பனியால். அங்கே வேத வியாஸர் தவம் செய்த இடமும் பியாஸ் நதியின் ஆரம்பம் இருப்பதாக அறிந்தோம்.


மணாலி இந்தியாவின் சுவிட்சர்லாந்து. இம்மலையின் தொடர்ச்சியில் எத்தனை எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ராணிகேத் , கார்பெட் வைல்ட் லைப் சேன்ச்சுரி
என்று கணக்கிலடங்காதது. நான் முழுதும் பார்த்துவிட்டேன் என்று எவரும் குறிப்பிடமுடியாத அளவு இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் நிறைந்தது. இத்தளத்துக்கு சென்று தங்குமிடம் மற்றும் விவரங்கள் அறிந்து கொள்ளுங்கள். பல விஷயங்கள் இன்று வலை மூலமே பதிவு செய்துகொள்ளும் வசதியோடு இருக்கிறது. நாங்கள் உபயோகித்துக்கொண்ட தளங்கள் சில

himachal tourisam office
NEW DELHI
CHANDERLOK BUILDING36, JANPATH, NEW DELHI-110001.Tel: (011) 23325320, 23324764 Fax: (011) 23731072E-mail: hptdcdelhi@hub.nic.in

http://himachaltourism.nic.in/kulu.htm

தங்குமிடபதிவுக்குonline booking


பேருந்து வசதிக்கு

முந்தையபதிவு மணாலி ஷிவ் லிங்க் பற்றியது இங்கே

March 19, 2007

மதுரைத் தமிழில் நகைச்சுவை

முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் "இலக்கியமும் நகைச்சுவையும் " உரை கேட்டு வாய்விட்டு சிரித்து சனிக்கிழமை மாலையை ஒரு சந்தோஷ மாலையாக்கிக் கொண்டோம். சரளமாக துணுக்குத் தோரணங்களை உரையெங்கும் அள்ளித் தெளித்தார். நகைச்சுவை மன்றங்களைத் தொடர்ந்து பல இடங்களில் துவக்கி வைத்து வருவதாயும் நீங்களும் அப்படி செய்யுங்களேன் என்றார். நல்ல விஷயம் தான்.மதுரைத் தூங்கா நகரம் என்று ஏன் பெயர்வந்ததாம்.. விடியவிடிய
பட்டிமன்றங்கள் நடக்குமாம். பத்துமணிக்கு ஆரம்பிப்பதால் பத்துமன்றம் என்றார். நகைச்சுவைகளில் அறுவை , கடி ,சீசன்
அனுபவ நகைச்சுவைகளை பட்டியலிட்டு உதாரணத்துடன் ஆரம்பித்தார். மேடையைத் தவிர மற்ற இடங்களில் இருளை வழக்கம்போல செய்த சங்கத்துக்கு உடனேயே ஒரு வேண்டுகோள் விடுத்தார். மக்கள் சிரிக்கிறார்களா பல்லை க்
கடித்துக் கொண்டிருக்கிரார்களா என்று எனக்கு தெரியவேண்டாமா? உடனே ஒளியூட்டப்பட்டது அரங்கம்.கஷ்டத்தில் கூட ஒருத்தருக்கு வந்த நகைச்சுவையைப் பாருங்களேன். ஒருத்தர் பனியான நகரத்தில் நாயால் துரத்தப்பட்டு கீழே விழுந்தாராம் நாயை அடிக்கக் கல்லைத்தேட அது பனியால் தரையோடு ஒட்டிக்கொண்டு வரவில்லையாம்.
"என்னடா ஊரு இது தலைகீழா இருக்குது. கட்டிவைக்கவேண்டிய நாயை அவிழ்த்துவிட்டு கல்லைக் கட்டி வைத்திருக்கிறார்களே." என்றாராம்.எல்லோரும் சிரிப்பை மறந்து அழுகைக்கு அடிமையாகி விட்டார்கள் மெகாசீரியலில் மூழ்கி இருக்கிறார்கள் . சைக்கிள் கத்துக்க ஆரம்பிக்கும் போது இறங்கத் தெரியாமால் போஸ்ட் கம்பி எதும் கிடைக்கும் வரை சுற்றுவது போல் இயக்குனர்கள் முடிக்கத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றார்.இலக்கியத்தில் இருந்து சில நகைச்சுவைகள். சிலேடை , வஞ்சப்புகழ்ச்சி , உயர்வு நவிற்சி வகைக்கு உதாரணங்களுடன் விளக்கினார் . ஒளவை தொண்டைமானின் ஆயுதக்கிடங்குக்கு போய் "அதியமானிடம் எல்லாம் முனைமழுங்கிய கத்தி தான் இருக்கிறது நீ எத்தனை பளபளப்பாய் வைத்திருக்கிறாய் ..... ஆனால் அதியமான் அடிக்கடி போருக்கு போவான்" என்று வஞ்சப்புகழ்ச்சியில் உண்மையை உணர்த்தியதை குறிப்பிட்டார்.ஒருமுறை அரசர் ஒருவர் வேம்பத்தூர் பிச்சுவயர் என்பவரை மன்றத்தில் "வேம்புக்கு இங்கு இடமில்லை" என்று சொன்னாராம். அந்தப் புலவரும் உடனே வேம்பு அரசோடு தான் இருக்கும் என்றாராம் . வேப்பமரம் அரசமரம் என்ற சிலேடையில்.
ஒரு அரசர் கடைமடையில் பிறந்த புலவரைப் பார்த்து வாருங்கள் "கடைமடையாரே" என்று கடைசியாக வந்த மடையரே என்று பொருள் படும்படி கூற அவர் மன்றத்தலைவரே எனப்பொருள் படும்படியும் மடையர்களுக்கு தலைவரே எனும்படியும் " மடத்தலைவரே" என்று கூறினாராம்.பரத்தை வீட்டுக்கு போன கணவனை வாசலில் வைத்து மனைவி எங்கே போனாய் எனக்கேட்காமல் ...நேற்றுப் போனவீட்டில் பாடினாயோ என்று கேட்டாளாம். ஆம் என்றானாம். காட்டுல பேய் அழுகுது என்றாள் அன்னை நரி ஊளையிடுகிறது என்று சொன்னாள் தோழி 'நான் நீ என்றேன் போ , என்று சொன்னாளாம்.வாரியார் பேச்சில் வரும் நகைச்சுவைகளைக் குறிப்பிட்டு சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அவருடைய பேச்சுக்களை சிறுவயதில் கேட்டிருந்தாலும் நினைவு இல்லை. காதல் கடவுளைக் காமன் என்று ஏன் சொல்லுகிறோமாம் அவர் common god என்பதாலாம் [கிரேக்கமதத்தில் கூட அம்புடன் இருக்கும்] காதல் கடவுள் போல் . குழந்தையைக் கூப்பிட்டு முருகனின் தந்தை யார் எனக்கேட்டால் சிவனாக நடித்த சிவாஜியைக் குறிப்பிட்டதாம் .சிவா ஜி அதாவது ஹிந்தி மரியாதை விகிதியான ஜி எனவே குழந்தை சரியான விடை தான் தந்தது என்றாராம் வாரியார்.
நடுவில் வெண்பா பாடுவதுபற்றியும் மற்றும் இடையிடையே சில கேள்விகள் கேட்டார் . பயப்படாதீர்கள் " வந்திருக்கக்கூடாதோ" என நினைக்க வைக்கமாட்டேன்.. கேள்விக்கு சிறு இடைவெளியில்
நானே விடையும் சொல்லிவிடுவேன். ஆனால் வெண்பா மற்றும்
இலக்கணங்கள் எல்லாம் 8 வகுப்பில் படித்தது என்பதை மட்டும்
மறக்காதீர்கள் என்றார்.
காளமேகப் புலவரின் வசைபாடும் பாடல்களில் கூட நகைச்சுவை மிகுந்திருப்பதை சுட்டினார். சுருக்க வேண்டும் குடுமியை எனும் பாட்டைக் கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்பின் மகத்துவத்தை சிரித்துக் கொண்டு இருப்பதால் தான் மனிதன் என திருக்குறள் சொல்கிறது. வடிவேலு இன்று நகைச்சுவையில் கொடிகட்டி பறக்கும் காரணம் மதுரைத் தமிழ் என்றார் .மதுரையில் இன்னும் வழக்கத்தில் பல பழய தமிழ் சொற்கள் இருப்பதைக் குறிப்பிட்டு இன்று தமிழில் குழந்தைகளுக்கு தமிழில் வைப்பது அரிகி வருவதைக் கவலையாகக் குறிப்பிட்டார்.


ஒரு மதுரைக்காரர் சென்னை சென்றாராம் . பஸ்ஸில் மீதி சில்லறைக்கு "அண்ணே பையத் தாங்க" என்றாராம் .மதுரைக்காரர் பேசிய தமிழைப் புரியாமல் நடத்துனர் பயந்து போனாராம். என்னடா 50 பைசா சில்லறைக்கு இந்த ஆள் 500 ரு பை யைக்கேக்கறானே என்று.
மதுரைக்காரர் சொன்னது "பைய தாங்க " என்றால் மெதுவாகத் தாங்க என்று அர்த்தம்.முடிவில் அவர் எழுதிய புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தார் .உடனடியாக பெட்டி காலியாகியது.
எங்களுக்கு கிடைத்தது பேசும் கலை எனும் அவருடைய புத்தகம் . அதில் அவருடைய கையொப்பம் வாங்கி வந்தோம். தமிழை வளர்க்கும் இன்னொரு வழி நகைச்சுவை என்று புது வழி கண்டிருக்கிறார் .

March 16, 2007

ஷிவ் லிங்க் - மணாலி

நானித்தால் சுற்றிக்கொண்டிருக்கும் போதே முடிவானது அடுத்த
முறை மணாலி என்று, பனிமலையில் விடுமுறை . இம்முறை
தில்லியில் இருக்கும் ஹிமாச்சல் டூரிஸம் அலுவலகத்திலிருந்து கிளம்பும் பஸ்ஸில் பதிவு செய்து கொண்டோம். எப்போதும் திசம்பர் கிருஸ்த்மஸ் விடுமுறையில் இப்படி கிளம்புவது என்பதால் குளிருக்கு தகுந்த ஆடைகளுடன் தயாராக இருந்தோம். அந்த அலுவலகத்தில் இருந்தே ஹோட்டல் பியாஸ் ல் அறையும் எடுத்துக் கொண்டோம்.இந்த தங்குமிடம் நடுத்தரமானது . அனைத்து அறைகளும் பியாஸ் நதியை பார்க்கும் வசதியுடன் இருக்கிறது.

எத்தனை குளிருக்கான ஆடை அணிந்து இருந்தும் குளிர் மூடிய பஸ்ஸுக்குள் நடுங்க வைத்தது. ஷூக்குள் காலுறை தண்ணீரில் நனைந்தது போல் உணர்ந்தோம். இரவு முழுதும் பயணம். வளைவுகளில் அவர் திரும்பும் ஒவ்வொரு கணமும் பயத்தில் இருந்தேன். மணாலி சேர்ந்ததும் அறைக்கு போகும் முன் அங்கிருக்கும் அரசாங்க சுற்றுலா மையத்தில் பேசி வாடகைக்கு
ஒரு வண்டி ஏற்பாடு செய்துகொண்டோம். அறையில் சாமான்களை வைத்துவிட்டு குளித்து கிளம்பினோம்.

மணாலியில் தங்கிக்கொண்டு எந்த எந்த மாதத்தில் எங்குவரை
பனிப்பொழிவு இருக்கிறதோ அங்கே இந்த ஜீப்களில் சென்று பார்த்துவரவேண்டும். நாங்கள் போனபோது பனி குலாப்
என்னும் இடம் வரை இருந்தது. அங்கே செல்லும் பாதையில் பனிப் பொழிவு இருந்ததால் வண்டியை ஏற்கனவே வண்டி சென்ற தடத்தில் கவனமாக ஓட்டிச்செல்ல வேண்டி இருந்தது . கடவுளே என்று நான் புலம்புவதை கண்ட வண்டியோட்டி நாங்கள் தினம் தினம் போவது தானே இந்தப் பாதை ஏன் பயப்படுகிறீர்கள் என்றார்.


பாதையில் வாடகைக்கு கோட்டும் பனியில் உபயோகிக்கும் உயரமான ஷூக்களும் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.
அங்கே நாங்கள் சென்றபோது குறைவான கூட்டம் தான் இருந்தது . ஸ்கேட்டிங் சாமான்களை வாடகைக்கு தருபவர்
கூட்டம் குறைவாக இருக்கும் போது தான் நன்றாக செய்யமுடியும் அப்புறம் என்று யோசிக்காதீர்கள் என்றதை
ஒப்புக்கொண்டது நல்லதாயிற்று. முதலில் மகள் , முயற்சித்தாள் நன்றாகவே வந்தது ஆனால் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தாள்.
அடுத்தது நான். அவர் சொன்னபடி உடனேயே செய்து காட்டி குருவிடம் பாராட்டும் வாங்கிக்கொண்டேன். மூன்றுமுறை முழுமையான வட்டம் .

பனி மனிதன் செய்தோம். கனவில் மிதப்பதான உணர்வு . இத்தனை வெள்ளைவெளேர் என்ற இடம் என்னமோ மேகத்தில்
இருப்பதாக உணர்ந்தோம். பெரிய டையர் ட்யுப்பில் உட்காரவைத்து கீழே தள்ளிவிடும் விளையாட்டுக்கு பணம் கொடுத்து சருக்கினோம். பின்னால் பிளாஸ்டிக் கயிறு கொண்டு கட்டி இருந்தனர். மரஸெலெட்ஜில் சென்றோம் . ஏறும்போது சரி இறங்கும் போது அவரும் அதன் பின் நின்று கொள்கிறார் அதுவே ஒரு ஜாய் ரைட் தான். திரில்.

அடுத்த நாள் ஷோலங் பள்ளத்தாக்கில்[Solang Valley] சிவ்லிங்க் எனும் இடம் சென்றோம். அங்கே செல்ல பாதை சேரும் சகதியுமாக .. குதிரைக்காரர்களின் தொந்திரவு வேறு. சரி என்று குதிரையில் சென்றோம் . எங்கே குதிரையிலிருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயம் எனக்கு. பின்னால் குதிரையில் வந்த 5 வயது மகள் ..அம்மா பயப்படாதே என்றாள். கீழே உள்ள படம் சிவ்லிங் போகும் பாதையில் குதிரையில் பயணம் .அங்கே போனதும் கண்ட காட்சி இருக்கிறதே அருமை.


மலை மேலே இருந்து ஒரு மெல்லிய அருவி விழுந்து கொண்டிருக்கிறது.. விழ விழ வே கீழே 50 அடி உயரத்திற்கு பனிமலையாக குவிகிறது . அது லிங்கவடிவமாக இருப்பதால் தான் சிவ் லிங்க் என்று வணங்குகிறார்கள். இது குளிர்காலத்தில் தான் இருக்கும் . இந்தப் படம் எடுக்கும் போது சாயங்காலம் ஆகிவிட்டது எனவே குளிரில் தண்ணீர் கொட்டுவது நின்று விட்டது.

அருகில் செல்ல ஒரு பனியால் மூடிய ஆற்றின் மேல் செல்ல வேண்டும். குச்சி ஒன்றை 5 ரூ க்கு வாடகைக்கு தருகிறார்கள். அப்படியும் தடுமாறி விழுந்து கொண்டே இருந்தோம் .பனியில் ஸ்கேட்டிங் செய்தது போல் தான்.
அருகே சென்றதும் ஒரு சிறுகுடிலில் சாமியார் ஒருத்தர் இருந்தார் . படிகளில் ஏற ஷூவைக் கழட்ட வேண்டும் . ஏதோ தைரியத்தில் நானும் தம்பியும் ஏறிவிட்டோம். பாதி படிகளிலேயே கால் உணர்ச்சியற்று போனதாக உணர்ந்தோம்.
இருந்தும் படிகளில் ஏறி வணங்கிவிட்டுத் தான் இறங்கினோம்.

இறங்கியதும் சுடச்சுட குடிலில் சாமியார் பெரிய வானலியில்
பாயசம் கிளறிக்கொண்டிருந்தார் அதனைக் குடிக்கத்தந்தார்கள்.
கால் உணர்ச்சியற்றுப் போனதற்கு இன்னொரு வயதானவர் அருகில் கிடந்த பனியை உடைத்து கெட்டிலில் போட்டு சுட வைத்து வெந்நீரை கொத்தனாரின் கலவைப்பாத்திரம் போன்ற ஒன்றில் ஊற்றி காலை அதில் வைக்கும்படி சொல்லி
நன்றாக பாதபூஜை செய்வது போல் செய்ய கால் பழய தெம்புக்கு வந்தது. அதை ஒரு சேவையாக அவர் செய்கிறாராம்.
ம்..எத்தகைய மனிதர்.

சிறு குழந்தைகளை முதுகில் கட்டித் தூக்கிவர என்று தனி ஆட்கள் இருக்கிறார்கள். லாவகமாக அவர்கள் முதுகில் கட்டிக் கொள்வது அழகு. குழந்தை அழாமல் இருக்க வேண்டும் .

அந்த சிவலிங்கம் போன்ற அமைப்பு மார்ச் ஏப்ரல் மாதங்களில்
நடுவில் மேலே இருந்து விழும் தண்ணீரால் இரண்டாக பிரியுமாம். அப்போது அதை சிவன் பார்வதியாக வழிபடுவார்களாம்.

பாரா கிளைடிங் , ட்ரெக்கிங் , ஸ்கேட்டிங் என்று எத்தனையோ வகை பொழுதுபோக்குகள் . இதில் நாங்கள் சென்ற வாரம் அங்கே விண்டர் கார்னிவல் வேறு. ஊருக்கு நடுவில் இருந்த சதுக்கத்தில்
ஆடலும் பாடலும் குளிரை மறந்து ரசித்தோம். ஆனால் சாயங்காலம் ஆனால் குளிர் ஆட்டுகிறது . காரணம் காற்று.
கடைகளில் வைத்திருந்த புகைப்படங்களில் கடைகளின்
வெளியே 2 அடிக்கு பனி விழுந்திருக்கும் காட்சி. அப்படி இருந்தால் நாம் சுத்திப் பார்ப்பது எப்படி . இப்போது கொஞ்ச தூரம் போய் பனியைப் பார்த்துவருவது தான் சரி நமக்கு என்று
நினைத்துக் கொண்டோம்.

எங்கே போனாலும் நம்ம சாப்பாடு கிடைக்கும் என்றால் சந்தோஷம் தானே. அங்கே மெட்ராஸ் கபே என்ற ஒரு கடை இருப்பதாக அறிந்து தேடி கண்டு கொண்டோம். தமிழ் நாட்டில்
இருந்து வந்து 40 வருடங்களாகி விட்டதாம். சேலம் என்று சொன்னதாக நியாபகம். வரவேற்று உபசரித்த விதமும் சாம்பார் வடையும் , முழுச் சாப்பாடுமாக எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்கள்.

திபெத்திய கோவில் , ஹாடிம்பா தேவி கோயில் ,வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி அடுத்த பதிவு.

முதல் பரிசு

முதல் பரிசு
------------------

முதன் முதலாய் துணிக்கடையில்,
ஆண்கள் பகுதிக்கு.
அளவு என்ன தெரியாது.
பிடித்த நிறம் என்ன தெரியாது.
முழுக்கை பிடிக்குமா அரைக்கையா ?
கையிலிருப்பதற்கு தேர்வானது அது.
அடர் நீலத்தில் ,
கட்டம் கட்டமாய்,
முழுக்கை வைத்து,
கொஞ்சம் பெரியதாகவே,
என்னவோ,
பிடித்திருப்பதாய் சொன்னாய்.

-------------------------------------------------------------

தேடல்
----------
ரயில் நிலையங்களில்
எதிர் படும் முகங்களில்.
சின்னத்திரையில்,
கேண்டிட் கேமிரா
காட்டும் முகங்களில்.
"நல்லாருக்கு பாக்கலாம்"
என நகரும் முகங்களில்.
சரியான வழி
தொலைத்ததை தொலைத்த
இடத்தில் தேடுவதாம் .
நான் தேடும் வழி தவறானதோ.

March 15, 2007

மொகல் தோட்டம் மூலிகைத் தோட்டம்

என்னுடைய ஒரு பதிவில் நம்ம பதிவர் சகோதரர் ஒருவர் அனானியாக வந்து போட்ட பின்னூட்டம் -- சும்மா இருந்தால் அப்படியே குடும்பத்தோடு மொகல் கார்டன் பக்கம் வரவும். நான் வைத்திருக்கும் க்ரோட்டண்ஸ் செடிகளை பார்வை இடலாம். செக்கியூரிட்டியிடம் இந்த பின்னூட்டத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து காட்டவும்.( என்னோட கையொப்பம் வேறு போட்டிருக்கேன் , சத்தியமா செக்கியூரிட்டி நம்புவான்) இப்படி கலாமைப்போல எழுதி இருந்தார்.

பலவருடங்களாக மொகல் கார்டன் போக ஆசைப்பட்டு தட்டிக்கொண்டே இருந்தது. மொகல் கார்டன் வருடத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பொதுமக்களுக்கு திறந்து விடப்படும். இந்த பின்னூட்டம் வந்த நேரம் நாங்கள் நிஜமாகவே அங்கு போக திட்டம் போட்டுக் கொண்டிருந்தோம். மார்ச் மாதம் வரும் விருந்தினர்களை அங்கு அழைத்துப் போவதாக திட்டமிட்டோம்.
கையில் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இருக்காது என்பதால் கேமரா எடுத்துச் செல்லவில்லை.நார்த் அவென்யு அருகில் இருந்த செக்யூரிடி போலிஸிடம் மொகல் கார்டன் எப்படி செல்லவேண்டும் என்று கேட்டோம். சிரித்தபடியே ஒரு பேப்பரில் அனுமதி சீட்டு எழுதி "அங்கே தான் அனுப்புகிறோம் உங்களை" என்றபடி தடுப்புகளை அகற்றி உள்ளே அனுமதித்தார்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வரிசைகள் அமைத்து பாதுகாப்பு சோதனைகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் .சந்தேகத்தோடே கையில் கொண்டு சென்றிருந்த தண்ணீர் பாட்டிலை நினைத்தது போலவே வாங்கி பக்கத்தில் இருந்த சுவற்றின் மேல் வைத்திருக்கிறோம் வரும்போது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் . உள்ளேயே மினரல் கேன் தண்ணீர் கிடைக்கிறது என்று சொன்னார்கள். உள்ளே நுழைவாசலிலேயே பெரிய பெரிய மினரல் கேன்கள் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தது.
தற்காலிகமாக பைபர் கழிப்பறைகள் வைக்கப்பட்டு பச்சை நிறத்துணிகள் கொண்டு தனிப்பிரிவு வேறு செய்திருந்தனர்.முதலில் வந்தது மூலிகைத் தோட்டம் . இது நம்ம ஊரு கலாம் புதிதாக ஏற்படுத்தியது . அன்று நல்ல வெயிலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் நன்றாக இருந்தது . மெல்லிய தென்றலில் மூலிகை மணம் வீசியது . மூலிகையின் அறிவியல் பெயருடன் அது எதற்காக உபயோகிக்கப் படுகிறது என்றும் எழுதிய பெயர்பலகைகள் இருந்தது. துளசி , கருந்துளசி என்று ஆரம்பித்து அஸ்வகந்தா , கற்றாழை , மிண்ட் வகையறாக்களுடன் பெரிய தோட்டம் விரிந்து இருந்தது .மகள் "நல்லாத்தான் வளத்துருக்கார் கலாம் " என்று சான்றிதழ் வழங்கினாள். இந்த மூலிகை வரிசைகளைப் பிரிக்கும் வகையில் மஞ்சளும் வெள்ளையுமான பூக்களின் வரிசைகள் கொண்டு கட்டம் கட்டி இருந்தார்கள் . கண்ணைப் பறித்தன மலர்கள். அடுத்ததாக கோழி வான்கோழி என்று ஆரம்பித்து முயல் , ஆமை வரை அங்கே வளர்க்கப்படுவை களின் கூண்டுகள் .மிகப் பெரிய ஒரு ஆலமரத்தின் கீழ் ஆலமரம் எப்படி எல்லாருக்கும் நிழல் கொடுக்கிறது , சிறு உயிருக்கும் உதவியாக இருக்கிறது என்பதானதும் சில கேள்விகளுமான திரு கலாம் எழுதிய அருமையான கவிதை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக இசை நீருற்று. முதலில் சிதார் மெலிதாக ஒலிக்க அதற்கேற்றார்ப் போல் ஆடிக்கொண்டிருந்தன நீருற்றுக்கள். காற்று பலமாக வீசியபோதெல்லாம் தண்ணீர் புகையைப் போல் காட்சியளித்தது. சாரல் எங்கள் மேலும் விழுந்தது. அங்கே அமர்ந்து பார்க்க நாற்காலிகளும் நிழலும் அமைத்து இருந்தார்கள்.(லவுன்ச்) .

அடுக்கடுக்கான ரோஜாக்கள்.. "கேக்குக்கு நடுவில் இருக்குமே அது மாதிரி இருக்கும்மா"..


ஷேடின்ங் செய்தது போல இதழின் இருவண்ணங்கள்.. "பெயிண்டிங் செய்த பூப்போல இருக்குதுல்ல"
முதலில் பெயிண்டிங் பூவைப் பார்த்ததால் இப்படி சொல்கிறோம். இதைப் பார்த்துத்தானே அவங்க பெயிண்டிங் செய்திருப்பார்கள்.
பெரிய பெரிய டாலியாக்கள். "இதை வைத்துக்கொள்ள ஒரு தலை இல்லை 4 தலை வேணும்மா" ..மகள்.வெல்வெட் போன்ற பூக்கள் பெரிய பெரிய ரோஜாக்கள் , அடிக்கும் ஆரஞ்சில் பூக்கள் என்று பார்க்கப்பார்க்க ஆசையாக இருந்தது.
ஒரு அரசியைப்போல நினைத்துக் கொண்டால் அரண்மனை தோட்டத்தில் உலவுவது போல இருக்கும். அங்கங்கே இருக்கும் சிமெண்ட் இருக்கைகள் அரண்மனை இருக்கைபோலத்தான் இருந்தது ஆனால் அமர்வதற்கு அனுமதி இல்லை. இப்படி ஒரு இடத்தில் அமைதியாக புத்தகம் படிக்க கிடைத்தால் என்று மனம் ஏங்கியது. ஆங்காங்கே இருக்கும் நீர் ஊற்றுக்களை சுத்தம் செய்தவண்ணம் இருப்பதால் தெளிந்த நீராக இருக்கிறது.

போன்சாய் மரங்கள்.. சிறு சிறு மொசம்பி ஆரஞ்சு பழங்களைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சிறுவர்கள் குழு ஒன்று பேசிய பேச்சுக்கள் ..
டேய் இது என்னடா 87 ல இருந்து இன்னமும் இப்படி சின்னதா இருக்கும் வளரவே இல்லையே...
இது நான் பிறந்த வருடம் 99 ..என் மரம்..அது உன்னோடது 98 சரியா..


வட்டவடிவ தோட்டம்...

காக்டெஸ் வகையறாக்கள்... கூட இருந்தது.
அங்கிருந்து வெளியேற மனமே இல்லை.
வெளியே வரும் போது மகள் இவ்வளவு இடம் ஒருவருக்கு மட்டுமா ? என்று கேட்டாள்.
அப்படி அந்த காலத்தில் செய்திருக்கிறார்கள்.ஆனால் இப்போது கலாம் அவர்கள் இருக்கும் அத்தனை அறைகளையும் தினமும் சுத்தம் செய்து பராமரிப்பது அதிக செலவு என்று சிலவற்றை உபயோகிப்பதைக் குறைக்க முயற்சி எடுத்திருப்பதாக கேள்விப்பட்டதை விளக்கினேன்.பெரிதானவுடன் நானும் ஒரு ஜனாதிபதியாக ஆகலாம் என நினைக்கிறேன் என்றாள் .. சரிதான் முயற்சி செய்யலாமே என்றோம்.

The Mughal gardens are open to the public in February-March every year. Visitors are allowed entry to the garden from 9.30 A.M. till 2.30 P.M. on all days except Mondays. The gardens may remain closed on other days also in case of a function in the Mughal gardens or during the visit of a VVIP during the said period. The dates are made known to the public through various media. The entry and exit into the gardens is regulated from Gate No. 35 of the President's Estate, which is located near the North Avenue, at the western end of the Church Road.
மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்

March 8, 2007

சுடரோட்டப் பாதையில் என் சிறு முயற்சி

சுடரை தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கிறேன் .
நான் எழுத வந்து கொஞ்ச நாளே ஆனதாலே இந்த சுடர் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்கெல்லாம் யார் குடுக்கப்போறான்னு தோன்றினாலும் உள்ளூர ஒரு ஆசை யாராச்சும் குடுக்கமாட்டாங்களான்னு ஒரு பக்கமா . செல்வநாயகி சுடர் பதிவை சும்மாவாச்சும் அப்படியே ஒரு சுத்து சுத்திட்டு படுக்கப் போலாம்ன்னு பார்த்தா முடிக்கும் போது வச்சிருந்தாங்க அந்த புஸ்வானத்தை . அப்படியே சினிமால வரமாதிரி பட்டாம்பூச்சியா பறக்குது சுத்திலும் , புஸ்வானம் பூப்பூவா சிதறுது......என் பெயர் தானா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சுப் பார்த்தேன்.

எதுக்கும் மயில் எதும் தூது வந்துருக்கா பார்த்தேன். ஆமா வந்துருக்கு. திருவிழாவை வேடிக்கப் பாக்கப்போன என்னை யானை மாலை போட்டு மேடை ஏத்தின மாதிரி ஒரு உணர்வு , இல்லன்னா இப்படியும் சொல்லலாம் , வேடிக்கை பார்த்திட்டு இருந்த வடிவேலுவ களத்தில் இறக்கிவிட்ட கணக்கா இருந்தது.
நம்மள நம்பி குடுத்துட்டாங்க நல்லபடியா முடிக்கனுமே தாயே பராசக்தி காப்பாத்தும்மான்னு கும்பிட்டு ஆரம்பிச்சிட்டேன் .

பாருங்க கேள்வி ஒன்னும் மூணும் பரவால்ல மத்தது கஷ்டம் தான் . பாக்கலாம் என்ன தேறுது என்கிட்ட இருந்து.

1. உங்க பள்ளிக்கூட வாழ்க்கை பத்தி சொல்லுங்க. வகுப்புல எப்பவும் பேசிக்கிட்டே இருப்பீங்களா? (அடிக்க வராதீங்க:))
என் பள்ளிக்கூட வாழ்க்கை ....ம்.. கொஞ்சம் அளப்பேன் . பயப்படறவங்க வேண்டுமானால் அடுத்த பதிலுக்கு நேராக ஓடிடுங்க . 3வது படிக்கும் முன்ன படிச்ச பள்ளிக்கூடம் பத்தி ஒரு பதிவு போட்டேன். அதுக்கப்புறம் நான் படிச்சது எல்லாம் கிறிஸ்டின் ஸ்கூல் . அந்த பள்ளிக்கூடத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவங்க ஜெர்மன் காரங்க அம்மான்னு சொல்லுவோம். வெள்ளைவெள்ளைன்னு இருப்பாங்க . சேர்ந்த புதிதில் எனக்கு கிராமத்தில் இருந்து சின்ன நகரத்துக்கு வந்த பயத்தில் யார்கிட்டயும் பேச மாட்டேன். பள்ளிக்கு தேவையான எல்லாத்தையும் நோட்டுல எழுதி அம்மாகிட்ட கேட்பாங்க டீச்சர் . நானா வாயத்திறந்து ஒன்னும் சொல்ல மாட்டேன்.


அப்புறம் கொஞ்ச கொஞ்சமா அடுத்த வருஷம் நாலாப்பும் அஞ்சாப்பும் படிக்கும் போது சும்மா வாயாடி மங்கம்மா ரேஞ்சுக்கு ஆகிட்டேன். டீச்சருக்கு புடிச்ச பொண்ணு நான். ஆனா படிப்பெல்லாம் நடுத்தரம் தான் . அங்க ஹாஸ்டல் பிள்ளைங்களுக்கு கொஞ்சம் பவர் ஜாஸ்தி அதனால அவங்க சொன்னது கேக்கணும்.


ஒருத்தி இருப்பா ஆறடிக்கு [அப்பவே அஞ்சாங்கிளாஸில் ]எல்லாரும் கண்ணமூடி இருங்க ன்னு சொல்லிட்டு கிரவுண்டில் விழற மாம்பழம் பொறுக்கி எடுத்து வர ரெண்டு பேர அனுப்பிட்டு அவ சாப்பிடுவா. இப்பவும் ஊருக்கு போனா உள்ள போய் அந்த வகுப்பு ,கிறுஸ்மஸ் க்கு டேன்ஸ் ஆடின மேடை {அதுக்கப்புறம் ஆடவே இல்லையே } மாமாரம் மகிழமரம் பாத்துட்டு வருவேன்.கிளாஸுக்கு நடுவில் எதாச்சும் வேலை வந்திரும் அஞ்சாங்கிளாஸ் டீச்சருக்கு, அவங்க தான் ஹெட்மிஸ்டர்ஸ் கூட அதுனால தான். அப்ப நாங்க டாக்டர் விளையாட்டு விளையாடுவோம். ஜாமிண்ட்ரி பாக்ஸ் தான் பெட்டி. காம்பஸ் தான் ஊசி ...சாக்பீஸ் தான் மருந்து . சபிமுனிசா என்னோட க்ளோஸ் பிரண்ட். பசங்க எல்லாம் பெஞ்ச் மேல ஏறி குதிப்பானுங்க.ஆறாம் கிளாஸ் வேற பள்ளிக்கூடம் ,பெண்கள் பள்ளி . அதுவும் கிறித்துவ பள்ளிதான். ஆங்கிலமே தெரியாம இருந்துட்டோம் அங்க போய் அப்பா பேர ஆங்கிலத்துல எழுத சொன்னா இண்ட்ர்வூயு ல முழிமுழின்னு முழிச்சேன்.வாய்ப்பாடு எழுத சொன்னா பாதில நிக்குது. ஜூலி டீச்சர் அப்பாகிட்ட சுமார் ரகம் தான் நான் பாத்துக்கரேன்னாங்க. அதே மாதிரி அந்த வருஷ ப் பாதிலயே வகுப்பில் இருக்கும் அஞ்சு குரூப்புல ஒரு குரூப்புக்கு நம்மள லீடர் ஆக்கிட்டாங்க. ஆறடிக்கு இருக்கற பிள்ளைங்கல்லாம் என்கிட்ட ஒப்பிச்சாகனும் . போர்ட்ல எழுதிபோட்டு டீச்சர்கணக்கா ஓட்டுவோம். சில பொண்ணுங்க நேரம் ஆச்சு விடு பனங்கிழங்கு வாங்கிட்டு வரேன் உப்பு நெல்லிக்கா வாங்கித்தரேன்னு சொல்லுவாங்க.லஞ்சம் ..நானா மூச். நமக்கு கடமை தான் முக்கியம்.நட்புன்னு வந்துட்டா எதுன்னாலும் செய்யறது ...அதுனால எல்லாரையும் வளைச்சுப்போட்டு வச்சுருந்தேன் .டீச்சர்லேர்ந்து பிள்ளைங்க வரைக்கும் .ஒருமுறை பதினோன்னாவது படிக்கும் போது ஒரு டீச்சரு கூட மட்டும் வம்பாகிடுச்சு. யாரோ அவங்க மேல சாக்பீஸ தூக்கிப்போட்டதுக்கு யாருன்னு சொன்னாத்தான் பாடம் எடுப்பேன்னாங்க டீச்சர். இல்லாட்டியும் புத்தகத்தை பார்த்து அப்படியே வாசிக்கறவங்க தான் அவங்க . நான் சொன்னேன் பயந்துக்கிட்டு யாருன்னு யாருமே சொல்லாட்டி எங்க பாடம் இல்ல போகும்ன்னு . அது எப்படி நீ அப்படி சொல்லலாம் மன்னிப்பு கேள் இல்லாட்டி நான் போறேன்னு போயிட்டாங்க வெளில. அதுக்கப்புறம் மூணு கிளாஸ் அவங்க வரவே இல்ல. ஏதோதோ காரணம் சொன்னாங்க வராம இருந்ததுக்கு. மன்னிப்பு கேட்டா வருவாங்களா இருக்கும் எல்லாரும் ப்ளீஸ் கேளுடி ன்னு கூட்டிட்டு போனாங்க ..நான் பாதி வழி போகும் போது மரத்தடில க்ளாஸ் எடுத்துட்டு இருந்த டீச்சர் அவங்களே வந்து சரி சரி வரேன் போங்கன்னாங்க..நான் மன்னிப்பு கேட்கறதுக்கு முன்னாடியே.


அப்புறம் 12 வது படிக்கும் போது பள்ளிக்கூட வரலாற்றிலேயே முதன் முறையா ஸ்டிரைக் செய்தோம் . கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டும் டீச்சரை ஹெட்மிஸ்ட்ரஸ் கேள்விகேட்கச் சொல்லி... ஒன்றுமில்லை மதிய உணவு வேளையில் டிபன் பாக்ஸ் திறக்காமல் வகுப்புக்கு வெளியில் தர்ணா. வெற்றியும் பெற்றோம் கடைசியில் . அதற்கப்புறம் அந்த டீச்சர் அப்படி திட்டுவதே இல்லை.

2. காதல் --- திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் --- சிறுகுறிப்பு வரைக.
விவகாரமா இருக்கே கேள்வி . திருமணத்திற்கு முன்னோ பின்னோ ஈகோ இல்லாத காதல் வெற்றி பெறும் . ஆனால் மனிதர்கள் யாரும் ஈகோ இல்லாமல் இருப்பது இல்லை. கொஞ்சம் கூடக்குறைய இருக்கும் . அன்பு தூக்கலா ஈகோ கொஞ்சமா போட்டு கலந்தா காதல் ருசிக்கும் . ஈகோவை விட்டு காதலைச் சொல்லும்போதோ, ஏற்கும்போதோ காதல் ருசிக்கும் அடிக்கரும்பு . அப்புறம் சூழ்நிலையும் சுற்றி இருப்பவர்களும் முக்கியமாகப் போய் வார்த்தைகள் வலைகளாகி ஈகோ தூக்கலாகிவிடும் . கஷ்டப்பட்டாதான் ஜெயிக்கும் திருமணத்துக்கு முந்திய காதல் . சேர்த்துவைக்க ஆளிருக்க மாட்டாங்க .. பிரிக்கத்தான் இருப்பாங்க.


திருமணத்திற்கு பின் குழந்தையாயிடுச்சுன்னு வையுங்களேன். ஈகோ சண்டைக்கு நடுவில் வந்து தத்தக்க பித்தக்கான்னு எதாச்சும் செய்யும் அந்த குட்டிங்க ...கோவத்துல இருந்தவங்க சிரிச்சுடுவாங்க . அங்க பாரேன் உன்ன மாதிரியே தான் இது . சரிதான் ன்னு சேர்ந்து காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க திருப்பியும்.. சேர்த்துவைக்கத் தான் குட்டி தேவதைங்க இருக்காங்களே .
3. டில்லி பத்திக் கொஞ்சம் எடுத்து உடுங்க. முக்கியமா உங்கள அன்போட தன் தோட்டத்துச் செடிகளைப் பாக்க வரும்படி பின்னூட்டத்துல சொல்லியிருந்த அப்துல் கலாம் பற்றி?
டில்லி வந்து பத்து வருஷம் ஆகப்போதுங்க. வந்தப்போ இருந்த பிரமிப்பு இன்னும் அகலவே இல்லை. ரெண்டு நாள் பயணம் செய்து வந்து குளிருக்கும் வெயிலுக்கும் பழகி இப்போ இங்க விட்டு போகனும்ன்னா மனசே வராத அளவு சிநேகிதமா ஆகிட்டேன் தில்லி கூட. தில்லின்னா மௌனராகம் படத்துல காட்டறமாதிரி பெரிய சாலைகள் இண்டியா கேட் பக்கத்துல இருக்கற நிற்காமல் சுத்தி சுத்தி போகும் பாதைகள் தான் சிறப்பு. அதெல்லாம் அந்த காலத்துல ஆங்கிலேயன் செய்த வடிவமைப்பு .அந்த மரங்களும் அகலமான பாதையும் ஊரிலிருந்து வந்தா எல்லாரையும் அங்க கூட்டிட்டு போய் அசத்துவோம். மத்தபடி செங்கோட்டைக்கு பக்கத்துல இருக்கற சந்து பொந்துக்கெல்லாம் போனா மதுர மேல மாசி வீதிக்குள்ள இருக்கமான்னு சந்தேகம் வரும் இடங்களும் இருக்கு.
ரிக்ஷா தாங்க அருமை .ஏறி உட்கார்ந்து அஞ்சுரூபாக்கு எவ்வளவு தூரம் போவாங்க தெரியுமா அதே மாதிரி ஆட்டோகூட தான் நம்ம ஊருக்கு இது தேவலாம் . ஆனா ஏமாத்தறது பாத்துக்கணும்.எல்லா இடத்திலும் இருக்கறது தானே.


மக்கள் ரொம்ப அருமை. யார் வம்புக்கும் போகறது இல்ல. நீ எந்த ஊர் ஏன் இங்க வந்த இது என் ஊருன்னோ சொல்லறது இல்ல. என்ன ஊரில் எங்க போன ..வந்தனு கேக்க ஆளு இருப்பாங்க இங்க பக்கத்து வீட்டுல கல்யாணம் அழைப்பு இல்லை .வருத்தமும் இல்லை.ஹாய் பை விசாரிப்பு தான். விடுமுறையா பார்க்கில் போய் விளையாட்டு ... மால் விண்டோ ஷாப்பிங்க் ...தமிழ் சங்க நிகழ்ச்சி ...மலை மந்திர் சந்தோஷம். ஆனா பணம் இருக்கறவங்களுக்கு சொர்க்கம்.


வெளிநாடுன்னு நான் போனது சிங்கப்பூர் தான் அங்க ஏசி பஸ்ஸும் மெட்ரோ ட்ரெய்னும் தான் இங்கில்லாதது சுத்தமான ரோடும் பெரிய பெரிய கட்டடமும் மாலும் இங்கயே இருக்கு அப்படின்னு நினைச்சேன்... இங்கயும் அது போல
இப்ப சூப்பரா மெட்ரோ ட்ரெய்ன் வந்து டுச்சு. ஏசி பஸ் வரப்போகுது என்ன இல்லை இத் திருநாட்டில் .


அந்த மொகல் கார்டன் போகனும்ன்னு ரொம்ப நாளா ஆசை இந்த மாதம் போறேன். கண்டிப்பா ப்ளான் பண்ணியாச்சு. கலாம் வேற ஆசையா கூப்பிட்டு இருக்காரே. அனானி யா வந்து கூப்பிட்டாலும் ஒரு மரியாதை இருக்குல்ல. கலாமைக்கூட சந்திக்கணும் ...பாக்கலாம் நடக்குதான்னு ஒரு முயற்சி செய்யணும் சிலர் இருக்காங்க அந்த பக்கத்துல வேலையா. கேட்டுப்பாக்கணும்.

4. ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள் சொல்லுங்க?

எனக்கு உடனே நியாபகம் வந்தது வேலுத்தம்பி தான் . இன்றைய கேரளாவின் ஒரு பகுதியான திருவாங்கூரை ஆண்ட பலராம வர்மா வுக்கு கீழ் தாசில்தாராக வாழ்ந்த வேலுத்தம்பி பற்றி நான் பூந்தளிர் அமர்சித்திரக்கதை புத்தகத்தில் சிறுவயதில் படித்தேன். அதில் இருந்த படி அவர் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிட்டு இருந்தது .


பதினாறு வயதே ஆன ராஜா பொறுப்பு முழுதும் திவானிடம் குடுத்து இருந்தார். திவான் தன் சுகத்திற்கு வரிகளை மக்களின் மேல் திணித்து ஆடம்பரமாக வாழ்ந்திருப்பான்.ஆங்கிலேய அதிகாரி மெக்காலே துணையுடன் கஜானாவைக் காலியாக்கி இருப்பார். புதிய திவானாக வேலுத்தம்பி வருவார் . மகாராஜாவுடன் செய்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க 8 லட்சம் வரிகேட்பார்கள் ஆங்கிலேயர் .பதுக்கல்காரர்களை தண்டித்து ராணுவத்தை முடுக்கி நிலத்தின் விளைச்சலுக்கு ஏற்ப வரி என்று சீர்திருத்தி பணம் சேர்ப்பார் வேலுத்தம்பி . தன் தாயைக்கூட ஒழுங்காக வரி கட்டாத குற்றத்திற்கு கோபிப்பார் வேலுத்தம்பி .ஏழையோ பணக்காரனோ திவானோ சட்டம் சமமாக இருக்கவேண்டும் என்பார்.பழைய திவானின் நண்பன் தாரகனின் நிலம் அபகரிக்கப்படும் ஆபத்து வரும் போது ஆங்கிலேயனின் கட்டளைக்கு பணியாததால் பணத்தை உடனே கட்டும்படி கோர மறுத்துவிடுவார் வேலுத்தம்பி.போர் நடக்கிறது . வல்லமை மிக்க ஆங்கிலேயன் படை கொஞ்சம் கொஞ்சமாக முன்னெறுகிறது.திருவனந்தபுரம் நெருங்கும்போது அரசரிடம் சென்று புரட்சி செய்தது நான் தான் மக்களுக்கோ அரசருக்கோ தெரியாது என் திட்டம் என்று என்னை மட்டும் குற்றவாளியாகக் காட்டி எழுதி கையொப்பமிட்டு இருக்கிறேன் . விடைபெறுகிறேன் என்று வெளியேறி காளி கோயிலில் ஒளிந்திருப்பார். தகவல் அறிந்து முற்றுகையிடப்படுவார் . ஆங்கிலேயரை அப்புறப்படுத்த கனவு கண்டேன் முடியவில்லை ஆனால் தொடர மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று தம்பியிடம் கடைசியாக சொல்லிவிட்டு தன்னை கொல்லும்படி கேட்பார் .அவன் மறுக்க கோழையே என்று கத்தியை தன் மேல் பாய்ச்சிக் கொண்டு இறந்து விடுவார். ஆங்கிலேயன் என்னை கைதியாக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே இறந்த அவரை அவர்கள் உடலையாவது தூக்கிலிடுவோம் என்று எடுத்துச் செல்வார்கள்.

5. இப்போ இந்தியாவின் முக்கியமான பிரச்சினை என்ன? அதை எப்படிக் களையலாம்?
காந்தியைப் பற்றி பலருக்கு பல கருத்து இருந்தாலும் அவர் சொன்ன ஒரு வார்த்தை உண்மை . வறுமை என்பது மிகப் பெரிய வன்முறை. எல்லாரும் சமம் என்ற நிலையை எப்போதுமே ஏற்படுத்த முடியாது . ஆனால் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்துக்கும் போராடும் மக்களை சிறிதேனும் முன்னேற்றும் வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். ஒரு பக்கம் மக்கள் வாங்கும் திறன் அதிகரிக்கிறது .
பிராண்டட் ஐட்டம் தான் உடுக்கிறார்கள்..கப்பல் போன்ற காரில் பயணிக்கிறோம். சிக்னலில் பிள்ளையுடன் பிச்சையெடுப்போரையும் காண்கிறோம் . விரைந்து செல்லும் எட்டு வழி சாலையின் பக்கத்தில் கல் மண் சாலையில் சைக்கிளை மிதிக்க முடியாமல் போகும் கிராமத்தை மறந்து விட்டது ஏன்? இன்னமும் சிற்றூரில் கவனிக்கப்பட வேண்டிய சாதாரண அடிப்படை விஷயங்கள் கிடப்பில் கிடக்க இங்கே பாலங்களும் மால்களும் கிடுகிடுவென மிரளவைக்கின்றதே.

யாராவது சமமாக திட்டங்களை போடுகிறார்களா? இல்லை முன்னுரிமை நகரங்களுக்கு மட்டும் குடுக்கப்படுகிறதா?
எனக்குத்தான் சரியாகத் தெரியவில்லையா ?
எல்லாவேளையும் உணவு ...உடுத்த நல்ல உடை ..சுகாதாரமான இருப்பிடம் எல்லாருக்கும் கிடைக்க வழி.செய்யணும் ..இவை கிடைத்ததும் அடுத்தது கல்வி , எழுதப்படிக்க மட்டும் தெரிந்தாலும் போதும்...அப்புறம் தொழிற்கல்வி முக்கியமாக.
கனவு காண்போம். கலாம் சொன்னது போல்.வறுமை ஒழிய.

அடுத்து என் கேள்விகள்.
1. பெண்ணாப் பொறந்துட்டோமேன்னு நினைச்சதுண்டா ? இல்லைன்னா ஏன்? ஆமாம் ன்னா ஏன்? எந்தந்த சமயத்தில் அப்படி தோன்றியதுன்னு சொல்லுங்க.
2.ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் ஆனா என்ன எல்லாம் திட்டம் கொண்டுவருவீங்க?
3.சமூக முன்னேற்றத்திற்கு நீங்க என்ன எல்லாம் முயற்சி செய்யறீங்க? மத்தவங்க என்ன எல்லாம் செய்யணும் ? எதாச்சும் ஐடியா?
4.சமையல் கத்துக்கிட்ட அனுபவம் சொல்லுங்க[.நல்ல சிரிப்பான கதை அது]
5.நீங்கள் கல்லூரியில் எடுத்த பாடத்தைப் பற்றியும் அதை ஏன் எடுத்தீர்கள் அதன் அனுபவங்கள் பற்றி....

பாவம் கை கொஞ்சம் பிரச்சனை ஆகி இருக்கும் மங்கையை தொந்திரவு செய்யறனேன்னு தோன்றினாலும் மகளிர் தினமா இருக்கறதால மங்கை கிட்ட சுடரக் கொடுக்கிறேன். இண்டிபிளாக்ஸ் வரை போன அவங்க பதிவு படிக்கிறவங்கள சிந்திக்க தூண்டும் வண்ணம் இருக்கு. மங்கை தொடருங்க ........

இழப்பின் வலிகள்

எதைத் தொலைத்தோம் என்று நாங்கள் புலம்புகிறோம் , அரற்றுகிறோம் என்பதை அறியாத , புரிந்து கொள்ளமுடியாத சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகை அறிந்திருக்கவில்லை நான். சொல்லிப் புரியவைக்க முடியும் என்ற எண்ணத்தை கைவிட்டு வாளா இருக்கவும் முடியவில்லை. வெற்றி பெற்ற பெண்களைப் பற்றி வேறு யாராவது சொல்வார்கள் . விழுக்காட்டில் அதிகம் இழப்பின் வலிகளை அனுபவித்தவர்களே . பேசித்தீர்ப்பதற்காக இல்லை எனிலும் இழந்தவை எது என்று சொல்கிறேன் கேளுங்கள்.

என் பள்ளியில் கூடப்படித்தத் தோழிகள் சிலர் ஒரு வித அர்ப்பணிப்புடன் பள்ளியிறுதி தேர்வுகளை எழுதி மதிப்பெண்களை வாங்கிக் குவித்தனர்.அவர்கள் எத்தனை ஆர்வமாய் படித்து மதிப்பெண் எடுத்தார்கள் என்பதை அறிந்த நான் அடுத்து அவர்கள் என்னவாக வருவார்கள் என்று கற்பனை செய்துபார்ப்பேன் . ஆனால் மதிப்பெண்கள் அதிகம் இருந்தும் அடுத்த நிலை ? என்னடி எடுக்கப் போற. ம் தெரியலடி இங்க பெண்கள் கல்லூரியில் இருப்பதே நாலு .அதில் எதாவது ஒன்றை எடுக்கவேண்டியது தான். ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் எடுத்துப் படிச்சுட்டு ஒரு எம்.ஏ வாங்கலாண்டி. அப்படியே ஒரு பி.எட் படிச்சேன்னு வையேன் . கொஞ்சம் பணம் எதாச்சும் குடுத்து டீச்சர் வேலைக்கு அப்ளை செய்யலாம். அது ஒன்னு தாண்டி கல்யாணத்துக்கப்புறம் சரியா வரும் .சொன்னவள் யார் தெரியுமா? இயற்பியலில் 199 /200 வாங்கியவள்.


அவளுக்கு இயற்பியல் எடுத்து படித்து மேற்படிப்புக்கு வழிகாட்டும் கல்லூரி அருகில் இருந்தது . பெற்றவர்களுக்கு விருப்பம் இல்லை. அருகில் இருக்கும் மற்றொரு கல்லூரியில் கோ.எட் என்றா நினைக்கிறீர்கள் ? இல்லை அது காலையில் ஆண்களுக்கும் , பெண்களுக்கு மதியமும். அப்படியும் ஆண்களை அவள் சந்தித்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவர்களுக்கு . பி.எட் எடுத்து படித்து இன்று பணம் குடுத்தாலும் நல்ல பள்ளியில் வேலைக்கிடைக்காமல் , ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்துஐநூறு வாங்கிக்கொண்டு தொண்டை கிழிய கத்திக்கொண்டு மெலிந்த உடலுடன் அவளைப் பார்க்கும் போது பள்ளியில் வெறியுடன் படித்த அவளின் நிலை கண்முன் வருகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வைத்திருந்து என்ன படிக்க வைக்க முடியுமோ அது மட்டும் படிக்க வைக்க நினைப்பார்கள் பெண்களை . பள்ளியில் நன்கு படித்த பெண்களெல்லாம் படிப்படியாக அங்கங்கே தேங்கிப்போக வாழ்க்கையின் லட்சியமெல்லாம் கல்யாணம் என்ற ஒன்றுமட்டும் என்று போதிக்கப்பட்டன சிற்றூர்களில் . படித்தவள் தான் வேண்டுமென்றனர் . பெண் படித்தாள் . வேலை செய்பவள் வேண்டுமென்றார்கள் பெண் வேலைக்கு போனாள் . ஆசிரியை என்றால் காலையில் போனால் மாலையில் காபி தரவந்து விடுவாள் . இன்று கம்ப்யூட்டர் வேலை அதோடு இணைந்து கொண்டது . காரில் போய் காரில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். விடுமுறைகள் கிடைக்கும் .

இசையில் விருப்பமுடைய தோழி கல்லூரியில் பாடிய பாடலைக்கேட்டு வந்த பெரிய இசைக் குழுவின் வாய்ப்பை தட்டிக்கழித்தாள். அது பெண்ணுக்கு உகந்த தொழில் அல்ல என்பதால். சில நகர்ப்புறப் பெண்கள் எதனையும் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் . இன்னும் எங்கள் சிற்றூரில் வாய்ப்புக்களைப்பற்றி அறியாத ..அறிந்திருந்தாலும் அதனுடைய இழப்பைப் பற்றி பேச இயலாத வாய்மூடிய பதுமையாய் பெண்கள் வாழ்வதைக் கண்கூடாகக் காண்கிறேன் நான்.

என் பெண் அப்படிப் படிக்கிறாள் இப்படி படிக்கிறாள் என்று அவர்கள் இன்று வாயாரப் புகழ்ந்து பேசுகிறார்கள். இவளாவது விருப்பப்பாடத்தைப் படிப்பாளா? படித்தாலும் அவளுடைய விருப்பத்துக்கு வேலைக்கு செல்வாளா? என்கேள்வியைக் கேட்டால் எங்கே அவர்களின் இழப்பின் வலியைக் கிளறி விடுவேனோ என்ற அச்சத்தில் நான் கேட்பதே இல்லை.

பஸ் நிறுத்தத்தில் கூட கெமிஸ்ட்ரி ஈக்வேஷன் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் தோழி ஒருத்தி இன்று உப்பு புளி கணக்கு மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் வேதனை உங்களுக்கு புரிகிறதா? தன் கனவை தன் குழந்தையின் எதிர்காலத்தில் பார்க்கத்துடிக்கும் என் தலைமுறை பெண்கள் இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் இழப்பின் வலிகளை இனி பேசித்தீர்க்கமுடியாது.
ஒன்றே ஒன்று இனி யாரும் இப்படி இழப்பின் வலி பற்றி பேசும் நிலையில்லாமல் செய்ய முடியுமென்றால் அதுதானே உண்மையில் எங்களின் மகிழ்ச்சி . உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற கற்பனையை அவர்களுக்கே விட்டுத்தாருங்கள். சிறகு விரித்து சிகரம் தொட அனுமதியுங்கள்.


அப்படியே அவர்களை படிக்க அனுமத்திருந்தாலும் சில குடும்பங்களில் இருந்த நிலையைச்சொன்னால் உங்களுக்கு புரியுமோ புரியாதோ தெரியவில்லை. தினம் தினம் வீடு வந்து சேரும் போது சில கேள்விகளோடு எதிர்படுவார்கள் பெற்றோர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை சமூகக்கோட்பாடுகளுக்கு அவர்கள் பயப்படுகிறார்கள். சரியான நேரத்தில் வந்தாளோ? அவள் முகம் எப்படி இருக்கிறது? எதும் கள்ளம் மறைக்கப் பட்டிருக்கிறதா கண்களில்? என்று தேடிப்பார்ப்பார்கள். இக்கேள்விகளுக்குப் பழகி அவற்றை ஒரு வழக்கமான ஒன்றாக பார்க்க தெரிந்தால் பிழைத்தாள் . இல்லை ஐயகோ என் போன்ற உத்தமியை இப்படி சந்தேகக்கண்ணோடு என் தாயே என் தந்தையே கேட்டார்களே என்று மனதை சங்கடப்படுத்திக் கொண்டு அவர்களையும் கூடப்பிறந்த பிறப்புகளையும்
காணும் சக்தியற்று ஒரு முழக்கயிற்றையோ , மண்ணெண்ணையோ தேடிப்போய் மாலையிட்ட சட்டத்துள் இருக்கும் என்னுடைய சில தோழியரைப்போல் வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டிவரும்.


நேரம் கழித்து வந்தாயே உன்னால் குடும்ப மானம் போனதே என்று எந்த பெற்றோராவது ஒரு ஆண்மகனை சாடியதாக கேள்விப்பட்டதுண்டா ?
பெண்ணொருத்தியோடு கல்லூரியின் வாசலில் கண்டதற்காக பெற்றோரின் வசவு கேட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு ஆண்மகனை பற்றி நீங்கள் கேட்டதுண்டா?
தொடர்ந்த வயிற்றுவலியும் அதனால் தற்கொலையும் பெண்களுக்கு மட்டுமே வருவது என்பது ஒரு புரியாத புதிர்.
அத்தனை கொடூரமான வார்த்தை சாட்டைகள் அவளை துவைத்திருக்கும் .குடும்பமானம் காக்கும் பெண்களுக்கு என்று பத்திரிக்கைக்கு தருவதற்கென்றே தயாரிக்கப்படும் ஆயத்த பதில்கள் அவை.


விருப்பங்களை இழந்தாய்.
முயற்சிகளை மறந்தாய்.
இழப்புகளை இயல்பென்றாய்.
சோதனைகளை வாழ்வென்றாய்.
தோழி - இனியொரு முறை
பிறந்து வா.
பெண்ணாகவே வா.
நீயே அன்னை,
அன்புக்கு உரமிடு.
நீயே சக்தி,
வெற்றிக்கு வழிதேடு.
நீயே வானம்,
எல்லைகளை விரித்திடு.
வெட்டப்பட்ட சிறகுகள்,
வளர்ந்து விட்டது உணர்.
சிறகு விரி,
சிகரம் தொடு.

March 7, 2007

விட்டு விடுதலையாகி

துரத்திக் கொண்டிருக்கும் கட்டளைகளில் வேலைகளில் இருந்து விடுதலையாகி யாரும் தொந்திரவு செய்யமுடியாத இடத்திற்கு
ஓடி மனதுக்கும் மூளைக்கும் கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்வதென்பது வழக்கமாகிவிட்டது . வடஇந்தியாவில் இருக்கும் சமயத்தில் இங்குள்ள பகுதிகளைப் பார்த்துவிடும் எண்ணம் சேர்ந்து வருடா வருடம் ஒரு இடம் முறை வைத்துப் போவது என்றாயிற்று.


மூன்று வருடம் முன்பு , நானித்தால் போவது என்றவுடன் நாமாக வண்டி எடுத்துப் போவதோ இல்லை சுற்றுலா ஏற்பாடு செய்பவர்களின் எதாவது ஒன்றில் சேர்ந்து போவதோ என்பதை விடுத்து சாதாரண பயணியாக செல்வதாக முடிவெடுத்து பஸ் நிலையத்தில் சென்று நானித்தால் செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். டிசம்பர் மாத கடைசி என்பதால் குளிர் மிக அதிகம். வறுத்த கடலைகளை உடைத்து சாப்பிட்ட வண்ணம் குளிரை பொருட்படுத்தாமல் கிராம மக்களோடு பயணம்.


இறங்கும் வரை மூடிய பஸ்ஸில் கொஞ்சம் நடுங்கியபடி இருந்த நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கியதும் கிடுகிடு என நடுங்க ஆரம்பித்துவிட்டோம். என்னடா என்று பார்த்தால் ..பேருந்து நிலையம் இருப்பது ஏரிக்கரையில்..
காற்று ஏரியைத் தொட்டு இன்னும் கொஞ்சம் குளிரேற்றிக் கொண்டு எங்களை வரவேற்றது. இணையத்தைப் பார்த்து ஸ்நோபாயிண்ட் என்ற இடத்தில் அறை எடுத்திருக்கிறோம். அங்கே போக ரோப் கார் தான் . நாங்கள் இறங்கியது காலை ஐந்து மணி ரோப் கார் தொடங்க விடிய வேண்டும். சிறிது டீ குடித்து சூடேற்றிக் கொண்டு ஜீப் ஒன்றைப் பேசி அந்த செங்குத்து மலை மேல் அடைந்தோம்.


சினிமாவில் வரும் தனி மாளிகை போன்று இருந்தது அந்த அரசாங்க ஹோட்டல் . வடநாடுகளில் அரசாங்கத்தின் பராமரிப்பு நன்றாகவே இருக்கிறது. இருட்டு பயமேற்படுத்தியது . நல்லவேளை லைட்டைப் போட்டு வரவேற்றார்கள் . நடுவில் ஹால் ,சாப்பிட பெரிய மேஜை, இரு புறமும் அறைகள்.ஒரு சமையலறை . காலை ஆறு மணி வரை
கொஞ்சம் ஓய்வு. பின்னர் 5 நிமிட நடையில் பனி மலைகளை
தூரத்தில் இருந்து காணும் படி அமைத்திருந்த ஸ்நோ பாயிண்ட்.
அங்கிருந்து ஹிமாலய மலையழகை ரசிக்கலாம். எல்லோரும் வேறு எங்கோ தங்கிக் கொண்டு இங்கே ரோப் கார் மூலம் வந்து ரசிப்பார்கள் . நாம இங்கேயே தங்கி யாரும் வர ஆரம்பிக்கரதுக்கு முன்பே தனியா ரசிக்க முடிந்ததே என்று ஒரே சந்தோஷம். முடிவெடுத்த தலைவருக்கு ஒரே பெருமை.


அமைதியான அந்த இடத்தை விட்டு போக மனசே வராம வயிறு கூப்பிட்டதேன்னு கீழே இறங்கி வந்தோம். அங்கேயே சமையற்காரர் இருந்தார் ஆனா டீ மட்டும் குடிச்சுட்டு பக்கத்துல மலையில் வாழுறவங்க இருக்கற இடத்துக்கு போய் டீ கடையும் ஹோட்டலுமா இருந்த ஒரு பெட்டிக்கடையில்
ஆலு பராட்டா வாங்கி சாப்பிட்டோம். ஆகா அந்த குளிருக்கும் அதுக்கும் அருமை. சில்லுன்னு காத்துக்கு ஊரோட பரபரப்பு எல்லாம் மறந்து சுடசுட கிடைத்தத சாப்பிடறது சொர்க்கம்.


அப்புறம் வண்டி எடுத்துகிட்டோம். கண்போல இருக்கற தால் நானி தால் , அந்த தால் இந்த தால் எல்லாம் சுத்திக் காண்பிச்சார் டிரைவர். ரோப் கார் ஒரு முறை மேல போக ஒரு முறை கீழ போக ஸ்நோ பாயிண்டில் தங்கி இருக்கறவங்களுக்கு இலவசம். காலையில் எல்லாரும் மேலே வந்து பார்க்கும் பிசியான நேரத்தில் நாங்க கீழே போய்ட்டு மாலையில் மேலே வருவோம். திருப்பியும் தனிமையான அமைதியான சூழல் நல்லா இருந்தது. சூப் , உருளை ப்ரன்ச் ப்ரை சமையற்காரரை செய்யச்சொல்லிக் கேட்டு சாப்பிட்டோம். குளிருக்கு தீமூட்டி சுற்றிலும் உட்கார்ந்து அரட்டை அடித்தோம்.


அடுத்தநாள் நாங்களா கிளம்பினோம். சைனா பீக் என்ற இடம். குதிரையில் போகும் படி சிலர் சொன்னார்கள். எத்தனை கிலோ மீட்டர் என்பது மறந்து விட்டது.. நடக்கும் தூரம் தான் என்று நாங்கள் பேசிக்கொண்டே ஏறத் தொடங்கினோம். ஒத்தையடி போன்றதொரு பாதை தான் . இதில் குதிரையில் வந்தோமோ பயத்திலேயே செத்துருப்போம். யாருமற்ற காடு போல இருந்தது . கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை ஓய்வெடுப்போம். பொண்ணு அத்தனை சின்னதில் நடந்ததே பெரிதாயிற்றே. அங்காங்கே தடுமாறினால் விழுந்துவிடும் அதளபாதாளத்தை ரசித்துக் கொண்டே சென்றோம்.


1 மணி நேரத்திற்கு மேல் சென்ற பின் கொஞ்சமே கொஞ்சம் யோசனை வந்தது ஆனாலும் நடைப் பயணத்தின் ஆசை விடாமல் மேலே சென்றோம். மரம் வெட்டும் பெண்கள் பேசிக்கொள்ளும் சத்தம் அவ்வப்போது கேட்டது. இரண்டு பெண்கள் எதிர்பட்டார்கள் . இது தானே சரியான பாதை என்றோம். ஆமாம் இன்னும் பாதி தூரம் இருக்கிறது என்றார்கள். இப்படியே மேலே போகப் போக தரையெல்லாம் ஏதோ வெள்ளையாக கிடந்தது. அதற்கு முன் நாங்கள் பனிப்பொழிந்திருக்கும் இடங்களுக்கு போகாததால் எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.


மேலே போகப் போக பனி நன்றாக பரவிகிடந்தது ஆனால் பால் வெள்ளையாக இல்லாமல் மண்ணோடு கலந்து இருந்தது. கொஞ்சமே கொஞ்சம் தானே பொழிந்திருக்கிறது.
ஆனாலும் எங்களுக்கு அது புது அனுபவம் ,. என்பதால் மகள் பனித்துகள்களை அள்ளி கூட வந்திருந்த மாமாமேல் போட்டு விளையாடினாள். உடனே முடிவெடுத்தோம் அடுத்த வருடம் போவேண்டும் பனிமலை ...மனாலி ..

மேலே மலையழகு ரசிக்க என்று தொலைநோக்கி வைத்து இருந்தார்கள். ஒரே ஒரு வீடு. அதில் இருந்தவர் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் போலும். வாருங்கள் டீ வேண்டுமா என்ன சாப்பிடுகிறீர்கள் என்றார். ஆஹா நடந்து வந்த களைப்பு நீங்க
பிரட் ஆம்லெட்டும் டீ யும் தந்து பசியாற்றினார். இன்று முதல் வருகை நீங்கள் தான் என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.
இறங்கி வரும் பாதையில் முக்கால்வாசி ஆனபின் தான் ஒரு கல்லூரிக்கூட்டம் வந்தது. அய்யோ அம்மா என்று வந்த அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் என்றார்கள். இப்போது தான் கால்வாசி வந்திருக்கிறீர்கள். ஆனால் அருமையான இடம் நடைப்பயணம் நல்லா இருக்கு என்றோம். அவர்கள் இத்தனை சிறுமி எப்படி வந்தாள் என்றார்கள். அதுவா ரகசியம் என்ன என்றால் அவளுக்கு ஒரு பார்பி பொம்மை கிடைக்கும் அதுக்குத்தான் . ரொம்ப நாளா கேட்டுக் கொண்டிருந்தாள். நடந்தால் ,ரசித்தால் பரிசு என்று அழைத்துப் போயிருந்தோம்.பறவைகளின் ஒலிகள் , பசுமை நிறைந்த பகுதி , இயற்கையின் மணம், எல்லாம் சேர்ந்து ஒரு வருடத்திற்கான புத்துணர்ச்சியை உடலில் ஏற்றிக்கொண்டு மீண்டும் பரப்பரப்பான வாழ்வுக்கு பயணமானோம், மனதில் அடுத்த பயணத்தைப் பற்றிய ஆவலுடன்.

March 6, 2007

ரேடியோ டேப்ரெக்கார்டர்

பாடல்கள் என்றால் ஒரு அளவுக்கு இல்லாமல் பயித்தம் பிடித்து அலைபவள் நான் . எங்கள் வீட்டில் டி.வி. வாங்கியபோது நான் 11 ம் வகுப்பு . அதற்கு முன்பு வரை என் தோழி ரேடியோ தான்.
எங்கள் வீட்டில் பெரிய பேட்டரி ரெண்டு போடும் வண்ணம் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. நன்றாகவே பாடும். காலையில் மூன்று மதப் பாடல்களோடு விடியும். அதுவும் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ரொம்பவும் பிடிக்கும்.


இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும் அந்த ரேடியோவால் நியுஸ் கேட்பது தடைஆகிறது என்று முடிவெடுத்த அப்பா, ஒரு நாள் ஒரு குட்டி சோனி டேப் ரெக்கார்டருடன் சேர்ந்த ரேடியோ வாங்கி வந்தார்கள். 1200 ரூ.

குட்டியாக ஒல்லியாக கருப்பு கலரில் சும்மா சூப்பராக இருந்தது அந்த சோனி. அப்புறம் ஒரே கொண்டாட்டம் தான். பிடித்த பாடல் களை ரேடியோ விலிருந்து டேப் செய்வது நாங்களே பாடி பதிவு செய்து கேட்பது என்று ஒரே சந்தோஷம். பிள்ளை யார் சதுர்த்தியா பிள்ளையார் பாட்டாக பிடித்து வைத்துப் போடுவார்கள் அப்பா. பொங்கலா தை திருநாள் சினிமா பாட்டாக
சேர்த்து போடுவார்கள். எங்களிஷ்டம் ஆகிவிட்டது.

ஆரம்பக் காலத்தில் சின்னச் சின்ன தவறு நேர்ந்து வந்தது . சேர்ந்தார்ப் போல் ப்ளே பட்டனையும் அழிக்கும் பட்டனையும் அமுத்தி இருப்பார்கள் யாராவது . ஒரு முறை என் ஆச்சி "கொழுக்கட்டை அதிகம் தின்னைநாக்கி அப்புறம்" அப்படின்னு சொன்னது கூட பதிவாகிடுச்சு. எப்ப பிள்ளையார் சதுர்த்தி வந்தாலும் பிள்ளளயார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாட்டிற்கு இடையில் ஆச்சி குரலும் அந்த வார்த்தையும் ஒரே சிரிப்பு தான்.


நாங்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை எல்லாம் பிடித்து வைத்து இப்போது கேட்டாலும் சிரிப்பு தான். வேரென்ன அசோகர் மரங்களை நட்டார் தான். சிலோன் ரேடியோ நல்ல நல்ல பாட்டா போடுவாங்க. ஆனா என்ன ஒரு பாட்டோட ஆரம்பம் போட்டுட்டு நடுவில் வந்து அவங்க கொஞ்சம் வர்ணனை சொல்லிட்டு ப் போவாங்க ...பதிவு பண்ண சிரமமா இருக்கும்.
அப்படியும் பழய பாடல் , ஹிந்திப் பாடல் களை அதிலிருந்து பதிவு செய்திடுவேன்.கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். ரேடியோவில் ஒரு முறை ராமாயணம் நாடக விழாவில் போட்டார்கள் அப்பா அதைப் பூராவும் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.எத்தனையோ இரவில் பாட்டு கேட்டபடி தூங்கிப் போயிருப்பேன் அனைக்க மறந்து , அப்பா வந்து அனைத்து , மேலே எடுத்து வைத்திருப்பார்கள். வீட்டில் அம்மா அப்பா இல்லையென்றால் ஊருக்கே கேட்கும்படி பாட்டை அலறவிட்டு கேட்போம். ஆமா அந்த குட்டி ஸ்பீக்கரில் கேட்டதுக்கே அப்போ அப்படி சொன்னாங்க இன்னைக்கு இருக்கும் ஸ்டீரியோ செட்டில் என் பிள்ளைங்க க்ரேஸிக்கியாரே அலறி அடிக்கறத கேட்டா என்ன சொல்லுவாங்களோ.
டீவி வாங்கியும் அந்த க்ரேஸ் போகல . டி.வி. ல அப்போல்லாம் etc ன்னு நினைக்கிறேன் . ஹிந்திப் பாட்டா போடுவான். சின்ன சோனிக்கு கூடுதல் இணைப்பெல்லாம் குடுத்து டி.வி. ஸ்பீக்கர் பக்கத்தில் வைத்துப் பாட்டைப் பிடிப்பேன். இன்று பெரிய செட் வாங்கி வைத்திருந்தாலும் அதன் துல்லியமெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இடம் விட்டு இடம் நகர்த்த முடியாதது தான் எனக்கு பிடிக்கவில்லை. வாங்கும் போது கூட வந்த மாமானார் என் கிட்ட அந்த காலத்துல 1500 ரூ வாக்மேன் வாங்க உண்ணாவிரதம் இருந்தான் இன்னைக்கு 17,000 போட்டு வாங்கறான் என்று சந்தோஷப்பட்டது தனிக்கதை.எனக்கென்று ஒன்று சின்னதாக கேட்டு வாங்கிக் கொண்டேன்.
சமையல் அறையோ , மற்ற வேலையோ பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும். ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது.

March 2, 2007

சந்தோஷம் நிம்மதி கொஞ்சம் பெருமை

கணவரின் நண்பர் குழந்தையைப் பார்க்கப் போனோம். கஷ்மீரிக்காரங்க போனதும் முந்திரி பாதாம் கிண்ணத்தில்
நிரப்பி வைத்தார்கள். ஆளுக்கு ஒரு கப் டீ குடுத்தாங்க. அப்புறம்
வேலைக்காரப் பெண் ஒரு கெட்டில் கொண்டு வந்தா என்னன்னு கேட்டா இன்னும் கொஞ்சம் டீ வேணும்ன்னா ஊத்திக்கவாம் அவங்க குளிர் ஊரில் இதமாய் இப்படி டீ குடிச்சிக்கிட்டே
பேசிக்கிட்டு இருப்பாங்களாம்.

அவங்க மனைவி குழந்தையை கொஞ்சநேரம் கைகளில் கொஞ்ச குடுத்துவிட்டு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு வருவதாகப் போய் விட்டார்கள். நண்பர் ஆரம்பித்தார் யூ நோ ?
இதெல்லாம் அவுட்சோர்ஸ் பண்ணப்போறாங்களாம் . ஆபீஸ்ல
இவங்க இவங்க லெவல் எவ்வளவோ அதுக்கும் மேல அதிகம்
சம்பாதிக்கறாங்களாம் . கேட்டாத்தான் கொடுப்பாங்களாம்.
இனிமே அதெல்லாம் கட்டாமே. அவர் டிவோர்ஸ் பண்ணிட்டு
நம்ப சேல்ஸ் ஹெட்ட கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்.

எல்லாத்துக்கும் நம்ம தலைவர் சிரிப்போட அப்படியா ஓகே. ஒகே. சாப்பிட்டு கிளம்புவதற்குள் ஆபிஸின் அத்தனை அரசியலும் பேசி ஓய்ந்தார் நண்பர். எல்லாமே புதிதாய் கேட்ட
தலைவரைப் பார்த்து இவர் என்ன பார்க் பெஞ்சிலயா படுத்து
இருந்துட்டு வரார் . ஆபிஸ் தான் போறாராங்கற சந்தேகம் வந்துவிட்டது.

வீட்டுக்கு போகிற வழியில் என்னப்பா நேத்து வந்த பையன் என்ன என்னமோ சொல்றான் அப்படின்னு கேட்டா , நானெல்லாம்
மேஜைக்கடியில் வேலை செய்யறேன். சாதாரண தொழிலாளி.
எனக்கென்ன தெரியும் அப்படிங்கறார் தலைவர்.

''நமக்கு தெரிஞ்சவங்கள்ளாம் ஒன்னு அமெரிக்காவுலயோ
சிங்கப்பூரிலயோ குப்ப க் கொட்டிக்கிட்டு போன் மூலமே பேசறவங்க..இல்லன்னா செக்யூரிட்டி எலக்ட்ரிசியன் மாதிரி வேலைகளை செய்யறவங்க. பாதி நாள் என் வேலை செர்வர் ரூமில் கலர் பார்க்கறது ( வயர் கலர்ங்க ) .தனியாள் நான் .
அரட்டை நமக்கு பழக்கமில்லை .நானுண்டு என் லேப்டாப் உண்டு. நான் ரொம்ப நல்ல பையனாக்கும் .''


மகிழ்ச்சி. நிம்மதி. கொஞ்சம் பெருமை.