Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

November 16, 2011

யந்திரவாகனன்


சிறுமுயற்சிக்கு 5 வருடம் நிறைந்துவிட்டது.
அதற்கு காரணமாயிருந்த நட்புகளுக்கு என் நன்றிகள்.

நான் செம்படம்பர் மாதம் தில்லி ஹிந்தி அகடமியில் கவிதை வாசித்தபோது என்கவிதைகளை மொழிபெயர்த்து தந்த பாலசுப்ரமணியம் சார் அவர் மொழிபெயர்த்த இப்புத்தகத்தை தன் நல்லாசிகளோடு கையெழுத்திட்டுத்தந்தார்கள். நாவலை மற்ற கதைகளைப்போல நான் வேகவேகமாக கடக்கவே முடியவில்லை. நாலோ ஐந்தோ பக்கம் படித்துவிட்டு மூடிவைத்துவிட்டு நானும் அவரைப்போலவே உள்ளே யோசிக்கக்கூட ஆரம்பித்துவிட்டேன். யோசனை ஓடி ஓடி ஒரு சில கவிதைகள் கூட எழுதிவைத்தேன். மனசுக்குள்ள(யும்)யே பேசித்தீர்த்துக்கிறவங்களுக்கு இந்தக்கதை படிக்க ரொம்பவுமே பிடிக்கலாம். உடலைத்தேர் என்றும் ஆத்மாவை தேரோட்டி என்று கொண்டதாக உருவகிக்கும் ஆழமானதொரு கதையை மொழிபெயர்த்தவரே எனக்கு பரிசளித்தது மிகப்பெருமையாக கருதுகிறேன். நன்றி சார்.

[கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை இங்கே யூட்யுபில் காணலாம்..
என்கவிதைகளின் முதல் மேடை..பிழைகளைப் பொறுத்தருள்க. கவிதை வாசிப்பு நிகழ்விற்கு என்னை பரிந்துரைத்த திரு ஷாஜகான் அவர்களுக்கு சிறுமுயற்சியின் பாதையில் ஒரு முக்கிய நிகழ்வை தந்ததற்காக தனிப்பட்ட நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹிந்தியில் என் கவிதைகள்

இரண்டு கவிதைகள் ராஜஸ்தானி மொழியில் திரு நீரஜ் தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.]


--------------------------------------------
யந்திரவாகனன் - சந்திரசேகர் ரத் ஒரியா மொழியில் எழுதிய நாவல்.
ஹிந்தியில் - சங்கர்லால் ப்ரோஹித்
தமிழில் - திரு ஹச்.பாலசுப்ரமணியம்

தாசர் என்கிற கிராமத்துக்கோயிலில் பூஜை செய்கிற மனிதரோட கதை. கிடைக்கிறதை விட அதிகமா எதிர்ப்பார்க்காத நிம்மதியான மனுசனான தாசர் ,உலகத்து வாழ்வில் வாழ்வதைவிட மனசுக்குள் ஒரு வாழ்க்கையை தனியா வாழ்ந்துகிட்டிருக்கார். சொல்லப்போனா அவர் மனசுக்குள்ள வாழற வாழ்வைத்தான் முழுமையா வாழ்ந்தார்ன்னு நினைக்கிறேன்.

தோட்ட வேலை செய்கிற மாலியையும் சத்பதி போன்ற தத்துவநெறிகளை அறிந்த மனத்தெளிவு கொண்டவராக மதிக்கப்படறவரையும் சமமாக ஞானிகளாக பாவிக்கிறார். அவர்களை ஏறக்குறைய துலாபாரத்துல ஒரு தட்டில் வைத்து தன்னை அஞ்ஞானியாக மற்றோரு தட்டில் வைத்து உள்ளுக்குள்ளேயே தர்க்கம் செய்துக்கிறார்.



பழமையான எண்ணங்களில் தத்துவங்களில் பழகிப்போன வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவரோட மனசுக்குள்ளே அவற்றை கேள்வியும் கேட்டு விவாதம் செய்கிறார். பசுவை தானம் குடுக்கச்சொல்லி ஒருவருக்கு சொல்லிவிட்டு அதை தனக்கான ஆதாயத்துக்காக சொல்லிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் மனுச மனங்களின் கள்ளங்களை அவர்களின் நேர்மையைப்பற்றி கேள்விக்கேட்டுக்கொள்கிறார். விதியைப்பற்றி இறந்த பின்னான உலகம் பற்றியும் படித்தவனானாலும் நீலகண்டருக்கு இருக்கின்ற பொறாமையைப்பற்றியும் நீளநீளமாக யோசித்து நேரம் கடத்தி மனைவியின்
“இப்படியே தான் உக்காந்திருக்கப்போறீங்களா ?”

போன்ற அதட்டலில் நிகழுலகத்துக்கு வந்து வந்து போகிறவர்.



புரிக்கு திருவிழா பார்க்க குடும்பத்தை அழைத்துச்செல்லமுடியாத நிலையில் ..

“கோவிந்த தூவதசி வர்ரது எல்லாரும் கிளம்பராங்க , புண்ணியம் சம்பாதிக்கவா போறானுக ? அட ஒரு ஆடு நொண்டித்துன்னு பின்னால் வர எல்லா ஆடும் நொண்டுமே அது மாதிரி கதைதான்”
என்று திருவிழாவில் கடையும் கொண்டாட்டமும் என்று கடவுளை நினைக்காதவங்களை பற்றி குறைபட்டுக்கொண்டே மனைவியின் புலம்பலிலிருந்து தப்பித்து கோயில் வாசலில் தூங்கிய தூக்கத்தின் நடுவில் கனவில் அவர் புரிக்குச் சென்று கடவுளையும் தரிசித்துவிடுகிறார்.

ரயில் வண்டியிலிருந்தே ஜெகன்னாநாதனை நினைத்தபடி கூட்டத்தில் முண்டியடித்து

‘ஹே பரந்தாமா! ஈரேழு பதினாலு லோகமும் உன்னுடைய லீலாபூமி . பிரபு! உனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? அகற்றிடு மேகநாதர் மதிலை..மேகத்தின் பக்கமாக உயர்த்தி விடு இதை. எவ்வளவு தூரத்திலிருந்து உன்னை தரிசிக்க வந்திருக்கு ஜனகோடிகள். ஏழை எளியவர் எல்லாரையும் உள்ளே நுழைய விடு . எல்லாரும் பக்கத்தில் வரட்டும் .. ஹரி ஜெகந்நாதா! ஜெய் ஜகன்னாதா!உன்னைக் கண்களால் பருகும்போதே இந்த உயிர் பிரிஞ்சுடனும் 

என்றபடி மற்றவர்களுக்காகவும் வேண்டி உருகி வழிபடும் அவர் உள்ளுக்குள் கண்ட தரிசனத்தைப் போல கோயிலுக்கு போனவர்கள் கூட கண்டிருக்கமுடியாது.


சத்பதியைப்பற்றி மாலியும் தாசரும் உரையாடுவதிலும் சத்பதியிடம் விவாதிக்கிற இடங்களிலும் தத்துவங்களை கேள்விகேட்டு புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.

ஒருநாளானால் மனைவியும் குழந்தைகளும் தன்னை வாழ்க்கையில் பெரும் மோகத்தில் ஆழ்த்தும் சக்திகளென்று வெறுத்து யோசித்தாலும் மருத்துவம் பார்க்க பணமில்லாமல் மனைவியும் ஒரு மகனும் இறந்த பின்  மனைவியின் மேலான அன்பு மேலிட மனம் பேதலித்து நிற்கிறார்.

 தனக்குள்ளே பேசி தர்க்கம் செய்து வாழ்ந்தவர் பேதலித்த மனதோடு வாய் வார்த்தை குறைந்து உள்ளுக்குள் ஆமைஓட்டுக்குள் சுருங்கியது போல இருக்க, அவரின் மனம் மாற்ற கொள்ளவேண்டுமென்று சத்பதி தலயாத்திரை அழைத்து செல்கிறார். மௌனச்சாமியாராக..காசிக்கு சென்று கங்கையில் முங்கி சிவனை தரிசிக்க செல்லும் வழியில் அவருடைய பேதலித்த நடையைக் கண்டு கடைக்காரர்கள் தாமாக அவரையும் பூஜித்து, கடவுளுக்கு சாத்த பூவும் பொருட்களும் குடுக்க..
‘கடைசியில் பிச்சையும் எடுத்தாய் இல்லையா?’
இவர்களுக்கு என்ன பைத்தியமா? என்னை மதிப்பதற்கு ..காசியில் எது வேண்டுமானாலும் நடக்கும். தினம் ஒரு மகான் தோன்றக்கூடும் மனிதனைபிடித்து மகானாக்குவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கபோகிறது
என்றபடி சத்பதி மகராஜிடம் வேடிக்கையாக .. காசி மக்களுக்கு பக்தி ஜாஸ்தி இப்படி பைத்தியம் பிடிச்சு என்னையும் பைத்தியமாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்.

எவ்வளவு மனைவியை மறக்க நினைக்கிறாரோ அவ்வளவு அவள் நினைவுக்கு வருவதை
‘’” இந்த டுக்கு அம்மா அடிக்கடி நினைவுக்கு வராளே ஏன் ? ஒரு நாழிகைப் பொழுதாக நானும் பார்க்கிறேன் அவள் ஞாபகமே வருதே! மனம் ரொம்ப சஞ்சலமடைகிறது’ மதுரா பிருந்தாவன்னு சொல்றாளே எப்படி இருக்கும் போய் வரலாமா என்றாள் நான் சிரிச்சி மழுப்பினேனே.. அவ ஆத்மா மறந்திருக்காது . அவளும் கூடவே வந்திருக்கா. என் சரீரத்தில் புகுந்து அவளும் பிருந்தாவன் பார்ப்பா போலிருக்கு. //

தாசரும் அவரை மனசமாதனம் படுத்த

இவ்வளவு தூரம் கிளம்பி வந்தது அதையெல்லாம் விடறதுக்குத்தானே . நீர்தான் வீணாக நிழலை பார்த்துண்டு ஓடறீர்’

இல்லே சுவாமி! வெளிச்சத்துக்கு வரும்போதெல்லாம் நிழலையும் கூடவே கொண்டுதானே நடக்கவேண்டி இருக்கு.

ஒளியை இலக்காகக் கொண்டு நாம் முன்னேறினா நிழல் தானே
பின்னடைஞ்சுடாதா? அதுக்கு போய் கவலைப்படுவானேன்?’

அப்ப நிஜம்மாவே நிழல் விட்டுப்போயிடும்ன்னு சொல்றேளா? ஒளிபக்கத்தில் வரவர நிழலும் அதிலிருந்து சக்தியைப் பெருக்கிக்கும் . ஒளியோட சேர்ந்துட்டா அங்க நிழல் இருக்காதே. அது ஒளியில் லயித்துவிடும்’
எத்தனையோ சிந்தனைத்தெளிவாக ஓரொரு சமயம் பேசினாலும் ,தன்னை சுற்றி நடப்பதையோ , பேச்சுக்களையோ உணரமுடியாத நிலையிலேயே சிலநாட்கள் குழம்பி பின் மனைவி ஆசையாக செல்லவேண்டுமென்றாளே அந்த ஜகன்னாத புரியில் இறக்க ஆசைபடுகிறேன் என்று அங்கேயே சென்று இறக்கிறார்.

படித்தவராகவும் இந்த சாதரண மனுசன் மேல பொறாமையும் கொண்டிருந்தவராகவும் இருக்கிற நீலகண்ட பண்டிதருக்கும் தாசருடைய மரணத்திற்கு பின்பு அவரின் மகத்துவம் ,பொறாமையற்ற எளிமையான மனது புரிகிறது.

November 18, 2009

ஸ்வீட் எடு கொண்டாடு !!

என்ன கொண்டாட்டம் எதுக்கு கொண்டாட்டம் கண்டுபிடிங்க பார்க்கலாம்.. :)

சிலருக்கு ஏற்கனவே கேள்வித்தாள் கிடைத்திருக்கும் கிடைக்காதவங்க சொல்லுங்க பார்க்கலாம்..


[ இவ்விடத்தில் இருந்த எறும்பு அனிமேசன் காட்சி என் பதிவின் வேகத்தை தடை செய்யுமளவு பெரியதாக இருந்ததால் அதனை எம்பெட் செய்திருந்த கோடை நீக்கிவிட்டு அதன் லிங்கை வைத்திருக்கிறேன்.. லிங்கை சொடுக்கி சென்றுப் பாருங்கள் நன்றி.]

பலரும் சரியான விடை சொல்லிவிட்டதால் பதிவில் சேர்த்துவிடுகிறேன்.
15 நவம்பரில் தொடங்கப்பட்ட சிறுமுயற்சி 18 நவம்பரில் தமிழ்மணத்தில் தெரியத்தொடங்கியது. இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகிறது.. உங்கள் அனைவருக்கும் நன்றி..

April 23, 2009

டெம்ப்ளேட் டிசைன்களும் நான் படும் பாடும்...

எனக்கு பொழுது போக்கே பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடுவது தான். பதிவிடுவது என்பது தினப்படி வேலையில்லை. என் பொழுதுபோக்குக்கு இப்பொழுது மிகப்பெரிய சோதனை. பல பதிவர்கள் சாதாரண டெம்ளேட்டில் போரடித்துப்போய் தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டுவதற்காக மிக அழகாக வடிவமைத்த டெம்ப்ளேட் டிசைன்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள்..

ப்ளாக்கரில் நான் சிறிதே கலர் மாற்றங்களை செய்த போதே பாலபாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. எளிமையான பக்கமாக கண்களுக்கு பாதிப்பில்லாத பின்புலம் இருந்தால் மட்டுமே படிக்கவருபவர்களுக்கு பதிவைப் படிக்க வசதியாக இருக்கும் . சிலர் கருப்பு பின்புலம் வைத்திருக்கிறார்கள் (உதாரணம்: சசி... ப்ளீஸ் மாத்துங்களேன் கண் வலிக்குது) அப்படிப்பட்ட பதிவுகளை வேகமாக போஸ்ட் கமெண்ட் தேடி ஓடி க்ளிக் செய்து ஷோ போஸ்ட் என்பதை க்ளிக் செய்து படித்து முடிப்பதுவழக்கம்.

உதாரணமாக புதுகைத் தென்றல் , ஸ்ரீமதி போன்றவர்களின் டெம்ளேட் அவர்களின் அழகுணர்ச்சியையும் தனித்தன்மையினையும் காட்டுகிறது மகிழ்ச்சி. ஆனால் என்னால் அவர்கள் பதிவை படிக்கவே முடிவதில்லை. சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பதிவுக்கு சென்றேனோ தொலைந்தேன். குறைஞ்சபட்சம் 5 நிமிடத்திலிருந்து 10 ..15 நிமிடத்திற்கு என் கணினி அப்படியே நின்றுவிடும். வேறு எந்த வேலையும் கூட செய்ய இயலாது. .. சில நேரம் ஃபயர்பாக்ஸ் க்ராஷ் ஆகி காணமலே போய்விடும்.

ஆனால் எனக்கு ஆச்சரியம் அங்கே கும்மியிலிருந்து பெரிய விவாதங்கள் வரை நடைபெறுகிறது. வருபவர்களுக்கு என்னைப்போல ப்ரச்சனைகளே வருவதில்லையா..? முன்பு எண்ணுவான் ( கவுண்ட்டர்) இதுபோன்ற ப்ரச்சனைகளை பலருக்கும் செய்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த டெம்ளேட்களா அல்லது பக்கங்களில் அவர்கள் இணைத்திருக்கும் வேறு எதும் அதிகப்படியான கேட்ஜெட்களா? என்று தெரியவில்லை மொத்தத்தில் என்னால் சரியாக பலரது பதிவைப் படிக்க முடிவதில்லை.

February 3, 2009

200 பதிவுகள் கடந்த சிறுமுயற்சி - திகில்காட்சிகள் நிறைந்தது

வழக்கம் போல என் டேஷ்போர்டில் கடைசியாக போட்ட போஸ்ட் 198 என்று காட்டிக்கொண்டிருக்க .. பதிவின் பக்கங்களில் 201 கூட்டுத்தொகை காட்டிக்கொண்டிருக்க எடிட் போஸ்ட் பக்கத்தில் சென்று ஷோ 300 போஸ்ட் என்றுப் போட்டுப்பார்த்தேன்.... 1-201 ஆஃப் 201 என்று காட்டியதால் குழம்பித் தெளிந்து நான் 200 பதிவுகள் கடந்துவிட்டதை தாமதமாகத் தெரிந்துகொண்டேன்.

இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் சிபியின் ஆவி நண்பர்களோ என்னவோ? முன்பு எப்போதோ டேஷ்போர்டிலிருந்த பின்னூட்டங்களை தின்ற ஆவிகள் இப்போது பதிவின் கணக்கையும் தின்றுருச்சு போல.. :) அவை இங்கேயே குடியிருக்கிறதோ..? ப்ளாக்கரின் கோஸ்டு வேலையும் இதில் இருக்கிறது.
இன்னமும் எனக்கு டேஷ்போர்டில் மாடரேட் செய்யவேண்டிய பின்னூட்டங்கள் காட்டப்படுவதில்ல்லையே...

பதிவர் மரவளம் வின்சென்ட் உடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்வைச் சொன்னார் அது எனக்குப் பெரிய திகிலாக இருந்தது. முன்பெல்லாம் பிக்னிக் அல்லது சுற்றுலா குடும்பங்களாக செல்வது குறைவு தான். இப்போது பல இடங்களுக்கு மக்கள் சென்று வர பிரியமாக இருக்கிறார்கள். அவர்கள் அந்த இடங்களை சுற்றிப்பார்ப்பதை விட ... அதிகமாக குப்பைப் போட்டுவருவது தான் நடக்கிறது. அதிலும் பெரும் கொடுமை இந்த ஆண்கள் கும்பலாக செல்வது. இளைஞர்களுக்குள் பாட்டில் எடுத்து செல்லும் பழக்கம் இருக்கிறது. அதனை அந்த அழகான இயற்கை பகுதிகளில் குடித்துவிட்டு போடுவது மட்டுமில்லாமல் அவர்கள் செய்யும் ஒரு காரியம் உடைத்து எறிவது.

வெறும் புல்வெளியில் போடுவதை விட திகிலான காரியம் அதனை ஆற்றுக்குள் போடுவது. இவ்வாறான ஒரு கண்ணாடிச்சில் ஆற்றில் கால் வைத்து ஆனந்தித்து இருந்த ஒரு நபரைப்பற்றிக் கூறினார் வின்சென்ட். பொதுவாக தண்ணீருக்குள் இருக்கும் போது இரத்தம் கசிவதோ அல்லது வலியோ நமக்குத் தெரிவது குறைவு. அந்த நபருக்கு கண்ணாடி கீறி ரத்தம் வெளியேறியபடி இருந்திருக்கிறது. மணல் நெருடிய உணர்வில் காலை வெளியே எடுத்தவர்க்கு பகீரென்றிருக்கிறது.
எக்கசக்கமாக இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது.

கொடுமையில் கொடுமை அவர் தன் மோட்டர்பைக்கில் வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் எவ்வாறு செல்வார். முதலுதவிகள் செய்து எப்படியோ பாதுகாப்பாக மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி இருக்கிறார்கள்.. ஒரு வேளை அவர் தன்னையறியால் இன்னும் கொஞ்சம் நேரம் அந்த நீரில் இரத்தம் கசிய நின்றிருந்தால் அவர் நிலை நினைத்துப்பார்க்கவே திகிலாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நம் பதிவர் குழுவினர்கள் மலைப்பகுதிகள் சென்று வந்ததை பரிசல் வடகரை வேலன் போன்றோர் எழுதி இருந்தார்கள்.. அப்போது வேலன் அவர்களும் செல்வேந்திரன் அவர்களும் கொண்டு சென்ற பொருள்களை மலையில் சேர்க்காமல் கீழே கொண்டுவர கோணி கொண்டு செல்ல இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். அது மிக நல்ல விசயம்.

நாங்கள் மணாலி சென்றிருந்த போது இப்படி மலையடிவாரத்திலேயே ஒரு பெரிய குப்பை போடும் பையைக் கொடுத்து குப்பைகளை கீழேயே கொண்டுவருமாறு சொன்னார்கள்.. அதனை திரும்ப கொண்டுவந்து அவர்களிடமே கொடுக்கும் படியும் கேட்டுக்கொள்கிறார்கள்.. முதலில் அந்த பைக்கு பணம் வாங்கிக்கொண்டு பின்னர் திரும்பிக்கொடுக்கும்போது அந்த பணத்தை திரும்ப தந்துவிடுவார்கள். பணம் என்றால் தானே மக்கள் எதையும் கவனமாகச் செய்வார்கள். :( ( இதை முன்பே எழுதி இருப்பதாக ஞாபக்ம் ஆனால் நல்ல விசயத்தை திரும்ப சொல்வதில் தவறில்லையே)

சுற்றுலா செல்வதில் இருக்கும் விருப்பம் அந்த பகுதியை அதே அழகோடும் பாதுகாப்பானதாவும் வைத்துக்கொள்வதிலும் இருக்கவேண்டும்.

December 2, 2008

தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை

கொஞ்சம் போரடிக்குதேன்னு ப்ளாக்கர் டேஷ்போர்டை கவனிச்சிட்டிருந்தேன்.. ப்ளாக் ஆஃப் நோட்ல புகுந்து புறப்பட்டுட்டு இருந்தபோது ஒருத்தருக்கு 1330 க்கும் மேல ஃபாலோவர்ஸ் இருக்காங்களாம்.. வியூ ஆல் போட்டாலும் கூட ஒரு பக்கத்துக்கு பத்து என்று தான் ப்ளாக்கர் காட்டும் அவரே கூட எப்படி பார்ப்பார் எல்லாரையும் கஷ்டம் தான்.. :(

ஒரு நாள் பின் தொடருபவர்கள் கணக்கு ஒன்று குறைந்து பின்னர் மூன்று கூடியது. குறைந்த அந்த ஒருவர் யாரென்று சரியாகத்தெரியவில்லை.. தப்பித்தவர் யாரோ? ஆனால் பின் தொடர்பவதாக ஃபாலோவரில் போட்டிருக்கும் எல்லாருமே பின் தொடர்வதும் இல்லையென்று நேற்று புரிந்து கொண்டேன். புதியதாக யாரோ இணைய அரட்டையில் இணைந்திருந்தார்கள். யாரென்று கேட்டு அறிந்து அவர்களின் பதிவு இணைப்பைக்கேட்டேன்.அவர்களும் என்னிடம் என் பதிவு இணைப்பைக்கேட்டார்கள். அய்யகோ கடைசியில் அவர்கள் என்னை ஏற்கனவே தொடர்பவர்கள் தான். இதிலிருந்து என்ன தெரிகிறது. தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை.. தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை.

இது ஏறக்குறைய முன்பே எல்லாரும் பின்னூட்டுபவர்கள் படிப்பவர்கள் கணக்கீடுக்கு சொன்னது போலவே தான்.
-----------------------------
ப்ளாக்கர் buzzல் பார்த்தபோது போஸ்ட் கமெண்ட் அதே பதிவின் கீழ் எம்பெட் செய்யும் வசதி பற்றி அறிந்தேன். ஆனால் அது அதிகம் வேலை செய்யப்படாத டெம்ளேட்டில் வேலை செய்கிறது ஏற்கனவே உள்ள பதிவில் வேலை செய்வதில்லை. அதற்கு ஏதும் வழி இருக்கிறதா? இதற்காக இன்னொரு பக்கத்தை திறக்கவேண்டாம் என்பதும் நன்றாகவே இருக்கிறது.. ரியக்ஷ்னும் அது போலவே தான்.. தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.
--------------------------
பலநாட்களாக ப்ளாக்கர் என் சிறுமுயற்சி பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை மட்டும் டேஷ்போர்டில் எண்ணிக்கையாக காட்ட மறுக்கிறது. மாடரேட் கமெண்ட்ஸ் போய் தான் பார்க்கவேண்டி இருக்கிறது. :( எத்தனை எத்தனை சோதனைகள்.

November 17, 2008

இரண்டு வருடம் ஓடிப்போச்சு....

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்து இத்தோடு 2 வருடங்கள் ஆகிறது. தமிழ்மணத்திற்கு நன்றி.

பதிவின் பிறந்தநாளை எப்படி கொண்டடலாம்ன்னு யோசிச்சேன். புதுகைத்தென்றல் தன்னுடைய பதிவில் பிடித்தது எது என்று எல்லாரிடமும் கேட்டார்கள். சென்ஷி தந்த ஐடியா ,ஸ்ரீதரன் என்பவர் தன்னுடைய பதிவில் சிலவற்றையே எடுத்து அலசி ஆராய்ந்த மாதிரி நீங்களு ம்... (ஏன் ஏன்.. எல்லாரும் ஓடிப்போகறதுக்கா..) சரி என்ன செய்யலாம் ... எப்போதும் போல ஒத்திப்போட்டாச்சு.
வழக்கமான பாணியில்.. காலையில் கை போன போக்கிலே தட்டியாச்சு. சரி பழய பதிவுகளை நாமே படிச்சுப்பார்ப்போம்ன்னு பின்னோக்கிப்போனால்...........

வர்சானா , கோவர்த்தன ஆன்மீகச்சுற்றுலா,மணாலிச்சுற்றுலா பதிவுகளுக்கு கூட்டமே இல்லை காத்துவாங்குது ... அப்ப நான் வேற புது பதிவரா, அதனால இருக்குமோ.. ஆரம்பத்துல எழுதின கவிதைகளுக்கும் வரவேற்பு கம்மி தான் இருந்தும் தொடர்ந்து எல்லாரையும் கவிதை எழுதி சோதனைக்குள்ளாக்கி இருக்கிறேன்.

சிறுகதைகள் வகை கொஞ்சமாத்தான் எழுதி இருக்கேன். கதையை ஆரம்பிக்க விவரிக்கத் தெரிந்த அளவுக்கு முடிக்கத்தெரியவில்லை. முதலில் கதையோட ஒன்லைன் சரியாகக்கிடைத்தால் தானே கதை எழுதலாம். சரி அடுத்து... பாருங்க சமையல் வகையில் ஒன்னுமே இல்லை.. ஏன்னா அது கைக்கு வந்ததைப்போட்டு சமைப்பது .. நோ ஸ்பெசிஃபிக் ரெசிபி..

செய்திவிமர்சனங்கற பேரில் 4 போஸ்ட் போட்டிருக்கேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. காரணம் ஒரு விசயத்தைப் பார்த்த உடனோ கேட்ட உடனேயோ எதாவது தோன்றுகிறது. கொஞ்சம் விட்டு அதன் பிண்ணனி வெளியே வந்ததும் பார்த்தால் அது வேற மாதிரி இருக்கிறது. இது ஒன்றும் புதிதில்லை. எப்போதும் பட்டிமன்றம் போலவே.. இந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது கேட்டால் அட இது சரியா இருக்கே.. அந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது இது கூட சரிதானேப்பா..

நேற்று டிடி பொதிகையில் "அந்த நாள்" திரைப்படத்தின் சில பகுதிகள். ( இது ரொம்ப வசதி கொஞ்சம் கொஞ்சமா பிரித்துப்போடுவதால் முழுபடம் பார்க்க போரடிக்காது) முதலில் சிவாஜி வந்து மாணவர்களுக்கு படிப்புத்தான் முக்கியம் என்று பேசியபோது ஆகா ன்னு எதிரில் இருந்தவர்களைப்போலவே கைதட்ட ஆசையா இருந்தது. பின்னாலே எழுந்த பண்டரிபாயின் வீரா வேசப் பேச்சைக்கேட்டதும் .. நமக்கும் போராட்ட உணர்ச்சி வந்துவிட்டதே.. பேசாம நடுநிலை யா இருக்கலாமே என்று எப்பவும் நடுநிலை .. அதாவது பேசாமல் பார்க்கிற கூட்டத்தில் சேர்ந்தே இருந்துகொண்டு.. (அடிவிழுந்தால் முதலில் நடுநிலைக்குத்தான் விழும் அது தெரியுமா?) அந்த வீடியோவைப்பாருங்களேன்..


நினைவலைகள் .. அதான் கொசுவத்திப்பா...அது கைகொடுக்கும் கை.. எழுத ஒன்றுமில்லையென்றால் இதை எழுதலாம். சரிக்கு சமமாக தொடர்விளையாட்டுக்களில் இதே அலை வேறுவிதமாக அடித்திருக்கிறது.

கவிதைக்கு??(22) அடுத்த அளவில் குழந்தைகள்(15) வகை தான் நிறைய எழுதி இருக்கிறேன்..அம்மா ஆச்சே.. இவை திருப்தி தந்த பதிவுகள் ..ஆனால் தொடர்ந்து குழந்தைகளைப்பற்றி எழுத தனித்தனியாக அவர்கள் பெயரில் பதிவு ஆரம்பித்துவிட்டதால் இங்கே குறைந்துவிட்டது.

200 பதிவு எழுதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
"அளவில் என்ன இருக்கிறது .. க்ளிக்க்ளிக்கில் 20 பதிவு இருக்கே அதை நாங்களே கூட்டிப்பார்த்துக்கறோம் கவலை வேண்டாமென்று துளசி ஆறுதல் சொன்னார்கள்.

வழக்கப்போல விழா மேடையில் எல்லாரையும் வாழ்த்துவது போல இதுவரை படித்து , படித்து பின்னூட்டி, பாராட்டி, அறிவுறுத்தி, உடன் வருகிற நட்புணர்வை பாராட்டி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

November 18, 2007

விதையாய் வந்து விழுந்த சிறுமுயற்சி

நன்றி என்கிற ஒரு கவிதைப் பதிவுடன் ஆரம்பித்த என் சிறுமுயற்சி வலைப்பதிவு ஒரு வருடம் நிறைந்து நிற்கிறது. நான் 15 நவம்பரில் எழுதி இருந்தாலும் அது தமிழ்மணத்தில் காட்டப்பட்டது நவம்பர் 18 தான்.. இதோ
அந்த சிறப்புமிக்க நிகழ்வின் புகைப்படம்.. :)

நன்றி , வன்முறைமனிதர்கள் , யாருக்கு போர்வேண்டும்? இவை மூன்றும் தான் அன்று சேர்ந்தார்ப்போல தமிழ்மணத்தில் வகைப்படுத்தாதவை பகுதியில் காண்பிக்கப்பட்டது.



மீள்பதிவு போடத்தெரியாம அந்த பதிவை டேட் மாத்தி எல்லாம் போட்டுப்பாத்ததில் அது இப்போது வேறு தேதியைக்காண்பிக்கிறது . பின்னூட்டங்களில் லக்ஷ்மி என்று இருக்கும்.. முத்துலெட்சுமியா 30 பதிவுக்கு பின்னர் தானே மாறினேன்.





என் முதல் ப்ளாக் அக்டோபர் 26 ஆரம்பித்தேன் அது இரு பதிவுகளோடு நின்று விட்டது.
பூங்காவில் பதிவு வந்த போதே "ஊக்கு" வித்தவர்கள் எல்லாருக்கும் நன்றி என்று சலாம் போட்டேன்....
இப்போதும் எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன்.. என் சிறுமுயற்சிக்கு ஆதரவளித்து "ஊக்கு" விக்கறதுக்கு... நன்றி நன்றி.

July 19, 2007

நூற்றுக்கு நூறு

எண்ணிக்கையில் என்ன இருக்கிறது என்கிற பொழுதும் வேறு எந்த காரியத்தையும் இத்தனை ஈடுபாட்டோடு செய்திருப்பேனோ என்னவோ அந்த அளவு மிக வும் ஈடுபாட்டோடும் ஒருவிதமான மனநிறைவோடும் இங்கே பதிவுகள் எழுதி வந்திருக்கிறேன். இது நூற்று ஒன்றாவ‌தாகும்.


பதிவுகள் எழுதுவது நம் அன்றாட வாழ்வின் அழுத்தத்தை குறைக்கிறது. நட்பு வட்டத்தை ஏற்படுத்துகிறது .தனித் தமிழில் பேசுவதும் எழுதுவது குறைந்து விட்ட இந்த நேரத்தில் அவற்றை நமக்கு பழக்கத்தில் வைத்திருக்க ஒரு வித வாய்ப்பைத் தருகிறது. மேலும் நம் எண்ணங்களை பதிகிற ஒரு தளமாக இருக்கிறது.


ந‌ம‌க்கு தெரியாத‌ விச‌ய‌ங்க‌ளை க‌ற்றுக்கொள்ள‌வும் வ‌கையாக‌ இருக்கிற‌து. இப்போது த‌மிழில் புகைப்ப‌ட‌க்க‌லை என்று த‌னித்த‌னியாக‌ துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள் வ‌ர‌த்தொட‌ங்கி வெற்றி ந‌டை போட‌ இன்னும் இன்னும் இத்த‌ள‌த்தில் இய‌ங்குவ‌தில் ஆர்வ‌ம் மிகுகிற‌தே த‌விர‌ எப்போதும் தோன்றுகின்ற‌ , போதும் அடுத்த‌து என்ன‌ என்கிற‌ எண்ண‌ம் இல்லை.


எந்த‌ ஒரு க‌ண்டுபிடிப்பும் ந‌ன்மையையும் தீமையையும் கொண்ட‌தாக‌வே இருக்கும் . இணைய‌த்தின் எல்லையில்லா த‌ன்மையை ந‌ன்மைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி ந‌ம் அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்லும் க‌ட‌மை எல்லாருக்கும் இருக்கிற‌து.


மா.சிவக்குமார் நெய்தல்கரை பக்கத்தில் பேசி இருந்த ஒலிப்பதிவு கேட்டதிலிருந்து அவ்வப்போதாவது உபயோகமான தகவல்களைப் பதிய எண்ணம்.

இன்னும் இன்னும் அறிவியல் பார்வை , மண் மழை மரம் மனிதன் என்றும் பதிவுகள் வித்தியாசமான முறையில் வரத்தொடங்கி இருக்கிறது.அவர்களும் எப்பவாவது மட்டும் பதியாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.


டெல்பின் மருத்துவர் என்பதால் மருத்துவம் சம்பத்தபட்ட பதிவுகளை இட்டு அனைவரும் விழிப்புணர்வு பெற செய்வார்கள் என்று ஒரு நம்பிக்கை முளைத்திருக்கிறது. குடிப்பழக்கம் இருப்பவரிடம் கோபமோ வெறுப்போ காண்பிப்பதால் எந்த பயனுமில்லை என்று சொன்ன அவர்கள் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய பதிவு இட்டிருக்கிறார்கள் (தெரிந்து கொள்ளுங்கள் )

குழந்தைகளுக்கென புதிதான தளத்தில் கதை சொல்கிறார்கள்.
மாயவரம் கோயிலைச் சுத்திக்காட்டி இருக்காங்க இதுபோல இன்னும் இன்னும் நிறைய நான் படிக்கும் பல பதிவுகள் மகிழ்ச்சியைத்தருகின்றன.

July 18, 2007

க்ளிக்க்ளிக்

என்னுடைய பொழுதுபோக்கான புகைப்படமெடுப்பதை மேம்படுத்திக்கொள்ள தனியாக ஒரு பதிவு தொடங்கி இருக்கிறேன். இன்னமும் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. புகைப்படக்கலை வகுப்பில் ஒரு போட்டி வைத்திருக்கிறார்கள். அதில் மற்றவர்கள் போஸ்ட் செய்து இருக்கும் படங்களின் பக்கத்தில் என் படங்கள் நிற்கக்கூட முடியாது என்று தெரிகிறது.

இருந்தாலும் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்.

May 10, 2007

என் முதல் ப்ளாக்

நான் முதன் முதலில் ப்ளாக் ஆரம்பித்த போது எழுதிய இரண்டு இடுகைகள் இவை. இது எழுதியது சிறுமுயற்சி ப்ளாக்கில் இல்லை வேறு. அதில் சில குழப்படி நேர்ந்ததால் புது ப்ளாக் உருவாக்கினேன். இங்கே இப்போது இணைத்து வைத்துக்கொள்கிறேன். படித்து விட்டு சிரிக்காதீர்கள் எதாச்சும் எழுத்துல முன்னேற்றம் இருக்கா பாருங்க.

அக்டோபர் 26.
என் முதல் எழுத்து இதுஎழுத வேண்டும் என்ற எண்ணம் மிக இருந்தாலும்எழுத இதுபோன்றதொரு வசதி எனக்கு இப்பொழுது தான் கிடைத்தது.மட்டுமல்லாது படிக்கவும் உங்களை போன்றவர்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இன்றைய தினத்தில் காந்தி தனத்தை பற்றி அனைவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.அந்த விதத்தில் இன்றைய இளையவர்களுக்கு அறிவுரை தரும் படங்கள் வருவது வரவேற்க படவேண்டியதே.[லகெ ரகோ முன்னாபாய் ]

அதிக வருவாய் அதிக சுதந்திரம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் தலைமுறைக்கு இது காந்திய கருத்துக்களை அறிமுகம் செய்கிறது.சிரார்களும் அவருடைய கருத்துக்களை படிக்க விரும்பும் வண்ணம் சிரிப்பு கலந்துதந்துள்ளனர்.கமல் மீண்டும் தரவேண்டும் ஒரு தமிழாக்கம்

இதற்கு வந்த முதல் பின்னூட்டங்கள்

வருக வருக! நல்வரவு!!
By
sivagnanamji(#16342789), At October 26, 2006 3:06 PM ·

நன்றி, முதல் எழுத்துக்கே பின்னூட்டம் தந்து வரவேற்பு தந்ததற்கு .-நான்

தமிழ் பதிவுக்கு புது வரவு.வருக வருக. நல்ல பதிவுகளைத் தருக.நாங்கள் காத்திருக்கிறோம் படிப்பதற்கு.கமலின் காதுகளுக்கு எட்ட வேண்டுமே.பார்கலாம்.நமது சங்கத்து உறுப்பினர்களே வந்து ஆதரவுக்கரம் கொடுங்கள்.
By
தி. ரா. ச.(T.R.C.),


சுத்தமும் பொறுமையும்
சுற்றுபுறத்தை பொது இடத்தைச் சுத்தமாய் வைத்து இருப்பதில்லை என்பதே நம் நாட்டில் உள்ள மிக முக்கிய குறைபாடு.ஆனால் சொல்லும் எவரும் அதை கடைபிடிப்பது இல்லை.அவர்களே கடைபிடிப்பது இல்லை என்றால், குழந்தைகள்?? குடும்பமாய் ஒரு பூங்காவுக்கு சென்ற போது அங்கே கண்ட காட்சியை எழுதுகிறேன்.(யாரது பதிவர் காட்டாறா? இப்போதைய வியர்டு பதிவு படிச்சுட்டு சுத்தத்தைப் பற்றி நீ பேசலாமான்ன்னா கேட்கறீங்க...ஏங்க அந்த அளவு மோசமில்லைங்க...)

ஒரு வெளிநாட்டு தம்பதி இரு குழந்தைகளுடன் வந்து இருந்தனர். சிறுவன் கையில் ஒரு தின்பண்ட கவரை வைத்து இருந்தான் . அது காலியானதும் அவன் அதை அருகிலேயெ கீழே போட்டு விட்டான். தந்தை அதனை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுமாறு கூற அவன் பலமாக மறுத்து கொண்டு இருந்தான். பிறகு நீ போடவில்லை என்றால் நாம் இங்கிருந்து போகபோவது இல்லை என சொல்லவும், சிறிது மனம் மாறிய சிறுவன் அருகில் இருந்த தொட்டியில் போட முடியாது என்றான்.

சரி என்று அவன் தாய் அவனை சற்று தொலைவில் இருந்த தொட்டிக்கருகில் அழைத்து சென்றார்.ஆனால் அவன் அங்கே சென்றதும்.. இல்லை அங்கே என்று இன்னும் தொலைவில் இருந்த ஒன்றை காட்ட ..அவன் தாய் சிரித்த முகத்துடன் ..வா என்று அழைத்து சென்று போடச் செய்தார்...எப்படியும் அவனை குப்பைத் தொட்டியை உபயோகிக்க வைக்க வேண்டும் என்பதற்கு அந்த பெற்றோர் காட்டிய பொறுமை என்னை வியப்பாக்கியது.


ரயில் நிலையத்தில் எத்தனையோ குப்பைத் தொட்டி இருந்தாலும் தேனீர் அருந்திய பின் தண்டவாளத்தில் போடும் இளைஞர்களை படித்தவர்களை அங்கேயே தட்டி கேட்பதற்கு கூட பொறுமை வேண்டும். என்ன அதெற்கு எதெற்கு பொறுமை என்கிறீர்களா? ஆம் ஒருவேளை வந்து விட்டாயா என்பதாய் திட்டு கிடைத்தால் , புத்தரைப் போல் பொறுமை காத்து ,என்னை அல்ல அவன் திட்டுவது என்று நினைத்துக் கொள்ளவேண்டுமே!!!!


இதற்கு வந்த பின்னூட்டத்தில் ஒன்று தான் இங்கே இருக்கிறது மற்ற இரண்டு காணவில்லை.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
அடிப்படை விசயங்களை இந்தியர்களில் 99.99999999....% பேர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது இல்லை. இவர்களுக்குத் தெரிந்தால்தானே கற்றுத்தருவதற்கு.இது போன்ற தவறுகளை ஒரு தவறாகவே எடுத்துக் கொள்ளாத மனப்பான்மைதான் உள்ளது. தண்டவாளத்தில் ஒன்னுக்குப் போனா குத்தமா? என்ற அளவிலேயே இது உள்ளது. இதில் பிச்சைக்காரன் முதல் பெரும் பணக்காரர்கள் அனைவரும் சொரணை இல்லாத ஜென்மங்களே.இரயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்பவன் முதல் உயர் வகுப்பில் பயணம் செய்பவன் வரை அனைவரும் குப்பையை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியும் ஜென்மங்கள்தான்.


வரிசையில் பொறுமையாக நிற்கவும், குப்பையை அதற்கான இடத்தில் (அது இல்லாத பட்சத்தில் தன்னுடன் வைத்து இருந்து வீட்டில் கொண்டு சென்று போடுதல்) போடுவதற்கும் சுய அறிவு இல்லாத ஜென்மங்கள் வாழும் இந்த நாடு என்றும் இந்த விசயத்தில் திருந்தாது.திருந்த வேண்டுமா? ஒரே வழி குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே இது போன்ற விசயங்களில் பெற்றோர்கள் முன்மாதிரியாகச் செயல்பட்டு வர வேண்டும்.இந்த ஜென்மங்கள் பிட்சா தின்னுவது,கார் வங்குவது,ஜீன்ஸ் போடுவது போன்றவற்றில் வெளிநாட்டை கேள்வியே கேட்காமல் காப்பி அடிக்கும்.ஆனால் ...விடுங்கள்... முடிந்தால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இதை கடை பிடியுங்கள்.

நான் எழுதியது ஆமாம் வீட்டுல எப்படியோ வெளியே போனால் பிக்னிக்கோ இல்லை பயணமோ குப்பை போடுவதற்கென்று ஒரு கவர் கொண்டுசெல்வேன். வாழைப்பழத்தோலிலிருந்து சிப்ஸ் கவர் வரை எல்லாம் அதில் போட்டு கொண்டுவந்து வீட்டுக் குப்பைத்தொட்டியில் தான் போடுவது வழக்கம்.

February 15, 2007

ஊக்கமளித்தவர்கள்

வலைப்பூக்கள் எனும் ஒரு சுட்டி வெப்தமிழன் தளத்தில்
கிடைத்தது. சுற்றி சுற்றி வந்ததில் வெட்டிப்பயல் அவர்களின் கதை ஒன்று படித்தேன். ஆஹா இது உன்கதை தானே என்று எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் பின்னூட்டத்தில். அவரோ சுற்றிலும் இருப்பவர்களை கவனித்து எழுதுவதே என்று மறுத்துக்
கொண்டிருந்தார். நாமும் தான் கண்டுறுக்கோம் கேட்டும் இருக்கோம் . இப்படி கதை எழுதி பார்க்கணும்ன்னு நினைச்சாலும் யார் போடுவா நம்மளோட எழுத்தை எல்லாம்ன்னு முன்பெப்போதும் முயற்சிக்கவே இல்லை.


சித்திரமும் கை பழக்கம் , எழுத எழுத , படிக்க படிக்க
எல்லாம் வரும்ன்னாலும் படிக்க கருத்து சொல்ல (திட்ட)
யாராச்சும் நாலு பேர் வேண்டாமா? இப்படி யோசிச்சுட்டு விட்டாச்சு. கவிதைங்கர பேருல சிலத கிறுக்கி நோட்டுல
சேமிக்கறது. படிச்சதுல பிடிச்சதா நாலு விஷயத்த பின்னால திருப்பிப் பார்க்கன்னு ஒரு டைரியில சேமிக்கரதுன்னு இருந்துட்டேன்.

நம்மளே அடுத்த ஆள் (அப்படி எல்லாம் பிரிச்சு பேசக்கூடாது தான் ) சம்பாத்தியத்துல சாப்பிடறோம். காசைக் கரியாக்கக் கூடாதுன்னு சும்மா இருந்தேன். தமிழ்மணம் வந்து பார்த்தா எல்லாம் இலவசமாம்.ப்ளாக் இலவசம். படிச்சு நல்லதாவோ, இப்படி இல்ல அப்படின்னு கருத்து சொல்லவோ கூட ஆள் இலவசமா கிடைக்கறாங்க ன்னு தெரிஞ்சுது.


கணினியோ இருக்கு.கணவர் வேலைக்கென்று வீட்டு உபயோகத்துக்கும் முழு நேரம் இணைப்பு இருக்கு. அப்புறம் என்ன களத்தில் இறங்கி சோதிச்சுப் பார்த்துடுவோம் நம்ம திறமையை என்று எழுத ஆரம்பிச்சுட்டேன். படிக்கறவங்களை சோதிக்கறமோன்னு யோசிச்சா நாம தொடர்ந்து எழுத முடியாது அதனால அப்படி யோசிப்பதை மறந்தாயிற்று. கணவரும் பெண்ணும் படிக்கலன்னாலும் (அதனால தானோ??) முயற்சிக்கு ஊக்கம் தந்தார்கள்.

முதலில் ஆரம்பித்த வலைப்பதிவு சரியாக வேலை செய்யவில்லை. அதில் முதலில் வாழ்த்தியது சிவஞானம்ஜி. பிறகு பாடாய்பட்டு இந்த பதிவு ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த உடன் சேதுக்கரசி வந்து வாழ்த்தி வரவேற்றாங்க.மறுமொழி திரட்டப்பட்டால் தான் கவனிக்கப்படும் அப்படிங்கறது விளக்கிட்டு போனாங்க. பாலபாரதி வந்து விரைவு படுத்தியே ஆகனும்ன்னு சொல்லிட்டு போனாங்க. இதுல இருக்கற ஆபத்து அப்ப விளங்கல. பொன்ஸ் கிட்ட சில சந்தேகம் கேட்டுகிட்டேன். எப்படியோ முட்டி மோதி அதையும் செஞ்சாச்சு.



மேம்பாலம் பத்தி எழுதியபோது அனுபவம் மிக்க பதிவர்கள் வந்து பின்னூட்டம் போட்டதுல கவனம் பெற்று விட்டொம்ன்னு மகிழ்ச்சி கிடைத்தது. பூங்காவில் நம்மோடது வருமான்னு யோசிச்சதுண்டு.அப்புறம் வந்தது . வந்ததும் அடுத்து சின்ன பிள்ளையாட்டம் அட்டையில பெயர் வரல்லையேன்னு தோன்றியது . அப்புறம் பூங்காவில் அட்டையிலும் வந்தது ஒரு பதிவு. இது ஒரு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது .இன்னும் நன்றாக எழுதத் தூண்டுகிறது.

வலைப் பதிவு சந்திப்புகள் பற்றி படித்து அதில் ஒரு ஆசை. நாமும் எழுத வந்தாச்சு ரோல் மாடல் இருக்கணுமே, துளசியோட பதிவுகள் படிக்கும் போது அப்படி தோன்றியது. அவங்க இந்தியா வந்ததும் பார்க்கணும்னு முயற்சி செய்தேன். பொன்ஸ் உதவியால முடிந்தது. பொன்ஸ், துளசி, மதுமிதா, அருணா, நிர்மலா மற்றும் மீனா எல்லாரும் சந்தித்தோம். எழுதுங்க என்று உற்சாகப் படுத்தினார்கள்.



சிலர் தங்களது பக்கத்தில் படிக்கிற சிலவற்றை சேமித்துவைப்பது பார்த்திருக்கிறேன். அடுத்து இப்படி நம்மளோடத யாராச்சும் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படறமாதிரி என்னைக்காச்சும் எழுதனும் என்று ஆசைப்பட்டாச்சு. ஆசைப் பட என்ன அளவு ?? ஆக
அதுவும் நிறைவேறிப் போச்சு. மதி கந்தசாமி அவங்க பதிவுல என் பெயரைப் பார்த்தேன். நன்றி மதி.
பாஸ்டன் பாலா அவர்கள் சேமித்து வைக்கும் தளத்தில்
என்னுடைய பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். சங்கத்தில் ஒருமுறை என் பதிவு பரிந்துரைக்கப்பட்டது. நன்றி பாலா,
நன்றி இளா.


பின்னூட்டங்கள் இட ஆரம்பம் முதலே ஒரு சிறு தயக்கம்
இருந்தது .ஒரே ஒரு முறை தவறுதலாக பின்னூட்டமிட்டு
விட்டேன். இருந்த போதிலும் சில விஷயங்களில் மற்றவர்களின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டங்கள் கவர்ந்தது என்று பாராட்டியவர்கள் தந்த ஊக்கத்திற்கும் நன்றி. பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டம் அளித்து இதுவரை கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

பெற்றோரும் கணவர் வீட்டாரும் மற்றும் நட்பு வட்டமும் கூட ஊக்கமளிக்கவே தொடர்கிறது பதிவுகள்.