September 30, 2009

கும்மியடிப்பெண்ணே! விடுமுறை என்று கும்மியடி!

நவராத்திரி பஜனைக்கு எங்க பாட்டு டீச்சர் வீட்டுக்கு போயிருந்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக நிஜக்கும்மி அடிச்சேன். எத்தனையோ வலை பின்னூட்ட கும்மிகளின் போது நினைப்பேன் நாம் நிஜம்மா கும்மியே ஆடியதில்லையே என்று .. அதற்கு ஒரு வாய்ப்பு குடுத்த டீச்சருக்கு என் நன்றிகள். பெரியவங்க அவங்களும் கும்பலில் நடுவில் நின்று அழகாக சக்தி பாட்டு பாடி கும்மி அடித்தார்கள். எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியா இருந்தது .
----------------------------------------
சில விளம்பரங்களில் புதிர் போடுவாங்க... அப்படி புதிய தலைமுறை இதழுக்கு விளம்பரம் வந்துகொண்டிருந்தது. முதல் முறை வந்த போதே ஐந்து ரூபாய் மற்றும் இளைஞர்கள் என்கிற குறிப்பைக் கொண்டு அது புதியதலைமுறைக்கானது என்று கண்டுபிடிக்கமுடிந்தது. முதன் முறையாக புதிர் விளம்பரம் ஒன்றை நானே கண்டுபிடித்திருக்கிறேன் மகிழ்ச்சி தானே..

--------------------------------------------
எங்க வீட்டு கொலுவின் படங்கள். சின்னகிராமம் .







தாமரைக்குளம்.
ஓங்கியுயர்ந்த ஆலமரம் அங்கே அழகான இரண்டு கிளிகள்... நாங்கள் அமைத்து வைத்த பஞ்சாயத்து மேடை . (விழுதுகள் மகளே சொன்ன யோசனை) விளக்குத் திரிகளைக் கொண்டு செய்த விழுதுகள். கோயில் இல்லாத ஊர் உண்டா..? பிள்ளையாரப்பா!..என் கனவான திண்ணை வைத்த வீடுகள். கீரை பதியனிட்ட தோட்டம். கிணறு.


எப்பப்பாருங்க நம்ம மக்கள் ஒரு கவர் குடுங்க என்றபடி ப்ரசாதங்களை போட்டு எடுத்துச் செல்ல கவர் கேப்பாங்க. நிஜமாகவே எங்கள் வீட்டில் பாலிதின்கள் கிடையாது. இதுபோன்று எப்படியாச்சும் பேக்கிங்க் கவர்கள் கட்டியே வந்தால் ஒழிய.. நான் தவிர்த்துவிடுவேன். அதனால் இம்முறை எல்லோரிடமும் நான் கவரில்லை கவர் இல்லை என்று சொன்னதால் ஏன் என்று கேட்பவர்களிடம் சின்னப்ரசங்கமே செய்துவிட்டேன். வீட்டில் முன்பு வேலை பார்த்தவங்களில் ஆரம்பித்து கீழ் வீட்டு டீச்சர் வரை எல்லோருக்கும் செய்தியை இம்முறை அழுத்தமாக சொல்லி இருக்கிறேன். ஒருநாள், ஒரு வேளை,கவர் வேண்டாம் என்று என்னால் அவர்கள் பொருட்களை கையில் எடுத்துச்சென்றது ஒரு விதமகிழ்ச்சி தான்.





வருபவர்களுக்கு கொடுப்பதற்கான நீலமும் சிவப்புமான கிண்ணங்கள்.

நான் செல்லும்போதே துணி பை கொண்டு சென்றேன் . மற்றொரு வீட்டில் அப்படி கவர் கேட்கக்கூடாது என்று, நான் சொன்ன பேச்சை கேட்டுக்கொண்டு ( பயந்துகொண்டு) என் தோழி தன் சேலை தலைப்பிலேயே தேங்காய் வெத்தலை பாக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.. வேறென்ன வேண்டும் ?
----------------------------------------
அப்பறம் இத்தனை மகிழ்வான விசயம் தந்திருக்கிறேன் . இனி விசயம் ஒன்று. ஒரு மாதம் எனக்கு விடுமுறை வேண்டும். தோள்பட்டையிலிருந்து எல்போ வரையிலான பகுதியில் விட்டு விட்டு வலி இருக்கிறது. பதிவர் நண்பர்களுக்கு பின்னூட்டமிட முடியாமைக்கு வருந்துகிறேன்.

September 22, 2009

எப்படி வசதி?

மின்னரட்டையில், சிலர் சமையல் ஆச்சா? வேலை ஆச்சா? என்று கேட்பது வழக்கம்.. நண்பரொருவர் வித்தியாசமாவே சிந்திப்பவர். சாப்பிட்டாச்சா / சாப்பாடு போட்டாச்சா ? என்று கேட்டிருந்தார்.. எல்லாரும் சாப்பிட்டப்பறம் நானும் சாப்பிட்டுட்டேன் என்று புத்திசாலித்தனமாக (?!!) சொல்லிமுடிக்கும் முன்பாக... அது ஏன் அப்படின்னு கேள்வியைப் போட்டார்.. வசதி என்பதே பதில். உண்மையில் இந்த கட்டு இப்படித்தான் பழக்கம் இல்லையென்றாலும் இது வசதி, எப்படின்னா? முதல்லயே நாம சாப்பிட்டு மத்தவங்களுக்கு போதவில்லை என்றால்.. புதிதாக இன்னொன்று செய்யவேண்டி இருக்கும். இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?

-------------------------------------------

புதியதாக தமிழில் எழுதியதை படித்துக்காட்டும் புது தொழில்நுட்பம் வந்திருப்பதாக மாலன் வலைப்பூவில் கண்டேன். அது உண்மையில் யாருக்கு உதவியாகக் கண்டுபிடிக்கப்பட்டதோ ? ஆனால் என் போன்ற சோம்பேறிகளுக்கு வேறொரு வகையில் உதவக்கூடும். மிக நீண்ட பதிவுகளை வாசிக்க சிரமமா? வெட்டி ஒட்டினால் போதும் பதிவை வாசிக்க வேண்டாம், கேட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கதைகளை இதனைக்கொண்டு வாசிக்க வைக்கலாம்.. :) நல்லா இருக்குதில்லயா..?
----------------------------------------------

செருப்புக்கு வந்த மரியாதை பாருங்களேன்.. காதில் செருப்புகள்.. விதவிதமாய்.. இனி செருப்பு வாங்கனும்ன்னா தோடு கடைக்கும் போவோமே?

படத்தை பெரியதாக்கி செருப்பழகைக் காணலாம்..
------------------------------------

September 17, 2009

நான் இயக்குனரான கதை

முன் குறிப்பு : சும்மாத்தானே இருக்கோம்.. பழைய பதிவுகளுக்கு லேபிள்களை சரிப்படுத்துவோம்ன்னு நினைத்துக் கொண்டிருந்த போது.. என் முதல் முயற்சியான இக்காட்சிக் கவிதைக்கு லேபிள் குறும்படம்ன்னு போடலாமோ போட்டுட்டு அப்படியே மீள்பதிவாக்கலாமோ என்று தோன்றியது . மீள்பதிவாக்கியாச்சு. பதிவின் பழைய பின்னூட்டங்களுக்கு ...

மேலும் சில சுய விளம்பரங்கள்..
குறும்படம் எடுக்க போகிறீர்களா சில குறிப்புகள்...

என் இரண்டாவது முயற்சி


அன்புடன் குழுவில் எனது காட்சிக்கவிதை இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

என் கவிதை வரிகள்:


பூங்கா
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து
வெளியேறி திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.





நடுவர் நிலாவின் கருத்து:





இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு: "பூங்கா"
காட்சிச் சுவை நன்று. குழந்தைகளையும் முதியவர்களையும் கவிதைக்கேற்பப் படமாக்க மிகுந்த முயற்சி தேவைப்பட்டிருக்கும். ஆனால் இவ்வளவு குட்டிக் கவிதையில் கூட காட்சிகள் திரும்பத் திரும்ப வந்ததைத் தவிர்த்திருக்கலாம். சில இடங்களில் ஃப்ரேமின் ஓரத்தில் நிழல் விழுந்ததையும் கவனித்திருக்கலாம். கவிதையைக் காட்சியில் எழுதியதால் காட்சியிலும் ஒட்ட முடியாமல் கவிதையிலும் ஒட்ட முடியாமல் போகிறது சில வேளைகளில். இவ்வளவு செய்தவர்கள் கவிதையைப் பின்னணியில் வாசித்திருந்தால் அம்சமாய்ப் பொருந்தியிருக்கும். பின்னணி இசையும் எடிட்டிங்கும் ஓகே. கவிதை ஏனோ பூர்த்தியாகாத உணர்வைத் தருகிறது. ஒவ்வொரு பருவத்தின்உணர்வுளையும் க்ளோஸப்பில் ஓரிரு ஃப்ரேம்களாவது வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்






அன்புடனில் வெளிவந்த புகாரியின் கடிதம்:
(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
அன்பின் முத்துலட்சுமி,
நாற்சுவரின் சிறையிலிருந்து வெளியேறி திறந்தவெளியில் பொழுதெல்லாம் இனிதாக்கிச் சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
நறுக்கென்று ஒரு நல்ல கருத்து. அதை மிக எளிமையாய்ச் சொல்லிச் செல்லும் உங்கள் கவிதையும் காட்சிகளும்.
மரங்களை வெட்டிவிட்டு மாளிகைகள் கட்டும் முட்டாள் மனிதர்களுக்கு நல்லதோர் உபதேசம்.
கட்டிடங்களுக்கு இடமே இல்லாத நியூயார்க் நகரின் நடுவிலும் பெரியதொரு பூங்கா இருக்கும் "சென்ட்ரல் பார்க்" அது இல்லாவிட்டால் நியூயார்க்கும் ஒரு மயானம்தான்.
மீண்டும் மீண்டும் வரும் அதே காட்சிகள் அலுப்பைத்தருவது உண்மைதான் என்றாலும் நல்ல படைப்பு
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, காட்சியாய் அமைத்து தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி




அன்புடன் குழுவிற்கு நான் எழுதிய கடிதம்:


வெற்றி பெற்ற செய்திமுதலில் சகபதிவர் மங்கை மூலம் அறிந்தேன் , அப்போதே மகிழ்ச்சி அளவிட முடியாமல் இருந்தது. குடும்பத்தில் எல்லோரும் பாராட்டினார்கள்.
கவிதை உருவானகதை மிகப் பெரியது. போட்டியில் இந்த பகுதி காட்சிக்கவிதை புதுமையாக இருந்தது. இப்படி ஒரு முயற்சி செய்ய வெகுநாளாகவே ஆசையிருந்தது. இப்போட்டி அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கவிதை ஒரு நாள் காலை கண்விழித்ததும் சிறு பொறியாக தோன்றியது. உடனே அதன் சுருக்கத்தை எழுதி வைத்தேன். பின் சமையலுக்கு நடுநடுவே அதன் விரிவாக்கமும்... வீடியோவுக்கான ஸ்டோரிபோர்டுக்கான வேலையும் குறிப்பெடுத்தேன்.


உடனேயே காட்சியை எடுக்க ஆசை அளவிட முடியாமல் போனது. ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னால் சிந்தாநதி அவர்களின் ஒரு விவாதக்களப்போட்டியில் பரிசாக எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. நான் பதேர்பாஞ்சாலியின் நாவலின் மொழிபெயர்ப்பு புத்தகம் கேட்டிருந்தேன். எழுத்தாளரின் பெயர் குறிப்பிட தவறி இருந்தேன் அதனால் அவர்கள் பதேர்பாஞ்சாலி படத்தினைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார்கள். அதுவும் ஒரு நல்ல புத்தகமே. இளைய இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாடபுத்தகம் அது.



அதில்குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விசயம். சத்யஜித்ரே ஒரு காட்சியை மூங்கில் புதர்களில் எடுத்தாராம். பணம் குறைந்ததால் மீதி காட்சி தொடர நாள் ஆகியதாம் அதற்குள் புதர் காடாகிவிட்டதாம். அதே காட்சி தொடர அவர் ஒரு ஆறு மாதம் காத்திருந்தாராம் காட்சியமைப்பில் அத்தனை ஒரு கவனம். அட யாரையெல்லாம் உவமை சொல்றான்னு நினைக்காதீங்க. முயற்சி செய்யும் போதே பெரியதாக கனவு காணனும் இல்லையா. அதனால் காத்திருந்து ஒரு 10 நாட்களாக காட்சிகளை எடுத்து பின் எடிட் செய்தேன். பின் அதனை ஒரு வடிவத்துக்கு கொண்டுவர மேலும் ஒரு வாரம் ஆனது எனக்கு ஏனென்றால் முதல் முயற்சி , கணினி தொழிட்நுட்பத்தில் தடுமாற்றம்.




நடுவர் நிலாவுக்கு நன்றி. அவர் குறிப்பிட்ட சில விசயங்கள் பாடலாக அதை பிண்ணனியில் ஒலிக்க செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது அதற்கும் முயற்சி செய்தேன் அப்போது எனக்கு பாடலை பதிவு செய்ய ஒரு நல்லதொரு சாப்ட்வேர் தெரியவில்லை. நிழல் படிந்தது போல் சில இடம் என்றது எனக்கு தெரிந்தே இருந்தது. அது மிக த்தொலைவில் விளையாண்ட குழந்தைகளின் காட்சி , எடுத்தபின் தான் தெரிந்தது நிழல் விழுந்தது. காட்சி திரும்ப கிடைக்காது என்பதால் அதை இணைத்திருந்தேன். மீண்டும் மீண்டும் வந்தது அது எல்லா காட்சியை இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட வீடியோ சாப்ட்வேர் அப்படித்தான் இருமுறை காட்சிகளை காண்பிக்கிறது எப்போதுமே.. கவிதை எழுத்தாக வருவதால் காட்சிகளை மறுமுறை பார்க்க வசதியாக இருக்கட்டுமே என்று அப்படியே விட்டுவிட்டேன்.


அன்புடனின் இக்கவிதைப்போட்டி மிகசிறப்பான ஒன்று. நன்றாக நடந்தது. எல்லாருக்கும் அறிவிப்பு சென்று சேர்க்க எடுத்த முயற்சி ஆகட்டும் , அடிக்கடி மெயில் செய்து தகவல்களை தெரிவிப்பதில் ஆகட்டும் மிக சிறப்பான செயல்பாடுகள். மேலும் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள். அதற்கான ஆலோசனை தரும் அளவு யோசனை என்னிடம் இல்லை. என்னைப்போன்ற முயற்சி செய்போர்களுக்கு இது ஒரு நல்லதொரு வாய்ப்பளித்தது. அன்புடன் குழுமேல்மேலும் வளர ....வாழ்க வளமுடன். நன்றி

September 7, 2009

பரோட்டா செய்த கதை

புரோட்டா வாங்கிக்குடுத்து புரணி கேட்பவர்கள் மத்தியில் புரணி பேசப்போன இடத்தில் புரோட்டா செய்வதற்கான பக்குவம் கேட்டு வரும் அளவு பக்குவமானவள் நான். பொள்ளாச்சியில் இரண்டு வாரம் இருந்தாலும் கடைசி ரெண்டு நாளில் பக்கத்து வீட்டுல இருந்து வந்த ரெண்டே ரெண்டு பரோட்டாவுக்கு நாங்க எல்லாருமா அடிச்சிக்கிட்டதுக்கப்பறம் எங்களுக்கும் செய்ய சொல்லித்தரனும்ன்னு கேட்டுகிட்டோம். பக்கத்துவீட்டு அம்மணி நீங்க தில்லிலேர்ந்து வந்திருக்கீங்க கொஞ்சம் சப்ஜி சொல்லித்தாங்கன்னு கேட்டாங்க..அவங்களுக்கு சன்னா ,பாலக் எல்லாம் தெரிஞ்சுது வேற எதாச்சும்ன்னு இழுத்தாங்க.. தில்லி என்னங்க தில்லி எல்லா சப்ஜிக்கும் ஒரே ஸ்டார்ட்டிங்க் தான்னு சொல்லி ஸ்டார்ட் செய்தேன்..

வெங்காயம், தக்காளி,இஞ்சி ,பூண்டு தான் அடிப்படை . இதுகூட உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வச்சிக்கிட்டே எந்த சப்ஜியோடும் கூட்டு போட்டுக்கிட்டு எல்லா மேஜிக்கும் காட்டலாம். ஒரு ரெசிப்பி சொல்லிட்டு மத்ததெல்லாம் அதே தான் அடிப்படைன்னு மேலே
ட்ரை சப்ஜிக்கு போயிட்டேன். உருளை + முட்டைக்கோஸ், உருளை + முள்ளங்கி , உருளை + வெண்டைக்காய் உருளை + மட்டர் எக்ஸட்ரா எகஸட்ரா.. நோட்ஸ் எடுத்துக்கலாம்ன்னு நினைச்சது வீண் தானோன்னும் நான் தான் என் வீட்டுல சமைப்பனா இல்லையான்னும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல..

( யாரு அது பரோட்டா கதையில் பரோட்டாவைக் காணோம்ன்னு தேடறது? இங்கல்லாம் நல்லா கேள்வி கேளுங்க.. காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க)

கடைசியா என்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துல நானே நேரா அவங்க அடுக்களை களத்தில் புகுந்து என்னோட ஸ்பெஷல் சப்ஜியை செய்துக் காமிக்கிறதா ஒப்புக்கிட்டேன். வெங்காயம் , உருளைக்கிழங்கு, கத்திரிக்காய்,வெண்டைக்காய் , குடமிளகாய் , தக்காளி எல்லாத்தையும் வெட்டி வச்சிட்டு கூப்பிடுங்கன்னு சொல்லிட்டேன். அன்னைக்குன்னு பாத்து அவங்கவீட்டுக்கு சில நண்பர்கள் வந்திருந்தாங்க.. அவங்க மனைவிகளும் இதெல்லாம் சேத்து ஒரு காய் கேள்விபட்டதே இல்லைன்னு அடுக்களைக்குள்ள புகுந்துட்டாங்க..

நான் எழுதின வரிசை முறையாகவே காய்களை போட்டு வதக்கி மசாலாத்தூள் போட்டு மூடிமூடி வச்சு செய்தா கடைசியில் வர்ர வாசனையை வைத்து “ அம்மா என்ன செய்யறீங்கன்னு” வெளியே விளையாண்டுகிட்டிருந்த என் மகள் வந்தப்பதான் எல்லாருக்கும் அதோட மாயம் புரிந்தது. வித் எண்ணெய் விடாத ரொட்டியும் சொல்லிக்குடுத்ததில் அவங்க எல்லாரும் எனக்கும் சமையல் தெரியுமென்று ஒத்துக்கிட்டு பரோட்டா ரகசியத்தை சொல்லித்தர சம்மதிச்சாங்க..

பரோட்டாக்கு அரைக்கிலோ மாவுக்கு கொஞ்சம் உப்பு ஒரு ஸ்பூன் ஜீனி சேத்து கொஞ்சம் கொஞ்சமா மாவு பிசைஞ்சாங்க ( நான் பாத்துட்டிருந்தேன்) என் பையன் ஒரு உருண்டை மாவை அவங்க சொன்னமாதிரியே பிசைந்து செயல்முறை வகுப்பெடுத்துக்கிட்டான். மாவு பிசைஞ்சு முடிச்சதும் 'U' வடிவத்துல உருளையாக செய்துவச்சிட்டாங்க. ஒரு கிண்ணத்துல நல்லெண்ணெயில் 3 ஸ்பூன் அரிசிமாவைக் கொட்டி அதை நல்லா கோழிக்கு மஞ்சள் தடவுறமாதிரி தடவி மூடிவச்சுட்டாங்க. காலையில் ஊறவச்சா ராத்திரிக்கும் ராத்திரி ஊறவச்சா காலைக்கும் அதை பரோட்டாவாக்கலாமாம்.

(மேற்கொண்டு கதைக்கு போறதுக்கு முன்னால்: இதைக் கத்துக்கிட்டு வந்து சிலமாதங்களான பின்னும் யாருக்காக கத்துக்கிட்டு வந்தனோ அவங்களுக்கு செய்து தரவே இல்லை. நேற்று தான் அதுக்கான நேரம் வந்தது.)

உருண்டைகளா செய்து அதை நீட்டமான பலகையில் போட்டு எண்ணைய்+ அரிசிமாவுக் கலவையை தடவித் தடவி நீட்டி நீட்டி கிழிஞ்ச பனியன் மாதிரி செய்திடனும்.எங்க வீட்டுல பலகை இல்லாததால் அடுக்களை க்ரானைட் மேடையையே நல்லா சுத்தம் செய்து பனியனை கிழித்தோம்.(மகள், ”அப்பா இங்க வந்து பாருங்க கிழிஞ்ச பனியன்”னு எதுக்கு கூப்பிட்டு காட்டினா??!!..பரோட்டாவுக்காக அவ என் கட்சியில் சேர்ந்திட்டான்னு உதவிகள் செய்ததிலிருந்தும் இதிலிருந்து புரிஞ்சுது :) ) ஒருமுனையைப் பிடிச்சு தூக்கி முறுக்கு சுத்தறாப்பல சுத்தி வட்டமாக்கி வச்சிட்டோம்.

எல்லா முறுக்கும் சுத்தினப்பறம் அதை லேசா அழுத்தாம சின்னச் சின்ன பரோட்டாவாக்கி சுட்டு எடுத்தாச்சு. ரெண்டு பரோட்டா சுட்டதும் அழுத்தி பிடிச்சு மேலும் கீழுமா இழுத்து விட்டாத்தான் லேயர் வருமாம் கை எல்லாம் சிவந்து போச்சு.. உப்புதான் கொஞ்சம் கம்மி ஆனா பரோட்டா சூப்பர்ன்னு பின்னூட்டம் கிடைத்தது. பரோட்டாக்கு குருமாவும் , தயிர்பச்சடியும் செய்யப்பட்டு இருந்தது.எல்லாரும் அதை சாப்பிட்டு.. அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்..................