April 23, 2007

தில்லியில் ஒரு சந்திப்பு

பாபா மெயிலில் வந்து சொன்னார் வலைப்பதிவு சந்திப்பு ஒன்று தில்லியில் நடத்தலாம் ஆயத்தமாகுங்கள் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது பந்தா நாங்களும் சந்திப்பு நடத்தறோம் தில்லியில் என்று. பெரிசா தலைக்கு மேல ஒளிவட்டம் சுற்றத்தொடங்கிடுச்சு.. மீட்டிங் இருக்கு மீட்டிங்க் இருக்குன்னு விட்ட பந்தால வீட்டுக்காரர் ஆமா நாங்கள்ளாம் எத்தன மீட்டிங் பார்த்துருக்கோம், நீங்க போடற மீட்டிங்க்கு இத்தன ஆர்ப்பாட்டமான்னு வேற கேட்டாங்க..அடங்கினமா, இல்லயே...

இடத்தை முடிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் பாஸ்டன் பாலாவுக்கு கன்ப்ர்ம் செய்யவும் தாமதமாகிவிட்டது. தில்லி வந்து சேர்ந்ததும் அவரும் தொடர்பு கொள்வதாகச் சொல்லி இருந்தார் ஆனால் அவருக்கு என்ன பிரச்சனையோ இது வரை எந்த செய்தியும் இல்லை. வெள்ளிக்கிழமை மதியம் வரவங்கள வச்சு மீட்டிங் எப்படியும் நடத்தலாம் அப்படின்னு முடிவு செய்தோம். பின்னூட்ட நாயகன் சென்ஷி , மங்கை , நான் ,சிவமுருகன் அப்புறம் அயன் உலகம் என்ற பதிவை எழுதும் நண்பர் வருவதாக சென்ஷியிடம் சொல்லி இருந்தாராம் ஆனால் வேலைப்பளு வர இயலவில்லை.

தில்லியில் துளசி , அருணா போன்ற பெரிய பதிவர்களுடன் சந்திப்பு நடத்தி இருந்தாலும் இது தில்லி தமிழ் வலைப்பதிவாளர்களின் முதல் சந்திப்பு .

வீட்டுல கட்டிடவேலை நடப்பதால் வீட்டுக்காரரை லீவ் போட்டு மேற்பார்வை பார்க்கச் சொல்லிவிட்டு மகளுக்கு என்ன என்ன செய்யவேண்டும் என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டு..பையனை ஒருவழியாகத் தூங்கவைத்துவிட்டு 2 மணி சந்திப்புக்கு 2.15 க்கு லேட்டாகப் போகிறோமே என்ற கவலையோடு மங்கையும் நானும் போய் நின்றால், ரெஸ்ரணட் வாசலில் இருந்து போய் போன் செய்தால், வரவேண்டிய மற்றவர்களான சிவமுருகன் ஆபிஸிலேயே மாட்டிக்கொண்டதாகச் சொல்கிறார். சரி சென்ஷியாவது வருவார் என்று உள்ளேபோய் உட்கார்ந்தோம்.

என்ன வேண்டும் என்ற பேரரரிடம் லெமன் ஜூஸ் என்றதும் சாப்பிடற நேரத்தில் வெறும் ஜூஸா என்று ஒருமாதிரி பார்த்தார் ..இல்லப்பா நண்பருக்குக் காத்திருக்கிறோம் அப்புறமா சொல்கிறோம் என்றோம். சென்ஷி க்கு போன் செய்தால் டிராபிக்க் பஸ் ஓடலை அப்படி இப்படி ன்னு சாரி சாரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று பதில் வந்தது. நாம தான் தினமும் போனிலேயே வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசறோமே நம்மளை இப்படி ஹோட்டல்ல பேசவிட்டுட்டாங்களே என்று புலம்பிக்கொண்டே பல முக்கிய முடிவுகளை எடுப்பது பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். அது என்னவா?, அப்பறம் சொல்றேன்.

நேரம் ஆக ஆக நாளைக்கு இந்த சந்திப்பு பற்றி எழுதினா "ஏப்ரல் ஒன்று ஏப்ரல் 20 ல் வந்தது " , ''வருகிறார் வருகிறார் சென்ஷீ வருகிறார்" இப்படி எல்லாம் தலைப்பு வச்சால் என்ன என்று யோசனை. முதல் 2 மணி நேரம் மங்கையும் நானும் தான் சந்திப்பு நடத்தினோம். அடுத்த மூணாவது மணிக்குத் தான் சென்ஷி வந்தார். ஜோடியாக யாராவது வந்தால் அட சென்ஷிக்கு யாரோ செட்டாகி சந்திப்புக்கே கூட்டி வந்துட்டார் போலயே என்று பார்த்தோம் கடைசியில்.

ஒரு வழியா வந்து சேர்ந்தார் ஒடிஞ்சு விழறமாதிரி இருந்தார். சாரிக்கா சாரிக்கா (எத்தனை சாரி சொல்லி இருப்பார் னு கணக்கு வைக்கலை) என்று ஆரம்பித்து நான் தான் மங்கை என நினைத்து ஆரம்பித்தார். இல்லைங்க நான் முத்து லெட்சுமி அது மங்கை என்று அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

ஒரு முடிவு எடுத்திருக்கிறோம் அந்த முடிவு தில்லியில் எடுத்த முடிவு என்பதால் முக்கிய முடிவாக்கும் என்றதும் என்னதுங்க அது நானும் வேணா வழிமொழிகிறேன் அப்படின்னார் வேற வழியே இல்ல வழி மொழிஞ்சு தானே ஆகணும் மெஜாரிட்டி ஒத்துக்கிட்டாச்சே...அதாங்க மொத்தமா சந்திப்புல இருந்த மூணு பேருல ரெண்டு பேர் மெஜாரிட்டி தானே.

என்னன்னா நாம ஒருத்தருக்கு போடற பின்னூட்டத்துக்கு அவங்க பதிலுக்கு நன்றி அப்படின்னு போடுவது அவசியமே...நாங்க சொல்லுவோம்.எங்களுக்கும் மத்தவங்க நன்றி சொல்லணும்ன்னு எதிர்பார்ப்போம். நன்றி சொல்லைன்னாலோ பின்னூட்டத்திற்கு பதில் சொல்லைன்னாலோ அவர்களுக்கு பின்னூட்டமிடாமல் போராட்டம் செய்வோம்.

சென்ஷி பெயர்க்காரணம் என்ன நாங்கள்ளாம் எப்படி வலைப்பதிய வந்தோம்..சந்திப்பு எந்த விதத்தில் வலைப்பதிவாளர்களுக்கு உதவியா இருக்கு. இப்படி நிறைய பேசினோம்.

மங்கை புதிதாக எயிட்ஸ் பத்தி வலைப்பதிவு தொடங்குதாக இருக்காங்களாம். அப்புறம் இப்ப எதப்பத்தி எழுதறாங்களாம்?..அங்கே எயிட்ஸ் பத்தி எழுதிவிட்டால் இந்தப்பதிவில் என்னதான் எழுதப் போகிறார்களோ பாவம்.

வெட்டி ஒட்டுவது தப்பா, மொக்கை பதிவு அதாங்க சென்ஷி யின் புள்ளிவிவரம் மாதிரி ஜோக் பதிவு எழுதுவது தவறா , கவிதை என்று கிறுக்குவது தப்பா என்று கேள்விகளாக அடுக்கினாலும் நாலு பேருக்கு அதுனால ஒரு ஆபத்து வராதுங்கற போது எதுவுமே தப்பு
இல்லன்னு முடிவு கிடைத்தது.

சென்ஷியைப்பார்த்து நீங்க வலைப்பதிவு உலகத்திற்கு என்ன செய்றீங்க என்றதும் புதுசா வரவங்கள்ளேர்ந்து எல்லாருக்கும் பின்னூட்டம் போட்டு பாரட்டுறேன். அதான் என்னால ஆன சேவை என்றார்..சென்ஷி .. தேவை உங்கள் சேவை அப்படின்னு பாராட்டினோம். மங்கையிடம் சென்ஷீ உங்க பின்னூட்டம் அதிகமா பாக்கமுடியறது இல்லயேன்னு கேட்டார் . ஆபிஸிலே தமிழார்வத்திற்கு இருக்கும் தடைப்பற்றி மங்கை கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பாகசவில் தலைமைப்பொறுப்பு எப்படி வந்தது , யாரவது பதவிகொடுத்தாங்களா இல்லை யாரும் இல்லாததால் தானாகவே பதவியை எடுத்துக்கொண்டாரா என்று சென்ஷியின் பதவி பற்றி ஒரு அலசல் நடந்தது.

வலையாசியரா இருந்தப்போ வித்தியாசமா தொடுத்ததெல்லாம் தானாவே செய்தாரா இல்லை மண்டபத்தில் எழுதி வாங்கி வந்தாரா, என்றதும் இன்னும் நிறைய ஐடியா இருக்குன்னார் சொன்னா நாங்க யூஸ் பண்ணிடுவோம்ன்னு சொல்ல மறுத்துட்டார். அநியாயம். எல்லாம் பேசி முடிஞ்ச அப்புறம், சென்ஷி கேக்குறார், அக்கா இப்ப நம்ம என்ன எல்லாம் பேசினோம், இன்னொரு தடவை சொல்லுங்க... எனக்கு மறந்துடும் இல்லைன்னா கொஞ்சம் நோட்ஸ் எழுதுங்களேன் என்றார். நல்லா இருக்கே மறந்துப்போகும்ன்னா மாணவர் தான் நோட்ஸ் எடுக்கணும் மேடத்துக்கிட்டயா நோட்ஸ் எழுதித் தர சொல்லறது ..பாவம் தனியாளா மாட்டிக்கிட்டார் சென்ஷி.

பாஸ்டன் பாலா வந்திருந்தா கேட்டுருக்கலாம், நீங்க சொல்லறது எனக்கு உடன்பாடில்லை அக்கா என்று எதற்காகவாவது நடுநடுவில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பறம் அது சரி அது சரி என்று முடித்துக்கொண்டிருந்தார். ஆளுக்கு ஒரு தோசை ஒரு காப்பி ஆர்டர். [ இத்தனோண்டு ஆர்டருக்கு எங்கள அத்தன நேரம் அனுமதிச்சாங்களா உட்கார்ந்திருக்கன்னு வீட்டுக்காரருக்கு பெரிய சந்தேகம்] . சிவமுருகன் போன் செய்தார் வர்ரேன்னு, இல்லங்க நீங்க வர நேரம் ஆகும்ன்னா காத்திருக்கறது கஷ்டம் அடுத்து ஒரு ரிலாக்ஸா சண்டெ சந்திப்பு ஏற்பாடு செய்யலாம் என்று போனிலே முடிவு செய்துகொண்டோம். ஆனா அதற்கப்புறமும் கொஞ்சம் பேசிட்டு இன்னோரு காபி. இதற்கு நடுவில் வீட்டிலிருந்து மூன்று முறை மகள், வீட்டுக்காரர், மகன்( வெறுமனே அம்மா அம்மா) என்று கூப்பிட்டாயிற்று. தனிமனிதத்தாக்குதல் இன்றி மற்றவர் மனதை நோகடிக்காமல் பதிவு இட வேண்டும் என்று எல்லாருமே நினைக்கவேண்டும் என்று பேசிக்கொண்டே வெளியே வந்தோம்.கலகலப்பாக முடிந்தது சந்திப்பு.


தேசிய சந்திப்பு 1 சென்ஷியின் ரிப்போர்ட்

April 18, 2007

வாழ்வென்பது வண்ணங்கள்

ரசித்த திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு இரானிய திரைப்படம். கப்பா..gabbeh . ஆரம்பத்திலிருந்தே படத்தின் வண்ணம் மனதை அள்ளிக்கொண்டு போனது. கதாநாயகியின் அந்த நீல உடை அவ்வளவு அழகு. கதையில் முதலில் வரும் முதிர்ந்த தம்பதியின் பேச்சுக்களும் , அந்த வயதான பெண்மணியின் உடையும் கதாநாயகியின் உடையும் ஒரே மாதிரி இருப்பது என்று எடுக்கப்பட்ட கதை. எடுக்கப்பட்ட விதம் வித்தியாசமானது.
இரானின் நாடோடிக் குடும்பத்தில் ஆடுகளை மேய்ப்பதும்
அதன் கம்பளியெடுத்து செய்யப்படும் ஒரு வகையான கப்பா எனப்படும் விரிப்பு செய்வதும் கதையின் ஓட்டத்தோடு ஓட்டமாய் நமக்கும் புரிகிறது. ஏதோ நாமும் அந்தக் கூட்டத்தில் இருப்பது போன்றதொரு உணர்வு . வண்ணங்களுக்காக மலர்களைத் தேடி அலைகிறார்கள். மலர்களை வெந்நீரில் போட்டு சாயமிட்டு விரிப்புகளை செய்கிறார்கள்.

கதாநாகியின் பெயரும் கப்பா தான் அவள் அந்த முதியவர்களின் விரிப்பிலிருந்து வெளிப்பட்டு அவளுடைய கதையைச் சொல்லுகிறாள். முதியவர்களோடு பேசும் இளம் கப்பா ஒரு கற்பனையே.முதியவரின் பேச்சு அடிக்கடி அப்பெண்ணை அழகாயிருக்கிறாய் உன்னைக் கல்யாணம் செய்யப்போகிறேன்.. உண்மையைச்சொல் என்னைக் காதலிக்கிறாய் இல்லையா? என்று போக வயதான பெண்மணியின் சின்ன ப் பொறாமைக்கோபம் என்று போகும் மிக மெல்லிய காதல் கதை.


கப்பா ஒரு குதிரை மேல் வருபவனை விரும்புகிறாள். அவன் இக்கூட்டத்தைத் தொடர்ந்து வந்து ஓநாயைப் போல சத்தமிடும் போதெல்லாம் கப்பா திரும்பிப் பார்த்து சிரிப்பது ஒரு கவிதையான காட்சி. அவள் தந்தை திருமணத்தை குடும்பத்தில் நிகழும் பிறப்பு இறப்பு திருமணம் என்ற காரணங்களால் தள்ளிப்போட்டிருப்பார். அவளாகச் சென்றால் துப்பாக்கியால்
சுட்டுவிடுவார் என்று காரணம் கூறுகிறாள். குதிரைமேல் அவளும் காதலனும் இருப்பது போன்றதொரு படம் வரைந்த விரிப்பை தோள் மேல் சுமந்தபடி அவள் ஒவ்வொரு இடமாக மாறும்போதும் அவன் பின் தொடர்ந்தவண்ணமிருப்பான்.

காலையில் பெண்களும் இரவில் ஆண்களும் காவல் காக்க குடும்பத்தின் மூத்தமகளாக பொறுப்புகளுக்கு நடுவில் தத்தளிக்கிறாள்.

அவளின் சித்தப்பாவாக வருபவர் நிறங்களைப்பற்றி நடமாடும் நாடோடிக் குழந்தைகளின் பள்ளி ஒன்றில் சொல்லிக்கொடுக்கும் காட்சியும் அருமையானது.
ஃப்ரேமுக்கு வெளியே கையைக் கொண்டு சென்று அவர் நிறங்களை வானத்திலிருந்து மலர் தோட்டத்தில் இருந்து எடுப்பதும் அவற்றின் சேர்க்கை அளிக்கும் நிறங்களைப்பற்றியும் விளக்குவதும் அழகு.

அவர் திருமணத்தைக் காரணம் காட்டி ஒருமுறை கப்பா தடுக்கப்படுகிறாள். அவர் ஒரு பாடகியைக் கல்யாணம் செய்யவேண்டும் என்கிறார். ஊரில் எல்லாரும் அழகாயிருக்கிறார்கள் ஆனால் அவர் நினைப்பது போல் யாரும் இல்லையாம். மற்றொரு ஊரில் அப்படி ஒரு பெண்ணைக் கண்டதும் அவர் கேட்கிறார் நீ பாடிய பாடல் நன்றாக இருக்கிறது . யாரை நினைத்து எழுதினாய் ? அவள் அப்படி யாரும் இல்லையென்றதும் சரி நான் சரியாக இருந்தால் என்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கிறார் .

அப்போது அவள் கோபமாக இருந்தால் என்னை என்ன செய்வாய் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் பாருங்கள் .
அந்த வயதான சித்தப்பாவுக்குள் இருக்கும் ரொமண்டிக் இளைஞன் ஒரு கவிதையைப்பாடி அவளை சம்மதிக்க வைக்கிறார் .
அதன் பிறகு அவள் தாயின் பிரசவம் காரணமாகி தடுக்கிறது.

கடைசியில் ஒரு தருணத்தில் தப்பித்து செல்லும் கப்பாவையும் குதிரைக்காரனையும் தந்தை பின் தொடர்ந்து செல்கிறார் . துப்பாக்கி இரண்டு முறை முழங்குகிறது. வரும்போது அவர் கப்பாவின் விரிப்பை எடுத்து வந்து கூட்டத்தின் முன் போடுகிறார்.

முதியபெண் சொல்கிறாள் நாங்கள் இறக்கவில்லை என் அப்பா என்னைச் சுடவும் இல்லை. அது மற்ற தங்கைகள் ஓடிப்போகாமல் இருக்க என் தந்தை சொன்ன பொய் என்று.
Screenwriter, Editor, Set Designer, Sound Designer & Director: Mohsen MakhmalbafDirector of Photography: Mahmoud KalariSound: Mojtaba MirtahmasbExecutive Manager and Still Photographer: Mohammad Ahmadi Music: Hossein AlizadehCast: Abbas SayyahiShaghayegh JowdatHossein MoharramiRoghayyeh MoharramiParvaneh Ghalandari1996, Color, 72 mins

April 16, 2007

மின்னல் நொடிகள்

கண்கள் தவமிருப்பது
எத்தனை நேரமிருக்கும் என்பதற்கு
கணக்கு எதுவும் இருப்பதில்லை .
ஆனால் மின்னல் போல்
சிறுதூறல்கள்
சில நொடிகள் தான்.

உணவோ , நீரோ தராத ஒரு
சக்தி அந்த மின்னல் நொடிகளுக்கு.
காலையோ மாலையோ
காத்திருப்பது ஓர் கடமையாய்.

சுற்றிலும் ஒலிக்கும்
குரல்களில் இல்லை கவனம்.
சுற்றிலும் இயங்கும்
இயக்கத்திலும் இல்லை.
எங்கோ திரளும் கருமேகம்
எப்போது வந்து
சிறுதூறலிடும் என் முற்றத்தில்.
எதிர்பார்ப்பில் ஓடும் ஒவ்வொரு கணமும்.


சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.
வானவில் வண்ணங்களால் படிகட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.

April 13, 2007

கொஞ்சம் பெரிய கதை - நிறைவு

அனாதை இல்லம் என்றவுடன் தயக்கம் மறைந்து அவளிடம்
"இது என் நாத்தனார் வீட்டுக்காரர் இவர் எப்படி இதிலே!" என்றாள்.
"இந்தப் பையன் ஒரு மூளை வளர்ச்சி இல்லாதவன் தான் பார்த்தா தெரியாது . இவர் அடிக்கடி எங்க இடத்துக்கு வந்து இந்த பையனோடு விளையாடுவார். அவனோட பெற்றவங்க இங்க கொண்டுவந்து விட்டதுல அவனுக்கு ரொம்ப கோவம் . இவர் வந்த பின்னாடி தான் அவன் கொஞ்சம் கலகலப்பா இருந்தான். "


"வந்தாருன்னா சில சமயம் பிடிச்சி வச்சிட்டு விடமாட்டான் எப்பப் போகச்சொல்லுறானோ அப்பத்தான் மேடம் வீட்டுக்குப் போவார். நேத்துக் கூட அவனுக்குப் பிறந்த நாள் அதானால் அவன் வீட்டுக்கு விடவே மாட்டேனுட்டான். அங்கயே படுத்துக்கிட்டார். "


பானுவுக்கு நிம்மதி வந்தது. சரிதான் தன் குழந்தையை இக்குழந்தையிடம் பார்க்கிறார் போல என்று புரிந்தது. ஒரு நிமிஷம் என்றபடி கடையில் இருந்தே மகாவுக்கு ஒரு போன் செய்தாள். மறுபக்கத்தில் இதெல்லாம் கேட்டவுடன் அவள் உடனே கிளம்பி வருவதாகச் சொல்லி அனாதை இல்லத்துப் பெண்ணைக் காத்திருக்கும் படி சொல்லச்சொன்னாள்.

மகா வந்து சேர்ந்ததும் , இல்லத்துப் பெண்ணிடம் அந்தக் குழந்தையைத் தத்து எடுக்கவேண்டும் முடியுமா அதற்கு என்ன என்ன செய்யவேண்டும் என்று தான் முதல் கேள்வி கேட்டாள்.இல்லத்துக்கு நானும் வருகிறேன் என்னையும் அழைத்துப் போங்கள் என் மகனைப் பார்க்கவேண்டும்.


பானுவுக்கு இன்றயப் பொழுது இத்தனை அற்புதமாக முடியும் என்று தெரியவே தெரியாது. வீட்டிற்கு போகும் போது எப்போதும் இல்லாத ஒரு சந்தோஷமாய் உணர்ந்தாள்.

கொஞ்சம் பெரிய கதை -2-
கொஞ்சம் பெரிய கதை 1

April 12, 2007

கொஞ்சம் பெரிய கதை -2-

கொஞ்சம் பெரிய கதை 1
மகாவிற்கு ஒரு குழந்தை பிறந்து அது மூளை வளர்ச்சி இல்லாமல்
கொஞ்ச நாளில் இறந்துவிட்டது . அப்போது இருந்தே வாழ்க்கையில் எதுவுமே பிடிப்பற்றவராக நடக்கத்தொடங்கி இருந்தான் அவள் கணவன் . இப்போது இது என்ன புதுக்கவலை.

மகா தூரத்தில் பார்க் வாசலருகில் வரும்போதே பானு பார்த்துவிட்டாள் . கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துடறேன் , என்றபடி பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் அந்த புகைப்படக் கவரையும் எடுத்துக்கொண்டு ஓட்டமாய் வெளியேறினாள். மகா என்னம்மா எப்படி இருக்க என்று ஆரம்பிப்பதற்கும்...மகா அண்ணீ என அழ ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. வா பார்க்குக்குள்ள போயிடுவோம் பாதையோரம் நின்னு பேச முடியாது என்றபடி உள்ளே போய் ஒதுக்குபுறமாய் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

அண்ணீ நான் என்ன செய்யறதுன்னே தெரியல .. நேற்று லருந்து அவர் வீட்டுக்கு வரல.ஒரு மாதமாவே நான் கவனிக்கறேன் அவரு சரியா நேரத்துக்கு வீட்டுக்கு வரதில்லை . கேட்டா என்ன என்னவோ காரணம் சொல்லிக்கிட்டிருந்தார் . நான் தான் தப்பு பண்ணிட்டேன் அப்பவே உங்க கிட்ட சொல்லலீருக்கணும். சரியாகிடும்ன்னு விட்டுட்டேன்.

பானு மெதுவாக அந்த புகைப்படக் கவரை அவளிடம் கொடுத்தாள். என்ன அண்ணீ இது .. பாரு...நீ வரலன்னாலும் இன்னைக்கு உன்னைக் கூப்பிட்டு இருப்பேன் நான் . உள்ளே இருந்து வந்த புகைப்படங்களில் மகா வின் கணவர் ஒரு குழந்தையை தூக்கி வைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம். குழந்தையின் கையில் பெரிய பொம்மை இருவரும் அப்படி ஒரு அன்பாக சிரித்தபடி இருந்தனர்.


இன்னோர் புகைப்படத்தில் அந்தக் குழந்தையை ஒரு பெண் தூக்கிக்கொண்டிருந்தாள். பெண் மிகவும் சோகையாக நோய்வாய்ப்பட்ட தோற்றத்தில் இருந்தாள் . நீங்க தான் அண்ணீ அவரிடம் பேச சரியான ஆள். அன்பானாவர் தான் ஆனா எப்ப என்ன செய்வாருன்னு தெரியாம எதயாச்சும் செஞ்சு வைப்பார் அதனால யாராச்சும் கஷ்டப்படுவாங்களான்னு யோசிக்கவே மாட்டாரு.

இந்தப்படத்தைப் பார்த்து உனக்கு அவர் மேல சந்தேகம் ஏதும் வரலையா? என்று கேட்ட பானுவிடம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இல்லண்ணீ அவர் அப்படிப் பட்டவரும் இல்லை . நானும் அப்படி ஒரு நாளும் சந்தேகமும் படமாட்டேன் . அவர் நம்பருக்கு நீங்க ஃபோன் பண்ணுங்க பேசுங்க . எங்கருக்காரோ என்ன உதவியாச்சும் வேனும்ன்னா சொல்லச் சொல்லுங்க. எப்பவும் தன் போக்குல போறதே அவருக்கு ஆகிடுச்சு .

மீண்டும் கடைக்குள் வரும்போது ரீனா - "அக்கா கவரைக் கேட்டு அந்தப் பொண்ணு வந்துதுக்கா , போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வரச்சொன்னேன்" என்றபடி எதிர்பட்டாள். நேற்று முகூர்த்த நாள் என்பதால் இன்று ரோல் ரோலாக வந்து குவிந்து கொண்டிருந்தது . எழுதி எழுதி லேப்க்கு அனுப்பிக் கொண்டிருந்தாள் .

ரீனா திடீரென்று அக்கா அக்கா என்று முழங்கையால் இடித்து அங்க பாருங்க அந்தா அந்த ப் பொண்ணு தான். அவளே தான் ஆனால் புகைப்படத்தை விட நேரில் நல்ல அழகாகப் பட்டாள்." இன்னைக்கு லேப்புக்கு அனுப்பின கவரிலிருந்து சில ரோல்கள் மாறிப்போயிருச்சுங்க . என்ன படம் குடுத்தீங்கன்னு சொல்லுங்களேன்" என்றபடியே கவரையெல்லாம் எடுத்து கலைத்து தேடுவது போல் பாவனை செய்தாள் பானு. "குழந்தை பிறந்தநாளுங்க பொம்மை வச்சுக்கிட்டு குழந்தை தாங்க நிறைய இருக்கும்."


"இது வா பாருங்க . "

"ஆமாங்க இது தான் . "

"அப்ப இதுகூட உங்களுதாத்தான் இருக்கணும் "என்றபடி மகா புருஷன் குழந்தை கூட இருந்த போட்டோவைக் காட்டியதும் "ஆமா எங்களுதுதான் "என்றபடி வாங்கிக் கொண்டாள் . "நாங்க கஸ்டமர் அட்ரஸ் வாங்கறது எப்பவும், எங்க இருக்கீங்க ? "என்ற ரீனாவின் கேள்விக்கு அவள் ஒரு அனாதை இல்லத்து முகவரியைக் கொடுத்தாள் . -----(தொடரும்)

April 11, 2007

கொஞ்சம் பெரிய கதை

காலை நேரம் பானுவுக்கு அவசரத்தில் தான் எப்போதும் ஓடுகிறது..ஒரு நாளைக்காவது அந்த உப்புமாவைத் தவிர வேறு செய்யவோ இல்லையென்றால் அந்த உப்புமாவை உட்கார்ந்த வண்ணம் சாப்பிடவோ முடிந்தது இல்லை.
நின்று கொண்டே ஸ்பூனால் ஒரு வாய் ஓட்டமாய் போய் குழந்தைக்கு வேண்டிய அத்தனை சாமான்களையும் எடுத்து கூடையில் தயார் செய்து அடுத்த வாய் போடும் போது எழுந்துவிட்ட குழந்தைக்கு தலைக்கு ஊத்தி ஆடை மாற்றிக்கொண்டிருப்பாள்.

கணவர் காலையில் எந்திரிச்சு 5 மணி ஷிப்ட்க்கே போயாச்சு. குழந்தைக்கானவற்றில் ஒன்று குறைந்தாலும் அம்மா கத்துவாள் . பக்கத்தில் தான் 5 நிமிட நடையில் இருந்தாலும் எடுக்க வரமாட்டாள் அவளுக்கு அவள் கவுரவம் போய்விடும். அப்பாவை போகச்சொல்லுவாள் . கவனமாய் எல்லாம் எடுத்துவைத்தோமா என்ற கவலையில் சில நாள் தட்டில் மீதி இருப்பதை கவனிக்காமல் ஓடி விட்டிருக்கிறாள். மாலையில் அது அவளைப்பார்த்து இப்படி காயவிட்டாயே என்று முறைத்துக் கொண்டிருக்கும்.
.
கடைச்சாவி பானுவிடம் தானே இருக்கிறது. அவள் போவதற்கு கொஞ்சம் நேரமானால் ரெட் ரூமில் வேலையிலிருக்கும் சுனில் வந்து நிற்பான். முதலாளியிடம் சேச்சி வர நேரமானது அதான் இன்னைக்கு அந்த படம் ரெடியாகலை என்று போட்டுக்கொடுப்பான். வாங்கும் 2000 சம்பளத்துக்கு அவரிடம் கூனிக்கொண்டு நிற்கவேண்டும். முன்னாடியே போய் உட்கார்ந்திருந்தால் கடைகூட்டும் பையன் முதலாளி வீட்டில் இருந்து சில்லறைக்காசு பை கொண்டு வந்திருப்பான் எத்தனை இருந்தது என்று எண்ணிப் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபிலிம் ரோலில் எத்தனை கொடாக் எத்தனை ப்யுஜி கோனிகா என்று எழுதி வைத்து புதிதாக ஷீட் எழுதணும்.

இன்றைக்கு மகாவுக்கு பிறந்தநாள் .மகா பானுவோட நாத்தனார் . சாமி முன்னாடி நின்னு அவ நல்லா இருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு , செருப்ப மாட்டிக்கொண்டாள் . கடைக்கே வந்து பார்ப்பதாகவும் கொஞ்சம் பேசணும்ன்னும் சொல்லி நேற்றே போன் செய்திருந்தாள் மகா.

அம்மாவீட்டில் விடும்போது குழந்தை அழுததைக் கேட்காதது போல ஓடினாள் 7ம் நம்பரை விட்டால் நேரத்துக்கு போய்சேரமுடியாது. நல்லவேளை யாரும் வரவில்லை நாந்தான் முதலில் காலை எழுந்ததிலிருந்து இப்போது தான் நிம்மதி பெருமூச்சு வருகிறது அவளிடம். வழக்கம்போல எல்லாமே நடந்தது .

பின்னாலேயே ரீனாவும் , சாந்தியும் வந்து சேர்ந்தார்கள். புதிசா வந்த சாந்திக்கு கள்ளக்கணக்கு எப்படி எழுதணும் என்று சொல்லிக்கொடுப்பதே ரீனா வேலை . இஷ்டப்பட்ட பேரை எழுது , இத்தனை ரோல் கழுவக் கொடுத்தாங்க , இத்தனை ஆல்பம் வாங்கினாங்க , என்ன வேணா எழுது ஆனா தினத்துக்கு 3000 ரூபாய்க்கு மேல வரக்கூடாது அதான் ரூல்.

யாரும் வராத நேரம் டேபிளுக்கு அடியில் தலைய விட்டுக்கிட்டு பிரிண்ட் போட வந்த படங்களை நோட்டம் விடறது அவங்க வேலை . அக்கா இதப்பாருங்களேன் அதப்பாருங்களேன் என்று கிண்டல் நடக்கும். முதலாளி வந்தா சத்தமில்லாம இருப்பாங்க பள்ளிக்கூடப் பிள்ளைங்களப்போல.


வழக்கம் போல முதலாளி பேங்க் வேலையாக வெளியே சென்றதும் ரீனாவும் சாந்தியும் தலையை டேபிளுக்கு அடியில் கொண்டுபோய் படம் பார்க்க ஆரம்பித்தார்கள் .திடீரென்று அக்கா அக்கா இங்க பாருங்க இந்த படத்தை என்றதும் வாங்கிய பானுவுக்கு ஒன்றுமே புரியவில்லை , "இது யாருப்பா கொண்டாந்து குடுத்தா தயவுசெய்து கேட்க வர்ரவங்க கிட்ட வேலையாகலன்னு சொல்லி நாளைக்கு வாங்கிக்கச் சொல்லு என்ன?"


அக்கா சாயங்கலம் ரெடியாகிடும்ன்னு சொன்னேனே இப்ப எப்படி ...என்று இழுத்த ரீனா பானுவோடா கலவரமான முகத்தைப் பார்த்து சரி அக்கா எப்படியாச்சும் சமாளிக்கறே ன் என்று முடித்தாள்..
பானு மகா வருகிறாளா என்று இப்போது கலக்கத்துடன் காத்திருந்தாள்.
----(தொடரும்)

குழந்தைகளுக்கான அறிவியல் தளங்கள்

பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் தவிர்த்து குழந்தைகளுக்கு அதிக நேரமிருந்தால் அல்லது அதிகப்படியான கேள்விகள் கேட்கிற குழந்தைக்கு விளக்கவேண்டி இருந்தால் இந்த மாதிரி தளங்களுக்கு சென்று அவர்களுக்கு புரியும் படி அறிவியலை அறிமுகப்படுத்தலாம். சிலசமயம் பள்ளி தவிர்த்து வெளியே நடக்கும் தனிப்பரிட்சைகளுக்கு தயார் படுத்த என்கிற போதும் உபயோகமாக இருக்கும். தனிப்பரிட்சைகளில் பாடத்திட்டத்தின் அடுத்த நிலைக்கேள்விகள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன. வருடத்தின் ஆரம்பத்திலேயே நடக்கும் இத்தகைய பரிட்சையில் அந்த வருடத்தின் கடைசியில நடக்கப்போகும் பாடத்தின் கேள்விகள் கூட கேட்கப்படுகினறன.

எலும்புகள் மூளை , சீரண செயல்பாடுகள் , மற்றும் இதயம் பற்றி குழந்தைகளுக்கு பாடத்தில் சிறிதளவே விஷயம் சொல்லிக்கொடுக்கப்படும் அதனையும் தாண்டி அறிந்துகொள்ள
www.medtropolis.com/VBody.asp இங்கே நீங்கள் விர்ச்சுவலாக காட்டப்படும் படங்களால் விளக்கினால் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள். மேலும் இது மறந்து போன பாடங்களை நினைவுக்கு கொண்டுவர பெரியவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

இன்னொரு தளம் www.hhmi.org/coolscience இங்கே கேள்வி பதிலாக விலங்கினங்களை வகை பிரிக்கவும் அறிந்துகொள்ளலாம்.

http://www.toonuniversity.com/planets_demo.swf இங்கே சென்றால் சூரியனையும் மெர்குரியையும் பற்றி ஃப்ளாஷ் டெமோ வில அழகாக காண்பிக்கிறார்கள்.. மீதி ?? காசுகுடுத்தால் தான்.இது போன்ற மற்ற தளங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருந்தால் எனக்கு மறுமொழியில் அறிமுகப்படுத்துங்கள் . இத்தளங்கள் மிகச்சமீபத்தில் சென்று படித்ததால் எழுதி இருக்கிறேன் இவையல்லாமல் மற்றவை இப்போது நியாபகத்தில் இல்லை.

குழந்தைகளுக்கான சிலதளங்கள் இது முன்பு எழுதிய இன்னோரு பதிவு

April 6, 2007

அழகென்ற சொல்லுக்கு

அழகு தொடர் பதிவுக்கு வல்லி கூப்பிட்டு இருக்காங்க. எனக்கு உடனே தோன்றியது இதெல்லாம் தான் ,
1.அழகென்ற சொல்லுக்கு முருகா முருகன்னா அழகு..அழகுன்னா முருகன். வேறெதும் தோணும் முன்னே முருகனோட சிலை தான் நினைவு வருது அதுவும் எத்தனை எத்தனையோ முருகன் கோயில் போயிருந்தாலும் அருகில் இருந்து அடிக்கடி பார்க்கும் உத்தர சுவாமிமலை என்னும் மலை மந்திர் முருகன் கண்ணுக்குள் வரார். அதுவும் பாலபிஷேகம் சந்தன அபிஷேகம் பண்ணும் போது அந்த முகம் இருக்கே அத்தன வடிவு.

இதே மாதிரி தான் கோயிலில் அம்மன் சிலை பார்க்கும் போது சாமிகிட்ட வேண்டிக்கப் போனதெல்லாம் இல்லை. கண் பட்டுடும் போன்னு சொல்லிட்டு வருவேன். அளந்தெடுத்த நாசியும் ஒயிலான இடையும்..."சின்ன சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்து இருப்பாள் " பாட்டு காதுக்குள் கேட்கும்.


2. அழகுன்னா குழந்தைகள் . குட்டியா இருக்கும் போது எல்லாமே அழகுன்னு சொல்லுவாங்க...ஆனா குழந்தைங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்னதா இருக்கும் போது சித்தி வீட்டிற்கு போகும் போதே அவங்கள பாத்துக்கறது எல்லாம் செய்வேன்.
கொஞ்ச நாள் தில்லியில் வீட்டில் குழந்தைகள் காப்பகம் மாதிரி வைத்திருந்தேன். அவங்க செய்யறது ஒண்ணு ஒண்ணும் அழகு.
என் பொண்ணு சின்னவளா இருக்கும் போது வித விதமா அலங்கரிச்சு போட்டோ எடுப்பேன் . இப்போ பையன் குறும்பெல்லாம் வீடியோவில் பதிவு.. எப்பவும் ரெடியா இருப்பேன். வீட்டுக் குழந்தைங்கன்னு இல்லை எங்க குழந்தைகளப் பார்த்தாலும் சிரித்து விளையாடி மகிழ்வேன் .


கண்காட்டி சிரித்து,
உதடு சுழித்து ,
பிஞ்சு கரத்தால் அணைத்து,
தோள்மேலே தூளியாடி,
ங்கா உங்கா மொழி பேசி ,
பெற்றவளாய் சில நேரம்,
பிள்ளையாய் சில நேரம் ,
என்று எனை மாற்றும் ,
அள்ள அள்ளக் குறையாத ,
அழகுச் சுரங்கம்.


3.அழகென்றால் பெண்கள் தான் . பதின்ம வயது பெண்கள் அப்போ மட்டும் எங்கிருந்து அவ்வளவு அழகு அவங்களுக்கு வருமோ தெரியல . ஒவ்வொருத்தரும் ஒரு தேவதை தான். பசங்க சும்மா ஒன்னும் கிறுக்கு பிடிச்சு அலையரது இல்ல.. அப்புறம் வளைகாப்பு இட்டிருக்கும் பெண்கள் , அவங்க முகமும் வளையலும் ,சிரிப்பும் சந்தோஷமும் பார்க்கறவங்களைத் தொத்திக்கும்.

4. காடு மலை மழை வானவில் வசந்தம் பாலை இப்படி நிறுத்த முடியாம போய்க்கொண்டே இருக்கும் இயற்கை . இதுல எதச் சொல்ல எத விட .
ரீங்கரிக்கும் காடு அழகு ,
மேகம் தவழும் மலை அழகு ,
சில்லென்ற மழை அழகு ,
வந்து மறைந்தாலும் வானவில் அழகு ,
மலர் தூவும் வசந்தம் அழகு,
காற்றுக்கோலமிடும் பாலை அழகு.5. அன்பு அழகுங்க... அழகு எல்லாம் அன்பாக இருக்காமலும் போகலாம் ஆனா அன்பு எப்போதும் அழகுதானே . பாருங்க கடல் கூட அழகு தான் ஆனா சுனாமி வரலாம் . மழை அழகு தான் ஆனா இடி வெள்ளம் கொண்டுவரலாம் . உண்மையான அன்பு எப்போதும் நல்லது மட்டுமே செய்யும் . அன்பா குணமா இருக்கறவங்க எல்லாரும் அழகானவங்க தான்.
6. முதுமையும் பாசமும் அழகு தாத்தா பாட்டி பேரன் பேத்திகளுடன் கழிக்கும் பொழுதுகளை கவனித்திருக்கிறீர்களா ? தனக்கு கிடைக்கும் சாக்லேட்டில் பாதி பகிர்வதும் ,
செல்லமான அரவணைப்பும் , தள்ளாடும் வயதில் தூக்கிவைத்து
கொஞ்சுவதும் , சட்டிப்பானை , கடை விளையாட்டும்
நட்பாய் கேரமும் ஆடும் போதும் கை கோர்த்து
வேடிக்கை பார்த்துக் கொண்டே சாலை யோரம் போகும் போது கவனியுங்கள் . வயதொத்தவர்களாய் இருவரும் மாறிப்போகும் நிலை அற்புதம்.


அடுத்து நான் அழகு சொல்ல அழைக்கும் பதிவர்கள்,

தம்பி சென்ஷி
தங்கச்சி காட்டாறு
குறைகுடம்

April 5, 2007

இன்றைக்கு என்ன கிழமை

சில சமயம் இன்னைக்கு என்ன கிழமை ன்னு மறந்து போவதுண்டு .இங்க அபி அப்பா எனக்கு அனுப்பிய கமெண்ட் ல இருந்த விஷயத்த பாருங்க.

""நேத்து காலை எழுந்திருக்கும் போதே இங்க துபாய்ல மழை வரும் போல இருந்துது. நான் வியாழக்கிழமைன்னு நெனச்சுகிட்டு(இங்கு வெள்ளி லீவ்) வீக் எண்ட்தானேன்னு ஜாலியா ஆபீஸ் போய், தமிழ்மணத்துல பூந்துகிட்டேன். ஒரு ஆணி கூட புடுங்கலை. ஜாலியா ஸ்டார் பதிவர் ஜெஸீலா பதிவுல போய் லந்து பண்ணிகிட்டு இருந்தேன். அதோட வீட்டுக்கு வந்து நாளை லீவ்ன்னு நெனச்சுகிட்டு ஜாலியா தூங்கிபோயிட்டேன்.காலைல ஆபீஸ்ல இருந்து போன்"என்ன வரலியா, லீவான்னு" சரி வெள்ளி கிழமை கூட ஆணியான்னு நெனச்சுகிட்டு கேசுவல் ட்ரஸ்ல ஆபீசுக்கு வந்துட்டேன். இங்க வந்து பாத்தா எல்லாரும் பிரசண்ட், அப்பகூட என்னது எல்லாருக்கும் ஆணி போலன்னு நெனச்சுகிட்டேன். சற்று முன்புதான் இன்னிக்கு வியாழன்ன்னு த்ரிஞ்சுது. ஆஹா பர்முடாஸ்ல வந்துட்டோமேன்னு என் கேபின் விட்டு வெளியே வரவேயில்லை. அதனால இன்னிக்கும் தமிழ்மணம் தான் கதி. இது போல யாருக்காவது எப்பவாவது நடந்திருக்கா? என்னைப்போல லூசு யாரவது உண்டா? சொல்லுங்கப்பா:-) ""

இத பதிவா போட உரிமை வாங்கி இருக்கேன் அவர்கிட்ட இருந்து.

கிழமை மறந்து போவது நிறைய நடக்கும்.. வெள்ளிக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்க்ன்னா ஞாயிற்றுக்கிழமைய திங்களா நினைக்கறது ...
வியாழக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்கன்னா வெள்ளிக்கிழமைய சனிக்கிழமையா நினைச்சுட்டு பிள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்பனுமே வீட்டுக்காரர் ஆபீஸ் போனுமேன்னு இல்லாம தூங்கிட்டு இருப்பேன்.


எனக்கு இப்படி மட்டுமில்ல ரொம்ப நாள் லீவ் விட்டு பள்ளிக்கூடம் திறக்கற அன்னைக்கு பாதிவழியில் அதே கலர் சீருடை எங்காவது தெரியலன்னா
இன்னைக்கு உண்டா நம்ம சரியா நியாபகம் வச்சு தான் வந்தமான்னு பதட்டமாகிடும். பரிட்சைக்கு போறப்போ கொஸ்டின் பேப்பர் கையில் வரவரை இன்னைக்கு இன்ன எக்ஸாம் தானே மாத்தி ஏதும் படிச்சுட்டு வரலியேன்னு தோணும்... . . இதும் வயர்டுல ஒண்ணோ

ஒரு முறை எங்க மாமா குடும்பம் சுத்திப் பார்க்க வந்திருந்தாங்க அவங்களுக்கு சுற்றுலா பஸ்ஸில் புக் செய்து வைத்திருந்தோம்.
காலையில் இட்லி செய்து சப்பாத்தி செய்துன்னு 4 மணிக்கு எந்திரிச்சு பிள்ளைங்கள தயார் செய்து 9 மணிக்கு கடை வாசலில் போய் உட்கார்ந்தா வண்டி வரவே இல்லை. திங்கள் கடையெல்லாம் வேற லீவ் எங்க விசாரிக்க , போன் செய்து தலைமை ஆபீஸ் ல கேட்டா ராத்திரி ஒன்பதுங்கறாங்க.

எங்க வீட்டுல இன்னோருத்தங்களுக்கு நடந்த கதை இன்னொரு விதம் . ப்ளைட் மதியம் 1 மணிக்குன்னு பேக் செஞ்சுட்டு ஆமா கரெக்டா கிளம்பிருமான்னு செக் செய்தவங்களுக்கு கிடைச்ச பதில் என்ன தெரியுமா?
"கரெக்டா போய் சேர்ந்துருச்சேங்க.."
ப்ளைட் ராத்திரி ஒரு மணிக்கு இந்நேரம் ப்ளைட் லேண்ட் ஆகி எல்லாரும் வீடே போய் சேர்ந்திருப்பாங்கன்னா எப்படி இருக்கும்.


இப்படி கதை இருந்தா எழுதுங்கப்பா யாராச்சும்......டேக் எல்லாருக்கும் பொது .

கடைசில ஓட்டுப் போட்டாச்சு!!!

வோட்டுரிமைக்கான வயசு ஆனப்புறம் தமிழ்நாட்டுல ஒரு முறை ஓட்டுப் போட்டிருக்கேன். தில்லி வந்து இந்த பத்து வருடத்தில் ஓட்டே போடவில்லை.
பேரைப் பதிய வைக்க அங்க போங்க இங்க போங்கன்னு சொன்னாங்கன்னு அலைந்து பின்பு இந்த வருடம் நேரம் வந்து வாக்குரிமை அட்டை செய்து
இப்போதான் முதன் முதலா பட்டன் முறை ஓட்டுப் போட்டேன்.

இங்க எம்சிடி எலெக்ஷன் நடக்குது இன்னைக்கு . மக்கள் என்கிட்ட வரவேணாம் நான் வரேன் மக்கள் கிட்டன்னு காங்கிரஸ் காரர் சொல்லறார்.
ஆனா தொடர்ந்து ஜெயிக்கற அவங்க புதுசா சேர்ந்த ஓட்டுக்காரங்களுக்கு
சிலிப் குடுக்க விட்டுட்டாங்க. தாமரைக்காரங்க வந்து மறக்காம புது ஆளுங்களுக்கு செக் செஞ்சு சிலிப் எல்லாம் குடுத்து காங்கிரஸ தோக்கடிக்க சில காரணம் என்று வரிசைப் படுத்தி இருக்காங்க.


கோதுமை ----- 9 ரூ தாமரைக்காலத்துல---- 14ரூ யாம் காங்கிரஸ் காலத்துல
ஜீனி ------14 -------25
பால்-------14------22
அரிசி------10-------20-30
சிமெண்ட்----125------260
காய்கறி----5-8-------15-18

எந்த அரசு வந்தாலும் இதெல்லாம் கூடாம இருக்கா எல்லாம் கூடிக்கிட்டே இருக்கு.. ஆனா சமயோசிதமா போட்டுருக்காங்க. வெங்காயம் விலையக்
காட்டித் தானே ஆட்சி மாறுச்சு.

இப்ப வேற கட்டிட இடிப்பு , சீலிங் என்று வேற ஆட்டம் காமிச்சாங்க . மக்கள் என்ன முடிவு எடுத்துருக்காங்கன்னு ஒரு குழப்பம் இருந்தாலும் ..ஓட்டு ப்
போடும் மக்கள் குறைவா இருக்கும்ன்னு வேற கணிச்சுருக்காங்க. ஒரு நீளமான விடுமுறையா மக்கள் எடுத்துக்கிட்டு வோட்டு போடாம நேற்று இரவே பயணப்பட்டு இருப்பார்கள் என்கிறார்கள் . நாளை விடுமுறை எனவே சேர்ந்தார்போல் 4 நான்கு நாட்கள் கிடைக்கிறதே.

இப்போது ஓட்டுப் போடாமல் நாளை என் ஏரியாவில் இது நடக்க வில்லை
அது சரியில்லை என்றால் கேட்க எப்படி உரிமை இருக்கும் .

April 4, 2007

அய்யோ வீடு ஆடுது!!!

நேற்று டில்லியில் நிலநடுக்கமாம் . சன் நியூஸ் ல கூட கேட்டிருப்பீங்களே . நான் உணர்ந்தேனான்னு கேக்கறீங்களா? அது நான் அடிக்கடி அப்படி உணர்வேன். அதுனால நியூஸ் ல வந்துதுன்னு சொல்லி விசாரிச்சீங்கன்னா தான் சரியா இருக்கும்.எப்ப எத்தனை மணிக்குன்னு நீங்களே சொல்லிடறதும் நல்லது. அப்பத்தான் எப்படி உணர்ந்தேன்னு சொல்ல வசதியா இருக்கும். எதுக்குன்னு பாக்கறீங்களா?


ஆறோ ஏழோ வருஷம் முன்ன நடந்தது அது . வெயில் காலத்துல அப்பல்லாம் கூலர் இருக்கும் வரவேற்பரையில் தூங்குவோம் . தரையில் விரித்து இருக்கும் மெத்தை . ராத்திரி 2 மணி இருக்கும் வீடு ஆடுது . எழுந்து உட்கார்ந்து பார்த்தாச் சின்னதா முன்னும் பின்னுமா ஒரு தொட்டில் ஆட்டறமாதிரியான ஆட்டம் டீவி ஸ்டேண்ட் மேல வச்சிருக்கற போட்டோ எல்லாம் ஆடி ஆடிப் பார்க்க பார்க்கவே முன்னாடி வந்து விழுந்து ஒடஞ்சிடுச்சு.


என்ன என்னன்னு யோசிக்கறதுக்குள்ள நின்னும் போச்சு. அப்புறம் தூக்கம் எங்க . ஒரே பயம் தான். அடுத்த நாள் ஊரிலேர்ந்து ஃபோன் மயம் தான். நிலநடுக்கமாமே ..டில்லி அதிகமா நிலநடுக்கம் வரும் இடமாமே ..இந்த பக்கம் மாத்தி வந்துடுங்க ..மாமனார் , அப்பா அம்மா , சித்தி , பெரியப்பா எல்லாம் கூப்பிட்டுச் சொல்லியாச்சு.குண்டு வெடிப்பு மாதிரி இதுவும் ஒரு சாதாரண விஷயம் தான் என்று சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு. ஆனா அன்னைலேர்ந்து தூக்கத்துல எழுந்து அய்யோ வீடு ஆடுதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். அட மனுசன நிம்மதியாத் தூங்க விடறதுல்லயான்னு வீட்டுல பாவம் , ஒன்னும் ஆடல பேசாம தூங்குன்னு வாங்க.
ஒரு சில சமயம் குழந்தையத் தூக்கிட்டு கிளம்பிடுவேன் .
ஆடுனா மாதிரியே கனவு வருமோ தெரியாது. முழித்து இருக்கும் போது கூட தோணும். அதுவும் குஜராத் பூகம்பத்துக்கப்புறம் இன்னும் அதிகமாகிவிட்டது . ஒரு சின்ன பையில் குளிருக்கான போர்வை டார்ச் இப்படி குழந்தைக்கு அத்தியாவசமான பொருள் வைத்து [கதவு பக்கத்தில்] எடுத்துக் கொண்டு நிலநடுக்கும் வந்தால் ஓடக்கூடத் தயாராக இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஒரு ஒரு கதை படித்துத் தனியா நிர்க்கதியா அப்படி நம்ம குழந்தை நிக்குமோன்னு கவலையா ஆகிவிடும். மேல்மாடியில் இன்னோர் வீடு சொல்லாமலே எடுத்த மாடி வீட்டுக்காரியிடம் லஞ்சம் வாங்கியவன் தனி வீட்டில் இருப்பான் வீடு இடிந்தால் மாட்டுவது நாம் தானே என்றால் அவளுக்கு புரியவில்லை .இத்தோடு ஐந்தாறு முறை பார்த்தாயிற்று . ஒரு முறை நன்றாகவே ஆடி வீட்டை விட்டு எல்லோரும் ஓடி கீழே போனபின் ஒருத்தர் சொல்கிறார் " நிற்க எதுங்க நல்ல இடம் கட்டிடம் இடிஞ்சா நடுவில் நாம நிக்கற இந்த இடத்துல தானே விழணும்" .அடுத்து கொஞ்ச நாளுக்கு பானை ஆடுதா ஃபேன் ஆடுதான்னு பாத்துபாத்தே ஓடும். சும்மா தலை சுத்துனா கூட அது நிலநடுக்கமோன்னு பதட்டமாகிடும்.
நேத்து காலையில் கூட ஒரு மாதிரி இருந்தது. சே பழக்க தோஷம் நிலநடுக்கமெல்லாம் இல்லன்னு நானே சொல்லிக்கிட்டேன். யாராவது ஃபோன் பண்ணட்டும் பாத்துகலாம்ன்னு ...வந்துடுச்சே அம்மாகிட்ட இருந்து என்ன நிலநடுக்கமாமே .அப்படியா எங்க இங்க டில்லியிலயா எத்தனை மணி இருக்கும், காலையில் எனக்கு என்னவோ தோணியது ஆனா சாப்பிட நேரமானதால் இருக்கும்ன்னு விட்டுட்டேன்.
என்ன மணி இருக்குமாம்?
எந்த நியூஸ்ல சொன்னான்?

April 3, 2007

பின்தொடரும் புன்னகை முகம்

அதோ அந்த வீடு தான் கோயிலுக்கு இந்தப்பக்கம் பச்சை நிறத்தில் பெரிய கதவு இருக்கே. இறங்கிக்கலாம் . பக்கத்தில் தான் போகவேண்டிய இடம் ஆனா இங்கயே இறங்கி கொஞ்சம் நடந்து போகலாம்ன்னு தோணுது . பத்து வருஷம் முன்னால இந்த வீடு கிடையாது . இங்க ஒரு ஓட்டு வீடு தானே இருந்தது. அதுல மூணு குடித்தனம் இருந்தது . கோயில ஒட்டி சின்ன வாசல் . யாரும் குனிஞ்சு தான் போகணும் .


ஒரே ஒரு முறை உள்ள போயிருக்கேன். உள்ளே போகும்போது யாரும் தென்படவில்லை. அறை ஒன்றும் பெரியதில்லை . அறை என்று இருப்பது அது ஒன்றுதான் தாழ்வாரத்தில் தட்டியிட்டு பிரித்த இடமே சமையலறை . மொத்தம் இருக்கின்ற மூன்று அறைகளில் ஒவ்வொரு குடித்தனத்திற்கும் ஒரு அறை போலும் தாழ்வாரம் தான் மற்ற உபயோகத்திற்கு . ஆனால் எல்லாம் சுத்தமாக இருந்தது. வருவேன்
என்றே ஒதுங்க வைக்கப்படிருக்குமோ தெரியவில்லை.


என்ன பேச என்று தெரியவில்லை ஏதோ உன் இருப்பிடம் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை என்று மட்டும் சொன்னேன் . ஒரு மர அலமாரி , மேஜை . ஓரமாய் தையல் இயந்திரம் , ஆமாம் அம்மா தைத்துத் தருவதாகக் கூட யாரோ சொன்னார்கள் .அக்கா அம்மா அப்பா என எல்லோரும் எங்கே அமர்ந்து அரட்டை அடிப்பீர்கள் ? நீ எங்கே அமர்ந்து படிப்பாய் ? எங்கே தூங்குவாய் என்று கேட்க நினைத்துக் கேட்கவே இல்லை.


வா என்று வரவேற்று உட்காரச் சொல்லி கொண்டு போன கவிதை நோட்டை வாங்கி சில திருப்பல்கள். காண்பிக்கக் கொண்டு போன ஆல்பத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை அனுமதி இன்றி எடுத்துக் கொண்ட போது மறுக்க மனமில்லை.

ப்ராஜக்ட் வேலையாக செல்ல வேண்டி இருந்ததால் அதிக நேரம் இருக்க முடியாமல் போனது . முன்பாக வைக்கப்பட்ட இனிப்பு பிடித்த ஒன்று தான் ஆனால் உதடுகள் பிடிக்காது என்றே முனகின. ஏன் என்று புரியவில்லை . காபி நம் இருவருக்குமே போடத்தெரியாது .


வெளியே வந்தபோது ஒரு பெண் முற்றத்தை ஒட்டிய தாழ்வாரத்தில் கூட்டிக்கொண்டிருந்தார்கள் . என் காலணியைக்
காணவில்லை . இது போன்ற குடித்தனத்தில் எங்கு விடுவதென்று எனக்கும் தெரியவில்லை. வாசல் அவர்களுக்கு சொந்தமான இடம் போல அப்பெண் எடுத்து தன் வீட்டு காலணி போடும் டப்பாவில் போட்டிருக்கிறாள். கேட்டபின் நான் போகும் போது பார்க்கலயே என்று விசாரித்தாள்.

புரிகிறது அவளிடம் பேச வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தவே
வேறு யாருடையதோ என்று தெரிந்தும் அதை உள்ளே போட்டிருக்கிறாள் . நாங்கள் பேசிக்கொண்டது கூட கேட்டிருக்கக்கூடும் . வீட்டில் அப்போது இல்லாதவர்களை எல்லாம் குறிப்பிட்டு அவர்களையா பார்க்கவந்தீர்கள் என்ற கேள்விக்கு என்ன சொல்வது ? ஏற்கனவே விடை தெரிந்த கேள்விக்கு எதற்காக பதில் சொல்லிக்கொண்டிருப்பது . சிரித்துத் தான் வைப்பது இது போன்ற சமயங்களில். இருந்தும் வந்து போனது யாரென்று பின்னால் விசாரித்திருப்பாள் . நேற்று யாரோ வந்தாங்க உங்க வீட்டுக்கு கல்யாணப்பத்திரிக்கை குடுக்கவாமே என்று மறு விசாரணை அம்மாவிடம் கூட செய்திருப்பாள் . வேறு எதோ ஒரு பத்திரிக்கையை நீ காட்டி இருக்கலாம் .


வீடு இருந்த நிலை மாறி இருக்கலாம் அந்த குறுகிய சந்து அப்படியே தானிருக்கிறது . இவ்விடம் கடக்கும் போது நடக்க நினைக்கும் காரணம் , முனை திரும்பும் போது குறுகிய வாசலில் இருந்து எப்போதும் வீசப்படும் புன்னகையோடான முகம் இப்போதும் பின் தொடர்வது போன்றதொரு உணர்வை அனுபவிக்கத்தான் .

April 2, 2007

சித்திரக்கதைகள்

இங்கு பதிவர்களில் பலரும் சிறுவயதில் இருந்தே படிக்கும்
பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ், எங்க அப்பாவே வாங்கி படிப்பார்கள் . என்னுடைய டிராயிங்க் டீச்சர் முதன் முதலில் பூந்தளிர் பற்றி என் அம்மாவிடம் சொல்லி வாங்கித் தரச் சொன்னார்கள்.

எப்போது அடுத்த புத்தகம் வருமோ அன்றைக்கு காலையில் கடை திறந்ததும் முதல் ஆளாக அண்ணன் கடைவாசலில் நிற்போம் நானும் தம்பியும். தம்பிக்கு படிக்கத்
தெரியும் முன்பு நான் வாசிக்க அவன் கேட்பான். அவனுக்கு படிக்கத் தெரிந்ததும் யார் முதலில் என்று ஒரே சண்டை தான்.

புத்தகத்தைச் சேர்த்து வைப்பது பைண்ட் செய்து வைப்பது என்றிருப்போம். பக்கத்து வீட்டு குழந்தைகள் வாங்கி சென்று திருப்பாமல் இருந்தால் சண்டை தான். புத்தகம் மடிக்காமல் கிழியாமல் வரவேண்டும். ஒரு முறை அட்டை கிழித்து விட்டதற்காக புத்தகம் கொடுக்காமல் இழுத்தடிப்பதும் உண்டு.

பல ஆங்கில நாவல்களைப் பற்றி அறிமுகப்படுத்தியது பைகோ கிளாசிக்ஸ். டாம் சாயர் ,இரு நகரங்களின் கதை , ஐவன்கோ , கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இப்படி எத்தனையோ. இப்படி பல மேதைகளின் நவீனங்களை சித்திரக்கதையாக படித்ததால் சுலபமாக நினைவில் இருக்கிறது .

பஹுபாலி , திப்பு சுல்தான் , ஜீவகன் ,பாரதி , ராணி அப்பக்கா , ரத்னாவளி என்று எல்லா விதமானவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது அமர் சித்திரக்கதை.

பூந்தளிரில் வரும் சுப்பாண்டி கதை கபீஷ் கதை , முல்லா கதை
எல்லாம் இப்போவும் நினைவிருக்கிறது . இவற்றை இப்போது
என் குழந்தைகளுக்கு சொல்லி அவர்களும் அதை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற
ஆசையை உண்டாக்கி வைத்திருக்கிறேன்.

இப்போதும் அம்மா வீட்டுக்கு போனால் பழய பீரோவை திறந்து அந்த பொக்கிஷங்களைப் படிப்பது உண்டு. இந்த பழக்க தோஷத்தால் வெளியூர் சென்றாலும் பரிசு என்றாலும் புத்தகங்களை குழந்தைகளுக்கு என்று வாங்குவது வழக்கமாகிவிட்டது. எட்டு வயதுக்குள்ளாகவே ஒரு சின்ன
லைப்ரரி சேர்ந்து விட்டது மகளிடம்.

மற்ற ஹிந்தி குழந்தைகளின் பிறந்த நாட்களுக்கும் பகத்சிங் ,
சுவாமி அண்ட் ப்ரெண்ட்ஸ் என்றே பரிசளிப்பது என் வழக்கம்.
சில சமயம் குழந்தைகளுக்கு ஏமாற்றமாக இருக்குமோ என்று
தோன்றினாலும் விளையாட்டு சாமன்களை வாங்கித் தர இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சமாதானப் படுத்திக் கொள்வேன்.

இதற்கு முன் காமிக்ஸ் பற்றி பால பாரதி ஒரு பதிவு , லக்கி லுக் ஒரு பதிவு , எழுதி இருப்பதை கூகுள் மூலம் அறிந்து கொண்டேன். .

இப்போது champak , ரீடஸ் சாய்ஸ் இதிலெல்லாம் சின்னச் சின்ன புத்தகங்கள் ஆங்கிலத்தில் வருகிறதை பெண் படிப்பதுண்டு.
வேட்டைக்கார வேம்பு இதில் சிகாரி சாம்பு . இப்புத்தகங்கள் சின்னச் சின்ன கதைகளில் பெரிய விஷய ஞானங்களைக் குழந்தைகளுக்கு தரும் , ஒரு உதாரணம் பாருங்களேன். ஒரு செவ்விந்தியத் தலைவன் தான் தான் பெரியவன் என்று கர்வமாயிருப்பான். மக்களை அடக்கி ஆள்பவன் என்னைப்போல
யாருமில்லை என்று இருப்பான். ஒரு பாட்டி வந்து என் வீட்டில் ஒரு தலைவன் இருக்கிறான் என்று தன் குடிசைக்கு அழைப்பாள்.

தலைவனும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து சிறந்த ஆடை அணிந்து மிகப் பெரிய கழுகு இறகுகளை வைத்து
அலங்காரம் செய்து வளையல் கழுத்தணி எல்லாம் போட்டு பாட்டியை ப் பார்க்கச் செல்வான். அங்கே போனால் பாட்டி சிறு குழந்தையைக் காட்டி இவன் தான் அந்த தலைவன் என்பாள்.

தலைவன் கத்துவான் என்னை முட்டாளாக்கினாயா ? என்று. அப்போது குழந்தை பயந்து அழத் தொடங்கும். அதை சமாதானப்
படுத்த தலைவரும் தன் அணிகலன்கள் கழுகு இறகு எல்லாவற்றையும் கொடுத்து ஜிங் ல்லுங் என்றெல்லாம் மண்டியிட்டு பாடி சிரிக்க வைப்பான். பாட்டி சொல்வாள் . பார் பெரிய தலைவனான நீயே இக் குழந்தை முன் கெஞ்சினாயே !
தலை கவிழ்ந்து இனி நான் கர்வப்படமாட்டேன் என்று தலைவன் கூறுவான்.