Showing posts with label தோட்டம். Show all posts
Showing posts with label தோட்டம். Show all posts

February 28, 2011

மூங்கிலில் பூத்து தொங்குது பூ


அமைதிச்சாரல் வீட்டுத்தோட்டம் பற்றி பதிவிட்டிருந்தார்கள். அப்போது நான் பார்த்த மூங்கில் குழாய் தொட்டி பற்றி பின்னூட்டமிட்டேன். அதைப் புகைப்படமாக எடுத்துக் காண்பிக்குமாறு கேட்டிருந்தார்கள். நேற்று கடைத்தெரு பக்கம் போனேன். கைபேசியின் மூலமே புகைப்படமெடுத்து வந்தேன். இரவு வெளிச்சமென்பதால் சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு ஐடியாவிற்கு இங்கே.



மூங்கில் குழாயில் ஒரு பட்டை மட்டும் நீக்கிவிட்டு  அதில்  மண் நிரப்பி பூந்தொட்டியாக்கி  பூக்களை  பதியனிட்டு  அதை இப்படி தொங்கவிட்டிருந்தார்கள் கடை வாசலில்...

இணையத்தில் தேடும்போது கிடைத்த படத்தை  பாருங்களேன் ஆகா..


நன்றி ராமலக்‌ஷ்மி :)

இந்த ஐடியாவை சீக்கிரம் நானும் செய்து பார்க்க ஆசைப்படுகிறேன்.


எனக்குமூங்கிலென்றால் ரொம்ப பிரியம். வீட்டுல சோபா செட் கூட மூங்கில் தான். குளிர்காலத்தில் வெயிலில் உட்கார்ந்திருக்க மூங்கில் மோடா தான்.

ஆரோவில் கூட மூங்கிலுக்கென்று ஒரு தளம் வைத்திருக்கிறார்கள்.
----------------------------------------------

நம்ம லிட்டில்ஸ்டார் அவங்க அக்காவோடு சேர்ந்து ஒரு வேப்பமரம் வளர்க்கிறதாக கையெழுத்துப்போட்டு இருக்கிறார். இங்கே போய் பாருங்க அவருடைய பெருமிதத்தை...
-------------------------------------------------

இந்தவாரம் ஒரு தோழியோடு பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார் எல்லாரும் பாலிதீன் பேக் ல் பொருட்களை வாங்கிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் வேண்டாமென்று சொல்லும்போது மற்றவர்கள் திரும்பிப்பார்ப்பது சங்கடமாக இருக்கிறது என்று.. ஆனால் உண்மையில் நாம் அந்த சங்கடத்தை அடையவேண்டியதே இல்லை. எனக்கும் இருக்கத்தான் செய்தது. ஆனால் வருடங்களாக இப்பொழுது அந்த பழக்கத்திற்கு வந்த பிறகு தற்போது சங்கடமும் இல்லை பெருமிதமும் இல்லை.. இயல்பாய் ஆகிவிட்டது.







May 14, 2009

என் வீட்டுத் தோட்டத்தில் ....

என் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் நண்பர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துக்கிறேன்.


ப்ரோமிலைட்ஸ் (Bromeliads)
யுபோர்பியா மிலி (Euphorbia milii )

இவங்க பதிவர் வின்சென்ட் பரிசாகத் தரும்போது ரொம்ப சின்னவங்களா இருந்தாங்க ... அதற்கப்பறம் அந்த குழந்தைகள் எப்படி இருக்காங்கன்னு வின்சென்ட் விசாரித்தபோது வளர்ந்துகிட்டே இருங்காங்க பத்திரமா இருக்காங்கன்னு சமாதானம் சொன்னேன்.. இப்பத்தான் அவருக்கும் இந்த குழந்தைகளின் வளர்ச்சியைக் காட்டறேன்.. வரும்போது மூன்று நான்கு இலைகளுடன் இருந்த இவங்க இப்ப நல்லா வளர்ந்திருக்காங்க.. பூ முழு சிவப்பாக இல்லாம மஞ்சள் பச்சை கலந்து இருக்கிறது.

அவ்வப்போது மாலி (தோட்டக்காரர்) வருவார் . உரங்கள் போட்டு கொஞ்சம் கவனிச்சிட்டு ப் போவார். என்னதான் நாம கவனிச்சாலும் இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல டாக்டர் மாலி தான்.. அவருக்கு இந்த புது செடிகள் ஆச்சரியமாக இருந்தது. நல்ல உயர்ந்த வகை செடிகள் கவனம் என்று சொல்லிவிட்டுப் போனார். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அதிக வெயில் படாமல் வைங்க என்று சொல்லிச்சென்றார்.



கறிவேப்பிலை முதலில் சவலைப்பிள்ளையாக இருந்து இப்போது தான் நல்ல நிலைக்கு வந்திருக்காங்க.. பாக்க என்ன அழகு!!
மணிப்பிளாண்ட் அப்பப்ப டிரிம் செய்து பண்ணிரண்டு வருசமாக இளமையாவே இருக்கறவங்க இவங்க..
மணத்தக்காளி.. இவங்க ஒருத்தவங்களா வந்து பெரிய குடும்பமாகிட்டவங்க .. ஒரு செடியில் பழம் ஆரஞ்சாவும் ஒரு செடியில் கருப்பாவும் இருக்கும்.. திடீர்ன்னு பூச்சி வந்து இலைகள் சுருங்கிபோவாங்க.. திடீர்ன்னு நல்லா வளமாவும் இருப்பாங்க..


நந்தியாவட்டை ... இவங்க ஒல்லிப்பிச்சான் . தொட்டியில் வேர் போக இடமில்லாம இலை சிறுத்து இருக்காங்க. இந்த காலநிலையில் நல்லா பூகொடுக்கிறாங்க..

இது தவிரவும் துளசி இருக்காங்க , பன்னீர் ரோஸ் இருக்காங்க..செம்பருத்தி இருக்காங்க
கற்றாழை இருக்காங்க அவங்களை இன்னொரு நாளில் அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)