April 18, 2008

தமிழ் அகராதி, தமிழ் ரீடர்

சில சமயங்களில் உங்கள் கணினியில் சில எழுத்துருக்கள் (font) இல்லாததால் சில தமிழ் தளங்களில் எழுதி இருப்பவை வாசிக்க முடியாமல் போகலாம் ... அப்போது அங்கே இருப்பதை நீங்கள் அப்படியே காப்பி செய்து இந்த சுரதா ரீடரில் ஒட்டி பிறகு டேப் (TAB) என்கிற எழுத்துருவை தேர்ந்துடுத்தால் கீழே கண்ட பெட்டியில் சரியான எழுத்துருவில் தெரியும்.. அல்லது வேறு எழுத்துருவைத்தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.
--------------------------
உங்களுக்கு எந்த ஒரு தமிழ் வார்த்தையின் சரியான பொருள் தெரியவேண்டுமா இந்த டிஜிட்டல் டிக்ஸனரியில் தட்டுங்கள்.. வந்துவிழும் ..நீங்கள் யுனிக்கோடு ஃபாண்ட் வைத்திருந்தால் தமிழிலேயே கிடைக்கும்... அதற்கு டிஸ்ப்ளே ஆப்சனில் i have a unicode font installed இதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
மயூரேசனின் பின்னூட்டத்திற்கு பிறகு விக்ஷனரியையும் இதில் சேர்க்கிறேன் அங்கிருந்தும் நீங்கள் தமிழ் சொற்களுக்கு பொருள் அறிந்து கொள்ளலாம்..
இவைகளெல்லாம் முன்பே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. எனக்கு சில நாட்களுக்கு முன்பு தான் தெரிந்தது.. சுரதா ரீடரை ஜீவ்ஸ் அறிமுகம் செய்தார்..டிஜிட்டல் டிக்ஸனரி கூகிளில் கிடைத்தது.. தேவைப்படுபவர்களுக்காக இதனை இங்கே சிறுமுயற்சியில் தருகிறேன்.. இதே விசயத்தை முதல் முதலாக அவ்வை தமிழ்சங்கப்பதிவில் எழுதி இருக்கும் இடுகையிலும் பதிந்திருக்கிறேன்.

April 15, 2008

அவ்வை தமிழ்சங்கம்

தில்லியின் தமிழ்சங்கம் போலவே உத்திர பிரதேச மக்களுக்காக ஒரு தமிழ்சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தினம் ஒரு திருக்குறள் என்று திருக்குறளின் பொருளும் கூடவே தமிழில் ஒரு வார்த்தை மற்றும் பொன்மொழிகளூம் இணைய முகவரி தருபவர்களுக்கு மடலிட்டு வருகிறார்கள்.
.
அதன் சிறு சிறு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு பிறகு இந்த ஏப்ரல் 20 ம் தேதி அன்று நொய்டாவில் ஒரு கோடை விழா ஏற்பாடு]
செய்திருக்கிறார்கள்.

சங்கத்திற்கென ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து இருந்தார்கள். ஆனால் தற்போது கூகிள் பக்கம் ஆரம்பித்த பின் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகளை அந்த பக்கத்தில் உடனுக்குடன் புதுப்பித்து வருகிறார்கள். விரைவில் சங்கத்திற்கென கட்டிடம் மற்றும் நூலகவசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று குழுவினர் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

April 12, 2008

எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி

எந்த ஒரு பாடலோ ஒலியோ நீங்கள் கணினியில் கேட்பதை அப்படியே பதிவு செய்து எம்பித்ரி ஃபார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.. அதற்கு நல்ல தொரு சாப்ட்வேர் mp3mymp3 2.0 சர்வேசனின் ஜனகணமண பாடல் பாடவாங்க என்ற அழைப்பின் பதிவில் அவர் இந்த சாப்ட்வேர் பற்றி சொல்லி இருந்தார். அதன்பிறகு கொஞ்சநாட்கள் வெறுமே பாட்டை பாடி அப்படியே எம்பித்ரி ஃபார்மட்டில் சேமிக்க
செய்ய மட்டுமே பயன்படுத்தி வந்தேன்..


பிறகு ஒரு முறை தேன்கிண்ணத்தில் சேர்ந்த பின்னர் என்னிடம் இல்லாத பாடல் ஒன்றை நேயர்விருப்பமாக ஒருவர் கேட்டிருக்க.. அதற்காக எம்பெட் செய்யும் வசதியோடு அந்தப்பாடலைத் தேடி தேடி இணையத்தில் அலைந்து கொண்டிருந்தேன். பிறகு சரி பாட்டை அப்படியே ரெக்கார்ட் செய்து போட்டுவிடலாம் என்று நேரடியாக அந்த் பாடலை கணினியில் பாடல் தளங்களிலிருந்து ஓடவிட்டு செய்து பார்த்தேன். பிறகு மின்விசிறி சத்தம் ...தெருவில் செல்லும் வண்டிகளின் சத்தம் கேட்டதால் .. இந்த் சாப்ட்வேரை கொஞ்சம் ஆராய்ச்சி செய்ததில்.. அதில் ஆடியோ சோர்ஸை மாற்றினால் , மைக்ரோபோனிலிருந்து ஸ்டிரியோ மிக்ஸ் என்ற வகையை தேர்ந்தெடுத்தால் வெளிப்புற சத்தமின்றி அழகாக சேமிக்கிறது என்று கண்டு கொண்டேன்..


பிறகு எங்கள் பகுதியில் ஒரு நாடகம் போடவேண்டும் என்று தோழி அழைத்தபோது.. அதே ரெக்கார்டரில் பிண்ணனிக்குரலாக ஒவ்வொருவரின் நேரம் கிடைக்கும் போது தனித்தனியாக அந்த காட்சிகளை சேமித்து வைத்துக்கொண்டேன். பிண்ணனி இசை தனியாக சேமித்துக்கொண்டேன். பிறகு அதே ரெக்கார்டரில் ப்ரவுஸ் என்கிற பட்டனை தட்டி நாம் சேமித்து வைத்திருக்கும் அத்தனை ஃபைல் களையும் அங்கே வரிசையாக கொண்டுவந்து கொள்ளும் வசதி இருக்கிறது.


பின்னர் ரெக்கார்ட் பட்டனை தட்டிவிட்டு நீங்கள் எந்த வரிசையில் எதிர்பார்க்கிறீர்களோ அந்த வரிசையில் ஃபைல்களை ஒவ்வொன்றாக ப்ளே செய்ய மொத்தமாக ஒரே தொகுப்பாக்கிக்கொள்ளும்படி இருக்கிறது. பிறகென்ன பிண்ணனி இசையை வேறு ஒரு விண் ஆம்ப் ப்ளேயரில் ஓடவிட்டு .. இந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக ஓடவிட்டு நடுநடுவில் பிண்னனியிசை ஃபைல்களை சேர்த்து ஒரு வழி ஆக்கியாகிவிட்டது.


அது குழந்தைகள் நடிக்கப்போகிற நாடகம் அவர்களுக்கோ தமிழ் படிக்கத்தெரியாது என்பதாலும் கொடுக்கப்பட்ட 4 நாட்களில் உச்சரிப்பை திருத்த இயலாது என்பதாலும் இப்படி பிண்ணனி முயற்சியை செய்தோம். ஆரம்பிக்கும் போது நான் இத்தனைக்கு நடக்கும் என்றே நினைக்கவில்லை. என் தோழியோ பிடிவாதமாக இன்னின்ன மாதிரி வேண்டும் என்று சொல்லிவிட்டு உங்களால் முடியும் செய்யுங்கள் என்று [பட்டியலிட்டுவிட்டார்கள்.

சரி வந்தது வரட்டும் என்று ஆரம்ப்த்தபின் அதை கணினியில் இருந்து இற்க்கி எப்படி நிகழ்ச்சி நடக்கும் இடத்துக் கொண்டு செல்வது.. தோழி சரி கணவரின் லேப்டாப்பையே கொண்டுவந்துவிடலாம் என்கிறார். எதற்கும் பார்க்கலாம் என்று என்னுடைய நோக்கியா N72 ல் அதை அப்படியே மாற்றியும் வைத்துக்கொண்டோம்.
முதல் முயற்சியாக அந்த சின்ன அரங்கத்தில் ஒலிபெருக்கியின் முன் கொண்டுப்போய் நோக்கியாவின் ஸ்பீக்கரை வைத்துப் பார்த்தோம் நன்றாகவே கேட்டது . பிறகென்ன வெற்றிகரமான அந்த 5 நிமிட குறுநாடகம் நடந்தேறிவிட்டது.


இன்னும் ரெக்கார்ட் செய்வதை எந்த நேரத்தில் தொடங்கவேண்டும் என்று சொன்னால் அந்த நேரம் அது செய்யத்தொடங்கும் வசதியும் உண்டு .. செட்டிங்க் பகுதியில் ஸ்டார்ட் ரெக்கார்டிங் டைம் என்ற இடத்தில் தற்போதைய நேரமும் அதில் நீங்கள் எப்போது செய்யத்தொடங்கவேண்டும் என்ற கட்டளைக்கான நேரத்தைத் தட்டச்சிக்கொள்ளலாம்.


இப்படி நாமாக செய்துபார்த்து கற்றுக்கொள்வதில் நல்ல விசயம் இருக்கிறது அது மறப்பதில்லை.
நீங்களும் முயற்சித்துவிட்டு இன்னும் என்னவகையில் இதை உபயோகிக்கலாம் என்று மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன்..
http://www.mp3mymp3.com/

பின்னூட்டத்தில் குமார் அவர்கள் சொல்லியது போல உங்களில் எவருக்கும் ஸ்டீரியோ மிக்ஸ் வேலைசெய்யவில்லை என்றால் அவர் எழுதிய பதிவை பார்க்கவும்..

April 7, 2008

தீக்குள் விரலை வைத்தால் ..

நான் உள்ளே நுழையும் நேரம் அந்த பெண் பாடிக்கொண்டிருந்தாள். நிறம், நல்ல தென்னிந்திய நிறம். மை இடப்படமாலே பெரியதாக தெரியும் வகையான கண்கள். நான் அமர்வதற்கு நல்ல அமைப்பான இடம் தேடிக்கொண்டிருந்தேன். தூணுக்கருகில் பாடகர்களை நன்றாக கவனிக்கும்படியாக நேர் பார்வையில் அதே சமயம் காற்றும் வெளிச்சமும் ஒரு சேர கிடைக்கும் படி ஒரு இடம் கண்களில் பட்டது. அமர்ந்த சில நொடிகளில் பாடிக்கொண்டிருந்த பாட்டின் கடைசிவரிகளைப் பாடிக்கொண்டிருந்தாள் அவள். கண்டிப்பாக யாரிடமாவது கேட்டு அவள் பெயர் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை 'விழி'யில் முடியும் ஏதாவது பெயராகவோ அல்லது ஏதாவது ஒரு மலரின் பெயராகவோ தான் அவளுடைய பெயர் இருக்கவேண்டும் என்று தோன்றியது. இல்லாமல் போனால் கூட அவளுடைய பெயர் அழகானதாகத்தான் இருக்கும்.


கண்களாலேயே பக்கவாத்தியக் காரர்களிடம் எப்படி சரிதானா என்று கேட்டாள் .. அவர்களும் புன்னகையில் அற்புதம் என்று பதில் தர. அவள் கண்களும் புன்னகைத்தன. அங்கே ஒரு நாட்டிய நாடகம் நடந்தது அவள் கண்களில். இதுவரை படித்ததும் இந்த வர்ணனைகளும் ரசிப்பும் ஒரு இளைஞனுடையது என்றா நினைத்தீர்கள். ம். நான் ஐம்பது வயதைக்கடந்தவள். தினமும் மாலை வேளைகளில் இந்த சிவன் கோயிலோ இல்லையெனில் செட்டித்தெரு பிள்ளையார் கோயிலிலோ என்னைப் பார்க்கமுடியும்.. இன்று பிள்ளையார்கோயில் தான்போவதாக இருந்தேன். ஆனால் இங்கே கச்சேரி இருப்பதாக பரிமளம் வழியில்பார்த்து சொன்னதால் வந்தேன்.. எனக்கு ராகமோ தாளமோ தெரியாது. பாடல் கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கும். முக்கியமாக இசையெல்லாமே என் மகளை நினைவுப்படுத்தும்.

அடுத்தப்பாடல் "காக்கைச்சிறகினிலே நந்தலாலா" என்று ஆரம்பித்தாள் நான் உருகிப்போனேன். கேட்கும் ஒலிகளெல்லாம் "ஆம் அவள் குரல் தானே இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது".

"தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா" ....அவள் பாடிக்கொண்டிருக்கையில் நான் மயங்கி விழுந்துவிட்டேன். யாரோ என் முகத்தில் பாட்டிலிலிருந்த குடிநீரை தெளித்து எழுப்பிவிட நான் நன்றிக்கூறிக்கொண்டே எழுந்து கொண்டேன்.தீ தீ என்று கத்தியதாக இரண்டு பேர் சொன்னதும் வெக்கமாகப்போய்விட்டது எனக்கு. எப்போதும் இப்படித்தான் என் உடல் நிலைக்கு நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டால் இப்படி மயங்கிவிடுகிறேன் என்று சமாளிக்கப்பார்த்தேன்.. கச்சேரிக்கு என்னால் இடையூறு வேண்டாமென்று கோயிலில் வேறோரு இடம் தேடி என்னை அமரவைக்குமாறு அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

என் மகள்.
கோயில் சிலை போன்ற நங்கை அவள் .

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா" விரலை வைத்தால் பரவாயில்லை பின்னால் இழுத்துக்கொண்டுவிடலாம் , இரண்டு ஊது ஊதினால் சரியாகி இருக்கும்... இல்லையா நானாவது அம்மா காட்டு காட்டு என்று என் வாய் எச்சிலால் குணப்படுத்தி இருக்கலாம்.. என் மகள் தான் அதில் குளித்தே பார்த்துவிட்டாளே .. நான் என்ன செய்வேன். ஏனா? நன்றாக கதையின் ஆரம்பத்தைக்கவனித்தீர்களா? இந்த பாடகியின் நிறத்தை,நான்எப்படி சொன்னேன்.. ஆம் என் மகளும் அப்படியே தான் இருப்பாள். நல்ல தென்னிந்தியநிறமாக்கும் .. வேறுவிதமாகவும் சிலர் சொல்வதுண்டு அவள் கறுப்பென்றாலும் களை என்று, அது எப்படி கறுப்பென்றாலும் அப்படி சொல்லி சொல்லியே கறுப்பு மட்டமென்று சொல்லிவிட்டார்கள். மறுக்காமல் மணந்துகொண்டபின், நாளெல்லாம் நீ கறுப்பென்று முகம் சுளித்து துன்பம் தந்தவன்,மனம் குளிர இவள் தீக்குளித்துவிட்டாள்.
----------------------------------------
இது கதை மாதிரி .. ஆயில்யனின் பதிவு பார்த்த பின் தோன்றியது . என் வீட்டு வேலைக்காரங்களுடைய பெண் நல்ல தென்னிந்திய நிறம். அவளை பள்ளியில் இந்த ஊர் ஹிந்திக்காரங்க பெண்கள், உனக்கு திருமணமே ஆகாது என்று சொல்லிவிட்டார்கள் என்று, அந்த பெண் வீட்டில் வந்து அழுதாளாம்.. அவளுக்கு வயது 10 என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சிறிது நாட்களுக்கு முன்பு வரை அநியாயத்திற்கு, பெண் கள் நிறமாக இருக்கவேண்டும் என்று முகக்கிரீம் ஆட்கள் விளம்பரம் செய்துவந்தார்கள். இப்போது சமநீதி கிடைத்துவிட்டது. ஆண்களும் வெள்ளையென்றால் தான் காதலிக்கப்படுவார்கள் என்று அவர்களூக்கும் தனி க்ரீம் வந்துவிட்டதாக விளம்பரம் செய்கிறார்கள் .. :-)

April 3, 2008

யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!

கதைகள், கதைகள் தானென்றாலும் சில நேரம் உண்மையாகவே எழுத்துக்கள் எழுந்து வந்து கதாபாத்திரங்களை நம் கண் முன்னே நடமாடவும் வைத்து , அதுவும் துன்பமயமான அந்த கதாப்பாத்திரத்தின் ஆழமானதொரு வலியை நாம் உணரும்படி செய்தால் அது கதைதானா என்று அறியாமை மயக்கமே வருகிறது ... பார்த்திராத கதாப்பாத்திரங்கள் நம் கூடவே சில நாட்களுக்கு உலவிக்கொண்டிக்கிறார்கள்.

கே.ஏ.அப்பாஸ் கதைகள் - தமிழாக்கம் முக்தார்

முதல் நான்கு சிறுகதைகள் வாசித்ததுமே .. அதிலும் இந்த "சந்தா" வின் கதை குற்றவாளிகள்
படித்ததும், சுருக்கம் நிறைந்த ஒரு மூதாட்டி மனசிற்குள் உட்காந்து கொண்டு புலம்பிக்கொண்டே இருக்கிறாள்.
"இந்தக் கிழவியை மன்னித்து விடு மகனே! எனது இதயம் நோகும்போது கண்களில் நீர் தாரை தாரையாக வந்து கொண்டே இருக்கும் "
ஓ, மழை குறைந்து விட்டது. இப்போது வெளியே போனால் கடைத்தெருவிற்கு, வைத்தியர் கடைக்குச் சென்று, ‘என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது, மருந்து கொடுங்கள்’ என்று சொல்லு, பைத்தியக்காரி சந்தா அனுப்பி இருக்கிறாள் என்று சொல்லு.

ஆனால் நீ முதலிலேயே சென்று விட்டாயே, என் வெற்றுரைகளைக் கேட்டு அலுத்து விட்டாயா? இறுதியில் நீயும் என் கதையைக் கேட்கவில்லை - யாரும் என் கதையைக் கேட்பதில்லை - நான் பைத்தியக்காரி அல்லவா...” மழை நிற்கும் வரை தங்கி இருக்கலாமே, மகனே

கதையினை நீங்களும் வாசியுங்கள் முழுமையாக ....
------------------------
வெகுநாட்களுக்கு பிறகு ஒரு அழகான காதல் கதை படித்தேன்.
இப்பொழுதும் தான் எத்தனையோ பேர் கதையும் நாவலும் எழுதுகிறார்கள்.ஆனால் எவற்றிலிருந்தாவது கற்றுக்கொள்வதற்கு உணர்ந்து கொள்வதற்கு எதாவது இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். நாவலோடு இணைந்து கதாபாத்திரங்களோடு இணைந்து இப்படி இரு இப்படி இருக்காதே என்று சொல்லாமல் சொல்வது இப்போது காணக்கிடைப்பது இல்லை. அவன் நல்லவன் இவன் கெட்டவன் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு, அந்த கதாப்பாத்திரம் கதையில் என்ன செய்கிறது என்பது ,அந்த வார்த்தைக்குள் அடங்காமல் போனாலும் கவலைப்படாமல் இழுத்துக்கொண்டே போவதும் வழக்கமாய் இருக்கிறது.

மு.வரதராசன் எழுதிய "பாவை" நாவல் படிக்கக்கிடைத்தது. காதல் ரசம் தான் கதையின் நாடி என்றாலும் இடையிடையே இருந்த வரிகள் அந்நாளைய சமூக நிலைகளை அதனைப்பற்றிய ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும்படியாக அமைந்திருக்கிறது.
"குருவிக்காரர் செய்யும் ஆரவாரங்கள் தெருக்கூத்துக்காண ஊரார் கூடிவிட்டார்கள். ஆனால் ஊரில் உள்ள எல்லாரும் போகவில்லை . உறங்கிவிட்ட குழந்தைகள் போகவில்லை: உறங்காதகிழவர்களும் போகவில்லை. உறங்கத்தெரியாத செல்வர்கள் போகவில்லை. பட்டுத்துணிகளை அடுக்கிவைத்திருக்கும் பேறு பெற்றவர்கள் போகவில்லை........... அரசாங்கத்திற்குத் தாம் ஒரு தூண் என்பதாக எண்ணிய மணியக்காரர் போகவில்ல: ...இப்போது அவர்களோடு சேர்ந்து ஆற்றைக்கடந்தால் வாழ்வின் பெருமை போய்விடும் என்பது அவர்கள் கவலை.."

இன்றும் இந்த நிலை ஒன்றும் மாறவில்லை.. மேல்தட்டு மக்களின் கோயிலில் கீழ் தட்டுமக்கள் தென்படுவது குறைவு. கீழ்த்தட்டுமக்களின் கோயிலுக்குள் மேல் தட்டுமக்கள் நுழைவதாகத் தெரியவில்லை.. .
கதையில் கதாபாத்திரங்களைக்கொண்டு அன்பையும் நேர்மையையும் உண்மையையும் அதன் சிறந்த நிலையையும் உணரும் படி செய்கிறார்.. காதல்கதையே ஆனாலும் அதில் இத்தனை யும் பிரதிபலிக்கிறது.

எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்துவிட்டேன்.எனக்குப்பிடித்த கதாப்பாத்திரங்கள் - ஏகாம்பரம் செட்டியார் - நேர்மை,
சுவாமிநாதன்,கமலம்- நல்லதொரு இணை
கண்ணப்பர்- நல்லதொரு கணவன் .

டிஸ்கி: தலைப்பு சும்மாவாச்சுக்கும் கேட்சியா இருக்கதான்.. என்ன வைக்கிறதுன்னு தெரியல.. கிழவியை மன்னித்துவிடு மகனே! ன்னு வச்சிருக்கலாமோ :)