February 28, 2008

புனுகீஸ்வரர் கோயில்

புனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒரு கை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி.. ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..
( punugeeswarar temple)

அன்றைக்கெல்லாம் வீட்டில் தொலைகாட்சிப்பெட்டியும் கிடையாது. ஒவ்வொரு சன்னதியிலும் எல்லாரும் பாடல்களைப்பாடி பின்னர் ஒவ்வொரு பூசையாக முடியும்.சாயங்காலம் ஆரம்பிச்சு இரவு ஆகிவிடும் . அடுத்து அங்கே, அடுத்து இங்கே என்று ஓடி ஓடி வரிசையில் முன்னால் இடம் பிடித்து , சில சமயம் எங்களைப்போன்ற சின்னப்பிள்ளைங்களுக்கும் தனியா பாட வாய்ப்பு கிடைக்கும் ..

தேவாரம் இன்னும் சின்ன சின்ன பாட்டெல்லாம் பழகிவைத்திருப்போம். கூட்டத்தோட கூட்டமா சிவபுராணம் மங்கள ரூபிணி கூட சொல்ல பழகி விட்டோம். ப்ரதோஷம்ன்னா அது ஒரு மகிழ்ச்சி நந்திக்கு அபிசேகம் , முள் பாதையில் ப்ரகாரம் சுற்றுவது என்று. ..இப்ப முழுதும் சிமெண்ட் போட்டாச்சு.ப்ரதோஷம்ன்னா இப்பகொஞ்ச காலமா எல்லா கோயிலிலும் கூட்டம் இருக்கு.. அப்பவே எங்க கோயிலில் கூட்டம் தான்.

வருடத்தில் ஒரு நாள் ஆண்டுவிழா அன்று நிறைய சிவபூசை செய்பவர்களை அழைத்து சிறப்புற பூசை நடக்கும் . ஒவ்வொருவரிடமும் போய் விபூதி பூசிக்கொள்வோம் . விளக்குபூஜை நாட்கள் , வேடிக்கை பார்த்த காலத்திலிருந்து நானே செய்த வரை அந்த கோயில் பத்திய நினைவுகள் இருக்கிறது. கார்த்திகை க்கு சொக்கப்பனை. இப்படி ஒவ்வொரு விசேச நாட்களும் கோயிலோடே நகர்ந்தது.

ஏறக்குறைய் என் வீடு போல அந்த கோயில் என்று சொல்லலாம்..என் திருமண வரவேற்புக்கு மாப்பிள்ளை அழைப்பு அங்கிருந்து ஆரம்பிக்கும்வரை.. சின்னபிள்ளைங்களா இருக்கும்போது
கோயிலில் வாரவழிபாட்டில் ஒரு தாத்தா ஆச்சி கிடைச்சாங்க கோயில் ஆச்சி கோயில் தாத்தான்னு சொல்லுவோம் சிவன் எனக்கு நண்பரைப்போல.. எப்பவும் வேண்டுதலாக எதையும் வைத்ததே இல்லை. ஒரு பாட்டு மனதில் , அதன்பின் , எனக்கு எது நல்லது தெரியாதா .. அதெல்லாம் தானா செய்வே இல்ல,என்று சொல்லிவிட்டு திரும்பிடுவேன்..

மக்கள் முருகன் மகாலட்சுமி சனிபகவான்னு ஒரு இடம் விடாம பரிட்சைபேப்பர் நம்பரை திரிக்கரியாலேயே எழுதி எக்கசக்கமா வேண்டுதல் வச்சிருப்பாங்க...

சுத்தி வரும்போது சாமிக்கு நேர் பின்னால் அடிமுடி காணும் முயற்சி யில் ப்ரம்மாவும் விஷ்னுவும் இருக்கும் லிங்கோத்பவர் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும். தட்சணாமூர்த்தி கிட்ட மட்டும் கூடுதலா கொஞ்ச நேரம் அமைதியா நின்னு மனதுக்குள் நமச்சிவாய சொல்வதும் ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாள் முன்னால் அறுபத்து மூவருக்கும் உற்சவ மூர்த்தி செய்திருந்தார்கள் .. அழகோ அழகு .
பதிவர் ஆயில்யன் ஊருக்குபோய் எடுத்து வந்த கோயில் படங்களை அனுப்பிய உடனே எனக்கு வந்த நியாபகங்களை இங்கே எழுதி திரும்ப கொண்டுவருகிறேன் அந்த நினைவுகளை...
சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் பத்தி விளக்கமா பத்தி அடுத்த பதிவில்..


கோயில் படங்கள் இணையத்தில் ரொம்ப நாளா தேடியும்கிடைக்கல.. ஆயில்யன் உதவியில் இன்னைக்கு நானே போட்டுடறேன்.. (பாருங்க ஆங்கிலத்தில் யாராவது தேடினாலும் கிடைக்கனும்ன்னு போட்டோ விற்கு
கீழே ஆங்கிலத்தில் பெயர் )

February 18, 2008

தமிழிசை விருந்து

ஞாயிறு அன்று தில்லி தமிழ் சங்கத்தில் பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம் தமிழ்சங்கம் இணைந்து நடத்திய தமிழிசை நிகழ்ச்சி இருந்தது. சரி பத்து மணியிலிருந்து எட்டு மணிவரை இருக்கிறது . மகளை வகுப்பில் விட்டுவிட்டு பதினோறு மணியிலிருந்து கொஞ்சம் கேட்டுவரலாம் என்று சென்று இருந்தோம். பதினோரு மணிக்கு மன்றத்தலைவர் ராமதாஸ் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நாதஸ்வரம் மேளம் இசையுடன் அரங்கம் நுழைந்தார். தலைவர்களை எல்லாம் வாழ்த்தி வரவேற்று கலைஞர்களை மேடை ஏற்ற 12 மணியாகிவிட்டது.

இசை கேட்கத்தானே வந்தோம் கொஞ்சமாவது கேட்காமலே போவதா என்று மகளை திருப்பியும் வகுப்பு முடித்து அழைத்துக் கொண்டோம்.
வந்திருந்த கூட்டத்தில் இசையை கேட்க என்ற குறிக்கோளுடன் வந்தவர்கள் குறைவே.. பசுமைத்தாயகம் சௌம்யா பேசுகையில் இது போன்ற இசைக்கு தில்லியில் கூட்டம் கூடுவது குறைவே ஆனால் அரங்கம் நிறைந்திருக்கிறதே என்றார்.. கட்சிக்கரையை ராமதாஸ் அவர்கள் கண்டிப்பாக தடுத்திருந்தாராம்.. கட்சிக்காரர்கள் நடத்துவதான உணர்வு இல்லைதான்.

முதலில் திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் தேவார இசை.. பாடல்களின் பண் களையும் அதன் ராகப்பெயர்களையும் பாடலுக்கான ஒரு சிறு அறிமுகம் கொடுத்து சிறப்பாக பாடினார்.. ஆனால் மக்கள் இங்கும் அங்குமாக அலைந்தபடி இருந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று அவர் உருகிப்பாடிக்கொண்டிருந்தார். பின்னால் ஒருவர் மணி எத்தனைங்க என்றார் அருகில் இருந்தவரிடம் , 3 மணிக்கு சாப்பாடு என்றார் பதிலுரைத்தவர். இன்னொரு கும்பல் "சனியனே நீ எல்லாம் ஏண்டி வந்தே" என்று சண்டையிட்டு கொண்டிருந்தனர். கீழே உணவு வழங்கப்பட ஆரம்பித்துவிட்டதா என்று அறிய ஆவலாக இருந்தனர் போலும். எனக்கு கோபம் வரவில்லை. வருத்தமாக இருந்தது. அவர்கள் கவலை அவர்களுக்கு.

பின்னால் ஹைத்ராபாத் சிவா காவடிசிந்து பாடினார். துள்ளலான அந்த தாளகதிப்பாடல்கள் மக்களை பிறகு கட்டிப்போட்டுவிட்டது போலும் அரங்கம் அமைதியானது. "வள்ளிக்கலாபமயில் " ரசித்துப்பாடினார். இப்போதெல்லாம் இயல்பான விசயங்கள் பலவற்றை நாம் பாராட்டும் நிலைமைக்கு வந்திருக்கிறோம். நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துவிட்டு தலைமை தாங்க வந்த ராமதாஸ் அவர்கள் நகராமல் உட்கார்ந்து ரசித்து கேட்டார்.
(நான் இருந்து கேட்டது 3 மணிவரை)

அதற்கு பிறகு கோடிலிங்கம் வைத்தியலிங்கம் இவர்கள் சித்தர்பாடல்களும் வரிப்பாடல்களும் என்று ஆரம்பித்தார் . கொடுக்கபட்ட நேரத்தில், என்னால், அவைகள் என்ன என்று கோடி காட்டமட்டும் தான் முடியும்.. இவைகள் ஒவ்வொன்றும் விரிவாக செய்யவேண்டிய விசயங்கள் என்றார்.. வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் பேராசிரியர் என்பதால்.. வரிப்பாடல்கள் என்றால் என்ன சிறிது தமிழ் வகுப்பும் நடத்தினார். என்ன என்று புரிந்தால் தாங்க நல்லா ரசிக்கமுடியும் என்றார்.

சிலப்பதிகாரத்திலிருந்து வரிப்பாடல்கள் பாடினார்.
"கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்!திங்களோ காணீர்! திமில்வாழ்நர் சீறூர்க்கேஅம்கண்ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே."
\\"கயல் எழுதி வில்லெழுதி கார் எழுதி " என்று ஆரம்பித்து ஒன்னுமில்லைங்க.. குப்பத்து காதல், ஒருத்தன் பலநாளா ஒரு பெண்ணை விரும்பரானாம் சொல்ல பயமாம்.. கண் மை இட்டு புருவம் எழுதி தலைசீவி ஒரு பெண் குனிந்து மீன் காயவைக்கிறாளாம் ..அவள் நிலவோன்னு அவனுக்கு சந்தேகம். நிலவு ஏன் மீன் காயவைக்க வரனும்னு யோசிச்சானாம் காதலன்.. வேற ஒன்னும் இல்ல வானத்தில் ராகு கேதுன்னு பாம்பு இருக்கு அதற்கு பயந்து தான் இங்க வந்துருக்கும்ன்னு யோசிச்சானாம்.. காதலர்களுக்குத்தான் இப்படி தோனும்ங்க..// விளக்கம் இவ்வாறு சொல்லிவிட்டு பாடலைப்பாடினார்கள். பிறகென்ன மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

''தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால். ''
மான் தேருன்னா குதிரைப்பூட்டிய ரதம் தான் ... வரேன்னு சொல்லிப்போன தலைவர் வரலையே தோழி அவர் மறந்தால் பரவாயில்லை அந்த் குதிரையுமா மறக்கும் என்று சொன்னாளாம்.

சித்தர் பாடல்களில் இரண்டு பாடினார் .மூன்று மணியாகிவிட்டது . உணவு இடைவேளை . வரிசையில்நின்று தயிர்சாதம் சாம்பார்சாதம். கொஞ்சம் வத்தல் . மூன்றரைக்கு அடுத்த அமர்வு . ஆனால் மகளுக்கு பரிட்சை அடுத்த நாள் கொஞ்சமாவது கடைசி நேர தயாரிப்புகள் வேண்டும் . பின்பொரு சமயம் இவை எல்லாம் தனித்தனியாக நடைபெற்று அப்போது நாமும் ரசிக்க நேரம் அமையவேண்டும் என்று ஆசையோடு கிளம்பியாயிற்று. முழுதும் ரசிக்க முடியாத வருத்தம் மனதின் ஓரத்தில்.

February 13, 2008

சூரஜ்குண்ட் மேளா -கைவினைப்பொருள் கண்காட்சி

தில்லி வந்து வருடம் பத்தாகப்போகிறது இருந்தும் இந்த சூரஜ்குண்ட் மேளாவை பார்த்ததில்லையா என்று யாரும் கேட்டுவிடக்கூடாதே இந்த வருடம் எப்படியும் செல்வது

என்று சபதம் எடுத்திருந்தேன். தில்லியில் இருந்து 25 கிமீ தொலைவில் ஃபரிதாபாத் அருகில் இருக்கும் சூரஜ்குண்ட் என்னும் இடத்தில் வருடா வருடம் கைவினைக்கலைஞர்கள் தங்கள் கலைப்பொருட்களை கண்காட்சி விற்பனைக்கு வைக்கும் மேளா நடைபெறுகிறது. குளிர்காலம் முடியும் போது அதாவது பிப்ரவரி மாதம் முதல் பதினைந்து நாள் நடைபெறுவதால் இதமான காலநிலை . அழகான வண்ணமயமான மேளா மைதானம் ஒரு வித்தியாசமான இன்பச்சுற்றுலா . ஆனால் பணப்பைக்கு மட்டும் பயச்சுற்றுலா.
போகும் வழியில் ஆரவல்லி மலைத்தொடர்.. லாரிகள் அணிவகுத்து மலையை உடைத்து சமதளத்துக்கு அதிகமாகவே மடுவாக்கியபடி இருந்தார்கள். இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு அப்படி ஒன்று இருந்ததே ஒருவரும் நம்ப முடியாது என்பதாக.. இவ்வளவிற்கும் அது காட்டிலாகா காரர்களுடையதாம் மாபியா கும்பலை தடுக்கமுடியவில்லை என்று செய்தித்தாள் சொல்கிறது.


வோடாபோன் காரர்கள் விளம்பர நாடகம் ஒன்றை வாயிலில் பாதி பார்க்க நேரிட்டது .. நல்லவேளை முழுதும் பார்க்கவில்லை என்று சந்தோஷப்படும் அளவுக்கு இருந்தது.


தில்லி ஹட்டில் கிடைப்பது போன்றே தான் கைவினைக்கலைஞர்களின் கண்காட்சி விற்பனை என்ற போதும் இதன் அமைப்பு கொஞ்சம் மனதைக்கவர்கிறது.
முன்னூநூற்று அம்பது ,மாநில மற்றும் தேசிய விருதுபெற்ற கலைஞர்களின் பொருட்கள் காணக்கிடைக்கிறது. மண் குடிசைகளும் வெள்ளைக்கோலங்களுமாக அந்த சூழ்நிலையே அசத்துகிறது.உள்ளே நுழையும் போது கேரள பாணி வாயிலில் நுழைந்தோம். இது போன்ற நுழைவாயில்கள் ஒவ்வொன்றும் விதவிதமாக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
பாண்டிச்சேரியிலிருந்து நம்மவர்களின் கடையில் வாங்குவதத ஆரம்பித்தோம் பிள்ளையார் விளக்கு.. பேப்பரால் செய்யப்பட்ட பழங்களின் வடிவங்கள் (கொலுவிற்கு ) காரணம் அவர்கள் தான் மினிமம் 25 ரூபாய்க்குக்கூட சில பொருட்களை வைத்திருந்தார்கள்.. மரத்தாலான பொருட்கள் அடுத்தபடியாக கவர்ந்தவை என சொல்லலாம்.. விளையாட்டு பொருட்கள் அங்கேயும் வாங்கு வாங்கு என்றது.இந்தமுறை மேற்கு வங்கம் முக்கிய பங்கு என்பதால் "அப்னா கர்" எங்கள் வீடு என்று ஒரு மண் வீடு கட்டி அதில் பதினைந்து நாட்களுக்கு ஒரு குடும்பம் வசிக்கிறார்களாம். உள்ளே செல்ல கோயிலில் முண்டியடிப்பது போல இருந்ததால் தவிர்த்துவிட்டோம்.
மணிப்பூரி மப்ளர் காதி சுடிதார் என்று என் பக்கமும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் அடித்தது.
உணவுக்கு என்றேபெரிய இடம் இருந்தது அங்கே கூட்டம் அலைமோதியது. நாங்களும் பஞ்சுமிட்டாயிலிருந்து சோளாப்பூரி பாவ்பாஜி ராஜ்மா ரைஸ் என்று ஒரு கை பார்த்தோம்.
உள்நுழைய 35 ரூ கட்டணம். பலரையும் நல்ல தரமான கேமிராக்களோடு பார்க்க முடிந்தது.. வீடியோ கேமிராக்களுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். படங்களைகூகிளில் தேடினால் ஃப்ளிக்கரில் அமெச்சூர் புகைப்படக்கலைஞர்களின் படங்கள் அசத்துகின்றன .
நான் எடுத்த சில மொபைல் கேமிரா படங்கள் இங்கே.
ரிக்ஷாக்களில் விதவிதமான உருவங்கள் செய்து குழந்தைகளை சுற்றிக்காட்டுகிறார்கள். ஒட்டகசவாரியும் உண்டு ஆனால் மேளா மைதானத்துக்கு வெளியே.

ராஜஸ்தானிய நடனம்.. பஞ்சாபி நடனம்.. ஒரிஸ்ஸா கலை நிகழ்ச்சி என்று நடனங்களும் மக்களை கவரும்படி இருந்தது. ஒரு நாள் பொழுது இனிதே அமைந்தது.

February 1, 2008

தனிமையிலே இனிமை காணமுடியுமா?

படம் ஆரம்பித்து ரொம்ப நேரத்துக்கு நாம் எதும் கல்யாண சிடி பாத்துக்கிட்டு இருக்கமோ என்கிற யோசனை தவிர்க்க முடியாதது தான்.. ஆனா எந்த கல்யாண சிடியில் பொண்ணு பாக்கறதெல்லாம் வரும்.. சரி சரி இது படம் தான் . பிரிவோம் சந்திப்போம் விமர்சனம் எழுதிய எல்லாருமே அது என்ன இத்தனை நாளா இல்லாத தனிமை சினேகாவிற்குன்னு கேட்டிருக்காங்க.. நல்லா அழுத்தமா சொல்லி இருக்காங்க படத்துல...

முதல் காட்சியே, பத்து பெண்கள் ஒரே வீட்டில் . ஒரு அம்மா எந்திரிங்கடி எந்திரிங்கடின்னு பத்து பேரை எழுப்பி காபி குடுத்தா அய்யோ அம்மா என்ன இது இத்தனை பேரு ஒரு வீட்டிலான்னு பார்க்கிறேன். ஒரு ஒரு செருப்பா கொறைஞ்சு காலியாகும் வாசலே சொல்லுது கவிதையாக சினேகாவின் நட்பு வட்டத்தை.

கல்யாணம் செய்யப்போறவர் கூப்பிட்டாலும் கூட தோழிப்படையோடு இறங்குகிறார். எங்கே போனாலும் பத்து பேரத்திரட்டிக்கிட்டு தான் போவியான்னு ஆச்சரியப்படும் தோழிகள்.கூட்டுகுடும்ப ஆசையில் மனம் முழுக்க கனவுகளோடு வரும் சினேகா அழகோ அழகு.

ம் . சேரன் என்ன தான் செய்வார் பாவம் . அந்தகாலம் மாதிரியா இரவில் படுக்கையறையில்(சில சமயம் அங்கயும் ரெண்டு குட்டீஸ்) மட்டுமே பேசமுடியும்ன்னு சொன்னா இந்த காலத்துப்பையன் ( கதையிலங்க) என்ன செய்வார். ஆனா அட்டகட்டியில் தனிக்குடித்தனம் என்பது வாழ்க்கையே ஹனிமூன் போல கொண்டாட்டம் ன்னு நினைக்கிற சொந்த பந்தம் எல்லாம் ( ஏன் அப்பா அம்மா வந்து பாக்கவில்லைன்னு கூட எல்லாருக்கும் ஒரு கேள்வி )புதுமணத்தம்பதியை தொந்திரவு செய்ய வேணாம்ன்னு இருப்பது எங்க போய் விட்டுருது தெரியுமா? அதான் கதை.

கருப்பு நான் சாக்லெட் ப்ரவுனு ன்னு சொல்றது நாம் இருவரும் ஒரே வேலை செய்யரோம்ன்னு ஆரம்பிச்சு ஜெயராமை கலாய்ப்பதும் நல்ல காமெடி..

கேசட்டுகளை கலெக்ட் செய்யும் சினேகா வித்தியாசமான அணுகுமுறை தமிழ் சினிமாவில் இப்படி உணர்வுகளை முக்கியமான கதைக்கருவா எடுத்துக்கிட்டு படங்கள் என்பது அதிசயம் தான்.. யாருக்கு பிடிக்குதோ இல்லையோ எனக்கு பிடிக்குது. நான் கூட இதே போன்று போர் அடிப்பதாக நினைத்திருக்கிறேன். குழந்தைகளும் மற்ற என் பொழுதுபோக்குகளும் என்னை திசை திருப்பி இருக்கின்றன. இப்படி அடிதடி இல்லாமல் வில்லன் ,குடும்ப சண்டை இல்லாமல் எடுத்தற்காகவே படத்தைப் பாராட்டத்தோன்றுகிறது.

--------------------------------------------------------------
நேர் எதிர்மாறான படம் வாழ்த்துக்கள். அன்பு இல்லம்ன்னா அன்பா இருக்காங்களாம். ஆனா சிறுபொறி வ்ந்ததும் கேவலமா அடிச்சிக்கறாங்க.. அன்பானவங்க எப்படி இப்படி மாறினாங்கன்னு தெரியல. அடிப்படையில் அன்பிருந்தா இப்படி ஆக வாய்பிருக்கா. அன்புன்னா தன் குடும்பம் பிறர் குடும்பம்ன்னு பார்க்காம அன்பா இருக்கனும் .

காதலிச்சு கல்யாணம் செய்யும் குடும்பத்து பத்திரிக்கையை தன் கையால் வாங்காமல் போகும் அளவுக்கு அடுத்தவருக்கு மரியாதை தராமல் போகும் குடும்பத் தலைவன் .

தமிழிலேயே பேசனும்ன்னு நினைச்சு படத்துல வசனத்தையே குறைச்சுட்டாங்களோங்கற எண்ணம் தோன்றுது வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி அதிகம். இயல்பா இருக்கனும்ன்னு நினைச்சு போட்ட புதுமுகங்கள் யாருக்கும் நடிக்கவே தெரியவில்லை.எல்லாருக்கும் தமிழில் பெயர் வச்சிருக்காங்க அது ஒரு புது முயற்சி.. ஆனால் எல்லா இயக்குனர்களும் என்ன ஆச்சுன்னு தெரியல முக்கியமான கதாப்பாத்திரத்துக்கு இப்பல்லாம் என் பெயரே வைக்கிறாங்க.. (கயல்விழி) .

அந்த தாத்தா கூட்டுக்குடும்பமா இருக்காராம் அதைப்பார்த்து மாதவன் ஆசைப்படறாராம் . இவர் எங்க இருப்பார் கல்யாணம் ஆனதும். பொண்ணு வீட்டுலயா ? அப்ப அவங்க அம்மா அப்பா.. ? இதுல அந்த தாத்தா வேற கதாநாயகியோட அப்பாவை வீட்டோட மாப்பிள்ளையா வச்சிருக்காரு.. முடிவுல யாரெல்லாம் அன்பா கூட்டா இருக்கப்போறாங்கன்னு காட்டாம விட்டுடாங்கன்னு எனக்கொரு குறை. :-)


ஒரு நல்லப்படம் பார்த்தா நல்லா இல்லாத படம் ஒன்னு பாக்கிறதுன்னு வேண்டுதல். அதுக்கு இது.