January 28, 2010

வானவில் இற்றைகள் -2

எப்போவெல்லாம் நான் பாடம் படிக்கலாம்ன்னாலும் பையன் அம்மா எனக்கு போராகுதுன்னு சொல்வான். எத்தனை நாள் தான் விளையாட்டா பாடம் படிக்கிறது. அதனால் அப்பப்ப பாடம் படிப்பதும் தினம் கொஞ்சம் உக்காருவதும் கடமை என்று உணர்த்தப்பார்க்கிறேன் முடியவில்லை.

இன்றைய விளையாட்டு..
ஒன்று (இரண்டை மனதில் நினைக்கனும்) மூன்று ( நான்கை மனதில் நினைக்கனும்)
இப்படியே வேகமாக சொல்லனும்.. அவனும் அதை விளையாட்டு என்றே நினைத்து விளையாண்டு விட்டான்.

அடுத்த நம்பர் என்ன முன்னால் இருக்கும் நம்பர் என்ன என்பதை நிச்சயமாக விளையாட்டு என்று நம்ப மாட்டான். ஆனால் அதையே ஒரு கற்பனை கணினி விளையாட்டாக விளையாண்டோம். ஈஸி, மீடியம், ஹார்டு என்கிற மூன்று லெவல் இருக்கிறது என்றதும் அவனாகவே ஒரு கட்டத்தை காற்றில் க்ளிக் செய்துவிட்டு இப்ப ஹார்டு என்றான். என்ன ஒரு தைரியம் ம் பார்க்கலாம்.. 33_ , 46 _, 99 _ எல்லாவற்றிற்கும் சரியான பதில் சொல்லிவிட்டு இப்ப ஈஸி லெவல் எப்படி இருக்கும்ன்னு பார்க்கலாம் என்று காற்றில் க்ளிக்கினான்.
-----------------------------------------
கடையில் 5 மிட்டாய் கேட்டான். கடைக்காரர் ரவுண்ட் செய்ய 6 மிட்டாயாக குடுத்துவிட்டார்.
ஒன்றை வழியிலேயே சாப்பிட்டுவிட்டு.. பர்ஸில் 6 இருக்கா என்றான். அது எப்படி நீதான் ஒன்று சாப்பிட்டு விட்டாயே என்றதும் அப்ப எத்தனை இருக்கு என்று கேட்டான். நீயே சொல்லு யோசித்து என்றேன். ம்.. 5 இருக்கா ? என்று கணக்கு செய்து கொண்டான். அட கழித்தல் கணக்குக்கூட செய்ய ஆரம்பித்துவிட்டான் . :-)
------------------
ரிஷிகேசத்தில் இருந்தபோது குளிரின் காரணமாக மிட்டாய் தரவே இல்லை .அம்மா தில்லி போனபின்னாவது தருவியா என்றான். அங்கயும் குளிர்தான்ப்பா ..நோ ... என்றது..

’ஸ்.. ஏ மம்மி கபி சுதரேகி நஹி ‘ என்று சலித்துக்கொண்டான்.

நான் இவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் முழித்தேன். மகள் சொன்னாள்.
அம்மா அவன் என்ன சொல்றான் தெரியுமா.. ’இந்த அம்மா எப்பவும் திருந்தவே மாட்டாள் ‘
:(

அது எதோ டோரிமான் கார்டூன் கேரக்டர் பையன் சேட்டை செய்வதற்கு சொல்வதாம்.

-----------------------------------

வானவில் இற்றைகள் 1

January 24, 2010

கைகளில்லை ஆனால் கவலையுமில்லை!

உங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள்
போன முறை அவ்வைத்தமிழ்சங்க நிகழ்வில் , நாட்டுப்புற நடனத்தை குழந்தைகள்
மிகவும் ரசித்த காரணத்தால் அதை மிக எதிர்ப்பார்ப்போடு பார்க்கச் சென்றிருந்தோம் . இம்முறை அவர்கள் நிகழ்ச்சி ரத்தாகிவிட்டிருந்தது. ஒடிஸி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றன. நிகழ்ச்சியில் அமர்ஜோதி என்கிற மாற்றுதிறனுடைய குழந்தைகளின் பள்ளியிலிருந்து வந்திருந்தார்கள். அமர்ஜோதி பள்ளி நிகழ்ச்சி மூன்றாவதாகத்தான் வந்தது என்றாலும் முதலில் சொல்ல விரும்புவது அவர்களைப் பற்றியே.

சக்கர நாற்காலியுடன் வந்த இரண்டு மாணவர்கள் தனித்தனியே சுழண்டும் சிலநேரங்களில் கை கோர்த்துக்கொண்டும் ஆடினார்கள். பஞ்சபூதங்களையும் வணங்கிப் பாடினார்கள். அதனனதன் நிறங்களை உடைகளில் தெரியப்படுத்தினர். முடிந்தபின் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டும்படியாக இருந்தது . நடனங்கள் எளிமையானவை என்றாலும் மாற்று திறனுடைய அந்த குழந்தைகள் வாய்க்குள் எண்களை முனகியபடியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவலுடனும் செய்த அசைவுகள் எந்த ஒரு சிறந்த நாட்டியத்துக்கும் குறைவானதில்லை.


காமிரா கண் வழியாகவே நிகழ்ச்சியைப் பார்க்க நேருவதில் எனக்கு எப்போதுமே ஒரு குறை உண்டு. அந்த நேரத்தில் மற்றவர்களைபோலவே நான் அதனை முழுதுமாக ரசிக்க இயலாதது போல ஒரு எண்ணம். இப்படி சில குழந்தைகளில் கவனம் வைத்து இருந்தபோது நடுவில் திடீரென்று சின்னதொரு மலர் பூத்தது.. அம்மலருக்கு இரு கரங்களும் இல்லை. ஆனால் மலர்ச்சிக்கு அளவே இல்லை.

அவர்கள் நினைவுப்பரிசினை உயர்த்தி தூக்கி ஹே என்று ஆர்ப்பரித்தார்கள். எனக்கு பதட்டமாகிவிட்டது .அந்த மலர் என்ன செய்யும் ? அருகில் இருந்த இன்னோரு மலர் அவளுக்காக பரிசினைத் தூக்கிகொண்டு இருகரங்களால் ஹே என்றது. பிறகு மற்றொரு குழந்தை அந்தப் பரிசை அவளுக்காக தான் ஏந்தி சிரித்தாள்.

அந்த கவிதை நொடிகளை க்ளோஸப்பில் என் பெட்டிக்குள் அடைக்க முயன்றேன். குறுக்கில் ஒருவர் வந்துவிட்டார். அந்த மூன்று குழந்தைகளும் என் தவிப்பை கவனித்திருக்கிறார்கள். உடனே சாய்ந்து காட்சிக்குள் அடங்க முயன்றார்கள்.

அந்த மலர் சாயச்சாய தடுமாறி பிடிமானம் இல்லாமல் ( அவள் எப்படி பிடிப்பாள் ) தோழிமீது சாய்ந்து விட்டாள்.அவள் முட்டுக்கொடுக்க வாய்விட்டு அவர்கள் சிரித்த நொடி நான் மறக்கவே முடியாத தருணம். இந்த நேரம் காமிரா கண் வழியே நான் பார்த்துக்கொண்டிருந்ததற்கு வருந்தவில்லை. உங்களுக்கு அதனால் தானே பகிர முடிந்தது.


அமர்ஜோதி பள்ளியைத் துவங்கிய உமா துலி பேசியபோது இவர்களைப் போன்றவர்களுக்கு இவர்களின் கைகளாய் கால்களாய் உடனிருங்கள் , அவர்களை கண்ணியமாக நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த சிறுமலருக்கு பரிசினைத்தாங்க ஓடிச்சென்ற அக்குழந்தை அதனை செயல் வடிவில் உடனே செய்தாள் என்று தோன்றுகிறது.

உடலுறுப்புகளின் அத்தியாவசியத்தை உணர்ந்து கொண்டால் அதனை பேணிக்கொள்வதையும் செய்வோம். நன்கு பேணிய அவ்வுறுப்புகளை நமக்கு பின் மற்றவருக்கும் அளிக்கவும் இயலும். அங்கேயே விண்ணப்பத்தாள்களை அவ்வைதமிழ்சங்கம் விநியோகித்து வந்தார்கள். பல இளைஞர்கள் படிவங்களைப ஆர்வமாய் பூர்த்தி செய்ததைப் பார்த்தேன். நானும் இன்று அதற்கான விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்கிறேன்

கொஞ்சநேரம் பேம்ப்ளெட்களை விநியோகித்துக் கொண்டிருந்த தோழிகளை சியர் அப் செய்யச் சென்றிருந்தேன் . சிலர் எதோ விற்பனை விளம்பரம் என்று நோ தேங்க்ஸ் என்று கடந்தார்கள். நாமும் பலமுறை என்னவென்றே பார்க்காமல் இப்படி எத்தனயோ தாண்டியதில்லையா? இருந்தாலும் கால்சட்டை பைக்குளிலிருந்து கையெடுக்காத கனவான்களையும், கை நீட்டி வாங்க சோம்பேறிப்பட்ட நாரீமணிகளையும் கல்லூரிக்காலப் பெண்கள் போல கிண்டல் அடித்துக்கொண்டிருந்தோம்.

ம்ற்றொரு பரதநாட்டிய குழுவினரான பாமினி சேகர் குழுவினர் முதல்நாளும் இன்றும் நடனங்களுக்கு நடுவில் உடலுறுப்பு தானம் பற்றி விழிப்புணர்ச்சியூட்டும் வகையில் காட்சிகளை அமைத்திருந்ததை அறிந்தேன். அருகிருந்து பார்க்காததால் படஙக்ளை பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

January 23, 2010

உங்கள் உடலுறுப்புகளை சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லாதீர்கள்

இன்றிலிருந்து 26ம் தேதி வரையிலும் நொய்டா க்ரேட் இண்டியா ப்ளேஸ் மாலில் தொடர்ந்து நான்கு நாட்கள் அவ்வை தமிழ்சங்கத்தின் இசை நடன விழா நடைபெற உள்ளது. போன வருட கொண்டாட்டத்தைப் போலவே இந்த ஆண்டும் மாலும் அலங்கரிக்கப்பட்டு வெளிமேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறத்தொடங்கி இருக்கிறது.

இம்முறை உடலுறுப்பு தானத்தை விழாக்கருத்தாக தேர்ந்தெடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர். "GIVE IT YOUR BEST " என்பது நிகழ்ச்சியின் தலைப்பாகும். " DONT TAKE YOUR ORGANS TO HEAVEN. HEAVEN KNOWS WE NEED THEM HERE உடலுறுப்பு தானம் பற்றிய குறிப்புகள் விவரங்கள் பலவும் இந்நிகழ்ச்சியின் தினங்களில் சொற்பொழிவும் உண்டும்.

மோகினி ஆட்டம் , பரதநாட்டியம் , கர்நாடக சங்கீதம் மற்றும் போனமுறையே நிகழ்ச்சியை களைகட்ட செய்த கிராமிய நடனக்குழுவும் இணைந்து விழா சிறப்பித்து தர இருக்கிறார்கள்.
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் குழுவினரின் நிகழ்ச்சி தினமும் உண்டு.

இன்று மதியம் ஒன்றிலிருந்து ஏழு மணிவரை
நாளை 24 ம் தேதி ஒன்றிலிர்ந்து எட்டு மணிவரை
25 அன்று மூன்று மணியிலிருந்து ஏழு மணிவரை
26 ம் தேதி ஒன்றிலிருந்து எட்டு மணிவரை
நிகழ்ச்சிகளைக் காணலாம்.

January 20, 2010

ஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்

முல்லை சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க.
தில்லியில் இந்தியா கேட்டை சுற்றிய பகுதிகளில் சாலைகள் மிக நேர்த்தியானவை. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்படுத்தபட்ட பகுதி என்பதாலும் இன்னமும் நம்ம ஊர் தலைவர்கள் தங்குமிடங்கள் என்பதாலும் நேர்த்தி கெடாமலே பாதுகாக்கப்படுகின்ற பகுதியுமாகும். எப்போதுமே குண்டு குழி இல்லாமல் இருக்கிறது. அதில் வேலை நடந்தும் பார்ப்பதில்லை. அங்கே மட்டும் தனிக்கவனமெடுத்து போடும் போதே தரமானதாகப் போடுவார்களோ என்று எனக்குத் தோன்றும்.

இதே எங்க பகுதியிலும் சாலைகள் இருக்கிறது . அவற்றின் தரம் காரணமாக தானாக உடைந்தவை , மழையால் உடைந்தவை, டெலிபோன் கேபிள் , கேஸ் , தண்ணிப்பைப் காரர்களால் உடைபட்டவை என்று அடிக்கடி குறைபாடும் இருக்கும். அதனை சரிசெய்து பிச்சைக்காரர் போட்டிருக்கும் ஒட்டுத்துணி போன்ற வடிவங்களும் மேடும் பள்ளமுமாகவும் இருக்கும். பற்றாக்குறைக்கு பாலங்களின் நகரம் என்றபடி எங்கெங்கு காணினும் பாலங்கள் தான். அவற்றின் வளைவுகள் விரைந்து செல்பவர்கள் உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை.

விதிமுறைகளை பின்பற்றினாலே பாதுகாப்பு தானாக அமைந்துவிடும்.
மிகப்பெரிய சாலைகளில் 4 லேன்கள் இருந்தாலும் ட்ராபிக் முண்டியடிக்கும். உண்மையில் அவரவர் லேனில் தொடர்ந்து ப்யணித்தால் ட்ராபிக் இத்தனை இருக்கவே செய்யாது. மக்கள் லேன் பற்றிய எந்த ஒரு உணர்வுமே கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு எப்படி முன்னேறுவது என்பது தான் வழியே ஒழிய விதிமுறைகள் பொருட்டு அல்ல. 5 கார்கள் ஒரு வரிசையில் அதற்கும் நடுவில் மூக்கை நுழைக்க முண்டியபடி ஆறாவது என்பது சர்வ சாதாரணம்.

இடித்து , பெயிண்ட் பெயராத கார்கள் அபூர்வம். ஒருவேளை நீங்கள் பார்ப்பதற்கு முந்தின நாள் தான் போய் பெயிண்ட் செய்திருப்பார்களாக இருக்கும். இங்கே எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறதாம். (எங்களுக்கு இது கேள்வி தான்...:)இதுவரை செயல்படுத்தியது இல்லை) சாலையில் செல்லும்போது வேறு வண்டியோடு ஒரு சின்ன இடித்தல் உரசல் நடந்துவிட்டால் பிரச்சனை இல்லை, இறங்கி சத்தம் போடும் முதலாமவர் ஜெயிப்பார். சரி அவர் முதலில் சத்தம் போட்டுவிட்டாலும் ப்ரச்சனை இல்லை, நீங்கள் முதலில் அடித்துவிடவேண்டும் அவ்வளவு தான்.(அவர் துப்பாக்கிவைத்திருந்தால் நான் பொறுப்பல்ல)

குளிர்காலத்தில் சாலையில் வெறும் வெள்ளைச்சுவர் உங்களுக்கு நாற்புறமும் சூழ்ந்திருக்கும். வீடோ ஆபீஸோ சென்று சேர்வது உங்கள் சாமர்த்தியம். முந்தாநாள் அப்படித்தான் கீழே இருக்கும் மஞ்சள் கோட்டையோ , டிவைடரையோ பிடித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். ஒருமுறை யமுனா பாலத்தில் நாற்பது வண்டிகள் ஒன்றன் மேல் ஒன்று சினிமாமாதிரியே மோதி நின்ற சரித்திரம் கூட உண்டு.

இத்தனை இருந்தும் அசுர வேகத்தில் ஓட்டுபவர்களுக்கு மட்டும் குறையில்லை. எங்கள் பகுதியில் கேட் தாண்டி உள்ளே நுழையும் வண்டிகளுக்கு 20 கிமீ வேகம் என்று தான் விதி. ஆனால் வீடுகளுக்கு அருகில் வளைவுகளில் கூட அதிரடியாக 50 கிமீ வேகத்தில் நுழைபவர்கள் உண்டு. எனக்கு வரும் கோபத்தில் பலமுறை அவர்களை கைநீட்டி நிறுத்தி
‘ஏன் ஏஏன்
ஏன் இப்படி’, என்று வடிவேலு பாசையில் கேட்பேன். அவர்களும் சாரி மேடம் என்று சொல்லிவிட்டு பத்தடிக்கு 10 கிமீ வேகத்தில் உருட்டிவிட்டு பின் சீறிப்போவார்கள்.

பஸ், கார், வேன் போன்ற எந்த வாகனங்கத்திலும் செல்லும் போது இரவில் நான் தூங்குவதே இல்லை. நான் தூங்கினால் பிறகு ட்ரைவரை யார் கண்காணிப்பது? ஒருமுறை பெங்களூரில் குடும்பமாக மைசூர்பயணம் முடித்து திரும்பும் வழியில் ட்ரைவர் தூங்கிவிழுந்து கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் மிகவேகமாக ஒரு லாரிக்கு பின் சென்று கொண்டிருந்தார். வண்டி இடமும் வலமுமாக ஆடியபடியே இருந்தது. முன்சீட்டில் தூங்கிய கணவரை எழுப்பியதில் டிரைவர் அல்ர்ட் ஆகிவிட்டார்.

ட்ரைவர் நமக்குத் தெரியாத புதிய ஆள் என்றாலும் மெதுவாகச் செல்லுமாறு சொல்வதற்கு எப்போதுமே நான் வெட்கப்படுவதில்லை. தயானந்தர் சத்சங்கத்துக்கு கடைசி நாள் என்னுடன் எதிர்வீட்டு ஆண்ட்டியை அழைத்துச் சென்றிருந்தேன். வெளியே வந்தபோது ஒரு வயதானவர் காரை நிறுத்தி அவரும் சத்சங்கம் முடித்து குருபிரசாதமாக வாங்கிய புத்தகத்தைக் காட்டியபடி, நீங்கள் எந்த பக்கம் செல்லவேண்டும் என்று விசாரித்தார். பிறகு தானும் அந்த பக்கம் தான் போவதாக சொல்லிக்கொண்டு காரின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு எங்களுக்குத்தெரிந்த மருத்துவரின் பக்கத்துவீடு அவருடையது என்றும் கூறி வற்புறுத்திக்கொண்டிருந்தார். வீட்டுக்கு போன் போட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு ஏறிக்கொண்டோம்.

வரும் வழியில் மனுசர் வேகமாக ஓட்டிக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தார். புதிய பாலத்தின் வழியில் அவர் குழம்பி நின்றுவிட்டார். பின் நான் வழி சொல்லிக்கொண்டே இந்த இடத்தில் நீங்கள் கொஞ்சம் மெதுவாகத் திரும்புங்கள் இன்னோரு பாலம் வந்து சேரும் என்று சொன்னேன். அவர் நிச்சயமாக மேடம் உங்களை பயமுறுத்தமாட்டேன் என்று மெதுவாகவே திரும்பினார். நான் ஜெர்மனியில் இருந்தவன் என்றார். யார் எங்கே இருந்தாலும் எத்தனை திறமை சாலியாக இருந்தாலும் சாலை பாதுகாப்பை பொறுத்தவரை எதிரிலோ பின்னாலோ வரும் மற்றொரு வண்டியோட்டியின் திறமையை நாம் அறியமாட்டோமென்பதால் கவனம் தேவைதானே .

சாலை பாதுகாப்பு பத்தி எழுதறது நல்லது தானே விக்னேஷ்வரி மற்றும் கோமதி அரசு இருவரையும் தொடர்ந்து எழுதி விழிப்புணர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

January 19, 2010

பொங்கலும் தமிழ்படமும்

பொங்கல் அன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை என்றால் சாமி குத்தம் . அதனால் நானும் நாலைந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துவைத்தேன். எஸ் எஸ் டிவியில் மதுமிதா பேட்டி.. அழகான பாடல்கள் , கனாக்கானும் காலங்கள் பாடலை காலை ஒலிபரப்பிலும் மாலை ஒலிபரப்பிலும் இரண்டு முறையும் கேட்டேன். விழாநேரங்களில் கூட எஸ் எஸ் டிவிக்காரங்க அனுமாரும் சாமியாருமாக வியாபாரங்களுக்கு நேரம் ஒதுக்கும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை..

நீயாநானாவைக்கூட பாக்கவச்சிட்டாங்கன்னா பார்த்துகோங்க..சூர்யாவாச்சே..கல்விகடன்களுக்கு பேங்க்குக்கு அடுத்தபடியாக அகரமும் இருக்கிறதாம்.(இருக்கின்ற சிஸ்டத்தையே தொடர்ந்து வளர்க்கிறது எப்படி சரியாகும்? ) பார்க்கும் போது கலங்க வைப்பது என்பது இதிலும் தொடர்ந்தது. பல மாணவர்களைப் பற்றிக் கேள்விபட்டபோது வயிறு பகீரென்றது. 19 வருடங்களாக ஃபேஸ் மேக்கர் வைத்திருக்கும் ப்ரபசர் தனக்கு ஆபரேசனுக்கு முன்பாக சுத்தம் செய்யவந்த இளைஞன் எம்.ஏ படித்த கதையைக் கேட்டு கலங்கியதைச் சொன்னபோது நம்மையும் துக்கம் தொண்டையடைக்கச் செய்தார்.

நவநீதகிருஷ்ணன் கிராமப்புறப் பாடல் நிகழ்ச்சியும் அருமை. குழந்தைக்காக பிறந்ததலிருந்து அம்மா பாடும் பாடல்களை அவர் வரிசையாக விவரித்துக்கொண்டே பாடிய விதம் ரசிக்கும்படி இருந்தது.

”தமிழ்படம்” குழுவினரின் கலந்துரையாடல் பார்த்தேன். அசந்துவிட்டேன். அடுத்த ரயிலைப் பிடித்து தமிழ்நாடு சென்று முதல் ஷோ பார்க்கலாம் போன்ற ஆசையை உண்டாக்கிவிட்டார்கள். சிரிக்காமல் அவர்கள் பேசியது எனக்கு மிக ஆச்சரியம். அதும் ஒஹமசீயோ வைப் பற்றியும் ரெட் கேமிராவைப்பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டது எனக்கு வயிறுவலிக்க சிரிக்க உதவியா இருந்தது. ஒஹமசியோவின் வரிகளை வரலாற்று பொக்கிஷத்தை யாரும் பாட சிரமம் இல்லாம தேன்கிண்ணத்தில் வலையேற்றிய மைப்ரண்டின் கடமை உணர்ச்சியை , ஈடுபாட்டைச் சொல்லி சொல்லி வியந்து கொண்டிருந்தேன்.

இதற்குமுன் வந்த படத்தில் எல்லாம் எனக்கு உதட்டசைவு க்ளோசப்பில் இல்லை எனவே இந்த படத்திலாவது சரியாக செய்யவேண்டுமென்று கவனமெடுத்து செய்ததாகச் சொன்னார் ஹீரோ மிர்ச்சி சிவா .அதுவும் ஒஹம்சியா நாக்கமுக்க இடங்களில் எல்லாம் “நீயில்லாம நானில்லை ..நானில்லாம நீயில்லைனு ‘ அர்த்தம் இருக்கிறதா நினைத்துக்கொண்டு உருகி உருகி நடித்தார்களாம்.

’பச்சை பிங்க் தமிழன்’ பாட்டில் அவர் வெறுமே நடந்து தான் வந்தாராம். பில்டப்ங்கறது அவங்கவங்களா குடுத்துகிறது இல்லை சுத்தி இருக்கவங்க குடுக்கறதுதாங்கற தத்துவத்தை எளிமையாக விளக்கினார். ஹீரோயின் கடைசியாக நான் நடித்த பட ஹீரோக்களிலேயே இவர் தான் மிகச் சிறந்த கோ ஸ்டார் என்றார். ஹீரோ இதுவரை நீங்க எத்தனை படம் நடிச்சிருக்கீங்க என்று திருப்பி கேட்டால் இது தான் அவருக்கு முதல் படமாம், நல்லாத்தான் கிளம்பி இருக்காங்கப்பா..

January 14, 2010

எங்க வீட்டு மஞ்சகொத்து


இந்த முறை எங்க வீட்டுத்தோட்டத்துலயே வளர்ந்த மஞ்சள் கொத்து, பொங்கலுக்கு தயாராக.. கொஞ்சம் எடுக்கும் போது மஞ்சள் துண்டுகள் உடைந்து விட்டது.. கண்டுக்காதீங்க..
வருவரா மாட்டாரா என்று நினைத்த சூரியனார் வந்து சிறப்பித்துவிட்டார்.. எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இயற்கை வளங்களை வணங்கிப் போற்றுவோம்- இயற்கை
வளமுடன் வாழவைக்கட்டும் நம்மை...

January 12, 2010

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான்

உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் ( கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன் அசைவுகளாலும் உணர்வு வெளிப்பாடுகளாலும் ஓவியங்கள் என்பதனையே நம்மை மறக்கச் செய்யக்கூடிய வல்லமை படைத்தவையாக இருக்கின்றன .

boundin


அழகான வெண்செம்மறி ஆடு ஒன்று . அது தன் பட்டுபோன்ற பளப்பளப்பான கம்பளியுடலுக்காகவும் அழகான துள்ளல் ஆட்டத்திற்காகவும் நண்பர்களால் நேசிக்கப்பட்டு வருகிறது. கம்பளி நீக்கப்பட்டுவிட்ட ஒருநாள் ”நான் அசிங்கமாக , ரோஜா வண்ணத்தில் கேலிக்குறியவனாக நண்பர்களுக்கு தோன்றிவிட்டேனே” என்றுசோர்ந்து போய்விடுகிறது. அங்கே ஜேக்கலோப் (ஜாக் ரேபிட் உடல் + மானின் கொம்புகளுடையது) என்கிற கற்பனை கதாபாத்திரம் வருகிறது.

”உன் வண்ணத்தில் என்ன இருக்கிறது? சொல்லப்போனால் இப்பொழுது தானே நீ உன் நடனத்தை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளமுடியும். உயர உயர மிக உயரமான துள்ளல்கள் ஏன் நீ செய்யக்கூடாது? நடனம் சிறப்பாக இருக்கும் போது அதே நண்பர்கள் மீண்டும் ரசிக்கத்தானே செய்வார்கள் ” என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மீண்டும் மே மாதம் வருகிறது. மீண்டும் கம்பளி நீக்கப்படுகிறது. ஆனால் இம்முறை ஆட்டுக்குட்டிக்கு சோகமில்லை வருத்தமில்லை . தன்னம்பிக்கையோடு முன்போலவே குதித்தாடுகிறது

----------------------------------


கொக்கின் அலகில் ஒரு குழந்தை கிடக்கும் மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும் படத்தை நீங்கள் வாழ்த்து அட்டைகளில் பார்த்திருப்பீர்கள். சில நாடுகளில் வெள்ளை நிற கொக்கு ((white stork) பிள்ளைப்பேற்றுக்கான அதிர்ஷ்டத்தை வழங்குவதாக கதைகள் வழியாக நம்பிக்கை நிலவுகிறது. நீண்ட தொலைவு வலசைப் (migration) போவதன் பொருட்டு வசந்தகாலத்தில் வந்து சேர்கின்றன. அவை குடும்பத்துக்கு வசந்தகாலத்தின் தூதுவர்களாக நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக உக்ரேனிய நாட்டில் கருதுகிறார்கள். இதனால் அவை மனிதர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு அருகில் கூடுகட்டி வாழத் தடை ஏதும் இருப்பதுமில்லை.

பார்ட்லி க்ளவுடி(partly cloudy) .

மேகங்களிலிருந்து தான் அந்த கொக்குகள் குழந்தைகளைக் கொண்டுவருவதாக இக்கதை பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மேகத்திற்கும் ஒரு கொக்கு உண்டென்றும் அவை மேகங்கள் படைக்கின்ற அழகான , ரசிக்கத்தகுந்த குழந்தைகளையும் பூனைகுட்டிகளையும், நாய்க்குட்டிகளையும் அதனதன் தாயிடம் கொண்டு சேர்ப்பதுமாக இருக்கின்றன. ஆனால் கெஸ் என்கிற மேகம் செய்வதெல்லாமோ ஒரு முள்ளம்பன்றி , ஒரு முதலை போன்ற அச்சமூட்டுகின்ற விலங்கினங்களின் குட்டிகளைத் தான். அவைகளைக் கொண்டு சேர்ப்பதற்குள் அந்த மேகத்தின் நட்பு கொக்குக்குத்தான் எல்லா துன்பமும் நேரிடுகிறது. ஆனாலும் அது அச்செயலை ஒரு கர்மயோகியைப்போல செய்துவருகிறது. சிரித்தபடியே மேகத்திடம் தன் துன்பத்தை மறைத்துப் பழகுகிறது.

உள்ளூர மற்ற கொக்குகளைப்போல எளிய வேலை தனக்கு அமையவில்லை என்கிற எண்ணம் கொண்டு இருந்தாலும் துன்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள நண்பனை விட்டு அது விலகவில்லை . கொக்கின் சிரிப்பும் மேகத்தின் நொடிக்கொன்றான முகபாவங்களும் ரசிக்கத் திகட்டாத ஒன்று. அடி , இடி படாமல் இருக்க கவசங்கள் அணிந்து வரும் கொக்குக்கு மின்சாரம் வெளிப்படுத்தும் மீனைப் படைத்துத் தருகிறது மேகம். தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே..

கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே ...

யார் சொன்னது வரைபட அசைபடங்கள் குழந்தைகளுக்கானது என்று ? அது பெரிய குழந்தைகளுக்குமானது தான். பெரியவர்களுக்குள்ளும் குழந்தைகள் உண்டு தானே.போட்டி நிறைந்த உலகத்தில் தோல்விகளை சந்திக்காத வயதினரே இருக்கமுடியாது. வெற்றிகளை விடவும் தோல்விகள் வாழ்வினை முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அமைத்துக் கொடுப்பதுண்டு. குழந்தைகளுக்கு தோல்வி என்பதும் ஒரு அனுபவமே என்று கற்றுக்கொடுக்க நினைக்கிறோம். மாற்ற இயலாத் தருணங்களின் நேர்மறை பக்கத்தை காணவும் , அச்சூழலில் மனத்திண்மை கொண்டு எழுந்து நிற்கவும் பழக்க நினைக்கிறோம். இவ்வாறான படங்கள் அவ்வேலையை எளிதாக்குகிறது. கற்றுக்கொடுக்கும் நேரத்தில் நாமும் கற்றுக்கொள்வோம்.

-------------
நன்றி : ஈழநேசன். ( இது ஈழநேசனுக்கா எழுதிய பிகசர் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி)

January 9, 2010

பாலைவனச் சோலை

இணையம் கிடைக்காத நேரமொன்றில் வழக்கம்போல பாதியிலிருந்து இந்த கொரிய திரைப்படம் ஒயாசிஸ் (Oasis) ஐ பார்க்கத்தொடங்கினேன் . அழகான பாடல் ஒன்றின் வரிகள் கீழே வந்து கொண்டிருந்தது. ஆனால் பாடலுக்கு வாயசைத்து நடிப்பதோ மூளையின் கட்டளைக்கு உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் ஒரு பெண். ஆவலால் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். சற்றே குறைப்பாடு உடைய ஹீரோ. அதிகப்படியான பாதிப்பை உடையவளாக ஹீரோயின்.(cerebral palsy)

தனியாக அறையில் இருக்கும் கதை நாயகிக்கு ஜன்னல் வழியாகத் தெரிகிற மரக்கிளையின் நிழல் தினம் பயமுறுத்துவதாக இருக்கவே .. அவன் அதை மந்திரத்தில் ஒரு நாள் மறைத்துவிடுவதாக வாக்களிக்கிறான். வீட்டிற்கு அவளின் அண்ணனும் அண்ணியும் வரும் முன்னர் அவன் மீண்டும் கதவைப் பூட்டி சாவியை பழையபடி இருந்த இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டான். மறுநாள் அவர்கள் இருவருமாக அவுட்டிங் செல்கிறார்கள். அவளை உப்புமூட்டையாகத் தூக்கிக்கொண்டு அவளின் சக்கர நாற்காலியையும் தூக்கியபடி அழைத்துச் செல்கிறான்.


ரயிலில் மற்ற சாதரண காதலர்களைப் போல அவர்களும் இருக்கவேண்டுமென்று அவள் கற்பனை செய்கிற காட்சியில் கதாநாயகி எழுந்து நின்ற போது தான் சாதாரணமான ஒரு நடிகை எப்படி அப்படி பாதிப்பினை உடையவளாக நடித்தாள் என்று எனக்கு ஆச்சரியாக இருந்தது. மூன்ஸோரி (moon so-ri) நல்ல அழகான நடிகை. அதே சமயம் குறைப்பாடு உடையவராக கை கால் முகம் எனக் கோணியபடி அதே சமயம் கோபம் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைக் காண்பிக்க அதே கோணல்களிலேயே வேறுபாடுகளைக் காட்டி அசத்தி இருந்தார். கதை நாயகனும் நன்றாக நடித்திருந்தார்.


இவர்கள் இருவருமாக உணவருந்த சென்ற இடத்தில் நாசூக்காக வெளியேற்றப்படுகிறார்கள்.ஒரு முறை கதைநாயகனின் அம்மாவின் பிறந்தநாளுக்கு பெரிய உணவு விடுதியின் குடும்ப நிகழ்ச்சிக்கே அழைத்துப் போகிறான். அனைவரும் அவளை அழைத்து வந்ததற்காக அவன் மேல் கோவம் கொள்கிறார்கள். அண்ணன்காரனின் பேச்சு மூலம் அண்ணன் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் இறந்துபோனவர் நாயகியின் அப்பா என்றும் குடும்பத்தின் முக்கிய சம்பாதிக்கும் ஆள் என்பதால் அண்ணனுக்கு பதில் தான் சிறைக்கு செல்வதாகக் கூறி கதாநாயகன் சென்றதும் எனக்குத் தெரிந்தது. (அது படத்தின் ஆரம்பத்தில் வந்த காட்சி போலும். சீரியல் ரீகேப் போல இதை திரும்பச் சொன்னது எனக்கு வசதியாக இருந்தது.) தான் குற்ற உணர்ச்சியால் அவள் வீட்டுக்குப் தேடிப்போய் பார்த்ததாகவும் இப்போது தாங்கள் நண்பர்கள் என்றும் சொல்கிறான். நான் செய்ததற்கு உனக்கு எப்படி குற்ற உணர்ச்சி வருகிறது என்று அவன் அண்ணன் கோபிக்கிறான்.

பிறகு இருவருமாக கரோக்கி இடத்தில் சென்று பாட்டு பாடி தங்கள் வருத்தம் கோபங்களை மறந்து வீடு திரும்பும் நேரம் கதாநாயகிக்கு கதாநாயகன் மேல் அன்பு மிகுந்து அவளே அவனை தன்னோடு இரவு தங்கும்படி கேட்கிறாள். இருவரும் தனித்திருக்கும் போது எதிர்பாராத விதமாக அவளின் அண்ணனும் அண்ணியும் வந்து கதாநாயகன் நாயகியை பலாத்காரம் செய்ததாக பிடித்துக்கொடுக்கிறார்கள்.

அவளுக்கு கிடைக்கும் உதவித்தொகையைக் கொண்டு வாழ்ந்து வரும் அண்ணனும் அண்ணியும் மேலும் இக்குற்றத்திற்காக கதாநாயகனின் அண்ணனிடம் பணம் கேட்கிறார்கள். அவர்கள் மறுத்துவிடுகிறபடியால் கதாநாயகன் சிறைவாசம் அனுபவிக்க நேரிடுகிறது. கதாநாயகிக்கு நோயின் தீவிரத்தினால் தன் பக்கத்து நியாயத்தை சொல்ல முடியாத துயரத்தில் முட்டி மோதி அழுவதை அவள் பயத்தில் அழுவதாக போலீசாரும் கணக்கில் எடுக்கிறார்கள்.

நாயகனின் அம்மா ஒரு பாஸ்டரை அழைத்து வந்து நாயகனுக்கு புத்தி வரும்படி ப்ரார்த்திக்கிறார் அப்போது கதாநாயகன் தப்பித்துச் சென்று கதாநாயகியின் வீட்டு ஜன்னலுக்கருகில் இருக்கும் மரத்தை மேலே ஏறி வெட்டுகிறான். இவனுக்கு புத்தி மழுங்கி இருப்பது உண்மைதான் . எதற்காக செய்கிறான் என்று எல்லாரும் கோவப்படும் போது கதாநாயகி மரம் வெட்டப்படுவதைப் பார்த்து தன் ஒரே பொழுதுபோக்கான வானொலியின் ஒலியை அதிகமாக வைத்து அவனுக்காக ஜன்னலில் முட்டிக்கொள்கிறாள்.

அவன் அங்கிருந்தே மரத்தின் மேல் நின்றபடி அந்த பாடலுக்கு ஆடுகிறான். இந்த சிறைவாசம் முடியட்டும் இளவரசி உனக்கு மீண்டும் பணிவிடை செய்ய வருவேனென்று அவன் கடிதம் வருவதோடு படம் முடிந்து விட்டது.


நடுவீதியில் இரவில் ட்ராபிக் ஜாமில் இளவரசி இளவரசி என்று அவளை குழந்தையைப் போல தூக்கிக்கொண்டு ஆடுகிறான்.(படத்தில் கதாநாயகின் பெயருக்கு கொரியனில் அர்த்தம் இளவரசியாம் ) அவளுக்கு உணவை ஊட்டியபடியே தன் கனவில் அவர்கள் இருவரும் நடனம் ஆடியதையும் கூடவே ஒரு இந்தியப்பெண்ணும் ஒரு குட்டி யானையும் .. ஒரு பையனும் நடனமாடியதாகக் கூற கற்பனைக்காட்சி உருபெற்று நிஜமாகவே ஒரு குட்டியானையும் ஒரு பெங்காலிப் பெண் என நினைக்கிறேன் இவர்களோடு நடனமாடுகிறார்கள். வாழ்க்கையில் இருவருக்குமான பல சோகங்களுக்கு நடுவே இந்த சொர்க்கமான நொடிகள் ஒயாசிஸாக ..
எளிமையான அழகான காதல்கதை. இன்னோரு முறை முழுதுமாகப் பார்த்து ரசிக்க ஆசை.

January 7, 2010

கயிறு நாவலின் சில துளிகள்

கதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை 'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.

க்ளாசிப்பேர் கொச்சுப்பிள்ளை ஊரிலுள்ள குடும்பங்களில் இருக்கின்ற உழைக்கின்ற மக்களை கணக்கெடுத்து அதன் பேரில் அவர்களுக்கு நிலங்களை எழுதி வைப்பார். உழைக்க இருக்கும் ஆண்மகன்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் குடும்பங்கள் பின் வரி கட்டுவது சிரமாமாகும் என்கிற எண்ணத்தினால் தங்கள் பெயரில் அதிக நிலம் வந்துவிடகூடாதென நினைத்தனர்.

குட்டநாட்டு பகுதியில் நிலங்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டவையே. கடல்மட்டத்துக்கு மூன்றடி தாழ்வாக இருக்கும் நிலங்களின் கடல்நீரினை வெளியேற்றி சுற்றுவேலியாக தடுப்புக்களை ஏற்படுத்தியே நிலங்களை விளைச்சலுக்கு ஏற்றபடி மாற்றி விவசாயம் செய்துவந்தனர். எனவே க்ளாசிப்பேருக்கு லஞ்சமாக பலரும் கிழங்குகள், நேந்திரங்கள், பறை பறையாக நெல் மற்றும் சக்கிரங்கள் (தங்கம்) கொண்டுவந்து கொடுப்பதும் வேண்டுதல் விடுப்பதுமாக இருந்தனர்.

தர்மசாஸ்தாவின் கோவில் என்பது அவ்வூரில் முக்கியமான அங்கம். வங்கிகள் போன்ற அமைப்பாகவும் அது செயல்பட்டு வந்திருக்கிறது. கோவிலில் பூஜை செய்பவர்கள் தங்கும் இடத்தை இல்லம் என்றும், இல்லத்துக்கும் மடத்துக்கும் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டு அதன் பலனாக வருகிற நெல்லை மடத்தில் சேமிக்கிறார்கள். கடனாகவும் நெல். வட்டியாகவும் நெல். கோடாந்திர், சீரட்ட , மங்கலச்சேரி என பல குடும்பங்களின் நிலைகள் முதல் பாகத்தில் அவர்களின் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையாலும் கோவில் மடத்தின் முக்கிய பங்கு வகிப்பதனாலும் உயர்ந்தே இருந்து வந்திருக்கின்றன.

க்ளாசிப்பேரின் மனைவி பேராசை கொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய தாய் அரண்மனையில் தம்பிராவின் தோழி என்பதால் கிடைத்த பரிசே கொச்சுப்பிள்ளையின் க்ளாசிப்பேர் வேலை. தங்கம் கொடுக்க முடிந்தவர்களுக்கே க்ளாசிப்பேர் தேவையானபடி செய்துகொடுக்கிறார். இதனால் ஊரில் அசாதாரண சூழல் உருவாகி சில குடும்பங்கள் அதிகப்படியாக கடன்பட்டு நெல் அளக்கவேண்டியாகிறது . உழைக்கின்ற எண்ணிக்கை அதிகமிருக்கின்ற குடும்பங்கள் உயர்கின்றன. அவ்வப்போது உயர்ந்தநிலையில் இருப்பவர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகிக்க நகர்கின்றது காலம். இங்கேயும் ஜாதியிலிருந்து நகர்ந்து பணத்தின் முக்கியத்துவம் , நிலையை உயர்த்தத் தொடங்கிவிடுகிறது.

அதிகாரிகளின் நட்பினால் ஔதவ் என்கிற கிரிஸ்துவருக்கும் நிலம் கிடைத்து மற்ற இனத்தினரும் விவசாயம் தொடங்கினர். அவர்கள் கடின உழைப்பு கொண்டவர்களாய் இருந்தனர். வெள்ளைக்காரர்களின் நட்பின் காரணமாக நிலத்து நீரை வெளியேற்ற மோட்டார்கள் அமைத்தும் விவசாயத்தில் சிறந்து அதிகப்படியான நிலங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். முஸ்லீம் மதத்தினராக மதம் மாறியவர்களும் வியாபாரங்களினால் சிறந்து மேலே வந்தனர்.

சீலந்திபிள்ளில் பரமுஆசான் காசிக்கு செல்லுமுன் அவருடைய குடும்ப சொத்தான பல ஏடுகளும் ஓலைகளும் கல்யாணி அம்மாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. கல்யாணி அம்மாவின் மகன் கேசவன் போன்ற சிலரால் கல்வியறிவு அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகிறது. ஆனால் ஊராரின் எதிர்ப்பால் காலந்தாழ்ந்தாலும் காந்தீயம் அச்சிற்றூருக்கும் நுழைவது மற்றும் ஆளும் பிரிட்ஷ் அரசாங்கத்தால் அரச குடும்பத்தினரும் அனைத்து நிலை மக்களுக்கும் கல்வி தர ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதுமான காலமாற்றத்தில் கல்வி பல தரப்பு மக்களுக்கும் சென்று சேர்கின்றது. இக்கல்விசீர்த்திருத்தமே பின்னாளைய பலமாற்றங்களுக்கும் வித்தாகிறது.


மருமக்கள் தாய அமைப்பினால் பெண்களுக்குத்தான் சொத்துரிமை. ஒரு தரவாடு அல்லது குடும்பம் என்பது அம்மா , அம்மாவின் தங்கைகள் , அண்ணன் தம்பிகள் , குழந்தைகளைக் கொண்டது. கணவன் என்பவர் வந்து போகும் வழக்கம் இருந்தது. குடும்பத்தின் முழுபொறுப்பையும் அம்மாவன் என்கிற அம்மாவின் அண்ணன் தலைமை ஏற்று காரணவர் என்ற பெயருடன் வழிநடத்திவருவார். அவர் உழைத்த அனைத்தும் குடும்ப மொத்தத்துக்குமாக இருந்து வந்தது. நாயர் ஆக்ட் காரணமாக சொத்துரிமை கணவன்- மனைவி என்று மாறிய நேரத்தில் தலை எண்ணி பாகம் பிரித்தபோது காரணவர் - தலைவர் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தங்கைகளின் மகன் மகளுக்கு சென்று சேர்ந்ததே அன்றி அவரின் குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை.

கொச்சூட்டிலி அம்மா ,உன்னாச்சி அம்மா வரிசையில் வந்த குஞ்சுமாளுவின் கணவர் குஞ்சுநாயர் நாயர் ஆக்ட் சட்டத்தால் தன் சொத்துக்களை இழந்து வாழ நேரிடுகிறது. விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களால் ரப்பர்தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களை மலையில் இருக்கும் காடுகளை அழித்து ஏற்படுத்துகிறார்கள். குஞ்சுநாயரின் மகன் மணிகண்டன் திருவனந்தபுரத்துக்கு கல்லூரியில் படிக்கச் செல்கிறான். இக்கதாபாத்திரம் தகழியை ஒத்து வருகிறது.

கவிதை எழுதும் மணிகண்டனுக்கு விசு என்கிற நண்பனால் புரட்சி போராட்டங்கள் செய்யும் யூத் லீக் உடன் அறிமுகம் ஏற்படுகிறது. ஆனால் குஞ்சுநாயரின் உணர்ச்சிபூர்வமான கடிதம் அவனை அவற்றிலிருந்து விலகி ஊருக்கு திரும்பச் செய்கிறது. விசு மணிகண்டனை கோழை என்கிறான். குஞ்சுநாயரின் இறப்பும் அதனைத்தொடர்ந்து கணவருடனேயே இறந்த தாயின் இறப்பும் மணிகண்டனை மனம் பிறழ்ந்தவனைப் போல ஆக்குகிறது. மனதால் சுதந்திரத்தையும் மக்கள் வாழ்வில் ஒரு மேன்மையும் ஏற்பட ஏங்கியபடி சுற்றியலைகிறான். மணிகண்டனின் எண்ணங்களின் வடிவில் தகழியின் பல எண்ணங்களைக் காணமுடிகிறது. அவ்வபோது மணிகண்டன் காணுகின்ற கனவில் அதிகார வர்க்கங்களின் சுரண்டல்களுக்கு எதிரான செயல்கள் வெற்றி பெற்று எங்கும் பசுமையும் மகிழ்வும் வெற்றியுமாக தோன்றி வருகிறது.நெல்லுக்கு பற்றாக்குறை நேர்ந்த நேரம் யுத்தத்திற்கு நெல் சென்ற காலம். எதற்குமே விலையின்றி மக்கள் வாழ்வின் நிலை தடுமாறுகிறது. இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக இராணுவத்தில் சேருகிறார்கள்.சிலர் மலேயாவுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். மலேயாவில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது , இராணுவமென்றாலும் தெரியாது யாருக்காக யுத்தம் எதற்கு இறக்கிறோம் என்றும் தெரியாது. இங்கிருந்து உணவுக்கு இல்லாமல் இறப்பதற்கு இருக்கும்வரை குடும்பமாவது நிம்மதியாக உண்டு உறங்கட்டுமென்று செல்கிறார்கள். குடும்பத்தினரோ தினம் தினம் கடிதத்திற்கோ தந்திக்கோ காத்திருக்கிறார்கள். அவர்களின் மணியார்டரையோ , அவர்களின் இறப்பையோ, காணாமல் போன செய்தியையோ கொண்டுவரும் தபால்காரர் அவர்கள் வாழ்வில் முக்கியமானவராகிறார்.


பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த சுதந்திரதினக் காலையை வர்ணிக்கும் போது ,
'விடிவெள்ளி உதித்து உயர்ந்து நின்றது. சூரியனுக்குப் பிரத்தியேகத் தன்மை எதுவுமில்லை. பிரத்தியேகமான பிரகாசமோ
தெளிவோ ஏதுமில்லை. அது என்றும் போல நடைபெற்றதொரு சூரியோதம் சிற்சில வீடுகளில் தேசீயக் கொடி ஏற்ற்ப்பட்டிருந்தது ' என விவரித்துவிட்டு சோதருபுலையர் வீட்டில் காலைப்பொழுது வெற்றிலைக்கு பாக்கு இல்லாத ஒரு சாதரண நாளாக விடிந்ததைக் குறிப்பிடுகிறார். தொழிலாளிகளுக்கு மாற்றம் வந்துவிடவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது.

மூன்றாம் பாகத்தில் மிக விரிவாக சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் நடந்த தேர்தல்கள் ,காங்கிரஸ் கம்ப்யூனிசம் இடையிலான போட்டிகள் மற்றும் ஜாதி அரசியல்களை அவர் குறிப்பிட்டிருப்பதை வாசித்தால் இன்றைய தேர்தல் நிலைகளுக்கு அன்றைக்கும் சற்றும் குறைவு இல்லை. பணமும் மிரட்டலும் அன்றைக்கும் சாதித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

\\காங்கிரஸுக்குள்ளே கூட பரஸ்பரம் காலுக்கடியிலேருந்து மண்ணை அள்ளி எடுத்துக்கிறாங்க என்றார் ஔசேப்பு .

ஆமாம் அது தானே நாசம் !
கிரிகரி சொன்னார் :"ஒருவன் இன்னொருவனுக்கு உடன்படமாட்டான் அது இந்த நாட்டின் இயல்பு பண்டைய
நாட்களிலிருந்தே அப்படித்தான் //


குத்தகைகள் வரத்து இல்லை. இல்லத்தில் விவசாயம் செய்பவர்களும் இல்லை. ஒருவேளை உணவுக்கும் தவிக்கின்ற நிலை இல்லத்துக்கு நேர்கிறது. கோவில் இல்லத்து நம்பூதிரிகளின் மகன் நக்சலில் சேர்ந்துவிடுகிறான். இயக்கத்துக்கு எதிராக இயக்கத்தின் பணத்தில் குடும்பத்துக்கு உதவி செய்த காரணத்துக்காக அவன் தற்கொலை செய்து இறக்கிறான்.


எருமத்ரமடம் இடிந்து அவ்விடம் ஒரு விளையாட்டு மைதானமாகிவிட்ட .காலத்தின் சுழற்சியில் நிலச்சீர்திருத்தம் வருகிறது. அன்று க்ளாசிப்பேருக்கு செய்த ஏற்பாடுகளை மீண்டும் லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளுக்கு செய்யவேண்டியாகிறது. கண்டெழுத்தில் மக்களைத் தேடி நிலங்களை எழுதிவைத்தார்கள். மாறாக லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளோ நிலங்களைப் பறித்தெடுக்க வந்திருப்பதாக அஞ்சுகிறார்கள். அதிகப்படியாக இருக்கும் நிலங்களை அரசு பட்டா போட்டு நிலமற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். மீண்டும் ஒரு கேள்வி . வருபவர் எந்த ஜாதிக்காரராக இருப்பார். யாருக்கு நன்மை செய்வாரோ என்ற அவர்களின் பயம் அப்படி கேட்க வைக்கிறது.

\\'எந்த ஜாதியென்றாலும் படித்தவர்களுக்கு உத்தியோகம். அப்போ என்னன்னா , கல்வி கிடைச்சிட்டா அவன் யாருன்னாலும்
சரி அவங்க ஜாதிக்காரங்களிலே உயர்ந்தவனாயிடுவான் , மேலேமேலே உயர்ந்து போயிடுவான் , புலையன்
மேலதியகாரியாயிட்டா, ஏனைய ஜாதிக்காரங்க அதிகாரிகள் ஆகிற மாதிரிதான். அவனவன் காரியத்தை அவனவன்
பார்த்துக்குவான். அவனவனுக்கு பணம் சேரணும்: அவனவன் நல்லா வரணும் கார் வேணும் பங்களாவேணும் '//

விவசாயப்புரட்சியினால் ரசாயன உரங்களும் சுற்றுவேலிகள் கருங்கல்லாயும் மாறிய நேரத்தில், மலைவெள்ளத்தின் குணாதிசயம் என்னவென்று இன்றைய விவசாயிகளுக்கு தெரியாத வருத்தத்தை கிரிகரி மூலம் காட்டுகிறார்.
\\-'மலை வெள்ளத்தைப் பார்த்தீங்களா கிரிகரியண்ணா?'
-'ஓ அதுக்கு இப்போ என்ன செய்யறது , ஒரு துளி நீர் வயலுக்குள்ளே விழவில்லை. ரசாயன வளமும் விஷமும்
போட்டு மண்ணைக் கெடுத்தாச்சு இப்போ மண்ணில் புல்லு கூட முளைக்காது'
-'அப்படின்னா இந்த ஊரில்லுள்ள ஜனங்களெல்லாம் கஞ்சித்தண்ணி குடிக்கிறதெப்படி"
-'அரிசி தரவேண்டியது அரசாங்கமல்லவா? அரசாங்கம் எங்கிருந்தாவது அரிசி கொண்டாந்து தந்திடும் .
அதை வாங்கிச் சாப்பிடுவோம்.'
- காசெங்கிருந்து? வேலை வெட்டி இருந்தாதானே காசிருக்கும்.//

நிலம் வேண்டாமா? யாருக்குமே வேண்டாமா? படிப்பும் வேலையும் என்று சென்றுவிட்ட தலைமுறையை, பழைய தலைமுறை கேட்கும் கேள்வி எதிரொலிக்கிறது. . விவசாயம் வேண்டாம் விவசாய நிலம் வேண்டாம். எங்கெங்கு பார்த்தாலும் வீடுகளும் தொழிற்சாலைகளும் அரக்கனைபோல விவசாய நிலங்களை விழுங்கிக்கொண்டு, இன்றும் இந்நிலைத் தொடர்வதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.
’ஆனால் காணப்படுகின்ற இம்மக்களுக்கெல்லாம் உணவு வேண்டாமா? ’- என
முடிவில் கதாபாத்திரத்துனூடாக ஒலிக்கும் இயற்கையை நேசித்த தகழியின் கேள்விக்கு விடை தான் எங்கே?
[ஈழநேசனுக்காக எழுதியது இங்கேயும் ஒரு பகிர்தலுக்காக..]
நன்றி: ஈழநேசன் முல்லை.ஆர்ஜ்

January 6, 2010

கயிறின் வரலாறும் கயிறில் வரலாறும்

நாவல் ஒன்றில் அதிகபட்சம் எத்தனை கதாபாத்திரங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்? எத்தனை பேருடைய வாழ்க்கையை , எத்தனை வருடங்களின் நிகழ்வுகளை உங்களால் அறிந்து கொள்ளமுடியும்? இவை அத்தனைக்கும் உங்கள் பதில் என்னவாக இருந்தாலும் அது தவறாகவே முடியக்கூடிய சாத்தியம் கயறு நாவலில் நிச்சயம் உண்டு . சுழற்சி முறையில், ஒரு காலத்தில் பிரபுக்களானவர்களின் குலம் தாழ்நிலைக்கும், தாழ்நிலையில் இருந்த குடும்பங்கள் மேலெழுந்து நிலங்களை சேமித்தும், பின் நில உச்சவரம்புசட்டத்தில் மீண்டும் அனைவரும் அதை இழந்தும் என்று வாழ்வு சுழல்கிறது. பல தலைமுறைகளை தகழியோடு நாமும் ஒன்றாய் வாழ்ந்து பார்த்துவிட்ட உணர்வை இவ்வாசிப்பனுவத்தில் பெறலாம்.

.
தகழி சிவசங்கர பிள்ளை என்றால் வாசிப்பனுபவம் உள்ள எவரும் அறியக்கூடிய பெயர் தான். அப்படியே வாசிப்பனுபவம் இல்லாது போனாலும் நீங்கள் திரைப்படம் பார்ப்பதில் விருப்பமுள்ளவரெனில் “செம்மீன்” கதையாசிரியர் எனும்போது அறியக்கூடும்.


சிவசங்கரப்பிள்ளை 1912 ல் கேரள குட்டநாடு ஆலப்புழாவிற்ககு அருகில் தகழி எனும் இயற்கை எழில் மிக்க சிற்றூரில் பிறந்தவர். பின் தகழி என்று அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்பட்டார். அவருடைய தந்தை சங்கர குரூப் ஒரு கதகளி கலைஞர். தன்னைப்போல கலைஞனாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்று மகனை வக்கீலுக்கு படிக்க வைத்திருந்தார். கதகளி, விவசாயம் , வக்கீல் தொழில் என அறிந்து கொண்ட இவை எல்லாவற்றின் கூடவும் அவர் மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்பாளியாக உயர்ந்து நின்றார். மிக இளவயதிலேயே அவர் கதைகள் எழுதத்தொடங்கினார். பத்மபூஷன் விருது, சாகிதிய அகாடமியின் விருது( கயறு) மற்றும் ஞானபீட விருது(கயறு) போன்ற உயரிய விருதுகளைப் பெற்று மலையாள இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றவர்.. 1999 ல் தன் 87 வது வயதில் இயற்கை எய்திய அவருக்கு சங்கரமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீடே இன்று காட்சியகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

தகழி , கல்வியறிஞர் பாலகிருஷ்ணப்பிள்ளை மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கைரளிக்கார குமாரப்பிள்ளை மூலம் பல இந்திய இலக்கிய படைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் ஆர்வம் கொண்டார். எழுத்தாளர் மாப்பசான் மற்றும் சிந்தனையாளர்கள் மார்க்ஸ் மற்றும் ஃப்ராய்ட் இவர்களின் தாக்கத்தைக் கொண்ட எழுத்தாளாராக அறியப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் துயரங்களைப்பற்றி அவர் கதைகளில் நாம் அதிகமாகக் காணலாம்.

தோட்டியின் மகன் , செம்மீன்,இரண்டு படி, ஏணிப்படிகள், ஓசோப்பின் மக்கள் மற்றும் சுக்கு போன்றவை பெயர் பெற்றவையாகும். 40 நாவல்களும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்திருக்கிறார்.பொதுவாக எழுதவேண்டும் என்று தோன்றினால் ஒழிய அவர் எழுத அமர்வதில்லை , எழுதத் தொடங்கி ஒரு வாரயிறுதியிலேயே நாவலையே முடித்துவிடக் கூடியவர் என்று கூடச் சொல்வதுண்டு. செம்மீன் கதையை அப்படியே ஒரு வாரயிறுதியில் எழுதி முடித்திருக்கிறார் .மூன்று வருடங்களில் கயிறு நாவல் எழுதப்பட்டதாகக் குறிப்பு..


ஒரு வரலாற்று செய்தியாளரைப் போல 1930 க்கு பின் கேரளாவின் நிகழ்ந்த மாற்றங்களைப உற்று நோக்கி பதிவு செய்திருக்கிறார். அந்நாளைய ஜாதீய அமைப்புகளின் கட்டுமானம் வலுவானதாக இருந்தது. நிலச்சுவான்தார்கள், அவர்களுக்கு கீழ் குத்தகைக்கு நிலமெடுத்த விவசாயிகள் , அவர்களுக்கு கீழ் விவசாயக்கூலிகள் என்று இருந்து வந்தனர். கடனுக்காகவோ அல்லது விசுவாசத்துக்காகவோ தங்கள் வாழ்க்கையையே வேலை செய்து கழிக்கவேண்டிய நிலையில் இருந்த கீழ்த்தட்டு மக்கள் இருந்த காலம். நிலச்சீர்திருத்தம் , சமூக பொருளாதார மாற்றம் , மற்றும் அரசியல் மாற்றங்கள் மூலம் அக்கட்டுமானம் தலைகீழாக மாறிவிட்டதை அக்கால கட்டங்களின் நிகழ்வுகளோடு கதையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்நாவலின் தமிழாக்கம் சி.ஏ பாலன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளுக்கு சிறந்த பாலமாக விளங்கிய இவர் ஜெயகாந்தன், கல்கி , ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை மலையாளத்திற்கும் தகழி, கேசவதேவ் , பொற்றேகாற்ட் போன்ற சிறந்த மலையாள ஆசிரியர்களின் படைப்புக்களை தமிழுக்கும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.


மூன்று பாகங்களாக அச்சடிக்கப்பட்டிருகிற இந்நாவல் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. மனித உணர்வுகளை கதையில் மிகமிகத் துல்லியமாக உணர்த்துகிறார். அன்பு , காமம், காதல், பாசம் , தனிமை , போட்டியும் பொறாமையும் ,துரோகமும் இந்நாவல் பேசாத உணர்வுகள் இல்லையென்றே சொல்லலாம். கயறு நாவல் 250 வருட கால நீட்சியில் கேரள நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை, ஐந்தாறு தலைமுறைகளில் வீழ்ந்தும் எழுந்துமாகிய குடும்பங்களை , அக்குடும்ப மனிதர்களை கொண்டு பின்னப்பட்டதாகும். நாவல் என்றால் இப்படி என்ற வடிவமைப்புக்கு மீறியதும் , எந்த ஒரு கதாநாயகனைச் சுற்றியும் பின்னப்பட்டதாகவும் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் வாழ்வை கண் முன் நிறுத்தும் கதை. கதையை உருவாக்குவது என்பதும் வாழ்க்கையை கதையாக்குவது என்பதும் ஒன்று அல்ல. பின்னது மிக சவாலானதும் கூட என்று கூறுகிறார் தகழி. இது ஒரு வாழ்க்கை சித்திரம்.

கயறு நாவலைப் பொறுத்தவரையில் கதாபாத்திரங்களிலோ அல்லது அவற்றின் போக்கில் , குணாதிசியத்தில் தாமாக எந்த ஒரு மாற்றத்தையும் புகுத்தவில்லை என்றும் அவை தானாகவே எழுத்தின் ஓட்டத்தோடு உருப்பெற்றதாகவும் முன்னுரையில் கூறுகிறார். சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமான காலங்கள், காங்கிரஸ், கம்ப்யூனிசம், நக்சல் ,குருகுலக்கல்வியிலிருந்து மாறி ஆங்கில வழிக் கல்வியும் அதனால் ஏற்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் , காந்தீயவாதம் அதனால் மக்கள் அடுக்குகளில் நிகழ்ந்த மாற்றம், பழங்காலத்திலிருந்தே எல்லா தரப்பிலும் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழல் என அக்கால சமூகத்தினைப் பற்றிய அத்தனைக் குறிப்புக்களையும் காணலாம்.


ஒருமுறை ஒரு நிலம் தொடர்பான வழக்கில் வாதாடுவதற்காக 135 வருடங்களுக்கு முன்பான நில அளவுச்சட்டக் குறிப்புக்களைத் தேடி அனுப்பப்பட்டபோது தாலுகா அலுவலகத்திலிருந்து தூசிகள் நிறைந்த கட்டுகளில் அக்காலகட்டத்தில் நிலத்தைப் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட குழப்பங்கள் , நிலத்தைச் சுற்றிய கதைகள் என்று அவர் முன் தெள்ளத்தெளிவான ஒரு வரலாற்று பொக்கிஷமே கிடைத்தது. ஆனால் அதை எழுதுவதற்கு ஒரு முறை அல்லது அமைப்பு அவருக்குத் தேவைப்பட்டது. அதனை ஒரு மேல்நாட்டு பாணி அமைப்பில் எழுதப் பிரியப்படாமல் குறுகுறுப்பை பலவருடங்களுக்கு சுமந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் மகாபாரதத்தின் நினைவு தோன்றி அதைப்போன்ற அமைப்பில் எழுதலாம் என்று முடிவெடுத்து கயிறு நாவலைப் படைக்கத் தொடங்கினாறாம்.

மக்களுக்கு நிலத்தின் மேல் ஏற்பட்ட பற்றினால் 'நிலம்' தான் இக்கதையில் நாயகன் என்றும் இது ஒரு காதல்தோல்வியின் கதை என்றும் சொல்கிறார் தகழி. மனிதனுக்கு நிலத்தின் மீதான தாகம் தொடங்கியது எப்போதென்று தெரியாது . ஆனால் விவசாய நிலத்தில் இறங்கி உழைப்பதிலிந்து ஒரு காலத்தில் அனைவரும் விலகத் தொடங்கிவிட்டார்கள். நில அளவு சட்டத்தில் நிலங்கள் பிரிந்தது. பின் குடும்பத்தில் தலை எண்ணி பாகம் பிரித்ததில் பிரிந்தது. கடனுக்காக , யுத்தகாலத்திற்காக பின் கூட்டுறவு சங்க அமைப்பில் என்று தாங்கள் உழைத்த வயலின் நெல்மணி தங்கள் வீடுவந்து சேராத நிலை வந்தது. நிலத்தின் மீது இருந்த தாகம் குறைந்தது. தொழிற்சாலைகள் , வெளிநாடுகள் , அரசாங்க வேலைகள் மக்கள் பணத்திற்காக உழைப்பை திசை மாற்றினர்

கேரளாவில் அக்காலத்தில் 'மருமக்கள்தாயம்' என்கிற பெண்வழி உறவுக்குத்தான் முன்னுரிமை இருந்தது. பெண்குழந்தைகளைப் பெறுவது குடும்பம் செழிக்க. ஆண்குழந்தைகளைப் பெறுவது குடும்பத்தின் செழிப்பை உயர்த்த என்று ஒரு அமைப்பு. ஒருவன் தன் தங்கை குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறான். தன் குடும்பத்துக்கு அல்ல. நாயர் ஆக்ட் (1912) என்கிற சட்டத்தினால் அப்பாரம்பரியக் கூட்டுக்குடும்பங்கள் உடைந்தன. தலை எண்ணி பாகம் பிரித்தல் என்று தரவாட்டில் ( குடும்பத்தில்) இருக்கும் மகன் மகள்களுக்கு சொத்துக்கள் பாகங்களா பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு கணவனுடைய உழைப்பு மனைவிக்கு என்று மாறியது. அது நாள் வரை சகோதரிகள் மற்றும் நம் குடும்பம் என இருந்த தலைமகன்கள் சொத்திழந்து குடும்பங்கள் நிலை குலைந்தன.

அத்தகைய ஒரு நாயர் குடும்பத்தின் கோணத்திலிருந்து கதை, சிறு சிறு இழைகள் இணைந்த நீண்ட கயற்றினைப் போல பல தனிமனித வாழ்க்கைகளால் இணைந்த ஒரு சரித்திரத்தினைப் போல நாவலாக நீண்டு செல்கிறது. கதைக்குள் கதையாக பல நூறு சிறுகதைகள் பிண்ணிப் பிணைந்தது கயறு நாவல் , அச்சரித்திரத்தில் சிறுதுளிகளை இங்கே ருசிப்போம் - (தொடரும்)

( இக்கட்டுரை ஈழநேசன் தளத்திற்காக நான் எழுதியது)
நன்றி ஈழநேசன்