வளவனுக்கு அய்யாசாமி ஐயாவைப்பார்த்து கடும்கோபம் வந்தது. வளவன் இந்த பள்ளியில் சேர்ந்த ஓரு வருடத்தில் அய்யாசாமியின் மதிப்பு அவனுக்கு தெரிந்திருந்திருந்தது.
'இந்த பள்ளிக்காக எத்தனை செய்திருப்பார் ஐயா' என்று வாயார ஒவ்வொருவரும் சொல்லும்போது அவரை தனக்கு ஒரு முன் மாதிரியாக கொள்ளவேண்டும் என்று தோன்றும்.
இந்த பள்ளியில் படித்து பேரும் புகழுமாய் இருப்பவர்கள் எல்லாமே ஐயாவின் அறிவுரையால் மேலே போனவர்கள் தான். இத்தனை ஏன் வருடா வருடம் பத்திரிகையில் பேர் வரும்படியாக பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இருப்பதற்கும் ஓரிருவர் மாநில அளவில் பதக்கம் வாங்குவதும் கூட ஐயாவால் தான். இருந்தும் அவரை ஒருவர் மதிக்காமல் கத்திவிட்டு போகிறார் வளவனுக்கு ரத்தம் கொதித்தது.
ஆனால் அய்யாசாமி முகமோ எப்போதும் போலவே பளபளப்பாய் இருந்தது. உடல் நிறத்தின் காரணமாய் சிறிதே சிரித்தாலும் பற்கள் பளிச்சிட்டது. அவரென்னவோ அவரை ஒருவர் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்வதாய் சொல்லிப்போனது போல் மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தோன்றியது வளவனுக்கு.
அவனும் பொறுத்துப் பொறுத்துப்பார்த்தான். அவர் ஒரு முறை கூட வளவனிடம் வந்து போன ஆளைப்பற்றி குறையும் சொல்லவில்லை அதுபற்றி வருத்தம் இருந்ததாய் கோடும் காட்டவில்லை. இப்படியும் மனிதர் இருப்பாரா? இல்லை இவருக்கு அந்த நேரம் காது தான் கேட்காமல் போய்விட்டதா? அவன் மனம் ஆறவே இல்லை.
மெதுவாக அவர் இருந்த மேஜை பக்கம் சென்று வந்தான். இது ஒன்றும் முதல் முறையில்லை. காலையில் இருந்தே ஆறேழு முறை அவனும் அவரும் ஒருசேர எப்போதெல்லாம் வகுப்பு முடித்து ஆசிரியர் அறைக்கு வந்தார்களோ அப்போதெல்லாம் இப்படி ஒரு நடை நடப்பான். அய்யாசாமி ஒரு முறை நிமிர்ந்து பார்ப்பார் . எதையோ எடுக்க வந்ததாக போக்கு காட்டி திரும்பிவிடுவான்.
மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு தைரியம் வரவழைத்தான். இம்முறை எப்படியும் கேட்டுவிடவேண்டும் , கேள்வி எல்லாம் தயார்.
"என்னதான் தவறு செய்தீங்க ? எதற்கு அமைதியாக இருக்கிறீங்க?
அடுத்தவர் தான் தவறுன்னு தெரிஞ்சப்பறம் கோபம் வருவது கூட தவறு என்று எந்த புத்தகத்தில் படிச்சீங்க? "
அவரரகில் சென்றதும் எல்லாம் மறந்து போய், "ஐயா! எனக்கு மனசே சரியில்லை வீட்டிற்கு கிளம்புகிறேன்" என்று முடித்தான்.
வளவா! என்ன அவசரம் பேசவேண்டும் உட்காரேன். நீ மனோகருடைய அப்பா வந்து கத்தியதை நினைச்சு வருத்தப்படறேன்னு நினைக்கிறேன். நான் ஏன் கோபப்படலேன்னும் கூட உனக்கு கேள்வி குடையுது சரியா?
"தெரிஞ்சு என்ன ஐயா புண்ணியம் .. அப்ப பேசாம விட்டுட்டீங்களே"
மனோகர் நல்லா படிக்கற பையன் தான்ப்பா .. முயற்சி எடுத்தா படிக்கலாம் அதற்குத்தான் அவனை நான் தனிமைப்படுத்தி வச்சேன் . அவனும் படிக்காம நாலு பேரை படிக்கவும் விடாம தடுத்தான்னு செய்தவிசயத்துக்கு இவர் வந்து கத்திட்டு போறார். வேற எதோ காரணமா நான் தண்டிக்கறதா நினைச்சுக்கிட்டார். போனவாரத்துக்கு இந்த வாரமே அவன் வீட்டுல செய்யவேண்டிய வேலையெல்லாம் நோட்டில் சரியா செய்திருக்கிறான். பாரேன் இவனே நாளை முதல் மதிப்பெண் எடுத்தாலும் ஆச்சரியமில்லை. என் கோபமெல்லாம் அவனை வழிப்படுத்த மட்டுமே..என்ன சரிதானே!
நீத்தார் பெருமை
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
* அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.
அழைத்த புதுகைத்தென்றல் ... ஆரம்பிக்க காரணமான ஜீவ்ஸ் இருவருக்கும் நன்றிகள்.
நான் அழைப்பவர்கள்..
1. புகழன்
2. புதுவண்டு
3. செல்விஷங்கர்
விதிமுறை: திருக்குறளின் கருத்தும் கதையின் கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டும்.
இன்னும் மூன்று பேரையாவது அழைத்து எழுத வைக்க வேண்டும்.
( யாரங்கே இது என்ன 1973 ல் வந்த கதை மாதிரியே இருக்குன்னு சொல்வது ? அப்ப நானே பிறக்கலைப்பா..அந்த ட்ரெண்ட்ல இருக்கு கதை ஓட்டம் அவ்வளவு தான் )