October 23, 2013

காற்றினிலே வரும் தண்ணென்ற தென்றல் - உதய்பூர்

ஊரைப்பற்றிய குறிப்புகள் எதையுமே நான் படிக்கவில்லை. முன்பே திட்டமிட்ட விடுதியில் அறையில் சேர்ந்ததும் ஆச்சரியம் இணைய இணைப்பு கிடைத்தது. வந்து சேர்ந்ததை கூகிள் ப்ளஸில் தெரிவித்தேன். வெளிநாட்டவர்களின் வருகையால் இணைய இணைப்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் விடுதிகளிலும் பெயர்பலகையிலேயே இலவச இணைய இணைப்பு எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊரெங்கும் வெளிநாட்டவர்கள். யாரையாவது நிறுத்தி இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுவிடும் ஆர்வம் கடைசி நிமிடம் வரை இருந்தது. தனியாக செல்லும் சிலர் பலகாலமாக இங்கேயே இருக்கும் மண்ணின் மைந்தர்களைப்போல நடமாடுகிறார்கள்.
காலை உணவுக்கு ரோட்டோரக்கடைகளைத் தேடினோம். பொதுவாக வடநாட்டு சுற்றுலாவில் காலை உணவாக கிடைக்கும் ஆலு பராத்தா அன்று கிடைக்கவில்லை. அன்று உணவு ப்ரட் பக்கோரா கொரித்து வைத்துக்கொண்டோம்.


 பிறகு ஆட்டோ ஓட்டுனரே சில ஏரிகள் , பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றார். வெயில் அடித்தாலும் தண்ணென்று ஒரு தென்றல். மேலே இருப்பது ஃபதெ சாகர் ஏரி. சிறிது படகு சவாரி செய்து ஏரியின் நடுவில் ஒரு சிறு தோட்டம். அங்கே சென்றதும் அமைதியும்  அங்கேயே இருந்துவிடத்தோன்ற வைக்கும் குளுமையும் வரவேற்றது.
 சஹேலியோன்கி பாரி - தோழியரின் தோட்டம் 18 நூற்றாண்டில் ஒரு ராணி கல்யாணமாகி வரும்போதே 40 தோழிமாருடன் வந்தாளென்று தனக்காக செய்த தோட்டத்தை ராணிக்கும் தோழியருக்கும் ராஜா பரிசளித்துவிட்டாராம். ஏரியெல்லாம் ஊரில் அழகா கட்டி இருக்காரே என்று  பார்த்தேன். இந்த தோட்டத்திலோ அத்தனையத்தனை நீரூற்றுக்கள். எப்படி அந்தகாலத்தில் நீரூற்றுகள் வேலைசெய்திருக்கும் என்று நானும் மகளும் யோசித்துக்கொண்டிருந்தோம். ஏரியிலிருந்து தான் நீரூற்றுகளுக்கு தண்ணீர் வந்திருக்கிறது. வாழ்ந்திருக்காங்க. இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இருக்கின்றன நீரூற்றுகள்.

மழையைப்போல தோன்றவேண்டுமென்று  சுழலும் பறவையின் வாயிலிருந்து நீர் தெளிக்கிறது. தோழியரின் நடனத்தின் தாளத்திற்கேற்ப நீரூற்றுகளிலிருந்து இசையும் இருந்ததாம். இந்த இடத்தை எங்கோயோ போன ஜென்மத்தில் பார்த்திருக்கோமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது.பேஸ்புக்கில் படம் பகிர்ந்த பொழுது கல்யாணி சங்கர் நினைவுப்படுத்தினார்கள். காற்றினிலே வரும் கீதம் என்று பாடியபடியே எம். எஸ் இந்த தோட்டத்தின் நீரூற்றுக்களுக்கு மத்தியில் தான் நடந்திருக்கிறார்கள்.


 

காலையுணவு கொரித்த அளவுக்கு நேர் மாறாக மதியம் நட்ராஜ் உணவகத்தில் 160 ரூ அன்லிமிடட் தாலி. பையனுக்கு குலோப்ஜாமூன் கூட கூடுதலாக நாலு கிடைத்தது. நடராஜருக்கு பின் கூட ஒரு நீரூற்று.  ட்ராவல் ட்ரெண்ட் டீவியில் நட்ராஜில் தாப்பூ தாழம்பூ என்றால் சாதம் கொடுப்பார்கள் என்றும் எல் மாதிரி காட்டினால் ரொட்டி என்றும் ரோகன் சொன்னதாக  மாற்றி நினைவு வைத்திருந்தோம் போலும்
 அங்கே போனால் வெயிட்டர் அது ரொட்டிங்க மாற்றி சொல்லுறீங்க என்றார் . நம்ம ஊரைப்போல அங்கே சாதம் போடப்பா இங்கே ரொட்டி கொண்டுவா என்று சத்தமில்லை. எப்போதும் எல்லாரும் கவனமாக இருக்கிறார்கள். சைகையைக் கொண்டே மேலாளர் தெரிவிக்கிறார்.

 .