July 23, 2014

ஓவியத்தின் வழி கைப்பற்றுதல்


 
ஒரு ஓவியத்தின் வழி
கைப்பற்றும் வழியறிதல்
இக்கணத்தின் தேவை

சற்றே விலகிய பொழுதின்
விலையறிந்து
கண்ணிமை எண்ணியழைத்து
எச்சரித்து
கரம் பற்றிக்கொண்ட நினைவை 
நிகழ்வாக்கும் 
மற்றுமொரு 
அத்தினம் தேவை.
-----------------------------------------
 
வாயில் மாற்றி வைத்த
அவ்விடம் தேடி
வெகுதொலைவு நடந்தபோதும்
 துணையற்று திரும்பியபோதிருந்ததும்
ஒன்றல்ல
பாதங்கள் புதைய மணலற்ற
அப்பாதையின்
ஒற்றைச்சருகுமற்ற தன்மை
எழுப்பிய செயற்கையொலியால்
என் மணலை
என் சருகுகளை
அள்ளிக்கொண்டு
கருமை பரப்பி திசை திருப்புவதாய்
நிழலின் மென்மைக்கும்
புதுச்சாயம்

------------------------------------


காலச்சுழல் 
விரிகிறதா சுருங்குகிறதா 
நொடிகளின் ஒலி
எச்சரிக்கையா 
அமைதியின் எதிரொலியா
நெருங்குவது 
ஓய்வா 
முடிவற்ற தேடலா
------------------------------------------------------------


இன்றென ஒவ்வொன்றாய்
வெற்றிடம் நிரப்பவென்றும்
எனைச்சார்ந்தவை என்றே
உரிமை கொண்டும்
வந்தவை எல்லாம்
அரணுடைக்க முடியாமல்
நிரப்பவியலாமல்
மிகச்சரியான வெற்றிடமென்று
ஏதுமில்லை என்றபடி
ஒன்றாய்
வழி திரும்பிக்கொண்டிருக்கின்றன 


-------------------------------------------


 
நட்சத்திரங்களையும் வானையும்
சமைக்கப்படாத
தங்கள் பாதைகளை
தாங்களே அறியும் பறவைகளையும்
உண்டாக்கும் போதே
தனக்காய்
வனங்களை நிழல்களை
உருவாக்குவாள்
சக்தி

------------------------------------------------
ஒவ்வொன்றாய் எடுத்து
பார்வைக்கு அடுக்கியபின்
விழியற்றவர்களின்
வருகை மட்டுமே
உறுதி செய்யப்பட்டதாய் அறிகிறேன்


நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றேதான்
இருந்தும் கடக்கிறீர்கள்
விழியற்றும்
இதோ ஒவ்வொன்றையும் 
பிழையற்று அறிந்துநிற்கின்றன
மனங்கள் 

அன்பின் தூதுவர்கள்


முனைகளில் நின்று 
குதிப்பது போல பாசாங்குடன்
பதறும் இதயத்தை மறந்து 
தாவி இழுக்கும் கைகள் 
விரிகிறதா என்று ரசித்தபடி
வாழ்வின் தீவிரத்தை 
விளிம்புகளில் உணர்கிறார்கள்
சத்தமின்றி உயிர்கொல்லும்
அன்பின் தூதுவர்கள்
-------------------------------------------------
கொஞ்சம் கொஞ்சமாய் உணர
கவனமாக நறுக்குகிறேன்
இதயத்தை
ஒரே அளவாக இருக்கிறதா என்றும்
அதிகம் வீணாகிவிடாமலும்
மறக்காமல் மிச்சமிருக்கும் ஈரத்தையும்
 உலர்த்தி எடுத்துவைக்கிறேன்
அடுத்து..

பதப்படுத்தும் கலையறியாததால்
முடிவற்ற
கவிதை இது.

----------------------------------------
தன்னை எழுதும் 
கதைக்குள் 
விடுபட்டவைகளை
கதையில் யாரோவாக 
தானேயிருந்து  எழுதச்செய்கிறாள்

வாசிப்பவரெல்லாம் 
தம்மைக் காண்பது
எதிர்பார்த்த முடிவென்பதா
எதிர்பாரா முடிவென்பதா

புனைவற்ற உண்மைக்கதை 
கண்ணிலிருந்து விண்ணேறி
நட்சத்திரங்களாகிவிட்ட
உப்புகற்களைப் பற்றிய கதைககளும்
உண்ணுகையில் அழும் விலங்கின்
இதயப்பசி கதைகளும்
மறுப்பினால் மறுகி
அலங்காரம் களையாத
மூப்பியின் பழியும்
முரண் பேசி குளத்தில் விழாமலிருக்க
அடர்காட்டில் வழிமறந்து
அப்பங்களோடு அவியாமலிருக்க
புனையப்பட்ட கதைகளுமாய் நிறைந்த
புத்தக அறைக்கு வெளியே
மறைவற்ற வெட்டவெளியில்
சிக்கிக்கொள்வதன்பது
புனைவற்ற உண்மைக்கதை

-------------------
ஆச்சரியங்களையும்
அதிசயங்களையும்
விரும்புபவள் வாழ்வில்
ஆச்சரியங்கள்
அதிசயமாய் நிகழத்தொடங்கியது
விருப்பங்களை விரும்பாமல்
இருப்பது எப்படி

ஒளியை
ஒரு  கூண்டில் ஏந்தி
இருளைப் பிரித்து
உள்நுழைந்து
கனவுப் பரணிலிருந்து
எடுத்து அடுக்குகிறாள்
வாழ்வின் பார்வைக்கு 

புறக்கணிக்க இயலாத தாமதங்கள்

இலகுவிற்கு பழகிய 
கரையை விட்டு 
நகர்ந்துவிட்ட  படகுகள்


துடுப்புகளின் இருப்பிற்கும்
பாய்மரத்தின் இழுப்பிற்கும்
நதியின் நடுவிலிருந்து
புதியகோணங்கள் எழுதும் 
போலிப்படகுகள்

----------------------------
புறக்கணிக்க இயலாத தாமதங்கள்
அவதியற்றிருந்தும் கூட 
ஓர்   நிலையின்மை
உரிமையற்றதாகிவிட்ட பின்னும்
சிறுதொலைவுக்குள்
வண்ணம் நிறைக்கும் அந்திச்சூரியன்
முற்றாய் 
கரைத்துவிடத் தயாரான  இரவு

உறக்கம் தொலைத்து 
கீழ்நோக்கி விழுந்து 
பறக்கத்தயாராய்
நாளெல்லாம் பற்றியிருந்த கிளையை 
விடுவிக்கும் வாவல்

ஒவ்வொரு சங்கிலியாய் 
இளகிக்கொண்டிருக்கும்  மனம்
 

புன்னகை


புன்னகை

எப்போதும் 
கையோடு தான் வைத்திருப்பது 
செப்படி வித்தை தெரிந்தவராய் 
கையிலிருப்பதை அறிகிறார்கள்
வாராக்கடனாய் அதும் சென்றுவிடுகிறது

பிம்பங்களை உருவாக்காமல்
ஊடுருவிச் செல்லும் போது 
இரட்டிப்பாவதில்லை
 
அரவமற்றதும் 
ஒளியற்றதுமான பொழுதுகளில் 
கதவிடுக்கில் மேஜைகளுக்கடியிலிருந்து 
அது க்ரீச்சிட்டிக்கொண்டிருக்கும்
அதன் பெயர் அதிர்ஷ்டம்

----------------------------------------------------------------

 
நாட்களாய் படிந்து விட்ட
அலமாரியின்   தரையழுந்திய ஓரங்களும்
கட்டிலின் பாதங்களும்
விட்டுச்சென்ற சுவடுகள்

சற்றும் பொருத்தமற்ற
எம் புதிய அலமாரிகளின்
நீளத்தில் நீளம் மறைந்தாலும்
அகலத்தில்
பழங்கதையின் சில பக்கங்கள்

ஏதும் எழுதிச்செல்லாத
கூரைகளில் சுழலும் விசிறியின்
உராய்விலிருந்து
இறங்குகிறது ஒரு கதை

சுவர்களிலிருந்து
புதியகதையில் இல்லாத
பிஞ்சுக்கைகள் அழைக்கிறது

சிறுகச்சிறுக சேர்க்கும் கேள்விகள்

 
சிறுகச்சிறுக சேர்க்கும் கேள்விகள்

தொலைவுகளின் நீளத்தை
இரட்டிப்பாக்கவும்
இல்லாதாக்கவும்
ஒருசேர முடிவதென்ன கணக்கு ?

பாதம் பட்டறியாத
அறைகளின் துல்லியம்
கால்கள் அறிவதெப்படி?

சொல்லவிரும்பாப்
பொய்களுக்கு மாற்றாக
கரங்களுள் பொதிந்திருக்கும்
உண்மைகளின் பட்டியல்களை
விரல்விரலாக நீக்கியும்
கேட்டு வாங்கியும்
கிழித்துப்போடுவது என்ன விளையாட்டு?

வேரலென
சட்டென்று வளரும்
வருத்தமும் கோபமும்
பூத்து சிதறி மறைவதென்ன மாயம்?

வேரல் - மூங்கில்*
-------------------------------
 
புல்வெளிகள் கடந்து
நடைவேகத்தில்
உரையாடல்
 உலைக்களம் அடைந்தது
நினைவுப்பரிசாக 
அங்கே பரிமாறப்பட்டது 
கனன்று கொண்டிருக்கும் கோளம்
மீண்டு நடந்த ஒற்றைச் சுவடுகளை 
விழுங்கியதில்
அலையற்றுப்போனது கடல்
7