January 30, 2007

அம்மாவோட கவலை

அம்மா நீ போயேன், முன்னால . நான் கொஞ்சம் பேசிக்கிட்டே வரேனே.

எதுக்குடி அப்படி என்ன ரகசியம்? நான் தெரிந்து கொள்ளக்கூடாதா?

இல்ல ஆண்ட்டி, எங்க ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்க்குள்ள ஒரு சண்டை .இது எங்க பெர்சனல் நீங்கள் போங்களேன்.

இல்லைம்மா, அப்படி சொல்லக்கூடாது. அம்மாவுக்கு தெரியாம என்ன பெர்சனல் அதுவும் ஏழெட்டு வயசில .

பாரு நான் என்ன உன்கிட்ட அம்மா மாதிரியா இருக்கேன் ?ஒரு ப்ரெண்ட் போலத்தானே .சொல்லு என்ன விஷயம்.

இல்ல ஆண்ட்டி, எத்தனை விஷயம் நீங்க சின்னவங்க, இது உங்க விஷயம் இல்லை, இது உங்களுக்கு புரியாதுன்னு சொல்லறீங்க. அப்படி இது எங்க விஷயம்.

ஆமா அனுக்ஷா நீங்க எந்த விஷயத்தை எந்த வயசில தெரிஞ்சுக்கணுமோ அப்ப சொல்றோம்னு சொல்லி இருப்பாங்க உங்க வீட்டு பெரியவங்க.

ஆனா நாங்க உங்க வயச தாண்டி தானே வந்தோம் அதனால
இப்போ உங்களுக்குள்ள விஷயத்த நாங்க தெரிஞ்சுக்கறது ஒன்னும் தப்பில்லையே.

மேலும் நாங்க அந்த பிரச்சனைக்கு என்ன வழிய நீங்க
தேர்ந்தெடுக்கறீங்க, அது தப்பா, சரியான்னு சொல்லுவோம்ல. அதுக்குதான்.

பொண்ணுக்கிட்ட பேசி சமாளிச்சு நட்பா இருந்தா மட்டும் போதாதுன்னு அவளோட தோழிங்க கிட்ட எல்லாம் கூட கொஞ்சம் கவனமா பேசி வச்சுக்கணும் போலருக்கே.

இப்போதான் புரியுது .

"நேத்து வந்தாளே உன் கூட படிக்கறவ, அது என்ன நான் நிக்கும் போது புசுபுசு ன்னு உன்கிட்ட பேசறா ..காபி கலக்கப் போனா சகஜமா இருக்கா"
"என்கிட்ட முகம் குடுத்து நல்லா பேசமாட்டேங்கறா"
"அவ எப்படி? இதப்பாரு நல்லபிள்ளைங்க சகவாசம் தான்
நல்லது சொல்லிட்டேன். "

இப்படி போட்டு குடையற என் அம்மாவோட கவலை.

January 29, 2007

எப்படி எழுத வேண்டும்?

நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும்.

அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால், சென்ற சில நூற்றாண்டுகளாக, வெகு சாதரண விஷயங்களை அசாதாரண அந்தகார நடையில் எழுதுவது தான் உயர்ந்த கல்வித்திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.

கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமமென்பது என்னுடைய கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம் ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் , எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்கு சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால், வாக்கியம் தத்தளிக்கத் தான் செய்யும், சந்தேகமில்லை.ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும் போது வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக்காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும். சொல்ல வந்த ஒரு விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல், நடை நேராகச் செல்ல வேண்டும். முன்யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால், பின்பு சங்கடமில்லல.

ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்.தைர்யம் இல்லாவிட்டால் தள்ளாடும். சண்டிமாடு போல் ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.
வசன நடை, *கம்பர் கவிதைக்குச் சொன்னது போலவே தெளிவு, ஒளி, தண்மை , ஒழுக்கம் இவை நான்கும் உடையதாகயிருக்க வேண்டும். உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்.
* ( " சவியுரத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும்
தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா வரியினை
வீரர் கண்டார்") *


(பி.கு.) இது என்ன இவளுக்கே எழுதத் தெரியாது ? சொல்ல வந்துட்டான்னு தானே பார்க்கறீங்க? அதுவுமில்லாமல்
சொன்ன கருத்துக்கும் எழுத்துக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாத பழைய காலத்து எழுத்து நடை என்று
பார்க்கறீங்களா? இப்படி எல்லாம் எழுத எனக்கு எங்கே வரும் " படித்ததில் பிடித்தது " பகுதிக்கு இது. பாரதியாரின்
"கவிதையும் வசனமும்" எனும் எழுத்தில் இருந்து எடுத்தது.

January 27, 2007

குழந்தைகளுக்கான சில தளங்கள்கணினி வாங்கிய புதிதில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களையும் தேடித்தேடி படித்து என் தங்கத்துக்கு சொல்லித்தருவது என்வேலையாக இருந்தது. இப்போதும் தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களுக்கு அந்த உரல் களை தந்து நேரம் கிடைக்கும் போது பார்க்கச் சொல்வேன்.அவற்றில் சில இங்கே,

http://www.tamilvu.org/ -- -- இதில் தமிழ்நாட்டினை விட்டு
வெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.
அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.


www.pbskids.com -- விதவிதமான தொலைக்காட்சி காரெக்டர்களுடன் விளையாட்டும் கற்றுக்கொள்வதற்குமான தளம்.உதாரணத்திற்கு
Between the lions இதில் word play, alphabet soup ,A.B.Cow
போன்றவற்றால் விளையாட்டாய் ஆங்கிலம் கற்கலாம்.

www.little-g.com -- little fingers software இதை நம் கணினியில்
தரவிறக்கம் செய்து கொண்டு விளையாடலாம். இதிலும் ஆங்கிலத்தின் ஆரம்ப நிலைகளை படிக்கலாம்.

http://www.sanford-artedventures.com/ -- வரைய சொல்லிக் கொடுப்பதுடன் விளையாட்டும் வரைபடங்களின் தியரியும் உள்ளது.http://www.dreezle.com/ -- இது எல்லா கணினியிலும் கிடைக்கும் பெயிண்ட் ப்ரஷ் போலத்தான் ஆனால் சில மாற்றங்களுடனான இத்திரையில் வரைவது இன்னும் எளிது , இது மவுஸ் கண்ட்ரோல் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவும். மற்றும் கற்பனைத் திறனை வளர்க்க .

http://www.suzyque.us/index.htm -- இந்தத்தளத்தில் worksheets பகுதி நன்றாக இருக்கிறது. வீட்டிலேயே தாய் சொல்லிக்கொடுப்பதற்காக அழகான விளக்கங்களுடன் இன்னும் சில arts and crafts என்று ஒரு வெர்ச்சுவல்
பள்ளிக்கூடம்.


( குழந்தைகள் அதிகநேரம் கணினி முன் இருக்கக்கூடாது, மவுஸ் பிடிப்பது விரல்களில் வலி ஏற்படுத்தும்,இருப்பினும் எப்போதாவது சில நேரங்களில் இது போன்ற தளங்களில் சென்று கற்றுக்கொள்வது
தவறாகாது. விளையாட்டாய் கற்றுக்கொள்வதற்கு தான் இவைகள். )

January 25, 2007

இது புது மொழி

கேட்பதற்கினிய மொழி மழலை மொழி. இந்த புது மொழி தாய்க்கு மட்டுமே புரிந்தது.என் இருவயது மகனின் மழலை மொழிகளின் அகராதி இங்கே,


பக்கா(கையை விரித்த சைகையுடன்)---
காணாமப்போச்சு, காக்காய் தூக்கி போய் விட்டது.

அலோ--
தொலைபேசி யை குறிப்பது ,
மற்றும் தொலைபேசியில் பேசிக்
கொண்டிருக்கிறார்கள் என்பதன் சுருக்கம்.

மம்மம்--
சாக்லேட் மற்றும் இனிப்பு வகையறாக்கள்.

கைங்--
பைக் ,மற்றும் பைக் ஓட்டுகிறார்கள் என்பதன் சுருக்கம்.

புல்லபா(bullaba)--
இது இல்லை அதுதான் வேணும்(ஒருவேளை 'இது இல்லபா அதுபா' வாக இருக்கும்)

தேங்க்தேங்க்--
தேங்க்யூ

ஃபூஃபூ--
முதலில் சாப்பாடு எல்லாவற்றிற்கும் மம் தான்
பின்னால் சூடாக இருப்பதை ஊதி ஊதி சாப்பிடுவதால்
இப்படி மாற்றிவிட்டான். :))

ஸிக்கு(திறப்பது போன்ற அபிநயத்துடன்)--
திறக்கும்போது வரும் சத்ததை வைத்து எனவே
இது பாட்டில் ,பிஸ்கட் பாக்கெட் ,சாக்லேட் கவர்
போன்றவற்றை திறக்க கேட்பதற்கு.

தொம்முனு---
விழுந்துவிட்டான் , விழுந்துவிடுவான் போன்றவற்றுக்கும்
நாற்காலி மற்றும் இன்னபிற உயரமானவற்றில் ஏற்றி விடுங்கள் அல்லது
இறக்கிவிடுங்கள் என்பதற்கும்

காக்கா---
பறப்பன அனைத்துமே

ஸூம்(zoom)
காரில் ஏறி போய்விட்டார்கள்.

லோ--

letsgo and go

January 23, 2007

THE LAND HAS EYES

நான் ரசித்த படங்களின் வரிசையில் இன்னொன்று THE LAND HAS EYES .ஒரு வகையில் போராடும்பெண்ணின் கதை என்பதால் மிகவும் பாதித்த கதையும்கூட. Fiji யின் ஒரு அழகுதீவின் மிக எளிமையான ஒரு பழங்குடி சிறுமியின் கதை.

கடலில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணை அவளின் சகோதரர்களில் ஒருவனே தவறுக்குட்படுத்தும் போது மற்ற சகோதரர்களும் அவளை வெறுத்து யாரும்இல்லா தீவில் விட்டுச் செல்ல , தூக்கியெறியப்பட்ட அந்தப் பெண் பின்னாளில் ரோட்டமென்களின் முதல் தலைமுறையாகவும் அவர்களின் வீரப்பெண்மணியாகவும் கருதப்படுகிறாள்.

THE LAND HAS EYES
THE LAND HAS TEETH
AND KNOWS THE TRUTH


இந்த கதையினை தந்தை சொல்லக்கேட்டு வளரும் சிறுமி விக்கி . அவள் தந்தையை திருட்டு குற்றம் சாற்றி ஏழ்மையின் கரங்களுக்கு பலி கொடுக்கும்போது தானும் தூக்கியெறியப்பட்ட அந்த வீரப்பெண்ணும் ஒன்றே என்று உணர்கிறாள்.தானும் அவளைப்போல தன்னுள்ளிருக்கும் தைரியத்தை திரட்டி எதிர் வரும் துயரினை எதிர்த்து கடும் முயற்சியால் படிப்பதற்கு ஊக்கத்தொகையை பெற்று மேற்படிப்புக்காக fiji செல்கிறாள்.பக்கத்து வீட்டு பணக்காரனால் தந்தை காவலர்களிடம் செய்யாத குற்றத்திற்காக தலைகுனியும் போது ஒளிந்து இருந்து மொழிபெயர்ப்பாளன் பணத்திற்கு விலைபோனதை தந்தைக்கு சொல்லுகிறாள்.தந்தை இந்நிலத்திற்கு கண் உண்டு உண்மை யை பார்த்துக் கொண்டிருக்கிறது கெட்டது செய்தவனை அது நிச்சயம் பார்த்துக்கொள்ளும். இதற்குதான் உன்னை படிபடி என்கிறேன். என் கனவை நிறைவேற்று என்ற தந்தைக்காக கைவினை பொருட்கள் தயாரித்து வீட்டையும் காப்பாற்றுகிறாள்.அந்த பழய நம்பிக்கை உண்மை என்பது போல சில நாட்களிலேயே அந்த பணக்காரன் நண்பன் மொழிபெயர்ப்பாளனால் வெட்டுப்பட்டு இறக்கிறான்.

எல்லா நிலங்களுக்கும் கண் இருக்கிறதா?

January 22, 2007

ZOZO

zeestudio வில் zozo என்ற திரைப்படத்தை , ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு பிறகு, பார்க்க நேரிட்டது.இணையம் வேலை செய்யாதபோது ரிமோட்டால் தொலைக்காட்சியை ஒரு வலம் வந்தபோது ஆங்கில மொழியாக்கத்துடன் ஓடிக் கொண்டிருந்த அப்படம் இருநிமிடங்களிலேயே இது ஒரு நல்லபடம் என்பதை உணர்த்தி தொடர்ந்து பார்க்க வைத்தது.

zozo என்கிற 12 வயது பையன் லெபனனின் சிவில் போருக்கு நடுவில் ஒரு சாதாரண வாழ்வு வாழ்ந்து கொண்டு உறவுகளின் நட்புகளின் அணைப்பில் கனவுகள் காண்பவனாக இருக்கிறான். ஒரு நாள் அவன் குடும்பத்தில் எல்லோரையும் இழந்து தனியாகிறான். அவனுடைய
தாத்தா பாட்டி சில வருடங்களுக்கு முன்னமே நடுநிலை நாடான ஸ்வீடன் போய் குடியிருப்பதால், தாத்தாவின் ஸ்வீடன் பற்றிய வர்ணிப்புகளின் ஈர்ப்புடன் அவன்
ஸ்வீடன் செல்லுகிறான் .

ஸ்வீடன் செல்லும்முன் ஒரு சிறு பெண்ணுடன் அவனுக்கு
நட்பு கிடைக்கிறது. அவள் அவனுடன் வரத்தயாராகும் போது பெரியவர்களால் தடுக்கப்படுகிறாள். பெற்றோரை இழந்த அவனுக்கு அடுத்த பிடியாக கிடைத்த அப்பெண்ணையும் இழந்து ஒரு ஆபிசரின் கருணையால் தான் ஸ்வீடன் செல்கிறான்.

அவன் நினைத்தது போல் அந்த நாடு அவனுக்கு நிம்மதியளிக்கவில்லை . ஒரு நாட்டில் அகதியைப்போல் சென்றவனுக்கு ஏற்படும் அனைத்து துயர்களையும் அவன் படுகிறான்.நட்பு கிடைக்காமல் பள்ளியின் மற்ற மாணவர்களின் புறக்கணிப்பு மற்றும் தாக்குதலுக்கு ஆளாகிறான்.

அடிக்கடி பழைய நினைவுகளால் கனவில் மூழ்கி அம்மாவுக்கு ஏங்கி வாடுகிறான்.
தாத்தாவின் முயற்சியால் அவன் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வருகிறான். ஒரு நட்பு கிடைத்து அவன் மீண்டும் ஒரு சிறுவனுக்குரிய மகிழ்ச்சியில் சிரிக்கிற காட்சியுடன் முடிகிறது.

குண்டுமழை பொழியும்போது அம்மாவின்கைப் பிடித்து
போவதும், அண்ணன் ஒளித்து வைத்து காப்பாற்றுவதும்,
ஒருவரும் இன்றி அவன் கோழிக்குஞ்சிடம் நட்பு கொள்வதும்,ஸ்வீடன் பள்ளியில் புறாவிடம் என்பெயர் zozo உன்பெயர் என்று நட்புக்கு ஏங்குவதுமாக
நெகிழ வைக்கும் அற்புதமான திரைப்படம்.

பள்ளியில் நட்பினை பெறுவதற்கு அவன் பென்சிலும் ரப்பரும் அழகாக இருக்கிறது என்று சொன்ன பையனுக்கு அதை பரிசாக தந்து விடுகிறான். உடனே மற்ற எல்லாரும் அவனை சூழ்ந்துகொண்டு எனக்கு எனக்கு என்பதும் இன்னும் என் அம்மாவுக்கு எனகேட்போருக்கெல்லாம்
அவன் தருவதாக சொல்வது அவன் நட்புக்கு ஏங்கு வதை
அழகாக சித்தரிக்கிற காட்சிகள்.

zozoவின் தாத்தா அவனை தைரியமாக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியாக அவனை அடித்த மூன்று சிறுவர்களில் ஒருவன் வீட்டுக்கு சென்று மூன்றுபேர் எப்படி ஒருவனை அடிக்கலாம் வா இப்போது நேருக்குநேர் எனும்போது அவரின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தாலும் அதுதான் அவனுக்கு தைரியமளிக்கும் என்கிறபடி எடுக்கப்பட்டிருக்கிறது.

தாத்தா பார்க் பெஞ்சில் அமர்ந்து, நான் சிறுவயதில்
இப்படி வீரமாக இதை செய்தேன் அதை செய்தேன் என்று
உற்சாகமாய் விவரிப்பதும் சரி, மருத்துவ மனையில்,
என்பையன் இறந்துவிட்டான் என்கால் உடைந்து விட்டது இருந்தாலும் நான் அழவில்லை. என்போல ஏன் நீ
இருக்ககூடாது என்று சொல்லும்போதும் சரி,
ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார்.

நல்ல நடிகர்கள்,லெபனனிலிருந்து குடிபெயர்ந்த முதல்
தலைமுறையை சேர்ந்த இயக்குனர் josef fares.
2005ல் வெளியாகி பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதாக வலையில் இங்கு
புகைப்படம் இணைக்க தேடியபோது அறிந்து கொண்டேன்.

January 18, 2007

உன்ன ஜோடியா பார்க்கணும்டா

''மேகலா ஒன்னுமே பிடிபடாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போயிடுமோன்னு கவலைப்பட்டு பேசும்போது கூட நானிருக்கேன்
உனக்குன்னு சொல்லமுடியலடா உங் கொட்டி கேட்டுட்டு வந்திட்டேண்டா''
''ஆமா எத்தன காலத்துக்குதான் இப்படி புலம்பிக்கிட்டு இருப்பயோ தெரியல
இந்தா விசா வந்தா மஸ்கட் ஓடி போயிடுவேன் . அதுவரைதான் இந்த
சுமைதாங்கி வேலை எல்லாம் . அப்புறம் எங்கபோய்சொல்லுவ? ''
''சரிசரி விடு அந்த பையனப் போய் பாக்கணும் மேற்கொண்டு என்னதான்
செய்யபோறான்னு கேட்கசொன்னா . வண்டிய எடுடா ''
''முதல்ல எனக்கு சொல்லு அப்புறம்தான் எல்லாம்''
''என்ன சொல்லனும் உனக்கு அவனக் காதலிக்கறத என்கிட்டதான் முதல்ல
சொன்னா அப்பம்போய் நானுன்ன ரொம்பநாளா லவ் பண்ணரன்னு சொன்னா எப்படி இருக்கும்?''
'' ஓகே. நல்லா இருந்திருக்காதுதான் இப்ப கதையேவேறயாச்சே.
கஷ்டப்பட்டு சம்மதமெல்லாம் வாங்கினப்புறம் தாலி வாங்க கடைக்கு போயிட்டு சும்மா வந்த அவனா அவள நல்லா வச்சுப்பான்.''
''நல்லா யோசிச்சு சொல்லு. ஜாதகத்த காரணம் சொன்னான் கொஞ்சநாள் . எனக்கு தெரியும் அவன் இத கட்டமாட்டான். வீட்டுலபாக்குற பணக்கார பொண்ணத்தான்கட்டுவான் ,அதுதெரியாம இந்தப் பொண்ணு அடிஉதை வாங்கிட்டு சொந்தபந்தம் எல்லாத்துக்கிட்டயும் அவமானம் பட்டு உட்கார்ந்து இருக்கு . உனக்கும் புரிஞ்சுதானிருக்கும் அந்த பொண்ணு மேல இருக்கற காதலால அவ நினைக்கறத நடத்தி சந்தோசப்பட வைக்கணும்ன்னு அலையற. .''
''இந்த கல்யாணம் மட்டும் நடக்கலன்னா அதுக்கப்பறம் அவ ளுக்கு மாப்பிள்ளை யாரும் பார்க்கபோறது இல்ல அவ வாழ்க்கை பத்தி யோசிக்கல நீ''
''இதோட கடசியா இருக்கட்டும் அவன் இன்னைக்கு சரியா பதில் சொல்லல
என்கிட்ட விட்டுடு . எங்க பேசணுமோ பேசி மஸ்கட் போற முன்னாடி,
உன்ன ஜோடியா பார்க்கணும்டா நான் .''
நன்றியோடு நண்பனின் வார்த்தைகளை மனதில் நினைத்து கொள்ளும்போது
''என்ன கனவா? போய் ரெடியாகுப்பா ISD பூத் போய் ஒரு கால் மஸ்கட் பேசிட்டு கல்யாணநாளுக்கு கோயில்ல ஒரு அர்ச்சனை பண்ணிடலாம் சரியா?''
மேகலாதான்.

January 17, 2007

சுனாமி சிடி

இந்த கடலா எண்ணற்ற உயிர்களை கேட்டது என்று ஆச்சரியம் படும் வகையில் இருந்தது. குளத்தில் காற்றால் ஏற்படும் சிற்றலைபோல கால்களை நனைத்து சென்றன கடல் அலைகள் . வேளாங்கன்னி செல்லும் எண்ணம் வந்தபோதே சுனாமி தான் கண் முன் வந்து நின்றது. அந்த மணலை மிதிக்கும் போது மனம் பதைப்பாய் தான் இருந்தது.
இன்னமும் கட்டி முடியாத மாற்றுகுடியிருப்புகள்.
இந்த கடைகள் எல்லாம் தானே தண்ணீரில் மிதந்தது , பார்க்கும் கடைத்தெருவும் அதையே நினைவு படுத்தியது. நான்கைந்து கடைகளுக்கு ஒன்றாக வருகிற மாதா பாடல்கள் விற்கின்ற கடைகளில் எல்லாம் சுனாமிலைவ் சிடி விற்பனை க்கு என்னும் விளம்பரம். எது அவர்களுக்கு துன்பம் தந்ததோ அதையே சாதகமாக்கி வியாபாரம் செய்கிறார்கள்.

வீழ்ந்தால் எழும் சக்தியும் ,

வீழ்ச்சியை வெற்றியாக்கும் திடமும் ,

சுற்றிப் பார்த்து திரும்பும் போது எனக்குள்ளும் சிறிது .

சுனாமியால் இறந்தோருக்கான நினைவுத்தூண்.January 11, 2007

உயிர்த்தெழுந்து சொன்னது உன் மேஜை

நீ கடந்து போனபின்,
யாருமில்லா வகுப்பில்,
உன் மேஜை தேடி அமர்ந்தேன்.
நீ சொல்லாத காதலை,
உயிர்த்தெழுந்து,
சொன்னது உன் மேஜை.
உன் பெயரோடு என் பெயர்.
நானே உன் நலம் அறியப் போனபோது
எங்கோ இருக்கும் உன்னைப்பற்றி
என்னிடம் நலம் விசாரிக்கும்
நீ சாய்ந்து நின்றே பேசும் மின்கம்பம்
நீ சுற்றி வந்த விநாயகர்
அடிக்கடி தென்படும் தபால் நிலையம்
யாருமற்ற பாதை வளைவு.

January 10, 2007

கடவுள் நேராக வருவாரா?

மருந்துக்கடையில் சீட்டை தந்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் பக்கத்துக்கடையில் ஏதோ வாங்க வந்தார்கள். கல்லூரி செல்லும் வயதுடைய பெண் கூட நடுவயது பெண்மணி . எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு , ஆனா பேர் வரமாட்டேங்குது . போய் கேட்க யோசிக்கும்போது அவங்களும்
உத்துப் பார்க்கிறதால் நம்மள அவங்க அடையாளம் கண்டுபிடிச்சிட்டாங்க, மேற்கொண்டு பேசினால் தெரிந்துவிடும் என்ற தைரியம் வந்துவிட்டது.
எப்படி இருக்கப்பா நல்லா இருக்கியா? இது யாரு வீட்டுக்காரரா என்னா மூணு பிள்ளைங்களா? இல்ல இல்ல அது யாரோ வாங்க வந்தவங்க பிள்ளை போல இது பொண்ணு அவங்க கையில் தூங்கறது பையன்.அப்படியா தம்பி எங்க இப்போ ? அவனா கல்யாணமாகி சென்னையில் தான். நல்லது ஜெமிலா வீட்டுக்கு போறதுண்டா ? ஆங் இப்போ தான் பேர் நியாபகம் வருது இவங்க விமலாவோட சித்தி. இது அவங்க பொண்ணு ரீனா.
இல்லைங்க விமலா இல்லாத வீட்டுக்கு போக எனக்கு மனசே வரமாட்டங்குது. அவங்க அம்மா அப்பாவ பார்த்தா சண்டைபோடனும் போல இருக்கு ஆனா முடியல.நம்ம போகம இருக்கிறது கூட ஒரு வகையில் விமலா இன்னும்
உயிருடன் இருப்பதாக நினைக்க உதவுமே .
நீங்கள்ளாம் ஒரு குடும்பம் மாதிரி இருந்தீங்க காலனியில். இப்போ எங்களுக்கு கூட அதிகம் ஒட்டு இல்லப்பா.என்ன பண்ண கடவுள் பக்தி இப்படி கண்ணை மறச்சிருச்சே.
ஆமா அந்த குட்டி எப்படி இருக்கா விமலா தங்கச்சி ..
என்ன குட்டி யா நல்லா சொன்னே அது அவங்க அம்மா ஜெமிலா மாதிரி இருக்கு இப்போ. ஆனா காதுல கையில எதுவும் போடாம இருக்கு. சங்கடமா இருக்கு.
ஆமாங்க . எங்க வீடு தான் எப்போதும் ரெண்டு பேருக்கும். கடவுள் என்ன நேரிலா வருவார் இந்த காலத்தில். டாக்டர் மூலமா தான் சரி செய்வார்.
பாருங்க உங்க மதமாகட்டும் எங்கமதமாகட்டும் எல்லாம் அப்படி தானே சொல்லுது. சரிங்க நேரமாகிடுச்சு அப்புறம் பாப்போம்.
ஆட்டோவில் வரும் போது விமலா தான் மனசெல்லாம்.உன்னை ஒருத்தங்க அடையாளாம்
கண்டு பேசிட்டாங்களே உன் ஊரில, கிண்டலாக ஆரம்பித்த கணவர்கிட்ட இவங்க விமலா வோட சித்தி .விமலா பக்கத்துவீட்டுல இருந்த பொண்ணுங்க. அவளுக்கு ருமாட்டிக் ஜுரம் வந்துச்சு. இங்க காட்டி இதுதான்னு தெரிஞ்சதும் சென்னை கூட்டி போக சொன்னாங்க..அவங்க மதத்துலயே தீவிரமான ஒரு மார்க்கத்துக்கு மாறி இருந்த நேரம். கடவுள் நோய் தருவது அவர்களை தன் கிட்ட சீக்கிரமே அழைக்கிறதுக்கு தான் அதனால் அதை தடுக்கும் மருந்து டாக்டர் இவங்க பக்கம் திரும்பி பாக்க மாட்டோம்ன்னு பிடிவாதம் பிடிச்சாங்க அவங்க அம்மா அப்பா.
எலும்பும் தோலும் மட்டும் இருக்க தலையணை முட்டு கொடுத்து உட்காரும் நிலையில் இருந்த அவளை பாக்க போனப்ப கூட அம்மா இங்க பாரு அங்க போய் டாக்டர் கிட்ட போறது பத்தி மட்டும் பேசாதே பிரசங்கமே செய்வாங்கன்னு சொல்லி தான் கூட்டிபோனாங்க.அப்புறம் அவ இறந்த செய்தி தான் கேட்டேன்.
கடவுள் டாக்டருடைய முகவரியை தான் தருவார். அவருக்கு செய்யும் திறமையை தருவார். ஆனால் எந்த கடவுளும் போதும் வாழ்ந்தது வா என்று அழைப்பாரா தெரியவில்லை.
இன்னும் இருக்கிறாள் கண்ணுக்குள். அலங்காரம் செய்து
ஒரு புது பூவைப் போல வருவாள். 6வது தான் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனை கனவு கொண்டிருந்தாயோ விமலா?//