50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்....விபூதி குழைத்து விளக்கின் பக்கங்களில் வைத்து அவை காயும் முன் குங்குமம் அதன் மேல் வைத்து அழகு செய்து என்று தம்பியும் நானும் உதவி செய்யும் போதே அம்மா எங்களுக்கு சில விசயங்கள் சொல்வார்கள்.
அரிசி மாவினால் கோலங்கள் இடும் போது சிறு எறும்புக்கும் நாம் உதவியாக இருக்கவே அரிசி மாவுக் கோலம் இடுகிறோம். மஞ்சளில் கதவில்
பட்டைகள் இடும் போது மஞ்சள் கிருமி நாசினி அது தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் நம் வீட்டில் நுழைவதிலிருந்து காக்கும்
என்று சொல்வார்கள்.
சில கதைகளும் கிடைக்கும் பண்டிகை தினத்தில். அம்மா அரிசி மாவினை குழைத்து கை அச்சினை கதவின் மேல் பதிப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு ஒரு கதை.
மகாபலி வருடம் ஒரு முறை ஓணத்தன்று வருவதாய் கேரளத்தில் சொல்வது போல் கார்த்திகை அன்று வருவார் என்றும் அதற்காக கை பதிப்பது நம் பக்கத்து ஒரு நம்பிக்கை...என்பார்கள்.
கார்த்திகை மாதம் காற்று நிறைய இருக்கும் . தீய சக்தி இந்த அச்சினால் ஏதும் வீட்டில் வர அஞ்சும் என்றும் அவர்கள் பாட்டி காலத்து நம்பிக்கை ப் பற்றியும் சொல்வார்கள்.செவிக்கும் உணவளித்து பின் வகைவகையாய் ... திண்பண்டங்களும் கிடைக்குமே பண்டிகை வந்தால் .