நேற்றைப்போல ஏன் இல்லை
எந்த பக்கமும் இக்கேள்வி
எழாதவரை எல்லாம் சுகமே!
.
வாதங்கள் செய் ஆனால் வார்த்தையால் வருடிக்கொடு.
உறவின் விதி விலக்கி தோல்வியில்லா தோழமை கொடு.
சிறகுமுறிக்காத சிறு உலகம் கொடு.
ஆராவாரமில்லாத அன்பைக்கொடு.
முரண்படு ஆனால் முத்தங்களில் முடித்துவிடு.
இப்படியாக ஒரு கனவின் கதறல்களை எழுத்தாய் உருவேற்றி இருந்தாள்.
மலரின் கவிதை வாரப்பத்திரிக்கையில் வந்துருக்கு...உயிர்ப்பான கவிதைகளைத் தொடர்ந்து அனுப்பும்படி ஆசிரியரின் கடித்ததுடன் ஒரு பதிப்பு இலவசமாக அனுப்பி இருக்கிறார்கள். முகிலனிடம் சொன்னால் என்னை திட்டி தானே கொஞ்ச நாளா எழுதற என்று கேட்பான்.
மலர் நேற்றே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் முகிலனைப் பார்க்கவே முடியவில்லை பள்ளி முடிந்து வந்தால் களைப்போடு வீட்டு வேலைகளும் இரவு உணவுக்கான வேலைகளும் அவளை கட்டிப்போட்டிருந்தன. அவனாக வருவான் என்று எதிர்பார்த்திருந்தாள். எப்போதும் முகிலன் இரவில் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான். அப்பாவோடு தொழிலைப் பற்றி பேசுவது போல நிலைப்படியில் அமர்ந்து கொஞ்ச நேரம் பொழுதுபோக்குவான். இல்லையென்றால் சின்ன அண்ணனோடு சினிமா பத்தி பேசிக்கொண்டிருப்பான்.
யோசித்துக்கொண்டிருக்கும் போதே உலை கொதித்து வழிந்து அடுப்பை அணைத்தது.. "ஏந்த மலரு என்ன கனவு" என்ற படி சின்ன அண்ணன் வரவும் நினைப்பை அவிழ்ந்திருந்த கூந்தலை கொண்டையா முடியும் போதே சேர்த்து முடிந்தாள். நேற்றிரவுக்கான குழம்பை சுண்ட வைத்து எடுத்து சுட்ட அப்பளத்தோடு அவள் இன்று சின்னதாய் சமையலை முடித்ததே ஒரு எட்டு முகிலன் வீடு வரை போவதற்குத்தான்.
வாசல் தட்டியைத் தாண்டும் போது அப்பாவின் இருமல் அழைத்தது. "அப்பா இந்தா சுசீலாக்கா வீடு வரை தான் "
" ம்...இருட்டி என்ன வேலையோ போ..." "மன்னார்குடி பெரிய மாமா வீட்டுல இருந்து இன்னிக்கும் போன் வந்துச்ச்சாம் சுசீலாக்கா க்கிட்டவே அப்ப விசயத்தை கேட்டுக்கோ என்கிட்ட பேச எங்க உனக்கு நேரம் " இருமலோடே முடித்தார்.
சுசீலாக்கா வாசலிலேயே டாமியோட உட்கார்ந்து இருந்தது. அக்கா முகிலன் ஊரில் இல்லயாக்கா ....
உன்னைப் பாக்கவரலியா தேடிக்கிட்டு வந்தயா இதே வேலை உங்களுக்கு என்ன சண்டை இப்ப?
அக்கா நீங்க வேற நான் என்னைக்கு சண்டை போட்டேன் அதுவா வரும் கோச்சுக்கும் திட்டும் பின்னால நான் தான் எதுக்குன்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். இப்ப என்னவோ..."
"ஆமா பெரியமாமா வீட்டுல இருந்து இன்னிக்கும் போன் வந்துச்சு அப்பா சொல்லலையா வீட்டுக்கு மருமகள்னு வந்தா படிக்க வச்சு பாத்துக்கறேன்னு சொல்றாங்க. நீயானா இதும் பின்னால சுத்திட்டு இருக்கற இது ஒன் வேலையை தூக்கி எறிஞ்சிட்டு வீட்டுல சோறு சமைச்சிக்கிட்டு வெளியே போனா இவன் பின்னாடி குனிஞ்ச தலை நிமிராம போனாலும் எதாயாச்சும் கேட்டு சண்டை போடுவான்."
உனக்கு என்னிக்குத்தான் அறிவு வரப்போதோ!"
பேசிக்கொண்டே இருக்கும் போதே நாதனோடு சைக்கிளில் வந்து இறங்கிய வேகத்தில் முகிலன் வீட்டுக்குள் கண்டுக்கொள்ளாதவனாக புகுந்தது மலரை கவலைப்படவைத்தது. நாதன் "அண்ணி வரட்டா" என்ற படி நகரப்பார்த்தான். என்ன வாம் உங்கண்ணனுக்கு என்ற போது அவளுக்கே அவள் குரல் கேட்கவில்லை..சங்கடத்தில். "இல்லண்ணி நேத்து உங்க பள்ளிடத்துல எல்லாரும் சினிமாக்கு போனிங்களாமே அவனுக்கு நீங்க சொல்லலையாம். அது எப்படி போகலான்னு கேட்டுட்டு ஒரே புலம்பல். சரி நான் வரேன். நின்னா அடிக்கவருவான்."
"ம்..இந்தா சொல்லிட்டேன் இவனை எல்லாம் ஒருத்தன்னு நீ கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படறயே போ போய் கெஞ்சு...
நீ ...அங்க போனா சொல்லனும் ....இங்க போனா சொல்லனும்ன்னு.. சே போபோ ...நீ மட்டும் என்ன சொன்னா கேக்கப்போறியா என்ன? நான் படுக்கறன்பா...அங்க முகிலன் அம்மா சோறு எடுத்துவச்சிட்டு தூங்க போயிட்டு ...நீயே போட்டுட்டு சமாதானம் செய்." கோபமும் நிறைய வருத்தமுமாக சுசீலாக்கா சொல்லிவிட்டு உள்ளே போனாள்.
தட்டு முன்னாடி கைலியும் பனியனுமாக உக்காந்திருந்த முகிலன் இவளுக்காகத்தான் காத்திருந்தான். வருவா சாப்பாடு போடன்னு. ரிமோட் டை கோபத்தில் அழுத்திய அழுத்தலில் ஒரு ஒரு சேனலும் அடிச்சு புரண்டு மாறிக்கொண்டிருந்தது.
கண்ணீரோடு அவள் பரிமாற அவன் சொல்லிட்டுப் போறதுக்கென்னா அவனவன் உன் பொண்டாட்டிய தியேட்டர்ல பாத்தேன்னு கிண்டல் பண்றான் ... நான் இல்லாம் பள்ளிடம் தவிர எங்கயும் போகதன்னு சொன்னா கேக்கறயா மனுசன் மானம் போகுது.
காதல் பண்ணிய தவறை கண்ணீரில் கழுவியபடி.. சோற்றை தட்டிலிட்டு குழம்பு ஊற்றும் போது அவன் ஆரம்பித்தான்
"சரி சரி போய் சேரு வீட்டுக்கு... இருட்டுல தனியா அனுப்பி இருக்கான் பாரு உங்கப்பன்.... "
வர வர எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க இவன் வேணான்னு ...நீ பண்ணற அலும்பும் தாங்காமத்தான் போயிட்டு இருக்கு காதல ஒத்துக்கிட்ட பாவத்துக்கே பொண்டாட்டின்னு படுத்தற..
போனவாரம் என்கிட்ட சொல்லிக்கிட்டா நாலு பசங்களோட சேந்துகிட்டு பாண்டிக்கு போன. .. அப்பாக்கிட்ட பெரியமாமா பையனைக் கட்டிக்க சம்மதம்ன்னு சொல்லிடறேன்..அடுத்த வாரமும் பாண்டிக்குப் போய் பொண்டாட்டி ஓடிப்போயீட்டான்னு குடிச்சுட்டு அழு. மலர் கையில் கொண்டுபோன பத்திரிக்கையை அவன் மீது விசிறி விட்டு வந்தாள் படிச்சிட்டு நாளைக்கு சொல்லு உ ன் முடிவை என்றபடி வெளியேறினாள்.