நேற்று இரவு நானும் மகனும் சார்லி இன் த சாக்லேட் பேக்டரி படம் பார்த்தோம். பன்னிரண்டு மணிக்கு மேல் எனக்குத்தான் தூக்கம் வந்தது. ஆனால் அவனோ இன்னும் கொஞ்சம் தான் இருக்கு தூங்காதே அம்மா என் கூட பாரு என்று என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியபடி இருந்தான். அப்படியும் ஒரு காட்சியில் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். பிறகு அவனே அந்த கதையை எனக்குச் சொன்னான்.
சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று பல்டாக்டரான தந்தையால் மிகவும் கண்டித்து வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் பெரியவனாகி சாக்லேட் தொழிற்சாலையே ஆரம்பிக்கிறான். அவனுடைய ரகசிய செய்முறைகளை யாரோ கடத்தி வெளியே விற்றுவிட்டார்கள் என்ற கோபத்தில் அவன் எல்லா தொழிலாளர்களையும் விரட்டி விடுகிறான். அதே ஊரில் ஏழையாக இருக்கின்ற சார்லியின் தாத்தா அதில் வேலை செய்தவர்களில் ஒருவர். அவர் அந்த தொழிற்சாலையின் முதலாளியான வில்லி வோன்காவைப்பற்றி தன் பேரனிடம் ஒரு மேதையென்று சொல்லிவைக்கிறார்.
அந்த தொழிற்சாலை ஊராருக்கு ஒரு அதிசயம். யாருமே அங்கே வேலைக்குச் செல்வதில்லை ஆனால் சாக்லேட்கள் உற்பத்தியாகி வெளியே அழகாக டப்பாக்களில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறது. ஒரு நாள் அறிவிப்பு ஒன்று எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுக் காண்கிறார்கள். வோன்காவின் சாக்லேட்களில் ஐந்து சாக்லேட்களில் மட்டும் "தங்க அனுமதி சீட்டு" (கோல்டன் டிக்கெட்) வைக்கப்பட்டிருக்கிறது. யாருக்கு கிடைக்கிறதோ அந்த ஐந்து குழந்தைகள் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க ஒரு நாள் அனுமதிக்கப்படுவார்கள்.அவர்களில் ஒருவருக்கு நினைத்துப்பார்க்கமுடியாத ஒரு பரிசு கிடைக்கும்.
சார்லிக்கும் அதனைப் பெற ஆசை . அவன் குடும்பமோ ஏழை. அப்பா அம்மா இரண்டு தாத்தா இரண்டு பாட்டி என்று பெரிய குடும்பம். அப்பாவுக்கோ வேலை போய்விட்டது. சிரமங்களுக்கிடையில் அவன் பிறந்தநாளுக்காக வாங்கிய சாக்லேட் பட்டையில் சீட்டு கிடைக்கவில்லை. ஆனால் அவன் அதை பெரிதாக நினைக்காமல் அதனை குடும்பத்திலிருப்போர் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறான்.தாத்தாவின் சேமிப்பில் வாங்கிய பட்டையிலும் கிடைக்கவில்லை. அதற்குள் ஒவ்வொரு அனுமதிச்சீட்டாக பெற்றவர்கள் தொலைகாட்சியில் பேட்டிக்கொடுக்கிறார்கள்..இன்னும் இருப்பது ஒரே ஒரு சீட்டுத்தான்.

அதிர்ஷ்டவசமாக சாலையில் கண்டெடுத்த பணத்தில் சார்லி வாங்கிய சாக்லேட் பட்டையில் அந்த சீட்டு கிடைத்துவிடுகிறது. அதை விலைக்குக்கொடுக்க சொல்லி எல்லாரும் கேட்க, கடைக்காரர் மட்டும் வீட்டுக்கு எடுத்து செல்லப் பணிக்கிறார். வீட்டிற்கு வந்த பிறகு தங்கள் ஏழ்மை நிலை போக அதனை விற்கலாம் என்று முடிவெடுப்பதாக சொல்கிறான். அதுவரை அந்த குடும்பத்தில் எதிர்பதமாக பேசிவந்த இன்னொரு தாத்தா இந்த முறை நம் குடும்பத்தில் என்ன குறை.. பணம் பெரிய விசயமே இல்லை. நீ பலபேருக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவது தான் சிறப்பு என்று சொல்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தன்னோடு ஒரு பெரியவர்களை அழைத்துச் செல்லலாம் என்பதால் அவன் அவனுடைய தாத்தாவையே கூட்டி செல்கிறான்.

அங்கே வருகின்ற குழந்தைகளில் சார்லியைத் தவிர மற்றக்குழந்தைகள் அனைவருமே சரியாக வளர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒரு குழந்தை பணக்காரர் மகள். நினைப்பதெல்லாம் அடைய வேண்டும் என்றிருப்பவள். அவளுக்காக அப்பாவின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் வேலைகளை விட்டு சாக்லேட் களை பிரித்து தேடிக்கிடைக்கிறது. சார்லி தன் தாத்தாவிடம் .. "இது எப்படி சரியாகும் தாத்தா? அவளாக தேடவில்லையே."
தாத்தா- "அப்படித்தான் எல்லாம் நடக்கிறது சார்லி ."
ஒரு குழந்தை எந்நேரமும் சாக்லேட் சாப்பிடுபவன்.
ஒரு குழந்தை எந்நேரமும் வீடியோகேம்ஸில் அடிஉதை என்று வாழ்பவன். ( சாக்லேட் பிடிக்காதவன் வேறு)
ஒரு குழந்தை ட்ராபிகள் வாங்கிக்குவிக்கும் ஜீனியஸ்.. பபிள்கம் அதிக நேரம் சுவைப்பதில் கின்னஸ் ரெக்கார்ட் செய்தவள்.
உள்ளே குள்ளமனிதர்களும் இந்தியப்படங்களைப்போல அடிக்கடி வரும் பாடல்களும் செட்டிங்களும் பிரமாதம்.குள்ளமனிதர்கள் உதவியுடன் வோன்காவின் தொழிற்சாலை நடக்கிறது.
உள்ளே போனதும் வருகின்ற உலகம் தான் என் மகனுக்கு மிகவும் பிடித்தது. சாக்லேட் ஆறு சாக்லேட் அருவி.. சாக்லேட் மரங்கள் அங்கங்கே ஐஸ்கிரீம்..இதே போல் நம் வீட்டிலும் இருந்தால் அள்ளி அள்ளிச்சாப்பிடுவேன் என்று சொல்லிக்கொண்டான்.. கனவுக்கு போயிருப்பான் .எந்நேரமும் சாக்லேட் சாப்பிடும் பையன் சாக்லேட்டை அள்ளிக்குடிக்கமுயன்று அதற்குள் விழுந்துவிடுவான்.அதனால் அவனும் அவன் அம்மாவும் வெளியேற்றப்படுவார்கள்.அவன் பைப் ஒன்றால் உறிஞ்சப்படும் போது ..என் மகன் சிறியவன் என்பதால் அவனுக்கு அவன் நல்லபடி வெளியே அனுப்பபடுவார்கள் என்று பலமுறை சொல்லவேண்டி இருந்தது.

பபிள்கம் மெல்பவள் வோன்கா சொல்வதைக்கேட்காமல் சோதனை செய்யப்படாத ப்ளூபெர்ரி பபிள்கம் சாப்பிட்டதால் நீல நிறமாக மாறி பந்து போல உருண்டு வெளியேற்றப்படுவாள். அப்போதும் அவனுக்கு பயப்படாமல் இருக்க விவரிக்கவேண்டி இருந்தது. அதிகம் பபிள்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நல்ல ஐடியா...:) ஜூஸறில் போட்டு பெர்ரியின் ஜூஸ் எடுக்க அவளும் அவள் அம்மாவும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
டிவியே அதிகம் பார்ப்பவன் டீவிக்குள் சென்று சின்னவனாகிவிடுவான். ஆட்டம் க்ளோஸ்.
நட்களை( nut) பிரித்தெடுக்க இருக்கும் அணில் குட்டிகளைப்பார்த்து இப்போதே அணில் குட்டி ஒன்று தனக்கு வளர்ப்பு ப்ராணியாக வேண்டும் என்று கேட்டசிறுமிக்காக அவள் தந்தை வோன்காவிடம் பேரம் பேசிப்பார்க்கிறார். வோன்காவின் மறுப்பை கண்ட சிறுமி அணிலைப்பிடிக்க செல்ல.. அணில்கள் கோபம் கொண்டு அவளை சூழ்ந்துகொள்ள... ( இந்த இடமும் பயம் தான் குட்டிப்பையனுக்கு) ஒரு அணில் மிக அருகில் அவள் முகத்துக்கு சென்று நெற்றியில் "டொக் டொக்" இது நல்ல நட் இல்லை..(மகனுக்கு ஒரே சிரிப்பு பேட் கேர்ள் பேட் நட்)

தந்தை பதற.. இப்பொழுது என்ன ஆகும்.. நல்ல நட் இல்லையென்றால் குப்பைக்கூடைக்குப்போவார்கள். மகள் குப்பைக்கூடைக்குள் விழ அப்பாவும் விழ.. ஆட்டம் க்ளோஸ்..
மீதி இருப்பவன் சார்லி என்பதால் அவர்களை வீட்டிற்கு சென்று இனி எல்லாரிடமும் சொல்லிக்கொள் உனக்கான பரிசு நீ என் தொழிற்சாலைக்கு முதலாளி. எனக்கு வாரிசு என அறிவிக்கிறான். குடும்பத்தினரைப் பிரிந்து அந்த தொழிற்சாலையை தனதாக்கிக்கொள்ள விரும்பாத சார்லி வோன்காவுக்கு ஆச்சரியம் தருகிறான்.குடும்பத்தினரை அழைத்துச் செல்ல மறுக்கும் வோன்கா.. திரும்பி செல்கிறான்.
கடைசியில் மற்ற குழந்தைகள் வெளியேறுவடு காட்டப்படுகிறுது.. இல்லாவிட்டால் நம்ம குழந்தைகள் பயந்துவிடுவார்களே... :)
மீண்டும் வரும் வோன்கா சார்லியின் அறிவுரைப்படி தன் தந்தையைக்காண செல்கிறான். அங்கே அவன் தந்தை அவன் பற்களை சோதனையிட்டு ஆச்சரியப்படுகிறார்.
-"வில்லி வோன்கா ? !!!!!
-ஆமாம்...
-நீ இதுவரை சாக்லேட் சாப்பிடவே இல்லயா..?
-இல்லை அப்பா எப்போதுமே"
சார்லியின் குடும்பமும் அதே போல ஒரு வீடும் சாக்லேட் பேக்டரியிலேயே அமைக்கப்பட்டும் குடும்பமாய் ஜாலியாய் ..... கடைசியில் சுபம்.