September 2, 2011

ஸெர்யோஷா என்றொரு சிறுவன்

கள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்கும் ஸெர்யோஷா என்கிற சிறுவனுக்கும் முகிழ்கின்ற சிறு நேசத்தின் வாசம் இக்கதை எங்கும் வீசி நிற்கிறது.ஸெர்யோஷாவின் வாழ்வில் சிறிய மகிழ்ச்சிகளும் உண்டு. வாட்டும் கேள்விகளும் உண்டு. வாசிப்பவரை சில நேரம் குழந்தையாக்கி மகிழவைக்கிறார் வேரா பனோவா. சில நேரம் ஏக்கத்தில் திண்டாடவைக்கிறார். நீங்கள் மீண்டுமொருமுறை குழந்தையாக வாழ்ந்து பார்க்க நேரிடலாம்.

 அறிமுகக்காட்சியிலேயே “பெரியவர்கள் சூனியக்காரியைப் பற்றி கதைகள் படித்துவிட்டு அதே மூச்சில் “ ஸெர்யோஷா , சூனியக்காரிகள் உண்மையில் இருப்பதில்லை “ என்று சொன்னால் பொதுவாக இந்த புத்தகங்களை நம்புவது எப்படியாம்? “ என்று உள்ளுக்குள் பெரிய சிந்தனையாளனாகத்தான் நமக்கு அறிமுகமாகிறான்.

 ஸெர்யோஷா நேர்மையான கீழ்படிதலுள்ள எளிமையான சிறுவன். பெற்றோராக இருந்தால் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவராக இருக்க விருப்பமுண்டாக்க போதுமான குணங்கள் அவனுக்கு இருக்கிறது. நண்பர்கள் குழுவுடன் ஆனந்தமாக பொழுதைக் கழித்தபடி இருந்தவனைப் பார்த்து , தாய் “ நம் வீட்டில் ஒரு அப்பா இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது ‘ என்று சொல்லும்போது அவனுக்கு அப்படி தோன்றவில்லையெனினும் அம்மாவுக்கு அப்படி தோன்றுகிறது என்றால் நாம் அதை ஆமோதிப்பது நல்லது என்ற தெளிவு இருக்கிறது.

 அவனால் சரியாக எண்ணங்களை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் குழந்தையின் மன அலைகளை நாம் அறிவது எவ்வாறு? பொதுவாகவே பலரும் மரத்தை நறுக்கி நறுக்கி போன்சாய் செய்வது போல குழந்தைகளை சொல்பேச்சு கேட்க வைப்பதில் கவனமாயிருந்துவிடுவதுண்டு. தன் வளர்ச்சியாக அவர்களின் சிந்தனை போகும் பாதையைப் பற்றி பெரியவர்கள் அறிவதுமில்லை முயல்வதுமில்லை.

அப்பா இல்லாவிட்டால் மோசம் தானே என்று கேட்டுவிட்டபின் தான் அப்பா இருப்பது மோசமா இல்லாதிருப்பது மோசமா என அவன் சீர்தூக்கிப்பார்க்கிறான். போரில் இறந்துபோன அப்பாவின் புகைப்படத்தினை மட்டும் பார்த்து அவனால் அன்பு கொள்ளமுடியவில்லை. எப்படியும் நமக்கு நன்மை செய்பவராய் இருப்பார் என்ற நம்பிக்கையில் புது அப்பாவின் வரவை எதிர்கொள்கிறான்.

குழந்தைகள் நேரடியாகக் கேட்டு தெளிவுபடுத்திகொள்வார்கள். ஒளிவு மறைவில்லை. ’நீ என்னை இடுப்புவாரால் அடிப்பாயா’ என்று புது அப்பாவிடம் நேரடியாகக் கேட்டு தெளிந்து அமைதியுறுகிறான். அது போல தங்களிடம் சொல்வது போல் பெரியவர்கள் செயல்படுகிறார்களா என்று கவனிப்பதில் சமர்த்தர்கள். ஞாயிறு புதியசைக்கிள் வாங்கித்தருவதாக ஒப்புக்கொண்ட பின் அதை நிறைவேத்தி தருகின்ற புது அப்பாவான கொரஸ்தல்யோ நேர்மையானவன் . ஸெர்ன்யோன்ஸாவின் உணர்வுகளை மதிப்பவன் என்ற ரீதியில் அவன் மனதில் இடம்பிடிக்கிறான்.

பெரியவர்கள் தேவையற்ற வார்த்தைகளை கொட்டி இறைப்பதாக உணர்கிறான் ஸெர்யோஷா . தேநீரைக் கொட்டியதற்காக வருத்தப்படும் அவனை தேவையற்ற வார்த்தைகளால் அத்தை அர்ச்சிப்பது போன்றோ ,அம்மா அவன் எல்லாவற்றிற்கும் தயவு செய்து என்று இணைத்து பேசவேண்டும் என்பதற்காக படும் அவஸ்தைகளோ அற்ற கொரஸ்தல்யோ வித்தியாசமானவனாகத் தெரிகிறான்.

மிட்டாய் இருப்பதாக ஏமாற்றி தாளை தருகின்ற பெத்யா மாமாவை முட்டாள் என்று விமர்சித்தது சரியானது என்றும் அவன் ஆட்களை புரிந்துகொள்ளக்கூடிய அறிவாளி என்றும் கொரஸ்தல்யோ சொல்கிறபோது நன்றியுடையவனாகிப் போகிறான். ’சண்டைக்குப் போவாய் அப்போது காயங்களை கண்டு அழுது நிற்பாயோ பையனே’ என்கிற போது நெஞ்சு நிமிர்த்தி வீரனாகிறான். கொரஸ்தல்யோவின் வார்த்தைகள் ஒவ்வொன்றாலும் அவன் உருக்கொண்டுவந்தான்.

கொள்ளுப்பாட்டியின் இறுதிச்சடங்கில் “ வழியனுப்ப வந்தாயா உனக்கு என்ன அவள் மேல் பிரியமா ?”என்று கேட்கும் தோஸ்யா அத்தைக்கு .. ”பிரியமில்லை” என்று தானே சொல்வான். இனி அவள் இல்லாத வீட்டில் அவன் விருந்துண்ணப் போனால் மிரட்டவோ குற்றம் கண்டுபிடிக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள் என்பதில் அவன் எளிய உள்ளம் அமைதியுறுகிறது. எல்லாரும் இறப்பார்கள் என்றாலும் நீ இறக்கமாட்டாய் என்று சொல்கிற தந்தையை அவன் நம்புகிறான்.

கொரஸ்தல்யோவின் பண்ணைக்கு செல்லும்போது அவன் ஏன் தினமும் அவசரமாக பண்ணைக்கு ப் போகிறான் . அவன்வராவிட்டால் வேலையாட்களுக்கு இன்னின்னது செய்யவேண்டுமென்று எப்படித்தெரியும் என்று உணர்கிறான். பண்ணையாளின் மேல் கோவம் காட்டினாலும் வேலையை விட்டு நீக்காத அவன் செய்கையைக் கண்டு சர்வ வல்லமை மட்டுமல்ல இவன் நல்லவனும் கூட என்று பெருமிதம் கொள்கிறான்.

விண்மீன்களைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் அறிந்துகொண்ட நாட்களில் அவன் சிந்தனை நீள்கிறது. “செவ்வாய்கிரகம் பெரியதாக இருந்து அதில் மனிதர்கள் வசிக்கலாம் என்றால் ம் ஒரு வேளை என்னையே போன்ற பையன் இதே போன்ற சறுக்கு வண்டியுடன் அங்கே இப்போது நின்று கொண்டிருக்கலாம், ஒருவேளை அவன் பெயரும் ஸெர்யோசாவாக இருக்கலாம்’ என்று வியந்து போகும் அச்சிறுவன் இது போன்ற சிந்தனைகளை பகிர்ந்தால் ஏனையோர் கேலி செய்வதுண்டு. ஆனால் கொரஸ்தெல்யோவ் அவனை மதிப்பான். “அதெற்கென்ன நடக்கக்கூடியதுதான்’ என்பான்

மற்றொரு குழந்தையை தாய் பெற்றெடுக்க இருக்கையில் தந்தையிடம் தனக்கு பையன் வேண்டுமென்பது விருப்பமென்றும் பக்கத்துவீட்டு பெண்ணைப்போல தான் அக்குழந்தையை பாதுக்காக்க கடமையானவனாகிப் போவானோ என்றெல்லாம் அவன் சிந்திக்கத்தொடங்குகிறான். எல்லா ஏற்பாடுகளையும் செய்கிற தாயும் தந்தையும் இன்னமும் மருத்துவமனையிலிருந்து குழந்தையை கொண்டுவரத்தாமதப்படுத்துவது தான் ஏனென்று அவனுக்கு புரியவில்லையாம்.

”குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது தெரிந்ததுதான். அவை ஆஸ்பத்திரியில் விலைக்கு வாங்கப்படுகின்றன. ஒருத்தி ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கினாள். எதனாலோ அவள் முழுவதும் ஒரே மாதிரியான குழந்தைகளை வாங்கினாள். ஒரு குழந்தையின் கழுத்தில் மச்சம் இருக்கிரதாம். இன்னொன்றுக்கு மச்சம் கிடையாதாம். இந்த மச்சத்தைக் கொண்டுதான் அவள் குழந்தைகளை அடையாளம் கண்டு கொள்கிறாளாம். ஒரே மாதிரிக் குழந்தைகள் அவளுக்கு எதற்கோ தெரியவில்லை. வெவ்வேறு விதமான குழந்தைகளை வாங்கி இருக்கலாமே “

நண்பன் வாஸ்யாவின் மாமாவைப்போல அனைவரும் பச்சைக்குத்திக்கொள்கையில் தானும் பெரியவன் என்று நிரூபிக்க பச்சைக்குத்திக்கொண்டதில் இருந்து அவனுக்கு உடல்நலமின்றி போகின்றது. படுக்கையும் வீடே கதியாகவும் இருந்த சிறுவனுக்கு சிறைச்சாலையிலிருந்து வருகின்ற வேற்றாள் சுவாரசியத்தையும் கேள்விகளையும் கொண்டுவருகின்றான். அவனிடம் பாஷா அத்தை காட்டுகின்ற வேற்றுமைகள் அவனுக்கு மனிதரிடத்தில் நல்லவன் கெட்டவன் இன்னும் இன்னும் பல வேறுபாடுகள் இருப்பதை குழப்பத்தோடு அறிகிறான். அலமாரித்தட்டில் இருக்கும் இரண்டு வகை சோப்பில் , ரோஜா நிற சோப்புக்கு பதில் பழுப்பு நிற சோப்பால் கைகழுவிக்கொள்ளும் வேற்றாளைப் பார்த்து இப்படி யோசிக்கிறான்.

“ ரோஜா சோப்பினால் கைகழுவிக்கொள்ள வேண்டுமென்று அவனுக்குத் தெரியாதோ அல்லது மேஜை விரிப்பையும் இன்றைய சூப்பையும் போலவே அவனுக்கு ரோஜா சோப்பும் ஆகாதோ தெரியாது. “
சிறைக்கு சென்றவன் கெட்டவன் என்றாகிறது. ஆனால் அவனுக்கு இரக்கம் காட்டுவது எதற்கு என்று குழம்புகிறான். திருடினால் பிடிப்பார்கள் என்று தெரிந்து ஏன் திருடினான். பள்ளியில் புத்தகம் திருடும் சிறுவனுக்கு சிறை கிடையாதென்றால் ஏன் ? அவன் கேள்விக்கு எரிச்சலுறும் அம்மாவிடம் கொரெஸ்தெல்யோவ் பின்பு விளக்குகிறான்.

”அவன் என்ன வேண்டுகிறான் தெரியுமா ? அவனுக்கு ஆமாம் அல்லது இல்லை என்ற பதில் தான் வேண்டும் இடைப்பட்ட பதில் அவனுக்குப் புரிவதில்லை.” குழந்தையின் அனைத்துக் கேள்விக்கும் பதில் தரவேண்டாம் என்று நினைக்கின்ற அம்மாவிற்கு தெரியாமல் தந்தை அவனுக்கு பதிலளிக்கத்தான் செய்கிறார்.

கதை சொல்லக் கேட்ட மாத்திரம் பெரியவர்களுக்கு வந்துவிடுகின்ற வேலையைப்பற்றியும் அவனுக்கு மிக வருத்தமுண்டு. எப்படியோ கதை சொல்ல வராத கொரெஸ்தெல்வைக்கூட ஒத்தாசை செய்து அவன் கதை சொல்லப்பழக்கிவிட்டிருந்தானாம். இத்தனை ஒட்டிப்பழகி அவன் உணர்வாகிப்போன தந்தையையும் தாயையும் அவன் பிரிந்திருக்கவேண்டிய கட்டம் வந்தால் அவனால் தாங்கமுடியுமா. கொரெஸ்தெல்யோவின் வேலைகாரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும்போது இவன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிறிது நாட்கள் அதே ஊரில் அவன் தங்கியிருக்கும் படி சொல்கிறார்கள்.

அன்றிலிருந்து அவன் சிந்திப்பதெல்லாம் தான் நோயாய் இருப்பதால் அவர்களுக்கு அவன் சுமையாகிவிடுவான் என்ற எண்ணம் தான். அன்புக்குரியது எதுவும் சுமையாக இருக்காது என்று சிந்திக்கத்தொடங்கிவிட்டவன் . தந்தையின் விளக்கமெல்லாம் கேட்டபின்னும் தான் தொல்லைக்குள்ளானாலும் அவர்களோடு வாழவே ஆசைப்படுவதை சொல்லத் தெரியவில்லை. அழுவதில்லை என்ற வாக்கிற்கு கட்டுப்பட்டு அவன் அவர்கள் கிளம்பும் நேரம்வரை உள்ளுக்குள் குமைகின்ற பகுதிகள் நெகிழ்ச்சி தருபவை. துயரத்தில் கூனிக்குறுகி அவன் நடக்கையில் “ தயாராகு கிளம்பு ’என்கிற தந்தையின் குரலைக் கேட்டதும் நம்பமுடியாத மகிழ்ச்சியில் அவன் கொரெஸ்த்ல்யோவ் நம்மை நேசிக்கிறான் என்று பெருமிதம் கொள்கிறான்.

கதை முழுதும் சிறுவனின் மனவோட்டங்களாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் அழகுணர்ச்சியிலும் முடிவான மகிழ்ச்சியிலும் வாசிப்பவருக்கு இனிமையானதொரு அனுபவத்தைத் தருகிறார் வேரா பனோவா. இவர் ஸ்டாலின் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆவார். குழந்தையைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதனை பெற்றவர்களுக்காகத்தன் வெரா பனொவா எழுதி இருக்கிறார். வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள். மேம்போக்காக யோசித்தால் மிகச்சாதரணமான விசயத்தைக் கையாண்டது போலத்தெரிந்தாலும் உள்பொதிந்திருக்கும் விசயம் மிக மேன்மையானது. குழந்தைகள் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டது. நாம் அதைத் தாண்டி வந்ததை மறந்து அவர்களை தவறாக கையாள்வதை தவிர்க்க உணர்த்துகிறார் வேரா பனோவா.

புத்தகம் : ஸெர்யோஷா என்றொரு சிறுவன் எழுதியவர்: வேரா பனோவா மொழிபெயர்ப்பு: ஜெபி வெளியீடு ஜெபி அண்ட் கோ. -------------------------------------------------- ஈழநேசன் முல்லை.org ல் சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 01:43 வெளிவந்தது.
-------------------------------------------------------
இக்கதைப்பற்றிய மற்றொரு பதிவு ஷெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும்



 திரைப்படமாகவும் கிடைக்கிறது. யூட்யூப் ல்.. நான் இனிமேல்தான் பார்க்க இருக்கிறேன். இப்போது தான் கண்டுபிடித்தேன்.