எங்கள் வீட்டில் பெரிய பேட்டரி ரெண்டு போடும் வண்ணம் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. நன்றாகவே பாடும். காலையில் மூன்று மதப் பாடல்களோடு விடியும். அதுவும் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ரொம்பவும் பிடிக்கும்.
இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும் அந்த ரேடியோவால் நியுஸ் கேட்பது தடைஆகிறது என்று முடிவெடுத்த அப்பா, ஒரு நாள் ஒரு குட்டி சோனி டேப் ரெக்கார்டருடன் சேர்ந்த ரேடியோ வாங்கி வந்தார்கள். 1200 ரூ.
குட்டியாக ஒல்லியாக கருப்பு கலரில் சும்மா சூப்பராக இருந்தது அந்த சோனி. அப்புறம் ஒரே கொண்டாட்டம் தான். பிடித்த பாடல் களை ரேடியோ விலிருந்து டேப் செய்வது நாங்களே பாடி பதிவு செய்து கேட்பது என்று ஒரே சந்தோஷம். பிள்ளை யார் சதுர்த்தியா பிள்ளையார் பாட்டாக பிடித்து வைத்துப் போடுவார்கள் அப்பா. பொங்கலா தை திருநாள் சினிமா பாட்டாக
சேர்த்து போடுவார்கள். எங்களிஷ்டம் ஆகிவிட்டது.

ஆரம்பக் காலத்தில் சின்னச் சின்ன தவறு நேர்ந்து வந்தது . சேர்ந்தார்ப் போல் ப்ளே பட்டனையும் அழிக்கும் பட்டனையும் அமுத்தி இருப்பார்கள் யாராவது . ஒரு முறை என் ஆச்சி "கொழுக்கட்டை அதிகம் தின்னைநாக்கி அப்புறம்" அப்படின்னு சொன்னது கூட பதிவாகிடுச்சு. எப்ப பிள்ளையார் சதுர்த்தி வந்தாலும் பிள்ளளயார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாட்டிற்கு இடையில் ஆச்சி குரலும் அந்த வார்த்தையும் ஒரே சிரிப்பு தான்.
நாங்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை எல்லாம் பிடித்து வைத்து இப்போது கேட்டாலும் சிரிப்பு தான். வேரென்ன அசோகர் மரங்களை நட்டார் தான். சிலோன் ரேடியோ நல்ல நல்ல பாட்டா போடுவாங்க. ஆனா என்ன ஒரு பாட்டோட ஆரம்பம் போட்டுட்டு நடுவில் வந்து அவங்க கொஞ்சம் வர்ணனை சொல்லிட்டு ப் போவாங்க ...பதிவு பண்ண சிரமமா இருக்கும்.
அப்படியும் பழய பாடல் , ஹிந்திப் பாடல் களை அதிலிருந்து பதிவு செய்திடுவேன்.
கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். ரேடியோவில் ஒரு முறை ராமாயணம் நாடக விழாவில் போட்டார்கள் அப்பா அதைப் பூராவும் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.
எத்தனையோ இரவில் பாட்டு கேட்டபடி தூங்கிப் போயிருப்பேன் அனைக்க மறந்து , அப்பா வந்து அனைத்து , மேலே எடுத்து வைத்திருப்பார்கள். வீட்டில் அம்மா அப்பா இல்லையென்றால் ஊருக்கே கேட்கும்படி பாட்டை அலறவிட்டு கேட்போம். ஆமா அந்த குட்டி ஸ்பீக்கரில் கேட்டதுக்கே அப்போ அப்படி சொன்னாங்க இன்னைக்கு இருக்கும் ஸ்டீரியோ செட்டில் என் பிள்ளைங்க க்ரேஸிக்கியாரே அலறி அடிக்கறத கேட்டா என்ன சொல்லுவாங்களோ.
டீவி வாங்கியும் அந்த க்ரேஸ் போகல . டி.வி. ல அப்போல்லாம் etc ன்னு நினைக்கிறேன் . ஹிந்திப் பாட்டா போடுவான். சின்ன சோனிக்கு கூடுதல் இணைப்பெல்லாம் குடுத்து டி.வி. ஸ்பீக்கர் பக்கத்தில் வைத்துப் பாட்டைப் பிடிப்பேன். இன்று பெரிய செட் வாங்கி வைத்திருந்தாலும் அதன் துல்லியமெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இடம் விட்டு இடம் நகர்த்த முடியாதது தான் எனக்கு பிடிக்கவில்லை. வாங்கும் போது கூட வந்த மாமானார் என் கிட்ட அந்த காலத்துல 1500 ரூ வாக்மேன் வாங்க உண்ணாவிரதம் இருந்தான் இன்னைக்கு 17,000 போட்டு வாங்கறான் என்று சந்தோஷப்பட்டது தனிக்கதை.
எனக்கென்று ஒன்று சின்னதாக கேட்டு வாங்கிக் கொண்டேன்.
சமையல் அறையோ , மற்ற வேலையோ பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும். ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது.