April 3, 2009

எனக்குள் ஒளிந்திருக்கும் உன் தோழி்

அழியாதகோலங்கள் தொடர்பதிவுக்காக என் வானம் அமுதாவின் அழைப்பின் பேரில் மீனாளுக்கு ஒரு கடிதம்..

மீனா எப்படி இருக்கேடீ?

பத்துவருசம் ஆகப்போகுது நாம பார்த்துக்கிட்டு.. இன்னும் பூனா தானா? உன் பசங்க எப்படி இருக்காங்க? அப்பா வீட்டுக்கு நீ வருவதே இல்லையா? நானாக உன் அப்பாவிடம் வாங்கிய நம்பரில் ஒரு முறை போன் செய்தேன் . ஆனால் அது தவறான நம்பர் என்று வந்து விட்டது. முன்னைப்போலவா பொறுப்பு அதிகமாகிவிட்டது. அம்மாவீட்டுக்கு வரும்போதும் அரக்கபரக்க வெந்நீரைக் காலில் ஊற்றிக்கொண்டு விசேசங்களுக்கு வந்தோமோ போனோமா என்று நானும் கிளம்பிவிடுகிறேன். உன் வீட்டில் அண்ணியைப்பார்த்துக்கேட்கலாம் என்று தான் நினைப்பேன். ஆனால் எப்படியோ தடையாகிவிடுகிறது.

நானாகத்தான் ஊருக்கு வந்தால் போனைப்போட்டு ஒவ்வொருவராக விசாரிப்பேன். அக்கம்பக்கத்தில் கட்டிக்கொடுத்த நம் தோழிகள் கூட ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லையாமடி.. பின்ன நம்மைச்சொல்லி என்ன செய்ய? நான் இந்தியாவின் கோடியிலிருந்து வந்தால் இங்கேயே 10 கிமீ தூரத்தில் இருப்பவளைப்பத்தி என்னிடமே கேட்கிறாள்கள் இவளுகள். ஒவ்வொரு மே மாதமும் கூட்டமாய் கூடி கல்லூரியின் புளியமரத்தடியில் அரட்டை அடிப்போம் என்று பூண்ட உறுதி முதல் வருடமே நமக்கு முடியவில்லையே?

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பஸ் வந்தால் நம் முன்னே படிக்கட்டு வந்தால் தான் ஏறுவோம் என்று உறுதி எடுத்துகிட்டு அரட்டை அரட்டை என்று நேரம் போக்குவோமே.. என்னதான் அரட்டைன்னாலும் கெமிஸ்ட்ரி ஈக்குவேசனை அதுக்கு உதாரணம் காட்டுவியே..அய்ய்யோய்யோ அப்பல்லாம் நாங்க சிரிச்ச சிரிப்பு இருக்கே.. ஒரு தடம் கருத்தம்மா படம் பாக்கப் போயிட்டு பெண்களைப்பத்தி எத்தனை கவலைப்பட்டோம்.. ஆனா அப்பக்கூட எதோ ஈக்குவேசன் சொன்னியேடி.. :))) பசங்களுக்கு நீயே சொல்லித்தரியா.. நான் கெமிஸ்ட்ரி எல்லாம் மறந்து பல வருடமாகிவிட்டது. இப்போதைக்கு நினைவிலிருப்பது H2O மட்டும் தானடி..

இன்னும் பாவடை சட்டை போடறயா?? பஃப் கை வைத்த பூப்போட்ட பாவடை உன்னை நினைத்தாலே ஞாபகம் வரும்... ஒன்பது தோழிகளும் நவக்கிரகங்களா சுத்தி வந்தோம்.. திசைக்கொன்றாய் பிரிந்து வாழ்கிறோம்.

ஒரு நாள் வழியில் நீயா என்றபடி புவனா வந்தாள் . அவளைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் பேசிக்கொள்ளவில்லை . குழந்தைகளின் சேட்டைகள் , பெருமைகள் அதுவே எங்கள் பேச்சு முழுதும் நிறைந்திருந்தது.

நான் பேசினப்பேச்செல்லாம் நினைவு வச்சிக்கிட்டு என்னைப்பற்றிக் கற்பனை செய்யாதே.. பேச்செல்லாம் தான் பெரிசா இருந்தது ..வாதங்கள் பிரதிவாதங்கள் எல்லாம் பொழுதுபோக்குக்கு பேசியதாகிவிட்டது.அல்லது அதனை நடைமுறைப்படுத்தத் தெரியாத முட்டாளாகிவிட்டேன் நான். சூழ்நிலை கைதியாக நான் ஜாலியா வீட்டில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன்..நான் நாலுபேருக்கு வேலைக்கொடுக்கவும் இல்லை. நான் எங்கேயும் வேலை செய்யவும் இல்லை. என் ஆசையெல்லாவற்றையும் என் மகளிடம் கொட்டி வைத்திருக்கிறேன். அவள் எட்டாத உயரங்களை எட்ட கைகோர்த்து நடக்கிறேன்..ஒருகாலத்தில் எனக்கென்ற வட்டங்களோடு சுற்றியவள் தான்.. இன்று பிள்ளைகளின் நட்பு வட்டத்து பெற்றோர்கள் என்று சுருக்கிக்கொண்டு இருக்கிறேன். குழந்தைகள் எங்கே ஆனந்தமாய் இருக்கிறார்களோ அதுவே என் உலகமாகிப்போனது.
எப்போதாவது யாருமில்லாமல் தனித்து நடந்தால் எதையோ மறந்து விட்டுவிட்டு நடப்பதாக மனசு பரபரக்கும். விரல்கள் பற்ற மகன் வரவில்லையோ சரி சரி என்று சமாதானப்படுத்திக்கொள்வேன்.


ஒரு முறை நாம் அன்றிருந்ததுபோல நம்மை மறந்து பேசி சிரித்து யாரேனும் திரும்பித் திட்டினால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. அட தமிழ்மொழியில் சேர்ந்தாற்போல இரண்டு நிமிடம் அரட்டை அடிக்க முடியவில்லையடி ... எதோ புரியாத மொழியில் உங்களுக்குள் பேசுகிறீர்களே என்று மகளின் இன்னோரு ஹிந்திக்காரத்தோழியின் அம்மா சண்டைக்கு வருகிறார்கள். எட்டிநடைபோட்ட கால்கள் இன்று என் மகனின் வேகத்துக்கே மட்டுப்பட்டுவிட்டது .. அவன் அம்மாவுக்கு வயதாகிறது. மனதுக்கு வயதாகவில்லை. அது மீனாளோடு கதையடித்த காலத்திலேயே தான் இருக்கிறது. உன் மகன்களையும் என் மகனையும் விளையாடவிட்டுவிட்டு நாம் சிரித்திருக்கலாம்.பேராசை என்று மட்டும் சொல்லாதே..!!அம்மாவாகிய என்னுள் ஒளிந்து இருக்கும் உன் தோழியைக் கண்டுபிடிக்கவேணும் வாயேன்..
உன் தோழி கவிதா

கவிதாவாக மாறி கடிதமெழுத அழைப்பது கோமா

மிஸஸ் தேவ்