புரோட்டா வாங்கிக்குடுத்து புரணி கேட்பவர்கள் மத்தியில் புரணி பேசப்போன இடத்தில் புரோட்டா செய்வதற்கான பக்குவம் கேட்டு வரும் அளவு பக்குவமானவள் நான். பொள்ளாச்சியில் இரண்டு வாரம் இருந்தாலும் கடைசி ரெண்டு நாளில் பக்கத்து வீட்டுல இருந்து வந்த ரெண்டே ரெண்டு பரோட்டாவுக்கு நாங்க எல்லாருமா அடிச்சிக்கிட்டதுக்கப்பறம் எங்களுக்கும் செய்ய சொல்லித்தரனும்ன்னு கேட்டுகிட்டோம். பக்கத்துவீட்டு அம்மணி நீங்க தில்லிலேர்ந்து வந்திருக்கீங்க கொஞ்சம் சப்ஜி சொல்லித்தாங்கன்னு கேட்டாங்க..அவங்களுக்கு சன்னா ,பாலக் எல்லாம் தெரிஞ்சுது வேற எதாச்சும்ன்னு இழுத்தாங்க.. தில்லி என்னங்க தில்லி எல்லா சப்ஜிக்கும் ஒரே ஸ்டார்ட்டிங்க் தான்னு சொல்லி ஸ்டார்ட் செய்தேன்..
வெங்காயம், தக்காளி,இஞ்சி ,பூண்டு தான் அடிப்படை . இதுகூட உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வச்சிக்கிட்டே எந்த சப்ஜியோடும் கூட்டு போட்டுக்கிட்டு எல்லா மேஜிக்கும் காட்டலாம். ஒரு ரெசிப்பி சொல்லிட்டு மத்ததெல்லாம் அதே தான் அடிப்படைன்னு மேலே
ட்ரை சப்ஜிக்கு போயிட்டேன். உருளை + முட்டைக்கோஸ், உருளை + முள்ளங்கி , உருளை + வெண்டைக்காய் உருளை + மட்டர் எக்ஸட்ரா எகஸட்ரா.. நோட்ஸ் எடுத்துக்கலாம்ன்னு நினைச்சது வீண் தானோன்னும் நான் தான் என் வீட்டுல சமைப்பனா இல்லையான்னும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல..
( யாரு அது பரோட்டா கதையில் பரோட்டாவைக் காணோம்ன்னு தேடறது? இங்கல்லாம் நல்லா கேள்வி கேளுங்க.. காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க)
கடைசியா என்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துல நானே நேரா அவங்க அடுக்களை களத்தில் புகுந்து என்னோட ஸ்பெஷல் சப்ஜியை செய்துக் காமிக்கிறதா ஒப்புக்கிட்டேன். வெங்காயம் , உருளைக்கிழங்கு, கத்திரிக்காய்,வெண்டைக்காய் , குடமிளகாய் , தக்காளி எல்லாத்தையும் வெட்டி வச்சிட்டு கூப்பிடுங்கன்னு சொல்லிட்டேன். அன்னைக்குன்னு பாத்து அவங்கவீட்டுக்கு சில நண்பர்கள் வந்திருந்தாங்க.. அவங்க மனைவிகளும் இதெல்லாம் சேத்து ஒரு காய் கேள்விபட்டதே இல்லைன்னு அடுக்களைக்குள்ள புகுந்துட்டாங்க..
நான் எழுதின வரிசை முறையாகவே காய்களை போட்டு வதக்கி மசாலாத்தூள் போட்டு மூடிமூடி வச்சு செய்தா கடைசியில் வர்ர வாசனையை வைத்து “ அம்மா என்ன செய்யறீங்கன்னு” வெளியே விளையாண்டுகிட்டிருந்த என் மகள் வந்தப்பதான் எல்லாருக்கும் அதோட மாயம் புரிந்தது. வித் எண்ணெய் விடாத ரொட்டியும் சொல்லிக்குடுத்ததில் அவங்க எல்லாரும் எனக்கும் சமையல் தெரியுமென்று ஒத்துக்கிட்டு பரோட்டா ரகசியத்தை சொல்லித்தர சம்மதிச்சாங்க..
பரோட்டாக்கு அரைக்கிலோ மாவுக்கு கொஞ்சம் உப்பு ஒரு ஸ்பூன் ஜீனி சேத்து கொஞ்சம் கொஞ்சமா மாவு பிசைஞ்சாங்க ( நான் பாத்துட்டிருந்தேன்) என் பையன் ஒரு உருண்டை மாவை அவங்க சொன்னமாதிரியே பிசைந்து செயல்முறை வகுப்பெடுத்துக்கிட்டான். மாவு பிசைஞ்சு முடிச்சதும் 'U' வடிவத்துல உருளையாக செய்துவச்சிட்டாங்க. ஒரு கிண்ணத்துல நல்லெண்ணெயில் 3 ஸ்பூன் அரிசிமாவைக் கொட்டி அதை நல்லா கோழிக்கு மஞ்சள் தடவுறமாதிரி தடவி மூடிவச்சுட்டாங்க. காலையில் ஊறவச்சா ராத்திரிக்கும் ராத்திரி ஊறவச்சா காலைக்கும் அதை பரோட்டாவாக்கலாமாம்.
(மேற்கொண்டு கதைக்கு போறதுக்கு முன்னால்: இதைக் கத்துக்கிட்டு வந்து சிலமாதங்களான பின்னும் யாருக்காக கத்துக்கிட்டு வந்தனோ அவங்களுக்கு செய்து தரவே இல்லை. நேற்று தான் அதுக்கான நேரம் வந்தது.)
உருண்டைகளா செய்து அதை நீட்டமான பலகையில் போட்டு எண்ணைய்+ அரிசிமாவுக் கலவையை தடவித் தடவி நீட்டி நீட்டி கிழிஞ்ச பனியன் மாதிரி செய்திடனும்.எங்க வீட்டுல பலகை இல்லாததால் அடுக்களை க்ரானைட் மேடையையே நல்லா சுத்தம் செய்து பனியனை கிழித்தோம்.(மகள், ”அப்பா இங்க வந்து பாருங்க கிழிஞ்ச பனியன்”னு எதுக்கு கூப்பிட்டு காட்டினா??!!..பரோட்டாவுக்காக அவ என் கட்சியில் சேர்ந்திட்டான்னு உதவிகள் செய்ததிலிருந்தும் இதிலிருந்து புரிஞ்சுது :) ) ஒருமுனையைப் பிடிச்சு தூக்கி முறுக்கு சுத்தறாப்பல சுத்தி வட்டமாக்கி வச்சிட்டோம்.
எல்லா முறுக்கும் சுத்தினப்பறம் அதை லேசா அழுத்தாம சின்னச் சின்ன பரோட்டாவாக்கி சுட்டு எடுத்தாச்சு. ரெண்டு பரோட்டா சுட்டதும் அழுத்தி பிடிச்சு மேலும் கீழுமா இழுத்து விட்டாத்தான் லேயர் வருமாம் கை எல்லாம் சிவந்து போச்சு.. உப்புதான் கொஞ்சம் கம்மி ஆனா பரோட்டா சூப்பர்ன்னு பின்னூட்டம் கிடைத்தது. பரோட்டாக்கு குருமாவும் , தயிர்பச்சடியும் செய்யப்பட்டு இருந்தது.எல்லாரும் அதை சாப்பிட்டு.. அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்..................