March 30, 2009

40 நாள் குழந்தைக்கு ஆப்பரேசன்

2005 பிப்ரவரி தில்லி.
குழந்தைங்க டயப்பர் மாத்தறப்ப காலை தூக்கி அப்படி இப்படி ன்னு அவங்களைப்படுத்தினால் கொஞ்சம் பிடிக்காம அழத்தான் செய்வாங்க.. என் மகனும் அப்படித்தான் துணி நாப்கினை மாத்தும் போது அழுவான். ஆனா தொடர்ந்து கொஞ்ச நாளா ( ரெண்டு நாள் அல்லது மூணு நாள்) கூடவே கொஞ்சம் அழறாப்பல இருந்தது.. ஆனா எந்த மாற்றமும் எங்களுக்கு தெரியல.

பின்னால் ஒரு நாள் விடாமல் அழறான் , பூச்சிக்கடிச்சிருக்குமோ , சூ போக முடியலையோ .. நல்லவேளை 38 நாள் ஆன பையன்னு என் அம்மாவும் அப்ப கூட இருக்காங்க.. நாங்க நினைச்ச எதுவுமில்ல.. அவன் அழறதை விடவும் இல்லை..இது வழக்கப்படி இல்லை என்று உணர்ந்து வீட்டில் அணிந்திருக்கும் உடையோடே குளிராடையை உடுத்திக்கொண்டு குழந்தை டாக்டரிடம் ஓடினோம்.

அங்கே கடைசி ஆளாக ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். தனியாள் . கம்பவுண்டரை கேட்டால் காத்திருக்க சொல்கிறார். குழந்தையோ அழுகிறான்.சண்டையிட்டு உள்ளே சென்றால் டாக்டர் பார்த்த அடுத்த விநாடி .. எமர்ஜென்ஸி ..ஆப்பரேசன் தேவை .. நான் எழுதித்தரும் டாக்டரிடம் காட்டுங்கள்.. இந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள்..

ஓட்டமாய் மருத்துவமனை அடைந்தால் .. எமர்ஜென்ஸி வார்டில் , என்ன ஏது அந்த பெட்ல போடுங்க.. நீங்க சொல்கிற டாக்டருக்கு போன் செய்துட்டோம் .. அவங்க காலையில் வருவாங்க.. ஐசியூவில் அட்மிட் செய்துடலாம்..அதுவரை தாய்ப்பால் குடுக்காதீங்க.. குழந்தை அழுவதற்கு தடை செய்ய ஒரு வழியும் செய்யாமல் அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அது அப்படித்தான் அழும்..ஒரு நம்பிக்கை வார்த்தையில்லை..சமாதானமில்லை. எத்தனை பாத்திருக்கோம் என்று நகரும் டாக்டர்கள் இளவயதுக்காரர்கள்..

ஆப்பரேசன் ஆகிய உடம்பு அழக்கூட எனக்கு தெம்பில்லை.. பிப்ரவரி மாதத்துக்கு குளிர் உடலை நடுக்கிறது. அம்மா என்னைவிட உடைந்து அழுகிறார்கள். கணவர் பல சமயம் உடல்நிலைக் கோளாறுகளைக் கண்டால் பதுங்குபவர்கள் அதிசயமாய் தைரியமாய் நடக்கிறார்கள். பணம் கட்டுக்கிறார்கள் .. ஓடுகிறார்கள் பேசுகிறார்கள்..

ஐசியூக்குள் ஒருவர் தான் இருக்கலாம். குழந்தைகளுக்கு என்று தனிப்பிரிவு.உள்ளே நுழைந்ததும் சினிமாவில் வருவது போல உடலெங்கும் ஒயர்களுடன் கருவிகளுடன் சின்னவயசுக்குழந்தைகள்.பதறியது மனம். குழந்தை அழுகிறான். பால் கொடுக்ககூடாது என்ன கொடுமை.நான் வெளியே நிற்கிறேன். கணவர் போன் பேசசென்றிருக்கிறார்கள்.. ஆறுவயது மகள் ஐசியூ இருக்கும் இடத்திற்கு வரக்கூடாது என்று கீழே செக்யூரிட்டிக்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறாள்.அம்மா குழந்தைக்கு அருகில்..அம்மாவும் நானும் மாற்றி மாற்றி குழந்தைக்கு அருகில் நின்று வருகிறோம்.

குழப்பம் குழப்பம்..இது என்ன நிலைமை.. நாம் நம்பி குழந்தையை ஓப்படைக்க ஒரு நல்ல வார்த்தை கேட்டோமில்லையே.. திரும்ப உள்ளே நான் நுழைந்த போது குழந்தை அழுகையை சற்றே நிறுத்தி விசும்புகிறான் .. தெம்பு இல்லை.. இனி அவனுக்கு குளுக்கோஸ் ஏறனும் . அம்மாவிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கி மீண்டும் டாக்டருக்கு போன் ..நீங்க சொன்ன டாக்டர் ஒரு நம்பிக்கையும் குடுக்கவில்லை பார்க்க வரவும் இல்லை. குழந்தையோ அழுகையை நிறுத்திவிட்டான் என்று சொல்லவும் சரி நீங்கள் அழைத்து வாருங்கள்.. நாளை விரும்பும் டாக்டரிடம் காட்டிக்கலாம் ..அழுகை நின்றுவிட்டால் ஆபத்து இல்லை என்கிறார்.

மேலே ஓடினால் ,நர்ஸ் "உங்கள் ரிஸ்கில் எடுத்து செல்வதாக கையெழுத்து இடுங்கள்" என்றாள். சரி உன்கையில் குழந்தையை குடுக்க நான் அதையே செய்வேன் என்று கையெழுத்திட்டேன். "கட்டிய காசு 20,000 பிறகு தான் கிடைக்கும்" என்றாள்.. "நன்றி" என்று ஓடியே வந்துவிட்டோம்.

மறுநாள் அவன் பிறந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு ஆப்பரேசன் செய்யும் டாக்டரிடம் பேசினோம். அவர் எங்களுக்கு சொன்ன அளவுக்கு இல்லையெனிலும் முதல்மருத்துவமனை டாக்டர் ஒரு வார்த்தையேனும் நான் இருக்கேன் என்று சொல்லி இருந்தாள் அன்றைக்கு அங்கே ஓடிவந்திருக்கமாட்டோம்..

இன்ன இன்ன காரணம்.
குழந்தைகளுக்கு வரும் இங்வைனல் ஹெர்னியா என்பது எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு உபாதை ஆனாலும், பெரும்பாலும் பிறந்த குழந்தையிலிருந்து, 1 வயது குழந்தை வரை வரலாம்
நல்ல ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளில், 3ல் இருந்து 5 சதவீத குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வரலாம்.குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில், 30% குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வரலாம்.

படங்கள் வரைந்து பாகம் குறித்து.. என்ன என்னவோ எனக்கு இப்ப முழுதாக அதெல்லாம் நினைவில் இல்லை. ..
நான் 14 வயதுக்குள்ளான குழந்தைகளைத்தான் பார்க்கிறேன். குழந்தைக்கு ஜெனரல் அனஸ்தீஸியா தந்து செய்வது என்பதால் யோசித்து சொல்லுங்கள்.. செய்துஆக வேண்டிய கட்டாயம் உண்டு என்றார். நாள் பார்த்து அதற்கு முந்தினநாள் இரவு 8 மணியிலிருந்தே பால்கொடுக்காமல் தூங்கவைத்து காலையில் 9 மணிக்கு வந்தால் ஆப்பரேசன் என்றார்.

இந்த ஹெர்னியாவும் 65 % குழந்தைக்கு வலதும் 25% வருமாம்.. 15 % குழந்தைக்குத்தான் இரண்டுபக்கமும் வருமாம்.. இவனுக்கு இரண்டு பக்கமும் வந்தது.
ஆப்பரேசன் முடிந்தது வெளியே வந்தான் ..மயக்கத்தில்.மயக்கம் தெளிந்தால் அழுவான்.. அவன் நல்லா அழனும்..கதறி அழனும் அப்பத்தான் அவன் முழுதாக மருந்திலிருந்து வெளியே வந்ததாக அர்த்தம்..ஒரு ஸ்பூனில் தண்ணி மட்டும் உதட்டுக்கு பக்கம் பிடிக்கனும்..தானாக அதை நாக்கால் ருசித்தால் தான் பின்னர் தாய்ப்பால் என்றார்.

ஊம் ஊம் என்று தலையாட்டினேன்..கை இத்துனூண்டு அதில் குளுக்கோஸ் ஏத்த இடம் ஏது?மணிக்கட்டில் ஒரு தெர்மக்கோல் அட்டை ஸ்கேல் அளவுக்கு முட்டுக்கொடுத்து இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிகிறான்.அழத்தெம்பில்லாதவனாக அழுகிறான். ஒவ்வொரு முனகிய மெல்லிய விசும்பலுக்கும் எனக்குள் ஓராயிரம் வலிகள் .. நான் அழுகிறேன் . அடக்கமுடியாமல். டாக்டர் உள்ளே நுழைந்தவர் என்னைப்பார்த்த கோபத்தில் கத்துகிறார். என்னப்பா உன் மனைவிக்கு என்ன பையித்தியமா?

அவன் எத்தனை அழறானோ அத்தனை அவளுக்குத்தானே நல்லது சொல்லு லக்ஷ்மியை அழாதேன்னு சொல்லு.. ன்னு கத்தறார்.
நான் வீட்டுக்குக்கூட போகாம காரில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துட்டு திரும்பவும் வந்து நிக்கிறேன் ..இவனுக்காகத்தானே .. அவன் அழட்டும் நல்லா என்கிறார். அழுதான் கதறி அழுதான் தானாக தண்ணீர் குடித்தான். பசித்து பால் குடித்தான். பிழைத்தான்.

அடுத்த திங்கள் வரை நோ குளியல்.. நீங்களாகவே வயிற்றின் இருபுறமும் இருக்கும் ( அருணாக்கொடிகட்டும் இடம்) பிளாஸ்திரியை எடுத்துவிடுங்கள்.. என்னிடம் ப்ரச்சனை இருந்தால் வரலாம். ஆனால் ஒன்றுமிருக்காது. எனக்கு விடைகொடுங்கள் என்றார்.

சாதரண விரலுக்குப்போடும் ப்ளாஸ்திரி தான். பிரித்தால் .. வலது இடது பக்கத்தில் ஒவ்வொன்றும் ஒரு இஞ்ச் இடைவெளி வெட்டுக்கள்..தையலே போட அவசியமில்லாத வயது. ஒருவாரத்தில் தானாக இணைந்து விட்டதாம்.
நினைத்துப்பார்த்தால் எத்தனை பெரிய புயல் அது.. போன பதிவில் அவன் ஒரு செல்லமாக வளர்ந்ததுக்கு இதுவும் காரணமாக இருக்குமோ என்று தோன்றியது பதிவிட்டேன்.. ஹ்ம்.