February 2, 2007

கணவனாக காதலியாக தோழனாக

yentl இது நான் ரசித்த ஒரு படத்தோட பேர். கதாநாயகி எல்லாருக்கும் தெரிஞ்ச பார்பரா. அப்பாகிட்ட யாருக்கும் தெரியாம பாடம் கத்துக்கிற, படிக்கணுங்கிற ஆர்வம் நிறைய இருக்கிற பொண்ணு. அவங்க இருந்தது பொண்ணுங்க படிக்கக் கூடாது இதெல்லாம்ன்னு சொல்லி வச்சிருந்த காலத்துல.
பெரிய பெரிய நைந்து போன எழுத்துக்களை எல்லாம் படித்து அப்பாகிட்ட விளக்கம் கேட்டு நச்சரிக்கும் அன்பு குழந்தையாவே காலத்தை ஓட்டிவிட்டவள். எனக்கு பின்னால் என்ன செய்வே என்று கேட்டு அங்கலாய்க்கும் தந்தைக்கு பதில் சொல்லத்தெரியாமல் படிப்பு ஒன்றையே நினைக்கும் பெண்.
அந்த ஒரே பிடிப்பான தந்தை இறந்தபோது, இனி தனக்கு படிப்புதான் எல்லாம் என்று ஆண் வேடமிட்டு ஊரைவிட்டு புறப்படுகிறாள்.வேடம் போடும் போது யாரும் நம்மை நம்புவார்களா என்ற எண்ணம் இருந்தாலும் , வேறு வழியில்லை...படிக்க வேண்டுமானால் ஆணாய் இருந்தால் தான் படிக்க முடியும் என்று முடிவெடுக்கிறாள்.
கல்லூரியில் கிடைக்கும் நண்பனுக்கு ஒரு இனிய தோழனையாய் மாறி கல்வியுடன் நட்பும் கிடைக்க மகிழ்ந்திருக்கிறாள். அவன் மேல் ஏற்படும் அன்பினைக்கூட படிப்பிற்காக அவள் புறந்தள்ளி விட்டுவிடுகிறாள்.
கதாநாயகனுக்கும் தோழனை பிரிந்தே இருக்கமுடியாத
அன்பு .
இடையில் கதாநாயகனுக்கு ஒரு பெண்ணை மணமுடிக்க ஆசையேற்படுகிறது.ஆனால் அவர்கள் மதக்காரணங்களால் அவன் மணக்க முடியாமல் ஆகிறது.
அப்போது அவன் தோழனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான். நீ அவளை மணந்து பின் பிரிந்து விட்டால் நாங்கள் மணந்து கொள்ள தடையிருக்காது.( என்ன வழக்கமோ) ...ஆனால் மறுத்தால் நட்பினை விலக்கிவிடுவானோ என்று yentl அந்தப் பெண்ணை ஆணாக இருந்து மணந்து கொள்கிறாள்.
சிறிது சிறிதாக தன்னை மணந்தவரிடம் அந்த பெண்ணும் ,எத்தனை தன்மையாக இருக்கிறார்..பெண்ணை படிக்க சொல்கிறாரே எத்தனை நல்லவர் என்று மனமாற்றம் கொள்வதை மென்மையான காட்சிகளில் காட்டுகிறார்கள். பிரியும் கட்டத்தில்" நீங்கள் வரும்முன் நான் நீங்கள் சொன்னது போல் படித்து உங்களுக்கு பிடித்தமான மனைவியாக மாறி இருப்பேன்" என்று yentl லிடம் சொல்லும்போது இவ்வளவு அன்பாக இருக்கிறாளே என்று வருந்தும் காட்சியும் அருமையாக இருக்கிறது.



தோழனிடம் அவள் என்னை விரும்பத் தொடங்குகிறாள் என்று தெரிகிறது என்னால் மேலும் நடிக்க இயலாது என்று சொல்லி yentl பிரிகிறாள். அப்போது நான் ஒரு பெண் , உன் மேல் எனக்கும் அன்பிருந்தது என்று சொல்லி ,அவர்கள் திருமணம் புரிந்து நன்றாக இருப்பதையே தான் விரும்புவதாக கூறி விடை பெறுகிறாள்.
ஒரே பெண் கணவனாக, தோழனாக ,காதலியாக .
படிப்பின் மேல் இருந்த காதலால் தன் பெண்மையை மறைக்க நேர்ந்ததையும், தன் அன்புக்குரியவனை இழக்க நேர்ந்ததையும் அவள் தனிமையில் அழுது தீர்க்கிறாள்.
அது என்னமோ உணர்வு பூர்வமான படங்கள் தான் அதிகம் பிடிக்கிறது . இதெல்லாம் ஒரு படமான்னு சிலருக்கு தோணலாம். ஆனா நெகிழ்ச்சியான ,மனதை தொடும் கதையாக எனக்கு பட்டது.பார்த்தது இந்தியாவிற்கு என்று தணிக்கை செய்யபட்ட பதிப்பு.
directed by Barbara stresisand அவங்களே கதாநாயகி பாடி நடித்து இருக்காங்க.papa , can u hear me கேட்க உருக்கும் பாட்டு.

No comments: