February 5, 2007

மதங்களும் நட்புணர்வும்

"புனிதத்தன்மை,தூய்மை, இரக்கம் முதலானவை உலகத்தில் எந்த மதத்தினுடைய தனியுரிமைகள் அல்ல. ஒவ்வொரு மதமும் மிகவுயர்ந்த பண்பார்ந்த ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்துள்ளது."
என்றார் விவேகானந்தர்.

பரம்பொருள் ஒன்றேயாகும். பல சமயத்தாரும் பல்வாறு பெயரிட்டழைக்க மாறுபடுதலைப் போலச் சரயு நீர்ப் பெருக்கு முதலில் ஒன்றேயாக இருந்து பிறகு ஏரி, தடாகம் என்று பெயர்களை அடைந்தது என்கிறார் கம்பர்.


"எம்மத நிலையும் நின்னருந் நிலையில்
இயங்குதல் அறிந்தனன் எல்லாஞ்
சம்மத மாக்கிக் கொள்கிறேன் " என்றார் இராமலிங்க சுவாமிகள்.

"ஓர் ஆற்றில் குளிக்கும் துறைகள் பல இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட துறைகளில் ஒன்றாகும். உன்னுடையது உயர்ந்தது மற்றவை தாழ்ந்தவை என்று சொல்லாதே" என்றார்
ஸ்ரீஇராமகிருஷ்ணர்.
படிக்கும் காலத்தில் உயிர்த்தோழி ஒரு முஸ்லீம். நாங்கள் சைவம் . மதியவேளை அவள் மீன் கொண்டுவந்தால் அருகருகேயே அமர்ந்து சாப்பிடுவோம். சிலர் ஓடிவிடுவார்கள்.
அவளை விட்டுவிட்டு சாப்பிட மனமில்லாததால் சேர்ந்தே உண்பது வழக்கம். அவளும் எப்போதாவது தான் கொண்டுவருவாள். எங்களுக்காக அவள் மீன் எடுத்துவருவதைக் குறைத்திருந்தாள். ஒரு நாளும் என் கடவுள் பெரிது என்று நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை. படித்தது கிரிஸ்துவ பள்ளி. சில சமயம் பரிட்சைக்கு முன் அழைத்து ப் போய்
வணங்கும் பழக்கமும் இருந்தது.

ஆனால் அவற்றை விருப்பமுடனே செய்தோம். குடும்பச் சுற்றுலா என்றால் இந்துக் கோயிலின் கூடவே வேளாங்கண்ணியில் சிறிதே மண்டியிட்டு வணங்குதலும், நாகூரில் ஒரு வேண்டுதலுமாக செல்லும் பழக்கம்.

அக்கம் பக்கத்தில் அவரவர் பண்டிகை பலகாரம் பகிர்ந்து கொண்டாடினோம். பொங்கலுக்கு பொங்கல் பானை, கிரிஸ்மஸுக்கு கிர்ஸ்மஸ் தாத்தா வும் கோலத்தில் சிரிக்கும். வெஜ் பிரியாணி தனியே வரும் பாய் வீட்டிலிருந்து.


முன்பே விமலா பற்றிய பதிவில் எழுதிய படி மதத்தில் தீவரமானவர்கள் ஆகிவிட்டால் நட்பு கெடுகிறது .
என் மதம் தவிர வேறெதில் இருப்பவரையும் நான் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்பதோ, அவர் வீட்டு உணவுகளை உண்பது அவர் வீட்டுக்கு செல்வது தவறு ,என் கொள்கை தான் சிறந்தது என்பதோ நல்லிணக்கத்தை கெடுத்து நட்பாக இருந்தவர்களை எதிரியாக்கும் என்பதை கண்முன்னே காட்டுகிறது.

இன்று என் குழந்தைக்கு பள்ளியில் எல்லா மதங்கள் பற்றியும் பண்டிகைகள் பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாம் இந்து மதமா ? ஏன் ? என்று குழந்தை கேட்கும்போது, நம் வீட்டில் தாத்தா பாட்டி அந்த மதம். எனவே நாமும் பின்பற்றி அதுவே ஆனோம். எந்த மதமானாலும் ஒரே கடவுள் தான் . வழி தான் வேறு என்று சொல்லிக்கொடுக்கும் போது இப்படி இருந்துவிட்டால் எங்கே வரும் வெறுப்பு என்று தோன்றும்.

பஹாய் மதம் என்று ஒரு மதம் உள்ளது. அதன் கோயில் தான் தில்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் . அங்கே எந்த மதச் சின்னமும் கிடையாது... ஒரு தியான மண்டபம் போன்ற அமைப்பு... தாமரை போன்ற அந்த கோயிலின் ஒவ்வொரு மடலும் ஒரு மதத்தைக் குறிக்கின்றன. எல்லாம் கடவுளை நோக்கிக் குவிகின்றது. இந்த சிறு முயற்சி தளத்தில் இருக்கும் படம் அந்த லோட்டஸ் டெம்பிள் தான்.

பஹாய் மதக் கோட்பாட்டின் படி 16 வயது வரை குழந்தைகள் தங்கள் தாயோ தந்தையோ சொல்லும் கடவுளை பின்பற்றிக் கொள்ளலாம். பின் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் எந்த ஒரு கடவுளையும் அந்த மதத்தின் வழியையும் பின்பற்றிக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தின் கணவனும் மனைவியும் கூட வேறுவேறான மதத்தவராக இருக்கலாம்.

அனைவரும் கூடும் இரவு உணவு மேடையில் அவரவர் விருப்பமான கடவுளின் ஜெபத்தைக் கூறவேண்டும். ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும்
அன்பு ஒன்றே இணைந்திருக்கச் செய்யும்.

No comments: