July 16, 2007

மீண்டும் படங்களுடன்.....

இந்த பதிவு எழுதிய போது தான் எழுதும் தன்னம்பிக்கையே வந்தது. பின்னூட்டமும் வந்தது. :)

மேம்பாலம் போகலாமா?


எங்க ஊரில் கோயிலையும் சினிமாவையும் விட்டா வேற பொழுதுபோக்கு இல்லை. மேம்பாலம் போகலாமா ன்னு அப்பா கேட்டா குதிச்சுகிட்டு கிளம்பிடுவோம் நானும் தம்பியும். மேம்பாலம் ஊரோட ஆரம்பம். ரயில் பார்க்கறதுன்னா எப்போதும் சின்னவங்க பெரியவங்க எல்லாருக்கும் ஆசை தான்.

இதாங்க அந்தப்பாலம்.


அப்பா ஒரு ரேஸ் சைக்கிள் வச்சிருந்தாங்க. எல்லார் அப்பாவும் ஒரே பச்சை கலரில் சைக்கிள் வச்சிருப்பாங்க. இது வித்தியாசமாக சிகப்பு கலரில் ரொம்ப ஒல்லியா இருக்கும். அதுவே எங்களுக்கு பெருமையா இருக்கும்.முன்னாடி இருக்கர குட்டி சீட்டில் தம்பி, நான் பின்னாடி.

மேம்பாலத்திலிருந்து காட்சி (இந்தமுறை போனபோது எடுத்து வந்தேன் )மேம்பாலம் வந்ததும். நான் மட்டும் இறங்கி பாலத்தின் சுவரினை ஒட்டி போட்டிருக்கும் பாதையில் நடந்து வருவேன். தம்பியை வைத்து அப்பா ஓட்டி கிட்டே மேலே ஏறுவாங்க.மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம்.அந்த கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்.. பெரிய ஏணியில் ஏறி கூண்டை திறந்து விளக்கு ஏத்திட்டு போவார் ஒரு பணியாளர்.


இதான் அந்த கண்ணாடி போட்ட ரூம்.


பாலத்தில் ஒவ்வொருமுறை பேருந்து போகும்போதும் பாலம் அதிரும். அது ஒரு விளையாட்டு போல இருக்கும். அப்படியே, வான சாஸ்திரம் கூட..அங்க பார் இந்த நட்சத்திரம் அது இது எல்லாத்தையும் சேர்த்து பாரு இந்த உருவம் போல தெரியுதா? அத பார்த்தியா அதான் துருவநட்சத்திரம். இப்படியே பேசிக்கொண்டு போழுதுபோக்குவோம். இருட்டும் வரை இருந்து பார்த்து விட்டு வருவோம்.தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது.

இது ஏறி வர பக்கவாட்டில் இருக்கும் ஒரு சறுக்கான , வளைவான பாதை .இதில் செல்வது கூட ஒரு மகிழ்ச்சியான விஷயம்.


இப்போது ஊருக்குப் போகும்போது நான் யாராவது இப்படி குழந்தைகளோடு வந்திருக்கிறார்களா என்று..பாலத்தை கடக்கும் போது பார்ப்பதுண்டு. எங்கே எல்லாம் தான் தொடர்களில் மூழ்கி இருப்பார்களே.


இப்போதும் அப்பா போகிறார்கள். அங்கே அவர்கள் வயதினர் குழு இருக்கிறதாம். தம்பியின் கல்யாண வரவேற்பில் அப்பா சிலரை இவர்கள் என் மேம்பாலம் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.


இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. சில சமயம் குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கும்.முடிந்தவரை பூங்கா, காட்சியகங்கள் என்றும் கோளரங்கம் என்றும் அழைத்து சென்றும் மனதை தேற்றிக் கொள்கிறோம்.

38 comments:

அபி அப்பா said...

இப்ப நான் தான் பர்ஸ்ட்!

அருள் குமார் said...

ஆஹா... பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டீர்களே! நானும் என் நண்பன் சுந்தரமூர்த்தியும் அடிக்கடி வந்து அமர்ந்திருக்கும் பாலம் இது! பல முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச இங்குதான் வருவோம்.

அபி அப்பா said...

ஆமாம் முத்துலெஷ்மி! இந்த பாலம் கட்டிய போது நான் 5ம் வகுப்பு படித்தேன். (அப்போதுதான் காமராஜர் இறந்தார்) ரொம்ப நாள் அழுது அடம்பிடித்து என் சித்தப்பா கூட்டிகிட்டு போனார். பின் அப்படியே அழகப்பா தியேட்டர்ல நான்கு கில்லாடிகள்ன்னு ஒரு படம் கூட்டிகிட்டு போனார். திரும்ப வீட்டுக்கு இரவு 1.00 மணிக்கு வந்தா அப்பா கையில குச்சி வச்சிகிட்டு நிக்கிறாங்க!(சித்தப்பாவை அடிக்க) இப்பவும் நான் அந்த மேம்பலத்தில் ரேஷ் டிரைவிங் போவது உண்டு. அந்த மேம்பாலத்தின் பெயர் "மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி மேம்பாலம்"

பங்காளி... said...

ஏனுங்க...பர்ஸ்டா வந்தா சுண்டல் ஏதும் தர்றீங்களா....ஆளாளுக்கு இப்படி அடிச்சிக்கறாங்க....

ஹி..ஹி...ம்ம்ம்

அப்பால மலரும் நினைவுகளை ரீவைண்ட் பண்ற சுகம் சொல்லி புரியவைக்க முடியாது...அனுபவிக்கனும்....நல்லா வநதிருக்கு லட்சுமி...

துளசி கோபால் said...

//தொலைக்காட்சி இல்லாததால் பல விசயம் பேச நேரம் இருந்தது அப்போது.//

1000% உண்மை

Deepa said...

So true..we have our share of nostalgic moments.. but we not able to give such nistagic moments to our children.. It makes we wonder.. children are loosing their childhood much sooner..all for what ? ? ?

ஜெஸிலா said...

//இன்றைய அவசரயுகத்தில் எங்கே நம்மால் நம் குழந்தைகளுக்கு இப்படி செய்ய முடிகிறது. // உண்மை முத்துலெட்சுமி, கண்டிப்பாக குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால் இந்த காலத்து பசங்களுக்கு போக பிடித்த இடங்கள் மால், பீச், பூங்கா தான் ;-)

முத்துலெட்சுமி said...

ஆமாமா நீங்க தான் பர்ஸ்ட் அபி அப்பா புடிங்க ப்ரைஸ்.கிருஷ்ணாபேலஸ் ன்னாதான் எங்களுக்கு தெரியும் அந்த தியேட்டரை.எம்ஜிஆர் படம் அதுல தான் பாப்போம்..

-----------

அருள் முக்கியமான விஷயம் பேசவா? எப்படி இந்த சினிமால வில்லன் லாம் பேசறதுக்கு பாலத்துல இல்லன்னா கல்குவாரில அப்படியே மழை பெய்ய இரண்டு காரிலிருந்து இறங்கி "டடாங் ன்னு ம்யூசிக்கோட மீட் பண்ணறது மாத்ரியா?

முத்துலெட்சுமி said...

மலரும் நினைவுகள் மனதை
இளமையா வச்சுக்கர மருந்து இல்லயா பங்காளி அதனால தான்..இப்படி

-------

துளசி சேர்ந்து கோயில் போறது டைனிங் டேபிளில் சாப்பிடறதுன்னு எல்லாமே இந்த டிவியால கெட்டுப்போது இல்லயா ? :(

முத்துலெட்சுமி said...

நம்மளோட அனுபவங்களின் அளவிற்கு இல்லன்னாலும் தீபா கொஞ்சமாவது கொடுக்க நினைக்கிறேன் என் குழந்தைகளுக்கு...என் அப்பா சொன்ன கதை அளவுக்கு எனக்குஇல்லை என் அளவுக்கு என் குழந்தைக்கு இல்லை..இதெல்லாம் இந்த நியூக்ளியர் குடும்பங்களால் வந்தது தானெ..

முத்துலெட்சுமி said...

ஆமாமா ஜெஸிலா எதோ நம்மளோட வர நேரத்துல மாலோ பூங்காவோ அந்த இடங்களில் கொஞ்ச நேரம் நாம் குழந்தைகளிடம் பேசக்கிடைக்கிறதே...

அயன் said...

வாங்க அக்கா வாங்க...

நீங்க தமிழ்மணத்துல நட்சத்திரமாகக் கனவு கண்ட நாளும் வந்தது, தமிழ்மணம் உங்களோட எழுத்துக்காக காத்திருந்த நாளும் வந்தது... இது தான் வாழ்க்கை..

உங்க்களுடைய முகப்பு ஓவியமும் சூப்பர். யாரு வரைஞ்சது.

உங்களுடைய பதிவுக்கு வந்தாலே பழைசை எல்லாம் ஞாபகப் படுத்துற மாதிரி எழுதுறீங்க... அதுலயே மூழ்கிப் போய் கமெண்ட் போட மறந்திடறேன்.

சரி இந்த வாரம் பல நல்ல எழுத்துகளுடைய அறிமுகம் கிடைக்கும்னு நம்புறேன். நடத்துங்க...

அருள் குமார் said...

//அருள் முக்கியமான விஷயம் பேசவா? எப்படி இந்த சினிமால வில்லன் லாம் பேசறதுக்கு பாலத்துல இல்லன்னா கல்குவாரில அப்படியே மழை பெய்ய இரண்டு காரிலிருந்து இறங்கி "டடாங் ன்னு ம்யூசிக்கோட மீட் பண்ணறது மாத்ரியா?//

ஏங்க, உங்களுக்கே இது ஓவரா தெரில?! காலேஜ் படிக்கற வயசுல முக்கியமான விஷயம்னா வேறென்ன இருந்துடப்போகுது?! அந்தந்த டைம் நாங்க காதலிச்சிட்டு இருந்தவங்களப்பத்தி உளம் உருகப் பேசுவோம்! :)

முத்துலெட்சுமி said...

வாங்க அயன் , கணவரின் ஆபிஸ் டேல ஒரு பையன் எல்லாரையும் உட்கார வச்சு வரைஞ்சு கொடுத்தான்..

நல்ல எழுத்துக்கள் அறிமுகமா சரி முடிந்த வரை எழுதறேன்..

முத்துலெட்சுமி said...

அருள் எப்படிங்க அது எப்படி ஓவரா இருக்கும், இதான போட்டு வாங்கறது..இல்லன்னா எப்படி இந்த முக்கியமான விஷய்ம் எல்லாம் எங்களுக்குத் தெரியும்.
:)

Anonymous said...

childhood ninaivukal eppothum oru thani sugamthan athilum, neenka childhood la enjoy panneena idathai meendum poy (Delhi ellaam sentalum kooda) athe idathai padam pidithu .. etho maravatha nanti kadan pol... unka father kooda paarunka innum continue panneekondu, frieds, introduction -
baskar

மங்கை said...

நல்லா இருக்குப்பா படங்கள்... இந்த பதிவு மூலமா தான் நீங்க எனக்கு அறிமுகம்...நான் போட்ட முதல் பின்னூட்டம்...

ஜி said...

ithellaam sellaathu sellaathu... star aana udane meel pathivaa??

natchatthira vaazththukkalkka..

(tanglishla padikka romba kastamaa irukuthunnu sonneengalla.. athukkuththaan ;))

வடுவூர் குமார் said...

ஆஹா! மேம்பாலம் என்றவுடன் நீங்கள் படம் இல்லாமல் முதலில் ஒரு பதிவு போட்டது தான் ஞாபகம் வந்தது.மயிலாடுதுறை எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லாத ஊர்.நினைவில் இருந்த வரை 2 தடவை மட்டும் கால் பதித்துள்ளேன்.
முதல் தடவை ஸ்டேசன் பக்கத்தில் பரோட்டா சாப்பிட
இரண்டாவது பெண் பார்க்க போகும் போது.பெண் பக்கத்து ஊர் தாங்க.
அதென்னவோ அந்த ரயில்வே லயனை பார்த்தவுடன் இது மயிலாடுதுறை மாதிரி இருக்கே என்று படத்தை பெரிது பண்ணி நிச்சயித்துக்கொண்டேன்.
அந்த கண்ணாடி அறைக்கு வெளியில் ஒரு ஏணி தொங்கிக்கொண்டு இருக்கே!! இன்றும் அதான் வழியா?
இந்த பக்கம் ஒரு நாள் எல்லோர் கண்ணிலும் படும் மாதிரி ஒரு வேலை செய்துள்ளேன்,முடிந்தவுடன் காண்பிக்கிறேன்.

நிலவு நண்பன் said...

காட்சிகளோடு விளக்கங்கள் நேரில் வந்தது போல இருக்கின்றது... நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் முத்து லட்சுமி.. வந்து கலக்குங்க....

முத்துலெட்சுமி said...

பாஸ்கர் உண்மைதான் திரும்பி போய் அங்க நின்னு படம் எடுக்கும் போது அத்தனை சந்தோஷமா இருந்தது..நன்றி பெயரிட்டு மறுமொழிந்ததற்கு.

------

ஆமாம் மங்கை இதான் நீங்க இன்னும் நிறைய பெரிய பேர் படித்து பின்னூட்டம் போட்ட மனநிறைவைத்தந்த ஒரு பதிவு.

----------
ஜி ஆனாலும் இத்தனை ஆகாது..பிடிக்காதுன்னு சொன்னதற்காகவே தங்கலீஷா ..
ஏன் ஏன் செல்லாதுன்னேன் பழசு படிச்சுட்டு புதுசு படிங்கன்னு தான் அப்படி போட்டேன்.
---------

வடுவூர்குமார் ரொம்ப நாள் ஆச்சே!
இன்று அது உபயோகத்தில் இருக்கான்னு தெரியல..இப்போ எல்லாம் மாய்வரம் போனா இருக்கறது ஒரு வாரம் அதுலயும் அங்க இங்க ன்னு சுத்தரதால ஒன்னும் தெரியல..முதல்லயே தெரியல ஊரைப்பத்தி பாருங்க அபி அப்பா வந்து பாலத்தின் பெயர் சொல்லறாங்க எனக்கு தெரியாது.மேம்பாலம் தான் எனக்கு.

-------
நன்றி நிலவு நண்பன்..இதற்காகவே வண்டியை நிறுத்தி பாலத்தில் படம் எடுத்தேன் இந்த முறை.சிறுமியா ஆனமாத்ரி ஒரு உணர்வு அப்போ.

SurveySan said...

interesting post.

kalakkunga.

கண்மணி said...

மாயவரத்து மலரும் நினைவுகளா?ஜமாய்ங்க

கோபிநாத் said...

மலரும் நினைவுகளா !!!!!

படங்களுடன் உங்கள் நினைவுகளும் சூப்பர் ;)))

பாவம் இந்த காலத்து குழந்தைகள் ;(

முத்துலெட்சுமி said...

நன்றி சர்வேசன் ,கண்மணி , கோபி நாத்
ஆமாம் மலரும் நினைவுகளின் பதிவு மீண்டும் மலரும் நினைவாக மீள்பதிவு.

பொன்ஸ்~~Poorna said...

//அழகப்பா தியேட்டர்ல நான்கு கில்லாடிகள்ன்னு ஒரு படம் கூட்டிகிட்டு போனார். //

அபி அப்பா, நீங்க அபி அப்பாங்கிற முறையில் சித்தப்பான்னு கூப்பிட நினைச்சிகிட்டிருந்தேன்.. இந்தப் படமெல்லாம் தியேட்டரில் ஓடின காலத்தைக் கணக்குப் போட்டா, சின்ன தாத்தான்னு கூப்பிட்டாத்தான் சரிவரும் போலிருக்கே!

முத்துலட்சுமி,
இந்த இடுகையின் 'அருள்' வாக்கு போலவே இன்னும் நிறைய உண்மைகளை இந்த வாரம் வெளிச்சமாக்க கோரிக்கை வைக்கிறேன் ;)

முத்துலெட்சுமி said...

பொன்ஸ் நீங்க புத்திசாலின்னு நினைக்கிறேன்..அதுவும் கணக்கில புலியோ... :)

அருள் வாக்கெல்லாம் தானா வரும் நாம வரவைக்கிறதா என்ன..அதெல்லாம் அந்த பராசக்தி கையில் இருக்கு. :)

PRINCENRSAMA said...

மறக்க முடியாத நினைவுகளை
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
ஆற்று மனலில் அமர்ந்த படி
நீரில் கால் வைத்திருக்கும்
சுகம்!
எடுக்க முடியாமல்
தவிக்கும் மனம்!

PRINCENRSAMA said...

என்ன பொன்ஸ் அக்கா! 1975-ல அபி அப்பாவுக்கு பிறந்த 5-ஆவது படிச்சாருன்னா அப்ப 10 வயசு. அப்ப, 1965-ல பிறந்திருப்பாரு!

42- வயசு தானே ஆகுது!

ஆயில்யன் said...

யக்கோவ்..!நம்மூரு
பெரிய கோவில,நான்கு கோவிலில் ஏதேனும் ஒண்ண இந்த வாரம் தரிசிக்கலாமா.?

சுதர்சன்.கோபால் said...

படங்கள் நல்லா இருக்கு...

காட்டாறு said...

யக்கோவ்.... லேட்டா வந்துட்டேன். ஆனா மிஸ் பண்ணலையே.... நட்சத்திர வாழ்த்துக்கள்! ஊருக்கு போய்ட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க போல. மத்த எல்லா பதிவுகளையும் வாசிச்சிட்டு வர்றேன்.

அபி அப்பா said...

ஆஹா விலாவாரியா என் வயசை ஆரய்ச்சி பண்றாங்களே!!

வல்லிசிம்ஹன் said...

நினைவுகளுக்கும்,படங்களுக்கும் நன்றி முத்துலட்சுமி.

இந்த மாதிரி எளிய அதிசயங்களைக் குழந்தைகள் ஈடுபாட்டுடன் பார்க்குமா என்று கூடத் தெரியவில்லை.அதுவும் நம் ஊர்கள் போலப் பழமை படிந்த நகரங்களை அவர்கள் சிறப்புடன் காக்க வேண்டுமே.பெற்றோர் கையில் பெரிய பொறுப்புதான்.

முத்துலெட்சுமி said...

மறுமொழிக்கு நன்றி PRINCENRSAMA .
அபி அப்பா தான் தன் பதிவுலயே தன் பிறந்த தேதி போட்டுட்டாரே ஏன் கஷ்டப்படனூம்
------
ஆயில்யன் ,நம்ம ஊரைப்பத்தியா..பாக்கறேன் முடியுதான்னு , எனக்கு அத்துப்படி இல்லையே நம்ம ஊரு.

------
சுதர்சன்கோபால் நன்றி.

--------
நன்றீ காட்டாறு வாங்க வாங்க என்ன லேட்டு நீங்கள்ளாம் இப்படி லேட்டா வரலாமா? சரி சரி படிச்சுட்டு வாங்க எல்லாத்தையும்..ரொம்ப நாளா படிக்காதது இருக்கே ..:)

முத்துலெட்சுமி said...

வல்லி ..ம்..முயன்று பார்த்தால் சில சமயம் குழந்தைகளுக்கு அந்த எளிமையான நகரங்களும் பிடிக்கக்கூடும் ஆனால் முயல்வதில் தானே இருக்கிறது விசயம்.

----
அபி அப்பா கவலைப்படாதீங்க எப்படியோ டாக் ஆப் த டவுன் நீங்க தான் ...எப்பவுமே

அருட்பெருங்கோ said...

பால்யங்களை நினைத்துப் பார்த்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம்...
எங்களுக்கு சாலையோரத்தில் இருக்கும் கல்தூண்... அதன் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு நானும் என் அண்ணனும் போகிற பேருந்துகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம்...

முத்துலெட்சுமி said...

உண்மைதான் அருட்பெருங்கோ...இதுமட்டுமில்லாமல் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு சின்ன மேடை இருக்கு அங்கே உட்கார்ந்து வானத்தில் நட்சத்திரங்களின் அமைப்பைப்பற்றி இரவெல்லாம் பேசியிருக்கிறோம் அப்பாவோடு. :)