தில்லியில் அதிகம் பஸ் மற்றும் பொது வண்டிகளில் பயணம் போவதில்லை எனவேதான் இங்கே நடக்கும் சண்டை பற்றி எழுத வில்லை..(இந்த டிஸ்கி முதல்லயே போட்டுவிட்டேன்.)விடுமுறைக்கு வரும் போது ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மூலையில் என்பதால் பஸ்களில் இரயில்களில் பயணிக்கவேண்டிய கட்டாயம்.
மதுரைபஸ் ஸ்டாண்டில் புளியங்குடி பஸ்ஸில் ஏறுவதற்கு பெட்டியெல்லாம் கொண்டு வைத்ததும் கண்டக்டர் இத்தனை லக்கேஜெல்லாம் ஏத்தாதீங்கய்யா நிக்க இடம் இருக்காது என்று வள்ளென்று விழுந்தார்..அய்யா நாங்க யார் காலையும் இடறாமல் எங்க காலுக்கடியில் வைத்துக்கொள்கிறோம் என்றபடி டிரைவருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அத்தனையையும் போட்டுவிட்டு காலைத்தூக்கி அதன் மேல் வைத்து உட்கார்ந்து கொண்டோம்.
கொஞ்ச கொஞ்சமாக கூட்டம் ஏறிக்கொண்டே போனது...டிரைவர் ஏத்தாததைய்யா ஏத்தாதையா என்று பாடிக்கொண்டே வந்தார்..சிலர் இன்ஜின் மேல் கூட உட்கார்ந்து வந்தார்கள். அய்யா வண்டி பழசு கூட்டம் ஏறி அது நின்று போனா எனக்கு தெரியாது என்றார் டிரைவர். பஸ்ஸுக்குள்ள ரெண்டு அக்காங்க பேசிக்கிட்டாங்க..
''ஆமாக்கா அன்னிக்கு மாதிரி நின்னா எங்க போக டெப்போ என்ன இங்கன கிட்டத்துலயா இருக்கு.."
ஆமாக்கா அவர் சொல்றாரு ஆனா நம்ம ஆளுக கேக்கவா செய்யும்"
ஒரு நிறுத்தத்தில் இன் ஜின் சீட் காலியாக அடுத்து ஏறிய அம்மா பக்கத்துல உட்கார்ந்து இருந்த அத்தையை பாத்து அம்மா அப்படி தள்ளி உக்காருங்க என்றதும் அத்தை அம்மா நாங்களே நாலு பேர் மூணு பேர் சீட்டுல அந்தா அங்க போய் உக்காருங்களேன் என்று கண்ணாடிக்கு பக்கத்தில் இருந்த டப்பாவை க்காட்ட அந்த அம்மாவுக்கு கோபம் பொசுக்கென்று ஏறியதில்.
"எங்க இன் ஜின் ல யா உக்கார சொல்லுதிய ___ பழுக்கவா ? ஏன் நீங்க உக்காருறது தானே?"
எனக்கு கோபம் " அம்மா உங்கள யாரும் அதில உக்கார சொல்லல..டப்பா இருக்கே முன்னால் அதுல தான் உக்கார சொன்னாங்க...இத்தனை நேரம் எத்தனையோ பேர் இன் ஜின் மேல கூட உக்காரத்தான் செஞ்சாங்க.."
கொஞ்ச நேரத்தில் அடுத்த ஸ்டாப்பில் இன்னும் ஆள் ... கோபப்பட்டு பேசின அம்மாவை யாரோ தள்ளி விட...
" அக்கா தள்ளாதீங்க இங்கன ஏக்கனவே திட்டராக நீங்க வேற தள்ளாதீக சாஞ்சாலும் திட்டுவாகலோ என்னமோ.."
எங்களத்தான் நக்கலடிக்கிராங்க..
பஸ் ஹாரன் எங்க காதுவலிக்க அடிச்சும் வழி விடாமல் போன பையனை பஸ்ஸை நிறுத்தி "ஏலே என்ன " திட்ட ஆரம்பிக்க அவனும் விடல .....இறங்கி வாய்யா பேசிக்கலாம்"
"டிரைவர்..அண்ணே கோச்சுக்காதீங்க நேரமாச்சு வீட்டுல போய் கஞ்சி குடிக்கணும்" என்று விரட்டும் அக்காவுக்காக டிரைவர் சமாதானாமாகி "இவனையெல்லாம் விடக்கூடாது இறங்கி நாலு சாத்தனும்" என்று கோபமாகவே பஸ்ஸை உறும விட்டார் .....
இன்னொரு நாள் கோவையில் உக்கடத்தில் இறங்கறோம் ...பின்னாடி இறங்கும் ஒரு அம்மா இன்னொருத்தரை "வெரசா இறங்கினா என்ன மத்தவங்க இறங்க வேணாமா " அவ்வளவுதான் " அம்மனீ உனக்கு மேனர்ஸ் இருக்கா ஆ ...இங்க முன்னாடி இறங்கினாத்தான ...அவுங்களை தள்ளிவிட்டுட்டா இறங்க சொல்லுற்ற நீயு"
"'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு" என்று அந்த ஒரு பிடி பிடிக்க சண்டை ஆரம்பித்தது..அவங்க
சண்டை ஆரம்பித்ததும் என் மகள் " அம்மா அதான பார்த்தேன் என்னடா பஸ்ஸுல வந்தோமே ஒன்னும் சண்டையே காணுமேன்னு ..எப்போதும் எல்லாரும் கோபமாவே இருப்பாங்க போல...."
29 comments:
உங்க பொண்ணு கமெண்ட்தான் டாப்.
மீ த ஃபர்ஸ்ட்டா?
'புதுச் சொற்கள்' எல்லாம் பிடிபட்டுருச்சா?
பஸ்ஸுலே காலை வைக்கவும் உடம்பு நடுங்குதப்பா(-:
நான் அந்த கமெண்டுக்காகத்தானே இந்த போஸ்டே போட்டேன்...மத்ததெல்லாம் எல்லாரும் பாத்த பாத்துக்கிட்டு இருக்கற விசயம்தானே ஜி... :)
இல்லியேப்பா காயத்ரி...ஜி முந்திட்டாரே... :(
ஆமாம்துளசி... இதே போல ஊருக்குப்போனா ட்ரெயின்ல் ஏறும்முன்னால கேக்கற முதல் கேள்வி ..அது ரிசர்வ்டா அன்ரிசர்வ்டா தான்...அம்மா இல்லாட்டி தள்ளு தள்ளுன்னு சண்டை போடுவாங்கம்மா ன்னு... :)
ரைட் ரைட் பதிவ படிச்சது போதும். போலாம் ஏப்பா கண்டக்டர் விசில் குடுப்பா...
ஆமா இனிமே எங்காவது பஸ்சில சண்டைபோடணும்னா ஒங்கள கூப்பிடவா?:)))
பாதி பதிவுல விசில் குடுத்துடலயே அகிலன் :)
அகிலன் நான் சண்டையே போடலைப்பா...மத்தவங்க போட்ட சண்டையை பத்தி எழுதி இருக்கேன்...
poNNukku nalla exposure.
paavam. adhukkuk kalavaramaa poyirukkum.
உண்மைதான் வல்லி...சொகுசாவே வளந்தாலும் நல்லதில்ல பாருங்க...
கொஞ்சம் இது மாதிரி லைஃபையும் பாத்துக்கட்டும் அப்பப்ப ...அப்ப கலவரம் வராது இல்ல ..
//"'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு"//
அப்ப இது உங்க டயலாக்இல்லையா?
பின்னாடி இறங்கிட்டிருந்த அம்மா ஒருத்தங்க இன்னொருத்தங்களைன்னு எழுதி இருக்கேனே ..சரி இருங்க வேற யாராச்சும் தப்பா நினைக்கறதுக்குமுன்னாடி எடிட் பண்ணி போடறேன்...வம்பாப்போயிடும்...கோபக்காரி சண்டக்காரின்னு... :)
""'இந்தா வெரசா இறங்க சொன்னா மேனர்ஸ் இல்லயான்னு க்கேக்கற அறிவுருக்கா உனக்கு" "
பர்ஸ் இருக்கு அது இன்னாமே மேனர்ஸ் ரொம்பதான் டகிலுவுடுற! அப்படிதானே சொன்னுச்சு
அந்தம்மா கோவைக்கார தமிழில் பேசிச்சு...நீங்க சொல்றது மதராஸ் தமிழாச்சே ப்பா குசும்பா ...
Road rage ம் இப்பொ ரொம்ப சாதாரணமான விஷயமாயிட்டு வருது.. அது எவ்வளவு பெரிய விஷம்ன்னு இனி வரும் காலங்களிலே தெரிய வரும்... (படிச்சீங்க இல்லே... ஆளையே காலி பண்ணின செய்தி.. )
எல்லாரும் ஜாகிரதையா இருங்கப்பா...
பொதுவாவே தமிழ்நாட்டில் எப்போவுமே கொஞ்சம் மன இறுக்கத்திலேயே வாழ்க்கை நடத்தறாங்கன்னு நினைக்கிறேன். நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கம்மிதானோன்னு தோணும். ம்ம்ம்ம்ம்., நல்ல அனுபவம் தான் உங்களுக்கு.
உண்மைதான் தீபா இங்க டில்லியில் வண்டி இடிச்சிடுச்சின்னு இறங்கினா முதல்ல தப்பு செய்தவன் ஒழுங்கா வந்தவனை பேசறதுக்குமுன்னாலே யே
அடிக்க வந்துடுவான்...பயம் தான் எதையும் பேசறதுக்கு...
வாங்க கீதா.. ம்..நகைச்சுவை உணர்வுக்கும்குறையே இல்லைப்பா...சண்டை நம்ம கூட போடாதவரை அவங்க சண்டையைப்பார்த்து மத்தவங்க சிரிக்கறது நகைச்சுவை உணர்வுனாலே தானே எப்படி...:-))
குழந்தைகளுக்கு இது புதுசு.
சென்னை மா'நரக' பேருந்துகளில் ரெண்டு முறையேனும் ஏறி இறங்கி அனுபவப்படவும். பின் இதெல்லாம் ஜுஜுப்பின்னு புரிந்து கொள்வீர்கள்.
சென்னையாஆஆஆ!! அய்யோ நான் சென்னைக்கு போறதுக்கே யோசிப்பேன்..தமிழ்நாட்டுல எங்கவேணா பஸ்ஸுல போகச்சொல்லுங்க வேறவழி இல்லன்னா என்ன செய்யன்னு போவேன்..ஆனா சென்னையில் சான்ஸே இல்லைப்பா...லக்ஷ்மி
கோவைல நல்ல நகைச்சுவையா இருக்குமே...லக்ஷ்மி சொன்ன மாதிரி.. ஜுஜுபி..:-)))
மங்கை நகைச்சுவைப்பதிவா அதைபோட்டிடுங்க இந்த வாரம்...:)
நாங்க எப்போது பஸ்க்கு முன்னால ஒத்த சீட்டுக்கு பக்கத்துல ஒரு மாநாடு போட்டே போவோம் அந்த காலத்துல அதுனால பஸ்ஸுல நடக்கிறது எதுவ்ம் எங்களுக்கு தெரியாது...எங்க உலகம் தனி..
அக்கா
அது எப்படிக்கா சண்டை நடக்குற இடத்துல எல்லாம் நீங்க இருக்குறிங்க!!! ;-)))
\\\முத்துலெட்சுமி said...
சென்னையாஆஆஆ!! அய்யோ நான் சென்னைக்கு போறதுக்கே யோசிப்பேன்..தமிழ்நாட்டுல எங்கவேணா பஸ்ஸுல போகச்சொல்லுங்க வேறவழி இல்லன்னா என்ன செய்யன்னு போவேன்..ஆனா சென்னையில் சான்ஸே இல்லைப்பா...லக்ஷ்மி \\\
எல்லோரும் ஓடியாங்க நம்ம ஏரியாவை கலாய்ச்சிட்டாங்க...சிக்கீரம் ஓடியாங்க ;-)))
திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி என்று விதம் விதமாக பஸ்களில் - கும்பல் - என்றால் இரண்டு பஸ் தவறவிட்டு நிதானமா போகலாம்னு பாத்தா- இருட்டிடும்'ன்னு பயம் வேற... ஹ்ம்ம். ஒருபக்கம் ஸ்கூல் பை, டிபன் பாக்ஸ், குடை சகிதம்.. மறு பக்கம் 4.50 பஸ்ஸை விட்டுட்டா அடுத்தது 5 மணி பஸ் ரொம்ப ஊர் சுத்தி, செம்பட்டி ( சின்னாளப்பட்டி பிரிவுலே நிக்கறதுக்கு, புது கண்டக்டர்னா' அவருக்கு புதுசா சொல்லணும்... அது வேற உள்ளூர உதறல் - இறங்க வேண்டிய இடத்துலே பஸ் நிக்காம போயிட்டா? அப்படின்னு ஒரு பயம்...!)வீடு போய்ச் சேரும்போது லேட்டாயிடுமே என்று கவலை... 'எனக்கு பஸ் பிடிக்கணும்'னு சொல்லியே பாதி சமயம் சாயங்கால "டிரில்" கிளாஸ் மட்டம்... :-) ( வல்லி, உங்களுக்கும் ஞாபகம் வருமே...?) அப்போ டிரில் கிளாஸ் ஒழுங்கா செஞ்சிருந்தா இப்போ கால் வலி வராம இருந்திருக்குமோ?!
நிறைய கொசுவத்தி பத்த வைச்சுட்டீங்க முத்துலஷ்மி... :-)கோழிகளுடன் கூடைகள், கம்பு கேழ்வரகு மூடைகள் ( அந்தப் பக்கம் எல்லாம் "மூடை" ன்னுதான் சொல்லுவாங்க அப்போ!)காதில் விழும் சம்பாஷணையெல்லாம் படு சுவாரசியம்.... அது என்னமோ சரி... சண்டைக்காரங்களும் லேசுலே விட மாட்டாங்க... உங்க பொண்ணு நல்லாவே கவனிச்சிருக்கா!!
நம்ம ஊர்ல பஸ்ல போகும்போது, சந்தைல, கடைகள்ல கூட்டமா இருக்கிற இடங்கள்ல இதெல்லாம் சகஜம்தாங்க...
அதெல்லாம் ரசிக்க கத்துக்கனும் :)))
சண்டைல நீங்களும் இறங்கியிருந்தா இந்த பதிவு சூடான பதிவில வந்தீருக்கும் இல்லியா! நல்ல வாய்ப்பு போயிடுச்சே! பைக்கிலே சர்வோவை அழச்சுட்டு போகும் போது எப்பவுமே ரோட்டில் ஓரமா பேறவனை கூட "வீட்டுல சொல்லிட்டு வந்தியா"ன்னு கேப்பான். பைக்கிலே போகும் போதல்லாம் இப்படி கேக்காட்டா பைக் ஓடாதுன்னு நெனப்பு அவனுக்கு. அது போல உங்க பொண்ணுக்கு சண்டை இல்லாட்டா அது பஸ் இல்லன்னு நெனப்பு! :-))
//என் மகள் " அம்மா அதான பார்த்தேன் என்னடா பஸ்ஸுல வந்தோமே ஒன்னும் சண்டையே காணுமேன்னு ..எப்போதும் எல்லாரும் கோபமாவே இருப்பாங்க போல...."//
:-)))) என் அக்கா மாதினி ரொம்ப சமத்தா இருக்கா. :-)
கோவை மதுரை சென்னை என்று இல்லை - இந்தியா முழுவதும் இதே நிலை தான். தேவையான அளவுக்கு பேருந்துகள் ஓடாதது முக்கியக் காரணம். கூட்டம் அதிகமிருப்பதால் இயல்பாகவே மக்கள் கோபக்காரர்களாக மாறி விடுகிறார்கள் - என் செய்வது
Post a Comment