பலநேரம் சேனல்களை கடந்து போகும் போது சில நிமிட நேரப்பார்வையிலேயே.. .. அந்த காட்சிகள்
இது நல்ல படம் என்று சொல்லிவிடும்.. ஆரம்பத்தை இன்னொரு நாள் பார்த்துக்கொள்வோம் என்று மனதை சமாதானப்படுத்திவிட்டு பார்க்கத்தொடங்கிவிடுவது வழக்கம்.. அப்படித்தான் அன்று சேனல்களை பின்னுக்கு தள்ளியபடி ரிமோட் போய்க்கொண்டிருக்கும் போது இந்த படம் சிக்கியது..
ஒரு தாத்தா சிறுவன் ஒருவனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மோட்டார் பைக் ரேஸ்க்காரர் .. தன் அந்த வயதிலும் போட்டிஒன்றில் கலந்து கொள்வது பற்றியே கனவு கண்டுஇருக்கிறார். 25 வருடக்கனவு என்று சொல்லிக்கொள்ளும் அவர்.. தன் மோட்டார்சைக்கிளை பேக் செய்தபடி நியூஸிலாந்திலிருந்து கப்பலில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நடைபெறும் போட்டிக்கு கிளம்புகிறார். அவருடைய இண்டியன் மோட்டார்சைக்கிள் என்னும் வண்டி உலகத்திலேயே அதிக பட்ச வேகமான வண்டி என்பது அவருடைய வாதம்.

அனைவரும் அவரை நம்பாத போதும் அந்த சிறுவன் அவரை நீங்கள் ரெக்கார்ட் செய்வீர்கள் நம்புகிறேன் என்று சொல்லி வழியனுப்புகிறான். அமெரிக்காவில் வந்து சேரும் அந்த வயதானவரின் அனுபவங்கள் தான் படத்தின் கதை.
இமிக்க்ரேஷன் பகுதியில் வரிசையில் கவுண்ட்டருக்கு அருகில் செல்ல முயற்சிப்பவரை மஞ்சள் கோட்டுக்கப்பறம் நிக்க சொல்லி மிரட்டுவதில் ஆரம்பிக்கறது அவர் அனுபவம்.. நீங்கள் அமெரிக்க விசா எடுத்தவர் என்றால் புரிந்து கொள்வீர்கள்... வாடகைக்கு டேக்ஸியில் ஏறியவர் வாடகையை கேட்டு நான் காரை விலை பேசவில்லையே என்று பதறுகிறார். :-)
ஹாரன் அடிக்கும் ஒரு காரின் மீது, முன்னால் இருக்கும் கார் வேண்டுமென்றே இடிப்பதைப் பார்த்து பதறும் அவரிடம்.. இப்படிப்பட்ட க்ரேஸி மக்கள் நிறைந்த ஊர் அய்யா நீங்கள் அமைதியா இருங்கள் என்னும் டேக்ஸி ட்ரைவரை விநோதமாக பார்த்தபடி நம்ம ஊர் கிராமத்தான் பட்டணம் வந்ததும் நடிகர்களை பார்க்க விழைவதைப்போல அவரும் ஹாலிவுட்டில் இறங்குகிறார்.
தங்குமிடத்தில் வரவேற்பில் வேலைசெய்யும் ஒரு திருநங்கையின் நட்பின் வழிகாட்டலில் ஒரு காரை பழய விலைக்கு வாங்கிக்கொள்கிறார். அந்த கார்கடைக்காரரிடம் உதவி கேட்டு இரவு நேரத்தில் வெல்டிங் வேலைகள் செய்து தன் மோட்டர் சைக்கிளை காரின் பின் இணைக்க வழி செய்துகொண்டு வரவேற்பாளினியின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை கப்பலிலிருந்து பெற்றுக் கொண்டு போட்டி நடக்கும் ஊருக்கு கிளம்புகிறார்..கார்கடைக்காரர் அவரின் திறமையைக்கண்டு அங்கே யே எப்போது வந்தாலும் வேலை தருவதாகவும் அழைக்கிறார். ஆனால் அவர் மறுக்கிறார்.
வழியில் மோட்டார்சைக்கிளை இழுத்து வரும் சக்கரங்களில் ஒன்று வீணாகப்போனதும் வழியில் ஒரு செவ்விந்தியரின் நட்பு.. வயதான அவர்களின் ப்ரச்சனைகளை பேசி நட்பாகி விடுகிறார்.
பிறகு ஒரு வயதான பெண்ணின் நட்பு ..
வழியில் ஒரு ஆர்மிக்கார இளைஞனின் நட்பு...
வழியில் கார் இல்லீகலாக பார்க் செய்திருக்கிறதே என்று பார்க்கவரும் போலிஸிடம் ஒன்றுமில்லை எனக்கு சின்னதா ஹார்ட் அட்டாக் வந்தது வண்டியில் தூங்கிவிட்டேன் என்று சாதாரணமாக சொல்கிறார்.
போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தபின் தான் அதற்கு ஒரு மாதம் முன்பே பதிவு செய்திருக்க வேண்டுமென்பதும் அவருக்கு தெரியவருகிறது... அவருக்காக சிலர் பேசிப்பார்த்தும் அவருடைய பழைய மோட்டார்சைக்கிளும் அதன் சேப்டி பற்றாக்குறையும் அவருடைய வயதும் என்று மறுப்புக்கு பல காரணங்களை அடுக்குகிறார்கள்..
பாதுகாப்பு அதிகாரிகளை மீறி அவர்
தன் வண்டியின் வேகத்தையும் தன்னுடைய திறமையையும் அவர் ஒரு முறை செய்து காட்டியபின் போட்டியில் அவரை சேர்த்துக்கொள்ளமுடிவெடுக்கிறார்கள்..
அதிக வேகம் செல்லும் போது வண்டி ஆடுவதும்... கால் வைக்கும் பகுதியில் ஏற்படும் அதிக சூடு அவர்காலை பதம் பார்ப்பதும் என்று அவருக்கே தெரியும் சில தவறுகளை சரி செய்ய அவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் சரிவராததால் முயற்சிகளை கைவிட்டு விட்டு முன்பு போலவே போட்டியில் கலந்து கொள்கிறார்.
அவருக்கு ஒரு மாத்திரையும் வண்டிக்கு ஒரு மாத்திரை குடுத்துவிட்டு வண்டியை ஓட்டும்
கடைசி காட்சிகளும் அவர் ரெக்கார்ட் ப்ரேக் செய்வதும் நமக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது.. தொடர்ந்து முயன்றால் எல்லார் கனவும் ஒரு நாள் பலிக்கும் .
இது ஒரு உண்மையான மனிதனின் கதையாம்.. உண்மையான பர்ட் முன்ரோ 178.971 MPH வேகத்தில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்

"தி வேர்ல்ஸ்ட் ஃபாஸ்டஸ் இண்டியன்".. இது தான் படத்தின் பெயர். பர்ட்டாக நடித்தவர் அசாத்தியமான நடிப்பு ..ஆண்டனி காப்கின்ஸ். உறைந்த அந்த ஏரியின் மேல் நிகழும் அந்த போட்டியும் அதனைச்சார்ந்த அவருடைய ஏமாற்றமும் வெற்றியுமான நடிப்பும் அருமையானது..