
சென்ற வருடத்தில் ஒரு முறை தில்லியில் நடைபெறும் ஜென்மாஷ்டமி விழாவினைப்பற்றி பதிவிட்டிருந்தேன். குழந்தைகள் செங்கல் மண் கொண்டு அமைக்கும் சிறு கோயிலுக்காக செங்கல் மற்றும் மணலை அருகில் எங்காவது கட்டிட வேலை நடக்கும் இடத்திலிருந்து எடுத்துவருவது வழக்கமாம்.
போனவருடம் தான் முதன் முதலில் எங்கள் குழந்தைகளும் செய்யத்தொடங்கினார்கள் என்பதால் செங்கல் மட்டுமே ஒருவீட்டிலிருந்து எடுத்து வந்து உபயோகித்தார்கள். செங்கல் சுற்றிவர கட்டம் கட்ட என்பதால் அதனை அப்படியே திரும்ப கொடுத்துவிடலாம். ஆனால் மணலை தரையோடு சமணப்படுத்தி வேலைகள் செய்துவிடுவதால் மீண்டும் அது கட்டிட வேலைக்கு உபயோகமற்றதாக ஆகிவிடும்.
இந்த முறை எங்கள் வீட்டுக்கு பின்புறம் அரசாங்க உதவியோடு கட்டப்படும் வாக்கிங்க் ஏரியாவுக்கான செங்கல்களை எடுத்துக்கொண்டார்கள் . ஜென்மாஷ்டமி முடிந்து நாட்கள் ஆகியும் இன்னமும் யாரும் அதை திரும்ப வைக்கவும் இல்லை. செங்கற்கள் இப்போது கார்களை நிறுத்துவதால் உடைந்து வருகிறது. எப்படியும் அந்த கற்கள் உடைத்துத்தான் பயன்படுத்தப்படும் என்பதால் இப்போது கிடைத்தாலும் அது லாபமே.
மணல் வேண்டாம் என்று அதற்கு பதில் மரத்தின் இலைகளைக் கொண்டு பார்க் மற்றும் ரங்கோலி நிறங்களால் பாதை மற்றும் நதி செய்து கொண்டாடினோம். மற்ற குழுவினர் எங்கெங்கோ கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இருந்து கொஞ்சமல்ல 4 அல்லது 5 மூட்டைகளாக கட்டப்பட்ட மணல்களை ( சிலவற்றில் சிமெண்ட் கூட கலந்து வைக்கப்பட்டிருந்தது) அந்த வீட்டினரிடம் கேட்காமலே கொண்டு வந்து பரப்பி வந்தனர். நான் அவர்களிடம் கேட்கவும் செய்தேன். இல்லை ஆண்ட்டி கேட்கவில்லை என்றே பதிலுரைத்தார்கள். அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை.
எனக்கு இது மிக வருத்தத்தைத் தந்தது. கற்களை அந்த இடத்துக்கு மாற்ற தங்கள் சேமிப்பிலிருந்து ரிக்ஷா வை வரவழைத்துக் கொண்டு வந்து வைக்க முடிந்த அந்த சிறுவர்களால் அதை மீண்டும் கொண்டுவைக்கத்தோன்றவில்லை. மற்றும் மணலை கேட்காமல் எடுத்துவருவது தவறாகத்தோன்றவில்லை.
இந்த வருத்தத்தை என் தோழி ஒருவரிடம் பகிர்ந்து கொண்டபோது , அவர் சொன்னார்,"" இல்லை லெக்ஷ்மி அவர்கள் நிச்சயம் கேட்டாலும் மறுத்திருக்கப்போவதில்லை... "நீங்கள் யோசிப்பது எதற்காக? நாம் நம் வீட்டில் இந்த தினங்களுக்கு சமீபத்தில் கட்டிடவேலைகளை வைக்காமல் இருந்தால் போயிற்று""என்று.. :(
இருக்கலாம் இது வழக்கமானதாக மாறிவிட்டிருக்கலாம். ஆனால் இது குழந்தைகளுக்கு ஒரு கெட்ட எண்ணத்தை விதைக்காதா? நமக்கு தேவையானவற்றை சாமி காரியம் என்பதால் யாரும் மறுப்பதில்லை என்பதால் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறு இல்லையா?
எல்லாரும் செய்வதால் , வழக்கமாகிவிட்டதால் ஒருவிசயம் தவறாக இருந்தாலும் சரியாக ஆகிவிடக்கூடுமா?ஒரு திருடனை ஒருவர் அடித்துக்கொன்றால் குற்றம். கிராமமே சேர்ந்து கொன்றால் குற்றமில்லை என்பது போல தேவையில்லாத எண்ணம் தோன்றுகிறது .
வெளிநாட்டினர்( ஒரு சில )நாட்டை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் முறையாக வெளியிடங்களில் நடந்து கொள்கிறார்கள் என்கிறோம். அதற்கு அடிப்படையில் சிறுகுழந்தையாக இருக்கிற போதிலிருந்தே அவர்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறார்கள்.(பெற்றவர்களின் பொருள் என்றாலே இதை பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கேட்கும் நிலை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ) இந்தகுழந்தைகளுக்கு தவறை சுட்டிக்காட்டாதது பெற்றோர்கள் குற்றம் இல்லையா?