"அவசரம் தான் ..வா..பறந்துகொண்டே பேசலாம்"
நான் இப்போது நியமிக்கப்பட்டிருப்பது ஒரு குழந்தையின் கண்ணீர் தேவதையாக...எட்டு மாதம் நிறைந்த நாளிலிருந்து அவள் அழத்தொடங்கிவிட்டாள. அவள் பெயர் நிலா..
நிலா அழும்போதெல்லாம் ..அவள் அன்னையோ தந்தையோ அணைத்து ஆற்றுவார்கள். அக்கம்பக்கமிருபோரொல்லாம் கூட வந்து கொஞ்சுவார்கள் விளையாடுவார்கள். அந்த இடமே ஆனந்தமயமாய் இருக்கும்.. நிலா சிணுங்கியேனும் ரெண்டு சொட்டு கண்ணீர் வடிப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறாள்..
தலைவியின் அழைப்பிற்க்காக இந்த இரவில் வந்தேன்..ஆதவன் கதிரை விரிக்க ஆரம்பிக்கவும் நிலா அழத்தொடங்கிவிடுவாள்..அதனால் தான் அவசரம்"
நிலா சரியாக இவர்கள் நுழையும்பொழுதில் உடலை வலப்புறமும் இடப்புறமும் நெரித்தாள்.கைகளை தலைக்கு மேல் உயர்த்திக்கொண்டு கண்ணை சுருக்கிக்கொண்டு கால் களை உதைத்தாள்.. சிணுங்கத்தொடங்கினாள்..தேவதை அவள் தலையை தடவிக்கொடுத்தாள்.. கண்களிலிருந்து சிறிதே கண்ணீர் துளிகள் விழுந்தன.
"தலைவியின் அழைப்பு எதற்கோ? என்னைப்போன்றவர்களை எங்கும் நியமிக்காமல் இருப்பதற்கு எதுவும் காரணம் உண்டா? நீ அறிந்த செய்திகள் என்ன?"
தலைவி மிகக்கவலையாக இருந்தாள்.உலகமெங்கும் யுத்தங்களும் கொடிய நிகழ்வுகளுமாய் கண்ணீருக்கான காரணிகள் நிரம்பி இருந்தாலும் உங்களுக்கெல்லாம் வேலையளிக்க இயலாதவளாக அவள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றனவாம்.
யுத்தக்களங்களில் கண்ணீருக்கு வேலையில்லை.
அழுதழுது ஓய்ந்துவிட்ட கண்களில் கண்ணீருக்கு சக்தி இல்லை.
விட்ட கண்ணீருக்கு விலை இல்லை.
ஆற்றுவிக்க ஒரு ஆளில்லை
விரக்தியின் எல்லையில் அவர்கள் கண்ணீர் தேவதைகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கி வருகிறார்கள். ஒரு சொட்டு கண்ணீர் விடவும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. கருணையில்லாத மனங்களுக்கு முன் மதிப்பிழந்து நிற்கிறது கண்ணீர்.
குருதியே சில நேரம் கண்ணீர் வடிவத்தில் விழச்செய்து கொள்வோம் .. நீங்கள் எதற்கு என்று விரட்டப்பட்ட தேவதைகள் மனம் வெதும்பி இறைவனிடம் முறையிடபோயிருக்கிறார்களாம்.
எங்கே தன் கண்ணீரும் வற்றிவிடுமோ என்ற பயத்தில் தான் தலைவி என்னைப்போன்ற கண்ணீர் தேவதைகளை அழைத்து குழந்தைகளின் சின்ன அழுகைக்கதைகளையும் அதை ஆற்ற வரும் அன்பின் நெகிழ்ச்சியான இன்பக்கதைகளையும் கேட்டும் கண்களில் சில சொட்டு கண்ணீர் விட முயல்கிறாள் .
ஒருக்களித்த கதவிற்கு வெளியே .. "அடி என் தங்கமே! அழாதே ! இந்தா அம்மா வரேண்டி கண்ணு! உன்னை தூக்கிக்குவேனாம்.... " - நிலாவின் அம்மா வருகிறாள் பார்.
என் செல்லப்பொண்ணுக்கு என்னவேணும் .. அம்மா இருக்கேன் .. இந்தா பாரு அப்பா அப்பா.. இருக்காங்க.. எதுக்கு அழணும் நீ ... ஹ்ம்..
உலகின் ஒரு மூலையில் கண்ணீரின்றி அரற்றும் மற்றொரு குழந்தையை நினைத்தபடி மேலெழும்பி பறந்தது மற்றொரு தேவதை..