இரண்டு பெண்கள் வேறொரு மாநிலத்திலிருந்து வந்திருந்தார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருத்தியின் அப்பா ராம்தேவ் ஆசிரமத்தில் நடக்கும் யோகவகுப்புக்கு பணம் கட்டி இருப்பதாகவும் அவர் வேறொரு ரயிலில் வருவார் என்றும் இவர்கள் ஹாஸ்டலிலிருந்து வந்து அவர்களுடன் இணைந்துகொள்ள இருப்பதாகவும் சொன்னார்கள். ஆஸ்தா டீவியில் காண்பிக்கும் பெரும் கூட்டம் கூட்டமாக நடக்கும் யோக வகுப்புக்களுக்கு இப்படித்தான் எங்கெங்கிருந்தோ வருகிறார்கள் போலும்..
ரிஷிகேஷில் இறங்கும்போது சற்று கதிரொளியால் கதகதப்பைப் பெற்றோம். ஷேர் ஆட்டோவில் தங்குமிடம் சென்றோம். ரிஷிகேஷ் யோகா வகுப்புக்களுக்கு ப்ரசித்தி பெற்ற இடம். பார்க்குமிடமெல்லாம் சுருட்டிவைக்கப்பட்ட யோகா விரிப்பு நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய முதுகுப்பையுடன் யாராவது ஒரு வெளிநாட்டு பயணியை எதிர்படுகிறோம்.
ஹரித்வாரைப்போன்ற ஆராவாரங்கள் கொஞ்சம் ரிஷிகேஷில் குறைவு அதனாலேயே முன்பே வடக்குவாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் ரிஷிகேஷிலேயே நீங்கள் தங்கலாமே என்று அறிவுறுத்தினார். ஆனால் முதல் முறை என்பதால் ஹரித்வாரிலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் நாங்கள் ஹரித்வாரில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டோம். ரிஷிகேஷில் திருக்கோவிலூர் மடத்தைச் சேர்ந்த தங்குமிடத்தைப் பற்றியும் கூறி இருந்தார்.
மடத்தின் பொறுப்பை மேற்கொள்ளும் ஆச்சி எப்போதும் பிசியாகவே இருந்தார். எங்களுக்கு அறையின் சாவியைத்தந்தார். கல்லூரியின் ஹாஸ்டல் போல.. அறை எளிமையாக ஆனால் வசதிக்குறைவு ஏதுமின்றி இருந்தது. குளித்து உடைமாற்றி வந்தபோது உணவுக்கூடத்தில் கூட்டமாக இருந்தது. மடம் ஊருக்கு வெளியே இருப்பதால் இங்கேயே உணவருந்தவேண்டும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு கூட்டமா என்று பார்த்தோம். நல்ல இட்லியும் மெதுமெதுவடையும் கேசரியும் மணக்கும் சாம்பரும் கிடைத்தது. பின்பு தான் தெரிந்தது வந்திருக்கும் கூட்டம் தில்லியைச்சேர்ந்த சாயி மன்றத்தினர் என்றும் அவர்கள் வருடப்பிறப்பை இங்கே கொண்டாடுவது வழக்கமென்றும்... அவர்கள் கூடவே அழைத்து வந்திருக்கும் சமையல்காரர்கள் புண்ணியத்தில் தான் இந்த உணவு வரிசைகள். மற்ற நேரத்தில் மடத்தைச் சேர்ந்த சமையல்காரரின் சுமாரான சாப்பாடு கண்டிப்பாக உண்டு தான்.
மடத்திலிருந்து சற்று தூரம் நடந்து முக்கிய சாலையை அடைந்த பின் ஷேர் ஆட்டோ கிடைக்கிறது அதில் ஏறி நாங்கள் லஷ்மண் ஜூலா சென்றோம். அதன் அக்கரையில் நீல்கண்ட் செல்லும் வண்டிகள் கிடைக்குமென்று ஆச்சி எங்களுக்கு சொல்லி இருந்தார்கள். லஷ்மண் ஜூலாவிற்கு ஒரு இடத்தில் இறக்கிவிடுகிறார் ஆட்டோக்காரர் .

(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கியும் பார்க்கலாம்)
அங்கிருந்து குறுகிய ,கடைகள் நிறைந்த ஒரு இறக்கப்பாதையில் இறங்கி நடந்தோம். வழியில் ஓரிடத்திலிருந்து எடுத்த படம் தான் மேலே இருப்பது. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று அர்த்தம். கங்கைக்கரையின் மிக உயரமான இரண்டு புறத்தையும் இணைக்கும் அந்த தொங்குபாலம் மிக அற்புதமான ஒன்று தான்.

மறுகரையில் இருக்கும் அந்த கோயில் பல அடுக்குகளாக அழகாக காட்சி தருகிறது. நாங்கள் அதற்குள் நுழையவில்லை.
மறுகரையில் ஜீப்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பேருந்துகளைப்போல அவை லக்ஷ்மன் ஜூலாவிலிருந்து நீல்கண்ட் சென்று திரும்புகின்றன. போகும் போதே நாம் தலைக்கு 90 ரூ என்று நினைக்கிறேன் பேசிக்கொண்டால் இருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள்..

போகும் வழியெல்லம் கங்கையின் பேரழகையும் மலையழகையும் என்னால் வார்த்தைகளில் அடக்க இயலாது. ஜீப்பின் ஓரத்தில் அமர்ந்தபடி ஒரு கையால் பேலன்ஸ் செய்துகொண்டு மறுகையால் எடுத்த படங்கள் இவை. ஹரித்வாரும் ரிஷிகெஷும் அப்போது கும்பமேளா தயாரிப்பில் இருந்தது. கரையோரங்களில் முக்கிய ப்ரமுகர்களும் சாதுக்களும் தங்க டெண்ட்கள் கட்டப்பட்டிருந்தது. பார்க்கவே ஆசையாக இருந்தது.

வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் வெளியூர்க்கார வண்டி ஓட்டிகள் தான் மிக ஆபத்தானவர்கள். வேகம் குறையாமல் வருவது மலைப்பாதையில் எதிர்படும் வாகனங்களுக்கு வழிவிடும் வழிமுறையும் தெரியாமல் திகில் ஏற்படுத்துகிறார்கள்.

நீல்கண்ட் சிவன் கோயில் . நேரம் ஆக ஆக கோயிலின் வெகுதூரத்திலேயே பார்க்கிங் செய்யவேண்டிய நிலை. கொஞ்ச தூரம் நடக்க்வேண்டியதானது.

ஆரஞ்சும் மஞ்சளுமான பூக்கள் கொண்டு செய்திருந்த அலங்காரம் கண்ணைப்பறித்தது. வெளிப்பகுதியில் ஒரு சின்னக்குழந்தை சிவன் பளிங்கில் சாய்ந்தவாக்கில் படுத்திருக்கிறார்.

கோயிலின் உள்ளே செல்ல சன்னிதிக்கு சில படிகள் கீழே இறங்கி நடக்கவேண்டி இருந்தது. எல்லாரும் கைகளில் பால் மற்றும் தண்ணீர் அபிசேகத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். ப்ளாஸ்டிக் டம்ளர் தண்ணீர் விற்கிறது.
பம் பம் போலே பம் பம் போலே என்று உணர்ச்சி அலைகளுடன் சென்று அந்த சிறிய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
ரிஷிகேஷ் ஆரத்தியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.