September 29, 2010

பம் பம் போலே -நீல்கண்ட்

ஐயப்பன் கோயில் அறையில் மற்ற பொருட்களை வைத்துவிட்டு இரண்டு நாட்களுக்கான துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ரிஷிகேஷ் செல்ல முடிவு செய்தோம். காலையில் ஒரு ரயில் உண்டு என்று குளிரைப் பொருட்படுத்தாமல் கிளம்பிவிட்டோம். வருடக்கடைசியின் குளிர் 'உங்களுக்கு அவ்வளவு தைரியமா?' என்று எங்களை தன் குளிர்காற்றால் தாக்கத்தொடங்கியது. கையுறையையும் தாண்டியும் எங்களூக்கு நடுக்கம் . இஞ்சி டீ ஒன்றைக் குடித்துவிட்டு ரயில்நிலையம் சென்றோம். அங்கே பலர் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்ததைப் பார்த்தோம். ஒரு வயதான பாட்டியும் ஒரு சிறுமியும் காலில் செருப்பும் இல்லாமல் அனைவரிடம் கையேந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏழ்மை தாங்கும் சக்தியை குடுத்திருக்கிறது போல.. காலுறையையும் ரிபோக் ஷூவையும் தாண்டி குளிர் நடுக்கியது எனக்கு. கண்ணைத்தவிர எதும் தெரியாத படி நான் மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.


இரண்டு பெண்கள் வேறொரு மாநிலத்திலிருந்து வந்திருந்தார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருத்தியின் அப்பா ராம்தேவ் ஆசிரமத்தில் நடக்கும் யோகவகுப்புக்கு பணம் கட்டி இருப்பதாகவும் அவர் வேறொரு ரயிலில் வருவார் என்றும் இவர்கள் ஹாஸ்டலிலிருந்து வந்து அவர்களுடன் இணைந்துகொள்ள இருப்பதாகவும் சொன்னார்கள். ஆஸ்தா டீவியில் காண்பிக்கும் பெரும் கூட்டம் கூட்டமாக நடக்கும் யோக வகுப்புக்களுக்கு இப்படித்தான் எங்கெங்கிருந்தோ வருகிறார்கள் போலும்..

ரிஷிகேஷில் இறங்கும்போது சற்று கதிரொளியால் கதகதப்பைப் பெற்றோம். ஷேர் ஆட்டோவில் தங்குமிடம் சென்றோம். ரிஷிகேஷ் யோகா வகுப்புக்களுக்கு ப்ரசித்தி பெற்ற இடம். பார்க்குமிடமெல்லாம் சுருட்டிவைக்கப்பட்ட யோகா விரிப்பு நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய முதுகுப்பையுடன் யாராவது ஒரு வெளிநாட்டு பயணியை எதிர்படுகிறோம்.

ஹரித்வாரைப்போன்ற ஆராவாரங்கள் கொஞ்சம் ரிஷிகேஷில் குறைவு அதனாலேயே முன்பே வடக்குவாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் ரிஷிகேஷிலேயே நீங்கள் தங்கலாமே என்று அறிவுறுத்தினார். ஆனால் முதல் முறை என்பதால் ஹரித்வாரிலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் நாங்கள் ஹரித்வாரில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டோம். ரிஷிகேஷில் திருக்கோவிலூர் மடத்தைச் சேர்ந்த தங்குமிடத்தைப் பற்றியும் கூறி இருந்தார்.

மடத்தின் பொறுப்பை மேற்கொள்ளும் ஆச்சி எப்போதும் பிசியாகவே இருந்தார். எங்களுக்கு அறையின் சாவியைத்தந்தார். கல்லூரியின் ஹாஸ்டல் போல.. அறை எளிமையாக ஆனால் வசதிக்குறைவு ஏதுமின்றி இருந்தது. குளித்து உடைமாற்றி வந்தபோது உணவுக்கூடத்தில் கூட்டமாக இருந்தது. மடம் ஊருக்கு வெளியே இருப்பதால் இங்கேயே உணவருந்தவேண்டும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு கூட்டமா என்று பார்த்தோம். நல்ல இட்லியும் மெதுமெதுவடையும் கேசரியும் மணக்கும் சாம்பரும் கிடைத்தது. பின்பு தான் தெரிந்தது வந்திருக்கும் கூட்டம் தில்லியைச்சேர்ந்த சாயி மன்றத்தினர் என்றும் அவர்கள் வருடப்பிறப்பை இங்கே கொண்டாடுவது வழக்கமென்றும்... அவர்கள் கூடவே அழைத்து வந்திருக்கும் சமையல்காரர்கள் புண்ணியத்தில் தான் இந்த உணவு வரிசைகள். மற்ற நேரத்தில் மடத்தைச் சேர்ந்த சமையல்காரரின் சுமாரான சாப்பாடு கண்டிப்பாக உண்டு தான்.

மடத்திலிருந்து சற்று தூரம் நடந்து முக்கிய சாலையை அடைந்த பின் ஷேர் ஆட்டோ கிடைக்கிறது அதில் ஏறி நாங்கள் லஷ்மண் ஜூலா சென்றோம். அதன் அக்கரையில் நீல்கண்ட் செல்லும் வண்டிகள் கிடைக்குமென்று ஆச்சி எங்களுக்கு சொல்லி இருந்தார்கள். லஷ்மண் ஜூலாவிற்கு ஒரு இடத்தில் இறக்கிவிடுகிறார் ஆட்டோக்காரர் .

(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கியும் பார்க்கலாம்)
அங்கிருந்து குறுகிய ,கடைகள் நிறைந்த ஒரு இறக்கப்பாதையில் இறங்கி நடந்தோம். வழியில் ஓரிடத்திலிருந்து எடுத்த படம் தான் மேலே இருப்பது. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று அர்த்தம். கங்கைக்கரையின் மிக உயரமான இரண்டு புறத்தையும் இணைக்கும் அந்த தொங்குபாலம் மிக அற்புதமான ஒன்று தான்.

மறுகரையில் இருக்கும் அந்த கோயில் பல அடுக்குகளாக அழகாக காட்சி தருகிறது. நாங்கள் அதற்குள் நுழையவில்லை.

மறுகரையில் ஜீப்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பேருந்துகளைப்போல அவை லக்ஷ்மன் ஜூலாவிலிருந்து நீல்கண்ட் சென்று திரும்புகின்றன. போகும் போதே நாம் தலைக்கு 90 ரூ என்று நினைக்கிறேன் பேசிக்கொண்டால் இருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள்..

போகும் வழியெல்லம் கங்கையின் பேரழகையும் மலையழகையும் என்னால் வார்த்தைகளில் அடக்க இயலாது. ஜீப்பின் ஓரத்தில் அமர்ந்தபடி ஒரு கையால் பேலன்ஸ் செய்துகொண்டு மறுகையால் எடுத்த படங்கள் இவை. ஹரித்வாரும் ரிஷிகெஷும் அப்போது கும்பமேளா தயாரிப்பில் இருந்தது. கரையோரங்களில் முக்கிய ப்ரமுகர்களும் சாதுக்களும் தங்க டெண்ட்கள் கட்டப்பட்டிருந்தது. பார்க்கவே ஆசையாக இருந்தது.

வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் வெளியூர்க்கார வண்டி ஓட்டிகள் தான் மிக ஆபத்தானவர்கள். வேகம் குறையாமல் வருவது மலைப்பாதையில் எதிர்படும் வாகனங்களுக்கு வழிவிடும் வழிமுறையும் தெரியாமல் திகில் ஏற்படுத்துகிறார்கள்.

நீல்கண்ட் சிவன் கோயில் . நேரம் ஆக ஆக கோயிலின் வெகுதூரத்திலேயே பார்க்கிங் செய்யவேண்டிய நிலை. கொஞ்ச தூரம் நடக்க்வேண்டியதானது.

ஆரஞ்சும் மஞ்சளுமான பூக்கள் கொண்டு செய்திருந்த அலங்காரம் கண்ணைப்பறித்தது. வெளிப்பகுதியில் ஒரு சின்னக்குழந்தை சிவன் பளிங்கில் சாய்ந்தவாக்கில் படுத்திருக்கிறார்.

கோயிலின் உள்ளே செல்ல சன்னிதிக்கு சில படிகள் கீழே இறங்கி நடக்கவேண்டி இருந்தது. எல்லாரும் கைகளில் பால் மற்றும் தண்ணீர் அபிசேகத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். ப்ளாஸ்டிக் டம்ளர் தண்ணீர் விற்கிறது.
பம் பம் போலே பம் பம் போலே என்று உணர்ச்சி அலைகளுடன் சென்று அந்த சிறிய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

ரிஷிகேஷ் ஆரத்தியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

21 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

புகைப்படங்கள் அத்தனையும் அழகு. அருமையான கட்டுரை.

பனித்துளி சங்கர் said...

புகைப்படங்கள் அத்தனையும் அருமை .

ராமலக்ஷ்மி said...

தலைப்பும் காரணமும் எங்களையும் முணுமுணுக்க வைக்கின்றன ‘பம் பம் போலே’!! படங்கள் பெரிது படுத்திப் பார்க்கையில் இன்னும் அழகு. அருமையான விவரிப்பு..பகிர்வு. நன்றி.

//ஏழ்மை தாங்கும் சக்தியை குடுத்திருக்கிறது போல..//

உண்மைதான்.

கோபிநாத் said...

படங்களும் பதிவும் சூப்பரு ;)

Thekkikattan|தெகா said...

படங்களனைத்தும் மீண்டுமொரு முறை நான் அங்கிருந்ததினை ஞாபகமூட்டுகிறது. good shots! thanks for sharing !!

கோமதி அரசு said...

படங்கள் அருமை.பதிவும் அருமை.

பம் பம் போலே நீல்கண்ட்!

☀நான் ஆதவன்☀ said...

அருமையான புகைப்படம்ங்கள்க்கா.. அந்த சிவன் கோயில் தமிழ்நாடு ஸ்டைல்ல இருக்கேக்கா? ஏதும் சமீபத்திய வரலாறு இருக்கா? :)

SurveySan said...

தங்கும் இடம், ரயில் பேரு, பஸ்பேரு, இத்யாதி இத்யாதியெல்லாம் தந்தா, நாங்களும் போக முயற்சிப்போம்ல?

வெங்கட் நாகராஜ் said...

விளக்கங்கள்/புகைப்படங்களுடன் நல்ல பகிர்வு. நீல்கண்ட் - எனக்கு மிகவும் பிடித்த இடம். சென்று வருவது மிகவும் திரில்லான ஒரு அனுபவம். அந்த கோவில் கோபுரம் மட்டும் தான் தென்னிந்திய பாணியில், உள்ளே உள்ள விஷயங்கள் வட இந்திய பாணியில். சென்று வர 10-15 பேர் பயணம் செய்யும் ஜீப் தவிர, 4-5 பேர் பயணம் செய்யும் அம்பாசிடர் கார் வசதியும் உண்டு. அழகான ஒரு இடம் - பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து வரும் மக்கள் ரிஷிகேசத்திலிருந்தே திரும்பி விடுகின்றனர்.

'பரிவை' சே.குமார் said...

படங்கள் + பதிவு அருமை.

ஹுஸைனம்மா said...

அந்தத் தொங்கு பாலம் பிரமிக்க வைக்கிறது. முழுசாத் தெரியறமாதிரி படம் இல்லையா?

ஹுஸைனம்மா said...

//ஏழ்மை தாங்கும் சக்தியை குடுத்திருக்கிறது போல..//

ஆமாம்க்கா. பலசமயம் நம்மை வெட்கப்பட வைக்கும்.

கபீஷ் said...

//ஏழ்மை தாங்கும் சக்தியை குடுத்திருக்கிறது போல//

சூழ்நிலைக்கேற்ப தகவமைப்பு , தட்டச்சு செய்ய சோம்பேறித்தனமா இருக்கு அதனால ஒரு கடியான விளக்கத்திலிருந்து இன்னிக்கு தப்பிச்சிட்டீங்க முத்து

கபீஷ் said...

லக்கி முத்து எவ்ளோ இடம் பாத்திருக்கீங்க

காதுல புகையுடன்
கபீஷ்

துளசி கோபால் said...

என்னப்பா...இது!!!!

இப்படி அட்டகாஸமா ஜொலிக்குது!!!!!!

தொங்கலிலும் ஆடாமப் படங்களை சூப்பரா எடுத்துருக்கீங்க!!!!!

பதிவையும் படங்களையும் பலமுறை ரசிச்சேன்.

மங்கை said...

அருமையா இருக்கு...எப்படித்தான் இவ்வளவும் நியாபகத்துல இருக்கோ.. லக்ஷ்மன் ஜூலா ரொம்ப அழகு னு சொல்லுவாங்க... ஆரத்தி பதிவிக்க்கு வெயிட்டிங்.. அதானே ஹைலைட்..:)

மாதேவி said...

மறுகரையில் இருக்கும் அந்த கோயில் அழகாகஇருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

படங்களும்விவரிப்பும் மிக அழகு கயல். கோவில் பளபளக்கிறது. லக்ஷ்மண்ஜூலாவுக்குப் பாட்டி போய் விட்டு வந்து கதை கதையாகச் சொல்லுவார். எப்படித்தான் இவ்வளவுதூரம் நடந்து போனார்களோ. வர்ணமயம் ஜொலிக்கிறது.

Unknown said...

புகைப்படங்களுடன் அருமையான பதிவு..

செல்வா said...

படங்கள் வழக்கம் போல கலக்கல் அக்கா ..!!

Unknown said...

புகைப்படங்களுடன் அருமையான பதிவு..

//ரிஷிகேஷ் ஆரத்தியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.//
சொல்லுங்க காத்திருக்கிறேன்.