

ரிஷிகேஷ் ஆரத்தி நடப்பது பரமார்த்த ஆசிரமத்தில் என்பதால் அங்கு சென்றோம். கங்கைக்கரையில் படித்துறைக்கு எதிரில் நீருக்குள் ஒரு மேடை அமைத்து அதில் பெரிய சிவன் தவமியற்றும் காட்சி..

படித்துறைக்கு நுழைய அனுமதி கிடைத்ததும் நாங்கள் படிகளுக்கு பிறகு இருந்த சமதளத்தில் அமர்ந்திருந்தோம். கூட்டம் வரத் தொடங்கும் முன் எங்களைப் போலவே காத்திருந்த இன்னோரு குடும்பத்தினரை அழைத்து கங்கைக்கு பூஜை செய்யத்தொடங்கினார் ஒரு காவி உடையணிந்த குரு ஒருவர். அக்குடும்பத்தினர் எங்களையும் அழைக்கவே நானும் குழந்தைகளும் அதில் கலந்து கொண்டோம். அவர் மந்திரங்களைச் சொல்லி நம் கைகளில் மலர் கொடுத்து பூஜை செய்யும்படி பணித்தார்.

ஒரு வெளிநாட்டுப்பெண் சிவனுக்கு முன்பு படித்துறை கடைசிப்படியில் அமர்ந்து சிறிதுநேரம் த்யானம் செய்தாள்.
பிறகு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத்தொடங்கியது . வானில் இருள் கவியத்தொடங்கியது கூடவே குளிரும் வந்துவிட்டது .. கங்கைபூஜை செய்த குருவின் மேற்பார்வையில் காவி உடையணிந்து வந்த சிறுவர்கள் சமதளத்தில் வரிசையாக உட்காரவைக்கப்பட்டார்கள்.

அப்போது பூஜ்யஸ்வாமி ஒருவர் வந்தார் .. இவர்களை எல்லாம் ஆஸ்தா போன்ற தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம்.. பிறகு பாடல்கள் பாடினார்கள்.. கங்கா ஆரத்தியின் (போட்டோ கேலரி பரமார்த் தளம்)போது சிறு சிறு தட்டுகளில் தீபம் வந்தது.



ப்ரதம சிஷ்யை வெளிநாட்டுக்காரங்க போல பாட்டும் ஆரத்தியும் பக்தியுமா இருந்தாங்க..

முழுநிலா இரவில் ராம் ஜூலாவில் நடந்து கங்கையை கடந்தது அருமையான அனுபவம் . ஷேர் ஆட்டோ பிடித்துக்கொண்டு கோவிலூர் மடம் வந்து சேர்ந்தோம். டீவி இல்லாத புதுவருடப்பிறப்பின் இரவு. அங்கே ஏற்கனவே சொல்லியிருந்தேனே நம்ம சாய் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் பான் ஃபயர் செய்ய தயாரிப்பில் இருந்தார்கள். இன்னோரு பக்கம் புதுவருட பிறப்புக்கான சத்சங்க் ஒன்றும் ஒரு அறையில் ஏற்பாடாகி இருந்தது. இரவெல்லாம் முழித்திருக்கப்போவதால் இரவு உணவு தாமதமாக தயார் செய்ய திட்டம் போலும். நாங்களும் காத்திருந்து உணவு மணி அடித்ததும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டோம். 12 மணிக்கு வெடிச்சத்தமும் தொலைபேசி அழைப்புகளும் புத்தாண்டு வாழ்த்துகளை வழங்கியது. . (தொடரும்)
(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கலாம்)
பிற்சேர்க்கை: கங்கையில் வெள்ளப்பெருக்கு நேர்ந்த போது சிவ்ஜி அடித்து செல்லப்பட்டது நான் அறியாதது. குழந்தைகள் கொடுக்கின்ற கொஞ்ச நேரத்தில் நியூஸ் பார்க்கும்போது ஆரத்தி நடந்த இடமும் சிவனும் வெள்ளத்தில் பாதி மூழ்கியது தெரியும்.. இப்போது பின்னூட்டத்தில் ஸ்வாமி ஓம்கார் சொன்னபின் தான் தேடியதில் இந்த வீடியோ கிடைத்தது..