தில்லி தமிழ்ச்சங்கம் சார்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. வெளியே மழைக்காற்றும் சிலுசிலுப்புமாக இருந்தது. வழக்கம்போலவே போவதா வேண்டாமா குழப்பங்களுடன் முதல் முறையாக( இப்படியே எத்தனை முறை சொல்வேனென்று கேட்காதீர்கள்) நிஜம்மாகவே முதல் முறையாக இரண்டு பேருந்து(1மணிநேரம்) மாற்றித் தமிழ்ச்சங்க வாசலை அடைந்தேன்.
6 மணிக்கு தொடங்கவேண்டிய நிகழ்வு 6.30 வாக்கில் தொடங்கியது. பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் நாஞ்சில் நாடன் அவர்களை வாழ்த்தி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நுணுக்கமான விவரங்களை காவியமரபில் வருவது போன்றே நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்பில் காணமுடிகிறது என்று சுட்டிக்காட்டினார். இன்றைய இளைஞர்களைத் தமிழின்பாலும் வாசிப்பின்பாலும் ஈர்க்கக்கூடிய கவர்ச்சியுடைய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் எனப்பாரட்டினார். இந்த விருது சக தமிழனாக அனைவருக்குமே பெருமை அளிக்ககூடிய விருதென்று வாழ்த்தினார்.
அனைவரின் வாழ்த்துக்களையும் தன் நெஞ்சின் மீது கரம் வைத்து நாஞ்சில் நாடன் அவர்கள் மேடையில் ஏற்றுக்கொண்ட காட்சியே சிறப்பாக இருந்தது. இதயபூர்வமாக வரும் பாரட்டுக்களை இதயபூர்வமாகவே அவர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகவும் தோன்றியது.
இதழியலாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி அவர்கள் விருதுகள் பெறுவது கூட பூர்வஜென்ம பலன் தான் என்று நகைச்சுவையுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டதிட்டங்களுக்கு மத்தியில் அனைவருக்கும் சரியானபடி விருது போய்ச்சேர வழியில்லை. அப்படி சரியானபடி விருது வந்து சேர்ந்தால் பேரதிர்ஷ்டக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை கட்டுரைகளில் வழங்குவதை குறைத்துக்கொண்டு கதை நாவல்களில் அதிகம் கவனம் செலுத்துபடியாகவும் கேட்டுக்கொண்டார்.
ஒய்வு பெற்ற பேராசிரியை எம்.ஏ. சுசிலா அம்மா நாஞ்சில் நாடன் அவர்களின், விருது பெற்ற ’சூடிய பூ சூடற்க’ தொகுப்பிலிருந்து சில அறிமுகங்களைக் கொடுத்துப் பேசினார். ’யாம் உண்பேம் ‘ கதை பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். ’மஞ்சனமாட்ட கனாக்கண்டேன்’ என வரும் இடம் பற்றிக் குறிப்பிட்டபோது நாஞ்சில் நாடன் அவர்களும் கதையில் அவ்வுணர்ச்சி மிக்க இடத்தினை நினைவு கூர்ந்து வருத்தப்பட்டார். எப்படி அவருடைய கதைகளில் மனிதம் ஓங்கி நிற்கின்றது என்று கூறி வனம் சிறுகதையையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்கள்.
தனக்கு தில்லியின் நகரமும் மக்களும் உணவும் பதட்டத்தை தருகின்றன ஆனால் நாஞ்சில் நாடனோ புலம்பெயர் உலகின் மண்வாசனையையும், ’நல் உணவும் நாப்பழக்கம்’ என்று உணவுப்பழக்கத்தையும், மண்ணின் மக்களையும் உள்வாங்கி அதன் வாடையை தன் படைப்பில் கொண்டுவருவது தனக்கு வியப்பளிக்கிறது என்றார். மேலும் பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று நாஞ்சில் அவர்கள் தங்கினால் இன்னும் பல மண்ணின் மணத்தை நாம் அறிய வாய்ப்பாக இருக்குமென்ற தன் அவாவினை வெளிப்படுத்தினார்.
திரு பென்னேஸ்வரன் அவர்கள் பேசியபோது ”இன்றைய தினத்தில் இணையத்தில் சிலர் எல்லாம் தெரிந்ததைப் போல எழுதுகிறார்கள் - கூகிள் உதவியுடன், அவர்களின் வாசிப்பின் வீச்சும் பரப்பும் எனக்குத் தெரியும் ஆனால் இணையத்தில் செயல்படாத நாடன் எழுத்துக்களோ அசலாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டார். விருதுக்கு தகுதியான மனிதர் என்று அனைவராலும் ஒருமுகமாக நாஞ்சில் நாடன் பாராட்டப்பட்டார்.
விழா நாயகன் நாஞ்சில் நாடனின் மனைவி அவர்களையும் மேடையேற்றி அவருக்கும் மரியாதைகளை செய்து அவரையும் மேடையில் அமரவைத்தார்கள். நெகிழ்ச்சியுடன் அவர் அமர்ந்திருந்தார்.
விழாவுக்கு கூட்டம் பரவாயில்லை எனும்படியே இருந்தது. இலக்கியக்கூட்டங்களுக்கு அதுவும் அலுவலக தினத்தில் இது அதிகமே என்று பென்னேஸ்வரன் அவர்களும் குறிப்பிட்டார். அதனபடியும் கூட நாஞ்சில் நாடன் பேரதிஷ்டக்காரர் தான்.
திரைப்பட நடிகர் தாமு அவர்கள் தற்செயலாக நிகழ்ச்சியன்று தமிழ்சங்கம் வந்திருந்தார். அவரும் வாழ்த்திப்பேசினார். இருதயபூர்வமான கைத்தட்டல்களென்றால் இன்னும் உரத்து ஒலிக்கட்டுமென்று கேட்டார். பெற்றோரிடத்து அன்புமிக்கவராக இருந்திருக்கவேண்டும் அதனால் தான் இத்தகைய விருதினைப் பெற்றார் எனவே அவருடைய பெற்றோருக்கும் நற்றுணையாக இருக்கும் மனைவியை அளித்த மாமனார் மாமியாருக்கும் கூட கைத்தட்டல்களை வாங்கிக்கொடுத்தார். அப்படியே அடுத்த வருடம் அவர் இயக்குனாராக இருக்கிறாராம் அதற்கும் எங்களிடமிருந்தும் விருது பெற்ற சாம்பினிடமிருந்தும் ஆசிகளாக கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார்.
நாஞ்சில் நாடன் அவர்கள் தன் படைப்புகளின் தரம் பற்றிய அதன் தகுதி பற்றிய நம்பிக்கையின் பேரில் விருதினை ஏற்றுக்கொண்டாலும் இதனைப் பெறாத ஆனால் தகுதியுடையமற்றவர்களை நினைவு கூர்ந்து பேசினார். அதன் உட்கருத்து இப்பேட்டியிலும் உண்டு. பரிசில் வாழ்க்கை தானே.. விருது என்பதும் அவசியம் தான். காலதாமதமாக அளிக்கப்படும் விருதுகளைத்தான் தான் விமர்சிப்பதாகவும் கூறினார். மேலும் ஏனைய மொழிகளில் விருதுபெற்றவர்களின் படைப்புகள் தமிழுக்கு முன் மிக சாதரணமாகவே தெரிகின்றதென்றும் தமிழில் விருதுபெறுவதற்கு தகுதியான படைப்புகள் பல இருந்தும் அவை அளிக்கப்படாமல் விடுபடுவதுதான் விமர்சிக்கப்படக் காரணமும் என்றார்.
விருது பெற்றதிலிருந்து தினம் வீட்டில் மூன்றரை லிட்டர் பால் வாங்கி விருந்தினரை உபசரிக்கும் மனைவியைப் பற்றியும் தொடர்ந்த வருகையால் இரண்டு நாள் குளிக்கக்கூட நேரமில்லாமல் போய்விட்டதென்றும் விருதினால் கிடைத்த பணமெல்லாம் தில்லியிலேயே கூட செலவழிந்தும் போய்விடலாமென்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஆனால் பணம் புகழ் பாராட்டு இதையும் தாண்டி விருது தனக்கு மட்டுமல்லாம் தன் மொழிக்கும் சக எழுத்தாளர்களுக்குமான ஒன்றாக அவர் பார்க்கின்றார்.
எழுத்தாளர்களின் சொற்கிடங்கு என்பது அம்புறாத்தூணி போல எடுக்கஎடுக்க குறையாத சொற்கள் நிறைந்ததாக இருக்கவேண்டுமென்று கூறி சொற்கள் அம்புகள் என்பதற்கு கம்பராமயணத்திலிருந்து உதாரணமளித்தார். தொன்மையான நம் மொழியின் பல சொற்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றதென்றும் அவற்றை படைப்புகளில் பயன்படுத்துவது அவசியமென்றும் கூறினார். பயணங்களில் உணவு முக்கியமில்லை பயணங்களும் மனிதர்களை படிப்பதும் தனக்கு எப்படி உதவியதென்றார். விற்பனை பிரதிநிதியாக இருந்த நாட்களில் எப்படி அலுவலக வரவேற்பரையில் காத்திருக்கும் நேரங்களிலேலாம் தான் படித்துக்கொண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.
நாஞ்சில் உணவுகள் பற்றிய தன் புத்தகத்தை முடித்துவிட்டு கதை நாவல்கள் பக்கம் திரும்ப இருக்கிறாராம். இருந்தாலும் சமூகத்தைப்பற்றிய விமர்சனங்களை கட்டுரைகள் தானே சிறப்பாக வெளிப்படுத்தும் அதனை கதைகளில் வைத்து என்னபயன்? என்றும் கேட்டுக்கொண்டார்.
கேள்வி நேரம் என்று இரண்டு கேள்விகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரவு வெகுநேரமாகிவிட்டதென்பதால் நான் அதற்கு அமரமுடியவில்லை.
விருது அவருக்கு தாமதகமாக அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும் கூட, எப்போது அளிக்கப்பட்டாலும், அப்பொழுது தான் வாசிப்பின் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ள சிலர் அந்த தருணத்தில் இருக்கத்தானே இருப்பார்கள். அவர்கள் இதுபோன்ற ஏற்புரைகளை கேட்கும்போது இலக்கியத்தின் அமைதியான பக்கங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையுமென்றே தொன்றுகிறது.
சுசீலாம்மாவின் விரிவான பதிவு இங்கே
50 comments:
அருமையான பகிர்வுக்கா. நிகழ்வை அப்படியே எழுதியிருக்கீங்க உங்க கருத்து இல்லாம :)
வர முடியலை என்னும் மனக்குறை தீர்ந்துச்சுப்பா. நல்ல விவரமா நிகழ்வைச் சொல்லி இருக்கீங்க.
இனிய பாராட்டுகள்.
//தினம் வீட்டில் மூன்றரை லிட்டர் பால் வாங்கி விருந்தினரை உபதேசிக்கும் மனைவியைப் பற்றியும்//
உபசரிக்கும் என்று இருக்கணுமோ?
நல்ல பகிர்வு முத்து.வேண்டுமானால் படங்களைப் பயன்படுத்துங்கள்.அனுப்புகிறேன்..
எழுத்தாளர்களின் சொற்கிடங்கு என்பது அம்புறாத்தூணி போல எடுக்கஎடுக்க குறையாத சொற்கள் நிறைந்ததாக இருக்கவேண்டுமென்று கூறி சொற்கள் அம்புகள் என்பதற்கு கம்பராமயணத்திலிருந்து உதாரணமளித்தார். தொன்மையான நம் மொழியின் பல சொற்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றதென்றும் அவற்றை படைப்புகளில் பயன்படுத்துவது அவசியமென்றும் கூறினார். பயணங்களில் உணவு முக்கியமில்லை பயணங்களும் மனிதர்களை படிப்பதும் தனக்கு எப்படி உதவியதென்றார். விற்பனை பிரதிநிதியாக இருந்த நாட்களில் எப்படி அலுவலக வரவேற்பரையில் காத்திருக்கும் நேரங்களிலேலாம் தான் படித்துக்கொண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.
.....அருமையான கருத்துக்கள்...
அழகாய் தொகுத்து தந்ததற்கு , உங்களுக்கு பாராட்டுக்கள்!
நேரில் வந்து பார்த்தது கேட்டது போலவே ஒரு உணர்வைத் தந்தது பதிவு. மிக அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.
பகிர்வுக்கு நன்றி!
நல்ல தொகுப்பு! வர இயலாமல் போனதன் குறையைத் தீர்த்தது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி சகோ! நண்பர் பத்மநாபன் இப்போதுதான் சொல்லிக் கொண்டு இருந்தார் நிகழ்ச்சி பற்றி! நீங்களும் பதிவு எழுதி விட்டீர்கள்!
நன்றி ஆதவன்.. என் கருத்து நடுவில் எங்கயாச்சும் தேடினா இருக்கும்..:)
----------
துளசி நன்றி.. :)
திருத்தினதுக்கும் நன்றி..:)
----------------
நன்றி சுசீலாம்மா :)
படங்கள் இணைத்துவிட்டேன்..
----------------
சித்ரா நீங்க தான் பயணத்துல பெரியாளாச்சே ..:) அந்த இடம் பிடிச்சதா உங்களுக்கு
--------------------
-----------------------
தலைநகரின் தமிழ்ச்சங்கம் மிகப் பெருமை பெற்றது. அதில் நடந்த இந்த விழாவிலும் எளிமையும் யதார்த்தமும் பரவி நிற்கின்றன. நல்ல தொரு பதிவு முத்து. மிக நன்றி.
நேரில் பார்த்த நிறைவு. பகிர்வுக்கு நன்றி
நன்றி ராமலக்ஷ்மி :)
நன்றி சேட்டை :)
நன்றி வெங்கட் :)
வல்லிம்மா சரியா கவனிச்சிருக்கீங்க.. எளிமையும் யதார்த்தமும் .. உண்மைதான்.:) நன்றி.
நாஞ்சில் நாடனைப் படித்ததில்லை. ஆனால் கேள்வியுண்டு.
நிறைய பாராட்டுக்கூட்டங்கள். மதுரையில், சென்னையில், கோவையில், நாகர்கோயிலில், இப்போதி தில்லியில். கொஞசம் மிகைதான்.
பேராசிரியை எம்.ஏ.சுசிலா என்று எழுதியிருக்கிறீர்கள்.
அவர் இப்போது பேராசிரியை இல்லை. முன்னாள் பேராசிரியை என்றுதான் இருக்க வேண்டும்.
ரொம்ப பணிவாக பதிவு எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கல்லூரி மாணவி எழுதுவதைப்போல.
இதன் விளைவு என்னவென்றால்,உங்களால் தன்னிச்சையாக கருத்துரைக்கவியலாது. She, who pleases everybody, pleases nobody.
ஒருவேளை, அதை வேறிடத்தில் சொல்வீர்களோ !
நல்ல தமிழில் எழுதப்பட்ட பதிவில்,
சேம்பியன் என்ற் சொல் வேண்டுமா ?
இலக்கியத்தின் அமைதியான பக்கங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையுமென்றே தொன்றுகிறது.//
ஆம் முத்துலெட்சுமி, நல்ல வாய்ப்பு தான்.
நல்ல பகிர்வு.
//எழுத்தாளர்களின் சொற்கிடங்கு என்பது அம்புறாத்தூணி போல எடுக்கஎடுக்க குறையாத சொற்கள் நிறைந்ததாக இருக்கவேண்டுமென்று கூறி சொற்கள் அம்புகள் என்பதற்கு கம்பராமயணத்திலிருந்து உதாரணமளித்தார். தொன்மையான நம் மொழியின் பல சொற்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றதென்றும் அவற்றை படைப்புகளில் பயன்படுத்துவது அவசியமென்றும் கூறினார்//
வளரும் எழுத்தாளர்களுக்கு அருமையான ஆலோசனை..
நன்றி கனாக்காதலன்..:)
---------------
அனானிமஸ்..வாங்க முதலில் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
சேம்பியன் என்ற வார்த்தையை நடிகர் தாமு தான் பயன்படுத்தினார். அவர் சொன்னதையே அப்படியே நான் இங்கே குறிப்பிட்டேன்.
பேராசிரியை என்பதை மாற்றிவிடுகிறேன்.
யாரையும் புகழுவதற்காக நான் இப்பதிவை இட்டதாக தோன்றவில்லை. நடந்ததில் எனக்கு நினைவில் இருந்ததை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். அல்லது எனக்கு பிடித்தவற்றை மட்டும் பதிவிட்டிருக்கிறேன் :)
விருது பெற்றவுடன் மகிழ்ந்து அவருடைய நண்பர்கள் உள்ளூரில் ஆங்காங்கே பாராட்டுவிழாக்களை நடத்தி இருக்கலாம்.
தில்லி தமிழ்சங்கம் எப்பொழுதுமே விருது பெற்ற கையுடன்( முந்தாநாள் விருதை கையில் பெற்றார்) அவர்களை அழைத்து பாராட்டுவது வழக்கம் தான். அதனால் மிகையாக தோன்றுவதற்கு அதில் ஒன்றுமே இல்லை.
மேலும் பணிவாக எழுதக்காரணம்.. என் வயது அவருடைய எழுத்துப்பணிக்கு , நானோ வாசிப்பின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவள் அவ்வளவே..
நன்றி கோமதிம்மா
:)
-------------
நன்றி அமைதிச்சாரல்:)
அப்பறம் தில்லி அனானிமஸ் அவர்களுக்கு..
நீங்கள் தொடர்ந்து தில்லி பற்றிய பதிவுக்ளுக்கு வருகை தருகிறீர்க்ள் .. உங்கள் கருத்துக்களை பதிகிறீர்கள். ஆனால் உங்கள் பெயரையோ உங்களையோ வெளிப்படுத்திக்கொள்ளமாட்டேன் என்கிறீர்களே.. உங்களுக்கு அக்கவுண்ட் இல்லையென்றாலும் உங்கள் கருத்தின் கீழ் உங்கள் பெயரை இடலாமே..
நல்ல பகிர்வு ;)
நல்ல தொகுப்பு :)
அருமையா எழுதியிருக்கீங்க .
விழாவை நேரில் கண்ட உணர்வு ஏற்பட்டது உங்கள் விவரிப்பில். பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.
//6 மணிக்கு தொடங்கவேண்டிய நிகழ்வு 6.30 வாக்கில் தொடங்கியது. //
தமிழர் :)
நல்ல பகிர்வு.
நேரில் வந்து கலந்து கொண்டதைப் போல் இருந்தது.பாராட்டுக்கள்
முத்துலட்சுமி அவர்களுக்கு ..
தங்களது இயல்பான பேச்சை போலவே தங்களது பதிவும் மனதில் நிற்கிறது .
வாழ்த்துக்களுடன்
தேவராஜ் விட்டலன்
விழாவில் நேரில் கலந்து கொண்டது போன்ற உணர்வு. மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
நன்றி கோபி :)
---------
நன்றி கதிர் :)
---------
நன்றி ஆயிஷா:)
---------------------
நன்றி ஆதி :)
-----------
நன்றி சுசி:) விண்ட்டர்ல மழை சீசன் இல்லையா வரவேண்டியவங்க வரவேணாமாப்பா :)
-----------------------
கோமா நன்றிங்க :)
-----------------------
நன்றி விட்டலன் .. புகைப்படங்கள் நன்றாக எடுத்திருந்தீர்கள் அதற்கும் நன்றி.:)
----------------------------
ரத்னவேல் நன்றி :)
அருமையாக தொகுத்து இருக்கீங்க.வாழ்த்துக்கள்.
இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ள மிக விருப்பம் எனக்கு,
ஆனால் வாய்ப்பு மிக குறைவு.
அதை நிவர்த்தி செய்கின்றது தங்களின் இக்கட்டுரை
நன்றிப்பா! :)
மிகுந்த மகிழ்ச்சி , நிகழ்ச்சியை நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள் ,
அப்பறம் தில்லி அனானிமஸ் அவர்களுக்கு//
That is good. Mrs Susheela, as Retd Prof of Tamil. Ok
There is still one more effort u need to take. Hope you try that.
எல்லாரும் நாஞ்சில் நாடன் என்று எழுதியிருக்கிறார்கள்.
அரசு அப்படி அழைத்து எந்த விருதும் கொடுக்காது.
விழுப்புரம் சின்னச்சாமி கணேசனுக்குத்தான் பத்மசிரி. சிவாஜி கணேசனுக்கல்ல.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரனுக்குத்தான் பாரத் ரத்னா விருது கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அல்ல.
எனவே நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்படவில்லை.
பின்னர் எவருக்கு ?
அவர் இயற்பெயரை அவரிடமே கேட்டிருக்கலாமே ?
இப்படிக்கு
சிம்மக்கல் வீரபாண்டியன்
132, சிம்மக்கல்
ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூருக்கு எதிரில்
மதுரை
தமிழ்நாடு
நன்றி ஜிஜி:)
----------------
மீனாமுத்து நன்றி.... நானும் இப்பொழுது தான் இவற்றுக்கு எல்லாம் சென்று வரத்தொடங்கி இருக்கிறேன்..:)முன்பு வாய்ப்பிருந்தும் போகமுடியவில்லை.
---------------------
நன்றி அரங்கசாமி :)
சிம்மக்கல்லாரே..நீங்க ஆசிரியரா இருந்தீங்களோ? என் பதிவை திருத்தோ திருத்துன்னு திருத்துறீங்களே..
அதான் பின்னூட்டத்துல போட்டுட்டீங்களே இனி வேண்டியவங்க வந்து படிச்சிப்பாங்க..நீங்களே சொன்னமாதிரி எல்லாரையும் எல்லாராலும் திருப்திப்படுத்தமுடியாது என்பது உண்மைதான்.
நீங்க மதுரையிலிருந்து டில்லி வந்து இருக்கீங்களோ.. ஏன்னா மதுரை அட்ரஸெல்லாம் குடுக்கிறீங்க ஆனா கமெண்ட் மட்டும் தில்லியிலிருந்தே போடறீங்களே அதான் கேட்டேன்.
நாஞ்சில் நாடனுக்கு மட்டுமல்ல. சாகித்ய அகாடமியைப் பொறுத்தவரை படைப்பாளிகள் அனைவருக்கும் அவர்களின் புனைபெயர்களிலேயே விருது வழங்குகிறார்கள். விருது விழாவில் வழங்கப்பட்ட கையேட்டிலும் விருதிலும் நாஞ்சில் நாடன் என்றுதான் அச்சிட்டும் பொறித்தும் அளித்திருக்கிறார்கள். ஆனால் விருதுப் பாராட்டை வாசித்த அம்மணி மட்டும் நஞ்சில் நடான் என்று குறிப்பிட்டார்.
கி.பென்னேஸ்வரன்
இருந்தாலும் சமூகத்தைப்பற்றிய விமர்சனங்களை கட்டுரைகள் தானே சிறப்பாக வெளிப்படுத்தும் அதனை கதைகளில் வைத்து என்னபயன்? //
மிகச் சரியான பார்வையாக படுகிறது! கஷ்டப்பட்டு போனதிற்கு பலனாக எங்களுக்கு இந்தப் பதிவு. விசயத்தை அறிந்து கொண்டோம். நன்றி!
Thanks Mr Penneswaran.
So they called MGR and gave away Bhrat Ratna.
Not true.
Maybe, as u said, the trend has now changed.
Anyway, what is the real name of Nanjil Nadan ?
'இருண்மையை ஒளியாக'
இருண்மை ?
கேள்விப்படாத தமிழ்ச்சொல் எனக்கு !
இருள் + தன்மை = இருண்மை ?
இருட்டு + தன்மை = இருண்மை ?
புணர்ச்சி இலக்கணம் என்ன சொல்கிறது என்பதை பேரா. எம்.ஏ.சுசிலா (ஓய்வு) (இதுவே அவரைச் சரியாகக் குறிக்கும் முறை. ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் என்பதை விட)
(We cant creat formal Tamil. You ought to follow the prescribed rules in writing formal Tamil. Same applies to English also.)
அவர்களிடமே கேட்கலாமே ?
நான் எங்கிருன்து எழுதுகிறேன் என்பதை விட என்ன எழுதுகிறேன் என்பதுதான் நோக்கப்படவேண்டும் என்பது என் கருத்து.
ஓராண்டு இங்கே. அடுத்த ஆண்டு இதே திங்களில் சிம்மக்கல்லில் இருன்து எழுதப்படும் அவாவிருப்பின்.
இருட்டு என்னும் பதம் ஏற்கனவே இருக்கிறது.
இருண்மை' என்று புதிதாக ஒரு சிறுமுயறசி தேவையா ?
இருளை ஒளியாக்க
அல்லது
இருட்டை வெளிச்சமாக்க
என்று எழுதலாமே ?
வந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பேனோ அப்படியே இருந்தது.
சிம்மக்கல்லாருக்கு..
பொறுமையா திருத்த முற்படுகிறீர்கள் . ஆனால் அவை தவறே இல்லையே ஏன் திருத்த வேண்டும். இருண்மை என்ற சொல் உண்டு. மேலும் இது பாண்டிச்சேரி அன்னையின் வாக்கிலிருந்து
எடுத்தாளப்பட்டிருக்கிறது.:)
நன்றி பென்னேஸ்வரன் சார்..
உங்கள் பதிவிலேயே அந்தம்மா பேரை தப்பாக வாசித்ததைப் போட்டிருந்தீர்கள் . அவர் எப்படித்தான் வாசித்தாரோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. இப்போது தெரிந்துகொண்டேன் நன்றி :))
தெகா இன்னும் நல்ல கருத்துக்களை எல்லாம் பேசினார். மேலும் அவர் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்ற போது அளித்த ஏற்புரையை அச்சடித்து கொடுத்தார்கள். அதும் கூட சிறப்பாகவே இருந்தது முடிந்தால் அதனையும் பதிவில் போடலாம் முயற்சிக்கிறேன்.
ஆஹா... முத்துலட்சுமி, நீங்களும் விரைவில் பிரபலப் பதிவர் வரிசையில் சேர்ந்து விடுவீர்கள் போலத் தோன்றுகிறது. அனானிமஸ் விவாதம் துவக்கி விட்டார்.
நான் இதுவரை உங்கள் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட்டதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது சர்ச்சை (சர்ச்சைதானே...) துவங்கி விட்டதால் நானும் கொஞ்சம் ஊதி விடலாம் என்று பார்க்கிறேன்.
முதலில் உங்கள் பதிவு - நடந்ததை இயன்றவரை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள், உங்கள் நினைவுத் திறனுக்குப் பாராட்டுகள். நீங்கள் குறிப்பிடாமல் விட்ட ஒரு விஷயத்தை சித்ரா குறிப்பிட்டு விட்டார். (அவரும் வந்திருந்தாரா என்ன... அவரை நான் அறியேன் என நினைக்கிறேன்.)
இரண்டாவது - பேராசிரியை. ஓய்வு பெற்றவர் என்றாலும்கூட பேராசிரியர் என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆங்கிலத்திலும் அது வழக்கம்தான். கிருஷ்ண ஐயர் ஓய்வு பெற்று சுமார் 25 ஆண்டுகள் ஆன பின்னும் அவர் ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர்தான். பேராசிரியர்களுக்கும் அது பொருந்தும்.
மூன்றாவது - ராகவன்தம்பி ஏற்கெனவே விளக்கி விட்டார். என்றாலும் இது கூடுதல் தகவல். சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோரின் இயற்பெயர்களை இவ்வளவு நன்றாக நினைவு வைக்கும் நண்பர்கள் இலக்கியவாதிகளின் பெயர்களையும் சற்று அறிந்து வைத்திருக்கலாமே... அறியாமல் இருந்தாலும் தவறில்லை, ஏனெனில் நாம் வாசிப்பது அவருடைய பெயரை அல்ல, எழுத்துகளைத்தான். இருப்பினும், நாஞ்சில் நாடன் என்ற பெயரில்தான் விருது வழங்கப்படவில்லை என்று பின்னூட்டத்தில் எழுதியதில் குற்றம் காணும் அவசரம் தெரிகிறது, எனவே சுட்ட வேண்டியிருக்கிறது. அவருடைய இயற்பெயர் ஜி. சுப்ரமணியம். அவர் நாஞ்சில் நாட்டுக்காரர் என்பது மட்டுமல்ல, நாஞ்சில் என்றால் கலப்பை என்றும் பொருள். உழவன் கருவியாகக் கலப்பையை நாடுவது போல எழுதுகோல் என்னும் கலப்பையை நாடுபவன் என்ற பொருளில் அவர் தன் பெயரைப் புனைந்திருக்கலாம். விருது அறிவித்த நாளிலிருந்து, விருது அளித்த நாள் வரையிலும் சாகித்ய அகாதமி பயன்படுத்திய பெயர் நாஞ்சில் நாடன் என்பதே.
நான்காவது - இருண்மை என்பது குறித்து. இதுவரை கேள்விப்படாத தமிழ்ச்சொல் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. ஒருவேளை தீவிர இலக்கியத்துக்குப் புதியவராக இருக்கலாம். தவறில்லை, இருண்மைக் கவிதைகள் பலவற்றை ஏற்க இயலாதவன் என்றாலும்கூட அவற்றை ஒதுக்கவும் இயலாதவன் என்ற வகையில், ஒரு யோசனை - சுசிலா அம்மையாரிடம் கேட்கலாமே என்று கேட்டிருக்கிற நண்பர் சுசீலா அம்மையாரின் வலைப்பக்கத்துக்குச் சென்று http://www.masusila.com அங்கேயே கேட்கலாம். தெளிவாக பதில் அளிப்பதில் திறமையானவர்.
கடைசியாக - நாஞ்சில் நாடனுக்கு மதுரை .... தில்லி வரை பாராட்டு கொஞ்சம் மிகைதான் என்பது பற்றி. ஆம், சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களில் எவருக்கும் இவ்வளவு பெரிய பாராட்டு நிகழ்ச்சிகள் நடந்ததில்லை. இப்போது நடப்பதற்குக் காரணம், நாஞ்சில் நாடனின் எழுத்து பரவலாகப் படிக்கப்பட்டு விட்டது என்பதல்ல. விருது கிடைக்க வேண்டிய ஒருவருக்கு உரிய நேரத்திலேயே கிடைத்து விட்டது என்பதுதான். (உரிய நேரத்தில் கிடைத்ததா என்பதில் நாஞ்சில் நாடனுக்கு உடன்பாடு இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், நாடனே அன்று குறிப்பிட்டதுபோல, 80-85 வயதில் இல்லாமல் இவ்வளவு சீக்கிரமே கிடைத்து விட்டது என்பது அனைவரும் ஏற்க வேண்டிய விஷயம்.) அவருடைய சதுரங்கக் குதிரையிலும் மிதவையிலும் மதயானைகளிலும் பயணித்த வாசகர்கள் அவருக்கு விழா எடுப்பதில் மிகை என்ன இருக்க முடியும்... ஒருவேளை நான் தில்லியில் இல்லாமல் வேறு ஊரில் இருந்திருந்தால் அங்கே ஒரு விழா நடத்தியே இருப்பேன். அப்புறம், ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு - பாராட்டத் தெரியாத சமூகம் முன்னேறுவதில்லை என்று. ஆமாமா... பாராட்டிப் பாராட்டி தமிழன் அப்படியே எங்கியோ....... போயிட்டான் பாரு என்று கேட்டு விடாதீர்கள்.
இந்தப் பின்னூட்டம் பதிலடி அல்லது விவாத நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல, தெளிவாக்கவே. முதல் பத்தியில் ஊதிவிடலாம் என்று குறிப்பிட்டது நகைச்சுவைக்குத்தான்.
ஷா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷா..
சித்ரா நான் அளித்திருந்த கருத்தைத்தான் எடுத்து எழுதி நாஞ்சிலை பாராட்டி இருக்கிறார்.
பேராசிரியர் பதம் பற்றி என் தந்தையும் கூறினார்கள். ஆனால் சரிதான் மாத்திவிட்டோமே .. மீண்டும் மீண்டும்மாற்றினால் முல்லா கதை போல ஆகிவிடும் என்று நினைத்து ..இனி நினைவில் குறித்துக்கொள்வோம் என்று விட்டுவிட்டேன்..
இருண்மை பற்றிய விளக்கம் சுசீலாம்மா கருத்தரங்க பதிவில் கூட கலாநேசனுக்காக குடுத்திருந்தார்கள்.
நாஞ்சிலின் இயற்பெயரும் அவருக்கான வார்ட்ப்ரஸ் தளத்தில் உள்ளது. கூகிளிட்டு இந்த பதிவை எழுதலையே.. பார்த்த நிகழ்வின் தொகுப்புத்தானே என்பதால் நான் அதற்கு பதிலளிக்கவில்லை..
உங்கள் நீண்டபதில் நல்ல விளக்கங்களை அளித்துள்ளது . நேரமெடுத்து பதிலளித்ததற்கு நன்றிங்க :)
நன்றி லாவண்யா :)
மீண்டும் நீங்கள் போட்டிருக்கின்ற பின்னூட்டம் தேவையற்ற ஒன்று . அதனால் பிரசுரிக்கவில்லை.
இருண்மை பற்றிய விளக்கம் மட்டும் அளிக்கின்றேன்.
---------------
மை,து என்ற இரண்டு பண்பு விகுதிகளுமே இருள் என்ற சொல்லுடன் சேர்ந்து வரலாம்.புணர்ச்சி விதிகளின் படிதான் இவை வந்துள்ளன.
இருள்+மை= இருண்மை
இருள்+து=இருட்டு
பி.வி.நமசிவாயமுதலியார் 1911ல் வெளியிட்டுள்ள தமிழ் மொழியகராதியில் பக்கம் 234ல் இருண்மை=இருளுடைமை என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி.
அன்பின் முத்து,
மிக நல்ல ஒரு பதிவின் சில பின்னூட்டங்கள்,திசை திரும்பிச் சென்றுகொண்டிருப்பதால் ஒரு சில விளக்கங்கள்.
இருண்மை என்பது,ஒரு சிலர் கேள்விப்படாத சொல் என்பதாலேயே அது மரபான தமிழ்ச் சொல் அல்ல என்றும்,நாமாகச் சொற்களை உருவாக்குதல் கூடாது என்றும் கூறுவதில் பொருளில்லை.’பயணம் செய்தான்’எனச் சொல்வது முந்தைய மரபு;சுஜாதா தன் கதைகளில் ‘பயணித்தான்’என மாற்றினார்.இன்று பலரும் அதைப் புழங்கியும் வருகிறோம்.’பழையன கழிதலும்புதியன புகுதலும் வழுவல...’என்பது தமிழ் இலக்கணம் காட்டும் நெகிழ்வான நெறி.மேலும் ‘இருண்மை’என்ற சொல் சற்று மறைபொருளாக அமையும் சமகாலப் புனைவிலக்கியங்கள்,கவிதைகள் ஆகியவற்றைக் குறிப்பிடப்பயன்பட்டபோதும் அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பழந்தமிழ்ச் சொல்லே.சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளிட்டிருக்கும் கழகத் தமிழ் அகராதியின்120ஆவது பக்கத்தில் அச் சொல் இடம் பெற்று அதற்கான பொருள்’இருண்டிருக்கும் தன்மை’,’இருளுடைமை’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின்150ஆவது பக்கத்தில் அதே சொல்லுக்கான பொருள்,’புரிபடாமல் இருப்பது’,’எளிதில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருப்பது’ என்று தரப்பட்டிருக்கிறது.இது இன்றைய இலக்கியங்கள் சிலவற்றுக்குமட்டுமே பொருந்தும்.நீங்கள் பயன்படுத்தியுள்ளது,முதலில் நான் குறிப்பிட்ட இருட்டு என்ற பொருளில்..எனவே இருண்மை என்ற சொல்லாக்கத்தில் எந்தப்பிழையுமில்லை.(மேலும்சில)
நாஞ்சில் நாடனின் இயற்பெயர் தெரியாமல்,அவர் படைப்பில் எதையுமே படிக்கவும் செய்யாமல் ஒரு பதிவுக்குத் தைரியமாகப்பின்னூட்டம் இட முன் வந்த மனிதரை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும்.எனக்குப் பேராசிரியர் பட்டம் இனி தேவையே இல்லை..சுசீலாம்மா என நீங்களெல்லாம் அன்போடும் பாசத்தோடும் அழைப்பதை விடவா இதெல்லாம் உயர்ந்தது?ஆனால் உங்கள் பதிவுக்கான கருத்துரையில் ஷா சொல்லியிருப்பது போல அந்தப் பணி ஆற்றியவர்களைஅவ்வாறு குறிப்பிடும்மரபு தொடரத்தான்செய்கிறது.ஏன்..இன்று வரை அன்பழகன் பேராசிரியர் என்றுதானே குறிப்பிடப்பட்டு வருகிறார்?
போகட்டும்!என்னை ஓய்வு கொள்ள வற்புறுத்துவதில் அந்த நண்பருக்கு ஏன் இத்தனை ஆனந்தம்/ஆதங்கம்?இப்போதெல்லாம் ஓய்வு என யாரும்போட்டுக் கொள்வதில்லை;பணி நிறைவு என்றுதான் குறிப்பிடுகிறோம்.குறிப்பிட்ட ஒரு பணி முடிந்தது என்றுதான் அதன் பொருள்.என் இறுதி மூச்சு வரை ஓய்வு என்பது நான் அறியாத ஒரு சொல்லாக இருக்க வேண்டுமென்பதே என் அவா.என் பதிவுகளில் மொழிஆராய்ச்சி பற்றிய விவரம் இருக்கவேண்டுமா,இலக்கியம் குறித்து எழுதவேண்டுமா என்பதை முடிவுசெய்யும் உரிமை என்னுடையதுமட்டுமே.இறுதியாக ஒன்று...இப்படி மறைந்து நின்று அம்பு விடும் ஆட்கள் தேவையில்லாமல் நம் சக்தியில் பாதியை இதிலேயே விரயம் செய்து வீணாக்கிவிடுவார்கள்.கவனமாய் இருங்கள்.!
மிக அருமையான பதிவு.ஜீஜீ பதிவிலும் படித்தேன், மற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்
நாஞ்சில் நாடனின் கதைகளை நான் தேடிப் பிடித்து படித்ததில்லை. அவருடைய சில கட்டுரைகளை அவ்வப்போது படித்திருக்கிறேன். இப்போது, அவருடைய சில கதைச் சுருக்கங்களை, அவரைப் பாராட்டிய சிலர் கூறக் கேட்டதிலிருந்து, அவர் கதைகளை தேடிப் படிக்க ஆவல் வந்தது உண்மை.
பாராட்டுக்கள்
திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்கும்
டெல்லி தமிழ் சங்கத்திற்கும்...
Post a Comment