February 4, 2007

பள்ளிக்கூடம்

"பள்ளிக்கூடம் " எப்போது இப்படி சொல்வதை விட்டு மாறினேன் .நினைவில்லை. எல்லாரும் ஸ்கூல் என்று தானே சொல்ல ஆரம்பித்து விட்டோம். பள்ளிக்கூடம் என்றால் ஸ்கூலா ஏன் நாம அப்படி வீட்டில் சொல்வது இல்லைன்னு பொண்ணு கேட்கும் போது யோசித்ததில் எப்போது மாறிப் போனதுன்னு தெரியாம சில பழக்கம் ஒட்டிக்கிட்டு இருந்து இருக்கு.

சின்னதுல நாங்க இருந்தது ஒரு கிராமம்.
எங்க அப்பா கல்லூரியில் ஆசிரியர் . கல்லூரி என்றாலே காட்டுக்குள் தானே , நகரத்தை விட்டு வெளியே . கல்லூரிக்கு அருகில் என்பதால் கிராம வாழ்க்கை . அங்க நேராக ஒண்ணாம் வகுப்பு தான் .




இருந்த ஓரிரண்டு மாடி வீடுகளில் ஒன்றில் வாடகைக்கு, நாங்கள். கம்பி கிராதிகள் வழியாக பள்ளி செல்லும் சிறுவர்களை பார்ப்பது என் வாடிக்கை. இன்னும் சில மாதங்கள் இருக்கிறது என்ற போதும் நானும் பள்ளிக்கு போவேன் என்று தினம் தினம் அழுகை .
சரி என்று ஒரு 6 மாதம் வயதைக் கூட்டி போட்டு சேர்த்து விட்டார்கள்.



நல்ல நாளும் கிழமையும் பார்த்து கை நிறைய மிட்டாய் குடுத்து எல்லாருக்கும் கொடுத்து நீயும் சாப்பிடு என்று
எழுது பலகையோடு பள்ளிக்கூடத்தில் கொண்டு விட்டார்கள் அப்பா. வராண்டாவே கொஞ்சம் களை இல்லாமல் தான் இருந்தது. "சரி அம்மா ,அது தான் உன் வகுப்பு போய் உட்கார்" என்று சொன்னார் தலைமை ஆசிரியர்.



பள்ளிக்கூடம் அந்தக் கால கட்டிடம் .கோயிலை சேர்ந்தது . அதுவும் என் வகுப்பறை இருட்டாக சுவற்றில்
செங்கல் எல்லாம் தெரிய ஒரு மாதிரி பயமுறுத்துவதாய்
இருந்தது. சின்ன சன்னல் ஒன்றும் இருந்தது ஆனால் அதன் வழி வெளிச்சம் வரவில்லை. வெளிச்சத்துக்கு கூரை மேலே ஒரு சதுரக் கண்ணாடி . ஏதோ பி.சி.ஸ்ரீராம் படம் மாதிரி ஒரு வெளிச்சத்தூண் இருட்டு வகுப்புக்கு நடுவில் .



எனக்கு ஒண்ணுமே புரியலை. பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் கொஞ்சம் உத்து பார்த்தாதான் தெரியறாங்க .. (அப்பமே கண்ணு கோளாறு இருந்து இருக்குமோ என்னமோ) . இதுல சுவத்தில இருந்த ஒரு பல்லி மட்டும் சரியா தெரிஞ்சிருச்சு. அஞ்சு நிமிடத்திலேயே இடம் நமக்கு கற்பனை செய்த மாதிரி இல்லையேன்னு ,அழுது கிட்டே
வெளியே ஓடி, நாலு வீடு தாண்டிப் போன அப்பாகிட்ட ,
நான் வீட்டுக்கே வரேன்னு சொல்லியாச்சு.




அப்புறம் சமாதனப்படுத்தி.. கீழ்வீட்டுப் பொண்ணு , விளையாட்டு தோழி சாலா அதே வகுப்பு தானாம். அவ பக்கத்துல உட்கார வச்சுட்டு போனாங்க...அதுக்கப்புறம் எப்படியோ ரெண்டு வருசம் அதே பள்ளிக்கூடத்தில் படிச்சு
ஒப்பேத்தியாச்சு.



இது என் முதல் நாள் பள்ளி அனுபவம்.என் பொண்ணோடது, கதையே வேற. வீட்டில் நானும் அவளுமே விளையாண்டு படித்து போரடிச்சு போயிருந்த அவளை 3 வயதில் ப்ளே ஸ்கூல் சேர்க்கப்போனோம். அதுக்கு இண்டர்வ்யூவாம்... வீட்டுல எப்போதும் தமிழ் தான். இது தில்லியாச்சே.. பேச்சுவழக்கு ஹிந்தியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது. போகும் போதே போட்டிருக்கும் வளையல் ,உடையில் இருந்த பொம்மை எல்லாத்துக்கும் சொல்லிக் குடுத்துக் கூட்டிப் போயிருந்தோம்.



போனதும் மிட்டாய் குடுத்து , உட்கார சேர் போட்டதும் தேங்க்ஸ் சொல்லிட்டா. (தண்ணி குடுத்தா கூட எனக்கே சொல்லுவா.) மத்த கேள்விக்கு எல்லாம் வளையல், முயல்ன்னு ஒரே தமிழ் தான் . என்ன இது எப்படி கம்யூனிகேட் செய்வான்னு கேட்ட மேடத்தைப் பார்த்து , என்னங்க பெரிய ஸ்கூல் இண்ட்ர்வ்யூக்கு தயார் செய்யவும் படிக்கவும் தானே இங்க சேர்க்கிறோம் நீங்க தான் பார்த்து தயார் செய்யணும் அப்படின்னு போட்டாச்சு ஒரு போடு..பின்ன வீட்டிலும் வேற மொழின்னா அப்பறம் எப்படி தமிழ் வரும்.(ஆமா நாம ஆங்கிலம் சொல்லிக் குடுத்து குட்டி ச் சுவர் ஆக்காம இருக்கறதுக்கு ஒரு சாக்கு )



முத நாள் கொண்டு போய் விட்டா என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு பை கூட சொல்லாம மேடத்தை ப் பார்த்து குட்மார்னிங் சொல்லிட்டு உள்ளே போயே போய்ட்டா :(( எனக்கு தான் அழுகை.வீட்டுக்கு போய் தனியா உட்கார்ந்து ஒரே கவலை. கூப்பிடப்போனப்போ என்னம்மா அம்மாவுக்கு ஒரு பை கூட சொல்லாம போயிட்டயேன்னு கேட்டா...ஓ அப்படியா நீ சொல்லவே இல்லையே..மேடத்துக்கு குட்மார்னிங்க் சொல்லச் சொன்னே சொல்லிட்டேன் அப்படிங்கறா.


அம்மா அவங்க எனக்கு தெரிஞ்சதா சொல்லித்தராங்கம்மா. நீ சொல்லிக்குடுத்த பாட்டு(rhymes) எல்லாம் வேகமா பாடினேன். அவங்க நீ கேட்டுக்கிட்டு இரு இவங்களுக்கு சொல்லிக் குடுத்துக்கிறேன்னு சொல்லிட்டாங்களாம். பெருமை தான். தமிழ் பேசினாங்களாம் கிளாஸ் மேடம்.



அடுத்த நாள் கொண்டு விடும் போது மேடம் குட்மார்னிங்க் சொன்னதும் கண்டுக்காம திரும்பி , "அம்மா பை "ன்னு சொல்லிட்டு அப்புறமா அவங்களுக்கு விஷ் பண்ண அழகை என்ன சொல்றது போங்க.

18 comments:

மங்கை said...

என்ன லட்சுமி மலரும் நினைவுகளா.. இது எல்லாம் நம்மள ரீசார்ஜ் பண்ணும்..

இத படிக்கிறப்போ எனக்கும் பழைய நினைவுகள் வருது... முதல் வகுப்பு பரிக்கிறப்போ முழுப்பரிட்சைல டீச்சர் வினாத்தாள் குடுக்க, நான் கேட்டேனாம் என்ன வெறும் Qtn paper கொடுக்கரீங்க..answer இல்லாம நான் எப்படி எழுதறதுன்னு.. ஒரே அழுகை.. என்ன அழைச்சுட்டு போக பாட்டி தான் வருவாங்க...அவங்களும் டீச்சர் கிட்ட சண்டை..என் பேத்தி கேக்கிறத கொடுக்க வேண்டியதுதானேன்னு..:-)))).. இதை இன்னும் அண்ணா சொல்லீட்டு சிரிப்பார்...

மஞ்சூர் ராசா said...

அது என்ன திடீர்னு அம்மாவின் நினைவுகளிலிருந்து பொண்ணுக்கு தாவிட்டீங்க.

சரி, சரி, மாறி மாறி இரண்டையும் எழுதப்போறீங்களா?\

ம்ம்... நடத்துங்க நடத்துங்க

படிக்க காத்துகிட்டிருக்கோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா மங்கை .மலரும் நினைவுகள் .
ரீசார்ஜ் + பகிர்தல் ரெண்டுத்துக்கும் இது உதவும். அதுதான் பதிவாக்கிட்டேன்.

சீனு said...

//நல்ல நாளும் கிழமையும் பார்த்து கை நிறைய மிட்டாய் குடுத்து எல்லாருக்கும் கொடுத்து நீயும் சாப்பிடு என்று
எழுது பலகையோடு பள்ளிக்கூடத்தில் கொண்டு விட்டார்கள் அப்பா.//

அப்பவே உங்களுக்கு டவுட்டு வரவில்லையா?

//போனதும் மிட்டாய் குடுத்து , உட்கார சேர் போட்டதும் தேங்க்ஸ் சொல்லிட்டா.//

தலைமுறை தாண்டியும் லஞ்சம் ஒழியவில்லையே!!!

//(தண்ணி குடுத்தா கூட எனக்கே சொல்லுவா.)//

பரவாயில்லையே!!!

//அடுத்த நாள் கொண்டு விடும் போது மேடம் குட்மார்னிங்க் சொன்னதும் கண்டுக்காம திரும்பி , "அம்மா பை "ன்னு சொல்லிட்டு அப்புறமா அவங்களுக்கு விஷ் பண்ண அழகை என்ன சொல்றது போங்க.//

:))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மஞ்சூர் ராசா said...
அது என்ன திடீர்னு அம்மாவின் நினைவுகளிலிருந்து பொண்ணுக்கு தாவிட்டீங்க.

சரி, சரி, மாறி மாறி இரண்டையும் எழுதப்போறீங்களா?\

ம்ம்... நடத்துங்க நடத்துங்க

படிக்க காத்துகிட்டிருக்கோம். //

நீங்க சொன்னப்புறமா தான் யோசித்தேன் முந்தைய பதிவுல பொண்ணுக்கிட்ட ஆரம்பிச்சு என்னோடதுல முடிச்சேன்.இப்போ என்னோட நினைவுல இருந்து பொண்ணுகிட்ட முடிச்சுருக்கேன்.
திட்டமிட்டு இல்ல.ஆனா காத்திகிட்டிருக்கோம்ன்னு சொன்னதும் ஒன்னுமே புரியலை.வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராசா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கு நன்றி, சீனு.
விமர்சனம் நல்லா ரசிக்கும் படியா எழுதியதுக்கும் நன்றி. (பின்னூட்டம் ஒன்று உங்களுக்கு போட்டு கலாய்க்கப்பட்ட அனுபவம் இருக்கே):))

கதிர் said...

அழகான நினைவுகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி, தம்பி.

சீனு said...

//(பின்னூட்டம் ஒன்று உங்களுக்கு போட்டு கலாய்க்கப்பட்ட அனுபவம் இருக்கே):))//

எது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க அழகா இல்லையான்னு ஒரு பதிவு போட்டீங்களே அது.இதெல்லாம்
சொ.செ.சூ தான் வேறேன்ன.இந்த சொற்றொடர் பரிச்சயமானது அப்ப தான்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அழகான மலரும் நினைவுகள் லட்சுமி. எங்க வீட்டு நினைவுகளைக் கிளப்பி விட்டுவிட்டது. எனக்கு வீட்டுக்குப் பக்கத்திலேயே, ஒட்டிகொண்ட நர்சரி என்பதால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிங்களமும் கத்துப்பேன் என்று அடம் பிடிச்சது நினைவுக்கு வருது. பள்ளிக்கூடத்தில மூணு மொழிகளிலும் எழுத்துகள் சொல்லிக்கொடுத்துப் பாடல்களும் சொல்லிக்கொடுத்தாங்க. நம்ம கேஸ் இப்படின்னா, தம்பி வந்து அம்மா அவனைப் பள்ளியில விட்டுட்டு சந்தைக்குப்போயிட்டு வீட்டுக்கு வர்ரதுக்குள்ள வீட்ல இருப்பான். சந்தடியில்லாம பள்ளிக்கூடத்திலருந்து வெளில வந்துருவானாம். கொழும்பு மாதிரி நகரத்தில கொஞ்சம் பயமான விசயந்தான். அதனாலயே பள்ளிக்கூடத்துக்கு அருகில் கடை வைத்திருந்த மாமா அடிக்கடி போய் பார்த்துட்டு வருவாராம். இன்னும் நிறையக் கதை இருக்கு.. சொன்னா வீட்ல உதைப்பாங்க. :) சொ.செ.சு.. தான். ;)

-மதி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கு நன்றி , மதி.
மேலும் விரிவாக உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தமைக்கும் நன்றி.
வீட்டுக்கு இப்போ தெரிந்தால் என்ன சும்மா பயப்படாமல் பதிவப் போடுங்க.:))

சீனு said...

//நீங்க அழகா இல்லையான்னு ஒரு பதிவு போட்டீங்களே அது.இதெல்லாம்
சொ.செ.சூ தான் வேறேன்ன.இந்த சொற்றொடர் பரிச்சயமானது அப்ப தான்.//

ஓ! ஓ.கே.

//எனக்கு வீட்டுக்குப் பக்கத்திலேயே, ஒட்டிகொண்ட நர்சரி என்பதால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.//

ஆமாங்க மதி. எனக்கும் அதே. அதுவும் என் டீச்சர் என் அம்மாவுக்கு நல்ல பரிச்சயமானவர். (அப்பொழுது மட்டும்) கொஞ்சம் நன்றாக படிப்பதால் தப்பித்துவிடுவோம். ஆறாவது படிக்கும் பொழுது வரலாறு ஆசிரியருக்கு பயந்து 1 மாதம் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தேன். பின் ஒரு நாள் அகப்பட்டேன். 9 வரை பயங்கர மக்கு + rog. அப்புறம் 9வதில் ஃபெயிலாக்கப்பட்டதால் புத்தி வந்து average student-ஆ என்னை நானே உயர்த்திக் கொண்டேன்(!). அப்புறம் என்ன...அந்த அனுபவத்திலே இப்பொழுது குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

முத்துலெட்சுமி,

சொல்லப்போறது என்னுடைய விஷயம் மட்டும்னா தைரியமா சொல்லிர்ரலாம். ஆனா, சொல்ல வந்ததெல்லாம் வீட்டில இருக்கிற மத்தவங்க விஷயம் என்றபடியால்தான் தயக்கம். ஆனா, என்னுடைய பதிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பப்ப எல்லாருடைய லீலைகளையும் எழுதியிருக்கேன். :)

சீனு: அட்ரா அட்ரா. முத்துலெட்சுமி, பாருங்களேன் விஷயமெல்லாம் எப்படி வந்து விழுகுதுன்னு. இப்ப சொ.செ.சூ. யார் செஞ்சுக்கிறாங்க. ;)

சீனு: கலாட்டாதான்! இந்தமாதிரி சின்னச்சின்ன விசயங்களை பகிர்ந்துக்கும்போது சுவாரசியமா இருக்கில்ல? ஒருவித நட்புணர்வும் வந்து ஒட்டிக்குது.

-மதி

சீனு said...

//சீனு: அட்ரா அட்ரா. முத்துலெட்சுமி, பாருங்களேன் விஷயமெல்லாம் எப்படி வந்து விழுகுதுன்னு. இப்ப சொ.செ.சூ. யார் செஞ்சுக்கிறாங்க. ;) //

முத்துலெட்சுமி தான்...ஆனா, பாத்தீங்கன்னா அவங்களை பாத்து நாமளும் உளரி கொண்டிருக்கோம் இல்ல. இப்போ, சொ.செ.அடுத்தவங்களுக்கு.சூ வெச்சுட்டாங்க...ராச தந்திரம்லே...

//இந்தமாதிரி சின்னச்சின்ன விசயங்களை பகிர்ந்துக்கும்போது சுவாரசியமா இருக்கில்ல?//

சுவாரஸ்யம் + இப்போ நெனச்சா சிரிப்பா வருது.

மதி, இதுல கூத்து என்னன்னா, கட் அடிச்சு ஸ்கூல்ல மாட்டிகிச்சாச்சு. மறுநாள் பெற்றோர்களை கூட்டி வர சொன்னாங்க. மாடிக்குவோம்கிற பயத்துல கெணத்துல குதிக்கலாம்ன்னு கிணத்து மேல ஏறி நின்னேன். கிணறு ஆழமா இருந்ததால(!)பயந்து இறங்கிட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏதோ என் பதிவுல கொஞ்சம் கூட்டம் கம்மியா வருதுன்னு உங்க கதையெல்லாம் எழுதறீங்க சீனு.
கிணத்துல விழப் போனீங்களா ? அடடா
பரவால்ல குடும்பத்துக்கு பயந்துருக்கீங்க நல்லது.பதிவா போட்ட சொ.செ.சூன்னு விட்டுட்டீங்க போல.

சீனு said...

//அடடா
பரவால்ல குடும்பத்துக்கு பயந்துருக்கீங்க நல்லது.//

ஆமாங்க. செத்து போனா அடிப்பாங்களே...அந்த பயம் தான்...:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இல்லங்க சீனு, குடும்பத்துக்கு பயந்து கிணத்துல குதிக்க நினைச்சத சொன்னேன்.
நீங்க குதிச்சதுக்கப்புறமா நடக்கப்போறது பத்தி பயந்திருக்கீங்கன்னு சொல்றீங்க.