கட்டி குடுத்த சோறும் சொல்லிக்குடுத்த சொல்லும்
வழித்துணைக்காகாதுன்னு சொல்லுவாங்க,பேசி வரப்போவது இல்லை பெண்விடுதலை. அன்பு, கருணை ,பொறுமை இப்படி சிலதெல்லாம் ஒரு ஆணுக்குள் இருந்தால் தானாகவே பெண்ணைப் புரிந்து கொண்டு மதித்து நடக்க ஆரம்பிப்பார்கள். அப்படி நடக்கத்தொடங்கி இருக்கும் ஆண்களுக்கு நன்றி. மற்றவர்களும் மாற முயற்சிக்கட்டும்.
சாதி மதம் இதிலெல்லாம் பின் தங்கி இருப்பவர்கள் பாதிக்கப்படுவது போல் ஆண், பெண் இருபாலரில் வந்த பாதிப்பு தான் பெண்ணியம் வரக்காரணம். பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் இருவிதமாக போராடுவார்கள். மிதவாதிகள் , தீவிரவாதிகள். இது எங்குமே இருக்கும் போக்குதான். தீவிரமான பெண்ணியவாதிகள் சொல்லும் கருத்தை எடுத்துக்கொண்டு மிதவாத பெண்ணியவாதிகளை எதிர்க்கக் கூடாது.
நான் பெண்ணியவாதி என சொல்லும் ஆண்கள் பெண்ணை உயர்த்துவதாக நினைத்துக் கொண்டு செய்கின்ற செயல் கூட சில சமயம் பெண்ணுக்கு எதிரானதாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அந்த பெண் எதை விரும்புகிறாள் என தெரிந்து கொள்ளாமல் அவளுக்காக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பெண்ணுக்கு எதிரானதே.
பெண்ணே! பேதை என்றழைத்து,
உன்னை சிறுமை படுத்தும்
இக்கூட்டம் , சொல்லும்
பாலூட்டும் தாய்க்கது , கடமையாம்,
கனிவான மனைவியவள் அடிமையாம்.
பெண்ணே! தெய்வம் என்றழைத்து,
உன்னை பெருமை(?) படுத்தும்
இக்கூட்டம் , சொல்லும்
பெற்றெடுத்து பேணுவது உன் கருணையாம்
போற்றி துணை செய்யும் நீ மங்கையரில் மாணிக்கமாம்
இரண்டில் எதில் மயங்கினாலும்
பெண்ணே! நீ வீழ்வதென்னவோ உண்மை.
இது கல்லூரி படிக்கும் போது எழுதியது. பார்க்கும் குடும்பங்களில் எல்லாம் கணவரின் கையிலோ தந்தையின் கையிலோ தங்கள் எதிர்காலத்தை குடுத்துவிட்டு அன்பையோ அல்லது வெறுப்பையோ கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து போகும் பெண்களையே பார்த்துப் பார்த்து எதிலும் படிக்காமலே பெண்உரிமைப் பற்றி தோன்றியது.
சாதி பேதங்களின் காரணமாக மனித கழிவுகளை எடுக்க வைத்தார்கள் ஒரு சாராரை எத்தனை கொடுமை. என்று எல்லாரும் பேசுகிறார்கள்... பெண்களை அப்படித்தான் வைத்திருக்கிறது இன்னமும் சமூகம். குழந்தைகளை பெற்று வளர்க்கும் சிலருக்கு இது புரியும். அம்மா சொல்வார்கள் கடவுள் தாயை சோதிப்பாராம். எத்தனை
பொறுமையானவள் எத்தனை அன்பானவள் இவள் என்று.
எப்படி தெரியுமா?
எல்லா குழந்தையும்(3 வயதுக்குள் இருக்கும் போது ) பொதுவாக தாய் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் தான் காலைக்கடனை செய்யும். அவள் உணவுக்கு நடுவில் அசுத்தம் செய்த குழந்தையை கோபிக்காமல்
சுத்தம் செய்து விளையாடச் செய்து விட்டு மீண்டும் தன் உணவை தொடருவாள்.
உடனே சிலர் சொல்லலாம் என் குடும்பத்தில் என் அண்ணா ஒருத்தர் இல்லையென்றால் சித்தப்பா ஒருத்தர் அவர்தான் தன் குழந்தையை இப்படிபட்ட நேரத்தில் பார்த்துக் கொள்வார் என்று. சொல்பவர்கள் யோசிக்கவேண்டும். எங்கோ ஒரு குழந்தை இரண்டு இதயத்தினுடன் பிறந்தது என்று சொல்வதற்கு ஒப்பானது இந்த வாதம். ஆண்கள் பொதுவாக அய்யோ குழந்தை என்மேல் அசிங்கம் செய்து விட்டான் என கோபப்படுவது தான் சகஜம்.
தாயும் தந்தையும் படிக்க வைத்து முன்னேற்றி வாழ்க்கையில் சாதிக்க வைக்க வேண்டும் என்று தங்கள் பிள்ளையை வளர்ப்பார்கள். ஆண் சாதித்துக் காட்ட சந்தர்ப்பங்கள் அமையும். பெண் ஒரு காலகட்டத்தில் குடும்பத்திற்காக தன்னை திசை திருப்பிக் கொள்கிறாள்.
சில வீடுகளில் மாறி வருகிறது சூழ்நிலை . ஒரு நாள் நீ ஒரு நாள் நான் என்று குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்கள். இன்னமும் தீண்டாமை இருக்கிறது என்பதை எப்படி ஒத்துக்கொள்கிறோமோ அப்படி இன்னும் பெண்ணடிமை இருக்கிறது . அதற்காக பேசித்தானே ஆகவேண்டி இருக்கிறது. சிலர் மாறினால் போதாது.
அந்த காலத்திலேயே வேலைக்கு போன பெண்கள் இருக்கிரார்கள் ஆனால் தன் விடுமுறைக்கும் கை காசுக்கும் கூட ஆண்களை கேட்டு தான் முடிவெடுக்கும் நிலைமையில் இருந்தார்கள்.
பொருளாதாரத் தேவைகளுக்கு வேலைக்கு செல்வது வேறு. தன் திறமையை காண்பித்து,தன் மனத்துக்கு நிறைவு கிடைக்க வாழ்க்கையில் உயர்வது வேறு.
பெண் என்பதற்காக சில தாக்குதல் வரும். ஆனால் அதற்காக புலம்பினாலோ , பார் இதற்கு தானே சொன்னோம் உன் இடத்தில் இரு என்று சொல்லிக்காட்டுவார்கள். பெண் ஆண் யாராயிருந்தாலும்
எதிர்ப்புகளும் பாதிப்புகளும் எப்போதும் வரக்கூடியது தான்.
ஆண் தனக்கு வரும் பாதிப்புகளை தனக்கானதாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் பெரும்பாலும். ஆனால்
பெண் தனக்கு நேரும் பாதிப்புகளின் காரணமாக தன் குடும்பமோ தன்னைச் சுற்றிலும் இருப்பாரோ பாதிப்படைய கூடாது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.
பார் எப்படி அடங்காதவளாக வளர்த்தாய் அதன் பரிசு என்பார்கள். குடும்பத்தில் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க போல ,என்று எல்லாமே குடும்பத்தைத் தான் தாக்கும்.
பெரும்பாலும் பெண்கள் தங்கள் துயரங்களினால் அடுத்தவர் பாதிக்கப்படக்கூடாது என்று அடங்கி போய் இருப்பார்கள்.
பெண்ணடிமைக்கு காரணம் பெண்ணா ஆணா என்பதல்ல முக்கியம். நாம் ஆணோ பெண்ணோ யாராயிருந்தாலும் பெண்ணை ஆணுக்கு சமமாய் பாவிக்க எப்போது தொடங்கப்போகிறோம் . இதற்கும் எதற்கு சமமாய் பாவிக்கணும் கடவுளே வேறாகத் தானே படைத்திருக்கிறான் என்று கேட்பார்கள் புரிந்துகொள்ள
விருப்பமில்லாதவர்கள்.
ஒரு குழந்தை அதுவும் பெண்ணோ ஆணோ போதும் எனும் நிலை வந்து விட்ட சூழ்நிலையில் ...இந்த பெண்ணடிமை ஒய்ந்துவிடும். வேறு வழியில்லை. எல்லா வசதி வாய்ப்புகளையும் ஒன்று போலவே அனுபவித்து வளரும் இருபாலரும் ஒன்று போலவே போட்டியிட்டு , வாழப் பழகிவிடுவார்கள்.
ஓசை செல்லா இப்போ பாலா பெண்கள் பற்றி பதிவு போட்டு இருக்காங்க.பெண்களைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. இது முதல் படி. நியாயம் இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் பெண்கள் வேஸ்டா அடிமையாத்தான் இருக்கணுமான்னு முடிவெடுங்க.(உடனே ஆண்கள் அடிமையா இருக்கற குடும்பத்தை உதாரணம் சொல்லிக்கிட்டு ஓடிவராதீங்க)
பெண்களை நட்பா நடத்துங்க. பகிர்ந்து வேலைகளை செய்து முன்னேற வழிவிடுங்க.
42 comments:
//ஆண் தனக்கு வரும் பாதிப்புகளை தனக்கானதாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள் பெரும்பாலும். ஆனால்
பெண் தனக்கு நேரும் பாதிப்புகளின் காரணமாக தன் குடும்பமோ தன்னைச் சுற்றிலும் இருப்பாரோ பாதிப்படைய கூடாது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.//
சரியான கருத்துக்கள்....
பாரதி கூட சகோதரி நிவேதிதாவை சந்தித்தப்பின்புதான் தன் மனைவி என்ற பெண் மீது கருணை கொண்டான். அது போலத்தான் சில ஆண்களும் - பெண்களின் பேச்சை கேட்டு அல்லது தாக்குபிடிக்க முடியாமல் - நானும் சமூகத்தில் எல்லோரையும் மதிக்கிறேன் என்று கூறுவார்கள்.
சென்ஷி
\\ சில ஆண்களும் - பெண்களின் பேச்சை கேட்டு அல்லது தாக்குபிடிக்க முடியாமல்//
:( என்ன சொல்றீங்க சென்ஷி தாக்கு பிடிக்கமுடியாமல்ன்னா என்னவோ கஷ்டபட்டுக்கிட்டு மாறுவாங்க போல தெரியுதே. அப்படி மாறி பிரயோசனம் இல்லை.புரிஞ்சுகிட்டு மாறணும்.
//:( என்ன சொல்றீங்க சென்ஷி தாக்கு பிடிக்கமுடியாமல்ன்னா என்னவோ கஷ்டபட்டுக்கிட்டு மாறுவாங்க போல தெரியுதே. அப்படி மாறி பிரயோசனம் இல்லை.புரிஞ்சுகிட்டு மாறணும்.//
சிலர் தங்களை புரிந்து கொள்ளவே முடியாமல் தவித்து அலைகின்றனர். இதில் பெண்களை புரிந்து கொண்டது போல் நடிக்க முடியுமே தவிர அவர்களால் நிஜப்படுத்த முடியாது.
இது வேதனைதரும் செய்திதான் -எனினும் உண்மைநிலை இது..
பாலாவின் தன் பதிவில் கூறியிருப்பதும் இதையே..
சென்ஷி
லட்சுமி
உடனே நம்ம சந்திப்புக்கு எழுத்துவடிவம் குடுத்திட்டீங்க...மகிழ்ச்சி
நல்லா சொல்லி இருக்கீங்க முத்து..
நட்புடன் பெண்கள் நடத்தப்பட்டா அதுவே போதும்...மத்தெல்லாம் தானா நடக்கும்னு நினைக்குறேன்...
நான் இங்கே வந்தேன்...படித்தேன் என்பதற்காக இந்த பின்னூட்டம்....
கருத்துச் சொன்னா எல்லாரும் சேர்ந்து என்னை கும்மீடுவீங்க, துனால....ஹி..ஹி...
வாழ்த்துக்களுடன் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்....
மங்கை நாம சந்திக்கறதுக்கு முன்னாடியே எழுதி வச்சுருந்தேன் பாதி பதிவு. நாம பேசின விசயம் கொஞ்சம் சேர்த்து நீட்டமா போட்டுட்டேன்.
கருத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமா இருக்கும், ஏதோ வாழ்த்தோடு நிறுத்திக்கிட்டதுக்கும் வந்து படிச்சேன்னு தெரிய பின்னூட்டமிட்டேன்னு சொன்னீங்க பாருங்க நன்றி பங்காளி. கருத்து சொல்லி இருந்தாலும் தப்பில்லை ,
ஒம்போக்குல சொல்லிட்டு போறியே எல்லாம் தப்புன்னு சொல்லாம இருந்தீங்களே ,இத இதத்தான் எதிர்பார்க்கிறோம்.
தப்பில்லைன்னு நீங்க சொன்னதால....ஒன்னே ஒன்னு சொல்றேன்...
ஆண்கள், பெண்களின் இரண்டாவது பெரிய எதிரி என்பதை....முதல் எதிரிகளான நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்....
எப்பவுமே மொத எதிரிய போட்டு தள்ளீட்டுத்தான் இரண்டாவது எதிரிகிட்ட வரனும்...ஹி..ஹி...
முதல்லயே சொன்ன மாதிரி கருத்து ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
உங்களோடது பெண் முதல் எதிரிங்கறது.
என் பார்வையில் அப்படி இல்லை.
முதலில் நான் ஆண்களையோ பெண்களையோ எதிரியாவே நினைக்கலை என்பதை சொல்லிக்கிறேன்.
புரியாம சண்டை போட்டுக்கிறோமே
நட்பா இருக்கலாமேன்னு தான் சொல்றேன். ஒரு ஆணும் இன்னோரு ஆணும் சண்டை போடறமாதிரி தான் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் கருத்து ஒத்து போகாம சண்டை போட்டுக்கலாம்.அதுக்காக ஆணை எதிரின்னு சொல்ற பெண்ணிய வாதி இல்ல நான்.எனக்கு என் அப்பா தம்பி கணவர் ன்னு எல்லாரும் நட்பா கிடைத்திருக்காங்க. அப்பா, அம்மா கிட்ட நட்பா முழுசா இருக்கலயேன்னு வருத்தம் இருக்கு.கொஞ்சம் ஆளுமையா நடந்துகிட்டதா தோணும்.
// பெண்ணே! பேதை என்றழைத்து,
உன்னை சிறுமை படுத்தும்
இக்கூட்டம் , சொல்லும்
பாலூட்டும் தாய்க்கது , கடமையாம்,
கனிவான மனைவியவள் அடிமையாம்.
பெண்ணே! தெய்வம் என்றழைத்து,
உன்னை பெருமை(?) படுத்தும்
இக்கூட்டம் , சொல்லும்
பெற்றெடுத்து பேணுவது உன் கருணையாம்
போற்றி துணை செய்யும் நீ மங்கையரில் மாணிக்கமாம்
இரண்டில் எதில் மயங்கினாலும்
பெண்ணே! நீ வீழ்வதென்னவோ உண்மை.//
பாலூட்டும் தாய்க்கது , கடமை.
கனிவான மனைவியவள் அடிமை.
பெற்றெடுத்து பேணுவது உன் கருணை.
போற்றி துணை செய்யும் நீ மங்கையரில் மாணிக்கம்.
இவை யாவும் உண்மை.
'கனிவான மனைவியவள் அடிமை' என்பதில் மட்டும் ஒரு திருத்தம். 'கனிவான மனைவியவள் அன்புக்கு அடிமை' என்றிருக்கலாம்.
லட்சுமி
ஒரு பெண்ணுக்கு அந்தக் குடும்பத்துடனான அவளோட உறவு முறை தான் சில விஷயங்கள நிர்னயிகிறதுன்னு தோனுது... அக்கா தங்கையிடம் அனுசரித்து அவர்களை மகிழ்விக்கும் ஆண்கள், மனைவியிடம் அப்பிடி இல்லைனா, அதற்கு காரணம் மனைவியானவள் எங்க போயிடுவானு ஒரு தைரியம், சில இடங்களில் அக்கா தங்கையை கண்டுக்காத ஆண்களும் இருக்கத்தான் செய்யறாங்க, ஆனா அதற்கும் பெண்களை தான் குறை கூறுவாங்க.. இங்க பெரியவர்களும்,
மகளுக்கும் மருமகளுக்கும் ஒரு நட்புடன் கூடிய உறவு முறையை வளர்ப்பதில் கவனம் செலுத்துறதில்லை. பெரும்பாலும் அவங்களோட ஆதரவு (அவங்க தேவைக்கேற்ப) ஒரு பக்கமாவே இருக்குது...
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - ஒளவையின் இந்த கூற்ற மனசில நிறுத்தி வாழ்ந்துட்டு இருக்காங்க பெண்கள்
\\'கனிவான மனைவியவள் அடிமை' என்பதில் மட்டும் ஒரு திருத்தம். 'கனிவான மனைவியவள் அன்புக்கு அடிமை' என்றிருக்கலாம்.//
ஓகை ,நன்றி உங்கள் கருத்திற்கு .அன்பு கிடைத்தால் அன்புக்கு அடிமையாக கனிவுடன்.
வெறும் கடமைக்கு வாழ்க்கைப்பட்டவன் நடத்தினாலும் கனிவையே காட்டும் அடிமையை பார்த்திருக்கீங்களா? குடிச்சுட்டு அடிச்சாலும் ஐயோ சாப்பிடாம இருக்கீங்களே சாப்பிட்டு அடிங்கன்னு சொன்னவங்கள பார்த்திருக்கீங்களா?
தன்னை வெறுத்து நடத்தும் கணவனுக்காக பரிந்து பேசும் பெண்களை பார்த்திருக்கீங்களா அதனால் தான் இங்கே அன்புக்கு அடிமைன்னு போடலை.கனிவு எப்போதுமே இருக்கும்ன்னு நினைக்கிறேன்..
\\குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - ஒளவையின் இந்த கூற்ற மனசில நிறுத்தி வாழ்ந்துட்டு இருக்காங்க பெண்கள் //
நூற்றுக்குநூறு உண்மையான வார்த்தை.மங்கை.
முலாம் பூசிய வார்த்தைகள்....ம்ம்ம்ம்
நல்ல பதிவு லட்சுமி.உங்க பதிவுகள் ஒரு அனுபவ லயிப்புடன் எழுதப்படுகின்றன.எனக்கென்னவோ பெண்ணுக்கு உரிமை என்று சொல்வதே பிடிக்கவில்லை.ஆணுக்கு எல்லாம் தானாக கிடைக்க நமக்கு மட்டும் கொடுத்துப் பெற வேண்டுமா?உடற்கூறுகளும் அதனால் ஏற்படும் சாதக/பாதகங்களும் மட்டுமே இருபாலருக்கும் வேறுபடலாம்.மற்ற எந்த விதத்தில் பெண் குறைவுபட்டாள்?
செல்லா,பாலா போன்ற சிலராவது ஏற்றுக்கொள்கிறார்களே.சந்தோஷம்.
இந்த தளத்தில் மட்டுமல்ல...வாழ்வின் சகல தளங்களிலும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.இது நூற்றாண்டுகளின் பிரச்னை.கட்டாயம் இந்த நிலை மாறும்..
எப்படி மெல்ல,மெல்ல ஆதிக்கம் நம்மை சூழ்ந்ததோ அது போலவே மெல்ல,மெல்ல அதிலிருந்து விடுபடவும் செய்வோம்.அதை காலம் இயற்கையாகவே நிகழ்த்தும்.காலத்தின் இயங்கு சக்தியாய் நீங்களும் இருக்கிறீர்கள்.இயங்கு சக்திகளின் செயல்வேகத்தையும்,செயல்தளத்தையும் பொருத்து மீட்சி அமையும்.அது விரைந்து அமைய வேண்டுமாயின் நம் செயல்வேகத்தை மிகுதி படுத்த வேண்டும்.
நன்றி..
நான் எல்லாவற்றையும் படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். இன்னும் சிலரது வாதங்களும் வந்த பிறகு நான் மீண்டும் வருகிறேன்.
//பெண்ணே! தெய்வம் என்றழைத்து,
உன்னை பெருமை(?) படுத்தும்
இக்கூட்டம் , சொல்லும்
பெற்றெடுத்து பேணுவது உன் கருணையாம்
போற்றி துணை செய்யும் நீ மங்கையரில் மாணிக்கமாம்
இரண்டில் எதில் மயங்கினாலும்
பெண்ணே! நீ வீழ்வதென்னவோ உண்மை//
உண்மை.
பெண்களின் உரிமை யாரும் கொடுக்கவேண்டிய பிச்சையல்ல. யாருக்கும் பெண்ணை அடக்கி வைக்க உரிமையும் இல்லை. இந்திய சமுதாயத்தில் மட்டுமல்ல, எல்லா சமுதாயத்திலும் பெண்ணடிமை இருக்கிறது. குடும்பத்தில், நண்பர்கள் வாட்டத்தில், அலுவலகம்/வேலையிடத்தில், வழிபாட்டுத்தலங்களில், அமைப்புகளில்...எல்லா இடங்களிலும் பெண்ணடிமைத்தனம் இருக்கிறது. அளவுகளும், தன்மையும் மட்டும் மாறுபடலாம்.
1. அடிமைத்தனத்தையும் உறவையும் பிரித்து பார்க்க விழிப்புணர்வு அவசியம்.
2. தாங்கள் அடிமைப்படுத்துகிறோம் என்பதை உணர விவாதங்களும், கருத்துப்பரிமாறல்களும் அவசியம்.
3. பெண்கல்வி பெண்ணுரிமைக்கு அடிப்படை.
....இன்னும் சொல்ல இருக்கிறது.
முதல்முறை உங்கள் பதிவை படிக்கிறேன். வாழ்த்துக்கள்.
லட்சுமி, இரண்டு மூணு தடவை நான் உங்க பதிவு பக்கம் வந்து ரசிச்சிருக்கேன். பின்னூட்டம் விடுறதில நான் கடுஞ் சோம்பேறி! :) ...
பெண் உரிமை பற்றி பேசுவது சரியா? அப்படின்னு கலக்கலான தலைப்பு, பின்னூட்டம் விடணும்து இழுக்குது :) ... அடிக்கடி "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்"ல தோன்றினதுனால கவனிச்சிட்டு வர்றேன் பின்னூட்டமெல்லாம். நேத்தைக்கு கௌசி இதுக்கு ஒரு தொடர் பதிவு போட்டதும் படிச்சு ரசிச்சேன்!
இப்ப ஒரு ரசிப்பு குறிப்பு என் சார்புல:
//அந்த பெண் எதை விரும்புகிறாள் என தெரிந்து கொள்ளாமல் அவளுக்காக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பெண்ணுக்கு எதிரானதே.//
கப்புன புடிச்சு போட்டிட்டீங்க சூப்பர் பாயின்டு ஒண்ணு - ரொம்ப ஆழமானது முழுமையா புரிஞ்சிக்கிறதுக்கு.
இதுதாங்க நான் ரொம்ப ரசிச்ச
கருத்து!
பங்காளி உண்மையச் சொன்னா முலாம் பூசின வார்த்தைன்னு சொல்றீங்க.ஆண்களோட சண்டை போட்டுட்டு நாங்க எங்க போய்ங்க வாழறது. பெண்களுக்கு பெண்கள் எதிரின்னு சொல்லி சொல்லியே சண்டை மூட்டி விட்டுட்டு கிழக்கிந்திய கம்பெனி மாதிரி லாபம் சம்பாதிக்கிறீங்க ஆம்பளைங்க.
நன்றி கண்மணி. புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை வருகிறது . நம்பிக்கை தானே வாழ்க்கை.நம் பாசிட்டிவ் அலைவரிசை அவர்கள் மனதை மாற்றட்டும்.
நன்றி ஆழியூரான் மற்றும் திரு. உங்கள் கருத்துக்கள் மிகச்சரியானது. புரிதல் மிகுந்த உங்களைப்போன்றோரின் கருத்துக்கள் நம்பிக்கையூட்டுகின்றன. சண்டையற்ற கருத்துப் பரிமாறல் மூலம்ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதே நல்லது.
அபி அப்பா பின்னூட்டம் போடறதிலயும் பெரிய ஆளுதான் போல நீங்க. பாருங்க .படிச்சிட்டேன் ,இன்னமும் சில கருத்து வரட்டும்ன்னு சும்மா சூப்பரா பின்னூட்டம் போடறீன்க?
என்னவோ எனக்கு எப்போதும் நிறைய பின்னூட்டம் வர மாதிரி சொல்றீங்களே.நீங்க சொன்ன நேரம் புதுசு புதுசா நிறைய பேர் வந்துருக்காங்க.நன்றி.
வாங்க வாங்க மதுரா நான்கூட உங்களோடது எல்லாம் படிக்கறது தான்.
ஆனாக்க பின்னூட்டம் போடறது ன்னா பயம் அங்க.உங்க அளவுக்கு நம்மால் எழுத முடியாதுப்பா.ஏதோ ரசித்தேன்னு சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி.
//பெண்களுக்கு பெண்கள் எதிரின்னு சொல்லி சொல்லியே சண்டை மூட்டி விட்டுட்டு கிழக்கிந்திய கம்பெனி மாதிரி லாபம் சம்பாதிக்கிறீங்க ஆம்பளைங்க.//
ரசித்தேன்..
கருத்துச் சொல்லமாட்டோம்னு சைலண்ட்டா போனவன....ஏதாச்சும் கருத்து சொல்லுடான்னு கிண்டிவிட்டு...சரி, நம்மளயும் மதிச்சி கேக்கறாய்ங்களேன்னு...ஏதோ நமக்கு தோனினதை அள்ளிவிட்டா இப்ப நம்மள கிழக்கிந்திய கம்பெனி...அப்படி இப்டின்னு ஏதோ எதிரி நம்பர் ஒன்னு ரேஞ்சுக்கு பில்டப் குடுக்களீகளே தாயே.....
நானெல்லாம் ரொம்ப அப்புரானி...ஹி..ஹி...நம்புங்க ஆத்தா!
அப்புராணி , ஒழுங்கா பதில் சொன்னா
முலாம் பூசிய வார்த்தைங்கறீங்க.சரி ஒங்கள மாதிரியே கிண்டலா பதில் சொன்னா என்னன்னு முயற்சித்த பதில் தான் அது.அப்புராணியா வே இருங்க உங்கவீட்டு மகராணிக்கு நல்லது.
//அப்புராணி , ஒழுங்கா பதில் சொன்னா
முலாம் பூசிய வார்த்தைங்கறீங்க.சரி ஒங்கள மாதிரியே கிண்டலா பதில் சொன்னா என்னன்னு முயற்சித்த பதில் தான் அது.அப்புராணியா வே இருங்க உங்கவீட்டு மகராணிக்கு நல்லது. //
:)))))))))))))))
பதிவும் பினூட்டங்களும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. முடிவெடுப்பது பற்றீய உங்கள் கருத்து நச். ஆனால் உண்மையில் முடிவெடுப்பது பற்றி அந்த முடிவின் பின்னால் வரும் விளைவுகளுக்கு பொறுப்பேற்பதோடு என்று பார்த்தால், பொதுவாகவே பலர் அடுத்தவர் மீது சுமத்துவதுதான் நடக்கிறது.வரதட்சிணை வாங்கும் முடிவை அம்மா எடுப்பதாய் கூறி பழியை அவர்மீது போடுவது, (மற்றவிஷயங்களில் அவர் சொல்லை கேட்காதவர்கள் கூட இப்போது அவர் மனதை நோகடிக்க மாட்டார்கள்) குழந்தை இல்லை என்பதற்காக மறுமணம் செய்வதில் பெற்றோர் பேச்சை கேட்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
அதே நேரத்தில் பல காலமாக சார்ந்திருந்ததாலோ என்னவோ பெண்களும் முடிவெடுக்க முன்வருவதில்லை. இதற்கு பொருளாதார சார்பு, இதென்ன பெரிய விஷயமா,, அனாவசிய வாக்குவாதம் ஏன் என்று போவதும் காரணமாகலாம்.
பல சமயங்களில் நான் உங்கள் பதிவிற்கும் மலர்வனம் லஷ்மி பதிவிலும் குழம்பி இருக்கிறேன்.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க லட்சுமி.
பெண்ணுக்கு பெண் எதிரியாவது நடுவில் மகன் வரும்போது.
நான் வளர்த்த பையன் நேத்து வரை கத்திரிக்காய் பிடிக்கும்னு சொன்னவன்,
தன் கணவன் தன்னை அலட்சியம் செய்தான்,
மகன் பெண்டாட்டியைப் போற்றுகிறான் என்கிற தத்துப் பித்துவங்கள் இருக்கும் வரை,
பொறுமை விபரீதப் பொறுமையாக இருக்கும் வரை
பெண்ணுக்கு வேறு எதிராளியே வேண்டாம்.
அவளே போதும்.
சுதந்திரமா?. இருக்கிறதா என்ன?
உங்கள் அம்மா காலத்துப் பெண்ணாக இதைச் சொல்கிறேன்.
என் சுற்றத்தை வைத்து மட்டும் சொல்லவில்லை.
தோழிகள் வாழ்க்கையையும் அடிப்படையாக வைத்துதான் இதை எழுதுகிறேன்.
நல்லதோ கெட்டதோ நாமே தெளிவு அடைய street smartness வேண்டும்.
மிக மிகத் தெளிவான எழுத்துக்களோடு பதிந்து இருக்கிறீர்கள். நன்றி.
வாழப்பழத்தில ஊசி ஏத்தறதல அப்பிராணிக கில்லாடிக...:-))...
முத்து நீங்க எங்க ஊரு தானே??...
வாங்க பொன்ஸ் என்ன அதப்போய் வெட்டி ஒட்டி சிரிச்சிட்டீங்க..கருத்து சொல்ல சொல்லி இப்படி மாட்டி விட்டுட்டீங்களேன்னு திருப்பி வந்து பங்காளி கேக்கப் போறார்.
கருத்துக்கு நன்றி பத்மா, பாருங்க லக்ஷ்மியோட பேர் குழப்பமாக கூடாதுன்னு தானே முத்துலெட்சுமின்னு மாத்திட்டேன் :)
நன்றி வல்லி. அம்மா காலமோ என் காலமோ பிரச்சனை வருவது வேறு வேறு விதமாக ம்...முயற்சி செய்வோம் நீங்க சொன்ன மாதிரி ஸ்மார்ட்டாக. முயன்றால் முடியாதா என்ன?
\\முத்து நீங்க எங்க ஊரு தானே??...//
அப்ப அப்ப தான் ஊர மாத்துவேனே?
ஆனா பாருங்க இப்ப மாட்டிக்கிட்டேன்.உங்க கிட்ட ஆமான்னு சொன்னா அப்ப மதுரை இல்லயான்னு அப்புராணி கேப்பார்..ஏற்கனவே அண்ணன் இவங்க மதுரை. எங்க ஊரு . தள்ளி நில்லுங்க எல்லாரும்ன்னு அருவா சுத்தினார் மறந்துட்டீங்களா?
இப்படியான இடுகைகளைப் படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடந்தவாரத்தில் தமிழ்நதி புராணப் புனைவுகளை முன்வைத்தும், நீங்களும் கௌசியும் வேறு கோணங்களிலும் எழுதியிருக்கிறீர்கள். நன்று.
எது புரிந்துகொள்ளப்படாமல் ஏளன எடுத்தெறிதல்களோடு ஒதுக்கப்படுகிறதோ அது திரும்பத்திரும்பப் பேசப்படவேண்டிய தேவையைப் பெற்றுக்கொள்கிறது. ஒரு சமூகத்தின் அடிப்படையான பிரச்சினைகளுக்குக் காதுகளை மூடிக்கொண்டு சந்திரமண்டலத்தில் சாகசங்கள் நிகழ்த்துவது வரை விவாதிக்கும் அறிவுநிலைகளுக்கும் கேட்கும்படி இப்படியான குரல்களை இடைவிடாது எழுப்பிக்கொண்டிருக்கவும் வேண்டியிருக்கிறது.
பாராட்டுக்கள்.
அருவாக்கெல்லாம் பயப்படாதீங்க.. அப்பிடித்தான் சும்மா சுத்துவார்...
(லட்சுமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ..சேம் சைட் கோல் போட்டீங்களே...
:-(((((((.. சரி சரி...
'ஆபீஸ்ல இருந்து பதிவு போட' ரெடியா இருக்கிற கோயமுத்தூர்கார சப்போர்ட்டுக்கு கூப்டுக்குறேன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வநாயகி. ஆமாம்...சில பேர் கேட்டும் கேட்காதமாதிரி, புரிந்தும் புரியாதமாதிரி இருக்கும் போது மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே தான் இருக்கவேண்டியதாகிறது.
சேம் சைட் கோல் இல்ல மங்கை. நீங்க கோவிக்கமாட்டீங்கன்னு சொன்னேன்.ரொம்ப ஓட்டறதா அவர் சொல்லிடக்கூடாதே அதான். சண்டைக்கு வராம சின்னதா கருத்து தானே சொன்னார்.நாம தான் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்ற பாலிசி ஆளுங்களாச்சே.:))
தாமதமா வந்து சேர்ந்திருக்கேன்....
திருநங்கைகளுக்கு அனைத்து ஆண், பெண், குடும்பம் என்றால், பெண்களுக்கு பெரும்பான்மை ஆண்கள். மற்றபடி, திருநங்கைகளின் விடுதலை என்னும் தளத்தில் விவாதிக்கக் கூடிய அனைத்தும் பெண்ணுரிமைக்கும் பொருந்துவதாய் இங்கே அமைந்திருப்பதால் எனது ஆதரவையும் இங்கே பதிகிறேன்.
நன்றி!!!
வருககைக்கும் கருத்துக்கும் நன்றி வித்யா.
இந்த முத்துலெட்சுமி இன்னமும் வலைப் பதியிறாங்களா :-) ? என்னமோ ஒரு வேகமிருக்கே இந்தப் பதிவுல! நன்கு ஊறிப் போன எண்ணங்களை நல்ல வார்த்தைகளைக் கொண்டு கோர்வையுடன் வழங்கி இருகாங்களே.
இந்தப் பதிவ டெம்ளேட்டின் முகப்பில் ஆணி அடிச்சு மாட்டி வைச்சிருங்க, வசதியா இருக்கும்.
Post a Comment