February 26, 2007

கேள்விகளோடு ஒரு திரைப்படம்

கார்டூன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம்
எப்போது முடியும் எப்போது முடியும் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். "அப்படி என்ன படம் தான் பார்க்கப் போற. 9 மணிக்கு முடியும் தந்துடறேன் கண்டிப்பா" . எப்போவும் நல்ல படம் டிவில வருவதாக இருந்தால் ஒன்று நேரம் மறந்து வேறு வேலையில் மூழ்கிப் பார்க்க தவறிப் போய் விடும் , இல்லை அப்போது தான் யாராவது வீட்டிற்கு வந்து இருப்பார்கள்.


தி பியானிஸ்ட் படத்திற்காக வேலை எல்லாம் முடித்து விட்டு காத்திருக்கிறேனே அது தான் காரணம். ஆனந்த விகடனில் அதன் விமர்சனம் படித்தது தான் இப்போது மீண்டும் புத்தகத்தை தேடி எடுத்துப் படிக்க மனநிலை இல்லை. சரி இன்னமும் கார்டூன் திரைப்படம் முடியவில்லையே இணையத்தில் தேடலாம் . தமிழில் தேடி விட்டு கிடைக்கவில்லை என்றால் ஆங்கிலத்தில் தேடுவோம் என்று இருந்தேன்.

தமிழில் பாஸ்டன் பாலாவின் தளம் வந்து கூகிளில் விழுந்தது. அவருடைய விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்கவும் படித்தேன் . கதையின் களஅடிப்படை புரிந்தது, நல்ல விமர்சனம் . 'உன் படம் ஆரம்பிக்கப்போகுது வா' பெண் அழைத்தாள். அவளுக்கும் ஆர்வம் என்னதான் அம்மா பார்க்கப் போகிறாள் என்று . கதையைப் பற்றி சின்னதாக விளக்கம் சொன்ன போதும் இத்தனைக் கஷ்டத்துக்கு நடுவில் கதாநாயகன் எப்படி சிறுவயதில் இருந்து இவ்வளவு வளர்ந்தான்? என்று பெண்ணின் கேள்வி. அவள் கோணத்தில் அவனுடைய சிறு வயதுகாலம் தான் கவலை தந்திருக்கிறது.



குண்டுகளுக்கு நடுவில் பியானோவைத் தொடர்ந்து வாசிக்கும்போதே கதாநாயகனுக்கு இசையில் எத்தனை ஈடுபாடு என்று புரிந்தது . மற்ற படங்களைப் போல சாகசங்கள் நிகழ்த்தாமல் ஓடி ஒளியும் கதாநாயகன். நம்மைப்போல ஒருத்தன் என்று தோன்றுகிறது.
"இவர்கள் வேறு நாட்டுக்கு ஓடிப்போக முடியவில்லையா?" அடுத்தக் கேள்வி.



தனி இடம் பிரித்து யூதர்களை வைத்த பின் அந்தபக்கத்துக்கு போய் வரும் ஒரு சிறுவனை சுவற்றின் துளைக்கு அந்த பக்கத்தில் இருந்து நாஜிக்களில் ஒருவன்
இழுக்க இந்தப்பக்கம் இவன் இழுக்க கடைசியில் அந்த சிறுவன் இறந்து இந்தபக்கம் வரும்போது தன்னால் முடியவில்லையே என்று அப்படியே அந்த உடலை விட்டுப் போகும் போது "அம்மா அவன் செத்து விட்டானா "- பெண். "ம்''.



எதிர் வீட்டிற்குள் நுழைந்து சாப்பாட்டு மேஜையில் இருக்கும் அனைவரையும் கைகளை மேலே தூக்கியபடி அழைத்து சென்று வெளியே ஓடவிட்டு கொல்வதும் , எழமுடியாத சக்கர நாற்காலி கிழவனை பால்கனி வழியே தூக்கி எறிவதும் "அம்மா இப்போ எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கிறே" நல்லப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று அதனால் தான். நிஜத்தில் இன்னும் இது போல் உலகத்தில் நடக்கின்ற இடங்கள் இருக்கிறது . பாவமில்லையா ?அவர்கள்.



எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டதற்கு நெற்றியில் சுடப்பட்டு இறக்கும் பெண் , கிளிக்கூண்டை கையில் வைத்துக் கொண்டு தனியே அழும் குழந்தை, கணவனைத் தேடும் வயதான கிழவி ஒரு மிட்டாயை கையிலிருக்கும் கடைசி டாலர் பணம் குடுத்து வாங்கி
நகவெட்டியின் கத்தியால் ஐந்தாக வெட்டி உண்பது ,
அவ்வப்போது குறிப்பிட்ட சிலரை மட்டும் சுட்டி அழைத்து கொல்லப்படும் மக்கள் ஒவ்வொன்றும் தாங்க முடியாமல் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருந்தாள் பெண். குழந்தைகளும் இருக்கிறார்களே? போய் தூங்கு வேண்டாம் என்றாலும் அவள் மனம் கேட்கவில்லை. எனக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை.




ஓடி குண்டடி பட்டு மடிந்து விழுந்து கிடக்கும் பெண்ணருகில் கடந்து போகும் படையினருக்கு அஞ்சி இறந்தவன் போல் படுத்துக்கிடக்கும் காட்சியில் என் மனதுக்கு தோன்றியதை மகள் வெளிப்படையாக சொன்னாள். "சொல்லமுடியாது செத்துப் போனவன் மேலேயும் சுட்டுவிட்டும் போகலாம் இவர்கள் இல்லையா அம்மா".




தனியாக ஒரு வீட்டில் ஒளிந்திருக்க நேரும் போது பியானோ அருகில் இருக்க [வாசித்தால் மாட்டிக்கொள்வானே ] வாசிக்க இயலாமல் போய்
அதன் மூடியை திறக்கும் காட்சியில் அம்மா வாசித்து விடுவானோ இத்தனை கஷ்டமும் பியானோ வாசிக்கத்தானே ? அதற்குத்தானே உயிரே வாழ்கிறான்.
ஒரு நல்ல நாஜிப் படை வீரன் வந்து உதவும் வரை அவளுக்கு மனதே இல்லை . இவன் நல்லவனோ காட்டி குடுக்க மாட்டானே? நான் தான் பியானிஸ்ட் கடைசி வரை உயிரோடு இருப்பான் கவலைப்படாதே என்று சமாதானம் சொல்லி வைத்திருந்தேன். நீ உயிர் பிழைத்து என்ன செய்வாய்?.

நாஜியின் கேள்விக்கு பியானோ வாசிப்பேன் - அவன் பதில் . வாசித்துக் காட்டும் பொழுது நாஜியின் முகமாற்றம் இசையின் அழுத்தத்தால் அவன் இளகும் மனநிலை அருமையான நிகழ்வு.
இசையினை கேட்டபடி படத்தைப் பற்றி அறிய படத்தின் தளம்.


இதுபோல் இன்னமும் இலங்கையில் இராக்கில் குண்டுகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நம்மைப் போல நிம்மதி கிடைப்பது எப்போது ? என்று தெரியவில்லை.

9 comments:

பங்காளி... said...

ரொம்ப லேட்டா பார்த்திருக்கீங்க....நான் பார்த்து வருடங்கள் ஓடியிருந்தாலும் இன்னமும் அந்த காட்சிகளை உயிரோடு மனதில் ஓட்டிப் பார்க்கமுடியும்....அத்தனை அழுத்தம் கொடுத்த படமது.

இந்த வரிசையில் இதே மாதிரி இன்னம் சில படங்களும் உண்டு....பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றின் பெயர்களை தருகிறேன். முயற்சித்துப் பாருங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் பங்காளி ரொம்ப தாமதம் தான் ஆனா அதான் சொன்னேனே நான் நினைத்தாலும் அந்த நேரம் வீட்டு வேலைகளோ நியூஸோ முக்கியமான கார்டூனோ வராமல் இருக்கனுமே. ஓசியில் படம் பார்க்க...zee studio set max இருக்கு.
சொல்லுங்க படங்களோட லிஸ்ட்ட வரும்போது பாத்திடறேன்.

கதிர் said...

ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி HBOல பாத்தேன். படத்தின் பல காட்சிகள் கண்ணீரை வரவைக்கும். மிக நேர்த்தியாக எடுத்திருப்பார்கள். இதை படித்தவுடன் பல காட்சிகள் மனதில் வந்து போனது. திரும்பவம் படம் பார்க்கணும் போல இருக்கு.

நல்ல பதிவு.

ஜி said...

இந்தப் படமும் நான் பாக்கணும்னு நெனச்சிக்கிட்டு இருந்த படம்தான்....

அடுத்த வாரம் பாத்துடுறேன்..

ஆசிப் மீரான் சொன்ன "Hotel Rwanda" படம் வந்தா கண்டிப்பா பாருங்க... அருமையானப் படம்.

கோபிநாத் said...

லட்சுமி அக்கா...

அருமையாக எழுதியிருக்கீங்க...நானும் ஆனந்த விகடனில் திரு.செழியன் எழுதியதை படித்திருக்கிறேன். இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை :((

பல அருமையான படங்கள் இங்கு (துபாய்) கிடைப்பது இல்லை.
இந்த மாதிரி அருமையான படங்களை பற்றி எழுதுங்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\தம்பி said... இதை படித்தவுடன் பல காட்சிகள் மனதில் வந்து போனது. திரும்பவம் படம் பார்க்கணும் போல இருக்கு.

நல்ல பதிவு. //

நன்றி தம்பி.

\\ஜி - Z said...ஆசிப் மீரான் சொன்ன "Hotel Rwanda" படம் வந்தா கண்டிப்பா பாருங்க... அருமையானப் படம். //

கண்டிப்பாக ஜி. நன்றி .

\\கோபிநாத் said...
இந்த மாதிரி அருமையான படங்களை பற்றி எழுதுங்கள் //

நன்றி கோபிநாத்
இது போன்றே முன்பே சில படங்களை ப் பற்றி எழுதி இருக்கிறேன் படித்தீர்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் எழுதிய படங்களின் விமர்சனப்பதிவுகளுக்கு 2 பின்னூட்டம் வந்தால் ஆச்சரியம். இந்த பதிவு பரவாயில்லை. ஆனாலும் குரூப்பாக பின்னூட்டம் வெளியிட்டு பழக வேண்டுமே இனிமேல் அதான் முயற்சி செய்து பார்த்துக்கொண்டேன்.
நம்மையெல்லாம் பக்குவப்படுத்தவே இந்த முடிவு.பக்குவமடைவோம்.

சீனு said...

//ரொம்ப லேட்டா பார்த்திருக்கீங்க....//

யப்பா...பங்காளி. அப்போ என்ன என்ன சொல்லுவீங்க? நான் இன்னும் பாக்கவே இல்லையே!!!

முத்துலட்சுமி,

//நான் எழுதிய படங்களின் விமர்சனப்பதிவுகளுக்கு 2 பின்னூட்டம் வந்தால் ஆச்சரியம்.//

அட! உங்களுக்கு 2 வருதா? என் 'ரோமன் ஹாலிடே'-க்கு அது கூட வரலை...

Karthik said...

அட்டகாசமான படம்..! படத்தை பற்றி எதுவும் தெரியாமல் பார்க்க ஆரம்பித்து கடைசியில் மிகவும் பிடித்துப் போன படம்.