July 19, 2007

யாமினி அம்மா

நான் அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம் ஆகியிருக்கும் அன்றை க்கு வரை யாரும் அப்படி கூட்டமாய் வந்தது இல்லை . எனக்கோ கையும் ஓடலை காலும் ஓடலை..வாங்க வாங்க என்று அழைத்து இரு ந்த ஓரிரு நாற்காலிகளை இழுத்துபோட்டு பாயை விரித்து உட்கார வழிசெய்து கொண்டிருக்கும் போதே உள்ளே கேள்வி குடைந்து கொண்டிருந்தது என்ன விஷய்மாக இருக்கும். அடுத்த ப்ளாட் அதுக்கும் அடுத்த ப்ளாட் என்று 10 வீட்டு ஆண்டிகளும் சேர்ந்து வந்தா என்ன வா இருக்குமோ?


"ம்..டாக்டரிடம் போனியா செக்கப்பெல்லாம் ஆச்சா" என்ற கேள்விகளுக்கு பின்னால் மெதுவாக சித்ரா ஆண்ட்டி ஆரம்பித்தார்கள் " எதிர்த்தவீட்டில் என்னதான் நடக்குது நீதான் பக்கத்துல இருக்கே உனக்குத்தெரிஞ்சு இருக்கனும் அதான் கேக்கிறோம்.". அட இதான் விஷயமா என்று எனக்குள் ஒரு பெருமூச்சு.



"தினம் சத்தமாக் கிடக்குதே நாளைக்கே எதாச்சும் ஒன்னுன்னா போலிஸ் வந்து எங்களையும் கேக்கும் ஏன் உன்னையும் கேக்கும்.. அதுக்கும் முன்னால எதாச்சும் பிரச்சனைன்னு உனக்கு தோணினா சொல்லிடு நாம முதல்ல போலிஸ் ல கம்ப்ளெயிண்ட் குடுத்துடலாம் ..".என்றதும் எனக்கு மீண்டும் கலக்கம் . வயித்தில் குழந்தை குடுகுடுன்னு ஓடுகிறது என் கலக்கம் அதுக்கும் தொற்றிக்கொண்டது போல.



"இல்லை ஆண்ட்டி உங்களைப்போல தான் எனக்கும் புரியல..இந்தியில் இன்னும் அத்தனை பண்டிதம் இல்லை ...யே ,வோ ன்னு எதோ ச்சலேஹா லெவல் தான் ,ஆண்ட்டி எதிர்த்த வீட்டு சண்டையை காதுகுடுத்து கேட்டாலும் புரியாது. அதிலும் அந்த மருமகளுக்கு வேற காதும் கேக்காது வாயும் பேசவராதே."



"ஆனா எதிர்த்தவீட்டு ஆண்ட்டி எனக்கு ஸ்வெட்டர் பின்னக்கத்துக்குடுக்கிறாங்க..
சாயங்காலம் எப்படி ஆலு மேத்தி சப்ஜி எப்படி செய்யறது ன்னு சொல்லித்தராங்க அதுக்கு போகும் போது அவங்களே எதாச்சும் சொல்லுவாங்க".
" இவளுக்கு ஒன்னும் தெரியல மக்கா வளத்துட்டாங்க பேச க்கேக்க வரலன்னா என்ன என் பையனும் அதே மாதிரி தானே அவன் வேலைக்கெல்லாம் போகலயா ? பாரு ரொட்டிக்கு மாவு பிசைய சொன்னா ஒரு ஷாதிக்கு (கல்யாணம்) தேவையான அளவு பிசைந்து மூடி வச்சிருக்கா.
அன்னைக்கு இப்படித்தான் தவாயி (மருந்து) குடுக்க சொன்னேன் அவ பொண்ணுக்க்கு 5 எம் எல் குடுக்கச்சொன்னா இவ அரைபாட்டில் குடுக்கறா எதாச்சும் ஆனா என்ன செய்யறது அதான் நானே அவளைப்பாத்துக்கவேண்டி இருக்கு எனக்கு வயசாகியும் வேலை தான் ." சலிப்போட முடிப்பாங்க.


"யாமினி அம்மாவும் வருவா எப்பவாவது அதுவும் நேராக காலிங் பெல் எல்லாம் அடிச்சு வரமாட்டா அவங்க வீட்டு பால்கனியில் ஒரு கதவு இருக்கே அது வழியா வந்து என் வீட்டு பால்கனியில் ஏறி குதிச்சு கதவைத் தட்டுவா!
சைகையில் எதாச்சும் சொல்லுவா இவங்கள்ளாம் சரி இல்ல என் குழந்தையை அவங்க குழந்தையாட்டம் வச்சுக்கிட்டு என்கிட்ட வரவிடமாட்டங்கறாங்க..
வீடு கூட்டு, துடை ,பாத்திரம் கழுவு இதான் என் வேலை வேற மதிப்பே இல்லை என் அம்மாவீட்டுக்கு போமுடியாது யாரும் வருவதும் இல்லை. இப்படி எல்லாம் ..அடிக்கடி அடி விழும் அவளுக்கு அவளும் அடிப்பாளோ என்னவோ தெரியாது, அவளுக்கு கோபம் வந்தாக் கத்துவாள். வயிறே கலங்கும்."


"ரெண்டு பக்கமும் பிரச்சனை இருக்கு போல யார் முதலில் ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. இவள் சரியில்லை என்று அவர்கள் படுத்துகிறார்களா ? அவர்கள் மதிக்கவில்லை என்று இவள் சரியில்லாதது போல நடந்துகொள்கிறாளா தெரியவில்லை.
நம்ம என்ன செய்ய ?" என்று நான் முடித்ததும் வ்ந்தவர்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்த படி சரி அப்ப வரோம் கவனமா இருந்துக்கோ என்றபடி கீழே இறங்கிப்போனார்கள்.




அதற்கு அடுத்த வாரம் எதிர்த்த வீட்டு அங்கிள் ராத்திரி 11 மணிக்கு வந்து கதைவைத்தட்டி 'வைஃப் மர்கயா ஒரு போன் எஸ்டிடி போடணும் ' ' என்றது ஒன்னுமே புரியல . அவரோடேயே பக்கத்து ஹாஸ்பிடலுக்கு போய் அங்கே தூங்குவது போல் கிடந்த ஆண்ட்டியைப்பார்த்துவிட்டு வந்தோம்.



மூன்று பையன்களும் அந்த அங்கிளும் தான் வீட்டில் இப்போது . யாமினி அம்மா எதுவும் சரியாக செய்யமாட்டாள் எனவே வீட்டுக்கு ஒரு நல்ல பெண் வேண்டும் என்று ஒரு அழகான பொண்ணை அடுத்த பையனுக்கு கட்டி வைத்துக் கூட்டி வந்தார்கள். யாமினி அம்மாவைப்போல இல்லை இவள், அடிக்கடி கணவருடன் வண்டியில் முக்காடிட்டு லிப்ஸ்டிக் போட்டு ஊர் சுற்ற கிளம்புவாள். யாமினி அம்மா வந்து பார்த்தியா எனக்கு நல்ல சுடிதார் கிடையாது அவளைப்பார் என்பாள். இப்போதும் அடி விழுகிறது. தினமும் அவளுக்கு.மாமனாரும் கணவரும் அடிக்கிறார்களாம்.



ஊரிலிருந்து வந்த பெரியபெண் என் அம்மா இவளோடு கத்திகத்தியே செத்துப்போனாள் என்று சொல்லிபோனாள்..சரி இங்கேயே இருந்தால் பிரச்சனை என்று அவர்கள் குடும்பத்தோடு வீட்டை விற்று விட்டு வேறு எங்கோ போய்விட்டார்கள்.

போகும் முன் சின்ன மருமகள் எல்லாரிடமும் யாமினி அம்மாவை அவள் அண்ணன் வீட்டில் விடப்போவதாகவும் யாமினியை தங்களோடு வைத்திருக்கப்போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

(பி.கு) உண்மை நிகழ்வின் கதை வடிவம்.


16 comments:

அபி அப்பா said...

சூப்பரான பதிவு! ஆனா இன்னும் படிக்கலை! படிச்சுட்டு வாரேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது சரி படிக்காமலே சூப்பரா..

அறிவியல் பார்வை said...

நல்ல கதை முத்து லக்ஷ்மி, நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்,இப்போதெல்லாம் கனனி முன் உட்கார் ந்ததும் என் பதிவிற்குள் செல்வதில்லை, சிறுமுயற்சி யை பார்த்து விட்டுதான் மற்றதெல்லாம், நீங்கள் என் வலை பதிவு பார்த்திருக்கின்றீரா? வாய்ப்பு கிட்டினால் பாருங்கள்.. கமென்ட் சொல்லுங்கள்

லக்ஷ்மி said...

முத்து, நீங்க எழுதினாலே அது சூப்பராத்தானிருக்கும்ன்ற நம்பிக்கைல அபி அப்பா அப்படி சொல்லிட்டாராயிருக்கும். இல்லை அபி அப்பா? இருங்க, நானும் இன்னும் படிக்கலை. படிச்சுட்டு வந்து பதிவை பத்தி கருத்து சொல்றேன். :)

✪சிந்தாநதி said...

ம்.. நல்லா இருக்கு. ஆனா யாமினி யாருன்னு புரிஞ்சிக்கிறதுக்கு இன்னொரு தடவை படிச்சேன்.

செல்வநாயகி said...

இந்தவார நட்சத்திரம் நீங்களா? வாழ்த்துக்கள். பதிவுகளை சேர்த்துவைத்துப் பிறகுதான் படிக்கவேண்டும்:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அறிவியல் மிகுந்த மகிழ்ச்சி தொடர்ந்த உங்கள் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும்..உங்கள் பக்கத்துக்கு வந்தேன் படித்தேன்..தொடரட்டும் உங்கள் அறிவியல் சேவை.உபயோகமானதாய் இருக்கும்.
__-------
லக்ஷ்மி இது அநியாயம்..அபி அப்பா தான் அப்படின்னா நீங்களுமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிந்தாநதி உண்மை தான் இரு இடங்களில் மட்டுமே குறிப்பிட்டதால் தேடும் நிலை தான். :)

_________
செல்வா வாங்க ,முடியப்போகுது வாரமே ஆனாலும் பரவாயில்லை ..மெதுவா படியுங்கள்.
:)

மங்கை said...

லட்சுமி..காலையில படிச்சுட்டு கஷ்டமா இருந்துச்சு...நான் சின்ன பொண்ணா இருந்தப்போ..எங்க தூரத்து உறவினர் வீட்ல இது மாதிரி தான் நடந்துச்சு..ஹ்ம்ம்ம்

நல்லா இருக்கு..ஆனா லட்சுமி..சிந்தாநதி சொன்ன மாதிரி..யாமினி கொஞ்சநேரம் புரியலை.. அந்த அறிமுகம் குடுத்துருக்கலாம்

மங்கை said...

ஆஹா தலைவி..100 ஆவது போஸ்ட் இன்னைக்கு..வாழ்த்துக்கள்..

என்னா ஒரு ஒற்றுமை..ஸ்டார் போஸ்டு. 100 ஆவது பதிவு.. புது பிளாக்கு...கலக்குறே லட்சுமி

Deepa said...

நட்சத்திர வார்த்திலே முத்தான 100 வது பதிவை எட்டிய லட்சுமியே... வாழ்துக்கள்

கோபிநாத் said...

அக்கா ஒரு உண்மை நிகழ்ச்சியை கதையாக எழுதிய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

ஆனா முதலில் படிக்கும் போது கொஞ்சம் புரியவில்லை..கடைசி ரெண்டு பகுதியில் தான் புரியுது.

கோபிநாத் said...

\\மங்கை said...
ஆஹா தலைவி..100 ஆவது போஸ்ட் இன்னைக்கு..வாழ்த்துக்கள்..\\


ஆஹா...ஆஹா....முத்துக்கா வாழ்த்துக்கள் ;)))

அப்படியே ஒரு எங்களையும் ஒரு 100 பின்னூட்டம் போட விடுங்க என்ன புரியுதா???


\\ என்னா ஒரு ஒற்றுமை..ஸ்டார் போஸ்டு. 100 ஆவது பதிவு.. புது பிளாக்கு...கலக்குறே லட்சுமி\\


மங்கைக்கா அப்ப டெல்லியில் உங்களுக்கு தனி விருந்து கொடுப்பாங்க ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை ஒவ்வொரு கதையெழுதும் போதும் சில குறைகளைத் திருத்தி வருகிறேன் ..இந்த முறை யாமினி அம்மா,
யாரென்பதை இன்னும் சரியாக க்குறிப்பிட்டிருக்கவேண்டும்.

நன்றி மங்கை நன்றி தீபா நன்றி கோபிநாத்

Jazeela said...

பொதுவாவே பெண்கள் வாயில்லாப் பூச்சிக்கள் இங்க சுத்தம். கடைசி பகுதிக்கு வந்தவுடன் மொத்தமும் புரிந்துவிட்டது. ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சத்தம்போட்டு சொல்லாதீர்கள் ஜெஸிலா பெண்கள் வாயில்லாபூச்சியா என்றூ கேட்டுக்கொண்டு ஒரு கூட்டம் வந்து விடும்.இப்படி யும் நம்மைச் சுற்றி சிலர் வேறு வழியின்றி கொடுமையை சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் .