January 29, 2007

எப்படி எழுத வேண்டும்?

நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்துப் பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும்.

அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால், சென்ற சில நூற்றாண்டுகளாக, வெகு சாதரண விஷயங்களை அசாதாரண அந்தகார நடையில் எழுதுவது தான் உயர்ந்த கல்வித்திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.

கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமமென்பது என்னுடைய கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம் ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் , எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்கு சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால், வாக்கியம் தத்தளிக்கத் தான் செய்யும், சந்தேகமில்லை.ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும் போது வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக்காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும். சொல்ல வந்த ஒரு விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல், நடை நேராகச் செல்ல வேண்டும். முன்யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால், பின்பு சங்கடமில்லல.

ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்.தைர்யம் இல்லாவிட்டால் தள்ளாடும். சண்டிமாடு போல் ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.
வசன நடை, *கம்பர் கவிதைக்குச் சொன்னது போலவே தெளிவு, ஒளி, தண்மை , ஒழுக்கம் இவை நான்கும் உடையதாகயிருக்க வேண்டும். உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்.
* ( " சவியுரத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும்
தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா வரியினை
வீரர் கண்டார்") *


(பி.கு.) இது என்ன இவளுக்கே எழுதத் தெரியாது ? சொல்ல வந்துட்டான்னு தானே பார்க்கறீங்க? அதுவுமில்லாமல்
சொன்ன கருத்துக்கும் எழுத்துக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாத பழைய காலத்து எழுத்து நடை என்று
பார்க்கறீங்களா? இப்படி எல்லாம் எழுத எனக்கு எங்கே வரும் " படித்ததில் பிடித்தது " பகுதிக்கு இது. பாரதியாரின்
"கவிதையும் வசனமும்" எனும் எழுத்தில் இருந்து எடுத்தது.

10 comments:

துளசி கோபால் said...

ஒரு நிமிஷம் 'ஆடி'ப் போயிட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\துளசி கோபால் said...
ஒரு நிமிஷம் 'ஆடி'ப் போயிட்டேன். //

அதுக்குதானே ஆரம்பத்திலேயே எழுதாமல் விட்டது.:))

கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் , துளசி .

வெற்றி said...

லட்சுமி,
உங்களின் சில கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வெற்றி said...
லட்சுமி,
உங்களின் சில கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு. //

என்ன வெற்றி பின்குறிப்பு பார்க்கலீங்களா?
பரவாயில்லை .எனக்கும் உங்களுக்கும் பாரதியாரின் இக்கருத்து சரியாகப்படுகிறது என்று சொல்லிக்கொள்ளலாம்.

வெற்றி said...

லட்சுமி,
/* என்ன வெற்றி பின்குறிப்பு பார்க்கலீங்களா?*/

ஐயோ, லட்சுமி, மன்னித்துக் கொள்ளுங்கள். செல்லிடப்பேசியில் ஒருவருடன் பேசிக்கொண்டு பதிவைப்படித்தேன். அதனால் முழுக்கவனத்துடனும் படிக்கவில்லை. இப்போது மீண்டும் இப்பதிவைப் படித்தேன். மிகவும் அருமையான கட்டுரை. நல்ல கருத்துக்கள். நல்லதொரு பதிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

மங்கை said...

அருமையா சொல்லி இருக்கார்,,,

ஆனா இது எல்லாம் நமக்கு....சாரி எனக்கு....ஹ்ம்ம்ம்.(பெருமூச்சு):-)))

வடுவூர் குமார் said...

அதிக பழக்கமில்லத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால், வாக்கியம் தத்தளிக்கத் தான் செய்யும், சந்தேகமில்லை.
எனக்கு இது 100% பொருந்தும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை , வடுவூர் குமார் நீங்க ரெண்டும் பேரும் தன்னடகத்தில் பேசறீங்கன்னு நினைக்கிறேன்.
இருவரும் அவங்க அவங்க பணிகளைப்
பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்கள் என்றாலும் எளிமையான எழுத்து நடையும் எழுத்தில் நேர்மையும் இருக்கிறதே.

வல்லிசிம்ஹன் said...

லட்சுமி ,இன்னும் இதை மாதிரி நிறைய செய்திகள் கொடுங்க.
ரொம்ப உபயோகமா இருக்கும். பாரதியைப் படித்து நிறைய நாளாச்சு.

அவர் மாதிரி எழுத வராது.இருந்தாலும் எழுத்தில் நேர்மை அவசியம்.
நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வல்லிசிம்ஹன். கண்டிப்பாக நல்லவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
எழுத்தின் நேர்மைக்காகத்தான் இந்த பகுதி என்னையும் கவர்ந்தது.